படிக்க வேண்டிய “பள்ளிக்கூடம்“ - சென்னிமலை தண்டபாணி

(நவம்பர் 2018 “இனிய உதயம்” இதழில் வெளிவந்த நூல் மதிப்புரை)


“படி, நல்லாப்படி, முதல் மாணவனாய் வா. வேலை வாங்கு, லட்சம் லட்சமாய்ச் சம்பாதி. ஆனால் மனுசனா இருக்க வேண்டாம். இதுதான் நம்ம கல்வி. இந்தப் பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது.”

“தாழ்ந்த சாதிக்காரன்னா படிக்கக் கூடாதா?”

“சண்டை போடனும். சண்டையெடுக்காட்டா பெண் மட்டுமல்ல, ஒரு உசிரும் உயிரோட இருக்க முடியாது”

“பிள்ளைகள் எந்தக் குடும்பத்திலிருந்து, எந்தச் சூழ்நிலையிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு வருகிறார்கள் என்பது கவனிக்கப் படவேண்டும். பள்ளிக்கு வந்து வாசிக்கும் பதமான உழவுகால் எல்லாக் குடும்பத்திலும் இருப்பதில்லை. நம்ம பாடு என்னைக்கு விடியும்,வாதனை எப்ப முடியும் என்று கவலை கொண்டிருக்கிற குடும்பங்களிலிருந்து தான் வருகிறார்கள். ஒவ்வொரு பிள்ளையின் குடும்பச் சூழலையும் அவசியம் தெரிந்து கொள்ளக் கடமைப்பட்டவர்கள் ஆசிரியர்கள்.”

ஊடும் பாவுமாய் இழையோடிக் கிடக்கின்ற இப்படிப்பட்ட வரிகளை அவ்வளவு எளிதில் மனம் கடக்க முடியவில்லை. விக்கித்துப் போய் நின்றது. சீர்கெட்டுக் கிடக்கும் கல்வித் துறை, கைதாகிச் சிறைக்குச் செல்லும் துணைவேந்தர்கள், அவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் கோரமுகங்கள், கண்முன்னால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மர்ம மரணம் அடைந்த நம் திருப்பூர் சரவணன் அப்புறம் சேலம் முத்துக்கிருஸ்ணன், எரிந்து போன அனிதா என்று வரிசையாக வந்து கொண்டிருந்தார்கள்.

மக்கள் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் “சூரியதீபன்” என்கிற கவிஞர் மட்டுமல்ல, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து இன்று வரை சமூகப் பிரச்சனைகளை முன்னெடுத்து, ஆதிக்கச் சக்திகளை எதிர்த்துப் போராடும் ஒரு போராளி என்பதைத் தன் எழுத்தின் மூலம் மீண்டும் மீண்டும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.
“ஒரு 50 ஆண்டுக்கால தமிழ்நாட்டின் கல்வியியல் திசையின் வரலாறு இது“ என்று சொல்லிக் கல்விப் புலத்தைச் சுற்றிச்சூழும் சாதியக் கசடு, சொறிந்து சுகங்காணும் அரசியல்சக்திகள், சாதியின் அருவறுப்பான முகங்கள், அரசுப் பள்ளியில் அர்ப்பணிப்போடு செயல்படும் ஆசிரியப் பெருமக்கள், தாழ்த்தப்பட்ட சாதியரின் மேல் தொடுக்கப்படும் வன்முறை, எகத்தாளம், ஒட்டிய உள்ளங்களை வெட்டிப்பிரித்து விசம்கக்கும் கொடூரம், சாதாரண உழைக்கும் சனங்களோடு சேர்ந்திருக்கையில் கிட்டுகிற மனவலிமை என்று பலவற்றைத் தொட்டுத் தொட்டுச் சித்திரங்களாக்கியிருக்கிறார் “பள்ளிக்கூடம்” என்கிற தன் முதல் நாவலில். இது நாவல்தானா? இன்றைய நாட்டு நிலையா? இல்லை. “என்னென்ன நம்பிக்கைகள் வாழ்வு நடப்பில் இருக்கின்றன. வாழ்வு என்பது நம்பிக்கைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றில்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் மற்றொருநாள் வெளிச்சம் வருமென நம்பிக்கை சொல்கிறது” என்று அவரே சொல்வது போல நம்பிக்கையை நோக்கி நகர்த்துகிற போர்ப்படைப்பா?

