அ.இரவியின் புதினம்: 1958 - சொல்லித்தீராத ஈழக்கதைகள்……….


இன ஆதிக்கத்தின் ஆதிநிலம் சிங்களம். வரலாற்றுக் கால முதலாய் நடந்து வரும் இனத்தாக்குதலில் அவர்களே முதல் தாக்குதலாளர்கள். இவ்வகை ஆதிக்க மனசினுள் முதலில் ஆயுதம் இயங்குகிறது. மனசளவில் ஆயுததாரியாய் இயங்கும் எவரொருவருக்கும், சிறு முணுமுணுப்பு எதிராய்க் கண்டாலும் மடியில் தயாராய் இருக்கும் ஆயுதத்தைக் எடுப்பார்கள். அரசுஅமைப்பு அதன் பிரதான ஆயுத அமைவு.

1958- ல் இலங்கையில் என்ன நடந்தது?

”1958-ஆம் ஆண்டு நான் பிறந்திலன். அக்காவுக்கு ஒரு வயது. ’கல்லுலவ’ என்னும் சிங்களக் கிராமத்தில் முஸ்லீம் மாணவர்களுக்கு அப்பா எண்கணிதம் படிப்பித்தார்.அக்காலத்தில்தான் தமிழர் மீதான இன வன்முறை சிங்கள தேசத்தில் தொடங்கியது. நான் பிறந்திராத காலத்தில் நடந்த வனமுறைக் கதைகளை அம்மா தான் சொன்னார்.யார்மீதும் குரோதமோ,வன்மமோ, காழ்ப்போ எதுவுமின்றி அம்மாதான் எனக்கு இக்கதைகளைச் சொன்னார்” - அ.இரவி என்னும் தேர்ந்த எழுத்துக் கலைஞனின் பால்யகாலம் பற்றின வாக்குமூலம்.

1956-ல் என்ன நடந்தது? 1956-க்கு முன் 1950- வரவில்லையா? அதற்குமுன் 1948 வந்ததா, இல்லையா? 1948-க்கும் முந்திய வதைகளும் வதைபற்றிய வாக்குமூலங்களும் உண்டா இல்லையா? நிறைய உண்டு.

300 ஆண்டுகளுக்கும் மேலாய் உழைத்து இலங்கைச் சமூகத்தை நிலைப்படுத்திய மலையகத் தமிழரை முதலில் வெளியேற்றக் கட்டளை பிறப்பித்தவர் 1948-ன் இலங்கைப் பிரதமர் டி.எஸ்.சேனநாயகா. தமிழர் மீதான முதல் தாக்குதல்.

1956 ஆம் ஆண்டில் பெரும்பான்மை சிங்களமயமாக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிய பண்டாரநாயகா, சிங்களத்தை நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக அறிவித்து தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றினார். இது இனத் தாக்குதலின் இரண்டாம் முகம்.

மொழி, கலாச்சாரம், பொருளாதார நிலை சீரழிக்கப்படும் என தமிழர் அஞ்சினர்.தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அறப்போராட்டத்தை ஆரம்பித்தது. இலங்கையின் கிழக்கே கல்லோயா நகரில் 150 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இதனை அடுத்து பிரதமர் பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், பண்டாரநாயகா-செல்வநாயகம் ஒப்பந்தம் 1957-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது. தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழும் அலுவல் மொழியாக இருக்க இதன் மூலம் உடன்பாடு எட்டப்பட்டது. பண்டா- செல்வா ஒப்பந்ததை எதிர்த்து முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜெயவர்த்தனா 300-க்கும் மேற்பட்ட புத்த பிக்குககளைத் திரட்டி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடைப் பயணம் வந்தார். புத்தபிக்குகள் பண்டாரநாயகாவின் ’அலரி மாளிகயை’ முற்றுகையிட்டு ஒப்பந்ததை கிழித்தெறிய முழக்கம் எழுப்பினர்.

