இனப் படுகொலை: தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்

(சென்னையில் இடம்பெற்ற 'இனப்படுகொலை: தமிழீழம் இந்தியாவின் பாதுகாப்பும்' நூல் வெளியீட்டில் பா.செயப்பிரகாசம் அவர்கள் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்)செர்மனியின் பிரிமன் நகரில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples Tribunal) டிசம்பர் 2013, 10-ஆம் நாள் முடிவுகளைத் தெரிவித்துள்ளது. அமர்வில் 11 நீதிபதிகள் (நடுவர்கள்) பங்கேற்றனர். பல தரப்பிலிருந்தும் பெறப்பட்ட சான்றுகள், 30 நேரடி சாட்சியங்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஈழத் தமிழர், இனப்படுகொலை என்னும் இரு சொல்லாடல்களை முதன் முறையாகக் கையாண்டுள்ளனர்.

2010-ல் அயர்லாந்தின் டப்ளின் நகரில் கூடிய இதே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் பற்றிய ஆய்வை அளித்தது.

'போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இலங்கை அரசு, சூலை 2006-ல் யுத்தத்தை தொடங்கியது. அதுமுதல் ஏப்ரல் 2009 வரை, ஐ.நா. ஆவணங்களின்படி வான்தாக்குதல், தரைவழி கனரகத் தாக்குதலில் நாளொன்றுக்கு சராசரி 116 பேர் கொல்லப்பட்டனர். இறுதிச் சில நாட்களில் மட்டும் 20 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டதாக, பிரெஞ்சு, பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன'
டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கையின்படி, சூலை 2006 தொடங்கி ஏப்ரல் 2009 வரை ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். இறுதி நாட்களில் பாதுகாப்பு வலையங்களுக்குள் வஞ்சகமாய் வரவழைக்கப்பட்டு கொலையானோர் 50 ஆயிரம் என கணக்கிட்டால் கொலை இரண்டுலட்சம் என்றாகிறது.

2010 - டப்ளின் தீர்ப்பில், மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இலங்கைத் தமிழர் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. 2010-க்கும் 2013-க்கும் இடையிலான ஆய்வு, கிடைத்த சாட்சியங்கள் போன்றவை அவர்களை வேறொரு கருத்துநிலைக்கு நகர்த்தின எனத் தெளிவாகிறது.


2013-அறிக்கையில் இனக்கொலை, ஈழத்தமிழர், இன அழிப்பு என்ற சொல்லாடல்கள் கவனிப்புக்குரியன.

'ஈழத் தமிழர்கள் தனித்தனியாகக் கொல்லப்படவில்லை. கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள். மக்களைப் பெருந்தொகையில் அழிப்பதின் நோக்கம், ஒர் இனத்தின் அடையாளம் இல்லாமல் செய்வதே. ஆயுதப் போராட்டம் தொடங்கும் முன்னரே இனப்படுகொலை தொடங்கிவிட்டது. விடுதலைப் புலிகளையும், அவர்களது அரசையும் அழித்தபின்னர், தற்போதும் இன அழிப்பு தொடர்கிறது. உலக வல்லாண்மை சக்திகளின் துணையில்லாது அது சாத்தியப்படாது. நிதி கையளிப்பு, ஆயுத உதவி, கொலைப் பாதுகாப்பு என அனைத்து உறுதுணைகளையும் பிரிட்டன் செய்துள்ளது. அமெரிக்காவின் இராணுவ ரீதியான ஒத்துழைப்பு, இனப்படுகொலைக்கான எல்லா ஊக்கமும் தந்துள்ளது. அமெரிக்காவின் முன்னெடுப்புக்கள் இலங்கைக்குப் பக்கபலமாய் ஆகி, இனப்படுகொலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இனப்படுகொலைகளில் இந்தியா வகித்த பங்களிப்புச் சான்றுகள் உறுதியானைவை. இன்னும் வலுவான சாட்சியங்களுக்காக இந்தியா பற்றிய அறிவிப்பினை தள்ளி வைக்கிறோம்'
இனப்பகைமையின வேர், ஈராயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் அடியில் புதைந்துள்ளது.

