பா.செயப்பிரகாசம் யதார்த்த எழுத்துக்களின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை

முனைவர் ப.இராஜராஜேஸ்வரி
தமிழ்த்துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
உறுப்பு பெண்கள் கல்லூரி, ஒரத்தநாடு - 614 625

அனலாய்த் தகித்த பாரதியின் மூச்சுக்காற்று, வெப்பம்  தணியாமல் இருப்பதன் அடையாளமாக கரிசல் மண்ணில் எழுந்த படைப்பாளர் பட்டாளத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை பா.செயப்பிரகாசம். சமூக அக்கறையினூடாக இயங்குகின்ற படைப்புகளும், செயல்பாடுகளுமாய்க் காலத்தின் வேகத்தோடு தன்னை மிகச்சரியாகப் பொருத்திக்கொண்டாலும் எளிமையாய் வாழத்தெரிந்த தாயுள்ளம் பெற்ற மனிதர். மகத்தான கலைஞர். வாழ்க்கைச் சிக்கல்களின் நுண்கண்ணிகளை அடையாளப்படுத்தும்போது மக்களின் எளிய மொழிநடையையே கையாண்டாலும் கவித்துவம் குறையா படைப்பாளர். அவலங்களைப் பேசும்போதும் இயல்பாய் அழகியல் மிளிரும் அற்புதநடை கைவரப் பெற்றவர்.

“நெருப்புச் சூடு ஏற ஏற, சமைக்கப்படும் உணவு அடிப்பிடித்து நாற்றம் எடுப்பதுபோல், அதிகார நெருப்பு ஏற ஏற சனநாயகம் அடிப்பிடித்து நாற்றம் வீசுகிறது. குடும்பம், சாதி, மதம், இனம், பாலியல், அரசு, கல்வி அமைப்பு-அனைத்து நிறுவனமயத்துள்ளும் சனநாயக மாண்புகள் கருகி நாற்றமெடுக்கின்றன. பருவநிலை சிதைப்பு, சூழல்கேடு, மண்ணின் கலைகள் அழிப்பு, மனசாட்சியற்ற அரசியல், இலக்கிய வினைகள் எனக் கருகி நாற்றம் வீசும் வாழ்க்கை பற்றியது இந்த எழுத்துகள்” (நஞ்சுண்ட பூமி ) என்று முன்னுரைக்கும் பா.செயப்பிரகாசம் 7.12.1942-ல் பாலசுப்ரமணியம்-வெள்ளையம்மாள் இணையரின் மகனாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகமைந்த இராமச்சந்திராபுரத்தில் பிறந்தார்.
மதுரைத் தியாகராசர் கல்லூரியில் முதுகலை தமிழ் பயின்று 1968 முதல் 1971 வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராகவும் 1971 முதல் 1999 வரை தமிழ்நாடு அரசின் செய்தி - மக்கள் தொடர்புத்துறையில் இணை இயக்குநராகவும் கடமையாற்றி பணிநிறைவடைந்தார். மாணவப் பருவத்தில் 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாதங்கள் சிறையிருந்த மாணவத் தலைவர்கள் பத்து நபர்களில் இவரும் ஒருவர்.

தாமரை, கணையாழி, தினமணி, புதியபார்வை, தீராநதி, கதைசொல்லி, ஆனந்தவிகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, உயிரெழுத்து, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ்நேயம், மனஓசை, காக்கைச் சிற்கினிலே போன்ற இதழ்கள் இவரது எழுச்சிதரும் படைப்புகளை அணிந்து கொண்டன. கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் தொடர்ந்து இவரது படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 1981 முதல் 1991 வரை பொறுப்பாசிரியராக இருந்த ‘மனஓசை’ கலை இலக்கிய மாத இதழ் வழக்கம் போலன்றி எதிர்க் கருத்தியலை முன் வைத்து தீவிரமாக இயங்கியது.