“வட்டாரம்” என்று பேரூராட்சித் தலைவர் சொல்வது “சாதிய வாட்டாரம்” என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கண்காணாத இடத்தில் போய்த்தான் தாழ்த்தப்பட்டவர்கள் சாப்பாட்டுக்கடை, துணிக்கடை, மளிகைக்கடைகளில் வேலை செய்ய முடிகிறது என்பதைச் சுட்டிக் காட்டிப் “பள்ளத்தாக்கு, பசுஞ்சோலை,சமவெளி, பசுமை தழையும் குன்றுகள் அமைதியாகத் தென்படுகின்றன. அடியில் நில அதிர்வும் எரிமலையும் அடங்கி இருப்பது எவருக்கும் தெரியாது” என்பதையும் நினைவுபடுத்துகிறார்.

“சாதீயக் கட்டுமானம் இருக்கையில் சமூகக் கட்டுமானம் மாறும் என்பது ஆகிற வேலையா?” என்று “பள்ளிக்கூடம்” வழியே கேட்கிற பொழுது இன்றைய நாட்டு நடப்பை எப்படிப் போட்டுடைப்பது என்கிற வழியைத் தெளிந்து தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.
அப்துல்கனி, ஜான், முத்துராக்கு, அன்னக்கிளி, ஆந்தைக்கண் ரகுராம்,“உறுமிக்காரப் பய” தனஞ்செயன், வெங்கட்டம்மா, போயிலைக்கட்டை,தவசியப்பன், வையம்மா, உதிர்ந்து போய் நிற்கும் யசோதை, ரங்கா, தனம், பெரியவர் சிவபெருமாளின் புத்தக நன்கொடை, முத்துமாரி, சீதாலட்சுமி, ஆழ்வாரப்பன், ஆட்டக்காரர்கள் கழுகுமலைச் சுப்பையா, தோப்பூர் கோவிந்தன், கடற்கரை, ஆழ்வாரப்பன் என்று பலதரப்பட்ட பாத்திரங்கள், நிகழ்வுகளின் வழியே சமூகத்தின் இன்றைய நிலையை எதார்த்தமான மொழிநடையில் இயல்பாகப் பேசியிருக்கிறார் பா.செ.. தெற்கத்திக் கிராமத்தின் சொலவடைகளும், அவருக்குள் இருக்கும் கவித்துவமும் கைகோர்த்துப் பாத்திரங்களை உயிர்ப்பிக்கின்றன. ஒவ்வொரு பாத்திரங்களின் வழியே போகிற போக்கில் தன் முற்போக்குக் கருத்துகளின் முகவரியைத் தந்துவிட்டுப் போகிறார். இது நாவல் அன்று. பிரச்சாரம்தான் என்பவர்களிடம் நாம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி. எது பிரச்சாரம் இல்லை. பிரச்சாரம் இல்லாத இலக்கியம் ஏது? என்பதுதான். “நடையில் நின்றுயர் நாயகன்”, “அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றவதூம்” என்பதுட்பட யாவும் பிரச்சாரம்தான்.
இயல்பாக வந்து விழுகிற அவரின் சொல்வடைகளும் கவித்துவ வரிகளும் படிக்கப்படிக்க அர்த்தங்களின் வீரியத்தை விதைத்துச் செல்கின்றன. “கால்ல ஒட்டுன கரிசக்காட்டு மண்ணா சேலையில ஒட்டுன செவக்காட்டு மண்ணா”, “கொள்ளாக் குமரு வில்லாச் சரக்கு”,. “கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா”, “வாய் கருப்பட்டி, கை கருணைக் கிழங்கு”, “ஒருமுறை மக்க விடப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட திறன் அம்மாடி என்றாலும் வராது, ஆத்தாடி என்றாலும் எழாது.” “எல்லையில்லாத் திறன்களின் திரட்டுப்பால்தான் பாலபருவம்“, சப்போட்டாப் பழத்தின் கறுத்த விதைகள் போல் முற்றத்திலும் கொட்டகையிலும் ஆட்டுப்புழுக்கைகள்”, “குருடி அவல்திங்க விளக்குப் பிடிக்க நாலு ஆளாம்”, “ஆரையை அரிக்கையில கோரையை அரிப்பாளாங்கிற ஆளு இவ”, “அங்கிறதுக்குள்ள ஊங்குது ஊரு”, “மேஞ்சி பிழைக்கிற கோழியை மூக்கறுத்து விடற மாதிரி” இப்படி அங்கங்கே தெறித்து விழுந்து கிடப்பதைத் திகட்டத் திகட்டச் சுவைக்க முடிகிறது.