”தவறு நடந்து விட்டது குருமார்களே” மன்னிப்புக் கோரிய பிரதமர் பண்டாரநாயகா ஒப்பந்தத்தை புத்த பிக்குகள் முன்னிலையிலேயே கிழித்தெறிந்தார்.

அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்ட அந்நிமிடமே, கொழும்பிலும், சிங்களக் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்ற கல்லோய, பொலனறுவை, பதவியா - போன்ற தமிழர் பகுதிகளிலும் தமிழர் வாழ்வியலை மிச்சம் மீதியில்லாமல் கிழித்தெறியும் கொடூரங்கள் தொடங்கின. கொழும்பிலிருந்தும் தென்னிலங்கையிலிருந்தும், சிங்களக் குடியேற்றங்கள் நடந்த தமிழ்ப் பகுதிகளிலிருந்தும் கப்பல் கப்பலாக தமிழ் அகதிகள் வடக்கு மாநிலத்திற்கு அனுப்பப் பட்டனர். இக்கொடிய அனுபவங்களை நேரில் பட்டு உணர்ந்த அருளர் எழுதியது ‘லங்கா ராணி‘ புதினம் - இலங்கை ராணுவம் நேரடியாகத் தாக்குதல் வேட்டை நடத்தியதோடு அன்றி, தாக்கிப் படுகொலை செய்யும் சிங்களருக்கும் பாதுகாப்புக் கொடுத்தது.

1958-லிருந்து இன்றுவரை இராணுவச் சுற்றிவளைப்புக்குள்ளும், சிங்களரின் உயிரெடுக்கும் செயல்களுக்குள்ளும் தமிழர்கள் வாழ விதிக்கப்பட்டுள்ளனர். இக்கொடூரக் காரியங்கள் அனைத்துக்கும் வரலாற்று ரீதியான காரணங்கள் உள என்கிறார் மு.திருநாவுக்கரசு என்னும் யாழ்பல்கலைக் கழக அரசியல் ஆய்வு அறிஞர்.

“வரலாற்றுக் காலந்தொட்டு காலகாலமாய் இந்திய ஆக்கிரமிப்புக்களால் ஆறாவடுக் கொண்டவர்கள் சிங்களர்கள். வரலாற்று ரீதியில் இந்தியா மீது அச்சம் கொண்டுள்ள சிங்கள ஆட்சியாளர்கள், இந்தியாவுக்கு எதிரான தமது யுத்தத்தை அப்பாவி ஈழத்தமிழர் மீது தொடர்ந்து புரிகின்றனர். இந்தியாவைப் பழி எடுக்க இந்தியாவையே ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்“ (“இனப் படுகொலை - தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்“ - மு.திருநாவுக்கரசு)

2

சிங்கள உறவுகளின் பசுமையான பக்கம் இரவி -யின் பிறப்புக்கு முன்னான காலம்! முன்னொரு காலத்தில் புத்தரைப்போல் இனியவர்கள் பவுத்த மக்கள்; இனவேறுபாட்டின் அடையாளமே இல்லாத ’கல்லுலவ’ சிங்களக் கிராமவாழ்வியல் அமைதியான புலர்பொழுதில் தொடங்குகிறது. புலரி ஒரு போதும் கசடு படிவதில்லை. “ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமித் திங்களில் மதியச் சமையல் வீட்டில் இல்லை. மீன்குழம்புடனும் மரக்கறிகளுடனும் சோற்றுக்கும்பா வீட்டுக்கு வருகிறது. நந்தா (சிங்களப் பெண்) கொண்டு வந்து தருகிறாள். அப்பொழுது அவளது முகம் பூரணை முழுநிலவு போல் ஒளிர்கிறது. “அழகி" என்று அம்மா முஷ்டி நெறிக்கிறார்.