ஒரு ஜெருசலேம், காடு, கிராமத்து ராத்திரிகள், இரவுகள் உடையும், மூன்றாவது முகம், புதியன, இரவு மழை, புயலுள்ள நதி, பூத உலா, கள்ளழகர், இலக்கியவாதியின் மரணம், ஊர் என பதினொரு தொகுதிகளாக வெளிவந்த சிறுகதைகள் அனைத்தையும் “பா.செயப்பிரகாசம் கதைகள்” (2015, வம்சி பதிப்பகம், திருவண்ணாமலை) என இரு பகுதிகளாக வெளியிட்டுள்ளனர். அடுத்து வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு – ”காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்” - இதுவும் வம்சி வெளியீடு.
தெக்கத்தி ஆத்மாக்கள் (ஜுனியர் விகடனில் வெளிவந்த கட்டுரைகள்) வனத்தின் குரல், கிராமங்களின் கதை, நதிக்கரை மயானம், ஈழக் கதவுகள், அந்தக் கடைசிப் பெண்ணாக, முடிந்து போன அமெரிக்க கற்பனைகள், ஒரு பேரனின் கதைகள், ஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும், மரண பூமி, கொஞ்சம் சோறு நிறைய நஞ்சு (அணு உலை எதிர்ப்புக் கட்டுரைகள்), முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல், கொலை செய்யும் சாதி, நஞ்சுண்ட பூமி (தீராநதி கலை இலக்கிய மாத இதழில் தொடராய் வெளியான கட்டுரைகள்) என பதினான்கு கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

சூரியதீபன் எனும் புனைபெயரில் எழுதிய எதிர்க் காற்று, நதியோடு பேசுவேன் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளிலிருந்தும் தேர்வுசெய்யப்பெற்ற கவிதைகள் “எதிர்க்காற்று” என்ற தொகுப்பாய் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டிருக்கும் இவரது படைப்புகள் பல முனைவர்களை உருவாக்கிய ஆய்வுக் களமாக விளங்கியது, விளங்குகிறது.

“அடிப்படை அறங்களிலிருந்து பிறழ்பவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது” எனும் கிரேக்கத் தொடர் உண்மையெனினும் குரல்வளை நெரிக்கப்படும் சமூகத்தின் திமிறலாகப் படைப்புகள் எழுந்து காலத்தின் காட்சியாக, தன்னை புதுக்கி அமைத்துக் கொள்ள வேண்டிய காலத்தின் மனசாட்சியாக உருப்பெறுகின்றன.
விருதுகளைப் பெறுவது நோக்கமாக இல்லாததால் வாழ்வின் வெறுமைகளை, தனிமனித ஒழுக்கச் சிதைவினால் சரிந்துவிழும் குடும்ப, சமூக விழுமியங்களை, அதற்கானக் காரணங்களைப் புறவய நோக்கில் பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் பாதிப்புக்குள்ளானவரின் அகவயப் பார்வையில் எடுக்கும் முடிவுகளையும் இலக்கியப்படுத்தியிருப்பதுதான் ஒரு நியாயமான கலைஞனாக இவருக்கானப் பிம்பத்தைக் கட்டமைக்கிறது. வாழ்க்கைக்கும், வார்த்தைக்கும் இடைவெளியில்லாமல் வாழும் பா.செவின் கதைமாந்தர்கள் பெரும்பாலும் ஆதிக்கச் சாதியிடமோ அதிகார வர்க்கத்திடமோ வாழ்விழந்தவர்களாகவே அமைகிறார்கள்.