வில்வநத்தம் என்கிற கிராமத்தின் அரசுப் பள்ளிக்கூடத் தலைமையாசிரியராக வரும் அப்துல்கனியும் அவர் தோழர்களும் வீடு வீடாகப் போய்க் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கப் பாடுபடுவதும் அதற்குள் ஏற்படுகிற அரசியல் விளையாட்டுகள், உள்ளூர் நாட்டாமைகளின் உபத்திரவங்கள், சிறுசுகளின் மனக் குதூகலங்கள், சாதிய வெறி தலைக்கேறிய பித்தர்கள், ஆங்கிலக் கல்வியை நாடிச் சரிந்தபோகிற சராசரி மனிதர்கள், ஆதிக்கச் சக்தியினரால் வேற்றூருக்கு மாற்றப்படுகிற முத்துராக்கு, மாறுதலை எதிர்பார்த்து “எங்க தலைக்கு மேலே கத்தி தொங்குது” என்று முணுமுணுக்கும் யாஸ்மின் என்று கதையை நகர்த்திக் கொண்டு போகிற ஆசிரியரின் கருத்துகளில் சமகாலம் பளிச்சென்று சாட்சியமாக நிற்கிறது.

“ராம்கோ சிமிண்ட்ஸ் மெட்ரிகுலேசன், தீபம் மெட்ரிகுலேசன், இமாகுலேட் பள்ளி, புதூர் வித்யோதயா பள்ளி, கொஞ்சம் தள்ளி இன்டர்நேசனல் ஸ்கூல். இத்தனை கொள்ளையர்களும் அரசுப் பள்ளிகளைச் சுற்றி முற்றுகையிட்டிருக்கிறார்கள். இந்த வழிப்பறிக் கொள்ளையர்களை எதிர்த்து வில் ஏந்திப் புறப்பட்டவர்கள் இந்த ஆசிரியர்கள்” என்கிறார். எத்தனை நிதர்சனமான உண்மை. ஊருக்கு ஊர் இதே நிலைதானே?

தாழ்த்தப்பட்டவர்களின் நிலை என்ன என்பதை “அவர்கள் வெளிச்சம் அவர்கள் கையில் இல்லை. அவர்களின் சூரியன் சாதிக்காரர்களின் கையில் இருக்கிறது. சேரிமக்களின் வாழ்வினை செங்குளத்தார் வகுக்கிறார்கள். யார் யாருக்கோ எங்கெங்கோ வந்திருக்கிற சுதந்திரம் இவர்களுக்கு வரவில்லை. செங்குளம் தொடக்கப் பள்ளியில் இந்த வருடம் ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள் சேரியில் எத்தனைபேர் என்று கணக்கெடுக்கையில் சக்கிலியக்குடி, பறக்குடி,பள்ளக்குடிகளில் 5ஆம் வகுப்பு முடித்தவர்கள் 9 பேர். ஆறாம் வகுப்புக்கு ஒரு குஞ்சு கூடப்போகவில்லை” என்று பா.செ எழுதுகிற போது நம்காதுகளில் ரோஹித்துகளின் வேதனைக் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 75 இலட்சம் பள்ளிகளில் 10 ஆண்டுகள் படிப்பு நிறைவுக்கு முன் 54 விழுக்காட்டினர் வெளியேறிவிடுகிறார்கள் என்கிற சமீபத்திய செய்தியை எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அரியலூர் ரயில் விபத்து, புயலடித்து ராமேஸ்வரம் பாம்பன்பால ரயில் விபத்து,தூத்துக்குடி டூரிங் டாக்கீஸ் தீவிபத்து,மன்னன் மணிக்குறவன் கதை, மதுரை ஆர்.எம்.வி போராட்டம், மதுரை சரஸ்வதி பள்ளிக்கூடம் இடிந்து விழுந்து மாணவிகள் மரணம் என்று சனங்களின் கதையைப் பாடிக் கொண்டிருந்த குறவன்-குறத்தி ஆட்டக் கலைஞர்களை எழுதிச் செல்கிற ஆசிரியர் பாழ்பட்டுப் போன பட்டிமன்றங்களையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. இதற்கு யார் யார் காரணம் என்பதையும் குறிப்பிடுகிறார்.
நோய்ப்படுக்கையில் கிடக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவபெருமாள், இன்னொரு கட்டிலில் கிடக்கும் அவர் மனைவி சீத்தாலட்சுமி, இவர்கள் இருவரையும் கவனித்துக் கொள்ள வந்துபோகும் சக்கிலியப்பெண் முத்துமாரி, தன் வீட்டின் ஒரு பகுதியையே நூலகமாகத் தானம் தருவதற்கு அவர் படும்பாடு இவற்றையெல்லாம் ஆசிரியர் திரைக்காட்சியாகக் காட்டுகிறார். இதை “உள்ளூர்வாசிகளின் சாதிக்காங்கை சக்கிலியக்குடிவரை தகித்துப் பொசுக்கிக் கொண்டிருக்கிறது. சொல்லாலும் சொல் அம்புகளாலும் வேகரிப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவீட்டிற்குள் முத்துமாரி காலடி வைத்ததால் சாதி சார்ந்த காலடிகள் விலகிப் போயின. அந்தப்பெண் வீட்டுக்குள் வந்த நாளிலிருந்து வந்து கொண்டிருந்த உறவுகள் சன்ன சன்னமாய்க் குறைந்து வரத்து இல்லாமல் போனது” என்கிற போது சாதியத்தின் வேர் எவ்வளவு ஆழமாக வேரோடிக் கிடக்கிறது என்பதைக் காண முடிகிறது.

