சோ.தர்மன் - கரிசல் இலக்கிய வெள்ளாமையின் மகசூல் பெருத்த காடு


(தூர்வை, கூகை – நாவல்களால் தன் வட்டார மக்களின் வாழ்வியலை அழுத்தமாய்ப் பதிவு செய்த எழுத்தாளர் சோ.தர்மனின் ’சூல்‘ நாவலுக்கு 2019-க்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப் பெற்றுள்ளது. அடுத்து “பதிமூனாவது மையவாடி“ என்னும் புதிய நாவல் சனவரியில் நடைபெறும் புத்தகக்காட்சிக்கு வெளிவருகிறது. அவரது சிறுகதைகளின் முழுத்தொகுப்பு ‘சோ.தர்மன் கதைகள்’ என வெளிவந்துள்ளது.)

கரிசல் இலக்கிய வகைமையின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போலத் தோன்றினும், அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. அது முன்னர் நடைமுறைலிருந்த பொதுமொழி என்னும் ’உயர் உரைநடையிலிருந்து’ விலக்கமாகி, வட்டாரமொழிப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்து கருக்கொண்டது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது. அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யத் தேவையில்லை என்கிற மாதிரி ’மொதுமொது’ என்று விளைச்சல் கொண்டுள்ளது.

வட்டாரம் என்பது நிலவியல் அடிப்படையில் கிராமங்களின் மக்கள் தொகுதி, நாட்டுப்புற மக்களின் பேச்சு, சொல்லாடல்,சொலவம், வழக்காறுகள், பழக்கவழக்கங்கள் வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. முதன்முதலில் கரிசல் வட்டார முகம் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் கால்கோள் கொண்டது. சாதாரண மக்களின் நாவில் உயிருள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் எழுதிக் காட்டினார். ”ராஜா வந்தார்” கதை அதன் சரியான எடுத்துக் காட்டு. அதே காலத்தில் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், நெல்லை வட்டார மொழியில் ‘சலா’ வரிசை போட்டு சிலம்பம் ஆடிக்கொண்டிருந்தார். அவருக்கு ’வட்டாரத் தாய்மடி’ அற்புதமாகச் சுரப்புக் கொடுக்க, படைப்பபுத் தொழிலில் இருந்தவா்களும் வாசகரும் இவா் கையாளுகிற உரைநடைமொழியை அவ்வளவு சாதாரணமாய் ஒதுக்கிவிட முடியாது என்பதை உணர்ந்தார்கள்.

மண்ணின் மைந்தா்கள் வருகைக்கு முன்னர், ஒரு நூற்றாண்டாக பொதுமொழி என அங்கீகரிக்கப்பட்ட உரைநடை இருந்தது. எழுத்திலக்கிய அறிவாளிக் கூட்டத்தின் மொழியாக பொதுமொழி பயன்படுத்தப்பட்டது. இந்தப் பொதுமொழி முதலில் ஒரு வாசகனாய் என்னையும் என் போன்றோரையும் தொந்தரவு பண்ணியது. ஆத்துக்கு, ரேழி, பூஜை புனஸ்காரம், அம்பி, தர்மிஷ்டை, சந்தியா வந்தனம், அபிஷ்டு, விச்ராந்தியாய், அமானுஷ்யம் போன்ற சொற்களும், வந்தேளா, போனேளா போன்ற மொழியும் மக்களினும் மேலானவா்களாக தம்மைக் கருதிக்கொண்டவர்களால் கையாளபட்ட வேளையில், அவை எம்போன்றோருக்கு அந்நியமாயிருந்தது. சாதியிலும் கல்வியறிவிலும் மேலாண்மையினராக இருந்த அவர்களது உரைநடை பொதுமொழியாகக் கருதப்பட்டது.