பா.செவின் சிறுகதைகளனைத்திற்குமே வாழ்வதற்கானப் போராட்டங்களை நடத்தி நல்லமுடிவினைப் பெறவியலா இயலாமை, ஏக்கம், வெறி, புறக்கணிப்பு போன்ற உணர்வு மோதல்களுடன் விட்டு விடுதலையாகத் துடிக்கும் மானுட உணர்வே அடிநாதமாக அமைகிறது. ‘தாய்க்கோழியின் சாபம் பருந்தினை ஒன்றும் செய்யமுடியாது’ எனும் சொலவடையைப்போல் ஆக்டோபஸ் கரம்விரித்து அசுரத்தனமாய் ஆக்கிரமித்திருக்கும் நிறுவன அதிகாரத்தின் கீழ் நசுக்கப்படும் மனித நியாயங்கள் குருதியும் தசையும் கொண்ட சிசுக்களாகக் கதறுகின்றன.
அலுவலக விதிமுறைகள் இயல்பான திருமணபந்தத்தைத் துண்டாடுவதைக் காண சகிக்காமல் இயன்றவரை ஏற்றுக்கொண்டு இயலாதபோது முரண்படுகின்ற  அரசு ஊழியர்கள் வேலையிழந்து நிற்பதை ‘ஆறு நரகங்கள்’, ‘இரவுக்காவலர்’ ஆகியவை சுட்டுகின்றன.

வயிற்றுக்கு உணவில்லாப் பேதையரின் உடல்களைப் பார்வைக்கும், மிருகத்தனமான இச்சைக்கும் விருந்துவைக்கப்படும் சமூகப் பேரறமும் (!?), இடைத்தரகர்களின் பெருந்தன்மையும் (!) அங்கதக் குறுவாளால் நார்நாராகக் கிழிக்கப்படும் ‘வேரில்லா உயிர்கள்’, மலையகப் பெண்ணொருத்தியை நால்வர் சேர்ந்து வன்புணர்ந்த கொடுமையை நீதிமன்றத்தில் விசாரிக்கும் அவல முறையும், தகுந்த சாட்சியங்கள் இல்லாமல் குற்றவாளிகள் தப்பித்து அலட்சியமாய்ப் புன்னகைப்பதும், சீரழிக்கப்பட்டவள் என்று தெரிந்தே மணம் செய்து கொண்டவனும் எனக் காட்சிகளின் குறுக்கும் நெடுக்குமான பயணங்களால் வாசகர்களை சிதறடிக்கும் ‘இருளுக்கு அழைப்பவர்கள்’ - போன்ற கதைகள்  பெண்ணாய்ப் பிறந்ததால் பெறும் பேரிழப்பை, அவலத்தைச் சுட்டுகின்றன. ஒரு பெண் இயல்பாக நடக்கமுடியாமல் இறுகி நெருக்குகின்ற ஆதிக்கச் சாதியினரின் அத்துமீறல்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் புறப்படுவதை ‘தாலியில் பூச்சூடியவர்கள்’ காட்டுகிறது. இவரது பெரும்பாலான கதைகள் பெண்ணின் துன்பியல் வாழ்வைத் துயரமான பாடலாக இசைத்துக் காட்டி, பெண்டிரின் பால் ஒரு பரிவை உண்டு பண்ணுபவை. அடுத்த கட்டமாய் பெண்ணின் எதிர்ப்புக் குரலை உயர்த்தி ஒலிக்கச் செய்து, அவள் விடுதலைக்கு நம்மை அணியமாக்குபவை. தன் புதுமனைவியைக் கூட்டிச் சென்ற தர்மகர்த்தா வீட்டு சென்னையனின் கழுத்தைக் கடித்து ‘அக்னி மூலையில்’ காவுகொடுத்த சாமியாடி மயிலேறியும், ஊருக்கே படியளந்த அம்பலகாரர் மகள் உடல் விற்று வாழும் அவலம் அறிந்து அதிர்ந்து அவ்வீட்டின் முன்னர் தன் கையிலிருந்த தானியம், கொஞ்சம் ரூபாய்கள் நிறைந்திருந்த நார்ப்பெட்டி, அக்னிச்சட்டி, உடுக்கை, சாட்டை போன்றவற்றை விட்டுச்செல்லும் ‘அம்பலகாரர் வீடு’ சாமிகொண்டாடியும் உளுத்து நிற்கும் பண்பாட்டுக் கோபுரங்களைத் தகர்க்கும் கலகக்காரர்கள் ஆவார்கள்.