'பிறக்கப்போகும் குழந்தை (துட்டகைமுனு) தமிழர்களை அழித்து, ஒன்றுபட்ட சமஸ்தானத்தை ஆண்டு புத்த மதத்தை வளர்த்தெடுப்பான்'

புனைவும் நடப்பும் பிசைந்து எழுதிய 'மஹாவம்சம்' என்னும் சிங்கள நூல் (கி.பி. 5-ஆம் நூற்றாண்டு) கூறுகிறது. தமிழர்கள் மீது யுத்தம் நடத்தியதால், லட்சக்கணக்கில் தமிழர் கொலைசெய்யப்படக் காரணமாகிவிட்டேனே என சிங்கள மன்னன் துட்ட கைமுனு வருந்தியபோது, 'கொல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்கள் நமது மார்க்கத்தை நம்பாதவர்கள். தீய வாழ்வை மேற்கொண்டவர்கள். மிருகங்களை விட மேலானவர்களாகக் கருதப்படக் கூடாதவர்கள்' (பக்கம் – 26) என்றெல்லாம் அரசனை புத்த துறவிகள் ஆற்றுப்படுத்தியதாக மஹாவம்சம் விவரிக்கிறது.

'இந்தச் செய்கையின் காரணமாக நீ சொர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத் தடையும் உண்டாகாது' என்றார்களாம் புத்த பிக்குகள்.

சொர்க்கமயமான வாழ்க்கைக்குள் போவதற்கு சமகாலத்திலும் தமிழர்கள்தாம் தடையாக இருக்கிறார்கள் என்ற சிங்களக் கருத்தியலின் திரட்சி, ஈராயிர ஆண்டுக்கால உளவியலின் தொடர்ச்சியாகும்.

அனங்காரிக தர்மபால என்ற புத்த பிக்குவும்,
'ஒரு சிங்களனின் உயிருக்கு ஆயிரம் தமிழர்கள் சமம்' என்றுரைத்த (1958, மே 26) புத்தபிக்கு தல்பவல சீவன சதேராவும்,
'தமிழர்களுக்கென்று போவதற்கு ஒரு நாடிருக்கிறது. இஸ்லாமியருக்கென்றும் ஓர் இடம் இருக்கிறது. இது சிங்களரின் நாடு. இதில் யாரும் உரிமை கொண்டாடக் கூடாது'
இனக்கொலைகளின் தலைமைப் பாத்திரமான தளபதி பொன்சேகாவின் வாசகமும் இந்த உளவியலிலிருந்து ஊத்தம் கொண்டவைதாம்.

மே 19, 2009 இரண்டு லட்சம் தமிழர் கொல்லப்பட்டதுக்கு, சிங்களர் 'பால்சோறு' வழங்கி விமரிசையாகக் கொண்டாடியதன் மூலம் அதுவே. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை சிங்கள மக்களின் இயல்பான விருப்பம் என்று ஆட்சியாளர்கள் கருத இந்த உளவியல் உரம் கொடுத்திருந்தது.

'முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய இனப்படுகொலை ஒரு விபத்தோ, அன்றி ராசபக்ஷேக்களுக்கு மட்டும் சொந்தமான ஒன்றோ அல்ல. அது சிங்கள வரலாற்றுக் கருப்பையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வளர்ந்து வந்த பகைமையின் உச்ச விளைவே... இந்தப் படுகொலை சிங்கள மக்களின் அடிமனவிருப்பமாய் இருப்பதனாலும், இதில் இவர்கள் இடையறாது அக்கறை செலுத்தி வந்துள்ளதாலும் இவற்றைக் கடந்து இன அய்க்கியத்தை உருவாக்கிவிடலாம் என்று எண்ணுவது சுத்த அபத்தமாகும்' - 'இனப்படுகொலை: தமிழீழமும் இந்தியப் பாதுகாப்பும் '(பக்கம் – 19)
இப்படி ஈழத்தமிழர்கள் காலங்காலமாக ஏன் கொல்லப்படுகிறார்கள்?

'இதனை இலங்கைத் தீவின் புவிசார் அரசியல் பின்னணியிலும், சர்வதேச அரசியல் பின்னணியிலும் வைத்துப் புரிந்து கொள்ளவேண்டும். ஏன் கொல்லப்படுகிறார்கள் என்று கேட்டால், அதற்கான முதலாவது பதில், சிங்களரிடம் காணப்படுகின்ற இந்திய எதிர்ப்புணர்வே பிரதான காரணம்' (பக்கம் - 28) என அதற்கான விடையையும் தருகிறது. பள்ளிகளில் கற்பிக்கப்படும் கணிதம் போல் இது ஒரு வரலாற்றுக் கணிதத்தின் விடையே.
வரலாற்றுக் காலந்தொட்டு இலங்கை மீதான இந்திய ஆதிக்கம், தமிழகம் வழியாக நடந்து வந்திருக்கிறது. இதில் தமிழகத்தின் பங்கு கணிசமானது.