படித்த, அறிவாளிக் கூட்டத்தின் மொழி என்றால் அதற்கு அப்படியொரு அங்கீகாரம்; வாய்மொழி எழுத்து வடிவம் பெற்றபோது புரியவில்லை என்ற அலட்சியத்துடன், ’கொச்சையாக எழுதுகிறார்கள் என்றொரு கோளாறு சொன்னார்கள். இக்காலட்திலு தமிழாசிரியராய் சுவாசம் கொண்டியங்கும் தமிழறிஞர்சிலர் இதிலிருந்து இன்னும் கழன்றுவிடவில்லை. அந்த மேட்டுக்குடியினர் போல் இவர்களும் ’பாஷை புரியவில்லை’ என்பதனையும், ’பாமரர் பாஷை’ என்வும் பொது இலக்கணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

”நம்முடைய பிரயோகங்களை அவா்கள் அடிவற்றிலிருந்து வெறுக்கிறார்கள். பிரதேச மண்ணில் எங்கள் மக்கள் பேசுகிற வார்த்தைகளை அவா்கள் தள்ளுபடி செய்து மண்வாடையைப் போக்கி ரத்து செய்துவிடுகிறார்கள்” கி.ரா புலம்புகிற அளவுக்கு அட்டூழியம் அளவுமீறிப் போயிருந்தது.

தாய் மார்பிலிருந்து பெருக்கெடுக்கும் இந்த அமிழ்தப்பால் சுவைதரவில்லை என்றார்கள். அப்படியானால் சென்னைக் கொச்சை எப்படிப் புரிந்தது? வாழ்க்கைக்குக்குத் தேவையாயிருக்கிறபோது அதனை ஏற்றுக்கொள்வதும், இலக்கியம் என வருகிறபோது அதனை அப்புறப் படுத்துதலும் எவ்வகையில் சரி? இலக்கியம், எழுத்து என வருகையில், அது வாழ்க்கைக்குத் தொலைதூரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டுமென்ற கவறுபட்ட கருதுகோள் தானே! அதிகாரமையம் கொண்ட தலைநகரமாக இருந்ததால், தலைநகரத்து மக்களின்மொழி (அடித்தட்டு மக்கள் மொழி) தவிர்க்க முடியாமல் கேலிக்குள்ளாகி, பின்னர் அங்கீகாரம் பெற்றது.


உயிர்ப்புள்ள மண்ணின் வாய்மொழியிலிருந்து இலக்கியம் செய்ய, கரிசல் இலக்கியத்திற்கு ‘முன்னத்தி ஏா்’ பிடித்துக்கொடுத்த கி.ராஜநாராயணன் அதை ஒரு வேலையாக எடுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். பூமணி, வீர.வேலுச்சாமி, பா.செயப்பிரகாசம், ச.தமிழ்ச்செல்வன், தனுஷ்கோடி ராமசாமி, சோ.தா்மன், சூரங்குடி அ.முத்தானந்தம், கோணங்கி, மேலாண்மை பொன்னுச்சாமி, கதைப்பித்தன், சுயம்புலிங்கம், உதயசங்கர் என்றொரு பட்டாளம் பின்னத்தி ஏா் பிடித்து, பொதுமலான கரிசல் மண்ணை பொங்குகொழிக்கச் செய்தார்கள். இன்னொரு பக்கம் தென்முனையில் பொன்னீலன், நாஞ்சில்நாடன் போன்றோர் நாஞ்சில் தமிழைக் கொடிபிடித்து உயர்த்திச் சென்றுகொண்டிருந்தனர்.

எங்கெங்கு காணினும் கறுப்புமண், கானல், புஞ்சைக்காடு, மானாவாரி விவசாயம், மழைபேஞ்சா வெள்ளாமை - இது கரிசல் சீமை. தண்ணீர் பட்டால் ‘உஸ்’ என்று சீறிப் பொருமுகிற கரிசல் கரம்பைக்கட்டி; சகட்டடி மழை போட்டுஅடித்தால் முழங்கால் வரை இறங்குகிற களிமண்.

கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு,கொத்தமல்லி (தனியா), திணை, அவரை, துவரை என்று நவதானியங்கள் ஒரு மழை தெளிச்சாலும் தெளிச்சியாய் முகம் காட்டும். ஆனா நிச்சயமா மேமழை ஒன்னு இருக்கனும்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் மேல்எல்லையான பெருநாழி, சூரங்குடி, வேம்பார் தொடங்கி, தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, சங்கரன்கோவில் என்று தொடர்ந்து, விருதுநகா், ராஜபாளையம், தென்காசி என்று மேற்குமலை அடிவாரம் வரை இந்த வட்டாரம் விரியும். இந்த எல்லைப் பரப்புக்குள் பயிர்வகை, செடி, கொடி, மரவகைகள், விளையாட்டு, சடங்குகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், உணவுமுறை அனைத்தும் வித்தியாசமானவை.

