யாருடைய புத்தாண்டு?

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டன. தமிழ்ச்சமூகத்தின் வரலாறு, வாழ்வு முறை, பாரம்பரியம், பண்பாடு அத்தனையும் ‘பூ’ இவ்வளவுதானா என பழித்துக் காட்டும் அளவுக்கு நடந்துவிட்டது. கொண்டாட்டங்களின் பின்னர் வழக்கு, நீதிமன்றம், சிறை - என ஒரு காட்சியும் அரங்கேறவில்லை. அமைதியாக நடந்து முடிந்தது என்ற அமைதிச்சான்றிதழ் பெற்றுக் கொள்ள இந்தப் பாவனை என்ற சாடலும் எழாமல் இல்லை. "கடிதோச்சி மெல்ல எறிக" என்கிற மாதிரி கண்டும் காணா வழிமுறையை காவல்துறையும் அரசும் கைக்கொள்கிறதோ என்கிற ஐயம் எழுகிறது.

இதயமிருக்க வேண்டிய இடத்தில் அதைப் - பொசுக்கி அற்றுப் போகச் செய்துவிடும் சூட்டுக்-கோல் கலாச்சாரத்தை பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ள, அனுமதிக்க நினைப்பது சரியா? “எங்களுடைய இப்போதைய முயற்சி இதுதான். நமக்கும் நம்மால் ஆளப்படுவோருக்குமிடையில் விவரங்களைப் பரிமாறக் கூடிய ஒரு கும்பலை உருவாக்குவோம். அவர்கள் ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள். ஆனால் கருத்தாலும், மனத்தாலும், புத்தியாலும், சுவையாலும் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள்".

அதிகாரக் காற்றுக்கும், அடிமை மனோ-பாவத்துக்கும் வளைகிற இந்திய நாணல்களை உருவாக்குவது பற்றி 1835ல் அறிவித்த மெக்காலே வாசகம் இது. மெக்காலே கல்வி முறை மூலம் உருவாக்கிக் கொடுத்தது கல்வி முறை மட்டுமல்ல, நிர்வாகப் பிரியர்களுக்கு சில குணங்களையும் வடிவமைத்துத் தந்தது.

அதிகாரப் படி நிலைகளில் மேலிருப்பவர்களுக்குக் கீழே இருப்பவர்கள் பணிந்து, கைகட்டி, வாய் பொத்தி அடிமையாய் நடக்க வேண்டும் என்ற புதிய கீழ்மைக் குணம் அறிமுகமாகிறது. கீழிருக்கும் பணியாளர்கள் பற்றி மதிப்பீடு செய்து எழுதும் மந்தண அறிக்கை முறை கொண்டுவரப்பட்டது. மேலிருக்கும் அதிகாரிகள் எழுதினார்கள். ஒரு அரசுப் பணியாளனின் பதவி உயர்வு, வாழ்வு முன்னேற்றம் இந்த மந்தண அறிக்கையில் தங்கியிருந்தது. இதன்காரணமாய் ஏற்பட்ட பாரதூரமான விளைவு அவனை அடிமைப் புத்தி கொண்டவனாய் ஆக்கியது. ஆனால் மேலிருப்பவர்கள் பற்றி கீழிருக்கும் பணியாளர்கள் மந்தண அறிக்கை தருகிற சனநாயக நெறிமுறை அறிமுகப்படுத்தப் படவேயில்லை. சனநாயக அறம் குறித்து கவலை கொள்ளாததினாலேதான் அது அதிகாரமாக நிலைக்க முடிகிறது என்பது மட்டுமல்ல, அதிகாரம் என்பதே அது தான்.

கீழே சேவகம் செய்யும் இந்தியர்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் தங்களைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினர் ஆங்கிலேயர். இதை ஆங்கில ஆட்சி மீதான விசுவாசம் எனக் கருதினர். இந்த எதிர்பார்ப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதிகார மையத்தின் இந்தப் புள்ளியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முறை ஆரம்பமாகியது.

விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும், மேலதிகாரிகளைக் கண்டு கொள்ளும் முறை கைவிட்டுப் போகவில்லை. மேலாண் சக்திகளைக் கண்டு மரியாதை செலுத்துகிற அலுவலகப்-படிநிலை, அரசியலிலும் வேர் ஊன்றியுள்ளது. கீழுள்ள தொண்டர்கள் வட்டங்களைக் கண்டு மரியாதை செய்தல், வட்டங்கள் மாவட்டங்களைக் காணல், மாவட்டங்கள்,சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், அவரவர் துறை அமைச்சர்களைக் கண்டு கொள்ளல், அமைச்சர்கள் முதலமைச்சருக்கு வாழ்த்துச் சொல்லல் என நீளுகிறது. கண்டு கொள்ளுதலுக்காக அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கண்டுகொள்ளாதவர் வெள்ளைக்கார ஆட்சியில் போலவே, விசுவாசமற்ற ஊழியர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். மேலதிகாரத்துக்கு அடிபணியாதவர் என்று புள்ளியிடப்படுகிற வேளையில், ‘பிழைக்கத் தெரியாத மனுசன்’ என்ற பெயரும் அவர் முகத்தில் ஒட்டப்படுகிறது.

இப்படியே தான், முதலில் அதிகாரக் கூட்டத்துக்கு அறிமுகமாகி, தர்பார் மண்டபங்களுக்குத் தாவி, வீதியில் ஊடுருவி, “அரசுப் பணியாளன் என் சேவகன், அரசியல்வாதியாகிய ச.ம.உ-க்கள், நா.ம.உ-க்கள் எனக்குப் பணியாற்ற நான் நியமித்த ஆள்“ என்று எண்ண வேண்டிய மக்களின் மனசுக்குள் இவர்களைப் பணிந்து பவ்வியமாகப் போகிற அடிமை மனோபாவம் சூழ்ந்து கொண்டது. பாதாளக் கரண்டியினால் கிணற்றுக்குள் துழாவி எடுக்கிறபோது, தொலைந்து போன வாளி மட்டுமல்ல, துருப்பிடித்த சாமான்களும் மேலே வரும். மெக்காலே வாசகத்தைத் தொட்டு ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய நிர்வாகத்துக்குள் துழாவி எடுத்தால் அடிமை முறை, அடிபணிதல், சுயமரியாதை இழப்பு என்ற இந்தக் காலம் வரை தொடரும் சீரழிவுகள் மேலே வருகின்றன.

முதலில் அது மனிதனின் தனித்துவத்தை சாகடித்து விட்டது. மனித நேயம், ஒருவரோடு ஒருவர் கொள்ளும் இயல்பூக்கமான உறவு, போராட்ட ஒற்றுமை, எதிர்ப்புக் குரல் என்று மனிதனுக்குள் இருக்கும் இயல்பான குணங்களைச் நாசக் காடாக்கியுள்ளது. இப்படிச் சின்னாபின்னப் படுத்துவதன் வழியாக அவனது கூட்டு அடையாளங்களான இன, மொழி பண்பாட்டுச் சிறப்பியல்புகளைத் தவிடுபொடியாக்குகிறது. எல்லாத் தனித்துவ அடையாளங்களையும், அழிகாடாக்கி பொதுச் சந்தை, பொது நுகர்வு, பொதுக் கலாச்சாரம் என ஆதிக்க வலையை விரிக்கிற உலக முதலாளியத்தின் கைப்பிடி வித்தையாக புத்தாண்டுக் கொண்டாட்டம் மாறிவிட்டது.

மதுக்கடைகள், களியாட்ட அரங்குகளுக்குள்ளிருந்து ஜோதி புறப்பட்டு, இந்த ஆண்டும் இளைய தலைமுறையை, நடுத்தர வயதுகளை புத்தாண்டைத் தரிசிக்க வைத்தது. மதுக்கடைகள், கேளிக்கை கூடங்களின் கதவு திறந்திருக்காவிட்டால் இத்தனை கோலாகலமாக இளைஞர்கள், நடுவயதுக்காரர்களின் கொண்டாட்டக் கதவு விரிந்து திறக்காது.

வசதி படைத்தவர்கள் நட்சத்திர விடுதிகளுக்குள். வசதி கொண்ட வர்க்கத்துக்கு மட்டும் தானா புத்தாண்டு? நாம் யாருக்கும் குறைந்தவரில்லை என்று நடுத்தரவர்க்கத்து, கீழ்த்தட்டு வர்க்கத்து இளைஞர்கள் வீதியில், மதுக்கடையில்!.