மௌரியப் பேரரசனான அசோகன் தனது பேரரச விஸ்தரிப்புக்கான மதமாகப் பவுத்தத்தை இலங்கைக்குள் கொண்டுபோய் இறக்கினான். அதற்கான குழுவும் அனுப்பப்பட்டது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் (கி.மு. 246) இந்தியாவின் வடக்கிலிருந்து பவுத்தத்தின் பெயரில் இந்திய ஆதிக்கம் பரவியது போல், தொடர்ந்து இந்தியாவின் தெற்கிலிருந்து படையெடுப்புக்களும், வணிக ஆதிக்கங்களும், மத கலாச்சார ஆதிக்கங்களும் நிகழ்ந்ததற்கு, நிறைய வரலாற்றுக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. (பக்கம் 31)
தொடர்ந்து 27 ஆண்டுகள் பாண்டிய அரசைச் சேர்ந்த மூன்று ஆட்சியாளர்களின் பிடிக்குள் அனுராதபுரம் இராச்சியம் சிக்குண்டது, சோழப் படையெடுப்பு, ஆந்திராவைச் சேர்ந்த கலிங்க மாகனின் படையெடுப்பு, படையணிகளின் துணையோடு நடந்த வணிகக் குழுக்களின் ஆதிக்கம், அனுராதபுர இராச்சியம் சோழப் பேரரசால் வீழ்த்தப்பட்டு, அதன் தலைநகர் அழிக்கப்பட்டு பின்பு பொலநறுவைக்கு தலைநகர் மாற்றப்பட்டமை - போன்ற வரலாற்றுப் பகைமைகளை சிங்கள ஏடுகள், வரலாற்று ஆவணங்களாகவும். நாட்டார் கூத்துக்களாகவும் பேணி வருகின்றன. (பக்.32)

இந்திய எதிர்ப்பும் தமிழின எதிர்ப்பும் கொதிநிலையில் இருந்த காலகட்டத்தில் துட்டகைமுனுவின் கொலையாளுமையைப் பேசும் மஹாவம்சம் பிறக்கிறது. 1948-க்கு முன்னும் பின்னும் கொதிநிலையிலிருந்த இந்திய ஆதிக்க எதிர்ப்புவாதம்தான், இலங்கையின் ஒவ்வொரு அதிபராகக் கைமாறி இராசபக்ஷேக்களாக உருக்கொண்டது.

இலங்கையின் முதல் பிரதமராக சிங்களரின் தந்தை என அழைக்கப்படும் டி.எஸ். சேனநாயகா ஆனார். இக்காலகட்டத்தில் இந்தியாவுக்கான கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கைத்தீவு இந்தியாவுடன் இணைந்த ஒரு பகுதியாக ஆக்கப்படவேண்டும் என்று கருதினர். 'இந்தியக் கூட்டாட்சி அமைப்பில் ஒரு சுயாதிக்கம் உள்ள மாநிலமாக இலங்கை இருக்க வேண்டும்' என்ற கருத்தை நேரு 1945-ம் ஆண்டு கொண்டிருந்தார்.

'இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்' என அதே ஆண்டு வரலாற்று ஆய்வாளரும் சிறந்த ராசதந்திரியுமான கே.என். பணிக்கர் குறிப்பிட்டார்.

'இலங்கை விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன, அது இந்தியக் கூட்டாட்சி அமைப்புடன் இணைக்கப்பட வேண்டும்' என அப்போது இந்திய இராணுவத் தளபதியாயிருந்த வைத்யா கூறினாராம்.

'இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் இலங்கை உறவுகொள்ளக்கூடாது. இரு நாடுகளுக்கும் ஒரு பொதுவான பாதுகாப்புக் கொள்கையே இருக்க வேண்டும்' என்று இதே ஆண்டு இந்திய காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையா குறிப்பிட்டுள்ளார். (பக்கம் 23, 24)

இந்தப் பின்னணியில் இந்தியாவின் தமிழகத்துத் தமிழர்களை ஒத்த தமிழர்கள், இந்தியாவின் வாசல் என்று சொல்லப்படுகிற இலங்கையின் முற்பகுதியில் வாழ்வதால், தமிழினத்தை அழித்துத் துடைப்பதன் மூலம், இந்தியாவுக்கான எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள் என்ற புதிய பார்வை, புது எடுத்துரைப்பு நூலில் முன் வைக்கப்பட்டுள்ளது. சாதுரியமாக இந்தியாவின் மத்திய அரசியல் தலைமையுடன் நல்லுறவைப் பேணி, இந்த இன அழிப்பைச் செய்துவருகிறார்கள் என்று (பக்கம் 37) விளக்கப்படுகிறது.