“இன்று நவீனமாய்ப் பெயர்சூட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அருந்ததியர் வீட்டில் மாதவியும், பள்ளர் குடும்பத்தில் கவியரசன், பறையர் குடும்பத்தில் பானுமதி” என்று எழுதுகிறவர் “வண்ணார், நாவிதர், குசவர், பள்ளர், பறையர் சமூகத்துக்கு சாமி. ராஜா என்ற பின்னொட்டு விலக்கப்பட்டிருந்தது. ஆறுமுகம். செந்தில், முருகன், சோலை என்று பெயர்கள் வைத்துக் கொள்வார்கள். வைத்துக் கொள்ள வேண்டுமென்பது மேல்சாதிக்கட்டாயம். சாமி. ராஜா சேர்த்துக்கொள்ள அனுமதியில்லை. ஆறுமுகச்சாமி, சண்முகச்சாமி, சோலைராஜா என்று பின்னொட்டு சேர்த்து வந்தால் கீழானவர்களை சாமி, ராஜான்னு கூப்பிட வேண்டிவரும்” என்று ஒரு காலத்தையே பதிவு செய்கிறார். இன்று நம் மக்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதைக் கேட்டால் தமிழ்நாட்டிலா இருக்கிறோம் என்று எண்ண வைக்கிறது. பொருளற்ற, பொருத்தமற்ற ஏதோ ஒலியை ஒலிக்கச் செய்யும் பெயர்களாக இருக்கின்றன.

தீண்டாமை எதிர்ப்புப்பாடலை நாடகத்துக் கொண்டு வந்தவர்களில் ஒருவரான தோப்பூர் கோவிந்தனைப் பற்றிய பதிவைச் சரியாகச் செய்கிறார் ஆசிரியர். தொடர்ந்து, பேராசிரியர் அ.சீனிவாசராகவன், தொ.மு.சி.ரகுநாதன் ஆகிய இருவர் குறித்தும் முத்துராக்கு என்கிற பாத்திரத்தின் வழியே ஆசிரியர் சொல்வதும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.

அ.சீ.ரா. தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முதல்வர் தொ.மு.சி.ரகுநாதன் திருநெல்வேலி. இருவரும் இலக்கிய உலாவாகச் சுசீந்திரம் வரை போய்வரலாம் என்று போகிறார்கள். சுசீந்திரக் கோயிலின் கலை அழகைத் தரிசித்துவிட்டு நடந்தே நாகர்கோயில் வருகிறார்கள். இரவு நேரம். நாகர்கோயிலில் இருந்த உறவினர் வீட்டில் தங்கிச் செல்லலாம் என்கிறார் அ.சீ.ரா. அது ஐயங்கார் வீடு.
“ஒன் கூட வந்தவர் என்ன சாதி?“ ஐயங்கார் தெரிந்து கொள்வதில் குறியாய் இருந்தார்.