உலகளாவிய ஒரு பொதுக் கலாச்சாரத்தின் (உலகமயக் கலாச்சாரம்) ஒரே முகமாக ஆக்கும் தாக்குதல், இந்தக் கரிசலையும் குறிவைத்துச் சிதைத்துவருகிறது. நிலவியல் முதல் வாழ்வியல் வரை சிதைப்பு நடைபெற்று வருகிற காலத்தில், வித்தியாசப்பட்ட அந்தமுகத்தை பதிவு செய்து காட்டுவது இன்றைய படைப்பாளிகளின் முன்னிற்கிற முக்கியமான வேலை.

இந்த மண்ணையும், மக்களையும் கி.ராஜநாராயணன் சுவாரசியமாகவும் நுணுக்கமாகவும பதிவு செய்தவா். தமிழ் நாட்டின் வேற வட்டாரங்களில் பூமிவாசனையோடு வாழ்க்கையைப் பதிவு செய்தவா்கள் இருக்கிறார்கள். ஆனால் மக்களின் வாழ்மொழி, வாய்மொழி இலக்கியப் பாரம்பரியங்களிலிருந்து உவமானங்கள், சொலவடைகள், சொல்லாடல்கள், விடுகதைகள், நெடுங்கதைகள், கிராமியக் கதைகள் என வஞ்சனையில்லாமல் அள்ளிக் கொடுத்திருக்கிறார். அவரே ஒருமுறை சொன்னது போல் எடுக்க வேண்டியவை இன்னும் வண்டி வண்டியாக இருக்கின்றன.

கி.ரா.வின் முதலிரண்டு கதைத் தொகுதிகள், வேட்டி, கதவு ஆகியவை நிஜமாகவே முன்னத்தி ஏா் உழவு போட்டவை. கோபல்ல கிராமம் ஆந்திராவிலிருந்து குடிபெயா்ந்து வந்த மக்களைப் பற்றிய சொல்கதை; சொல்கதை என்பது நாவல், நவீனத்துக்கும் மேலானது. இந்த சொல்கதை முறையை, பின்னா் கரிசல் காட்டுக் கடுதாசிகளில் சுவாரசியமான, தனக்கேயான பாணியாக உருவாக்கிக்கொண்டார் கி.ரா.

புதுசு புதுசான கருக்களை வைத்தே கதை எழுதனும் என்று அவருக்குள் தீராத தாகம் இருந்தது. ’ஒன்றைத் தொட்டுவிட்டால் பிறகு அந்தக் கருவைத் தொடக்கூடாது’ என்பதை படைப்புக் கொள்கையாகக் கொண்டிருந்தார். அதனாலேயே அவருடைய படைப்புக்கள் துலாம்பரமாகத் தெரிந்தன. அவருடைய படைப்புக்கள் மக்கள் பேசுகிற மொழியில், அவா்கள் சிந்திக்கிற மனோவியலில், அவா்கள் வசிக்கிற சூழ்நிலையில் அமைய நினைக்கிறவா். “அவா்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவா்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகிற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்” என்பார் கி.ரா.

பொன்னீலனின் கரிசல் நாவல்
கரிசல் காட்டில் ஒருமூலையில் தலையீடு எதுவுமில்லாமல் எப்போதும் உறக்கத்திலேயே நடமாடுகிற மனிதா்கள் வாழும் ஒரு சிற்றூா் பெருமாள்புரம். ஊர் மக்களின் வாழ்க்கையை கரிசல் வாழ்க்கைக்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகச் சொல்ல ஆரம்பித்து, ‘பளிச்’ செனத் தெரிய வைத்தது பொன்னீலனின் கரிசல்.

