காத்திருக்கும் மக்கள் எழுச்சி

பகிர் / Share:

மோடியின் தூய்மை இந்தியாவில் தூய்மையான ஒரு குடம் நீர் கிடைக்கவில்லை; மக்கள் நீருக்காக அலைகிறார்கள்; எரிவாயு விலை எட்டாத உச்சத்தில் உட்கார்ந்...
மோடியின் தூய்மை இந்தியாவில் தூய்மையான ஒரு குடம் நீர் கிடைக்கவில்லை; மக்கள் நீருக்காக அலைகிறார்கள்; எரிவாயு விலை எட்டாத உச்சத்தில் உட்கார்ந்திருக்கிறது; மக்கள் சமையல் நெருப்புக்காக அல்லாடுகிறார்கள். தொழில்வளச்சி, லாபம் என்னும் உலகமய மந்திரங்கள் ஓதப்படுகின்றன. பயிர்செய்து பசியமர்த்தும் நிலங்கள் மக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகின்றன. சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்குள் நஞ்சு ஊற்றுகிறது. காரல்மார்க்ஸின் இருநூற்றாண்டினது முதல் மாதம் கால்வைக்கும் வேளையில் - ஒரு 170 ஆண்டுகள் முன் காரல் மார்க்ஸும், ஏங்கெல்ஸூம் உலகின் உய்வுக்கு முன் வைத்த சித்தாந்தம் இன்று நம் கைகளில் நிறைய அள்ளப்படுகிறது.

ஆயுதங்களால் மனிதருக்கு காயம் விளைவித்தல், உயிர் அழித்தல், உடமைகளுக்குச் சேதாரம் ஏற்படுத்துதல் வன்முறைகளாகக் கருதப்படுகின்றன. பருண்மையான சேதாரங்கள் அன்றி, ஒருவரைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி மன அழுத்தம் உண்டாக்கும் காரியங்களும் வன்முறைக்குள் வரும்; ஆனால் துப்பாக்கி, கையெறிகுண்டு, கண்ணீர்ப் புகைக்குண்டு, தடி, லத்தி போன்ற ஆயுதங்கள் யாரிடம் உண்டு? இந்தவகை ஆயுதங்களில் ஒன்றும் இல்லாத குடிமகர் ஒருவர் எவ்வாறு வன்முறையில் ஈடுபடமுடியும்?

கைகளில் மட்டுமன்றி கருத்திலும் ஆயுதங்கள் தாங்கியுள்ள கூட்டத்தினரால் வன்முறை ஏன் நிகழ்த்தப்படுகிறது? சுரண்டும் முதலாளிகளின் விருப்பை, ஆசைகளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றிருக்கும் நிர்வாகக் குழுக்கள் தம் எஜமானர்களுக்காக மக்களை அடக்கி வைக்க வன்முறை நிகழ்த்துகிறார்கள். மனித ஈரம் சற்றும் அற்ற ஆளும்வர்க்கங்கள் நேரடியாய் அடக்குமுறை நடத்துவதில்லை. அவர்களின் இதயத்தை தமக்குள் இறக்கியிருக்கும் அரசு அதிகாரக் குழுக்கள் முன்னெடுக்கின்றன.

குடிமக்கள் சமூகம் (Civil Society) தம் இருப்பை, வாழுதலை உறுதிசெய்யும் பொருட்டு ஒன்று திரளத் தொடங்குகின்றனர். அவர்களுக்கு அருளப்பட்டிருப்பது தொண்டைக் குழியில் ஒரு குரலும் தோள்களுக்கு மேல் உயரும் இருகரங்களும். இவ்விரு சக்திகளுடன் மட்டும் எழும் அவர்களின் போராட்டத்தை ஊடகங்கள் கலவரம், வன்முறை, அத்துமீறல் என்று அடையாளப்படுத்துகின்றன: மக்கள் எழுச்சி என்று அவை உச்சரிப்பதில்லை. சமூக அர்த்தத்தில், உயிரோட்டமான உணர்வால் அது மக்கள் எழுச்சி. சிரியாவில், சிலியில், ஜெர்மனியில் பிற நாடுகளில் நடக்கிற போராட்டங்கள் நம் ஊடகங்களுக்கு மக்கள் எழுச்சிகள். இங்கு நடைபெற்றால் கலவரம், வன்முறை, அத்துமீறல்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடைக்கும் தாமிர தாதுப்பொருட்களை எடுத்துவந்து கழிவுகளை நீக்கி, சுத்த தாமிரமாகப் பிரித்து, அதனை மீண்டும் அந்நாடுகளுக்குத் திருப்பியனுப்புவது ஸ்டெர்லைட் ஆலை. ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் நிலம், நீர், காற்று, வேளாண் நிலங்களை மனிதப் பயன்பாட்டுக்கு உரியதாய் இல்லாமல் ஆக்கின; சுற்றியுள்ள 50 கிராம மக்கள் நச்சுப்புகை சுவாசிப்பால் தோல் நோய், காச நோய், புற்று நோய் பாதிப்புக்குள்ளாகினர். ஸ்டெர்லைட் ஆலை தோன்றிய காலம்முதலாக மக்கள் அதை எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். ஆலையின் செயல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தால், 13 உயிர்கள் பலியாகியிருக்காது. 50 கிராம மக்களின் வட்டார வாழ்வு காக்கப்பட்டிருக்கும்.


