கிராமத்துப் பாதை

நடுக்காட்டில் இறக்கி விட்டு பஸ் பறந்தது. சுற்றிலும் அலையடிக்கும் கானல் நீர் தவிர வேறெதுவும் இல்லை.

பார்வை மிதிக்கும் தூரம் வரை வெறும் கரிசல். எங்கேயோ ஒரு சின்ன ஒற்றைப் பனை போல், பஸ்ஸிலிருந்து இறங்கி நான் மட்டும் நிற்கிறேன்.

அது ஒரு பாதை இல்லை. மாட்டு வண்டிகள் உருண்டு, உருவான வண்டித் தடம். மழை, தண்ணி புரள அடிக்கிறபோது வண்டிப்பாதை அழிந்து, கால் தடங்கள் பதிந்த ஊடு பாதை பிறந்து விடும்.

சொந்த ஊரை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையைப் போல இனிமையானது வேறெதுவும் இல்லை.

பஸ்ஸிலிருந்து இறங்கி, 5 கி.மீ ஊடுகாடு வழியே நடக்கிறேன். அரிவாள், கம்பு, முறுக்கிய மீசை, உடைந்த நொண்டிக் குதிரையுடன் கருப்பசாமி வரவேற்கிறார். பகலை இருட்டாக்கும், ஆந்தைகள் அடையும் வன்னி மரத்தடிதான் அவருக்குப் புகல். அதனை ‘ஸ்தல விருட்சம்‘ என்றார்கள். கருப்பசாமி என்பதோடு கூட முனியாண்டி, சுடலை மாடன், அய்யனார், இசக்கி, மாடசாமி என்று இத்தனைப் பெயர்கள். அவருக்கு வாகனம் நாய். உருவாரம் குதிரை. சாமி வேட்டைக்குப் போக, வர, குதிரைகள் உருவாரம் செய்து நேர்த்திக் கடன் கழித்தார்கள்.

ஊர் மொகணையில், வாய் உடைந்த பானை போல் ‘கொறுவாயான‘ குடிநீர்க் கண்மாய். கால், கை, முகம் கழுவி வாய் கொப்புளித்துத் துப்புவது, ஆடு, மாடு தண்ணீர் குடிக்க இறங்குவது அந்தக் கண்மாய்தான்.

பானை, பானையாய் தண்ணீர் எடுத்து, கம்மாய்க் கரையில் நின்று குளிப்பார்கள். குளிக்கும் தண்ணீர், கரிசல் மண்ணைத் திரட்டித் திரட்டி, உருண்டு உருண்டு மறுபடி கம்மாயில் போய் வழியும்.

எனக்கு அந்தத் தண்ணீரைத் தெரியும்; இளநீர் மாதிரியான அந்த தண்ணீருக்கு என்னைத் தெரியும்.

‘ஒங்க ஊர்த் தண்ணி ருசி வெறெங்கேயும் வருமா? எங்க ஊர் கிணத்துத் தண்ணி சவர் அடிக்குது‘ என்பார்கள் அசலூர்க்காரர்கள்.

‘அளிறு தான் காரணம்; வாகரையில் கிடக்குதில்லே அளிறு (களிமண்). அதில் அலை தட்டித் தட்டி ஒரு ருசி வந்திருது‘ என்பார்கள் எங்களூர்க்காரர்கள்.

சொந்த ஊரை நோக்கிச் செல்லும் அந்தப் பாதை அழகானது.

வண்டித் தடம் இருந்த இருந்த இடத்தில் தார்ச்சாலை; கண்மாய் இருந்த இடத்தில் குடிநீர்த்தொட்டி.

கால் கொப்புளிக்க 5 கி.மீ. தூரம் வெயிலில், மழையில் நடக்க வேண்டியதில்லை. வீட்டு வாசற்படியில் பஸ்.

வந்திருந்தது அது மட்டும்தானா?

எங்கள் ஊர் பால்ச்சாமி வாத்தியார் பள்ளிக்கூடம் விட்டு நேரடியாக வீட்டுக்கு வருவதில்லை. அவருக்குப் பாதை ‘பிராந்திக் கடை ‘ வழியாகப் போய் வீட்டுக்கு வருகிறது.

பிராந்திக் கடை பக்கமிருந்து ‘வா மச்சான் வா ‘ பாட்டு.

‘வா, வா, ஐயப்பா நீ வா‘ என சினிமா மெட்டில், சினிமா தட்டில் கூக்குரலிட்டு சபரிமலைக்குக் கூப்பிடும் அழைப்பு.

தேநீர்க் கடைத் தட்டியில், ‘தாவணிக் கனவுகள்‘ சுவரொட்டி.

ஒரு ஆசிரியரின் வீட்டு வாசலைக் கடக்கையில் உள்ளே ஜரிகைத் தாளில் வெட்டி ஒட்டிய எழுத்துக்கள் Wife is Life என்று மினுமினுக்கிறது. அதற்குத் தமிழ் ‘மனைவியே வாழ்க்கை ‘

கம்மாய்க்கரை புளிய மர வேர் முண்டுகளில், வேலை இல்லாத வாலிபர் கூட்டம் சினிமா நடிகர்களைப் பற்றி அக்கக்காகப் பிய்த்து வைக்கிறது. ‘எந்த பொம்பிளை நல்ல சேலை கட்டியிருக்கா, எவ நல்ல ரவிக்கை போட்டிருக்கான்னு தேடுறானுக‘ சடைத்துக் கொள்கிறார் மல்லையாத் தாத்தா. சினிமா, டி.வியைப் பார்த்துவிட்டு பொம்பிளைக் கிறுக்குப் பிடித்து அலைகிறார்கள் என்கிறார்.

எங்கள் ஊர் இழந்து போனவைகள் இன்னும் அதிகமாக இருந்தன.

ஆனாலும் பிறந்த ஊரை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையைப் போல் இனிமையானது இல்லை.

நன்றி: திண்ணை - 12 ஆகஸ்ட் 2001

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்