”உண்மையில் எனது கதைகளை என் வாழ்க்கைக்குள்ளும் பக்கத்திலும், தூரத்திலும் எங்கிருந்து எடுத்தேனோ அந்த ஊரைச் சுற்றியுள்ள பத்து, பதினைந்து கல் தொலைவில் நடக்கும கதைதான் ‘கரிசல்’” என்கிறார் பொன்னீலன். அவர் கரிசல் வட்டாரத்தில் கல்வித்துறையில் கொஞ்சகாலம் பணிபுரிந்தார். அவர் எழுதிய காலத்தில் சுவாசத்தை அசுத்தப்படுத்தும் பேருந்துகள், சரக்குந்துகள், இராசாயனப் பூச்சி கொல்லிகள் கரிசலில் பிறப்பு கொள்ளவே இல்லை. உப்பு, புளிக்குக்கூட ஆகாமல் வேகு, வேகு என்று ஓடித் தவிதாயப்படும் வாழ்க்கை இருந்தது. அடிமைத்தனமான வாழ்க்கையை வெறுக்கும் படியாகவும், தம் வாழ்க்கையின் உண்மை நிலையுணர்ந்து மனிதன் என்ற சிறப்புக் கேற்ற வாழ்க்கையை பெறும்படியாகவும் போராடும் ஏழை, எளிய மக்களை கரிசலில் அணியப்படுத்துகிறார். கடைசிவரை கலைவண்டி தடம்புரளாமல் ஓடுகிறது.

பூமணி
”ஏலேய், சக்கிலித் தாயிளி. மாடு பாருடா. படப்புல மேயிறதை. வாயில வந்தாத் தெரியுமா” என்று ஆரம்பிக்கிறது பூமணியின் ‘பிறகு’ நாவல் ‘. கெட்ட வார்த்தைகளாய் தொடங்குகிறது இந்தப் படைப்பு என்று நூலகங்களுக்கு நுழையாமல் ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்டது இந்த நூல். இன்றைக்கு அப்படியெல்லாம் ஒதுக்குபவா்களை எண்ணி ஒரு கீத்துச் சிரிப்பு உதிர்க்கிறது கடைவாய். இது காலமும் படைப்புலகு தொடாத புள்ளிகளை, இதுவரை பேசாது விடப்பட்ட விசயங்களை ஏந்தி வருகிற தொகுப்பு பூமணியின்‘ரீதி’ சிறுகதைகள்.

வட்டாரத்தில் தலித்துகள் வாழ்கிறார்கள். வட்டார மொழி பேசுகிறார்கள். வட்டார மொழியிலும் தலித்துகளுக்கேயான வார்த்தைகள், வழக்காறுகள், மொழிகள் தனித்து ஒலிக்கின்றன. அதைப்பயன்படுத்தி ஒரு தலித் வாழ்க்கையைச் சொல்ல முடியும். ஒரு வட்டாரத்திற்குள் வாழ்ந்தாலும் சாதிப்பி்ரிவுகள் தனித்த அடையாளங்களுடன் நிலவுகிறபோது அதற்குப் பொருந்த கலாச்சாரம், வார்த்தை, மொழிப் பிரயோகம், வேறுபடும். மிகத் துல்லியமாக அந்தச் சொல்லாடல்களை, வழக்காறுகளை தன் எழுத்தில் கொண்டுவந்தவர் பூமணி. மலைப்பாறை விழுந்து அடியில் அகப்பட்டு மூச்சுத்திணறு விழுவது போல், சாதியக் கட்டுமானத்தில் மூச்சுத் திணறும் தலித் தனக்கிழைக்கப்படும் தாழ்வுகளை உதறி, அப்பால் தள்ளி ஒன்னுமில்லாமல் ஆக்க வேண்டும் என்ற எதிர்ப்ப்பிலக்கியம் ‘பிறகு, வெக்கை’ நாவல்களின் வழி காட்சியாகிறது.

தனுஷ்கோடி ராமசாமி ‘நூற்றாண்டுத் தணல்’
இன்றைக்கு குறிப்பாக நகா்ப்புற இலக்கியவாதிகளுக்கு படைப்பாக்கத்திற்கான அனுபவங்கள் இயல்பாக நிகழுதல் சாத்தியற்று வருகிறது. வம்படியாக அனுபவங்களைத் தேடியடைதல் என்பதே சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது. எழுத்தின் திறவுகோல் மெய்யான அனுபவத்தில் தங்கியுள்ளது. சுருங்கச் சொன்னால் அதற்கான வாழ்வியலும் தேடலும் அமைவது முக்கியம். இயல்பாகவே சனங்கள் மத்தியில் வாழ்ந்து தேடலைச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தவர் தனுஷ்கோடிராமசாமி.

தோழர் - அவரது முக்கியமான நாவல். ’காவலும் நிழலும்’, 'நூற்றாண்டுத் தணல்’ போன்ற சிறுகதைத் தொகுப்புக்கள் சிறந்த படைப்புக்கள்.

