குறவன், குறத்தி ஆட்டம் - ஒரு புதிய பார்வை


“சாமீ”

“சொல்லு மகளே”

குறவன் குறத்தி ஆட்டத்தில் சாமியாட்டம் களை கட்டியிருந்தது.

“அவருதாஞ் சாமியாடி, வழக்கம் போல சாமியாடுறாரு. நீங்க எதுக்கு ஆடுறீக”

“அவன் ஆடுனா, நா ஆடுவேன்”

“அவரு பரம்பரையா சாமி கொண்டாடி ஆடுறாரு. நீங்க எதுக்கு ஆடுறீக?”

“நா இந்த வருஷம் கோயிலுக்கு வரி கொடுத்திருக்கேனில்லே”

“வரி கொடுத்தா?”

“வரி கொடுத்தா, சாமியாடத்தான் செய்வேன்”

“வரி கொடுத்தவனெல்லாம் சாமியாடுன்னா பாக்குறது யாரு?” மேளக்காரர் போட்டுக்கொடுத்தார். சாமியாடி அவரை அடிக்கப் போனார்.

குறவன், குறத்தி ஆட்டங்கள் என சில அம்சம்தான் இருக்கும். மற்றதெல்லாம் கதம்ப மாலை போல், நையாண்டி, கேளிக்கை, எசப்பாட்டு, கதைப்பாடல் என வேற வேற கோர்க்கப்பட்டிருக்கும். குறவன், குறத்தி ஆட்டம் என்ற கதம்ப நிகழ்ச்சி நடைபெறும் என்று அழைப்பிதழில் இருக்கும். காதல், சாதித் திமிர், சாமிச் சண்டை, மதச் சண்டை போன்ற சமகால நிகழ்வுகளைக் கிள்ளிக் கிளறி, நைய, நறுங்க கும்மி எடுத்து வைக்கிற மாதிரி கதம்ப நிகழ்ச்சி ஒவ்வொன்றும் இருக்கும்.

இப்போது சாமியாட்ட நிகழ்ச்சி. விளாத்திகுளம் ஆற்றங்கரையோரம் தப்பு விதையாய் முளைத்து, கொப்பும், கிளையும் கொண்ட விருச்சமாய் உயர்ந்து நிற்கும் கடற்கரை என்ற கலைஞன் சாமியாடி.

“நீ நிறுத்துடா கொட்டை ஒந்துருத்தியை ஊதிட்டுக் கெட” கையை ஓங்கினார்.

“அவரு மேளகாரர் என்ன தப்பாவா கேட்டாரு?” பொம்பிளை கேட்டாள்.

“தப்பாவா? அவன் திகிடுமுகிடா பேசறான்.”

“அவரு கேக்கிறததான் நா கேக்கறனே வரிக் கொடுத்தவர்களெள்ளாம். சாமியாடுனா பாக்குறது யாரு?” திருப்பினாள் பொம்பிளையாள்.

ஊருக்கு வந்திருக்கிற விருந்தாளிக பார்க்கட்டும். அவங்க பார்த்துட்டுப் போறாக.

“அவனைவிட என்ன குறைஞ்சி ஆடுறனா? அவனைப் பாத்தியா?”

“அவரு என்ன சொல்றாரு?”

“அவனும் வருஷம் முழுக்க சாமியாடுனேன் சாமியாடுறேன்னு சொல்லிப்பிட்டு ஊருக்காரங்கள ஏமாத்தித் தின்னுப்பிட்டு, நல்லா உமித் தின்ன பன்னி மாதிரி வந்து நிக்கான். நா வரிக் கொடுத்து, வரி கொடுத்து அந்த நீர் மஞ்சங் கெணக்கா கெடக்கேன். ஆட்டத்த நிறுத்த மாட்டேன் மகளே”

“ஆமா இவ்வளவு பேசறீங்களே, நீங்க எந்த சாமி?”

“வய்யிரவன்”

“வய்யிரவனா?”

