மாணவர் போராட்டம் 50 ஆம் ஆண்டு: இந்தி எதிர்ப்பு - ஓயாத அலை

(Tamil translation of Paa.Jeyapirakasam speech at "50 years of opposition to Hindi imposition" meeting held at Bengalore on 25 January 2015.


When the constitution of India was adopted, it was decided that Hindi will remain the sole official language of the union government from 1965 onwards. Non-Hindi speaking communities of India resisted this move strongly. Despite the opposition, when the government of India moved towards adopting Hindi as sole official language, large scale protests erupted across India. January 25th 2015 marks the 50th anniversary of these agitations against Hindi imposition. This event is to recall about the protests against Hindi imposition and also discuss about the importance of the need for a language policy that treats all Indian languages as equal.)


1965-இந்தி எதிர்ப்பில் களமாடிய போராளிகள் இன்று பலரும் இல்லை. மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தலைமைஏற்றுப் பங்காற்றிய பெ.சீனிவாசன், கா.காளிமுத்து போன்ற மாணவர் தலைவர்கள் மறைந்து விட்டனர். அவர்கள் பெற்ற தனித்த அனுபவங்களும் சொல்ல ஆளில்லாமல் மண்ணாகியிருக்கும். அந்நாளில் தளகர்த்தராய் நின்ற இன்னும் சிலர், வாழ்வு ஓட்டத்தில் ’நீர்வழிப்படு புனை போல் ‘புரண்டு அமிழ்ந்து அர்த்தமிழந்து போயுள்ளனர். ரவிச்சந்திரன்(சென்னை சட்டக் கல்லூரி), ராமன் (மாநிலக் கல்லூரி) போன்ற அறுபத்தைந்தில் பரபரப்பாக அறியப்பட்ட மாணவர்கள் காணாமல் போனார்கள். 1967-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தங்களுக்கு அபரிதமாகக் கொட்டிக்குவிக்கும் என்ற எதிர்பார்ப்பில், அரசியலில் தாங்கள் ஆசைப்பட்ட எல்லையை அடைய முடியாமல் சிலர் திசைமாறிய பயணம் காணக் கிடைத்தது. ஒரு மாணவர் தலைவர் சாமியாராகி, பெயர் மாற்றம் செய்துகொண்டு இலங்கை சென்று ஆன்மீகப் பொழிவுகள் செய்து திரும்பினார் எனத் தகவலுண்டு. ஓரிருவர் எதிர்பார்ப்பு கனவென ஆனதால் மனநோயாளியாகப் பிறழ்வு ஆகினர். இன்னும் சிலர் அரசுப்பணிகளில் அலுவலராய் அமர்த்தப்பட்டு அடையாளமிழந்தனர். சிலர் ஆங்காங்கே அரசியல் செய்து தலைவர்களாகி நாற்காலியில் அமர்ந்து குதியாளம் போடுகின்றனர். ஒரு நாட்டை, மொழியை, மக்களை வழிநடத்தும் தலைமுறை அறுபத்தைந்தினுள்ளிருந்து உருவாகிடாமல் தேர்தல் அரசியலுக்குள் சிக்குண்டு மூழ்கிற்று. தலைமத்துவம், தலைமை தாங்கி நடத்திச் செல்லுதற்கான குணநலன், தொலைநோக்கு, அரசியல் இலட்சியம் போன்றவை அற்றுப் போனமை, குறிப்பாய் தி.மு.க, அதிமுக போன்ற கட்சிகள் அறுபத்தைந்து தலைமுறையை தமக்குள் ஆட்படுத்திக் கொண்டமை - வரலாற்றின் கரும்புள்ளியாகும். சிலர் பின்தொடரும் நிழல்களாய் சென்று தொடராமல் அவர்கள் எங்கிருந்த போதும் உள்மடங்கிடாமல் - தனித்து நின்று அதே போர்க்குணத்துடனும் உணர்வுகளுடனும் அந்த வரலாற்றை மீள்பதிவு செய்வோராய் திகழ்கின்றனர்.


தமிழகத்தில் கொளுந்துவிட்டு எரிந்து, ஒட்டு மொத்த இந்தியாவை உலுக்கிய அந்த 1965 இன்று 50-ஆம் ஆண்டாய் முன் வந்து நிற்கிறது.அதற்கு முன்னிருந்த இந்தியா வேறு. 1965 இந்தியாவின் மற்ற பகுதிகளை அதிர்ச்சியுடன் தமிழ்நாட்டை ஏறிட்டுப் பார்க்க வைத்தது. வியப்பான பார்வையோடு ”என்ன நடக்கிறது இங்கே” என நடுவணரசின் மேல் கேள்வி எழுப்பியது பிற பகுதி இந்தியா. இந்தவகையிலான மொழிவழி தேசிய இன எழுச்சிப் போராட்டமும் ஒன்று உள்ளது என்பதை இந்தி வட்டாரங்கள் தவிர்த்த எல்லோரும் உணர்ந்தனர். ஒற்றை நாடு, ஒற்றை ஆட்சிக் கனவிலிருந்த காங்கிரஸ்காரர்கள் மிரண்டு போயினர். நாட்டை எங்கோ எடுத்துச் செல்லும் மனோலயத்தில் இருந்த அப்போதைய பிரதமர் நேரு , அறுபதிலிருந்து கூர்மைகொண்டெழுந்த இந்தி எதிர்ப்புத் தமிழகத்தைக் கண்ணுற்று உளைந்து போனார். “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக நீடிக்கும்” என நாடாளுமன்றத்தில் நேரு அளித்த வாக்குறுதி இதன் விளைவு: இந்தி ஆதிக்கம் பலபடியாய் உள்ளிறங்கிக் கொண்டிருந்ததை மற்ற மாநிலங்களை உணரச் செய்தது மட்டுமல்ல, அறுபத்தைந்து மாணவர் போராட்டம் இன அடையாள உணர்வு மேலெழ தொடக்கப் புள்ளியாயிற்று (ஆயினும் நேருவின் உரை ஆணையாகவோ சட்டமாகவோ ஆக்கப் படவில்லை. நாடாளுமன்றப் பதிவோடு காற்றில் கலந்து விட்டது. ’நேருவின் வாக்குறுதி வெறும் உமி: அதையே தங்கத்தூள்’ என்று திராவிட இயக்கங்கள் தலைமேல் தூக்கிக் கொண்டு தமக்குள் சுயதிருப்தி அடைந்து கொண்டனர்).


திராவிட இயக்கங்கள் அடுத்து அடுத்து ஆட்சியேறி, ஆட்சி ஒன்றே குறியாய் இருந்ததின் காரணத்தால் நீர்த்துப்போக வைத்த மொழிப் பிரச்சினையினை, தேசிய இனங்களினது குரலாய், இந்த 50-ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுத்திருக்கிறது. அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து தேசியமொழிகளையும் இந்திய அரசின் ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வருகிறது. இந்தியா முழுமையும் பல புதிய மொழிப்போராட்ட அமைப்புக்கள் களம் கண்டுள்ளன. இவர்கள் பிப்ரவரி 21, 2014-ல் புதுடில்லியில் ஒன்று கூடி ’பன்மொழிகள் இயக்கம்’ (Movement for multilingual India) என்கிற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.



மாணவர் இந்தி எதிர்ப்புப்போர் வெடித்த சனவரி 25-ம் நாளை நினைவு கூர்ந்து பெங்களூரில் அதேநாளில் ”பனவாசி பலகா” (Banavasi balaga) என்னும் கணிணிப் பொறியாளர்கள் பெரும்பாண்மையாய் உள்ள அமைப்பு அரங்கக் கூட்டம் ஒன்றை நடத்தியது (25-01-2015). கன்னட இளையோர் 200 பேருக்குமேல் கலந்துகொண்ட அரங்கில் இந்திய விமானப் படையில் wing commander ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.வி.ஆர்.ராவ் எழுதிய ”இந்தியாவின் மொழிப் பிரச்சினை அரசியல்” (Language politics in India), எழுத்தாளர் ஆனந்த் எழுதிய “இந்தித் திணிப்பு – மூன்று கொள்கைகள், நூறு தந்திரங்கள்” (Hindi imposition-three principles and hundred techniques) போன்ற பல நூல்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இந்நூலாசிரியர் ஆனந்த், கன்னடத்தின் மூத்த எழுத்தாளர் பேராசிரியர் முனைவர் பி.வி.நாராயணன் எனப் பலர் உரைநிகழ்த்தினர்.

இந்த அரங்கு தாண்டி, பெங்களூருவிலிருந்து 140-கி.மீ. தொலைவிலுள்ள ’சரவணபெலகோலவில்’ - பிப். 1 முதல் 3 முடிய கன்னட சாகித்திய பரிஷத் நடத்திய கன்னட இலக்கிய ஆளுமைகள் பங்கேற்ற வருடாந்திர மாநாட்டின் (Karnataka annual literary meetings) புத்தகக் கண்காட்சியில் இந்தித் திணிப்பு - இந்தி எதிர்ப்புக் கண்காட்சி நடத்தினர் என்பது தமிழ்நாட்டைக் கடந்து எதிர்ப்பின் எல்லை விரிவடைந்து வருகிறது என்பதின் ஆபத்தான, அதேபொழுதில் நியாயபூர்வமான அபாயக் குறிகள். எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் நடுவணரசின் ஆட்சிமொழித் தகுதி வழங்கப் படவேண்டும் என்னும் விண்ணப்பம் மூன்றுநாளும் பார்வையாளரிடம் கையெழுத்துப் பெறப்பட்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பப் பட்டுள்ளது. கன்னட எழுத்தாளர் கும வீரபத்ராப்பா, கன்னட சாகித்ய பரிஷத்தின் மேனாள் தலைவர் நல்லூரு பிரசாத் ஆகிய இலக்கிய ஆளுமைகள் அக்கோரிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாறான ஆக்கபூர்வ ஒரு முயற்சியை தமிழ்நாட்டில் மேற்கொள்வது கனவாகவே உள்ளது.


2

1990-ல் மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை நடவடிக்கை ”இந்தி எதிர்ப்பு” என்னும் தூங்கிக் கொண்டிருந்த புலியை இடறிய செயலாக்கிவிட்டது. பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் தனது துறைகளுக்கு மத்திய அரசு, ஒரு வாரம் இந்தியில் கையொப்பமிடும்படி போட்ட உத்திரவு அப்படிப்பட்டது.
நடுவணரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பல மாநில ஊழியர்கள் இந்தி தெரியாதவர்கள். ஆங்கிலம் படித்தவர்கள். அவர்கள் நடுவணரசுப் பணிக்கு ஆங்கிலத்தில் எழுதித் தேர்வானவர்கள். ஆனால் இந்தி பேசும் பகுதியினர் இந்தியில் தேர்வு எழுதிப் பணியில் சேர்ந்தவர்கள். அவர்கள் அரசுப் பணிகளை லகுவாகக் கைப்பற்ற வாய்ப்பாயிற்று. ஆனால் வேறுவேறு மொழிபேசும் மாநிலத்திலிருந்து வந்த பணியாளர் அனைவரும் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று அவர்களின் தேசப்பற்று சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அவரவர் தாய்மொழியில் கையெழுத்திடக் கேட்டிருந்தால், அவர்களும் உள்ளுணர்வுடன் உவகையோடு செய்திருப்பார்கள். உண்மையில் அதுதான் தேசப்பற்று. அதுவே தேசப்பற்றை வெளிப்படுத்தும் முறை; ஒரு பல்லின அரசு தன் மக்களிடம் தேசத்தின் மீதான அபிமானத்தைக் காட்டக் கோரும் வழி அது.

அன்று ஒரு வாரம் இந்தியில் கையொப்பமிடக் கேட்டது, இந்நாளில் நிர்வாகப் பணியனைத்தும் இந்தி மொழியிலேயே நடைபெற வேண்டுமென கட்டாயப்படுத்தும் அதிகாரக் கட்டளையாக உருக்கொண்டுவிட்டது. அது வெளிப்படையாய் ஆணையாகவும், உள்ளில் அதுவே நடைமுறையாகவும் வடிவெடுத்துள்ளது. ஒருசோறு பதம் என்கிற மாதிரி எடுத்துகாட்டினை தர முடியும்.எனது வருமானவரி அட்டையில் (pan card) பிறந்த நாள் தவறாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. பிழைதிருத்தம் செய்யக் கேட்டு ஆடிட்டர் கையப்பமிட்டு கடிதம் டெல்லி தலைமையிடத்துக்கு அனுப்பினேன். நத்தை வேகத்தில் எனக்கு வந்த பதிலில் முன்பக்கத்தில் இந்தி, பின்பக்கத்தில் ஆங்கிலம் இருந்தது. எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. தாய்மொழி மட்டும் அறிவேன் எனில், நான் என்ன செய்ய இயலும்? அரசு தனது பணியாளர்களோடு மட்டுமல்ல; ”மக்களில் ஒருவனாகிய என்னோடும் என் மொழியில் பேசுவேண்டும். நான் என்னுடைய மொழியில் அரசுடன் பேசவேண்டும்“ என்பது நியாயமான, அறம் சார்ந்த எதிர்பார்ப்பு அல்லவா? நியாய பூர்வ, சனநாயகக் குரலுக்கு இங்கு இடமில்லை. பல்லிணங்கள் இணைந்துள்ள ஒரு நாட்டில் எந்த ஒரு இனத்துடனும் அரசு அவர்கள் மொழியில் உரையாடாது, உறவு கொள்ளாது. வேறொரு மொழியில் தான் உறவாடும் என்பது, ஒரு நாட்டுக்குள் நான் நடப்பட்டிருந்தாலும் அது எனக்கு வேற்றுநாடு: அது வேற்று மொழியே.

ஒவ்வொரு மாநிலத்திலும் நடுவணரசு அலுவலகங்கள் பல இயங்குகின்றன.மாநிலத்திலுள்ள மக்களுடன் இந்த அலுவல் தொடர்புகள் அவர்களின் மொழியில் இயங்குதல் என்ன பிழை? இந்த அலுவலகங்கள் எவையும் மற்றொரு மொழி பேசும் மாநிலத்துடன், அம்மக்களுடன் பேசவில்லையே? டெல்லியிலிருக்கும் தலைமை அலுவலகங்களுடனான தொடர்பிலும் மாநில மொழிக்கென சிறுசிறு அலுவலகங்களை அங்கு ஏன் உருவாக்கவில்லை? அதிகாரம் எந்தப் பகுதியினரிடம், யாரிடம் இருக்கிறதோ அவர்களின் மொழியே எங்கும் எனில் இது அடிமைஆட்சி (colonial rule) என்பது அன்றி வேறென்ன? அனைத்துத் தேசிய இனங்களின் மனதிலும் எழுந்துவரும் இக்கேள்வியை புறந்தள்ளும் போக்கு - வட்டார வழக்கில் சொல்வார்களே அதுபோல்” பிடரியில் புத்தியை வைச்சிருக்கான்” என்கிற கணக்குத் தான்.

இந்தி ஆதிக்க வரலாறு: இந்தித் திணிப்பு தொடங்கி விட்டநாளிலேயே இந்தி எதிர்ப்பு வரலாறும் தொடங்கிவிட்டது. இந்தி ஆதிக்கத்தை எதிர்த்த இயக்கங்களும், போராட்டங்களும் முன்னிலை பெற்றன. பிரித்தானியர் இந்நாட்டில் கால்கோளிட்டு ஆதிக்கம் செலுத்த அவர்களுக்கு ஒரு நாடு என்னும் உருவம் தேவைப் பட்டது. உண்மையில் குடியேற்றக் கொள்ளையின் போதுதான் (colonial rule) நாடு என்ற ஒற்றைப் பிரதேசம் உலகெங்கும் உருவான முறைமை உண்டாயிற்று. இந்தியாஎன்ற வடிவம் அவ்வாறுதான் உருவானது. அதற்கு முன் அது ஒரு நாடு அல்ல. பிரித்தானியர் ஒற்றை நாடு, ஒற்றை ஆட்சி, ஒற்றைமொழி என்ற களத்தை பிரித்தானியர் அமைத்துத் தந்தபின் அதேமுறையில் அந்தக் களத்தில் ஆடுவது என்ற நகர்வை இந்தியர்கள் செய்து வருகிறார்கள். பல்தேசிய இனங்களினது உள்கோரிக்கைகள், உடன்பிறந்த நோய்கள் எதுவும் வாசியாக்கப் படாமல் ஆட்சியினைத் தொடருகிறார்கள். இந்தி என்னும் ஒற்றைக் கொடி ஓங்கிப் பறக்க வேண்டும் என்றெண்ணும் இந்திய மனப்போக்கு, இந்திய அதிகாரச் செருக்குக்கு நல்ல எடுத்துக்காட்டு.


நம்மில் பெரும்பாலோர் பிரித்தானியர் வெளியேறிய பின்னால்தான் இந்தி ஆட்சி மொழி அங்கீகாரம் கொண்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் வரலாறு நம்மை இன்னும் முன்னாலே வரச்சொல்கிறது.

1918-ல், தமிழ்நாட்டினர் இந்தியைக் கற்கும் நோக்கில் சென்னையில் காந்தி ’இந்திப்பிரச்சார சபா’ வைத் தொடங்கி வைத்தார். ”ஆங்கில நாட்டுத் துணிகளைப் புறக்கணிப்பது போல், அவர்களின் மொழியையும் புறக்கணிக்க வேண்டும், அப்போது தான் நாடு விடுதலை அடையும்” என்று தொடக்க உரையாற்றினார். ”ஆங்கிலத்தை அகற்றி அந்த இடத்தில் இந்துஸ்தானியை அனைத்திந்திய மொழியாக ஏற்க வேண்டும்“ என்றார். இது காந்தியின் மொழிக் கொள்கை.

இந்திப் பிரச்சார சபா - அந்நிய ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியைப் வேரூன்றச் செய்ய விதையூன்றப்பட்டது எனபதில் ஐயமில்லை. அந்நியரின் மொழியை புறக்கணிக்க வேண்டும் என்பது சரி. அந்நிய ஆதிக்க மொழியைப் புறக்கணிக்கக் கருதினால், இந்திப்பிரச்சார சபாவுக்குப் பதிலாய் “சென்னைத் தமிழ்ச் சங்கத்தினைத்” தொடங்கியிருக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் தாய்மொழி வளர்ச்சி அமைப்புக்களைத் காந்தி தொடங்கி ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும்.

மாறாக தொடர்செயல்களாய் ‘இந்திபடித்தால் மட்டுமே நடுவணாரசுப் பணிகளுக்குச் செல்ல இயலும்’ என்ற கட்டாய நிலையை உருவாக்கியதால், அந்த சபாவுக்குள் படிக்கவரும் எண்ணிகையும் அதிகரித்துக் கொண்டு போகிறது. 2009-ல் இந்தி தொடக்கக் கல்வித் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 4.61 லட்சம். 2013-ல் இது 6.82 லட்சமாக உயர்ந்துள்ளது. தொடக்கக் கல்வித் தேர்வை எழுதுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 40 ஆயிரம்பேர் என அதிகமாகி வருகிறது. இந்திப் பிரச்சார சபா மூலம் தமிழ் நாட்டில் தேர்வு எழுதுவோர் கணக்கு மட்டுமே இது. அல்லாமல் தமிழகத்தில் 510 சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும், 39 நடுவணரசுப் பள்ளிகளிலும் (kenthriya vidyalaya) ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இந்தியில் பயில்கிறார்கள். இவர்கள் அனைவரும் விரும்பி இந்தி கற்கிறவர்கள் என்றால் அது பிழை. வணிகம், வேலைவாய்ப்பு, குறிப்பாக நடுவணரசின் வேலைவாய்ப்பை குறிவைத்துக் கற்கிறார்கள். வலிமையுடையது வாழுமென்ற வாழ்வியல் விதியை செல்லுபடியாக்க மொழிவேட்டையிலும் இவர்கள் சளைக்கவில்லை. அதாவது இந்திமொழி தெரியாத, கற்காத இனம் இந்தியாவில் வாழுதற்குத் தகுதியில்லாமல் போகும், தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்ளும் என்கிற இயல்பற்ற ஒரு யதார்த்தத்தைக் கட்டிக் காத்து வருகிறார்கள். இந்தியா என்ற ஒற்றை நாட்டுக் கொள்கையில், குறிப்பாக மொழிக்கொள்கையில் காந்தி நடத்திய ஒற்றைமொழி அரசியல் இதற்கு வேர் என அறியப்பட வேண்டும்.

1924 டிசம்பர் பெல்காம், காங்கிரஸ் மகாசபை கூட்டத்திற்கு தலைமை வகித்த காந்தி “ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பிரதேச அரசாங்கங்களிலும் அப்பிரதேச மொழியே ஆட்சி மொழியாக்கப்படவேண்டும். பிரதேசங்களிலிருந்து மேல்முறையீடு செய்யப்படும் பிரிவிகவுன்சிலில் இந்துஸ்தானி மொழி பயன்படுத்தப்படவேண்டும்……. மத்திய அரசியலும் பாராளுமன்றத்திலும் இந்தஸ்தானியே இருக்க வேண்டும். சர்வதேச அளவில் ஆங்கிலம் இருக்கலாம்” என்று பேசினார்.

காங்கிரஸ் கட்சி அதன் அமைப்பு நடவடிக்கைகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியையே பயன்படுத்துவது என 1925 ல் கான்பூரில் நடந்த காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் காங்கிரஸ் அமைப்புச் சட்டத்தைத் திருத்தியது.

”காங்கிரசின் நடவடிக்கைகள் முடிந்தவரையில் இந்துஸ்தானியில் இருக்கவேண்டும். ஒரு வேளை பேச்சாளருக்கு இந்துஸ்தானியில் பேச முடியாத பட்சத்தில், ஆங்கிலத்திலோ அவரது பிரதேச மொழியிலோ பேசலாம். பிரதேச காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கைகளை அந்த பிரதேச மொழியிலேயே நடத்தவேண்டும். இந்துஸ்தானியையும் பயன்படுத்தலாம்” என முடிவு செய்யப்பட்டது.

காந்தியின் மொழிக்கொள்கைகளின் அடிப்படையில் 1937-ல் நேரு ‘மொழிப்பிரச்சனை பற்றி’, என்னும் புத்தகம் எழுதினார். சமதர்மம், சோஸலிசம், நவீன இயந்திரங்கள், புதியதொழில் நுட்பங்களை சுவீகரித்தல் போன்ற பல விசயங்களில் காந்தியுடன் முரண்பட்ட நேரு இந்திமொழிக் கொள்கையில் காந்தியுடன் நூற்றுக்கு நூறு பின்பற்றிச் செல்பவராக இருந்தார் என்பதை ’மொழிப்பிரச்சினை பற்றி’ என்ற நூல் உறுதி செய்தது.

1924-லிருந்தே இந்தியை, இந்திய தேசத்தின் பொது மொழியாக்குவது என்ற கருத்தும், கொள்கையும், செயல்பாடும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வந்தது என்பதை நேருவின் பதிவும், காங்கிரசின் தொடர் நடவடிக்கைகளும் தெளிவுபடுத்துகின்றன.

இதனால், 1937-ல் பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேச(மாநில) அரசாங்கங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகள் - திட்டமிட்ட முறையில் இந்தி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் பணிகளைத் தொடர்ந்தனர்.

1938-ல் பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்திலேயே இந்தியை எதிர்க்கவேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் ஏன் வந்தது? ஆச்சரியம் தான். ஆனால் உண்மை. 1938-ல் முதலமைச்சராய் ராஜாஜி ஆனபோது பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என சட்டம் கொண்டுவந்தார். 1938-ஆம் ஆண்டு திருச்சியில் தமிழறிஞர்கள், தலைவர்கள் கலந்தாலோசனை செய்தனர்.சோமசுந்தர பாரதியார் என்ற நாவலர் பாரதியாரைத் தலைவராகவும், கி.ஆ.பெ.விசுவநாதம் தளபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. பெரியார் ஈ.வெ.ரா, தமிழவேள் உமாமகேசுவரனார், டபிள்யூ.பி.சௌந்தர பாண்டியனார், கே.எம்.பாலசுப்பிரமனியம் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. மறைமலை அடிகள், பாரதிதாசன், போன்ற தமிழறிஞர்கள், டாக்டர் தருமாம்பாள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், மூன்று வயது மகள் மங்கையர்க்கரசி, ஒருவயது மகன் நச்சினார்க்கினியன் ஆகியோருடன் பங்கேற்ற சீத்தம்மா என அனைவரும் கைதாகினர். எண்ணற்ற தொண்டர்கள் தடியடியும், சிறையும் பெற்றார்கள். அப்போது நடந்த இந்திஎதிர்ப்புப் போராட்டம் பெரியார் பங்கேற்பினால் பெருவீச்சோடு மக்களைச் சென்றடைந்தது. தோழர்கள் நடராசன், தாளமுத்து இன்னுயிரை இழந்தனர்.

1948-லும் இதே போர்ச் சூழல். ஓமந்தூர் ராமசாமி காங்கிரஸ் முதலமைச்சர். அப்போது கல்விஅமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டம் வீறு கொண்டது. நூறு நாட்களுக்கு மேல் கொந்தளித்த போராட்டம் இறுதியில் பள்ளிகளிலிருந்து இந்தியை விரட்டிய பின் ஓய்ந்தது. அவினாசிலிங்கம் பதவியிலிருந்து விலகினார்.

ஆனால் பதுங்கிக் கொண்டிருந்த இந்திப் புலி பாயவே காத்திருந்தது.

1952, 53, 54-ம் ஆண்டுகளிலும் மத்திய அரசின் பல்வேறு நிர்வாகத்துறைகளில் இந்தி பரவலாக்கப்படுவதையும், இந்தி படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. 1960-ல் அப்போதைய குடியரசுத்தலைவர் வருகைக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தி.மு.க.வினரால் திட்டமிடப்பட்டு நேருவின் உறுதிமொழிக்குப் பின் கைவிடப்பட்டது.

3

அது 1965.

ஒரு வெகு மக்கள் புரட்சிமூலம், ஏற்கனவே இருந்த ஆட்சி அதிகாரம் தூக்கி எறியப்பட்டு புதிதாய் வந்த மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல இந்திய அரசியல் நிர்ணய சபை. இந்திய ஆட்சி அதிகாரம் என்பது பிரித்தானியரிடமிருந்து 1947-ல் இந்தியச் சுதந்திரச் சட்டத்தின் மூலம் இந்திய ஆளும்வர்க்கங்களின் பிரதிநிதிகளான காங்கிரசாரின் பொறுப்பில் கைமாற்றிக் கொடுக்கப்பட்டதாகும். மக்களின் மொழிசார் நலன்களையும், அதன் பின்னுள்ள வாழ்வியலையும் கருத்தில் கொள்ளாமல் இயங்குதல் ஆளும்வர்க்கங்களின் இயல்பு. அரசியல் அதிகாரம் கைமாறிய பின் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கையிலேயே இருந்தது. காங்கிரஸ் ஆட்சியாளர்களோ, இந்திய முதலாளிகளின், நிலப்பிரபுக்களின், இவர்களுள்ளிட்ட ஆளும்வர்க்கக் குழுக்களின் கைகளில் இருந்தார்கள். இவர்களிலிருந்தும், வேறு சில உயர்படிப்பாளிகள், வழக்கறிஞர்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ”அரசியல் நிர்ணயசபை” உருவாக்கப்பட்டது. அரசியல்நிர்ணய சபை உறுப்பினர்கள் கையில் இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இன்னும் சொன்னால் கோடிக்கணக்கான மக்களின் தலை விதி மக்களின் பிரதிநிதி அல்லாதவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இதன் தலைவர் மேனாள் இந்திய குடியரசுத் தலைவர் ராசேந்திர பிரசாத்.


அரசியல் நிர்ணய சபையில் ஆட்சிமொழி குறித்து 1949-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், மூன்று நாட்களுக்கு மேலாக நீண்ட விவாதங்கள் நடந்தன. இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்பதை தீர்மானிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டபோது, உறுப்பினர்கள் சரிபாதியாக பிரிந்தனர். இதைப்பார்த்த ராசேந்திர பிரசாத் தமது ஓட்டை, சபை மரபுக்கு விரோதமாக, இந்திக்கு ஆதரவாக போட்டு ஆட்சி மொழியாக்கினார்.



எந்த அறத்துக்கும் கட்டுப்படாமலும், சாதாரண தர்ம நியாயங்களுக்கு விரோதமாயும், பல்வேறு தேசிய இன மக்களின் ஜன நாயக உரிமை மற்றும் குடியுரிமைகளுக்கு எதிராகவும் செயல்பட்டு, அரசியல் நிர்ணய சபையின் அரசியல் சட்டத்தில் 17-து (ஆட்சி மொழி) பகுதி உருவானது.

அரசியல் சட்டத்தின் 17-வது பகுதி , பிரிவுகள் 343 லிருந்து 351 வரையில் அடங்கும்.

தேவநாகரி எழுத்திலான இந்தி தான் மத்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கும் எனச் சொல்கிறது பிரிவு 343. இந்தி புழக்கத்தில் வரும் 1965 வரை 15 ஆண்டுகள் ஆங்கிலம் ஆட்சி மொழியாக பயன்படுத்தப்படும் அது வரையறுக்கிறது. குடியரசுத் தலைவராக இருந்த ராசேந்திர பிரசாத் “1965-சனவரிக்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும். ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்காது” என 1959-ல் நாடாளுமன்ற உரையில் வெளிப்படுத்தினார்.

இப்போது ஒரு விஷயம் நமக்கு நன்றாகப் புரிகிறது. இந்தி ஆதிக்கம் சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கொள்கையாக இருந்து வந்துள்ளது. அதுவே பின்னால் அரசியல் நிர்ணய சபையின் மூலமாக அரசியல் சட்டத்தில் அரியணை ஏறியிருக்கிறது.

மற்ற தேசிய இன மக்களின் விருப்பு வெறுப்புகளை அறியாமலும், அவர்களுடைய மொழி உரிமைகளை மதிக்காமலும், உணர்வுகளை கெளரவிக்காமலும், திட்டமிட்ட முறையிலும் குறுக்கு வழியிலும் அரியணை ஏறி ஆதிக்கம் செலுத்தும் இந்தியை எதிர்ப்பதற்காக-இந்திய அரசியல் சட்டத்தில் அதன் 17-வது பகுதிமூலம் இந்தி மொழிக்கு சமத்துவமற்ற உயர்நிலை கொடுக்கப்பட்டுள்ளதைக் அகற்றுவதற்காக 1965-சனவரி 25 தமிழக மாணவர் போராட்டம் வெடித்தது.

1965-லிருந்து இந்தி மட்டும் ஆட்சி மொழியாக்கப்படும் நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் இந்தியாவின் அனைத்து தேசியமொழிகளும் ஆட்சி மொழிகள் ஆக்கப்பட வேண்டுமென்று1963-ல் தி.மு.க பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. தி.மு.க பொதுச் செயலராக இருந்த நெடுஞ்செழியன், மாநாட்டின் தீர்மானமாக அனைத்து தேசிய மொழிகளும் இந்திய ஆட்சி மொழிகளாக்கப்பட வேண்டும் எனவும், ஆங்கிலமே தொடர்பு மொழியாக நீடிக்க வேண்டும் எனவும், குடியரசு நாள் துக்கநாளாக கடைப்பிடிக்கப்படவேண்டும் எனவும் அறிவித்தார்.


25.1.65 அன்று இரவே தலைவர்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். தமிழ் நாடெங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆசிரியர்களும், ஆதரவளித்தனர். கல்வி நிலையங்கள் இயங்கவில்லை. சாலைகளில் வாகனங்கள் ஓடவில்லை.
இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் 1965-இல் வெடித்த மாணவர் போராட்டத்தில் மதுரையில் இரண்டு நாட்களில் அறுபத்தி மூன்றுமுறை தடியடி (lathi charge) நடத்தினேன் என்று அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் சேஷன் கூறினார். ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் ”சுட்டேன்; சுட்டேன்” என்று ஆணவமாய் முழங்கியது போல் பெருமிதத்துடன் கூறிக்கொண்டார். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தமிழ்நாட்டில் நூறு பேர் இறந்துபட்டார்கள் என்று அரசுக் கணக்கு தெரிவிக்கிறது. அப்போதுகூட ’கொல்லப்பட்டார்கள்’ என்று அரசு கூறவில்லை. அந்தப் போராட்டத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.


இன உரிமைப் போர் நமது விருப்பம் மட்டுமேயல்ல. வரலாற்றினதும் வாழ்வியலினதும் நிர்ப்பந்தம். வரலாற்றின் கட்டளையைப் புரிந்து மாணவர்கள் நடத்திய இரு மாத கால இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தினை தொடர்ந்திருந்தால், அது இன உரிமைப் போராக விடிந்திருக்கும். தமிழ்த் தேசிய உரிமைப் போரின் தொடக்கப்புள்ளி மாணவர் இந்தி எதிர்ப்புப் போர். ஆனால் மாணாவர் போராட்டத்துக்குப் பின்னின்று பங்களிப்பெல்லாம் செய்த அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க ஆட்சியிலேறிட லகுவான உத்தியாக அதை ஆக்கிக் கொண்டது. ஆட்சியில் அமரும் உத்தியிலிருந்து இன்னும் கீழிறங்கவில்லை.

தி.மு.க. தலைவர் அண்ணா “திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரையில் அனைத்து தேசிய மொழிகளும் ஆட்சி மொழிக்களுக்கான அந்தஸ்தை பெறும் வரையில் ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக்கும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும். மொழிப் பிரச்சனைக்கு இதுதான் முடிவானதும், நிரந்தரமானதுமான வழியாக இருக்க முடியும் என நாங்கள் கருதுகிறோம்” என்று திட்டவட்டமாய்த் தெரிவித்தார்.

“இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளும் நாட்டின் ஆட்சிமொழிகளாக வேண்டும் – மைய அரசின் ஆட்சிமொழியாக தமிழ் ஆகும்வரை ஓயமாட்டேன்” என அண்ணா நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றியது - என்னவாயிற்று என இப்போது நினைத்துப் பார்க்கக் கூட அவர்களின் நேரம் சரியில்லை.
செப்டம்பர் 14 இந்தி நாளாக அறிவிக்கப் பட்டு, உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பிறகு ’சமஸ்கிருத வாரம்’ கொண்டாடப் பட்டது.
மே 27, 2014 அன்று இந்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. ”இந்திய அரசு சார்ந்த அறிவிப்புகள் அனைத்தும் சமூக வலைத் தளங்களில் இந்தி மொழியிலேயே வெளியிடப் பட வேண்டும். அரசு சார்பில் சமூக ஊடகங்களில் இந்தியில் எழுதுவோர் இந்தியிலும் எழுதலாம். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுவோர் இந்தியிலும் எழுத வேண்டும்” என அறிவிப்பு தெரிவித்தது. ஊடகங்கள், அரசியல் கட்சிகள், ஆய்வாளர்கள், அறிவுஜீவிகள் மத்தியிலிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாய், பா.ஜ.க அரசு “இந்த அறிவிப்பு இந்தி பேசும் மாநிலங்களைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டதாகும்” என வினோதமான விளக்கத்தை அளித்தது. ஆனால் நடுவணரசின் நகர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வெளிப்படுத்தினாரே ஒரு உண்மை - அது அபாரம்.

”இந்த அறிக்கை காங்கிரஸ் ஆட்சியின் போது வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளியான நாள் மார்ச் 2014. அப்போது நாங்கள் ஆட்சியில் இல்லை. தேவையில்லாத பழி எங்கள் மீது சுமத்தப் பட்டுள்ளது.”

ஒரு உண்மை தெளிவாகியுள்ளது. காங்கிரஸ் ஆண்டாலும், பா.ஜ.க ஆண்டாலும் இந்தித் திணிப்பு தீவிரப்படும் என்பதுதான். அதிலும் ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை வழிகாட்டுதலில் கால்களை உறுதியாக ஊன்றியுள்ள பா.ஜ.க, மோடி அரசு இந்தித் திணிப்பில் புலிப்பாய்ச்சல் காட்டும் - ஐயமில்லை:

வரலாறு – ஒரு வளமான ஆய்வுக் கூடம். எல்லா சூரத்தனங்களுக்கு மட்டுமல்ல, எல்லாக் கள்ளத்தனங்களுக்கும் அதில் சான்றுகள் எடுக்கலாம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்