“நங்கி (தங்கச்சி) இந்தக் கிழமை (வாரம்) ஒரு நாளும் நீ சமைக்கக் கூடாது”, அம்மாவின் அடுப்படிக்கு வந்து பவுத்த பெரேரோ சொல்கிறார். யாவும் யாபேருக்கும் என்று ’வெசாக்கை’ (புத்த பவுர்ணமி விழா) கொண்டாடினார்கள்.

தமிழ் இல்லங்களிலிருந்து பொங்கல்ப் பாத்திரம், சருவச் சட்டி, பெட்டி, வாழையிலை, தாமரையிலை, கும்பா, கோப்பை, தட்டு என எல்லா ஏனங்களிலும் மோதகமும், வடையும், புக்கையும், ‘கல்லுலவ கிராமத்தின்’ ஒழுங்கைகளில் (வீதிகளில்) திரிந்தன. அப்பா அதனைச் சைக்கிளிலும் நடையிலுமாகக் காவித்திரிந்தார். அந்த ‘கல்லுலுவ’ சிங்களக் கிராமத்தில் அப்பா படிப்பித்தார். புத்தபிக்கு அமிர்தமென அதனை உண்டார். தேறல் உண்ட தித்திப்பில் ஆழ்ந்தார் ஹாஜியார். ரம்ழான் மாதத்தில் யாவரும் நோன்பிருந்தனர். அப்பாவும் நோன்பு நோற்று ஹாஜியார் வீட்டில் இரவு வட்டமாக குடும்பமாக அமர்ந்து உணவு உண்டார்.

கூட்டாஞ்சோறும் நிலாச்சோறும் சாப்பிட்டு களிப்பில் மூழ்கியது மூவின வாழ்வியல். “தமிழர் நிலத்தைத் தமிழரும், சிங்களவர் நிலத்தைச் சிங்களரும் ஆள வேண்டும்; மக்களின் விருப்பம் இருந்தால் இருசமூகமும் இணைந்து கூட்டாட்சி மேற்கொள்ளலாம். எனக்கென்னவோ அதுதான் சரியான யோசனையாகப் படுகிறது” (பக். 33)

பேசுவது யார்? சாதாரண சிங்கள மகனா? மதிப்பிற்குரிய மதகுரு; நந்தமித்திர தேரரை பௌத்த மத குரு என்று சொல்ல இயலுமா? இன்று இவ்வாறு ஒரு புத்த பிக்கு சொன்னால், அவர் நடுவீதியில் அனைத்துச் சிங்களரும் கெக்கலிகொட்டிட கழுவேற்றப் படமாட்டாரா? நடக்காது போனால் அது உலக அதிசயம். காவியுடுத்தி, மொட்டையடித்து உடம்பையும் தலையையும் ‘பளீரென’ வைத்திருந்தாலும் மதகுருமார்கள் தலைக்குள் இருட்டு முட்டிக் கிடக்கிறது.

“அதற்குச் சிங்களத் தலைமைகள் ஒப்புக் கொள்ளாதே. தமிழர் நிலத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதிலேயே அவர்கள் முனைப்பாகச் செயல்படுகிறார்கள். இந்த நாட்டில் தமிழர்களுக்குப் பிரச்சனை இல்லை என்றா நினைக்கிறீர்கள் தேரோ? தமிழர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாதா?”

ஆசிரியரான (மாஸ்றர்) அப்பா (அருணாசலம்) வாதிடுகிறார். நந்தி மித்திர பவுத்த தேரர் சிரித்தார். “இதில் கோபப்படவோ, வேதனைப்படவோ எதுவும் இல்லை”, அப்பாவின் மனதைத் தடவுகிற மாதிரி பவுத்த தேரர் சொல்லுகிறார்.

