கட்சிகளைக் கடக்கும் காலம்
மூவர் தூக்குக்கயிறு, முல்லைப் பெரியாறு, கூடங்குள அணு உலை எதிர்ப்பு, பரமக்குடி தலித் படுகொலைகளைக் கண்டித்த போராட்டம் ஆகிய நான்கு பிரச்சனைகளிலும் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டனர். உணர்வுப் பூர்வமான செயல்பாட்டுத் திட்டமாக பின்னர் அவை உருவெடுத்தன. இவை மக்களின் வாழ்வாதாரம், மனித உரிமைகள் ஆகிய தளத்தின் கொதிப்பான பிரச்சனைகள். பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் எந்த ஒரு தலைமைக்கும் காத்திருக்கவில்லை. அவரவர் ஒரு அரசியல் இயக்கச் சார்பிலிருந்தாலும், அக்கட்சிகளது கட்டுப்பாடுகளை மீறி, ஒரு பொதுச் செயலுக்கு முன்சென்றனர்.
சாதி, மதக் கட்டுமானங்கள் நிலவுடமைச் சமுதாய அமைப்பில் தோன்றியவை. முந்தைய பழஞ் சமுதாயம் தனக்கேற்ப வடிவமைத்து வளர்ந்த உருவாக்கங்கள் எனலாம். புதிய சமுதாய வளர்சிக்கு, சனநாயக நடைமுறைகளுக்கு எதிராக இருப்பதால், இவை விலக்கப்பட வேண்டியவை என பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் மட்டுமல்ல, சமூக, அரசியல் ஆர்வலர்களும் முன்வைக்கின்றனர். கட்சி என்ற அரசியல் வடிவம் முதலாளிய சமுதாய சனநாயக நடைமுறைகளினூடாகப் பிறந்த ஒரு புதிய அரசியல் கட்டுமானம். சனநாயக வழிமுறைகளுக்காக தோற்றம் கொண்ட கட்சிகள் தன்னளவிலும் சரி, ஆட்சியமைப்பிலும் சரி இன்று சனநாயகத்தைக் குழி தோண்டித் துள்ளத் துடிக்கப் புதைத்திடும் அமைப்புகளாக உருமாறியுள்ளன. எந்தவொரு பிரச்னை பற்றிப் பேசவும் நம் அரசியல் தலைமைகளுக்கு சனநாயகம் தேவைப்படுகிறது. சனநாயகம் பற்றிப் பாடிப் பாடிக் கும்மியடிப்பார்கள். ஆனால் தம்முடைய இயக்க அமைப்பு முறைகளை கிஞ்சித்தும் சனநாயகக் காற்றுப்படாத-மேலிருந்து கீழ்வரை கட்டளைக்குக் கீழ்படியும் அமைப்பாகவே இயக்குவார்கள். எந்த ஒரு பொறுப்புக்கும் எவரும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. எல்லாமும் நியமனம், அல்லது தேர்ந்ததெடுக்கப்படுவது போல் காட்டப்படும் நியமன முறையே.
சனநாயகம் என்பது கீழிருந்து மேலேறுவது; மேலிருந்து கீழிறங்குவது அதிகாரம். அதிகாரத்துக்கு பல முகங்கள் உண்டு. சனநாயகத்துக்கு கீழிருந்து மேலாய்ப் பரவி, ஒவ்வொரு கிளையாய், செழித்து, உச்சியிலும் ஒரு சனநாயகப் பூவை மலர வைக்கும் குணம் சனநாயகத்துக்கு மட்டுமே உண்டு. அரசியல் தலைமைகள் மக்களுக்கு வழங்க வேண்டிய சனநாயகத்தை முதலில் தமது இயக்கத்தில் செயல்படுத்துவார்களாயின் மக்களுக்கு சனநாயக வழங்கலுக்கான பயிற்சிக் களமாக இது அமையும். இவ்வாறு பொருந்தா உருக்கொள்ள காரணங்களாக அமைபவை இரண்டு
1) தேர்தல்-இத் தேர்தல் வழிமுறை மூலமே, ஜனநாயகப் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட்டு, சனநாயகம் நிலைப்படுத்தப்பட்டு விடுகிறது என்ற கருத்தோட்டம் அல்லது புரிதல் இங்கு வலுவாக நிலவுகிறது. தேர்ந்தெடுக்கப்படுவது அதிகாரப் பிரதிநிதித்துவமேயன்றி, மக்கள் சனநாயகப் பிரதிநிதித்துவம் அல்ல. தேர்ந்தெடுத்ததும், அதிகாரம் மக்கள் கையில் இல்லாமல் போய், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரமாக ஆகிப்போகிறது. இதன் காரணமாய் தேர்தல் ஒன்றே பிரதானம்; மக்களுக்கு விடிவு தருவது இது ஒன்றே. மக்களுக்கான அரசியல் என்பது அதன் பின்னர் இல்லை, தேவையுமில்லை என்ற கருத்து `நட்டுக்க நின்று சாமியாடுகிது’. ஒரு தேர்தல் முடிவு பெற்றதும், வெற்றியாளர்கள் அதை தக்க வைக்க அடுத்த தேர்தலை நோக்கியும், தோல்வியாளர்கள் மறுபடி ஆட்சியைக் கைப்பிடிக்க உத்திகள் வகுத்துச் செயல்படுவதும், பிற கட்சிகள் பிரதிநிதித்துவ அதிகாரம் வேண்டி இந்த அணியில் ஏதாவது ஒன்றில் இணைந்து கொள்வதும் என இதுவே அடுத்த 5 ஆண்டுகளின் அரசியல் பணிகளாக தொடர்ந்து நடக்கின்றன. அதிகாரப் பிரதிநிதித்துவம் கருதிய இந்த ஆதாயமே, இன்றைய கட்சிகளின் பிரதான நீரோட்டமாக ஆகியுள்ளது. எந்தவொரு பிரச்சனையும் போராடித் தீர்க்கப்பட வேண்டியவை என்று எண்ணாது, தேர்தலுக்கான உத்தியாக முன்னெடுத்தல் என்பதும், சாதி, மதக் கட்டுமானங்கள் போலவே கட்சிகள் தமது அரசியல் சுயநலன், தன் அடையாளம் காத்தல் என்பதின் நடைமுறைச் சாட்சியங்களாக மாறி விட்டன என்பதும் தெளிவாக மேல் வந்துள்ள உண்மைகள்.
சாதி, மதம் கடந்து சிந்தித்தல் போலவே கட்சிகள் கடந்து சிந்திப்பதும் காலத்தின் அவசியமாகிவிட்டது என உணர்ந்த எதிர்வினைகளே இன்றைய மக்கள் போராட்டங்கள்.
கட்சிகளைக் கடந்து ஒரு கோரிக்கையை, ஒரு பிரச்சனையை முன்வைத்துப் போராட முடியும்; போராட்டத்தை உயிரோட்டமாய்க் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு போராட்டங்கள் ஒரு சான்று. கட்சிகளைத் தொலைவில் நிறுத்தி அதே பொழுதில் கட்சிகளது ஆதரவையும் பெற முடியும் என்பதை மெய்பித்துள்ளார்கள்.
தமிழகம் முழுமைக்குமான ஒரு அரசியல் கட்சி என்பதை இச்செயல் முறைகள் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. பிரச்சனைகளின் அடிப்படையில் மக்களை ஒன்றிணைத்து, மக்கள்திரள் போராட்டங்களை வழி நடத்தும் ஆற்றலை அரசியல் இயக்கங்கள் இழந்து போயின என்பதை இது வெளிப்படுத்துகிறது. கட்சிகள் நடத்துகிறபோது கட்சியிலுள்ளவர்கள் மட்டுமே இணைகிறார்கள், மக்கள் அதற்குள் வருவதில்லை என்பது அவமானகரமான ஓர் யதார்த்தம். ஒரு 60-ஆண்டுக் கால தேர்தல் பாதை, மக்களைத் திரட்டும் வியத்தகு ஆற்றலை இவர்களிடமிருந்து உறிஞ்சி நீர்த்துப் போகச் செய்து விட்டது. எனவே மக்கள் தாங்களாக முன்னெடுக்கும் போராட்டங்களின் பின் செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. இப்படித் துணை செல்வதிலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு. அவரவருக்கு தேர்தல் ஆதாயம் என்பதுதான் நிலைப்பாடு.
இனி ஒவ்வொரு பிரச்சனைக்கும் தமிழ்நாடு அளவிலான ஒட்டு மொத்தத் தலைமை என்பதும், ஒட்டுமொத்த அணிதிரட்டல் என்பதும் சாத்தியமில்லை. தேவையுமில்லை. வட்டாரங்களிலிருந்து, பிரச்சனைகளிலிருந்து மக்கள் தங்களுக்கான தலைமையை உருவாக்கிக் கொள்கிறார்கள். தலைமை என்ற ஒற்றைப் பிம்ப முறையல்ல, தலைமைகள் என்ற பன்மைத்துவ சனநாயக பிரதிபலிப்பு முறை. விரிந்து பரந்த கேள்விக்குட்படுத்த முடியாத ஒற்றைத் தலைமை முறை என்பதாக அல்லாமல், கேள்விக்குட்படுத்தக்கூடிய , சனநாயகத்தால் தொடக்கூடிய பன்மைத்துவ தலைமைகளை மக்கள் விரும்புகிறார்கள். ஒற்றைத் தலைமை அமைப்பாக இல்லாமல், பகுதிவாரியான, பிரச்சனைகள் ரீதியான தலைமைகளை மக்கள் தமது கட்டுக்குள் வைத்திருக்க முடியும். எங்கேயோ இருக்கும் தலைமையல்ல, தங்கள் கைகளுக்குள்ளேயே வைத்திருக்கச் சாத்தியமான தலைமைகள்.
கூடங்குளம் போராட்டத் தலைமைகள் ஒவ்வொரு அடுத்த கட்ட நகர்வையும் மக்களிடம் கலந்து அறிவித்தனர். தாங்கள் உத்தேசித்துள்ள ஒவ்வொரு செயல்பாட்டையும் மக்களுக்கு விளக்கி, தெளிவை உண்டாக்கி, தெளிவிலிருந்து அவர்கள் தந்த ஆலோசனைகளின்படி இயங்கினர். மக்களை அவர்கள் தொடுவதும், அவர்களை மக்கள் தொடுவதும் எளிதாயிற்று. கூடங்குளம் மக்கள் தங்களுக்கான நேரடி சனநாயகத்தை முதன் முறையாக சுவைத்தனர். இந்திய பிரதமரின் அறிவுறுத்தலுக்கேற்ப மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, போராட்டக் குழுவினரை 26.9.11 அன்று ராதாபுரத்தில் சந்திப்பார் எனச் சொல்லப்பட்டது. "அமைச்சர்தான் நம்மிடம் வரவேண்டும். நாம் அங்கு போகக்கூடாது" என்று கூறி மக்கள் நிராகரித்தனர். பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்கிறவர்கள் களத்துக்கு வர வேண்டும்; களம் அங்கே போகக்கூடாது என்பது அந்த மறுப்பின் பொருள். அதன்படி அமைச்சர்தான் போராட்டக் களத்துக்கு நேரடியாக வந்து (வரவழைக்கப்பட்டார்) மக்களைச் சந்தித்து திரும்பினார். தங்கள் மத்தியில் வாழும் தலைமை என்பதால் தங்களுக்கான சனநாயகத்தை தங்கள் கைகளிலேயே வைத்துச் செயலாற்றுகிறார்கள் என்கிற புது அர்த்தமும் கிடைத்துள்ளது.
வட்டார வாரியாகப் பிரச்சனைகள் ரீதியாக உருவெடுக்கும் தலைமைத்துவம் மக்களுக்கு போராட்ட உணர்வையும் தீர்வையும் கொண்டு வர வல்லது. இக் குணங்களே தன்னெழுச்சிக்கு ஒரு தொடர்ச்சியை கொடுக்கக் கூடியன. இவ்வாறு பெருக்கெடுக்கும் சனநாயக வெள்ளம் பெரு வெள்ளமாகப் பெருக்கெடுக்கும். டுனிசியா தொடங்கி, எகிப்து, லிபியா, சிரியா, ஏமன், லிபியா, பக்ரைன், குவைத், சவூதி அரேபியா, அல்ஜீரியா என அரசுகளை அடித்துத் துரத்தியது இவ்வாறு சிறுகச் சிறுகப் பெருகிய மக்கள் வெள்ளமே. மக்கள் செயல்படும் சனநாயக தளங்களை தாமே கவர்ந்து கொண்ட சர்வ அதிகாரமுள்ள மாநிலத் தலைமைகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.
இது காலமும், மக்களைக் கட்டி இயக்கிய ஒற்றைப் பிம்பங்கள், கண்ணாடிச் சில்லுகளாய் உடைந்து நொறுங்குகின்றன. மரணித்துப் போனவர்கள் பற்றிய பிம்ப சித்திரங்கள் வேண்டுமானால், நிற்கக்கூடியதாக இருக்கலாம். நிகழ் காலத்தில் உருவாகி வாழ்ந்து கொண்டிருப்பவர்களைச் சுற்றி கட்டி நிறுத்திய பிம்பங்களை நேரடி விமர்சனங்களால் மக்கள் தகர்க்கிறார்கள். ஒருவருடைய செயற்கரிய சமுதாய சாதனைகளால் இயற்கையாய் எழும் ஆளுமை ஒருவரை நிறுத்துமேயன்றி, தானே பிரபல்யப்படுத்தி, தானே கட்டியமைக்கும் தன் சிலைகள் அல்ல.
தங்களுக்கு வழங்கப்படாத, தங்களுக்கு மறுக்கப்பட்டதான சனநாயகத்தை மக்கள் தாங்களே எடுத்துக் கொண்டதான செயல்முறைகள்தாம் இன்று பீறிட்டுள்ள எழுச்சிகள். தங்களைக் கண்டுகொள்ளாத கட்சிகளை தாங்களும் கண்டுகொள்ளத் தயாரில்லை என்பதையே மக்களும் நிரூபித்துக் காட்டுகிறார்கள்.
பரமக்குடி தலித் படுகொலைகள் பற்றி விசாரிக்க அமைத்த நீதிபதி குழுவை, உள்நுழைய விடாது விரட்டியடித்தவர்கள் அங்குள்ள வட்டார அளவிலான சிறு சிறு அமைப்புக்களேயன்றி பெரிய தலித் கட்சிகளோ அல்லது தலித் அல்லாத பெருங்கொண்ட கட்சிகளோ அல்ல. பெருங்கட்சிகள் அறிக்கை விடுவதோடு, மேடையில் பேசுவதோடு வரையறுத்துக் கொண்டார்கள். இயக்கியோர், பங்கேற்றோர் என்போர் உண்மையான உணர்வு கொண்ட சக்திகள்தாம்.
மாணவர்களின் 1965 இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர் வரலாற்றில் மாபெரும் சான்று. அரசியல் தலைமைகளை விலகி நிற்கச் செய்து மாணவர்கள், தம் தலைமையிலேயே ஒன்றுபட்ட தன்மையிலேயே முன்னெடுத்தனர். வேகம் எடுத்த பின் அரசியல் தலைமைகளுக்குக் கட்டுபபட்டோர் உள் அடங்கிக் கொண்டனர். அவர்களில் சிலர் பின்வந்து இணைந்தார்களே தவிர, பொதுவான மாணவத் தலைமைகள் தளராமல் பல்வேறு பகுதிகளிலும் முனைப்போடு ஈடுபட்டனர். அதை அரசியல் வசப்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 1967 பொதுத் தேர்தலின்போது போராட்ட உணர்வினை அரசியல்மயமாக்கி ஆட்சியை கைப்பற்றினார்கள். 1948 இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைமை தாங்கி இயக்கிய பெரியார் 1965ல் காமராசரைக் காக்க மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போருக்கு எதிராக நின்றார். திருச்சியில் பெரியார் பயணம் செய்த வாகனத்தை மறித்து, மாணவர்கள் எதிராகக் குரல் கொடுத்த குறிப்பு வரலாற்று முக்கியத்துவமுள்ளது.
***
வைப்பாறு. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றின் பெயரைத் தன் பெயராய்க் கொண்ட அழகான கிராமம். இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் பெருக்கமும், உலகமயமாதலின் அகன்ற சாலைகளும், வியாபார விரிவும் பேரூர் என்ற தகுதியை எட்டச் செய்து விடுவன. வைப்பாற்றின் ஆத்தங்கரையோர மக்கள் ஒரு குடம் தண்ணீர் மூன்று ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிறார்கள்.
அவர்கள் ஆற்றில் நீராடினார்கள் - அது ஒரு காலம்; அவர்கள் விவசாயம் செய்து செழிப்படைந்தார்கள்- அது ஒரு காலம். ஐம்பது ஆண்டுகள் முன். பையன்கள் சுத்தமான நீர் வேண்டி, குழி தோண்டி, வாளியால் சேந்தி, செழிக்கச் செழிக்கக் குளித்து பள்ளி சென்றார்கள்; இப்போது அந்த ஆறா இது என்று முதியவர்களாகி விட்ட பையன்கள் மலைத்துப் பார்க்கிறார்கள். மணல் இருந்தால் நீர் ஊரும். தொட்டணைத்தூறும் மணற்கேணி பொய்யாகிப் போனது. மணல் கொள்ளையடிக்கப்படுவது கண்டு வைப்பாறு மக்கள் சாலை மறியல் செய்தார்கள். கரையேறும் லாரிகளை நிறுத்தினார்கள். புதிய லாரிகள் இறங்கி விடாமல் தடுப்பு அணையாய் நின்றார்கள். மணல் கொள்ளையர்கள் முதலில் அரசு அதிகாரிகளைக் கவனித்து விட்டுத்தான் வந்திருந்தார்கள். இப்போது கட்சிகளின் வட்டத் தலைமைகளுக்கு மாவட்டத் தலைமைகளுக்கு அளந்தார்கள். கட்சிகளை அடக்கிவிட்ட போதிலும் மக்கள் அடங்கவில்லை.
பின்னர் உள்ளூர்ச் சாதித் தலைமைகளின் ஒத்துழைப்போடு ஒவ்வொரு வீட்டுக்கும் தலை எண்ணி இரண்டாயிரம் மூவாயிரம் என்று தந்தார்கள். ஊர் மக்கள் வாய் திறக்காமல் வாய்க்கூடு போட்டாகி விட்டது. (வாய்க்கூடு-மாடுகள் பயிர் பச்சைகளில் வாய் வைக்காமலிருக்க போடப்படும் பனை நார்க்கூடு)
விளாத்திகுளம் என்ற சிறு நகரின் ஆற்றங்கரையில் உள்ளது துளசிப் பட்டி. எந்த வாய்க்கூடு போட்டாலும் அடங்காமல் அந்த துளசிப்பட்டி மக்கள் திமிறிப் போராடினார்கள். உயிரிருக்கையிலேயே வாய்க்கரிசி போடும் ஈனக்காரியத்துக்கு உடந்தையாய் இருக்க மக்கள் தயாரில்லை. மணற் கொள்ளையர்கள் ஊர்ச் சாதித் தலைமைகளை தனியாய் சந்தித்து உடன்படிக்கை செய்ய சாதித் தலைமைகள் மடங்கிக் கொண்டன. மீறிப் போராடிய மக்களை போலிஸ் விரட்டியடித்து, கைது செய்து வழக்கும் போட்டனர். மணல் அள்ள அனுமதி பெற்றவர்களை கொலை செய்ய முயன்றதாக வழக்கு.
மண் அள்ளிய லாரிகள் கரையோர நிலம் வழியாக உலகமயச் சாலை அடைய ஒருவர் வழி செய்து கொடுத்தார். கரையோர நிலத்துக்குச் சொந்தக்காரர் அவர். லாரிக்கு ஒரு நடைக்கு இவ்வளவு என்று பேச்சு.
"என் நிலத்தின் வழியே லாரிகள் போக வர இருப்பதால் தங்களுக்கும் இதுபோல் சம்பாத்தியம் முடியாமல் போய் விட்டதே என ஊர்க்காரர்களுக்கு என் மேல் பொறாமை. என் சொந்த அக்கா, தங்கச்சிகள் கூட என்னை எதிர்த்துப் போராடுகிறார்கள்" என்கிறார்.
நிலத்தின் சொந்தக்காரர் படித்தவர். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர். மணல் கொள்ளையரை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் போராடும் மக்களுக்கு ஆதரவாய் வரவில்லை. கணக்கற்ற ஏரிகள், நீர்ப்பாசனக் கண்மாய்கள், குளங்கள் ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பு வசமாகி விட்டன. எண்ணிக்கையில்லா நிலங்கள் வனம், மலைகளை அழித்த உலகமய நவீன தொழில்வளர்ச்சியைப் பேணும் பிரதமர், நான் முந்தி, நீ முந்தியென்று பெரும் நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடும் நேற்றைய, இன்றைய, நாளைய முதல்வர்கள், துணையால் அரசியல் வாணிகம் செய்யும் அரசியல் தலைமைகள் - நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்ட விவசாயியை நோக்கி எந்த முகத்துடன் பொங்கல் வாழ்த்துக் கூறுகிறார்கள்? என்ன தகுதியில் அறுவடைத் திருநாள் என்று வாழ்த்த முடிகிறது?
ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து. பதினைந்து நாள் தள்ளி தமிழ்ப் புத்தாண்டுக்கும் வாழ்த்து. கூடங்குளமும், முல்லைப் பெரியாறும், பரமக்குடியும் தீயாய்த் தகித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல இவர்களுக்கு எந்தத் தயக்கமுமில்லை. கேரளத்தின் தண்ணீர்த் தடையால் சோகமுற்ற தேனி, மதுரை, பெரியகுளம் வட்டார மக்களை புத்தாண்டு வருகை தீண்டவேயில்லை. அந்த மக்களின் முகத்தில் மகிழ்ச்சி கொஞ்சமும் தென்படவில்லை என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகிறபோதும் (இண்டியன் எக்ஸ்பிரஸ் 2.1.2012) மெய்மறந்து புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன தலைவர்களை எந்த இனத்தில் சேர்ப்பது? தேர்தலுக்குச் செய்கிற முயற்சிகளில் கால்வாசி கவனத்தையாவது விவசாயி முதல் உழைப்பாளர் வரை அடிப்படை மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதில் இவர்கள் செலுத்துவார்களா? தேர்தலுக்கு தேர்தல் வருவது. வாக்கு வாங்கிச் செல்வது என்பது தவிர வேறெதுவும் இவர்களால் ஆகப் போவதில்லை என அனுபவப்பட்ட மக்கள் முடிவுக்கு வருகிறார்கள்.
சாதிகளைக் கடப்பது, மதங்களைக் கடப்பது போராட்டத்துக்கு எத்துணை அவசியமானதோ அது போலவே கட்சிகள் கடப்பதும் இன்றைய தேவையாகிவிட்டது. கட்சிகளின் அறுபதாண்டுக்கால அரசியல் நடப்புகளூடாக மக்கள் சேகரித்த அனுபவங்கள் இதை முன் நிபந்தனையாக்கியுள்ளது. கட்சிகளின் சர்வம் என்கிற எல்லாமும் என்கிற பெருங்கதையாடல் உடைபடும் காலமும் இதுவே.
அதேபொழுதில் அமைப்புகளே தேவையில்லை என்ற கருதுகோள் ஆபத்தின் விளிம்புக்குக் கொண்டுபோய் நிறுத்திவிடும். பிரம்மாண்டமான பெருங்கொண்ட கட்சிகள் (mega level) என்ற நிலையிலிருந்து சிறு சிறு அளவில் வட்டவாரியாய், பிரச்னை அடிப்படையில் இயங்கும் அமைப்புகளே (micro level) இன்றையஅவசியம். சிறு சிறு அமைப்புகளாய் இயங்குவதால் மக்கள் தங்கள் சனநாயகத்தை நேரடியாக (Direct democracy) கையாள முடிகிறது. தங்கள் சனநாயகத்தை தாமே கையாளும்போது வினைத்திறனும், ஆற்றலும் விசுவரூபம் கொள்ளும். ஆயிரம் கட்டு ஒரு யானை பலம் என்பது உண்மை. குழுவாய், அமைப்பாய் அங்கங்கு இயங்குகையில் பலப்பல சிறு சிறு அமைப்புக்கள் இணைகையில் அசுர பலம் கொண்ட சர்வ அதிகாரமும் உள்ள மக்கள் விரோத அரசமைப்பும் துனிசியா போல், எகிப்து போல், லிபியா போல், சிரியா போல் தகரும்.
மக்களுக்கு அவர்கள் கோருவது சனநாயகம். அதிகாரமுல்ல. சனநாயக முறைகளைத் தின்று கழிக்கும் புழுதான் அதிகாரம். மக்கள் கேட்பது இந்த அதிகாரப் புழுக்களேயல்ல; அவர்கள் கோருவது சனநாயகம். சிறுசிறு வட்டத்தில் நடைபெறும் போராட்டப் பயிற்சி முறையிலிலேய சனநாயகம் மேலெழும்.. மனிதன் என்றால் அசைவுள்ள சனநாயக உயிரி என்ற அர்த்தம் அப்போது முழுமைகொள்கிறது.
(தினமணி நாளிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)
நன்றி: கீற்று - 25 பிப்ரவரி 2012
கருத்துகள்
கருத்துரையிடுக