நவம்பர் 1998-ல் ஸ்டெர்லைட் ஆலை உடனே மூடப்படவேண்டும் என்று சென்னை உயர்நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஆலை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தீர்ப்பை மாற்றி வாங்கியது.

1998-இல் நாக்பூரிலுள்ள அரசு நிறுவனமான நீரி நிறுவனம் (NATIONAL ENVIRONMENT AND ENGINEERING INSTITUTE) - சுற்றுச் சூழல், மாசுக் கட்டுப்பாடு, மண் வாகு – போன்றவற்றை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கைத் தரும் நிறுவனம். ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் நச்சு, சுற்றுப்புற சூழலுக்கும் நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என அறிக்கை தந்தது. 2003-இல் அதே நீரி நிறுவனம் ஆலைக்கு ஆதரவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. காரணம் நீரி அமைப்பின் அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ரூபாய் 1.22 கோடி வழங்கியது.

செப்டம்பர் 2004-இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்சநீதி மன்ற ஆய்வுக்குழு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அனைத்து விதிகளும், கட்டுபாட்டுகளும் அடியோடு மீறப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. உற்பத்தியைச் சுத்திகரிக்கவும், பராமரிக்கவுமான கட்டமைப்பு ஆலையில் இல்லை என்பதால் ஆலை விரிவாக்கப் பணிகளுக்குச் சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி தரக்கூடாதென்றும், ஏற்கெனவே தரப்பட்டிருந்தால் அதனைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதிர்ச்சி என்னவெனில் அடுத்த நாளே மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலை மக்கள் போராட்டத்தாலும் சட்டரீதியான முன்னெடுப்பாலும் மூடப்படுவதும் திறக்கப்படுவதுமாகத் தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கிளர்ச்சி எடுத்த எடுப்பில் உச்சம் கொண்டு விடவில்லை: மனுக்கொடுத்தல், அதிகாரசக்திகளிடம், ஆட்சியாளர்களிடம் முறையிடல், பட்டினிப்போர், ஆர்ப்பாட்டம், பேரணி என மற்ற மக்கள் போராட்டங்கள் போலவே, சனநாயக ரீதியில் படிப்படியாக முன்னகர்ந்து உச்சநிலை அடைந்தது. அதிகார வர்க்கமும், ஆட்சிச் சக்திகளும் மக்கள் மனநிலையை அதன் அசைவிலேயே புரிந்து, உள்வாங்கி, பரிகாரம் செய்ய முன்வந்திருந்தால் இவர்கள் மொழியில் சொல்லப்படும் ‘அத்துமீறல்’, ‘வன்முறை’ நடந்திருக்க வாய்ப்பில்லை.

ஐ.பி.எல் போட்டியில் வெகுமக்களது விருப்பமும் ஆலோசனைகளும் அதற்கு எதிராய் இயங்கியது; திடலுக்கு வெளியில் பௌதீக ரீதியாய்த் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தோருக்கும் அப்பால், தமிழகம் முழுவதும் உணர்வு ரீதியான உள்ளங்கள் திரண்டிருந்தன: ஒப்பிடுகையில், ஐ.பி.எல். ஆட்டம் காண வந்தோர் சிறுபகுதியினர். பெருவாரி மக்கள் சமூகத்தின் விருப்பத்தைக் கணக்கில் கொள்ளாது, சிறுபகுதியின் ஆசையைப் பூர்த்திசெய்ய 3000 போலீசாரை இறக்கியிருந்தது அரசாங்கம். இங்கே ஸ்டெர்லைட்டில் ஒரே ஒரு வேதந்தா குழுமத்துக்கு ஆதரவு என்றால், கிரிக்கெட்டில் கையளவு எண்ணிக்கையிலான வியாபாரிகளுக்காக.