“நாம் யதார்த்தமாகச் சிந்தித்துப் பழக வேண்டும் மகன். தமிழர்களுக்குப் பிரச்சனை இல்லையென்றா கேட்கிறாய். இந்த நாடு தமிழருக்கும் உரியது. அது கேட்டுப் பெறுவதல்ல. ஆனால் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அய்ம்பதுக்கு அய்ம்பது கோரிக்கை என்பது யதார்த்தத்திற்குரிய கோரிக்கை அல்ல”

இனச் சமத்துவம் விழையும் ஒரு மதகுரு இலங்கைத் தீவு முழுதும் தேடினும் இன்று கிடைக்கமாட்டார். “அன்பையும் இன்ப ஊற்று என்று சொன்னார் புத்தர். அன்பையும், இரக்கத்தையும் விட்டு விட்டு வாளையும், துவக்கையும், வன்மத்தையும் எப்படி இவர்கள் கைக்கொள்கிறார்கள்” நினைத்துத் துக்கித்த சிங்களப் பெண்ணான நந்தாவுக்கு ஒரு துளிக் கண்ணீர் சுரந்தது. தமிழ்க் குடும்பத்தின் குண்டுப் பெட்டையான குழந்தையை, மேலும் இறுக்கி முத்தினாள். “சியாமளாம்மாவுக்கும் மாஸ்ரருக்கும் ஒரு தீங்கும் வரக்கூடாது புத்தா” என்று நேர்ந்து கொள்கிறாள். சிங்களவரிடமிருந்து தாக்குதல் நேரும் எனக் கவலையுற்று தமிழ்க் குடும்பம் புத்த தேரர் பெரேரோ, நந்தாவின் சிங்கள வீட்டுக்குள் தஞ்சமாகியிருந்தது. மாஸ்றரின் மனசு “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்னும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் முழக்கத்தில் கிறங்கிக் கிடந்தது.

“பெரும்பான்மைச் சமூகம் அச்சத்திலேயே இருக்க வரலாற்றுக் காரணமிருக்கிறது. போதாதற்கு பத்துமைல் கடந்தால் வரும் தமிழ் நாட்டில் கோடிக்கணக்கில் தமிழர்கள் உள்ளனர். சிங்கள மக்களுக்கு அச்சமூட்ட இது ஒன்றே போதும்; வரலாறும் அச்சத்துக்கான விதைகளை விதைத்தபடியே வந்திருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா, மாஸ்றர்? பதினேழுமுறை தமிழ் அரசர்கள் சிங்கள மக்கள் மீது கடல் கடந்து படையெடுத்திருக்கிறார்கள்”

பவுத்த மதகுரு நந்தி தேரர் அருணாசலம் ஆசிரியரிடம் சுட்டிக் காட்டிய இக்குறிப்பின் பின் ஆணித்தரமான பல தரவுகள் உள்ளன. இந்திய, தமிழ்ப் பிரதேச ஆதிக்கவியலாளர் படையெடுப்பால் இலங்கை பலதரம் மொத்துண்டதை வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் புரியவரும்.

ஆட்சியில் அய்ம்பதுக்கு அய்ம்பது பங்குகேட்டு லண்டன் வரை போய்த்திரும்பிய ஜி.ஜி.பொன்னம்பலம், யாரை எதிர்த்துப் போராடினாரோ, அதே டி.எஸ்.சேனநாயகாவின் அமைச்சரவையில் இணைந்தார். ஜி.ஜி.பொன்னம்பலத்தின் இரண்டகத்தால் ’மாஸ்ரர்’ அருணாசலம் போல் இளந்தலைமுறையும் ஏமாற்றப்பட்டது.
நந்தமித்திர தேரர் இந்த ஏமாற்று வித்தைகளை நயமாக மாஸ்றர் அருணாசலத்துக்கு திறந்து வைக்கிறார். செல்வநாயகம் ஆரம்பித்த கட்சி ‘சமஸ்டிக்கட்சி’ என சிங்களர் மத்தியிலும் , தமிழரசுக் கட்சி என்று தமிழர்களிடையேயும் அடையாளம் கொள்கிறது. “இது இரட்டை விளையாட்டு அல்லவா” என கேள்வி போடுகிறார் தேரர்.

