முள்ளிவாய்க்கால் மாணவர்கள்

(சென்னை லயோலா கல்லூரி உரை)

மாணவ நண்பர்களே,

தமிழ்நாட்டின் தனித்துவ வரலாற்றுப் புள்ளியான 1965 சனவரி 25-இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு மாணவன் உங்கள் முன் நிற்கிறேன்.

முதலாவது செய்தி -

வெற்றியின் எக்களிப்பில் தமிழின எதிரிகள் நமது தமிழகத்தின் மீது பண்பாட்டுப் படையெடுப்பு, மொழியழிப்பு நிகழ்த்தி நாசக்காடாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழீழப் பகைவன் முள்ளிவாய்க்காலில் வெட்டிய குருதிவாய்க்காலிலிருந்து ஒரு கணமும் ஓயாமல் இன அழிப்பினைத் தொடர்ந்து கொண்டிருக்கையில் – நமது பெண்களை நிர்வாணப்படுத்தி, அவமானப்படுத்தலின் உச்சமாய் கொல்லப்பட்ட வீரமங்கையரின் பிறப்புறுப்புக்களை பூட்ஸ் கால்களால் மிதித்துச் சிதைத்த பின்பு - நம் குழந்தைகளை ஆயிரக்கணக்கில் புலிக்குட்டிகள் என்று கொன்று குவித்த பின்னர் – இப்போதும் “புலிப் பூச்சாண்டி” அரசியலால் வாழுகிறான் .

பிரேதங்களால் அரசியல் நடத்திய இனக் கொலைகார ஆட்சிக்கு அன்று தோள்கொடுத்த இந்திய ஆட்சியாளர்கள் இன்றும் முட்டுக் கொடுத்து காப்பாற்றுகிறார்கள். மேலே கீழே, கிழக்கே மேற்கே, வடக்கே தெற்கே என்று எல்லாத் திசைகளிலும் சவப்பெட்டி அரசியல் நடத்தலுக்குத் துணைசெய்கிறார்கள்.

மாணவத் தோழர்களே!

இராசபக்க்ஷே என்னும் கொலை இயந்திரத்தை, இலங்கைக் கொலைக்களத்தை உலகக் கண்களுக்கு முன் நிறுத்த வேண்டிய பொறுப்பை தோள்களில் ஏற்றிக் கொண்டீர்கள். 2013 மார்ச், ஏப்ரல் மாதங்களில் கல்வி நிலையங்கள் போர்க் களமாகின. சென்னை லயோலாக் கல்லூரி மாணவர்கள் சாகும்வரைப் பட்டினிப் போரைத் தொடங்கியவேளையில் நெருப்புப் பொறியை தமிழகமெங்கும் எடுத்துச் சென்றீர்கள். தமிழகமெங்கும் பரவிய தீ டெல்லியைத் தொட்டது. சூடு தாங்கமாட்டாது நெளிய ஆரம்பித்தார்கள்.

நீங்கள் செய்தது - முஷ்டியை மடக்கி இந்தியாவின் தலையில் குட்டியது. இந்தியாவுக்குக் கொடுத்த அடியில், இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளின் முகங்கள் வியர்த்தன. உமது ஆக்ரோசம் ஈழ மக்களுக்கு குளிர்காற்றாயும், அவர்களுக்கு அனல்காற்றாயும் அசைந்தது! காற்றின் மறு உருவாய் அசைந்தீர்கள்; உங்கள் அசைவு உலக அரசியலின் உள்ளோடும் சுயநல ரத்தத்தை பிளந்து காட்டிற்று.

முதலில் ஐ.நா அவையில் வரும் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென முழக்கம் கொடுத்த சில கட்சிகள், உமது அறிவார்ந்த தெளிவுபடுத்தலில் “அமெரிக்கத் தீர்மானம் ஒரு மோசடித் தீா்மானம்” என நிலைபாட்டை மாற்றிக் கொண்டதைக் கண்டீர்கள். இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வரவேண்டுமென ஒப்புக்காகவாவது பேசத் தொடங்கினார்கள்.

