ஹேப்பி பொங்கல்! - நம் பண்பாட்டுச் சிதைவுகள்


தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு நகரம். அங்கு சென்றிருந்தபோது பொங்கல் நாட்கள். சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்த வீதிகள், தரையில் பெய்து ஊறும் மழை நீரை, வழித்து ஊருக்கு வெளியே விட்டன. எல்லா வாசல்களிலும் இரவு முழுதும் கண்விழித்து இட்டிருந்த கோலங்கள். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து நானும் எனது நண்பரும் கோலப் பூந்தோட்டங்கள் பார்வையிடச் சென்றோம். கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது கணுக்காலில் அரிவாள் வீச்சுப் பட்டு துண்டாகி விழுவதைப்போல ஓரிடத்தில் வலி. கோலத்தில் Happy pongal என்கிற வாசகம். அரிவாள் வீச்சுப் பட்ட இடம் மனசில். நொண்டி மனசுகள், சங்கரன்கோவிலில் என்றில்லை, எங்கள் குக்கிராமதிலும் ”முக்காலே மூணு வீசம்” அவைதாம். வீடுகளில் இனியபொங்கல் வாழ்த்துக்கள் என்கிறபோது எவ்வளவு இன்மையாக இருக்கிறது. கோலப் பூ மலர்ந்திருந்த போதும், முற்றங்களில் Happy pongal ஆங்கில வாழ்த்து வாசகம்.


அவரவர் வீட்டு முற்றத்தில் பொங்கலிட்ட பிறகு, ஒன்பது மணியளவில் ஒலிபெருக்கியில் “இப்போது நாம் பொங்கலிடுவதற்காக பிள்ளையார் கோயில் முன் கூடுவோம்” என்றொரு அறிவிப்பு. இன்னொரு பொங்கலுக்குத் தயாராகும்படியான அறிவிப்பு. இது என்ன புதுப் பொங்கலாய்த் தெரிகிறதே என்று கேட்ட போது ”அது இப்ப இப்பத்தான்“ என்ற பதில். அதாவது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் போட்ட திருநீறு அபரிதமாய் வேலை செய்கிறது. இந்துத்வா பொங்கல்! முற்றத்திலோ, நாற்சந்தியிலோ, திடலிலோ கூடி, நடுவில் கம்பு சோளப்பயிர், நெல், கரும்பு வைத்து, கும்மியடித்து, கோலாட்டம் ஆடி, கொண்டாடியதை கண்டிருக்கிறோம். என் தாய் ஊரில் ஆண்களே கோலாட்டம் ஒயிலாக ஆடியதை சிறுவயதில் கண்டுள்ளேன். அப்படி ஊர் கூடிக் கொண்டாடிய பொங்கல், இப்போது மதம் சார்ந்த விழாவாக உருமாற்றப் பெறுகிறது. இந்தப் பெருந்தொற்று நோய்க்கும் Happy pongal-க்கும் உள்முடிச்சு இருப்பது தெரிந்தது.

இரண்டும் பண்பாட்டுத் தாக்குதல்கள்: கோலம் போட்ட கைகள் தமிழச்சியினுடையது; உலகமயமாதலின் வீச்சில் தனக்கும் ஆங்கில ஞானமுண்டு என வருவோர் போவோருக்கு உணர்த்த வேண்டுமென்னும் உளவியல். ஆங்கில மோகம்.

எவ்வகை பண்பாட்டுத் தாக்குதல்கள் இவை? பண்பாட்டின் வேர்களுக்குள் போய் அறிய வேண்டும். வரலாற்றை அறிதல் என்பதிலே வரலாற்றில் வாழ்தல் என்னும் உணத்தி உண்டாகும்: வரலாற்றை மாற்றுதல் என்ற செயலூக்கம் வரும்.


பண்பாடு என்றால் என்ன?

