பாரதியின் நினைவு நூற்றாண்டில் தமிழ்க் கவிதையின் செல்திசை


ஒவ்வொரு கவிஞனுக்கும் கவிதை அவனது கடந்த காலத் தோள்கள் மீது அமர்ந்திருக்கிறது. கடந்த கால உயரத்திலிருந்து சமகாலக் கவிதை வெளிப்பாட்டினை எடுத்துக் கொள்கிறான். பிற கலை இலக்கிய வடிவங்கள் புஞ்சைத் தானியங்கள் போல் அருகிவிட்ட நிலையிலும், இதன் காரணமாகலே கவிதைக் காடு செழித்து வளருகிறது.

காலம் – மொழி இரண்டினையும் சரியாக கையகப்படுத்த கடந்த காலம் பயனுறு வினையாற்றுகிறது. ஒரு மந்திரவாதியின் கைவினை போல் இரண்டினையும் கைக்கொள்பவனிடம் கவிதை தங்கியிருக்கிறது. அவை கால எல்லை தாண்டி நிலைக்கின்றன. ஒரு மொழிக்குள் பிறப்புக் கொண்டபோதும், அம்மொழி கடந்ததாய், புவி எல்லை தாண்டியதாய் ஆகிவிடுகின்றன.

எழுத்து, பேச்சு, செயல் மூன்றிடலும் பாரதி தன் காலத்தின் ஆங்கிலேய அடிமைத்தனத்தை எதிர்த்து போர் செய்தான்! ஆங்கிலேய அடிமைத்தனத்தை மட்டுமல்ல, மொழி, சாதி, பெண்ணென அனைத்து அடிமைப்படுத்தும் குணங்களைக் கிழித்து எரிந்தவன். ”போர்த்தொழில் பழகு” என, மனிதனுக்குள் இயல்பாகப் பொதிந்துள்ள கலகக் குணத்தை உசுப்பி, புதிய ஆத்திசூடி முதலாய் தேசீய கீதங்கள் தந்தான். அடக்கவியலாச் சிந்திப்பு கொண்டவனைக் கைது செய்யும் முயற்சியில் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இறங்கியது. பாரதியை புதுச்சேரிக்கு விரட்டிப் பாதுகாத்தது எனக் குறிப்பிடலாம்.அங்கும் அவனை நிம்மதியாக இருக்கவிடவில்லை. உளவறிதல், அவனைப் பற்றிப் பிணைக்க பிரெஞ்சு அரசுக்கு நெருக்கடிகள் தந்தது. ஆங்கிலேயரை மட்டுமல்ல, சாதி, மத, மேல் கீழ் என்ற சமுதாய ஒவ்வாமைகளையும் எதிர்க்கும் குரலாக வெளிப்பட்டதால் இன்றும் அவன் நமக்குத் தேவைப்படுகிறான்.

ஒரு கவிதைக்காரனுக்கு பிரதானமானவை, அவனுள் தன்னூற்றாய் மேலெழுந்து பீச்சி அடிக்கும் கவியுள்ளம்; மற்றொன்று அவன் கை வசப்படுத்தும் கவிதா மொழி. ”மந்திரம் போல் வேண்டுமடா கவியின்பம்” என மற்றவருக்கு எடுத்துரைக்கும் கொடை பாரதிக்கு வாய்த்திருந்தது. ஒருவரை நம்பிப் பின் தொடர்பவர்களை ”என்னமோ மந்திரம் போட்டுட்டான், அதான்” என்று சொல்லுவது போல் மயக்கும் ஆற்றல் கொண்ட மந்திரமாகி விட்டது கவிதை. பாமர மக்களின் உரையாடல் என்னும் இழிசனர் மொழியை தனதாக்கிக் கொண்ட லாவகம் அது. நவ நவமான சொற்கள், உவமை, உருவகம் போன்றவற்றின் பிரசன்னத்தில் அவன் இந்த மந்திரச் சேர்மானம் செய்கிறான்.