மாணவ எழுச்சி சமூக எழுச்சியாய் (Social uprising) மாறிய நிலையில், மாற்றம் நம்மை தேர்தலில் வேரோடு பிடுங்கி எறிந்து விடுமோ என்ற பயத்தில் இரு நகர்வுகள் வேக வேகமாய் எடுக்கப்பட்டன. அச்சம் உந்தித் தள்ள, “கட்டக் கடைசியாய்” காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க விலகியது. “நாடாளுமன்றத் தோ்தலில் நாற்பதும் நமதே” என்ற குறிக்கோளுடன் செயலாற்றிய அ.தி.மு.க தலைமை, சட்டமன்றத்தில் “தமிழீத்துக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும். இனப்படுகொலையாளர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிட சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை நடத்திட ஐ.நா முன்வர வேண்டும்” எனும் தீர்மானங்களை நிறைவேற்றிற்று.

இந்திய வரலாற்றில் 1847-ன் “பிளாசியுத்தம்” ஒரு திருப்புமுனை. இந்தியாவை அடிமைப் பிரதேசமாக ஆக்கிய ஆண்டு அந்த 1847. பிளாசி யுத்தத்தில் மன்னர் “சிராஜ் உத்தௌலாவை” வெற்றி கொண்ட ராபர்ட் கிளைவ் 144-சிப்பாய்களுடன் நகரைக் கடந்து போகிறான். வெறும் 144 சிப்பாய்கள். நகர மக்கள் வீதிகளில், வீடுகளில், சன்னல்களில் கூட்டம் கூட்டமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க நகரைக் கடந்த கிளைவ், “அப்பாடா, இப்போது தான் உயிர்வந்தது. கூடியிருந்த மக்கள் ஆளுக்கொரு கல்லெடுத்து வீசியிருந்தால் நாங்கள் அத்தனை பேரும் இல்லாமல் போயிருப்போம்” என்றான்.

வரலாற்றின் முக்கிய சந்திப்பில் செயலற்று நிற்பவர்கள் தாம் மக்கள் என்பதை இந்த ஆதிக்க நிகழ்வு காட்டும். முதல் கல்லெறிதலைச் செய்து ஒருவர் வழிகாட்டியிருந்தால் மக்கள் தொடர்ந்திருப்பார்கள். வரலாற்றில் வாழுதல் என்பது இந்த முதல் கல்லெறிதல் தான்.

உங்களின் ’முதல் கல்லெறி வரலாறு’ நாளந்தா பல்கலைக் கழகத்தில் தொடங்கிற்று. 10 ஆயிரம் மாணவர்கள், கிட்டத்தட்ட 1500 ஆசிரியர்களுடன் இயங்கிய , தங்கும் விடுதியுடன் கூடிய முதல் பல்கலைக் கழகம் அது. கணிதம், மருத்துவம், வான அறிவியல், தத்துவம், தர்க்கம் உள்ளிட்ட 18 பாடங்கள் கற்றுத் தரப் பட்டன. சித்தார்த்தனாய் புறப்பட்டு, கௌதம புத்தனான புத்தர் தன் சீடர்களோடு தர்க்கம் செய்த இடத்தில் நாளந்தா பல்கலை உருவாயிற்று என்று வரலாறு காட்டுகிறது.

ஒன்பது மாடி கொண்ட பல்கலைக் கட்டிடத்தில், ”தர்மா கஞ்ச்“ (தர்மத்தின் புதையல்) என்ற நூலகம் மூன்று மாடிகளில் இயங்கியதாம். லட்சக் கணக்கில் ஓலைச் சுவடிகள்!

ஆயுதக் குவியலை விட, அறிவுச்சேகரிப்பு ஆக்கிரமிப்பாளரின் கண்களுக்கு ஆபத்தானது. புறாப் பட்டுத் துணியாகப் பார்க்காமல், அரிபூச்சிச் சேலையாகப் பார்த்தார்கள். இப்போதும் இலங்கையின் இனப்படுகொலையாளர்கள் ஆயுதந்தாங்கிகள் தப்பியது பற்றிக் கூட கவலை கொள்ளாமல் அறிவுத்தகைமை கொண்டோரைத் தப்ப விட்டது ஏன் என்று முள்வேலி முகாம் இராணுவப் பொறுப்பாளர்களை குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்களெனில் அறிவுத்துறை வீச்சினை எதிர்கொள்ளும் அச்சம்தான் அடிப்படை.