தொ.மு.சி.ரகுநாதன் பிராமணப் பிள்ளை போலத் தெரிவார். திருநெல்வேலி சைவப் பிள்ளைமாருக்கும் பிராமணர்களுக்கும் உருவம், நிறம், உள்கலாச்சாரத்தில் வெகு தொலைவு கிடையாது. அருகருகே இருப்பவர்களாகத் தோணுவார்கள். அ.சீ.ரா.வை மட்டும் வீட்டிற்குள் வரவழைத்து உணவிடுகிறார். ரகுநாதன் உண்ணவில்லை. வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. அடுத்தநாள் கன்னியாகுமரி போகிறார்கள். அங்கே அம்மனிடம் இருந்தவர் நம்பூதிரிப்பூசாரி கேரளத்தின் அனைத்துக் கோயில்களிலும் பூசாரியாக (அர்ச்சகர்) இருப்பவர்கள் நம்பூதிரிப் பிராமணர்கள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் ஒரு காலத்தில் இருந்த கன்னியாகுமரி அம்மனுக்கும் நம்பூதிரிப்பூசாரி. அந்த நம்பூதிரிப் பூசாரியோ நாகப்பட்டினம் ஐயங்காராகிய அ.சீ.ரா.வின் கையில் பிரசாதம் வழங்காமல் எட்டி மேலிருந்து தூக்கி எறிந்தான். வெளியில் வந்தபின் வேதனையுடன் “இந்த நம்பூதிரிப் பிராமணன் செய்ததைப் பார்த்தீங்களா?” என்று அசீரா கேட்டார்.

“நேற்று நீங்கள் எனக்குச் செய்தது. இன்று உங்களுக்கு வந்தது” என்றிருக்கிறார் தொ.மு.சி. இந்த நிகழ்வை எழுதிவிட்டு “சாதிகள் கரைவதில்லை. சாதி மேட்டிமையின் வரலாறு கடற்கரை வரை விரட்டிக் கொண்டு போகிறது” என்று ஆசிரியர் எழுதுகிற போது அதன் உக்கிரம் உலுக்கி எடுக்கிறது.

பொம்பிளப் பிள்ளைகளால் மூன்று கி.மீ. தொலைவு நடந்து அலுத்துப் போனதால் தன் வீட்டிலேயே தங்க வைத்துத் தேர்வுத் தயார்படுத்துகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜான். இதை “அரசுப் பள்ளிகள் நடக்கிற ஊர்களில் வசிக்கிற வாத்திமார்களில் குறைந்த பட்சம் இரண்டு மூன்று பேராவது இந்த மாதிரி செய்வார்களானால் கல்வி தவ்வாளி போட்டுக்கிட்டு வருமே கிராமத்துப் பிள்ளைகளுக்கு” என்று எண்ணுகிற தலைமை ஆசிரியர் கனியின் மனக்குரலாக பா.செ. பேசுகிறார்.

“ஒரு மனித ஜீவன் பிறப்பெடுப்பது எதற்காக? மனிதனாகப்பட்டவன் இன்னொரு மனிதனுக்கு, அவன்போன்ற மனிதக் கூட்டத்துக்குச் சேவை செய்வதற்காக” என்று இந்த நாவலின் வழியே மக்கள் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பேசிக்கொண்டேயிருக்கிறார். இந்தப் பேச்சு என்றைக்கும் ஓயாது. எங்காவது ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டுதானிருக்கும். அதே நேரத்தில் “அரசியலில் மேலே மேலே போக, தொட்டதற்கெல்லாம் சாதி வந்து நிற்கிறது. சுயநலத்துக்காக சாதியோடு கொளுவிக் கொள்கிறார்கள். ஊழல், லஞ்சம் இவர்களைக் கவித்துப் போட்டுக் கொள்கிறது” என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

“பள்ளிக்கூடம்” நாவல் 246 பக்கங்களில் இன்றைய கல்வி வணிகத்தையும் சமுதாய, அரசியல் நிலைமைகளையும் குறித்து எத்தனையோ பாடங்களை நடத்திவிடுகிறது. படிக்க வேண்டியது நம் பொறுப்பு. அவ்வளவுதான்.

நூல்: பள்ளிக்கூடம்
ஆசிரியர்: பா. செயப்பிரகாசம்.
வெளியீடு: வம்சி புக்ஸ்
19 டி.எம்.சாரோன்
திருவண்ணாமலை- 606 601
செல்: 9445870995
விலை: ரூ200

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்