”காலை யிளம் பரிதி வீசும் கதிர்களிலே
நீலக்கடலோர் நெருப்பெதிரே சேர்மணி போல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறை தவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி,
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை”
என்று தொடங்கிடும். குயிற்பாட்டு வேகத்தை, இறுதி எல்லை தொடும்வரை தொடரச் செய்தான். தார்மீக ஆவேசம், மனவெழுச்சி. சட்டென்று மேலெழும் கூம்புச் சூறாவளி வீச்சு தனக்குள் ஒருபோதும் வற்றிப்போக விட்டதில்லை. தன்னூற்றாய்ப் பீச்சி அடிக்கும் கவியுள்ளமும் பாரதியும் ஒன்றாய் ஆயினர்.

அவன் கைகளில் ஏந்திய கவிதை என்னும் ஒளிப்படக் கருவி மனிதர்களின் வெளிப்புறத் தோற்றத்தை காட்சிப்படுத்தல் என்பதினைவிட, அந்த வெளி முகத்துக்குள் பொதிந்த அகம், இதயத்துக்குள் பொதிந்திருக்கும் உணர்ச்சிகள் எனப் பதிவு செய்தது.

”பீஜித் தீவினிலே” தமிழ்ப் பெண்டிர் படும்பாடு, கவிதை என்னும் ஒளிப்படக் கருவியை உள்முகமாகத் திருப்பி நிறுத்தியதால் படமாக்கப்படுகிறது.

கரும்புத் தோட்டத்திலே - ஆ
கரும்புத் தோட்டதிலே....
நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினிப் போய் அதைக் காண்பதென்றே - அன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்
மீட்டு முறையாயோ - அவர்
விம்மியழவுந் திறங்கெட்டுப் போயினர்”
உள்ளத்துக்குள், உள்ளத்து உணர்ச்சிகளுக்குள் நட்டுவைத்த ஒளிப்பதிவுக் கருவி வாசிப்பவரின் அங்கமெல்லாம் பதறப் பதிவு செய்தது.

தனது காலத்தின் மக்களின் மொழியிலிருந்து அவன் தனக்கான சொற்களையும் வழக்காறுகளையும் வடிவத்தையும் ஏற்றுக்கொண்டான். ”விம்மி விம்மி விம்மி விம்மி“ எனத் திரும்பத் திரும்ப வரும் சொல்லாடலைக் கூர்ந்து நோக்குகுங்கள். எங்கெங்கு மக்கள் திரள் உண்டுமோ அங்கிருந்து, எவ்விடத்து நாட்டார் வழக்காறுகள், வடிவங்களுண்டோ அதிலிருந்து எடுத்தாண்ட சொல்லாடல்.

"ஏற்ற நீர்ப் பாட்டின் இசையிலும்
நெல்லிடிக்கும் கோல் தொடியார்
குக்கூவெனக் கொஞ்சும் மொழியிலும்
சுண்ணமிடிப்பார் தஞ்சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக் கரங்கள் தாமொலிக்க
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்”
- அவனுக்கு முன் பரந்து கிடந்த சாமானியர்களின் வாய்மொழி வடிவங்களில் , வெளிப்பாடுகளில் நெஞ்சு பறிகொடுத்து, வடிவப் புதுமை கண்டு வெள்ளாமை எடுத்தான்.

“ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா”
... ... ... ...
வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தருமமொன்று இயற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் – காசென்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ“
என்பனவெல்லாம், எளிய பேச்சுவழக்கிலிருந்து நேரடியாகக் கைக்கொண்டவை.தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, மானுடப் பரப்பு முழுதுக்குமான நீதிகளை, வீரியமான வாய்மொழி வழக்காறு வடிவங்களில் கொழுவிக் கொண்டாடினான்.

கரிசல் வட்டாரத்தில் செழ்த்துக் கிடந்த கும்மிப் பாட்டு, சிந்து, நொண்டிச் சிந்து, தெம்மாங்கு, கிளிக்கண்ணி என்று பலவும் - அவனுக்கு தலைச் சோறு ஆகின. (தலைச் சோறு - குழந்தைக்கு ஊட்டும் முதல் சோறு).