“ஓர் அரசு அமைக்கப் போகிறோம் என்கின்ற தீவிர முகம் தமிழர்களுக்கு; கூட்டாட்சிக் கொள்கை கொண்டோம் என்னும் மிதவாத முகம் ஏனையோருக்கு ” (பக், 38)

மாஸ்றர் அருணாசலம் உறைந்து போகிறார்.

“மாஸ்றர் நான் சொல்வதைக் கோபிக்காமல் கேளுங்கள். சிங்களத் தலைவர்களை நீங்கள் குறைகூற ஒன்றுமில்லை. அவர்கள் தமது மக்களுக்குச் செய்ய வேண்டியதை செவ்வனே நிறை வேற்றுகிறார்கள். தமிழ்த் தலைவர்கள்தாம், தம் பொதி நிறையத் தவறுகளைச் சுமந்தபடி செல்கிறார்கள்.

“தமிழ்த் தலைமைகள் முட்டி மோதிப் போராட வேண்டும். அவர்கள் அதனைச் செய்கிறார்களில்லை. இடதுசாரிகள் கூறிய ‘வர்க்கம் வர்க்கத்தைத் சாரும்” என்பதற்கிணங்க சிங்களத் தலைவர்களுடன் கூடிக் குலாவுகிறார்கள். யாழ்ப்பாணத் தமிழர்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் கொழும்பு கறுவாத் தோட்டத்தில் ஏன் வசிக்க வேண்டும்? நெருப்பெரிகின்ற திருகோணமலைப் பிரதேசத்தில் அவர்கள் வசித்தால் அது நியாயம்; கொழும்பு அவர்களது வர்க்க நலன்களுக்கு உதவுகிறது என்பதைத் தவிர, வேறு ஒரு நியாயமும் இல்லை”

உண்மையில் தேரரின் கூற்றாகவா இது வெளிப்பட்டது? இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனின் நாவிலிருந்து அது உதிர்க்கப்படுகிறது. “தமிழ்த் தலைவர்கள் ஒருத்தரும் முழுநேர அரசியல் வாதியாக இருந்ததில்லை. இருந்திருந்தால் அவர்கள் ஏன் கொழும்பில் அடை காக்க வேண்டும்?” என்னும் விக்னேஷ்வரனின் கேள்வியில் உண்மை காணப்படுகிறதா, இல்லையா? விமர்சனத்துக்கு உட்படாத, சுயவிமர்சனம் செய்யத்தயாராக இல்லாத மக்களுக்கும் சமூகத்துக்கும் விமோசனமில்லை என்பதை 1958 விளக்கிப் போகிறது. படைப்பின் லயம் கெடாமல் சோல்லிப் போகிறார் இரவி.

”இது புனைவு வழிப்பட்ட புதினமல்ல; வரலாற்றினூடாக வளரும் வாழ்வனுபவ வழிப்பட்ட கதை. இக்கதையை படர்க்கையில் எழுத மிகமிக முயன்றேன்.முடியவில்லை. அதனால் இது புனைவுவழிப் புதினமாக இல்லாது, அனுபவ வழிப் புதினமாக அமைந்து விட்டது” என்கிறார் இரவி.

தந்தைக்குப் பின் தனயன் அ.இரவியின் தலைமுறைக் கதை இனி வருகிறது.

”நாமில்லா நாடுமில்லை ;நமக்கென்றோர் நாடுமில்லை
ஆண்ட தமிழினம் – மீண்டும் ஆள நினைப்பதில் தவறில்லை”

அந்த மண்ணுக்குள்ளிருந்து மற்றுமொரு முழக்கப்பாட்டு புறப்படுகிறது, இது இளையவர்களின் கனவுத் தலைவர் அமிர்தலிங்கம். இளைஞர்கள் அக்குரலால் அனல் பறந்தார்கள்,

“அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்தில்” முழங்குகிறார் அமிர்தலிங்கம். ரவியின் தலைமுறை அமிர்தலிங்கத்தின் பின்னே நடந்தது. அமிர்தலிங்கமும் அவரது குழுவும் முழங்கியது 1977-ல். தேர்தல் நூற்றுக்கு நூறு வெற்றியாக முடிகிறது. தேர்தலில் வென்ற தமிழரசுக் கட்சித் தளபதிகள் நாடாளுமன்றுள் போனார்கள். போனவர்கள் திரும்பி வரவே இல்லை. அவர்களை மக்களிடை எங்குமே காண இயலவில்லை. 1978–ல், யாழ்ப்பாண நீதிமன்றச் சுவரில் ஒரு சுவரொட்டி தென்படுகிறது.

“ஆண்டு ஒன்றாச்சு, நாடு இரண்டாச்சா”

முன்னர் வெளிவந்த “காலம் ஆகி வந்த கதைகள்”, பின்னர் வெளிவந்த ”வீடு நெடுந்தூரம்” புதினம்; இப்போது வந்துள்ள இந்த 1958 - இவை அனைத்திலுமாக இரவி வெளிப்படுத்தியது தன் வாழ்வை மட்டுமல்ல, அதனூடாக வெளிப்படுகிறது அவரது பிரதேச வரலாறும் அவர் வாழ்வு, வாழ்வினூடான சம்பவம், சந்திப்பு, உறவு, யாவும். “என் கதையில் உள்ளவை எல்லாம் உண்மைகள் ; அத்தனையும் எனது நேரடி அனுபவங்கள், அருகிலும் தொலைவிலும் இருந்து என்னைப் பாதித்தவர்களின் உணர்வுகளையே பிரதிபலித்தேன்” எனக் காட்டுவதற்கே இரவியை எழுத வைத்துள்ளன.

1958- ல் சிங்கள தேசத்தில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். கொதிக்கின்ற தாரினால் தமிழ்ப்பெண்களின் பிறந்த மேனியில் ‘சிங்கள சிறீ’ எழுதப்படுகிறது. ஹாஜியார் வீட்டிலிருந்து வெளியேறி, முன்னும் பின்னும் போலீஸ் ஜீப்புகள் பாதுகாப்புக் கொடுத்துப் போக, நான்கைந்து பஸ்களில் தமிழர்கள் தமிழ்ப் பிரதேசத்துக்கு கூட்டம் கூட்டமாய் வெளியேறுகிறார்கள். வன்னி வந்தடையுமுன், நள்ளிரவில் காடுகளில் பஸ்களை நிறுத்தி சிங்களக் காடையர் தாக்குதல்; தமிழ்க்குடும்பம் உயிர்பிழைத்தது எப்படி? நயமான, உயிர்ப்புள்ள எடுத்துரைப்பாய் அம்மாவின் நினைவுகள் வழியே சொல்லி வருகிறார்.

”நேற்று இந்நேரம் என்ன நடந்தது- ?”

”உம்மா புட்டுக்கு மா அவித்துக் கொண்டிருந்தார். அடுப்பில் கொதித்தபடி மீன் குழம்பு. அத குளத்து மீன் குழம்பு. அம்மா குளத்து மீன் உண்பதில்லை. அக்கா நித்திரை ;அப்பா ஹாஜியாருடன் கதைத்துக் கொண்டிருந்தார்.”

”முந்தா நாள் இந்நேரம்?”

”எப்பொழுதும் இந்நேரங்களில் உம்மாவுக்கு அடுப்படியில்தான் வேலை. உணவு வகைகள் மாறியபடி இருக்கும். அன்று ரொட்டி சுட்ட நாள். அப்பா ஹாஜியர் மகனுடன் பேசிக் கொண்டிருந்தார். அக்கா, அம்மாவின் மடியில்.”

”போனகிழமை (வாரம்) இந்நேரம்?”

