ஏன் இல்லை ஞானபீடம்?


ஓட்டப் போட்டியில் எல்லை உண்டு. ஒரு புள்ளியில் தொடங்கி, மற்றொரு புள்ளியில் எல்லை முடியும்.

கரிசல் மண்ணில் தொடங்கி செம்புலம் தொட்டதை எல்லையாகக் கொள்ள இயலுமா? இடைசெவலில் எடுத்த நடை, நாடு நகரம் எனப் பயணித்து, வேகத் திரைகள் வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய,செந்தமிழ்த் தென்புதுவை யென்னும் கடற்கரைத் திருநகர் வந்தடைந்ததும் எல்லை முடிவடைந்து விடுமா?

“மழைக்குப் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்” என்றவர் புதுவைப் பல்கலைக் கழகத்தில் ”வருகைதரு பேராசிரியராய்” உருவெடுத்து வாழ்ந்த வாழ்வினை எல்லையாகக் கொள்ளக் கூடுமா?

சாகித்ய அகாதமி, ஞானபீடம், நோபல் விருதுகள் என்பதோடு எல்லை முடிவடைந்து விடுகிறதா? எழுத்துத் திறனை இந்தக் கரைச் சங்கிலிகள் கட்டிப்போட்டு விட ஏலுமோ?

வட்டார மொழியில் வடம் பிடித்து, உலக இலக்கிய வீதியின் உச்சம் என்று நாம் கற்பித்துக் கொண்ட ’நோபல் எல்லையையும் கடந்து’ எழுத்துத் தேரை நிலைபெறச் செய்த சாதனையின் பெயரென்ன? உள்ளூர் எல்லையிலிருந்து உலக எல்லையைத் தொட்டவருக்கு எந்த பீடங்களும் கௌரவிக்க வேண்டுமா? 1959–ல் தொடங்கி இன்று தமிழ் இந்துவில் ‘பெண் என்னும் பெருங்கதை’ வரை கலக எழுத்து தொடருகிறது எனில், கலக எழுத்து மட்டும்தான் காலத்தைத் தாண்டி நிற்கும்.பெண்ணை இச்சமுதாயம் வைத்திருக்கிற ஒவ்வாமையைப் பேசுகிற அனைத்தும் கலக எழுத்துத்தான். தலை கீழே சாயந்தட்டியும், சிந்தனை ஓட்டம் சாயாமல் சரியாமல் தொடருமெனில், எழுத்து மட்டும் எங்ஙனம் நிற்கும்!

கி.ரா. என்ற பேராளுமையை, சாதியெனும் புதைசேற்றுக்குள் சிக்குவைக்கும் சூழ்ச்சி நடந்தது. வழக்கெல்லாம் போட்டார்கள். எங்களை இழிவுபடுத்திவிட்டார் என்ற வழக்கு. எல்லா முட்டுக் கட்டைகளையும் தாண்டி, கம்பீரமாய் இலக்கியப் பயணம் நடந்து கொண்டிருக்கிறது. 95–ல் நிற்கிற கி.ரா.வுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதானது, நம் தாய், தந்தைக்குச் செய்யும் மரியாதை என்றார் ஒரு பெரியவர்.

கி.ரா - கணவதி அம்மா என்னும் இணையர் யாருக்குத் தாய் தந்தை? திவாகரனுக்கும் பிரபாகருக்கும் தாய்தந்தை என்ற அந்தளவோடு அவர்கள் எச்சம் முடிவடைந்து விடுகிறதா?தமிழ் எழுத்துலகில் மானசீகத் தாய், தந்தையாக வரித்துக் கொண்ட அனைவராலும் அவர்கள் தத்தெடுக்கப் பட்டவர்கள் தாம்.

கி.ரா தந்தை; கணவதி அம்மா தாய்.

2

இலக்கியத்துக்கான ‘ஞானபீடவிருது’ 1965 முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஞானபீடவிருது 1965-ல் முதன்முறையாக மலையாளக் கவிஞரான ஜி. சங்கரகுரூப்புக்கு வழங்கப்பட்டது. மலையாளப் படைப்பாளிகள் ஐவர் இதுவரை இந்த விருதைப் பெற்றுள்ளனர். வங்காளமொழியில் நால்வர்: கன்னடத்தில் எழுவர், இந்தி மொழியில் எட்டுப் பேர். கன்னடமொழியிலும் இந்தியிலும் விருது பெற்றவர்கள் ஏராளம்.