2

சமகாலத்தை அக்கறையுடன், ஈடுபாட்டுடன் நோக்கும் எந்த இலக்கியக்காரனுக்கும் கலையைக் கடத்துகிற பிரதான வாகனம் மொழி. கடந்த காலக் கவிதை மொழியை உட்செரித்து, நிகழ்கால மொழியை எதிர்கொண்டு, தனக்கான மொழியைத் தீர்மானிக்கிறான். சமகால நிகழ்வுகளின் கருத்தோட்டம் எந்த அளவு ஆழமாகத் தடம் பதிக்கிறதோ அந்த அளவு படைப்பு சுடர்விடும்.

முற்காலத்தில் கல்விப் பயிற்சி உடையவர்கள் கைவிரல் எண்ணிக்கையில் இருந்தார்கள்; கற்றவர்களின் மத்தியிலும் மிக அரிதாகவே அவர்கள் தென்பட்டனர். ஆனால் அவர்கள் செய்தது செய்யுள். அதற்கும் அப்பால் விரிந்து பரந்த மக்கள் கூட்டம் இருந்தது; தேர்ந்த கல்வியாளர்களுக்கு செய்யுள் போல, பெருந்திரள் மக்கள் கூட்டம் விடுகதை, சொலவடை, கதைப் பாடல், தாலாட்டு, ஒப்பாரி, கும்மிப் பாட்டு, தெம்மாங்கு என வாய்மொழி இலக்கியம் கொண்டிலங்கினர். எழுத்து வடிவக் கவிதைக்குள் வெளிப்படும் லயம், சந்தம், இசை ஒழுங்கு அத்தனையும் (எதுகை மோனை) யாவையும் மக்களின் பேச்சு வழக்கிலிருந்து எடுக்கப்பட்டவை தாம்.

"எண்ணைக் குடம் சுமந்தவளும் ஆத்தாடி அம்மாடி
தண்ணிக் குடம் சுமந்தவளும் ஆத்தாடி அம்மாடி”
மக்களின் பேச்சு இசையாகப் பொழிந்தது என்பதற்கு ஈதொரு சிறிய எடுத்துக் காட்டு.

வாய்மொழி இலக்கியங்களில் காணப்பட்டதை எடுத்து முறைப்படுத்தி, பாரதி தனக்கான கவிதை எல்லையை விரிவுபடுத்தினான.

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே”

“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு”

“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே”
என்றவன் விளிக்கையில் வாய்மொழி வடிவம் தெறித்து விழுகிறதா இல்லையா!

கற்றறிவு மிகக்கொண்டோர் இந்தப் பேச்சுமொழியை இழிசனர் மொழி என அடைமொழி கொடுத்து புறமொதுக்கினர். ஆனால் அது யாருடைய மொழியாக இருந்தது?

“விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை!
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை!“
என்று சுட்டப்படுபவர்களின் மொழி.

“கும்மியடி, தமிழ்நாடு முழுதுங்
குலுங்கிடக் கும்மியடி! கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி.”
- கும்மி தட்டும், குக்கூவென உலக்கை போடும், எசப்பாட்டுப் பாடும் பெண்களின் மொழியது.

வாய் மொழிக் கலைவடிவங்களிலிருந்து கவிதை மொழியை உருவாக்கிக் கொண்டார். “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்”

பாஞ்சாலி சபதம் காவியத்தின் முகவுரை இது.

காவியம் படைக்கையிலும் முன்னைப் பழந்தமிழின் செய்யுள்மொழியை சற்றே தள்ளி புதிய மொழியைத் தேர்ந்தார். ”ஓரிரு வருசத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்” என முகவுரையில் வழி சமைத்துக் கொடுப்பான். இஃதொரு தெளிவான திசை காட்டுதல்.

புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த போது, தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்ததாக ஒதுக்கிவைக்கப் பட்ட கனகலிங்கத்தை தன் இல்லத்துக்கு அழைத்து வந்து அவனுக்குப் பூநூல் அணிவித்து “இன்று முதல் நீ பிராமணன்” எனப் புளகாங்கிதம் எய்தியவர். சென்னை திருவல்லிக்கேணியில் சாவுப் படுக்கையிலிருந்ததை கேள்விப்பட்டு உடனே சென்னை புறப்பட்டு வந்தான். கனகலிங்கத்தைப் பார்ததும் முகமலர்ச்சியாகி சற்று எழுந்து அருகில் வரச் சொன்னார் பாரதி. அவருடைய சட்டையை கொஞ்சம் விலக்கி, தன் கையால் அவருக்கு இட்ட பூணூலை இன்னும் கனகலிங்கம் போட்டிருக்கிறாரா என்று தொட்டுச் சரிபார்த்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிதான், பாரதி இந்த மண்ணிலிருந்து விடைபெறும் முன் நடந்த நிகழ்வாக அமைந்தது.