“எந்த வைரவன்” மேளக்காரன் இடையிலிருந்து கேட்கிறார்.

“வைரவன்னா, நா சொன்னபடியெல்லாம் கேப்பானே. இவன் அந்த சாமியில்லே.

“இவன் திண்டுக்கு முண்டா பேசறான். இவன் வேத்து ஆள்தான். எங்க இவன சுடலைமாடன் ஆட்டம் ஆடச் சொல்லு?”

“மகளே, எனக்கு சுடலையும் வருவாரு. சுடலைய அழைக்கச் சொல்லு. யோவ் மேளம் அடியும்யா.”

டன், டன், டன், டணக், டன், டணக்க.

“ஏய் சாமியாடுனா. சாமியாடுனவனைப் பிடிக்க பொம்பிளையாள் கிடையாதா?”

“ஏன் ஆம்பிளையாளுக பிடிச்சா ஆகாதா?”

‘’ஆம்பிளையாளுக அலுத்துப் போய் உக்காந்திருப்பாக. ஏம் பொம்பிளையாளு பிடிக்கிறதுக்கு கொள்ளையா வந்திருக்கு.

“பிடிக்கிறேன் சாமி”

“ம் அப்படித்தான் நல்லாப் பிடி. சாமி லம்பிக் கீழே விழுந்திரும்போல இருக்கு நல்லாப் பிடி.”

சாமியாடி டங்கு, டங்கு என்று குதிக்கிறபோது சுற்றியிருக்கும் ஆண்கள்தான் பிடித்து ஆசுவாசப்படுத்துவது வழக்கம். இந்த சாமியாடி பொம்பிளையாள் தேடுகிறார். ஒவ்வொரு மனித மனத்தின் உள்ளும் அசையும் கொளுப்பு உருகி வெளியேறுவதை அம்பலமாக்குகிறார்.

“சாமிக்கு மேலெல்லாம் காந்துதே”

“என்ன வேணும் சாமி”

“பானக்கரம், மஞ்சப் பாலெல்லாம் கிடையாதா? எடுத்திட்டு ஓடியா, நில்லு. நில்லு பிள்ளே?”

“என்ன சாமி”

“இது பானக்கரம், மஞ்சப் பாலுல தீராது. ஒரு ஆஃப், குவார்ட்டர் எடுத்திட்டு வா அப்பதான் கேக்கும்.”

வீரபாண்டியபுரம் என்றொரு கிராமம். ஊர்த் தேவதைக்கு பண்டிகை நடத்தினார்கள். முதல் நாள் ராத்திரி தலைவிரி கோலமாய் ஆடிய இடும்பன் சாமி, மறுநாள் காலையில் ஊர்க்கடையில் தேநீர் சாப்பிட வந்தார்.

இன்னும் இரண்டு நாள் ஆட்டம் பாக்கியிருந்தது. ஜாலியாய் பேசி, கிண்டலடித்துக் கொண்டிருந்த விடலைப் பையனிடம் உடம்பெல்லாம் அடித்துப் போட்டதுபோல் அலுப்பு, ராத்திரிக்கு ஒரு ஆஃப் பாட்டில் தயார் பண்ணி வை என்று, இடது உள்ளங்கை மேல் வலது கையை வெட்டி, சைகையால் சொன்னார், அது உள்ளே இறங்கினால்தான் ராத்திரிக்கு தொடர்ந்து ஆட முடியுமாம். சபரி மலைக்குப் போகிற ஐயப்ப சாமி பக்தர்கள், முருகன் கோவிலுக்கு நடைப்பயணம் போகிற பக்தர்கள் அந்த விரதம் முடியும் வரை காத்திருப்பார்கள்.

கோயிலிலிருந்து கீழே இறங்கியதும் சிறையிலிருந்து விடுதலை பெற்றதுபோல ஓட்டமும், நடையுமாய் சாராயக் கடைக்குள் நுழைவார்கள்.

இவர்கள் மூடி மறைக்கிற உண்மையான மனிதனை கடற்கரை வெளியே கொண்டுவருகிறார். ஒரு வகையில் தன்னைத் தானே, விமரிசனப் படுத்திக்கொள்கிற கேலியும், கிண்டலும் கலந்த பாணி இது. கடற்கரை என்ற கலைஞனுக்கு, தன்னைத் தானே கிழித்து தொங்கவிட்டுக்கொள்வதில் எந்தத் தயக்கமுமில்லை. ஆனால், தங்களைத் தானே குறிப்பிடுகிறது என்ற உணர்ச்சியில்லாமல், வேறு எங்கோ இருக்கிற யாரையோ குறிப்பதாக, எதிரே கூடியிருப்போர் சிரித்துக் கொள்கிறார்கள்.

கூத்து வெகு ஜோராய் போய்க்கொண்டிருந்தது. மண்ணுக்கும், மண்ணில் குளுந்த காற்றுக்கும், மண் தரையில் உட்கார்ந்து கதை பர்க்கும் மக்களுக்கும் செழுப்பம் தந்துகொண்டிருந்தது.

நிலா உடைந்து மேற்கில் ஆடியது. போகிற நேரமா, வருகிற நேரமா நிலா எந்தப் போக்கில் போகிறதென்பது தெரியவில்லை.

“சாமி எனக்கு உத்தரவு கொடுங்க”

“மகளே வாய்திறந்து உத்தரவு சொல்லிடுவேன்”

“சொல்லுங்க சாமி”

“இது பொது மருளு (அருள்), மூணு வருசத்துக்கொரு தடவைதான் வாயைத் திறந்து சொல்லும்.”

“வாயே திறக்காதா? சாப்பாட்டுக்கெல்லாம் பலாப்பெட்டி மாதிரி வாயைத் திறக்கிறே” மேளகாரர் பக்கவாட்டில் வாங்கினார்.

“சோறெல்லாம் ரெண்டு மூணுதரம் வகையா வாங்கிச் சாப்பிடும். ஆனா உத்தரந்தாஞ் சொல்லாது. ஏன்னு கேக்கறியா நா இந்த கானாங்காத்தன் கோயிலுக்கு வருஷத்துக்கொரு தரம் வந்து சேவிச்சுட்டு ஊரைப் பார்த்துப் போயிருவேன் மகளே.”

“ஆமா இவரு ஒருத்தர்தான் ஊரைப் பார்த்துப் போறாரு. மத்தவங்களெல்லாம் காட்டைப் பார்த்துப் போறாக” மேளக்காரர் சைடில் விளாசினார்.

“நீ வேண்ணா சுடுகாட்டைப் பார்த்துப் போ. இந்த வருசத்திலேர்ந்து எனக்கு இந்த ஊர்ல ஒரு வீட்டைக் கொடுத்து மூணு வருசத்துக்கு இருக்கச் சொன்னா இன்னொரு வீட்ல இன்னா நடக்குன்னு சங்கதியெல்லாம் தெரிஞ்சி போகும். அப்ப பளிச்பளிச்சென்று உத்தரவு கொடுத்திடுவேன். இப்ப இன்னொரு கூட்டாளி. இன்னாரு பகையாளின்னு தெரியலே. இன்னாரு இன்ன கூட்டன்னு அடையாளம் தெரிய மாட்டேங்குது. எங்கிட்டுக்கூடி உத்திரவு சொல்ல மகளே.”