மக்களால் ஆன சமூகம் வெகுசன மக்களுக்குரியதாய் இல்லாமல் போனதற்காக மனம் வெதும்பும் பா.செவின் புனைவுலகில் சமூக அவலங்களின் நெடி வீசுகிறதெனில், கட்டுரைகள் தீக்கொழுந்துகளின்  காடாய்த் தகிக்கிறது. “மக்களின் வாழ்வியல் ஆதாரப் பக்கங்களைக் கிழிக்காமல், மலையையும் வனத்தையும் அழிக்காமல் முதலாளிகள் வளர்ச்சி என்ற வார்த்தையை எழுத இயலாது. கீழான வாழ்நிலையிலிருந்து மக்களை ஒரு அங்குலமாயினும் உயர்த்த முடியுமென்றால் அதுவே வளர்ச்சி. தொழிற்சாலைகள் என்ற பெயரில் பிளாஸ்டிக் தீமை சமுதாயக் கேடாகக் கலந்துவிட்டதற்கு யார் காரணம்?” (நஞ்சுண்ட பூமி:125) என்று சீற்றத்துடன் வினவுபவர் வணிக மயமாதலில் அழிந்துபோகும் பண்டையத் தொழில்கள், பிழைப்பின்றி நசிந்து போகும் இனக்குழுக்கள், அவர்களோடே அழிந்துபோகும் வட்டார வழக்குகள், நாகரிகம் என்ற பெயரில் பரதம், கர்நாடக இசை, குச்சிப்புடி, கதகளி என மேட்டிமை நுகர்வுகளை நோக்கி நகரும்   மோகத்தால் அழிந்து கொண்டிருக்கும் நம் ஆதிக்கலைகளாகிய கூத்து, இசைநாடகம், ஒயிலாட்டம், தேவராட்டம், குறவன்-குறத்தியாட்டம், வில்லுப்பாட்டு, கும்மி, கோலாட்டம், முளைப்பாரிப்பாட்டு போன்ற கலைகளின் வீச்ச்சினைத் தம் எழுத்துகளில் ஆவணப்படுத்துகிறார்.
வாழ்வின் ஒட்டுமொத்தச் சுவடுகளையும் தடம் மாற்றிப்போட்ட நகர்மயமாதலை வன்மையாய் எதிர்க்கிறார். “கிராமியம் என்பது வேளாண் சமூகம் மட்டுமல்ல. அது வேளாண்குணம். கிராமியப் பொருளியலை, கிராமியக் குணத்தை ரண களமாக்கி வைத்தது யார்? கிராம மக்களை உண்டு இல்லை என்றாக்கி வெம்பறப்பாய் அலையப் பண்ணியது யார்? விவசாயத்தைக் கைகழுவி நகரம் அடையச் செய்தது யார்? வணிகப்பேய்களின் உருவாக்கத்தில் ஆடு, மாடு நிலபுலன் என்ற படுக்கை வசத்திலான உடைமைகளின் இடத்தில் வீடு, மாடி, மனை, வங்கி, கார் என உலக வங்கிவரை செங்குத்தாய்ப் போகலாம் என்ற சிந்திப்பை உண்டாக்கியது யார்?” (நஞ்சுண்ட பூமி:135) எனக் கேள்விகளால் வேள்வி நடத்துகிறார். சிந்தனையில் செயல்பாடுகளில் மனிதம் உணர்ந்த விசாலப்பார்வை வேண்டுகிறார்.