ஞானக் களஞ்சியமாய் இயங்கிய பலகலைக் கழகம், மூன்று முறை படையெடுப்பாளர்களின் தாக்குதலுக்கு ஆளாகிற்று. மூன்றாம் முறை 11-ஆம் நூற்றாண்டின் இறுதியில் துருக்கிய அரசன் கில்ஜி நடத்திய தாக்குதல், இந்த ஞானக்களஞ்சியதை தரை மட்டமாக்கிற்று. பல ஆயிரக் கணக்கில் ஓலைச் சுவடிகள் மூன்று மாதங்களாக எரிந்து கொண்டிருந்தன என்கிறார் பெர்ஷிய வரலாற்று அறிஞர் மின்கா-ஐ-சிராஜ். அறிவுச் சேகரிப்பின் குவியல் சன்னம் சன்னமாய் தீக்குத் தீனியாகி, அதன் கடைசிக் கதவுகளும் கருகியபோது வெம்பிப் போனீர்கள். உணவும் தண்ணீருமில்லாமல் நான்கு நாள் அதன் முற்றவெளியில் கிடந்தீா்கள். அறிவுப் பசுஞ்சோலை எரிந்து கருகும் காட்சியைக் கண்னுற்று நீர் சொரிந்தவாறு அங்கிருந்து வெளியேறிப் போனீர்கள். அதன்வெளி கடந்து நீங்கிய போதும், காலத்தைக் கடந்து போவது சுமையாய் கனத்தது உங்களுக்கு.

1956-ஆம் ஆண்டு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழிச் சட்டம் வந்தபோது, மாணவர்களாய நீங்கள் எதிர்ப்பு எழுப்பி ஊர்வலம் எடுத்தீர்கள். அப்போது ஒரு இனத்தின் உரிமைப் பெருக்கைப் புரிந்து கொண்டு, தேசிய இனத்தின் உரிமைகளை உள்வாங்கி “இருமொழி என்றால் ஒரு நாடு : ஒருமொழி என்றால் இருநாடு;” என்று இடதுசாரிக்கட்சி உறுப்பினர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் முழங்கியதை உலகம் அறிந்தது.

1960-களின் மத்தியில் பாரிஸில் மாணவப் போராட்டம் வெடித்து அய்ரோப்பாவை உலுக்கிற்று. பாரீஸ் எழுச்சி மூலம் 1960-களின் உலகவரலாற்றை மாணவர் எழுச்சிக் கலகம் எனப்பதிவு செய்தது நீங்கள்தான்.

இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி என அறிவித்த சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 1965, சனவரி 26.


சனவரி 25-ல்
“எப்பக்கம் வரும் இந்தி - அது
எத்தனை பட்டாளம் கூட்டிவரும்”
என்று தமிழகமெங்கும் போராட்ட அலையைக் கொண்டு போனீர்கள். எந்த மாநிலத்துக்குள்ளும் புகுந்திராத இராணுவம் முதன் முதலாய் தமிழகத்தில் நுழைந்தபோது எதிர்கொண்டீர்கள். வரலாற்று ஆய்வாளரின் கணக்கு 500 பேர் பலியானார்கள் என்றது. அன்று இந்தி எதிர்ப்புப் போரினை முன்னெடுத்த மாணவ இளையோர்கள், இன்று அறுபதில் நின்று பெருமிதத்தோடு உங்களை நோக்குகிறார்கள்.

1970-ஆம் ஆண்டு சிங்கள இன அரசு கொண்டு வந்த கல்வியில் தரப்படுத்தல் சட்டத்தினை எதிர்த்து வீதிக்கு வந்தீர்கள். தமிழ் மாணவர் பேரவை என்னும் இயக்கத்தை தொடங்கி, எந்த அரசியல் கட்சியின் சார்பும் சாயமும் தீண்டிவிடாமல் கொண்டு சென்றீர். யாழ் பல்கலைக்கழகம் எப்போதும் நியாயங்களின் பக்கமாகவே கிளர்ந்தெழும் மரபை நீவிரே உருவாக்கினீர். இன ஒடுக்குமுறைக் கெதிரான வெப்பத்தின் இருக்கையாகவே இன்றும் யாழ் பல்கலை திகழ்ந்து வருகிறது என்ற பெருமிதத்தை சூடிக் கொண்டுள்ளீர்.