ஆங்கிலப் புத்தாண்டைப் பொறுத்த வரை இளைஞர்கள் என்பதின் அர்த்தம் 15 வயது முதல் 55 வரை ஓடுகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இத்தனை தீவிரமாய் கொண்டாடப்பட்டதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் எடுக்க ஆரம்பித்து, இப்போது வெறியோடு அடைப்பட்டவர்கள் யாரும் இல்லை. சிறு நகரம் முதல் பெருநகரம் வரை ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள் - வாழ்த்துச் சொல்லி!

வீதிகளுக்கு வருகிறவர்கள் ஆண்கள்! ஊரே அவர்களுடைய ஊராக இருக்கிறது. தீபாவளி, கார்த்திகை, ஆடி அமாவாசை, தைப்பூசம் போன்ற மதப் பண்டிகைகள் தவிர பெண்கள் வீதிகளில் தென்படுவதில்லை. ஆனால் புத்தாண்டைத் திட்டமாய்ச் சொல்கிற வணிகச் சந்தை அவர்களுடன் தான் வீட்டுக்குள் வருகின்றன. அன்றைக்குத் தள்ளுபடியில் பொருளை வாங்கா விட்டால் வேறு என்றைக்குமே இல்லை. தங்களிடம் மீதமுள்ள கொஞ்ச நஞ்ச சேமிப்பையும் இழக்க, பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் இறக்கி விடப்படுகின்றன.

திரைப்படம், ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், பக்தி, பஜனை, கோயில் வழிபாடு என்று புத்தாண்டைச் சுற்றி முற்றுகை நடக்கிறது. இந்த வழக்கமான பாணிகளுடே விற்பனைப் பொருட்களின் விளம்பரக் களமாக தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் தங்கள் கஜானாக்களை நிரப்பிக் கொள்கின்றன. புத்தாண்டை நடு நரம்பாகக் கொண்டு, திரைப்பட பேருருக்கள் தொலைக்காட்சிகளால் கட்டமைக்கப்படுதல் கண்கூடு. தங்களை விட்டால் லோகத்துக்கு விமோசனமே இல்லை என்ற பாணியில், அறிவு ஜீவித் தோரணையில் நடிகர், நடிகைகளின் புத்தாண்டு அறிவுரைகள்! போட்டி போட்டுக் கொண்டு அரசியல் தலைவர்களின் வாழ்த்துச் செய்தி! மத வழிபாட்டுப் பண்டிகைகளை முன்னிறுத்தி மட்டுமே ஆசி வழங்கும் மடாதிபதி, பீடாதிபதி, ஆசாரியார், பகவான்கள், மத குருக்கள் வாரித் தெளிக்கும் அருளாசிகள்! மேதினம், விடுதலை நாள், தியாகிகள் நாள், குடியரசு தினக் கொண்டாட்டங்கள் உள் ஒடுங்கிப் போய் விட்டன. இவை அதிகார வர்க்கம் என்ற உப்பரிகை வாசிகளும் அரசியல் தலைமைகள், அமைச்சர்கள் என்ற உறுதுணைவாசிகளும், மேட்டுப் பகுதியில் ஏற ஏற மக்களைக் கைகழுவி விட்டுக் கொண்டே போனதின் அடையாளங்கள்.

ஆங்கிலப் புத்தாண்டை நமது வாழ்வின் நடைமுறையாக ஏற்றுள்ளோம். மேலை நாடுகளின் கணிதம், அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது வாழ்வின் பகுதியாக மாறிவிட்டன. பிற திசைகளிலிருந்து, குறிப்பாய் மேலை நாடுகளிலிருந்து வரும் புதியனவற்றை நம் வாழ்வுக்கு உகந்ததாய் ஆக்கிப் பயன்படுத்துகிறோம். அறிவியலில் விளைந்த புதினங்களைப் பயன்படுத்துவது வேறு. புதிய வரவுகள் பண்பாட்டு அளவில் நம்மிடை ஏற்படுத்தும் அழிவுகளுக்கு ஆட்படுதல் என்பது வேறு. தன்னைச் சுற்றி நிகழும் எந்த அநீதிக்கும் சிறு முணுமுணுப்புமிலாது, எதிர்ப்பும் ஆற்றாது, தன் மகிழ்ச்சி சார்ந்து மட்டுமே வினையாற்றும் ஒரு கூட்டத்தை இந்தவகைக் கலாச்சாரம் உருவாக்குகிறது. விளைவு, பயன்பாடு தான் ஒரு செயலின் முடிவினை தீர்மானிப்பதாகும்.