பாரதி புதுச்சேரியில் இருந்தபோது இந்தக் கனகலிங்கம், ”உங்கள் தேசிய கீதங்களை நல்ல ராகங்களில் பாடாமல் கும்மி, காவடிச்சிந்து, நொண்டிச் சிந்து போன்ற மெட்டுக்களில் ஏன் பாடுகிறிர்கள்?”

என்று கேட்டிருக்கிறார். ”என் பாட்டு தேசீய கீதமானதால் மூட்டை தூக்கும் ஆள் முதற்கொண்டு பாகவதர் வரையில் சுலபமாகப் பாட வேண்டும்“ என்று பதில் சொன்னார் பாரதி.

ஓரளவேனும் வாசிக்கும் திறனுள்ள வெகுமக்களைச் சென்றடைய நம் கவிதைகள் எப்படி வெளிப்படவேண்டும் என்பதற்கு பாரதி காட்டிய வழி இது.

படைப்பாளிகளது வேர் எப்போதும் மக்களின் வாழவியலில் மட்டுமல்ல, வெளிப்பாட்டு மொழியிலும் ஊன்றி நிற்க வேண்டும்.

இன்று, குறிப்பாகக் கவிதை யாப்போர் எங்கு தங்கியுள்ளனர் என நோக்கின் அவர்கள் மக்களிடத்தில் வேர் கொள்ளவில்லை ; வாழ்வியலில் மட்டுமல்ல, வெளிப்பாட்டு மொழியிலும் அவர்கள் இல்லை. இழிசனர் மொழிக்கு இறங்கி வந்ததில்லை.

”கேளடா மனிதா
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமையில்லை - எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்”
- என்பது பாரதியின் தொடக்கம்.

”எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும்போது
எவன் மசுத்தப் பிடுங்கப் போனீங்க”
என பாவலர் இன்குலாப் வாய்மொழித் தேடலை நிறைவு செய்வார். ஒரே பொழுதில் பாடல், அதே பொழுதில் கவிதை.

எழுத்தாளர்களின் இன்றைய மேட்டிமை சொல்லில் அடங்காது. இன்றைய புதுகவிதைகளின் வார்த்தை, வடிவம் புரிதலுக்கு அப்பாற்பட்டது. பாரதி சொன்னது போல் ஓரிரு வருசத்து நூற்பழக்கமுடையோருக்கும் பொருள் விளங்கும்படி இருத்தலில்லை.

பாரதியை ஆதர்சமாகக் கொண்ட நாம், நாட்டார் சொல்லாடல்களை, பேச்சு மொழியை, வாய்மொழி வடிவங்களை, கலைச் சாதனங்களை உதாரணமாகக் கொள்ளவில்லை. கருத்து மாற்றம், புரட்சிகர நோக்கு, சாதிய, பெண்ணிய, மானுட விடுதலை உணர்வு பெருகிப்பாயும் உணர்ச்சி யூட்டக் கூடிய கவிதைகள் கூட, சாதாரணன் தொடவியலா உயரத்தில் நின்று ’வவ்வே’ காட்டுகின்றன. கவிதை செய்வோர் இனியேனும் மக்கள் மொழியைக் கையாளட்டும். சாதாரணமாய் கவிதை வாசிப்புச் செய்வோரை கவிதைப் பக்கம் திரும்பச் செய்வோம். நடுத்தரச் சொந்த வாழ்வின் சலம்பல்களை, அலைக்கழிவுகளை எழுதுயெழுதியே தீர்ந்து போய்விட்டோம்; அத்தனையும் அர்த்தம் புலனாகா வார்த்தைகள்,சொல்லடுக்குகளில்!

பாரதி சொன்னானே “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு” - அது கவிஞர்களின் செல்திசையாகட்டும்.

- தளம் சிற்றிதழ் 21, அக்டோபர் - டிசம்பர் 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்