கல்வியில் தரப்படுத்தல் சட்டத்துக்கு எதிராய் எந்தவொரு அரசியல் கட்சியின் துணையுமின்றி கிளர்ந்தெழுந்து யாழ்ப்பாண நகரிலும், தமிழ்ப்பிரதேசத்தின் மற்ற நகர்களிலும் நடத்திய பேரணியின்போது, தெருவுக்குத் தெரு, சந்திக்குச் சந்தி, வீட்டுக்குவீடு மாணவர்களுக்கு மக்கள் மதிப்போடும், ஆர்வத்துடனும் நீர், மோர் வழங்கி ஆதரவளித்தனர். மாணவ எழுச்சி மக்களது இதயத்தின் அடிநாளம் வரை பாய்ந்துவிட்டது என்பதின் சாட்சியானது இச்செயல்.

1983-ல் கம்யூனிச கொடுங்கோல் ஆட்சி நடந்த சீனாவில் சனநாயக உரிமைகள் வேண்டிப் போராடினீர்கள். சீனத் தலைநகர் பீஜிங்கில் மாவோவின் உடல் வைக்கப்பட்ட புகழ்பெற்ற “தியானென்மென் சதுக்கத்தில்” கூடி சனநாயகத்துக்கான போராட்டத்தைத் தொடர்ந்தீர்கள். விவசாயப் பெருமக்களும், உழைக்கும் தொழிலாளரும் உங்களோடு இணைந்த போராட்டத்தில் பல நாட்களின் பின் பீரங்கி வாகனங்களை உங்கள் மேல் உருட்டி, 5000 பேரைப் பலியெடுத்து கம்யூனிசம் வெற்றி பெற்றது. மாணவச் செல்வங்களின் படுகொலைக்கு உலகம் தலைகவிழ்ந்து அஞ்சலி செலுத்திற்று.

1983 கறுப்பு ஜூலை. வெளிக்கடைச் சிறைப் படுகொலைகள்; தமிழரை நிர்வாணப்படுத்தி, வாகனத்தோடு எரித்தும், கொதிக்கும் தார் ஊற்றி எரித்தும், டயர் போட்டுக் கருக்கி ஐயாயிரம் கொலைகள்: தென்னலங்கையிலிருந்தும் கொழும்பிலிருந்தும் வடக்கு நோக்கி அகதிகளாய்த் தமிழனம் ஓடி வந்த போது கைலாகு கொடுத்துக் காத்தீர்கள்.

தமிழ் மக்களைப் பாதுகாப்பதில் இரவுபகல் பாராது துணையாய் நின்றது யாழ்பல்கலைக் கழக மாணவர்கள்தாம். ”போராடுவதற்காக கற்றுக்கொள்; கற்றுக் கொள்வதற்காகப் போராடு” என்ற லெனின் வாக்கியத்தை வெற்றுச் சடங்கு உச்சரிப்பினால் தலைக்கு மேல் அலங்கார மகுடமாக ஆக்காமல் தலைக்குள் சுடரும் சிந்தனையாய் ஆக்கிக் கொண்டீர்கள். இராணுவ அடக்குமுறைகள், காட்டுமிராண்டித் தனமான கொலைகளின் மத்தியில் “வாழ்வதற்காகப் போராடு, போராடுவதற்காக வாழு” என்ற முழக்கமாக அதனை முன்னகர்த்தினீர்கள்.

நவம்பர் 27, 2013, மண் மீட்பிற்காக உயிர்நீத்த மாவீரா்களுக்கு நினைவேந்தல் செலுத்த யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகுவத்தி ஏந்தும் உரிமையை மறுத்தது இலங்கை ராணுவம். பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து அடித்து நொறுக்கியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்து மாணவர்களைக் கைது செய்தது. யாழ் பல்கலைமாணவர் ஒன்றியச் செயலர் தர்ஸானந், சாலமன் உட்பட நான்கு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாகி, “புணர்வாழ்வு முகாம்” என்று சொல்லப்படும் தனிச் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இன்று வரை விடுதலையில்லை.

ஈழத்தின் மக்களும் மாணவர்களும் ஒலிக்க முடியாத குரலை மாணவர்களாகிய நீங்கள் 2013-ல், ஏப்ரலில் வெளிப்படுத்தினீர்கள். கலாசாலைக்குள்ளிருந்து எழுந்த உணர்வுத்தீ 1965 இந்தி எதிர்ப்பை நினைவுபடுத்துகிறது. அறுபது ஆண்டுகள் ஒரு தவம். புதிய பார்வை, புதிய அணுகுமுறை, தமிழின உணர்வு இவையெல்லாம் வரங்களாய் மாற இந்த அறுபது ஆண்டுகள் உரமாகியிருக்கின்றன.

ஈழ மண்ணில் தமிழ் மாணவர்களும் பொதுமக்களும் நகரவே முடியாத இரும்புக் கோட்டைக்குள் மாட்டுப்பட்டுள்ள வேளையில், அதனை இடைநிரப்பும் பொறுப்பில் தமிழக மாணவர்கள்தாம் இருக்கிறீர்கள். ஈழத்துக்கு வெளியில் தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கான அமைப்பை உருவாக்கிய வெளிப்பாடு உங்களுடயதே!

2

நான் முன்வைக்கும் இரண்டாவது செய்தி இதுதான் –
அய்க்கியம் கொள்ளுங்கள்!
போராடுவதற்காக ஒன்றுபடுங்கள்.
ஒன்றுபடுவதற்காக போராடுங்கள்.
தமிழீழ விடுதலைக்காகவும் இங்கிருக்கும் தமிழ்த் தேசிய இன உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்க ஒற்றுமை கொள்ளுங்கள்.
உங்களை விட்டால், தமிழருக்கு உண்மையாய்க் குரல் கொடுக்க எவரும் இல்லை. தேர்தல் சூதாட்டத்தில் சிக்கிய எவரும் சிதைவுக்கு ஆளாவது வியப்பில்லை. இங்கு ஒரு பஞ்சாபிக் கவிதை துணைக்கு வருகிறது.
“நண்பர்களே,
நீங்கள் ஒரு கைராட்டிணமாகக் கூட இருக்கலாம்;
ஒரு முக்காலியாகக் கூட ஆகலாம்
ஒருபோதும் நாற்காலியாக மட்டும்
ஆகி விடாதீர்கள்”
நாற்காலி என்பது தேர்தல் மூலம் பெறப்படும் அதிகாரத்தின் குறியீடு. நாற்காலியில் உட்கார்ந்தவன் நாற்காலியாகவே ஆகிப் போனான் என்பது உள்ளுறையும் பொருள். இந்த மாயையிலிருந்து விலகிநிற்றலுக்காகவும் ஒன்றுபடுங்கள்.

அண்டையில் ஒரு தனித்தீவில் வாடுகிற உறவுகளுக்காக கரம் கோர்க்கும் நீங்கள், இங்கு தனித்தனித் தீவுகளாய் வைக்கப்பட்டுள்ள தலித் உறவுகளுக்காக போராட முன்வாருங்கள்.

“நாங்கள் இருப்பதா, சாவதா” – ஈழ மக்களின் கேள்வி. இங்குள்ள தலித் மக்களும் இதையே எழுப்புகிறார்கள். தருமபுரியும், மரக்காணமும் நம்முடைய நிலப்பரப்புத் தான்.

யார் முன்தெரிவது, யாரை முன்னிறுத்துவது என்பது ஒரு போராளியாய் இருப்பவருக்கு முக்கியம் அல்ல. யார் தொண்டு செய்வது என்பது முக்கியம்; 2013 போராட்டத்தில் அரசியல் கட்சிகளைக் கடந்து வந்தது போல், அரசியல்வாதிகளின் குணங்களையும் கடந்து வாருங்கள். அவர்கள் தம் தலையைச் சுற்றி தக தகக்கும் புகழ்வட்டம் காண ஆசைப்படுகிறவர்கள்; அவர்களைப் போல் எம்மையும் ஆக்கிவிடுவார்களோ என அஞ்சி அறுவருத்தீர்கள். மானுடம் காக்கும் ஒவ்வொரு மாணவனும், தன்னை மனிதனாய்த் தற்காத்துக்கொள்ளும் போராட்டம் இது.

நூற்றாண்டுகளின் மிகப்பெரிய மனித சோகமான முள்ளிவாய்க்காலிலிருந்து படிப்பினைகளைச் சுவீகரித்து, சென்னை லயோலாக் கல்லூரியில் தொடங்கிய நீங்கள் தமிழ்ச் சமுதாயத்துக்கு கொடுப்பதற்கு நிறையவே இருக்கிறது.

மாணவர்களே, நான் உங்களைப் போராளிகளே என அழைக்கிறேன். போராளிகள் ஒரு போதும் ஓய்வதில்லை.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்