”வீட்டை வந்த புத்தபிக்கு பெரேரா கதிரையில் அமர்கிறார். நந்தா, ‘மேரி பிஸ்கோத்துக்களை’ கொண்டு வந்து வைத்துவிட்டு குசினிக்குள்ளிருந்து தேநீர் ஆற்றுகிறார். அப்பா, முகம் கறுத்து பிக்குவின் முன்பாக பவ்வியமாக அமர்ந்திருக்கிறார். அக்கா ஏணையில்: ஏணை அசைந்து கொண்டிருந்தது”.

”போன மாதம் இந்நேரம் என்ன நடந்தது?”

“போன வருடம் இந்நேரம் என்ன நடந்தது?”

நினைவின் அடுக்கிலிருந்து எடுத்து காட்சிகளை திறக்கிறார் அம்மா. முந்தைய நிலைமைகளை மீள்காட்சியாக்கும் ஒரு கலைஞனின் தேர்ந்த உத்தி இது.

"அவள் மடியில் கிடத்திய பெட்டையான மகளைத் தடவியவாறு அம்மா. இந்தப் பெட்டை போனவாரம் காஜியார் வீட்டு உம்மாவின் மடியில் கிடந்தது. போன மாதம் புத்தபிக்கு தேரரின் மனையாள் நந்தாவின் மடியில் தூங்கியது. நந்தாவின் வீட்டில் இண்டப் பிஞ்சுப் பெட்டைக்கு தனியாக ஒரு ஏனை ஆடும்.”

மெல்லிசாய் ஒவ்வொரு நாதமாய் மேலேறும் வீணை மீட்டல் போல், சிங்கள இனத்துடனும், இஸ்லாமிய சமூகத்துடனும் இணைந்து மேலேறிய வாழ்வு, பட்டென்று அறுக்கப்பட்டு, அபஸ்வர இசையாய் மாற்றுருக் கொள்வதுபோல் அப்படி முடித்து வைக்கப்பட்டது அவர்கள் வாழ்க்கை.

“நாகப்பாம்புகள் வாராத நாட்கள் அவை, நீர்ப்பாம்புகள் வாய்க்காலில் துள்ளி விளையாடுகின்றன. வளர்பிறை நெளியநெளிய அதைப் பார்க்கிறது. பொழுதுபட்ட பிறகு மாத்திரமே காட்டுமரப் பூக்கள் தம் வாசனையை வீசுகிறன்றன; காலைப் பாடல் இசைக்கத் தொடங்கும் நேரமது. அழகும், வசீகரமும் மிகுந்த அந்த சிங்களக் கிராமம் மௌனங் கொண்டு தன்னைப் போர்த்தி உறங்கச் செல்கிறது. ஒவ்வொரு கணத்துக்கும் ஆனந்தமும் அழகும் இருந்தன. அர்த்தமும் இருந்தது. இவற்றில் எதுவும் இனித் தொடர்ந்து வரப் போவதில்லை. சூரியன்கூட வரமறுத்துத் தன்னை இறக்கிவிட்டது”

புதினம் முழுமைக்கும் நெட்டுக்க நிறைந்துள்ளது இந்தப் பதநீர்மொழி: புதினமுழுதுமாய் நிறையும் படிம உத்திகள். இன்னும் பல நூற்றாண்டுக்கும் ஈழத்தில் சொல்லித்தீர்க்க இருக்கின்றன கதைகள். பல நூற்றாண்டுக்கும் சொல்லித் தீராத கதைகளைச் சொல்லித் தீர்க்குமட்டும் ஈழத்தமிழன் வாழ்வும், எழுத்தும் இந்தப் படிமமொழியும் தொடரும்.

இதற்காகவோ முள்ளிவாய்க்கால் விளைந்தது?

1958 - புதினம்.
ஆசிரியர்: அ.இரவி.
வெளியீடு:காலச்சுவடு, நாகர்கோவில்-629001
விலை: ரூ 200/=

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் கதைகள்: கரிசலின் பெரும் பசி