வீர.வேலுச்சாமி
சிறுகதை வெளியில் அறுபதுகளின் நடுவில் கரிசல்வட்டாரத்தின் மேற்கில் ராசபாளையத்தில் வித்தியாசமான ஒரு பூ விரிந்தது. தன் வருகையால் இப் பூ சிறுகதைக் காட்டை மணக்க வைத்தது. வாழ்வுப் பாலையில் வெக்கை தாங்காமல் வதங்கி உணங்கும் செடிகொடிகளின் பிரதிநிதியாகத் வெளிப்பட்டு, அவைகளினூடாக, தான் வாழ்ந்ததைப் பேசியது. யதார்த்தவியல் என்ற இலக்கிய வகைமைக்கு கைநிறைய அன்னமிட்டது.

1970-களின் தொடக்கத்தில் வீர வேலுச்சாமியின் நிறங்கள் – சிறுகதைத் தொகுப்பினை வால் பிடித்தபடி, வீர.வேலுச்சாமி கேட்டுக் கேட்டுச் சேகரித்த ‘தமிழ்நாட்டுச் சிறுவர் கதைகள்’ வெளிவந்தது. அவருடைய படைப்புப் பயணம் ஏழெட்டு வருடங்களுக்குள்ளாகத் தடைப்பட்டது. சீக்காளியாகி, மருத்துவம் பார்த்து நோயைச் சீராட்டுவதிலே படைப்பு ஆற்றல் முடங்கிவிட்டது. திட்டமிட்ட விலகல் அல்ல; அது அவருக்கொரு விபத்து.

24 வயதில் அவருக்குக் காச நோய் வந்தது. படைப்புக் களத்தில் அவர் வீசிக் கொண்டிருந்த சிலம்பத்தை அவா் கையிலிருந்து பறித்து ”நீ போட்ட சிலா வரிசை போதும்” என்று வைத்துக் கொண்டது. நோய் அனுமதித்த அளவுக்கு வாசித்தார். கடைசி ஐந்தாறு மாதங்களில் கடன் கொடுத்த பொருளைப் போல் உயிரையும் நோய் வாங்கி வைத்துக்கொண்டது.

யதார்த்த வகைமை என்ற இலக்கியச் சித்திரிப்புக்கு தலை வாரி, பொட்டுவைத்து,சிங்காரித்து, கூந்தலுள்ள சீமாட்டியாய் ஆக்கி அழகு செய்தது இவர் வேலை; எல்லை மீறல் அற்ற சித்தரிப்பு ;மனதைச் சுண்டியிழுக்கும் அளவான உச்சரிப்பு; நம்மோடு நேரடியாகப் பேசும் வாஞ்சனையான உரையாடல். எல்லை மீறல் அற்ற அறவியல் கோடுகள் கீச்சி, அழகியலாய் அமைந்த அற்புதமான கதைகள் .

மு.சுயம்புலிங்கம்
“நல்ல மழை நாள் பூராவும்; அந்த மாசம் முழுதும் மழை. ஐப்பசி மாசம்” என்றுதான் ஆரம்பிப்பார். சொல்வது போலவே இருக்கும் எழுத்து. ஊா்க்காரா்களைக் கூட்டி வைத்து, அவா்களுக்கு கதை சொல்லிப் பயிற்சி எடுத்தவா். படிப்பு அதிகம் கிடையாது. சொந்தமாகப் படித்துக்கொண்டது தான். அசலான கரிசல் காட்டு சம்சாரியாக வாழ்ந்தார். சம்சாரியாக காலந்தள்ள முடியாமல், நகர்ப்புறத்தில் ’ஸ்வீட்’ கடை வைத்துப் பிழைக்கும் தொழிலுக்கு நகா்ந்து விட்டார். கிராமத்து வாழ்க்கையை இயல்பாகச் சொல்லுகிற ‘நாட்டுப் பூக்கள்” வாசனை சொடுக்குகின்றன.

கரசல் இலக்கியப் படைப்புக்களை ’ராணீத் தேனியாய்’ முன்னடத்தி வழிகாட்டிச் செல்லும் ச.தமிழ்ச்செல்வன், உதய சங்கர், சூரங்குடி அ.முத்தானந்தம், கி.ரா.பிரபாகர், பொன்ராஜ், உக்கிரபாண்டி எனப் பலரிருக்கிறார்கள்.