கொண்டாட்டங்களில் அதிக எண்ணிகையில் பங்கேற்போர் இளையோர், மாணவர் பகுதியினர் தான். குறிப்பாக கொழுத்த வருமானம் பெறுகிற கணினித் துறையினர், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள். இவர்கள் பெற்று வந்திட்ட கல்வி அடிப்படைக் காரணம். உலக மயமென்னும் நுகத்தடியில் மாட்டுகிற கல்வியே அன்றி, மனிதனை உருவாக்கிய கல்வியல்ல. மாணவனாயிருக்கிறபோது அவனுள் ததும்பும் ஆற்றல், விருப்பம் -இவை சார்ந்து கல்வியை அவன் தேர்வு செய்ய இயலுவதில்லை. எது கற்றால் கோலார் தங்கச்சுரங்கம் கையில் வரும் எனும் பொருளாதார முனையிலே பெற்றோர், சுற்றிலும் இருப்போர், சமுதாயம் தீர்மானிக்கிறது. ஒவ்வாமை, மன விருப்பமின்மைகளின் தொகுப்பாக அவன் ஆக்கப்படுகிறான். ஒவ்வொருவரும் விரும்புகிற கல்வி வாய்ப்பும், கல்வி முறையும் அற்ற தலைமுறை எங்கு போய்ச் சேர வேண்டுமோ அங்கு போய்ச் சேருகிறது என்பதின் அடையாளம் இந்தக் கொண்டாட்டம். நுகர்வுக் கலாச்சாரத்தினை உள்ளிறக்கிவிட்டிருக்கிற உலகமயத்தின் விருப்பமும் அதுதான்.

இவற்றைக் கேள்விக்குள்ளாக்கியும், கேலிக்குள்ளாக்கியும், அவைகளின் இடத்தில் சமுதாய சீர்திருத்தப் புதிய மாற்றீடுகளை முன்வைத்துப் பணியாற்றியவை தொடக்க காலத் திராவிட இயக்கங்கள். பொங்கல் நாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்ற கருத்தாக்கத்தினை கவிஞர் பாரதிதாசன், நாவலர் பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம், ரா.பி.சேதுப்பிள்ளை, இராசமாணிக்கனார் போன்ற தமிழறிஞர்கள், பெரியார், அண்ணா போன்ற சமுதாய சீர்திருத்த தலைவர்கள் முன் வைத்தனர். தீபாவளி, கார்த்திகை, ஆயுதபூஜை, பிள்ளையார் சதுர்த்தி போன்ற விழாக்களுக்கு மாற்றாக பொங்கல் திருநாள், உழவர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு என திராவிட இயக்கங்கள் முன்னிறுத்தி எடுத்துச் சென்றன. மே நாள், அக்டோபர் புரட்சி, உழவர் திருநாள் என பொதுவுடைமை இயக்கத்தவர்கள் மாற்று விழாக்களில் மக்களை பங்கேற்கச் செய்தனர். இன்று மாற்று விழாக்கள், நிகழ்வுகளை ஒப்புக்கு மட்டுமே நிகழ்த்தி, இவர்கள் அனைவரும் ஆங்கிலப் புத்தாண்டுத் தினத்தில் கரைகிறார்கள்.

ஒவ்வொருவரும் சொந்த வாழ்க்கையை வடிவமைப்பது என்பது முக்கியமானதாகும். அவரே சமூக நபராகவும் இந்த மக்கள் சமுதாயத்தை வடிவமைத்தலோடு அது இணைந்ததாகும். தனி மனித நலன், கூட்டுக் களியாட்டம் என்று அன்றைய ஆங்கிலேயம், இன்றைய உலகமயம் வகுத்துத் தந்த வாய்க்காலுக்குள் அடங்காமல் வெளித்தாவி, எதிர்ப்பின் குரல்களாய் வடிவமைக்கப்படுமா இந்த ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம்?

தீராநதி - பிப்ரவரி 2014


நன்றி: தீராநதி - பிப்ரவரி 2014

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்