கடலூர் அருகேயுள்ள சின்னப்பாளையம் கிராம மக்கள், பெண்கள் உட்பட 50 பேர் திரண்டு, வீராணம் ஏரி நீரேற்று நிலையத்துக்குச் சென்று, மறுநாள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். “எங்கள் பகுதியான வீராணத்திலிருந்து சென்னைக்குக் குடிநீர் செல்கிறது: எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி பார்ப்பவர்களுக்கு நாங்கள் ஏன் தண்ணீர் தரவேண்டும்?” கிராம மக்கள் முற்றுகையை நீட்டித்து, ஒருநாள் தண்ணீர் நிறுத்தப்பட்டிருந்தால் சென்னை வேர்த்து வியர்த்துத் திணறியிருக்கும். கிரிக்கெட் சூதாட்ட மோகிகளின் ஐ.பி.எல் நடந்திருக்காது.

தென்பெண்ணையாற்றில் மணல்குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் 30.04.2018 அன்று கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று மணிநேரம் மறியல் செய்தனர். மூன்று மணிநேர மறியலுக்குப் பின் மக்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், பேச்சுவார்த்தையின் முடிவில் “மணல்குவாரி அமைக்கத் தடைவிதிக்க முடியாது” எனத் தெரிவித்தார். வானத்துத் துளிகளைத் தண்ணீராக்கித் தருகிறது ஆறு: காற்றில் கலந்துள்ள மாசுகளின் வழியாக இறங்கும் நீரை மணல் துகள்கள் என்னும் தேர்ந்த வடிப்பான் மூலம் வடிகட்டித் தரும் இயற்கையின் ஆற்றல் அபூர்வமானது. இயற்கையின் இந்த அபூர்வ ஆற்றலை அழிப்பது மணல் கொள்ளை. தன்மடியில் ஈரப்பதத்தைத் ஏந்தி எப்போதும் காத்துவரும் ஆற்றிலிருந்து மணலை மொட்டையடிக்கும் ‘மணல்குவாரி அப்பன்கள்’ மேலிருந்து கீழ்வரை அளக்கிறார்கள் என்பது எவரும் அறியாத அதிசயமல்ல. மணலை, நீரைக் கொள்ளையடிப்பது இலாப வேட்டையாளர்களின் அறமெனில், நிலத்தையும் நீரையும் காக்கப்போராடுதல் மக்களின் அறம்.

மக்களின் வாழ்வியல் விருப்பங்களைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமை. அவ்வாறில்லாத ஒரு அரசாங்கத்தின் விருப்பை, ஆலோசனையை மக்கள் ஏன் நிறைவேற்ற வேண்டும்? அவைதாம் இந்தப் போர்க்குரல்கள். இதை தூத்துக்குடி மக்கள் எழுப்பினார்கள். இதையே கதிராமங்கலம் எழுப்புகிறது. இதுவேதான் தென்பெண்ணையாறு மணல்குவாரி மறியலும் காட்டியது. மவுனக் குகை மர்ம ’நியூட்ரினா’, ஐ.பி.எல் எதிர்ப்புக் குரல்களும் உயர்ந்தன.

அதிகாரத்தை நிலைநிறுத்தலுக்கான பழைய ஒழுங்கைப், பொதுச்சமூக ஒழுங்காக ஆக்கிவைத்திருந்தனர் முன்னைய கருத்தியலாளர்கள்: மேலாண்மை சக்திகளின் ஆயுதங்களால் நிர்வகிக்கப்பட்ட சமூக ஒழுங்கு உடைபடும் காலமிது. வாழ்வியல் காப்பு, உயிர்காப்பு, உரிமைகள் காப்பு, போராடுதல் என்பது மக்களின் புதிய ஒழுங்கு: இதை அத்துமீறல் எனச் சட்டகமிடுகிறார்கள் பழைய ஒழுங்கின் கருத்தாளர்கள்.

“வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்களைத் தாக்குவதுதான்: சீருடையில் பணிசெய்பவர்கள் மீது கைவைப்பவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்” என ஐ.பி.எல் போட்டி நடந்த மறுநாள் துள்ளிக் குதித்து நடிகர் ரஜனிகாந்த் வீசிய வாசகம் – மேலாண் கூட்டத்தின் பழைய ஆதிக்க ஒழுங்குக்கு ஆதரவான கருத்தாக வெளிப்பட்டது. “இங்கு நிகழ்ந்ததாக, நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட வன்முறையை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்றார் வாலாஜா சாலையில் நின்று திரைப்படப் பாடாலாசிரியர் வைரமுத்து. இது போன்ற வாசகங்கள் எத்தனை கவித்துவத்தில் ஊறவைத்து வெளிப்படினும், மக்கள் நிறுவமுயலும் புதியஒழுங்குடன் இவர்களுக்கு ஒவ்வாமை இருக்கிறது என்பதையே நிரூபிக்கிறது.

இப் பழங் கருத்தியல் தடத்திலேயே பயணிக்கும் இயக்குநர் பாரதிராஜா “வன்முறையைக் கண்டிப்பதாக” போராட்டக் களத்திலேயே உரையாற்றினார். கடந்த காலத்தின் கருத்துகளையே நாம் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருக்கிறோம் என மற்றவர்கள் உணர்த்தியிருக்க வேண்டும். மறுநாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் “போராட்டதில் ஈடுபட்டவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை; வினை செய்து எதிர்வினையாற்றச் செய்துவிட்டனர். ஒரு வினைக்கு எதிர்வினை” என்று விளக்கமளித்தார்.

இது போன்ற மக்கள் எழுச்சிகளில், வகுக்கப்பட்ட பழைய ஒழுங்கின் இடதில் தம்மின் புதிய ஒழுங்கை மக்கள் நிறுவிக்கொள்ளலின் முனைப்பை இவர்கள் ஏற்கவில்லை என்பதையே காட்டுகின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவல், நக்சல்கள் ஆதிக்கம் எனத் திசைதிருப்பும் நற்காரியங்களும் தொட்ர்ந்து நடைபெறுகின்றன. தமிழக பா.ஜ.க.வின் மூச்சும் பேச்சும் இத்திசை நோக்கி அமைந்துள்ளன. வெளிப்படையாகவே அமைச்சர் பொன்.இராதாகிருட்ணன் ”மெரினா சல்லிக்கட்டுப் போராட்டம் முதல் சகலத்தையும் சமூக விரோதிகள் கைவசப் படுத்தியுள்ளனர். எந்த அரசியல் இயக்கத்திலும் இணையாத அப்பாவிகளை தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்” என்கிறார். ஒரு தப்படி விலகாமல் தமிழிசை சௌந்தரராசனும் இதே இசையில் பாட்டுக் கட்டுகிறார்
“கெடல் எங்கே தமிழின் நலம் – அங்கெல்லாம்
கிளர்ச்சி செய்க”
என்ற பாரதிதாசனின் வாக்கு தமிழின் நலம் மட்டும் அல்ல; தமிழரின் வாழ்வியல் நலன்களும் அழிமானம் ஆக்கப்பட்டு வருகின்றன. அங்கெலாம் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற அர்த்தங்களுடையது.

முப்போகம் எடுக்கும் ஒரு காணி இருந்தால் போதும்: வேலை, உத்தியோகம் என்று அலைய வேண்டாம் என்றிருந்த காவிரி டெல்டா பகுதி மக்களின் சுயவாழ்வை வேரோடும் வேரடிமண்ணோடும் சீர்குலைக்கும் முன்னெடுப்பு நடுவணரசின் திட்டமிடலில் உருட்டிவிடப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் வந்து விவசாயம் செழித்தால், காவிரிப்படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நிலக்கரி, ஆயில் (ONGC) போன்றவை எடுக்க இயலாது; நீரின்றி விவசாயம் பொய்த்தால், விவசாயிகள் நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்க முன்வருவார்கள். நீர் மேலாண்மை கொண்ட மாநிலமாக கர்நாடகத்தையும் (இதன் மூலமாக கர்நாடக அரசியலில் மேலாண்மை செய்ய இயலும்) நீரற்ற, எரிவாயு, மீத்தேன், பெட்ரோலியம், நிலக்கரி எடுக்கும் பாலையாக தமிழகத்தை ஆக்கிவிட்டால் நடுவணரசில் அமரந்திருக்கும் ஆட்சியாளர்களின் நோக்கம் நிறைவேறும். டெல்டா மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையச் செய்து உலகமயம் ஊதிப் பெருக்கவும் முடியும்.

ஒரு பொருள் வாழ்வியல் பயன்பாட்டுக்கானதாக உற்பத்தி செய்யப்பட்டால் அது அறம்; அதுவே விற்பனைப் பொருளாக கையாளப்பட்டால் வாணிகம்:வாணிபம் தான் முதலாளியத்தின் மூலம். ஒருபொருளின் வாழ்வுப் பயன்பாட்டுக்கான நியாயமும், அதே பொருளின் வணிகப் பயன்பாட்டுக்கான நியாயமும் துல்லியமாக வேறுவேறானவை.மக்களின் எந்தவொரு பகுதியினரையும் சந்தையாகக் கருதி, வணிகத்தில் ஈடுபட்டால் உள்நாடாயினும் உலக நாடாயினும் அது ஏகாதிபத்தியம் தான். விவசாயம் பெருவாரி கிராமங்களின் உயிர்நாடி என்றுணரா ஆட்சியார்களால் இந்த உயிர்நாடி துண்டிக்கப்பட்டு, நிலமும் விவசாயமும் வணிகச் சந்தைக்கான மூலப் பொருட்களாக மாற்றப்படுதல் அவர்களுக்கான நியாயம். தம் வாழ்விழப்பை எதிர்த்துக் கலகம் செய்தல் மக்களின் நியாயம்; அறிவியல் முதற்கொண்டு வணிக மயமாக்கப்படுகிற எதுவும் எதிர்ப்புக்குரியவை: மக்களின் நலனுக்கு, பயன்பாட்டுக்குரியது அறிவியல். மக்கள் நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் அறிவியல் எதுவாயினும் அது ‘நியூட்ரினோ’ அராஜக அறிவிலாகவே அமையும்.

அரசு என்பதின் அர்த்தம், அதிகாரம்; அதிகாரம் என்பதின் பொருள் அத்துமீறல். அதிகாரம் எல்லாவற்றையும் சாதித்துவிட எண்ணுகிறது: அதிகார மனம் எங்கு இயங்குகிறதோ அது மற்றமைகளின் சனநாயக வெளியை வெட்டிக் குறுகிச் சிதைக்கும். மக்கள் தமக்கான சனநாயகத்தை நிலைநிறுத்தும் முயற்சி “அத்துமீறலாக” அடையாளப்படுத்தப்படும்.

தமிழகம் இந்த ’அத்துமீறல்களின்’ கொதிநிலம் ஆகியுள்ளது; மணல்குவாரி, கனிமக் கொள்ளை, சூழல் சிதைப்பு என வட்டாரப் பிரச்சனைகளில் தொடங்கிய தமிழகம் அனல்படுக்கையாக ஆகிவிட்டது; அனைத்துப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு முகம் கொடுத்து, புரட்சிகர சக்திகளின் துணையுடன் மக்கள் அமைப்பாகத் திரண்டு போராடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையை ஆக்கமான வழிகளில் பயன்படுத்துவதன் மூலம், மனிதவளம் முழுவீச்சில் பயன்பாடு கொள்ளும். மனிதவளத்தைச் பயன்படுத்துவதற்கு முன்னிபந்தனையாக இருப்பது, இயற்கையினைப் பாழ்படுத்தாது பாதுகாப்பது மட்டுமேயாகும். இயற்கையை நாசப்படுத்தி லாப நோக்கு ஒன்றே குறியாய்க் கொள்வோருக்கு துணைசெய்யும் அரசாங்கத்துக்கு மனிதவளத்தை முழுமையான அர்த்தத்தில் மேம்படுத்தத் தெரியவில்லை என்பதை தூத்துக்குடி நிரூபித்துள்ளது.

கதிராமங்கலம், காவிரிப்படுகை முதலாக மரக்காணம் வரை, நியூட்ரினோ, இப்போது சேலம் முதல் சென்னை வரையான எட்டு வழிச் சாலைகள் மக்கள் எழுச்சிகளுக்காகக் காத்திருக்கின்றன.

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content