“பண்பாடு என்பது நிலம் சார்ந்தது; நிலம் என்றால் வெறும் மண் அன்று. நிலப்பகுதியில் வாழும் மக்கள், அவர்கள் பேசும் மொழி, அவர்களுடைய உற்பத்திப் பொருட்கள், அவர்கள் பயன்படுத்தும் கருவிகள், புழங்கு பொருட்கள், இசை கலை இலக்கிய வெளிப்பாடுகள், வாய்மொழி மரபுகள் எல்லாம் சேர்ந்ததற்குப் பெயர்தான் பண்பாடு.”  

நிலவியல் ரீதியாக வளர்தெடுத்து வாழ்வியலைச் சொல்லியிருப்பார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன்.


அந்த வகையில் பொங்கல் என்ற தமிழர் பண்பாடு, எப்படி ஆங்கில எழுத்து ரூபம் கொண்டது என்பதற்கு வர்லாற்று பூர்வ ஆய்வு தேவைப்படுகிறது.

சென்ற நூற்றாண்டின் தொடக்கம் வரை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அரசாங்க மானியத்தில் சமஸ்கிருதம் பரவலாகத் தடையின்றிக் கற்பிக்கப்பட்டது. சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்லூரிகளில் சேர்பவர்கள் சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்னும் அரசாங்க விதி 1921ஆம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்தது. 1921- இல் நீதிக்கட்சி அரசின் முதல் அமைச்சரான பனகல் அரசர் மசோதா கொண்டு வந்து மருத்துவக் கல்லூரிகளில் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்கத் தேவையில்லை என ஆக்கினார். பார்ப்பனர் ஆதிக்கம் ஒரு துறையில் முடிவுக்கு வருகையில், உடனே பொருள்வருவாய் ஒன்றுக்குப் பத்தாக வரும் பிறதுறைகளில் குவியத் தொடங்கி விடுவர். வருவாய்த் துறையிலும் நீதித்துறையிலும் கல்வித்துறையிலும் தொடர்ந்து மேலாதிக்கத்தை லாவகமாகக் கைப்பற்றினர்.

முதல்முறையாக மாவட்ட ஆட்சியர் என்பவர் மாவட்டத் தலைநகரங்களிலும், ஆளுநர் சென்னை நகரத்திலும், வைஸ்ராய் பெயரால் டெல்லியிலும் புதிய அதிகார மையங்கள் உருவாகியபோது, அதிகார மையங்களை நோக்கி கவனம் சென்றது.இந்த அதிகார மையங்களை கைப்பற்றி மேநிலை பெற்றிட ஆங்கிலக் கல்வியே பார்ப்பனர்களுக்கு உள்நுழையும் கணவாயாக மாறுகிறது. ஆங்கிலக் கல்விக்கும் அதிகாரப் பதவிகளுக்கும் ஆசைகொண்ட அவர்கள் நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

தன் இறுதி மூச்சு வரை பார்ப்பனியத்தின் நலன்களைக் காக்கப் புறப்பட்டவர் ராஜாஜி. 1937 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இராஜாஜியின் இருந்த இரண்டு ஆண்டுக் கால ஆட்சியில் பள்ளிகளில் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார்; மற்றொன்று ஆங்கிலத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் தேவையான நிதி ஒதுக்கி தன் பார்ப்பன அக்கறையை வெளிப்படுத்தினார். மறுபடியும் 1952 ல் முதலமைச்சரானவுடன் அப்பன் தொழிலைப் பிள்ளை செய்யும் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்; இதனால் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை இழந்த ராஜாஜி, சட்டமன்றக் கட்சியால் புறந்தள்ளப்பட்டு புதிய தலைவராக காமராசரை தேர்வு செய்தனர்.

தமிழ்நாட்டில் முதன் முதலில் இந்தியை கட்டாயப் பாடம் ஆக்கிய ராஜாஜி பின்னர் 1960 களில் திராவிட அரசியல் சக்திகளுடன் இணைந்து இந்தியை எதிர்க்கத் தொடங்கினார். ”இந்தி வேண்டாம் ஒரு பொழுதும்: ஆங்கிலம் வேண்டும் எப்பொழுதும்” என்பது இராஜாஜி முழக்கம் . இந்த இந்தி எதிர்ப்பினும் கூடுதலாய் அவருள்ளே தமிழ் எதிர்ப்பு குடியிருந்தது என்பதை திராவிட உணர்வாளர்கள் அறிந்தாரில்லை. ஆங்கிலம் எப்போதும் என்ற ராஜாஜியின் முழக்கத்தை தம் முழக்கமாக ஏற்றுக்கொண்ட திராவிட சக்திகள் "தமிழ் வாழ்க” என்று ராஜாஜியை ஒலிக்கச் செய்ய முயலவில்லை. இந்தி ஒழிக என்று முழங்கிய அதே நாவில் தமிழ் வாழ்க என்றும் உரத்த குரல் வந்திருக்க வேண்டும். ஆங்கில ஏற்பும் தமிழை ஓரம்தள்ளி வைக்கும் வினையாற்றலும் பின்வந்த காலங்களில் ஒரு போக்காக உருவெடுத்தது. பார்ப்பனீய வழியில் உண்டான இந்த கலாச்சாரம் மெல்ல மெல்ல தமிழ் மனங்களுக்குள் ஊறி, ஆங்கில மோக உளவியல் தமிழ்ப் பெண்டிர் கைகளிலும் Happy pongal என்று எழுத வைத்தது.

ஓர் அரசு இந்த சமுதாயம் முழுவதையும் வன்முறை எந்திரங்களால் இயக்குகிறது என்பதை மார்க்ஸ் வரையறுத்தார். இதில் நமக்குச் எச்சந்தேகம் இல்லை. ஆலிவர் கிராம்சி கூடுதலாகக் கூறுகிறார். ”பண்பாட்டு மேலாதிக்கம் என்பது இவை எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருக்கிறது” என மார்க்சியத்தை இன்னும் வளப்படுத்தினார். ”ஆனால் இவற்றினால் மட்டுமே ஒரு மேலாண்மை மற்றும் ஆட்சி அதிகாரம் நிலைநாட்டப்படுவதாக நான் கருதவில்லை. மாறாக மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் சமூக ஒப்புதலை மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் பெற்றுக் கொள்வதன் மூலம் அதிகாரம் நிலைநிறுத்தப்படுகிறது” என்று கிராம்சி குறிப்பிடுகிறார். எனவே பண்பாடு என்பது ஆட்சி அதிகாரத்தின் மூலமாக மட்டுமே நிலைநிறுத்தப்படுவது அல்ல. அது மக்களுடைய முழு ஒப்புதலுடன், அங்கீகாரத்தோடு நிறுவப்படுகிறது. அது இராஜாஜி வகையறாக்கள் போன்ற தலைமைகள் காலகாலமாய் போட்டுத் தந்த பாதையில், சூத்திர படித்த மேநிலை வர்க்கம் தனதாக ஆக்கிக் கொண்டது. இன்றும் தமிழகத்தில் அது பொங்கிப் பெருகி மேல்வருகிறது; எல்.முருகன் தலைவராக இருந்தாலும், பா.ஜ.க.வின் தமிழகத் தலைமையை முழுக்க பார்ப்பன அறிவுஜீவிகள் கைப்பற்றி இயக்குகிறார்கள் என்பது கண்கூடு.


தமிழர் திருமணங்கள் கடந்த காலத்திலே எப்படி நடந்தன என்பதை நாம் அறிவோம். இப்போதும்கூட கிராமப்புறங்களில் ஓரிரு இடங்களில் நடக்கிற திருமணங்கள் சங்க காலத் திருமணங்களை நினைவுபடுத்துகின்றன. முற்றத்தில் புதுமணல் பரப்பி, பந்தல் காலிட்டு, ஊரிலே இருக்கிற பெரியவர்கள் – அதாவது அந்த சமுதாயத்தின் பழக்க வழக்கம் பற்றி அறிந்த அறிவார்ந்த ஒருவர் அல்லது அந்தக் குழுவிலே, குடும்பத்திலே மூத்தவர் அல்லது சமுதாயத்திலே இருக்கிற பெரியவர்கள் தலைமையில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இம்மாதிரித் திருமணங்களை நேரடிச் சாட்சியாகக் கண்டிருக்கிறேன். இன்றைக்குப் பெரும்பாலான கிராமப்புறங்களிலே நடத்தப்படுகிற திருமணங்கள் பக்கத்திலே இருக்கிற நகரங்களில் பெரு மண்டபங்கள் நோக்கி நகர்ந்து விட்டன. இற்றைத் தினத்தில் மண்டபங்களில் திருமனங்கள் நடைபெறுதலும், ஐயர் என்கிற புரோகிதர் நடத்திவைப்பது ஒரு பொதுக் கலாச்சாரமாக ஆகிவிட்டது. இந்த திருமணமண்டபக் கலாச்சரத்தில் ஐயர் ஆதிக்கம் கோலோச்சுகிறது. பார்ப்பனர்களால் ஓதப்படுகிற மந்திரங்களில் நடத்தப்படுவதாக மாற்றம் பெறுகிறது. திருமணத்திலிருந்து தொடங்குகிற பண்பாட்டு வடிவம் என்றில்லை, வாழ்வின் எல்லாமும் பல்வேறு பண்பாட்டுச் சிதைவுகளாக வெளிப்படுகின்றன.

சீர்திருத்த திருமணங்கள் பற்றி இப்போது நிறையப் பேசுகிறோம். இன்றைக்கும் அது பேசப்படுகிறது. விதவையாக இருப்பது அல்லது வேறொரு திருமணம் செய்து கொள்வது, சாதாரண தமிழ்க் குடிமைச் சமூகத்தில் இயல்பாக இருக்கிற எதார்த்தம்.

தமிழ்ச் சமூகத்திலே ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் கைம்மை நோற்பதில்லை. அவர்களுக்கு ஒரு கணவனைப் பிடிக்காதபோது வேறு கணவனைத் தேர்ந்தெடுக்கிற உரிமை இருக்கிறது. அதற்கு அறுத்துக் கட்டுதல் என்று பெயர். நவ நாகரிகமாக விவாகரத்து என்று சொல்கிறோம்.ஆனால் அதை நாகரீகமற்ற செயல் என்று இளக்காரமாய்ப் பேசும் பேச்சும் நம்மிடை வந்துள்ளது.

வேறொரு ஆணை மணந்து கொள்கிறபோது ஏற்கெனவே இருந்த கணவன் மூலம் பெற்ற குழந்தைகள் ஆணுடையதா? பெண்ணுடையதா? இந்து திருமணச் சட்டங்கள் ஆணுக்குச் சாதகமாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றன. அறுத்துக் கட்டுகிற பழக்கமுடைய மக்கள் பெண்ணுக்கு முதல் கணவனாலே பிறந்த குழந்தைகளையும் அவள் இரண்டாவது ஆணுடன் வாழச் செல்கிறபோது அழைத்துச் செல்கிறாள். இதுகாலம் வரை இந்த வழக்கம் இருந்துகொண்டு வருகிறது. பூமணியின் ’பிறகு’ நாவலிலே இதுவரும். அடித்தள மக்களின் இந்தப் பண்பாட்டிலிருந்து நல்லவை எல்லாமே தீர்மானிக்கப்படவேண்டும். மேலாண்மை கொண்ட இந்துப் பார்ப்பனக் கருத்தியலிலிருந்து அல்ல.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்