“ஒவ்வொரு காலகட்ட நிலைமைகளுக்கு ஏற்ப இலக்கியம் புதிய அடிவைப்புகளை வைக்கிறது. புதிய கொள்கைகளை முன்னெடுக்கிறது. எந்தக் காலகட்டமானாலும் சமூக மறு உருவாக்கத்தின் இணைக்குரலாக எதிர்ப்பும் விமரிசனமும் ஊடாடிக் கொண்டிருப்பதுதான் இலக்கியத்தின் இயல்பு. காலகட்டங்களுக்குக்கேற்ப ஏற்ற இறக்க பிர்க்காக்களுடன் அது அசையும்” (அந்தக் கடைசிப் பெண்ணாக:12)  என்று இலக்கியத்திற்கு விளக்கமளிக்கும் பா.செ “ஒரு கணத்தில் நமக்குள் வெடித்து நம்மை உலுக்கிய ஒரு சொல், ஒரு உவமை, ஒரு விவரணை, ஒரு காட்சி நம் கைவசப்பட்டதுபோல் செண்டிப்பு அடித்து பிறகு எங்கேயோ போய் ஒளிந்து கொள்ளும். ரத்தினக்கல் கிடைத்து தொலைந்துவிட்டதுக்குச் சமமாய் இழப்பின் வலி அமுக்கும்” (அந்தக் கடைசிப் பெண்ணாக:90) என்று படைப்பாளியின் உணர்வுப் போராட்டத்தைச் சுட்டுவார்.

மரபோ நவீனமோ உற்று நோக்கி உள்வாங்கிக் கொள்வதும் சமூகச் சலனங்களைச் சுயானுபவமாக மாற்றிப் படைப்பாக்குவதும் தேர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடாக புதிய படைப்பாளிகளைக் கண்டுகொண்டு ஊக்கப்படுத்துவதும், சக படைப்பாளிகளைக் கொண்டாடுவதும், எதிர்க்குரல் படைப்பாளிகளுக்கு அச்சுறுத்தல்கள்  வரும்போது ஆதரவாகக் குரல் கொடுப்பதும் துணை நிற்பதுமாய் சொல், செயல், படைப்பு, சமூகத்தொடர்புகள் யாவற்றிலும் தீராத் தாகமும் தீவிர இயங்கு தன்மையும்  கொண்டு, தன் இருப்பைத் தனக்கு மட்டுமல்லாது தன் சமூகத்திற்கும் அர்த்தமுள்ளதாக்கி வாழ்கிறார். வாழ்விலிருந்து உருவாவது இலக்கியமெனினும் இலக்கியத்தைவிடவும் மானுட உணர்வுகள் மேன்மையானவை என்பதில் மிகத்தெளிவுடனிருப்பதால் சமகாலப் பிரச்சனைகளில் பங்கெடுக்கும் சமூகப் போராளியாக மாறி ஒடுக்கப்படும், வதைக்கப்படும், யுத்தங்கள் விழுங்கும் உயிர்களுக்காக பரிந்துருகுகிறார்.

இயல்பாய் வாழ்வதற்கு அமையாத இன்றையச் சூழலில், தன் மொழிக்குள் வாழ்வுப் பதிவுகளைச் செதுக்கி, மனிதர்களையும்  மானுடம் புதுக்க வேண்டிய சிந்தனைகளையும்  அழுத்தமாக  எழுதியவர்  பா.செயப்பிரகாசம்.

பார்வை நூல்கள்:
  1. பா. செயப்பிராகசம் - அக்னிமூலை (தேர்ந்தெடுக்கப்பெற்ற கதைக்களஞ்சியம்)
  2. அந்தக் கடைசிப் பெண்ணாக - கட்டுரைத் தொகுப்பு
  3. நஞ்சுண்ட பூமி - கட்டுரைத் தொகுப்பு. 
  4. களந்தை பீர்முகம்மது - படைப்பாளியும் படைப்பும்  
  5. பா.செயப்பிரகாசம் - தன்விவரப் பட்டியல்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி