விதைகள் உறங்குவதில்லை

   

2013 நவம்பர் 8 - அன்று தஞ்சை விளாரில் நிறுவப்பெற்ற ’முள்ளிவாய்க்கால் முற்றம்’ - திறப்பு நிகழ்வின் போது பாவலர் இன்குலாப் தலைமையில் நடந்த கவியரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை.


விடுதலைக்காய் விதைக்கப்பட்ட
கல்லறைகளில்
விடுதலைவிதை முளைக்காத
கல்லறை எதுவுமில்லை
முரசறைவான் வால்ட் விட்மன்.
துயிலும் இல்லத் தோழரே,
முள்ளிவாய்க்கால் முற்றத்தினரே
பாட்டனின்  பிரகடணத்தை
படையலாக்குவேன்.
ஆகாய நிலா காட்டி,
அமுதூட்டுவாள் அன்னை.
கையளவு ரொட்டித் துண்டை
கடைவாயில் ஒதுக்கிய
 பாலகன் பாலசந்திரன் விழிகள்;
வியப்பில் நோக்கும் விழியில்
மரணத்தை வைத்தது யார்?
இசைப்பிரியாவின்
தொண்டைக் குழியில் ஒரு புல்லாங் குழலும்
கைகளில் வீணையும் இருந்தன.
சின்னஞ் சிறுகுயிற் குரலில்
அக்கினியையும்
கைகளில் துப்பாக்கியையும்
தந்தது யார்?
எட்டுக்கு எட்டடி குச்சுவீடு ஈழம்
 சின்னஞ் சிறு நாடு
கையளவு முல்லைத் தீவு;
கையளவு தீவை
கடலளவு பிணங்களால் நிறைத்தது யார்?
ராசபக்சே ஒருவன் தானா?
பாட்டனான ஜெயவர்த்தனே தானா?
பாட்டனுக்கும் பாட்டனான
’துட்ட கைமுனு’ மட்டும் தானா?
அண்டையில் நிர்வாணமாய்
நின்ற இந்தியா,
மான ஈனமற்று
முண்டக் கட்டையாய் ஆடிய வல்லரசுகள்,
அத்தனை காட்டுமிராண்டிகளும் !
அரசுகள் ஆடை அணிவதில்லை
அதனால்
எந்த நிர்வாணம் குறித்தும் இவர்கள்
கவலை கொள்ளவில்லை
இடுப்பொடிந்த கோழிக்கு
உரல்கிடையே சொந்தம்
இடுப்பொடிந்த இலங்கைக்கு
இனவாதம் சொர்க்கம்
கறந்த பால் முலைபுகா
கடைந்த வெண்ணெய் மோர்புகா
விரிந்த பூ, உதிர்ந்த மலர் கிளை புகா
இயற்கை விஞ்ஞானம்,
இது சித்தர்கள் ஞானம்.
எது நடந்தாலும்
போதி சமத்துவன் புத்தன்
இனி இலங்கை புகான்
இது புத்தன் கொண்ட ஞானம்
”இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்
எம் குன்றும் கொண்டார்
யாம் எந்தையும் இலமே”
பாரி மகளிர் பரிதவிப்பு ஒருகாலம்;
“எமக்கென்று ஒரு மண் உண்டு
எப்போது வேண்மானாலும்
வந்து செல்லுங்கள்” என எமை
போராளிகள் அழைத்தது இக்காலம்.
இது என்ன கோலம்!
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
எம் மண்ணும் இல்லை;
மக்களும் இலர்.
போராளியரே,
உமக்கென்று ஒரு மண்
அதிலொரு அந்தி முற்றம்
ஊர்முழுதும் ஒன்றுகூடல்
நெஞ்சு நிறைய நிலாச்சோறு
கன்னம் உப்பிடக் களிப்பு
கைநிறையக் கும்மி
குரலெல்லாம் குலவை
குழிவிழும் கன்னங்களில் கெக்கலிப்பு
நீரோடும் மீன்களாய்
நிலைகொள்ளாத் துள்ளல்
என்றிருந்த நிலம்
இன்று இரத்தச் சேறு.
நிலாச் சோறு உண்ட முற்றத்தில்
நெருஞ்சி படர்ந்தது;
கும்மியடித்த கைகளில்
குருதிப் படலம் ;
உலக வஞ்சகத்தில்
முள்ளிவாய்க்கால் என்னும்
மயான பூமி.
போராளியரே
இலட்சியம், வீரம் ஈகம்  எனும்
மூவாயுதம் ஏந்தினீர்
இராச தந்திரமெனும்
சூத்திர ஆயுதம் ஏந்திட மறந்தீர்;
எதிரி எங்கெங்கும்
இராச தந்திரவலை விரித்தான்
கூட இருந்து குழி பறிப்போரை
தேர்ந்து, திரித்து தன் வசத்தில் சேர்த்தான்
கொலைக் களம் கண்டான்
 சர்வதேசங்கள் 
பகைவனுக்கொரு பதுங்குகுழி.
விதைகள் உறங்குவதில்லை
விதைகளுக்கு மூச்சளிக்கும்
காற்றும் ஓய்வதில்லை
கருவில் காத்திருக்கும் குழந்தையென
வளரும் விதைகளுக்கு
கதைசொல்லி கதைசொல்லி,
வீரயுகக் கதை சொல்லி
காற்று வளர்க்கும்
மூடிய மண்ணை முளைவிம்மி
வெடிக்கச் செய்யும்
மேலெழுந்து துடிக்கும் துளிரை
வருடிக் கொடுக்கும்
ஒடுக்கப்படும்  நிலமுள்ள இடமெலாம்
முள்ளிவாய்க்கால் முற்றத்தின்
காற்று நடக்கும்
பரிதவிக்கும் உயிர்களுக்கு உணர்த்த
ஈழக்கடல் கடக்கும் இக்காற்று.
ஏதொன்றும் முடிவதில்லை
எல்லாம் தொடக்கம்;
வெற்றி என ஒன்றில்லை
வெற்றியை நோக்கிய பயணம்
வரும் நூற்றாண்டுகளுக்கும்
வளரும் விதை
ஒரு போதும் உறங்காது;
அடிமைகளின் தீவுகள்
எங்கெங்கு உண்டுமோ
அங்கெலாம் தொட்டுத் துலக்கும் வரை
முள்ளிவாய்க்கால் துயிலாது.
- சூரியதீபன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பள்ளிக்கூடம் நாவல்: பாடமாகும் அனுபவங்கள் - பேராசிரியர் இரா.கந்தசாமி

படைப்பாளியும் படைப்பும்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பலியாடுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்