சிங்களத் தலைவர்கள் இந்தியாவுடன் கொள்ளும் நட்புறவு உண்மையானதாக இல்லை. 1962 சீன-இந்திய யுத்தம் நடைபெற்ற போது, நடுநிலை என்ற பெயரில் சீனாவுடன் கைகோர்த்தார்கள். 1971-ம் ஆண்டு பங்களாதேஷ் பிரச்சனையின்போது பாகிஸ்தான் தன் படைகளை இலங்கையின் வான்வழியாக அனுப்பிட சிங்கள அரசு அனுமதித்தது (பக்கம். 35)

சிங்களர்-தமிழர் என்ற இரு இனங்களுக்கிடையேயான இனப்பகைமை மட்டுமே காரணமன்று. வரலாற்றுக் காலந்தொட்டு, இந்திய விரிவாக்கத்துக்கு சிங்களர் தெரிவித்து வரும் எதிர்ப்பின் வெளிப்பாடாக தமிழின அழிப்பைக் காண நூல் வலியுறுத்துகிறது.
இதன் தொடர்ச்சியில் ஜெயவர்த்தனா, 1987-ன் பின் இந்தியாவுக்கு எதிராக ஈழத்தமிழர்களைப் போராடச் செய்து சூழ்ச்சிவலை விரித்தார். விரித்த வலையில் மாட்டுப்பட்டு, இந்திய ராணுவத்தினரும் ஈழத்தமிழரும் அழிமானம் ஆன கதையை நூல் தனியாய் விளக்குகிறது. ஜெயவர்த்தனாவின் ஒப்பந்தச் சூழ்ச்சியின் தொடர் விளைவாகவே, இந்தியப் பிரதமராயிருந்த ராஜிவ்காந்தி மாண்டு போனார் என்ற உண்மையையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

இந்துப் பெருங்கடல் அரசியலில், இந்தியா பெரிய நாடு மட்டுமல்ல, வலிமை வாய்ந்த நாடாகவும் தன்னை நிரூபித்துக் கொண்டு வருகிறது. அதன் வல்லரசுக் கனவுக்கு எல்லைப் பாதுகாப்பு மிகமிக முக்கியமானது.

இங்கு அரசியல் ஆய்வாளர், இராசதந்திரி என அறியப்பட்ட கே.எம். பணிக்கரின் கருத்து கவனிக்கத் தக்கது.

'ஏனைய நாடுகளுக்கு (அமெரிக்கா, பிரிட்டன், ருசியா) இந்துப் பெருங்கடலானது, உலகிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பல சமுத்திரங்களுள் ஒன்று மட்டுமே. ஆனால் இந்தியாவுக்கு இந்துப் பெருங்கடல் மட்டுமே அதன் உயிர்நாடி. இந்தியாவின் உயிர்வாழ்வு இப்பகுதியிலேயே தங்கியுள்ளது. இந்தியாவின் சுதந்திரம் இப்பகுதியின் நீர்ப்பரப்பிலேயே தங்கியுள்ளது. இந்துப் பெருங்கடல் பகுதி பாதுகாக்கப்படவில்லையென்றால் இந்தியாவுக்குத் தொழில் வளர்ச்சியில்லை. வணிக வளர்ச்சியில்லை. ஓர் உறுதியான அரசியல் அடித்தளமும் சாத்தியப்படாது' (பக்கம் 69. இந்து மகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும்)
இந்தியா எதிர்பார்க்கிற பாதுகாப்பை இந்திய எதிர்ப்புவாதத்தில் கொளுத்துப் போயிருக்கிற சிங்கள அரசு தரப்போவதில்லை. இந்தியா இல்லையென்றால், இன்னொரு வல்லரசுடன் இணைந்து கொள்ளும். இப்போதே சீனா உள்நுழைந்து ஆதிக்கம் பெற வழிசெய்யப்பட்டுவிட்டது. இலங்கையை யார்யாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பார்கள் சிங்கள அரசியல் தலைமைகள் என்பதை ஒருபோதும் உறுதிபடச் சொல்ல முடியாது. அவர்களின் தேவை இன அழிப்பு ஒன்றே.