சாகித்ய அகாதமி விருது கொடுப்பதற்கும் ஞானபீட விருது வழங்குதலுக்கும் ஒரு பெருத்த வேறுபாடு உள்ளது.

ஒரு எழுத்தாளரின் ஒரு படைப்பு வெளியாகி நான்கு ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்படும். அவர் எழுதிய ஒரு படைப்பை நான்கு ஆண்டுகளுக்குள் தேர்வுசெய்து விருதுவழங்குதலை சாகித்ய அகாதமி நடைமுறையாக வைத்துள்ளது. இதனால் இலக்கிய சமூகத்தால் கவிஞராக அறியப்பட்டவர்களுக்கு உரைநடை நூலுக்கும், கதாசிரியராக அங்கீகரிக்கப்பட்டவருக்கு கட்டுரை நூலுக்கும் விருது அளிக்கப்படும் ”ஒவ்வாமை” தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவர் தன்வாழ்நாளில் எத்துறையில் இலக்கியச் சாதனை ஆற்றினாரோ அது அங்கீகரிக்கப் படவில்லை என்றாகிறது; பன்முகத் திறன்கள் கொண்ட சுந்தரராமசாமி போன்றோர் சாகித்ய அகாதமியால் கௌரவிக்கப்படாமல் மறைந்திருக்கிறார்கள். சி.சு.செல்லப்பாவின் இறப்பின் பின் அவருடைய நூல் விருது பெற்றது.

ஞானபீடத் தேர்வு அப்படியல்ல; சாகித்ய அகாதமியைப் போல் ஒரு எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி விருது வழங்கும் நடைமுறையைக் முன்னர் கடைப்பிடித்த ஞானபீடம், 1982 முதல் எழுத்தாளர் தன் வாழ்நாளில் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில் வழங்குதல் என மாற்றிக் கொண்டது.

தமிழில் 1975-ல் அகிலன்; 2002-ல் ஜெயகாந்தன்.

1975-க்கு முன்னரோ 2002-க்குப் பின்னரோ தமிழில் ஞானபீடம் எவருக்கும் இல்லை. அவ்வாறானால் தமிழில் கவிஞர், கதாசிரியர், நாடகாசிரியர், கட்டுரையாளர் என்ற படைப்பாளிகள் எவரும் முகிழ்க்காமல், தட்டுப்படாது போயினரா? ’மூளிக் காது’ மொழியா தமிழ் ?

தமிழில் சீரிய படைப்புக்களே இல்லாத வெற்றிடம் உருவாகியிருக்கிறது என்பது ஒரு சிறந்த புனைவு: 1950-கள், அறுபதுகளில் அவ்வாறான இலக்கியச் சூழல் இருந்தது; அது வணிக இதழ்களினால் உருவாக்கப் பெற்றிருந்தது: வரலாற்றுப் புதினங்கள் என்ற பெயரில் கொட்டிக் குவித்தனர்; வணிகஇதழ்கள் தொடராய் வெளியிட்டன.

”ஆதாரமில்லாது குழி வெட்டுகிற தமிழ்வெட்டியான்கள் வேலை” என்று எழுத்தாளர் விந்தன் இந்தப்போக்கைப் பகடி செய்தார். சரித்திர நாவல்கள் என இவர்கள் செய்த கட்டுக்கதை வேலையை அதேகாலத்தில், அல்லது சற்றுப் பின்னாக நவீன எழுத்து வகைமை என்பதாக, இந்த விஞ்ஞானக் கட்டுக்கதைகளும் இறக்குமதியாகின. இரு வணிகத்தையும் சுமந்து விநியோகித்தன வார இதழ்கள்.

பெருவாரி வணிக இதழ்களில் வெளியாகிறவை வாசிப்புத்தரம் உரியவை, இந்தஇதழ்களில் எழுதுகிறவர்கள் மட்டும் எழுத்தாளர்கள் என நிலவிய மாயை எழுபதுகளில் சிற்றிதழ்களின் வருகையால் உடைபட்டது.இலக்கியப் போக்குகளைத் தீர்மானிக்கும் சுட்டுவிரல்களாக சிற்றிதழ்கள் வினையாற்றின. சமகாலத்தில் முன்னணிப் படைப்பாளிகள் எனச் சொல்லப்படுகிற பெரும்பாலோர் சிற்றிதழ்களில் வேர் கொண்டு வளர்ந்தவர்கள். பின்னர் வணிக இதழ்களும் இந்தப் புதிய திசைவழியைச் தமதாகச் சுவீகரித்துக் கொண்டமை ஒரு வியாபார உத்தி. வார வாகனங்களின் மூலம் பத்தோடு பதினொன்றாய், அத்தோடு இதுவொன்றாய் சிறந்த படைப்புக்கள் வியாபாரத் தெருவில் விற்பனைப் பொருட்களாகின.

இலக்கிய ஆக்கங்களை மட்டுமல்ல, சமுதாயத்தின் விவாதத்துகுரிய அனைதையும் தன் தளத்தில் வைத்துக் கொடுக்கவேண்டும். அப்படியில்லாமல் திரைப்படம், கவர்ச்சிப்படங்கள் (குறிப்பாக பெண்ணுருவங்கள்) கவர்ச்சிச் செய்திகள், பரபரப்பூட்டும் பகிர்தல் என 95 விழுக்காடு வணிகத்தை முன்வைத்து வார இதழ் பக்கங்கள் அச்சாகின்றன. மீதி 5 விழுக்காடு மட்டுமே அறிவுசார்ந்த பங்களிப்பு. 70-களில் பீய்ச்சியடித்த சிற்றிதழ்களின் தன்னூற்று இந்த வியாபாரப் போக்கை தலைகீழாய்த் தூக்கியடித்து.ஊற்றுப் பெருக்கு என்பதினும் கீழிருந்து மேல்பாயும் அருவி எழுந்தது. சமுதாய அரங்குக்கு புதிதாகவந்த பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலைச் சிந்திப்பு,வசந்தத்தின் இடிமுழக்கம் போன்ற புதிய மகசூல்களைக் களத்துமேட்டுக்கு கொண்டுவரும் பெரும்பொறுப்பை சிற்றிதழ்கள் ஏற்றன. வாழ்வியல் பிரச்சினைகளின் வெப்பப்படுகையாய் சிற்றிதழ்கள் வருகையும், சிற்றிதழ்கள் வருகையால் பிரச்சினைகளின் வெப்பப்படுகையும் ஒன்றையொன்று சார்ந்து தகுதிப்படுத்திக் கொண்டிருந்தன.

கவிதைகளில் - சிறுகதைகளில் - புதினங்களில் - கட்டுரைகளில் - தன்வரலாறுகளில் புதிய புதிய வகைமைகள் வெடித்தன: முன்பு ஒரு பத்துப் புதினங்களைத்தான் சுட்டிக் காட்டமுடியும் என்றிருந்த அவலகதி மறைந்து , ஒரு நூறு புதினங்களைக் காட்டமுடிந்திருக்கிறது. ’மேலே கட்டித் தொங்கவிடப்பட்ட குழையைக் கடிக்க எக்குப் போட்டுத் தாவும் ஆடுகள்’ போல் இளம்படைப்பாளிகள் எக்குப் போட்டுத் தாவி வந்தார்கள். இன்று வேறு எம்மொழியினோடும் கம்பீரமாக ஒப்பிடும் அளவு எம்மில் உண்டு உயரிய படைப்பாளிகள்!
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் -
கலைச்செல்வங்கள் யாவும்
கொண்டிங்கு சேர்ப்பீர்”
என்ற பாரதி கால ஏக்கம் முடிந்துவிட்டது: எட்டுத் திக்கும் வாங்குவதற்கு நிகராய் எடுத்துச்சென்று கொடுக்கிறஅளவு எம் கலைப்படைப்புக்கள் செம்மாந்து நிற்கின்றன. உலகிற்கு கொடுக்கிற இலக்கிய அட்சயபாத்திரம் இன்றுஎம்மிடம் உண்டு.

கி.ராஜநாராயணன், அப்படியான ஒரு அட்சயபாத்திரம். ஞானபீடம் பெறத் தகுதி கொண்ட இலக்கிய ஆளுமைகள் எம் மத்தியில் உண்டு. எனினும் ஜெயகாந்தனுக்குப் பின் ஞானபீடம் எட்டாக் கையாக நிற்கிறது.

ஞானபீட விருது அளிக்கிற மனசு வட இந்தியாவில் இருக்கிறது; நோபல் பரிசு வழங்கும் மனம் அமெரிக்காவில் இருக்கிறது. ’புக்கர் பரிசு’ வேறெங்கோ இருக்கிறது. எங்கோ இருக்கிற இவர்களைச் சென்றடையும் பிறமொழி வாகனங்களில் நந்தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புக்களை நாம் ஏற்றவில்லை. பிறமொழியினருக்கு நம் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும் ஊடகப் பாலங்களை நாம் கைப்பற்றவில்லை என்பது தான் நம் செயலாற்றுதலில் ஏற்பட்ட ஊனம்.

வேறு மாநிலங்களில், வேறுவேறு நாடுகளில் குடிபெயர்வு, புலப்பெயர்வு கொண்டுவிட்ட தமிழர்கள் அம்மொழிகளிலிருந்து தமிழுக்கு இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள்: பிறமொழி இலக்கியச் செல்வங்களை நம் வீட்டுக்குள் குவித்துக் கொண்டே இருக்கிறோம். இறக்கிக் கொண்டிருக்கிற அளவில் பத்தில் ஒருபங்கு கூட, அம்மொழிகளுக்கு ஏற்றுமதியாவதில்லை. அங்கங்கு வாழும் தமிழர் ஒருதலைமுறைக்குப் பின் அம் மண்னின் வாசியாகிவிடுகிறார். வீடுகளுக்குள் தாய்மொழி பழகினாலும், சமுதாய மொழியாக அந்நாட்டின் மொழியாகிவிடுதல் குடியேற்றவாசிகள் அனைவருக்கும் இயலபானது. அந்நாடுகளின் மொழிகளில் நம் படைப்புக்களைச் கொண்டுசேர்க்கும் கைங்கர்யம் நடந்திருந்தால், எல்லா விருதுகளின் கவனமும் நம்மை நோக்கித் திரும்பியிருக்கும். பிறமொழிச் சாதனையாளர்களின் கவனத்தைக் ஈர்த்திடும் ஏற்றுமதி வாகனத்தைச் சரியாக இயக்கியிருந்தால், விருதுகளாய்ப் பயன் தந்திருக்கும்.

தமிழ்த் தரப்பிலிருந்து பிறமொழித் தொடர்பாடல்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் திட்டமிடப்படப்படாதது பிழை.
இரண்டாவது பிழை ஒன்றுண்டு - தமிழன் குணவாகு!
”தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு”
பெருமிதமாய் முன்மொழியப்பட்ட தனிக்குணம் இன்று என்னவாக உருமாறிப் போயுள்ளது? மனித மாண்பு, மக்கள் நலன் எதையும் முன்னிறுத்தாத அரசியல், சமுதாய இயக்கங்களின் நடைமுறை, இன்றைய தமிழனின் ”பொதுக்குணமாக” மாறியுள்ளது. இன்னொருவர் திறனை அங்கீகரிக்காத, நடுச்செங்கல் உருவுகிற மனோவியல் தமிழினத்தின் தனீக்குணம். பிறமொழியாளருடன் பெறுகிற கொஞ்சநஞ்சமான தொடர்பாடல்களை அத்துவீசுகிற கொடுநோய் சமுதாயத்தின் மனச்சாட்சி எனக் கருதப்படும் எழுத்தாள நுரையீரல் வரை அரித்துள்ளது.

“எனினும், விருது மோகம் சிலரைப் பாடாய்ப் படுத்துகிறது. வெவ்வேறு வழிகளில் லாபி செய்தும், திறம்பட அரசியல் மூலமாகவும் விருது என்ற இலக்கினை அடைவது பலரின் கனவாக இருக்கிறது.”

என ந.முருகேசபாண்டியன் குறிப்பிடுவது இன்றைய சூழலில் முக்கியத்துவம் கொள்கிறது; புறந்தள்ளக் கூடிய சாதாரண வாசகம் அல்ல இது.

அபத்தமானதும் அலங்காரமானதுமான புகழுரைகளும், விருதுகளும் தேடி சுய மதிப்பை இழந்துவிட்ட கையறுநிலைச் சமூகமாக தமிழிலக்கியச் சமூகம் நிற்கிறது. விருதுகள், பாராட்டுக்கள் இன்னாருக்குக் கிடைக்கவேண்டும் என்பதினும், தனக்குக் கிடைக்கவேண்டுமென முனைப்புக் கொண்டு இயங்குகிறார்கள்.

நண்டு பிடிக்கும் ஒருவன் நண்டுகளைப் பிடித்துப் பிடித்துக் கலயத்துள் போட்டுக் கொண்டிருந்தான். கலயம் திறந்திருந்தது. ”மூடியில்லாம திறந்து வச்சிருக்கிறே, நண்டு வெளியே போய்விடாதா” என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் சொன்னான் ”கவலையே வேண்டாம். ஒன்று மேலே போனால் கூட, மற்றது பின்னால பிடிச்சி இழுத்திரும்,மேல போக விடாது”

இது யாருடைய கதை?

(கி.ரா 95 : முடிவில்லாப் பயணம் - நூலில் வெளியானது)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்