சோ.தர்மன்
கரிசல் படைப்புக்களின் கண்ணி அறுந்துவிட்டதா? ’எவனடா சொல்வான் அப்படி’ என்று பாரதி போல் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, கி.ரா. முன்னத்தி ஏர் பிடித்த உழுகாட்டில் இரட்டைக் கலப்பை போடுகிற ஆளாக நிமிச்சலுடன் வந்து நிற்பவர் சோ.தர்மன்.

இன்னும் அந்த மக்களின் நடுவில் வாழ்ந்து கொண்டிருப்பதால், உக்கிரமமாய் கொதிக்கிறது எழுத்துக்கள். எடுக்கக் குறைவதில்லை தணல்.

கரிசல்சீமை மக்களை விவசாயம் கைவிட்டுவிட்டது. விவசாயத்தை அவா்கள் கட்டி இழுத்துக்கொண்டு அலைகிறார்கள். இன்றைய நிலவரப்படி அவா்களது வாழ்க்கை சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. தரிசாய்க் கிடக்கும் மந்தைப் புஞ்சைகளில், நீா் வறண்ட கண்மாய்ப் பொட்டல் மத்தியில், இந்தக் கால விடலைகள் கிரிக்கெட் ஆடுகிறார்கள். சனங்கள் நகரங்களை நோக்கி கையேந்திப் போகிறார்கள். பின்சாமத்துக்கு தீப்பெட்டிக் கம்பெனிப் பஸ்கள் வந்து கதவுகளைத் தட்டி, சின்னஞ்சிறு பால்குடிப் பிள்ளைகளை வாரிப் போட்டுக்கொண்டு போகிறது. ஒயில்கும்மி, தேவராட்டம், வில்லுப் பாட்டு, தெருக்கூத்து, என்று கலைகள் செழித்திருந்த மண்ணில், திரைஇசைத் தட்டு நடனக்குழுக்கள் தலைதெறிக்க ஆடுகின்றன. இந்த நசிவுகளை நடு நரம்பாக்கியது தான் ’சோ.தர்மனின் கதைகள்’ தொகுப்பு.

தென் மாவட்டங்கள் நாட்டுப்புறக் கலைகளின் வளமான பூமி. வாய்ப்பாட்டு, கும்மி, ஒயில்கும்மி, தேவராட்டம், கரகம், மயிலாட்டம், வில்லுப்பாட்டு, குறவன் குறத்தி ஆட்டம் - இதன்னியில் மதுரையைத் தலைமையாகக் கொண்டு இசை நாடகக் கலைஞர்களின் வருகை என ஒவ்வொருவரும் அவரவருக்கு தக்கன நிகழ்த்திக் காட்டினார்கள். நிகழ்த்து கலைஞர்களின் வாழ்வை எழுத்தாளர்கள் எத்தனை பேர் எடுத்து எழுதி இருக்கிறார்கள்? அப்படிப் பார்த்தால் நாம் அறிந்த, பிரபலமான ‘ஓம் முத்துமாரி’ போன்ற நிகழ்த்து கலைஞர்கள் பற்றிப் பேசாமலே விட்டிருக்கிறோம். வில்லிசைக் கலைஞர் பிச்சைக்குட்டி பற்றி அரிய தகவல்களுடன் சோ. தர்மன் எழுதிய நூல், இந்த வழியில் முன்னடி போட்டுத் தந்த நூல்.

சிலரின் சிறுகதைகள் வாழ்வின் முழுமையையும் ஒரு கதைக்குள் சொல்லிச் செல்பவை; சிறுசிறு காட்சி சித்திரமாக விரிந்து முழு வாழ்வையும் காட்டி போகிறது சோ.தர்மனின் கதைகள். அவருடைய நாவல்களிலும் இந்த எடுத்துரைப்பு முறையை காணலாம். வாழ்வின் சிறுபகுதிக் காட்சிச் சித்திரம் வாழ்வு முழுமையையும் தரிசனப் படுத்தும். இத்தகைய தனித்தனி காட்சிச் சித்திரங்களின் தொகுப்பு இவருடைய ’சூல்’ நாவல்.