“அப்படிப் போடு அரிவாளை என்பது போல, தப்புத் தண்டா பண்ணுவதற்கு எந்த நேரமும் சாய்கிற மனசைச் சாடுவதுபோல், அரசியல் சந்தர்ப்பவாதத்தின் மேலும் அரிவாள் வீசுகிறார். யார் எந்தக் கூட்டணியிலிருக்கிறார்கள் என்று கணிக்க முடியாதபடி, இவர் இப்போது இந்தக் கட்சியிலிருக்கிறார் என்று உறுதி சொல்ல முடியாதபடி - கட்சிகள் சீரழிவுக்குள் போய்க் கொண்டிருக்கின்றன. யார் யாரோடும் சேர்க்கை கொண்டு எய்ட்ஸ் நோயைப் பரப்பலாம் என்பது நடப்பு அரசியல் கலாச்சாரம். இந்தக் கோரத்தின் வடிவே, இன்றைய சனநாயகத்தின் முகம் இந்தச் சூழ்நிலையில் உண்மை கண்டறியும் எல்லா வழிகளும் மறிக்கப்பட்டுவிட்ட கவலையில் (இந்தக் கவலைதான் சமுதாயத்தின் மனச்சாட்சியாக இயங்குகிற ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்க வேண்டிய கவலை) இந்தக் கவலை மிகக் கொண்டவராய் என்ன உத்தரவாதஞ் சொல்ல மகளே என்று கேட்கிறார் கடற்கரை.

“மகளே”

“சொல்லுங்க சாமி, கைய மேலே போடாதீங்க சாமி.”

“சாமிதான, ஒனக்க எங்ஙன போட்டா என்ன? நா வேணுமின்னா போடறேன். சாமிதான் போடச் சொல்லுது.”

“கையை எடுத்திட்டுப் பேசுங்க”

“அப்ப உத்தரவு கொடுக்க முடியாது போ”

“ஒங்கள நம்பி வந்திருக்கேன். இப்படிக் கோபிச்சா எப்படி சாமி?”

“சாமியக் கையைக் காலப் போட விட மாட்டேன்கறீயே?”

“நீங்க ஆதாரத்துக்கு வேன்னா போட்டுக்கோங்க”

“மகளே, திருநீறு போட்டு விடறேன். எந்திருநீறு எப்படி வேலை செய்துன்னு பாரு.”

“சாமி போன வருஷம் ஒங்க திருநீறு நல்லா வேலை செஞ்சுது.”

“ஆமா எப்படி வேலை செய்யுங்கற, அப்பன் கொடை போட ஊரு விளையாண்டு. ஒன் வீட்டுக்கு முன்னால சக்குன்னு நிப்பேன். அந்த நேரம் பாத்து அப்பனுக்கு ஒரு வேட்டை மாலை எடுத்துப் போடுவியா?”

“கண்டிஷனா எடுத்துப் போடுவேன் சாமி”

“ஏய், அடிர்றா. தாயோளி கொட்டை”

டன், டணக், டன், டணக், டன், டணக்

“மேளகாரரே, இவரு என்ன சாமி ஆடுறாரு?”

“வைரவனும், சுடலையும் ஆடறான்? இவன் வெளிச்சாமி இல்லே ஆடிட்ருக்கான்.”

“அப்படியா?”

“அவன் குடிகாரப்பய குடிச்சிப்போட்டு ஆடறான். இவன் நல்லசாமி ஆடலே. கள்ளச்சாமி ஆடுறான்.”

“நானாய்யா கள்ளச்சாமி ஆடுறேன்?”

“இப்படி கள்ளச்சாமி ஆடுற பயகளாலேதான். உண்டான நல்ல சாமிகளுக்கு நாட்டில மதிப்பில்லாம போனது.”

“நல்ல சாமிக்குத்தான் மதிப்பில்லேயே எங்கிட்டாவது போய்ச் சாகுங்க”

“இப்ப எதுக்கு விவகாரம்? இவன் ரெண்டு சாமி ஆடுறானில்லா. இவனை வேட்டைக்குப் போகச் சொல்லு” மேளகாரர் கேட்டார்.

“வேட்டைக்கு மயிருபோவேன்”

“நீதானப்பா வெளிச்சாமி ஆடுறே? வேட்டைக்குப் போறது வெளிச்சாமிதான் போகணும்.”

“இருட்டுக்குள்ள எவன் போய்ச் சாவான்?”

“சாமி, இந்த ஊருக்குப் பக்கத்துல ஒரு சுடுகாடு இருக்கு.”

“பெறகென்ன எல்லா ஊர்கள்ளயும் அடுப்பாங்கரைக்குள்ளேயா சுடுகாடு இருக்கும் மகளே”

“சுடுகாடுன்ன உடனே ஆடாம பேசாம இருக்கான் பாரு” மேளகாரர் போட்டுக் கொடுத்தார்.

“நா இருந்தா ஒனக்கென்ன, ஒனக்கு மேல் வலின்னா, தைப்பாறி, தைப்பாறி ஆடு”

“சாமி, நீங்க முதல்ல மயானத்துக்குப் போய் வருவீகளாம்.”

“மகளே அவன் மேளக்காரன்தான் வைரவனும், சுடலையும் ஆடறான்.

அவன் மயான வேட்டைக்காரன். நா கருப்பன் வன வேட்டையாடுறவன். மானு, நரி, கிரின்னு வேட்டையாடுறவன்” மேளகாரர் தாவினார்.

“வயக்காட்டு வழியா எலி வேட்டைக்குப் போற பய நல்ல சீருக்குள்ள ஊர ஏமாத்தியிருக்கான். ஒன்னைய எல்லாம் ஊருக்குள்ள ஓடவிட்டு வெட்டணும் பாரு.’’

“சாமி, இது எதுக்கு விவகாரம். சாமி கையில சூடத்தைக் கொளுத்தி வைங்க, நிஜச் சாமி எது, கள்ளச் சாமி எதுன்னு கண்டிருவோம்.”

“யாரும் தீப்பெட்டி வச்சிருக்கீங்களா?” மேளகாரர் கேட்டார்.

“என்னத்துக்கு, கருவாடு சுடப்போறியா?”

“ஆமா, கருவாடு சுட்டு சாமிக்குச் சோறு போடப் போறேன். நீங்க கள்ளச்சாமி ஆடுறீக கையைக் காட்டுங்க. சூடத்தைக் கொளுத்தி வைக்கணும்” பொம்பிளை சுள்ளாப்பாய் எக்குகிறாள்.

“மகளே, எங்கையிலயா, சூடத்தைக் கொளுத்தப் போறே?”

“ஆமா”

“சூடத்தை அவன் கையில கொளுத்து”

“முடியாது, முடியாது. கொண்டா கையை”

“எங் கையில் ரெண்டு ஊதுவத்திக் குச்சிய கொளுத்தி வை மகளே”

“முடியாது, சூடம்தான்”

“அப்பசாமி மலையேறிருச்சி”

“மலைக்கா போறீங்க சாமி? ஏஞ்சாமி, எல்லோரும் குவைத்துக்குப் போறாங்களாமே, அங்க கொஞ்சம் போய்ட்டு வர்றீங்களா?”

“இவனா? பகல்லே பசுமாடு தெரியாத பய, ராத்திரி எங்க எருமை மாட்ட கட்டப் போறான். இவனையெல்லாம் குவைத்துக்கு அனுப்பி சாணி போட்டுருவான்.”

மேளகாரர் தாவினார். இடைவெட்டு வெட்டியவர் ‘டம், டம்’ என்று மேளத்தைத் தட்டி முழக்கினார். அருள் வருகிறதுக்கு அடிக்கிற அடியாகத்தான் முழக்கினார். அந்தத் தண்டி அடி அடித்தும், சாமிக்கு அருள் வரவில்லை.

“நீ என்ன வேன்னா அடி நா மலையேறத்தான் போறேன்” என்பது போல் மூலையில் முடங்கி உட்கார்ந்தது சாமி, வம்புச் சண்டைக்கு இழுத்துக்கொண்டு இருந்ததால் மேளகாரர். சாமி, சுடுகாடு போய்ச் சேர்ந்தாச்சு என்றார் கடைசியாய்.

குறவன், குறத்தி ஆட்டத்தில் இது மாதிரி நிறைய சேர்மானம் உண்டு.

“அத்தை, அத்தை மாமியாரே”

“சாமியாட்டம்”

“பேய் விரட்டு”

குறவன், குறத்தி எசப்பாட்டு பாடி, தர்க்கம் செய்து, கல்யாணம் முடிப்பது.

மருமகனைத் தேடிய மாமன் எனப் பல விதங்களில் நடத்தப்பெறும் ஆட்டங்களின் அடிப்படை என்ன?

அறிவார்ந்த பொழுதுபோக்கா? மேல்தட்டில் வசிப்போர் கருதுவது போல் கீழான, கொச்சையான வெளிப்பாடா?

திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை ஒரு சமுதாய சீர்திருத்த அமைப்பாக வெளிப்படுத்தி வளர்ந்து வருகிறபோது, முன்வைத்தவை சீர்திருத்த நாடகங்கள், அரசியல் அரங்கை மையமாக வைத்து, ஆளும் வர்க்கங்களின் கருத்தியல் அடிப்படையில் அக்கு வேறு ஆணி வேறாய் நையாண்டி செய்து வெளிப்பட்டவை - துக்ளக் சோவின் அரசியல் பகடி நாடகங்கள், நகைச்சுவைத் துணுக்குகளின் தோரணமாய், ஒன்றுமேயில்லாது சிரிக்க வைத்தவை, கிரேஸி மோகன், எஸ்.வி. சேகர் காமெடி நாடகங்கள்.

சமகால வாழ்வியலின் மோசமான முரண்களை, அவலத்தை கேலியும், கிண்டலும் செய்து விமர்சனமாய் எடுத்து வருகிறார்கள். குறவன், குறத்தி ஆட்டக்காரர்கள் தனித் தனிக் காட்சிகளாய் இருந்தாலும் ஒவ்வொன்றும் சத்தியம் பேசுகிறவை. பிறன்மனை விழையாமை, பெண் நோக்கம் கொள்ளாமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை என சமூக மதிப்பீடுகளைப் போர்த்திக்கொண்டே மனிதன் திரிந்தாலும், சமகால வாழ்வியலில் அவை உடைந்து, சிதைந்துபோய்விட்டதை எள்ளலும் எகடாசியுமாய்த் தருகிற சமூக விமர்சனங்கள் இவை.

ஆதியில் நகரங்கள் இருந்ததில்லை. மனிதக் குடியிருப்புகள் முதலில்  தோற்றமாகின; குடியிருப்பு, ஊர்,பாக்கம், பட்டி, சேரி என வேறு வேறு சொற்களால் சுட்டப்பட்ட கிராமிய வாழ்விடங்கள் அமைந்தன கூடிவாழுதல் கோடி நன்மை  என்ற வாழ்வுப் பதுகாப்பு நோக்கில் சேர்ந்து வாழ்ந்தார்கள்.அது வேறொரு வகைக்கு வழி அமைத்துக் கொடுத்தது. கூட்டாக விளைவித்தல்,  பகிர்ந்துண்ணுதல் என்ற வாழ்வுமுறைக்கு   வழிபோட்டது. சமுதாய வளர்ச்சியில், வணிக சமூகப் பெருக்கம், அரசனின் ஆட்சி போன்றவை காரணமாய் மக்கள் திரள் திரட்சி நகர அமைப்பாய் மாற்றமெடுத்தது. இப்போதைய் முதலாளிய நகரங்களைக் கண்ணுக்குள் வைத்து அப்போதைய   நகரங்களை ஒப்பிட்டுக் கூற இயலாது. அவை நிலவுடமைக் காலத்திய சிறு நகரங்கள்.

முதலாளியப் பணவேட்டை, லாபப் பெருக்கம் என்பவை இயற்கை அழிப்பு, துரிதமான வளர்ச்சியை முன்னிறுத்த, இயற்கைப் பேரழிவு, நகர்சார்ந்த விபத்துக்கள் போன்றன நடக்கின்றன. இவைகளைக் கதைப்பாடலகளாய் தங்கள் ஆட்டக் கலைக்குள் இணைக்கின்றனர் குறவன் –குறத்தியாட்டக் கலைஞர்கள். இதொரு புதிய சேர்மானம்.ஆட்டமாக இல்லாமல் இசைப்பாடல்களாக இசைத்தனர்.

மக்கள்வாழ்வில் கூட்டுத் துயரத்தை விளைவித்தவை இச்சம்பவங்கள். 1956-ல் நடந்த அரியலூர் ரயில்விபத்து,1960 களில் ஏற்பட்ட ராமேஸ்வரம் புயல் விபத்து, மதுரை சரஸ்வதி பள்ளிக்கூடம் இடிந்து 50 –க்கு மேற்பட்ட மாணவியர் சாவு, தூத்துக்குடி டூரிங் டாக்கீஸ் விபத்து – என கதைப்பாடல்கள் எழுந்தன.மன்னன் மணிக்குறவன் கதை 1950- காலகட்டத்தில் எழுதப்பட்டது. மணிக்குறவனது பூர்வீகம் தூத்துக்குடி அருகேயுள்ள’ சேதிங்க நல்லூர் ’  மதுரைக்குப் பிழைப்புத்தேடி வந்தனர்.நகர உருவாக்கதினூடாக எவ்வாறு உதிரிகள் ,சண்டியர்கள் என்ற    அடியாட்கள் கூட்டம் உருவாகிறது என்பதற்கு மணிக்குறவன் வரலாறு ஒரு சாட்சி.

மதுரை டி.வி பச்சையப்பன் ஆர்.வி.மில் தொழிலாளி.ஆர்.வி.மில்.  இப்போது ’மதுரா கோட்ஸாக ’ மாறியுள்ளது.அமைதியான நதியின் நெஞ்சில் மலைப்பாறாங் கற்கள் விழுந்தது  போல், சமுதாயத்தின் நெஞ்சில் அதிர்வுகளை உண்டுபண்னிய சில   சம்பவங்களைக் கதைப்பாடல்காளாக வடித்துத் தந்தார் ஆலைத் தொழிலாளி டி.வி. பச்சையப்பன்.
“பெரியவரே சிறியவரே
பிரியமுள்ள தமிழர்களே
அரியலூரு ரயில்விபத்தை
அநியாயத்தைச் சொல்லி வாரேன்
அளவில்லாத சேதம் - பலர் 
அழிந்தாரையா சேதம்”
பாடும் கிராமியக் கலைஞனின் விரிந்த குரல் எட்டுக்காலச் சுதியில் ஓங்கி அடிக்கும். (டமாங்குத் தொண்டை என்பார்கள்)
“தூத்துக்குடி எக்ஸ்பிரசும்
துயரமான ரயில் விபத்தும்
பார்த்து மனம் துடித்தார்
பச்சையப்பன் கவி தொடுத்தார்”
என்று பாடலாசிரியரின் பெயரும் மறக்காமல் பதிவு செய்யப்படும்.

கதைப்பாடல்கள் என்ற புதிய அம்சம் குறவன் - குறத்தியாட்டத்தில் மக்களைச் சுண்டியிழுத்து, இடுப்பில் இடுக்கிக் கொண்ட புதிய சமூக அம்சம். இத்தகைய சமூக உள்ளடக்கம் இல்லாது போயிருக்குமாயின் இது வெற்றுப் பொழுதுபோக்காக ஆகியிருக்கும்.

- கதை சொல்லி (பிப்ரவரி - ஏப்ரல் 2007), கீற்று - 13 மே 2010

தொடர்புடைய கட்டுரைகள்: சாதி கழற்றிய சதங்கை

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்