'இந்தியாவைப் பொறுத்தவரை, அவர்களுக்கு இலங்கைத் தீவில் தமிழர்கள் தான் தவிர்க்க முடியாத ஊன்றுகோல் என்பது தெரியும். சிங்கள அரசை வென்றெடுக்கலாம் என்ற தப்புக்கணக்கு இந்திய அரசிடம் உண்டு. அதுபொய்த்து நீர்மட்டம் மூக்கு நுனிக்கு ஏறும்போது, ஊன்று கோலான தமிழர்களை நாடுவது தவிர்க்க முடியாது' (பக் - 45)

இந்திய மனோபாவம் என்பது ஆளும்வர்க்கக் குழுக்களின் மனோபாவம்தான். அப்படியே அரசியல் தலைமைகள் பிரதிபலிக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவை வட இந்திய மனோபாவம் வழிநடத்துகிறது. தென்பகுதி தமிழர்களைப் பற்றி அக்கறைகொள்ள வேண்டாம் என்று கருதுகிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்ற கொந்தளிப்பு தமிழகத்தில் உச்சத்தில் எழுந்தபோது 'இது தமிழர்களின் பிரச்சினை. இந்தியா முழுமைக்கும் இதைப் பொதுமையாக்கி முடிவெடுக்கக்கூடாது' என்று வட இந்திய ஊடகங்கள் எழுதின,  ஒளிபரப்பின. இந்தியா ஒரு பல்லின சமுதாய நாடு எனும் கருத்தாக்கம் வட இந்திய மனோபாவத்தில் துளியும் இல்லை. தமிழர்களின் உணர்வுப்பரப்பில் வட இந்தியர்கள் பயணிக்கத் தயாரில்லை என்பதையே இச்செயல் உறுதிப்படுத்துகிறது.
இந்தியப் பிரதமர் பதவி – வட இந்தியாவின் நிரந்தரக் 'கோட்டா'. தமிழகம் அந்தக் கோட்டாவைப் பெறமுடியாது. இந்திய அரசியல் தலைமை எந்த வட்டாரத்தின் கையில் உள்ளது என்பதை இந்த வடக்கு ஏகாதிபத்தியப் போக்கு தெளிவுபடுத்துகிறது. வடக்கு ஏகாதிபத்தியம்தான், இலங்கையின் இராசதந்திரங்களுக்குள் தொடர்ந்து மாட்டுப்பட்டு ஈழத்தமிழர்களின் மண்டையையும் உடைக்கிறது. காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்பு, நவம்பர் 12, 13 நாட்களில் நடைபெற்ற தொழில் வளர்ச்சி மாநாட்டில், இந்தியப் பன்னாட்டு முதலாளிகள் போய்க் குவிந்தார்கள் என்பதை இங்கு பொருத்திக் காணவேண்டும்.

இன்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், மனித உரிமை அமைப்புகள், சேனல்-4 தொலைக்காட்சி போன்றவை அடிமேல் அடி கொடுத்து இலங்கையை குன்னிப் போகச் செய்திருக்கின்றன. வடக்கு மாகாணத் தேர்தல், நாடாளுமன்றத் தெரிவுக் குழு என்று எத்தனை நாடகங்கள் நடத்திய போதும், அத்தனை நாடகங்களும் இலங்கை அரசுக்கு துன்பியலாகவே முடிகின்றன.

ஈழத்தமிழர் அரசியல் மேலெடுப்புக்கு சாதகமான புறச்சூழல் கனிந்துள்ளது. உலக நாடுகளிடமிருந்து இலங்கை தனிமைப்படுகிற தருணம் வாய்த்துள்ளது. முள்ளிவாய்க்காலுக்குப் பின் வாய்த்த இந்த வரலாற்றுச் சந்திப்பில், தமிழர்கள் உறுதியாகக் காலூன்றிக் கொள்ள வேண்டும்.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் காமாலைக் கண்களை மாற்றி, உண்மையான கண்களைத் திறந்து வைக்க வேண்டும். இந்தப் பிரச்சினையில் ராசதந்திர நகர்வுகளை முன்னெடுக்காவிட்டால் விடிவு ஒருபோதும் இல்லை. வெற்றியைக் கைநழுவ விட்டு, ஒவ்வொரு தோல்வியின் பின்னும் இழுத்துச் செல்லப்படுபவர்களாக ஆக்கப்படுவோம். இனி இராசதந்திரப் போரின் காலம் எதிர் நிற்கிறது என்பதை – ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவத்தின் இந்நூல் வரலாற்று அனுபவங்களினூடாக முன்வைக்கிறது. புதிய பார்வையை - புதிய நோக்கை வரலாற்று அனுபவங்கள் வழியாகப் பேசும் ஒரு நூலிது.

***
வெளியீடு: ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவம், லண்டன்.
விலை: ரூபாய் 80
கிடைக்குமிடம்: பனுவல் புத்தக நிலையம்,
112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை - 41

நன்றி: பொங்குதமிழ் - 2 ஜனவரி 2014

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

கீழத்தெரான் – துரை.குணா கவிதைகள்

வட்டார இலக்கியம்

பலியாடுகள்