மானாவாரி விவசாயம் செத்துச் சுண்ணாம்பு ஆகிவிட்டது. கிராமத்து பொம்பளை ஆம்பளை அனைத்து உழைப்பாளிகளும் அன்னாடம் டவுனில் போய் கொத்து வேலைக்கு கூப்பிடுவார்கள் என்று காத்து காத்து முளைத்துப் போவார்கள்.

மயிலம்மாள் சொல்வாள் ”முந்தி மாதிரி சம்சாரி வேலையா இருக்கு, இங்கேயே வேலை செஞ்சுகிட்டு இருக்க. எல்லோரும் டவுனுக்குப் போயி ஒதைஞ்சாத்தான் கஞ்சி. இதுல என்ன மேச்சாதி, கீச்சாதி.”

வயிற்றுப் பிழைப்பை காட்டிய தர்மன், சாதியை ஒரு கிள்ளு கிள்ளி வீசுகிறார். (கதை- அப்பாவிகள்)

தான் வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து அனுபவிக்கிற நாளாந்தப் பாடுகளை - இந்தப் பாடுகள் உருவாக்கும் மன உளைச்சலை – இந்த உளைச்சல்களால் உருவமற்ற போன மனிதர்களைத் தரிசனப் படுத்துகிறது இவரது எழுத்து. தொடக்ககால எழுத்து முறையிலிருந்து சமகால எழுத்துமுறை ஒரு தாவலை நிகழ்த்தி அதிசயத்தை தருகிறது.

அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல; ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாத போதும் அவருடைய எழுத்துக்கள் பெரும்பகுதி தலித் எழுத்துக்கள் தாம். அவ்வாறு அடையாளம் செய்து கொள்வதென்றால் செய்து கொள்ளுங்கள் என்று அவர் விலகிப் போகலாம்.

அவர் அறிவிக்கிறார் ”நான் பிறப்பால் மட்டுமே தலித். எழுத்தால் அல்ல”

இந்த வாசகத்தினை வந்தடைந்த காரணத்தை அறிவிக்கிறார் ”இதுவரை தமிழிலக்கியத்தில் பதிவாகி உள்ள தலித் இலக்கியங்கள் என்று பறை சாற்றப்படுகின்ற எந்த எழுத்துமே என்னை ஆகர்ஷிக்கவில்லை.” (கட்டுரை: என்னுடைய கதைகளின் கதை.)

அவ்வாறாயின் ஆகர்ஷிக்கும் தலித் எழுத்துக்களை தாங்கள் முன்வைத்திருக்கலாம் என்ற தருக்கத்தில் நியாயம் இல்லாமல் போகவில்லை.

தொடர்ந்து பேசுகிறார்;
”காரணம் நான் ஒரு தலித் என்பதாலும், தலித் சமூகம் மற்றும் அதன் கலாசாரத்தை உணர்ந்தவனாக இருப்பதும் கூட இருக்கலாம். தலித் கதையாடலை, தலித்தின் தனித்தன்மையை, தலித் சமூகச் சித்திரங்களைக் கலாபூர்வமாகச் சித்தரித்து சிருஷ்டிக்கும் ஒரு உன்னதக் கலைஞன் இனிமேல்தான் உருவாக வேண்டும். நானும் முயன்று பார்க்கலாம்”

ஈரெட்டாகச் சொல்வதற்குப் பதில், அத்தகைய உன்னதக் கலைஞன் இடத்தைப் பிடித்தால், சாகித்ய அகாதமி விருதினும் மேலானதல்லவா அந்த விருது!

- கணையாழி, சனவரி 2020

கருத்துகள்

  1. எழுத்தால் சோ தர்மன் கடவுளே (பிரம்மனே) .

    பதிலளிநீக்கு
  2. கரிசல் படைப்புகளின் கண்ணி அருந்து விட்டதா, எவனடா சொல்வான் அப்படி, என்று மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு, கி.ரா. முன்னத்தி ஏர் பிடித்த உழு காட்டில் இரட்டைக் கலப்பை போடுகிற ஆளாக நிமிச்சலுடன் வந்து நிற்பவர் சோ தர்மன்.

    சோ தர்மன் அறிவிக்கிறார்- நான் பிறப்பால் மட்டுமே பட்டியல் இனத்தவன், எழுத்தால் அல்ல.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை