நீரில் மூழ்கிய வாழ்வு


செத்தை, சருகு, அழுகல் காய்கறி, கெட்டுப்போன உணவு என அனைத்துக் கழிவுகளும் குவிந்து கிடப்பது குப்பை. சில மாவட்ட மக்களின் வாழக்கையைக் குப்பையாக்கிவிட்டு வெள்ளம் ஓடிவிட்டது.

வாழ்வு குப்பையாய்ப் போனதற்கு நீா் மேலாண்மை இல்லாமை – அப்படியொரு பக்கம் இருக்கிறது என்பதை அறியாத அலட்சியமே காரணம் என்கிறார்கள். நீர்மேலாண்மை எதைச் சுட்டுகிறது? நிர்வாக மேலாண்மை இல்லாமையை; நிர்வாகமேலாண்மை இல்லை என்பது எதைக் கைகாட்டுகிறது? ஆட்சியாளர்களின் செயலற்றதனத்தை! ஆட்சியாளர்கள் என்று சொல்லப்படுடும் அவா்கள் யார்? செயல்படுத்தும் இடத்தில் அதிகாரத்தினைக் கொண்டிருக்கும் நிகழ்கால ஆட்சியாளா்கள்! அவர்களோடு முடிவில்லை; ஏற்கனவே அதிகாரத்தைக் கொண்டிருந்த நேற்றைய ஆட்சியாளர்களையும் கழுத்தில் துண்டைப்போட்டு இழுத்து வருகிறது; ஒரு கேள்விக்கான விடை ஒன்றைத் தொட்டு ஒன்று என்று தொடரான பதில்களுக்குள் போய் முடிகிறது.

இயற்கைப் பேரிடர் என்ற வார்த்தையை நான் ஏற்கவில்லை. நில நடுக்கம், கடல் சீற்றம், சுனாமி, காட்டுத்தீ போன்ற அழிவுகள் நேர்கிற போது இயற்கைப் பேரிடர் என்ற சொல்லால் சுட்டலாம். அவையும் இயற்கையின் தவறுகளால் உண்டாகின்றனவா?

“எல்நினோ – என்ற புவிவெப்பத் தாக்கத்தால் பசிபிக்கடலில் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை கடும் வெப்பம் நிலவியது. இதனால் சில நாடுகளில் 2015 அக்டோபர் முதல் டிசம்பா் வரை கடும் மழை பெய்தது. இந்த மழை 2016 – துவக்கம் வரை தொடருகிறது. இந்தியாவின் தென்மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்யும். பசிபிக்கடலில் ஏற்பட்டுள்ள கடும்வெப்பத்தால் அக்டோபர் முதல் டிசம்பா் வரையிலான வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தது. ஏற்கனவே சென்னை அபரிதமான மழையைப் பார்த்து விட்டது”.

ஐ.நா.வின் சமூக பொருளாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை தெளிவுபடுத்துகிறது. புவி வெப்பமடைதலுக்கு எது காரணம்? முதலாளித்துவ நாடுகளின் வாகனப்புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு, சுற்றுச்சூழல் மாசு என அடுக்கிக்கொண்டே செல்லலாம். இந்த ‘எல்நினோ’ வை உருவாக்கியவா்கள் மேற்குலக வல்லரசு நாடுகள்; உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒரு கடல் வெப்பமடைந்தால் ஒன்றும் தொடர்பில்லாத நம் தலையில் விடிகிறது. உலக வல்லரசுகளின் அயோக்கியத் தனமான பேராசை மழை, வெள்ளமாய் அடித்து நம் தலை வரை தண்ணீரால் மூழ்கடிக்கிறது.

பருவநிலை மாற்றத்தால் இயற்கைப் பேரிடரை உண்டு பண்ணும் இந்த மனிதர்களால், பருவநிலைக்காப்பு மாநாடு (பாரிசில் 12.12.2015) நடத்த முடிகிறது எனில் இதனினும் முரண் நகை உண்டா? செயற்கைப் பேரிடரை உண்டாக்கிவிட்டு, பழியை இயற்கைமீது போட முடிகிறது இம்மூடா்களால். இயற்கைப் பேரிடரை உண்டுபண்ணியவர்களும், அதனை எதிர்கொண்ட முறையால் செயற்கைப் பேரழிவுகளை நிகழ்த்திய உள்ளூர் ஆட்சியளர்களும் என கை கோர்த்து தமிழக மக்களின் வாழ்வைக் குலைத்து வீசியெறிந்தார்கள். இவர்கள் மனிதரேயில்லாத மனிதர்கள்.

பாரிசில் நடைபெற்ற பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் 195 நாடுகள் கையெழுத்திட்ட பருவநிலைக்கூட்டு ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது; புவி வெப்பமயமாதல் அளவினை ‘2’ டிகிரி செல்சியலில் இருந்து 1.5 அளவுக்கு குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது: வளா்ந்த நாடுகள் என்று சொல்லப்பட்ட வல்லரசுகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கரிய மிலவாயு வெளிப்பாட்டுக்குக் காரணமான நிலக்கரி, எரிவாயு, மற்றும் பெட்ரோலியப் பொருட்களைப் வல்லரசு நாடுகள் அபரிதமாகப் பயன்படுத்துகின்றன. 1850-லிருந்து தொழில் துறையில் பெருமளவில் ஈடுபட்டுவருபவை முதலாளிய நாடுகள் (தம்மை வல்லரசு என இவை ஒப்புக் கொள்ளவதில்லை. வளா்ந்த நாடுகள் என்று கூறவேண்டுமாம் ).   தொழில்வளா்ச்சி என்ற பெயரில் உலகின் பல மூலைகளிலும் புவி வெப்பமயமாதல் மேலோங்கி பருவநிலைப் பதட்டத்தை உண்டுபண்ணி மக்களைக் கூட்டுப்பலி ஆக்குகிறார்கள். பலி எடுப்புக்கு, தம்மாலான காரியத்தை செய்து துணையாகியிருக்கிறார்கள் தமிழக ஆட்சியாளா்கள். சென்னை உட்பட 5 மாவட்டங்கள் மூழ்கியதற்கு அகிலஉலக அவா்களும் உள்ளுர் அளவிலான இவர்களும் பொறுப்பு. கண்ணுக்குத் தெரியாத பேரிடரை நம் வீட்டுக்குள் அழைத்து வந்த வல்லரசியமும், கண்ணெதிரில் செயற்கைப் பேரிடராக மாற்றிய உள்ளூர் ஆட்சியாளர்களும் இவருவரும் தான் நம் வாழ்வுக்குள் வெள்ளத்தை அழைத்து வந்தவர்கள்.

வெள்ளம் வடிந்தும் வேதனை வடியா மக்கள்; ஆறு, குளம், ஏரிகளின் ஆவிகள் உலவி விட்டுப்போன வீடுகளுக்குள், மக்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள். பூமி ஈரம் உலா்ந்த போதும், இதயத்தில் அனல் உலராது தொடா்ந்து எழுகிறது. எத்தனை தலைமுறைக்கு இந்த அனல்தகிப்பு நீடிக்குமென ஒருவராலும் சொல்லிவிட முடியாது. சுனாமியின் வடுக்கள் கடலோர மக்களின் மனசில் இன்னும் பச்சைக்காயமாய் நின்று கொண்டிருக்கிறது போல், நீரில் மூழ்கிய வாழ்விலிருந்து மீண்டுஎழ ஒரு தலைமுறையோ, இரு தலைமுறையோ எத்தனை காலம் எடுக்குமெனச் சொல்ல முடியாது.


அத்தனை பேரழிவுக்கும் ‘ஆட்சி’ நடத்தும் அம்மா காரணம் என்கிறார்கள் (இங்கு அம்மா என்று குறிப்பிடுமிடத்தில் எல்லாம் அய்யாவையும் பொருத்திக் கொள்ளலாம்). அம்மாவின் தலைக்குமேல் எவரும் இல்லை: எவரும் வாராத வெற்றிடத்தை அவர் பத்திரமாகப் பேணிப்பாதுகாது வருகிறார். தனக்கு மேல் ஒருவரிருந்தால் தலைவணங்க வேண்டும். அம்மா எவருக்கும் தலைவணங்குபவா் இல்லை. அம்மாவுக்குக் கீழே அடிமைகள்மட்டும் நிறைந்திருக்கிறார்கள். அவா்கள் கும்பிட்டபடியே இருக்கிறார்கள். “என்ன செய்வது, கும்பிடும் கைகள் ஒரே கைகளாகத் தான் இருக்கின்றன. கால்கள் தான் மாறிக்கொண்டே இருக்கின்றன” என்ற சொன்ன தமிழறிஞர் போன்ற அறிவாளிகளின் இனமல்ல இவா்கள். ”கால்கள் ஒரே கால்கள்; கைகள் ஒரே கைகள்” என்ற குருட்டு முழக்கத்துக்கு உரித்தானவர்கள். சுயசிந்திப்பு அற்ற சேவகம் இவா்களின் தொழில்; இன்றைய அரசியலின் குணவாகு இது.

மக்களுக்குள் இக்குணவாகை ஏற்றிவிட அம்மா கட்சியும் அய்யா கட்சியும் முயன்று கொண்டிருந்தார்கள்; ஓரளவு வெற்றியும் பெற்றார்கள்.

வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 24-ஆம் நாள் தொடங்கியது. அப்போது ஜெயலலிதா கொடநாடு மாளிகையிலிருந்தார். அது மாளிகையில்லையாம்; அம்மாவின் முகாம் இல்லம் (camp office). அப்போதிருந்து வானிலை ஆய்வு மையம் நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெருமழை பெய்யும் என தொடர்ந்து அலறத் தொடங்கிற்று. ஆய்வு மையம் சொன்னது போல் அக்டோபா் 28-ல் தொடங்கி நவம்பா் 4 வரை கனமழை கொட்டியது. நான்கு உயிர்ப்பலி நடந்திருந்தது. கொடநாட்டில் அசைவில்லை.

“தென் மேற்கு வங்கக் கடலில் புதியமேலடுக்குச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்” - மீண்டும் நவம்பா் 4 ஆம் தேதி வானிலைமையம் அலறியது. கொடநாடு எழுந்திருக்கவில்லை. அப்போதே கடலூா் நீரில் தத்தளித்தது, சென்னை, திருவள்ளுரில் பாதிப் பகுதிகள் தீவாகிப் போயிருந்தன.

நவம்பா் 8 ஆம் தேதி கொட்டும் மழையில் கொடநாட்டிலிருந்து திரும்புகிறார் ஜெயலலிதா; போரில் எதிரி மன்னனை வீழ்த்திவிட்டுவரும் பேரரசனுக்கு அளிக்கும் வரவேற்பினைப் போல் பேரரசியின் வருதலுக்கு அ.தி.மு.க.வினா் குடைபிடித்து வரவேற்கிறார்கள். அப்போது பாதி மூழ்கி, பாதிதான் தெரிந்த சென்னையில் மக்களின் முகம் அச்சத்தில் இறுக்கமடைந்திருந்தது. அவர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு தொற்றிக் கிடந்தது “அம்மா வந்துவிட்டார்; இனி எல்லாம் நடக்கும்”

நவம்பா் 8, 9, 12, 15, 23 -ம் தேதிகளில் சென்னையில் பெருமழை அடிக்கிறது. வானிலை ஆய்வுமையம் மீண்டும் மீண்டும் அலறுகிறது. நவம்பா் 27, 28, 30 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போயஸ் கார்டனும் கொடநாடு போலவே ஆகிறது. கொடநாட்டிலிருந்து இறங்கியபோது “நம்முடைய மன நிம்மதியைக் கெடுத்துவிட்டார்களே” என்பதுபோல் சமவெளியை ஏறெடுத்துப் பார்த்த அதே பார்வை: அதே மன நிலை.

ரோம் நகரம் தீப்பற்றி எரிகிறபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது. இனி இதை ”மக்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா என்ற பேரரசி கொட நாடு பங்களாவில் இருந்தது போல்” என மாற்றிச் சொல்லலாம்.

டிசம்பா் முதல்நாள் கொட்டிய பெருமழையில் ஏரிகள் திறந்து கொண்டன. சென்னைத் தமிழன் ஒவ்வொருவரின் தலைமீதும் ஏரிகளும் ஆறுகளும் ஓடின. பேய் பூதம், பிசாசு அத்தனையும் சேர வந்தால் மக்கள் எப்படி மிரண்டு ஓடுவார்களோ அப்படி ஈரக்குலையைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தனர் மக்கள். ஏரிகள் ஏன் திறக்கப்பட்டன? திறந்தாலும் தன்வழியே போகாமல் ஏன் தலைநகா் மேல் நடந்து போனது? கேள்விக்குப் பதில் சொல்லவேண்டியது அம்மா மட்டுமல்ல, முன்னால் ஆட்சி செய்த அய்யாவும் தான்!

எல்லா இழப்புகளையும் ஈடுசெய்துவிடலாம். உயிரிழப்புகளை எதைக்கொண்டு ஈடு செய்வது? பணமோ, பொருளோ எது கொடுத்தும் மீளப் பெற் முடியாத அளவில் ஏறக்குறைய 470 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. மியாட் மருத்துவமனை, போரூர்ச் சாலையிலுள்ள கணிணித் துறைகளின் கூடமான டி.எல்.எப் கட்டிட வளாகம் போன்றவற்றின் மர்மங்கள் வெளிப்படுகையில் மரண எண்ணிக்கை கூடுதலாகலாம்.

2

முதல்வர் வேட்பாளர்கள் நிறையப்பேர் களத்தில் நிற்கிறார்கள். தேர்தல், வாக்களிப்பு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ற முதலாளியப் பொறிமுறைகள் மூலம் அனைத்துத் துயரங்களையும் அழித்துவிடமுடியுமென தமக்கே வாக்களிக்குமாறு இவர்கள் கோருகிறார்கள். அம்மாவோ, அய்யாவோ, அண்ணன்களோ, தம்பிகளோ இல்லாமல் தமிழ்நாட்டை இயக்க முடியாதா? அரசியல்கட்சிகளே இல்லாமல் ஒரு நாடு இயங்க முடியாதா?மக்களுக்கான உண்மையான மாற்றுப் பொறிமுறை பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் நம்முன் வந்துள்ளது.

ஐயா பழ.நெடுமாறன் ”ஊழிப்பேரழிவு” என இதைக் குறிப்பிட்டு. பேரழிவு விளைவித்த துயரங்களிலிருந்து மீள என்னென்ன செயல்முறைகள் தேவை என 10 அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளார் (தினமணி 18-12-2015). அவரது துயர் துடைப்புப் பரிந்துரைகள் நியாயமானவை; அவற்றை செயலாக்கத்துக்கு எடுத்துச் செல்ல அடிப்படையானவை இரண்டு. முதலாவது ; நேர்மை, சனநாயக உணர்வு (இந்த வாசனையே இல்லாத அரசில்வாதிகள் நம் முந்தைய, இன்றைய ஆட்சியாளர்கள்). இரண்டாவது; முதலாளியக் கூட்டத்துக்குச் சாதகமாக உள்ள சனநாயகமற்ற ஆட்சிக் கட்டமைப்பை மாற்றத்துக்கு உள்ளாக்குதல்.

நம் கைவசமுள்ள அரசு நிர்வாகத்தை நாம் (மக்கள்) இயக்கவில்லை. மக்கள் இயக்குவது போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள் மேற்குலக முதலாளிய அரசியலாளர்கள். அவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இந்த அரசு இயந்திரத்தை வைத்துகொண்டு எவ்வித மாற்றத்தையும் வழங்கிட முடியாது. ”ஏற்கனவே தயாராக இருக்கிற இந்த (முதலாளிய) அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு எதையும் செய்ய இயலாது” என லெனின் முன்மொழிந்துள்ளார்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்றவை மக்கள் நலன் கருதிய தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன. இவை தீர்மானங்கள் நிறைவேற்று சபை (Resolutions body); இச்சபைகளுக்கோ, இதன் பிரதிநிதிகளுக்கோ தாம் எடுத்த முடிவுகளின் மேல் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. தீர்மானதைச் செயலாக்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. செயலாக்கும் அதிகாரம் தனியாக நிர்வாக அமைப்பிடம் உள்ளது (executive body). அது அதிகார வர்க்கத்தின் (bureaucracy) கையிலுள்ளது. இதுதான் உண்மையாக ஆட்சிசெய்யும் அமைப்பு (executive body - That is called Government). நிரந்தரமாக அரசை நடதுபவர்கள் இவர்கள்தாம். இந்த அதிகார வர்க்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை; இவர்களைக் கட்டுப்படுத்தும் திராணி - ஒன்றினைத் தீர்மானித்த பின், அதைச் செயல்வடிவம் கொடுக்கும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கிடையாது. பேருக்கு மட்டுமே ஆட்சியாளர்கள். ஆட்சி செய்வது, நடைமுறைக்கு எடுத்துப் போவது முழுக்க அதிகார வர்க்கம்.

தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை மாற்றிக் காட்டும் வல்லமையை மக்களுக்கு வழங்கிய ஜனநாயகம், தேர்ந்தெடுக்கப்படாத, அதிகாரக் கூட்டத்தை மாற்றும் வல்லமையை (அதிகாரத்தை) வழங்கிடவில்லை. இது ஒருபக்க சனநாயகமே. சனநாயகத்தின் மற்றொரு பக்கமான மக்கள் அதிகாரம் (peoples power) பற்றிப் பேசப்படவில்லை. மக்களாட்சித் தத்துவத்தை வகுத்த போது அது மக்களுக்கான சனநாயகம்போல தோற்றமளிக்கவேண்டும். ஆனால் உண்மையான சனநாயகமாக இருக்கக் கூடாது. மேற்கத்திய முதலாளியத்தின் நுட்பமான இராசதந்திரம் இதுதான். இதுதான் அய்ரோப்பிய வகையிலான முதலாளிய சனநாயகம்.

மக்கள் இப்போது சுயமாகச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சாதாரணர்களை சிந்திக்க வைக்க ஒரு பிரளயம் அவசியப்படும் போல. சாதாரணமக்களின் சிந்திப்பும் ஒரு பிரளயமே!

தம் வாழ்வு சீரழிந்து போனதற்கு ஆட்சிபீடத்திலிருந்து மாற்றி மாற்றி ஆண்ட இரு கழகங்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளாய் வருகிற அனைத்துக் கயவாளிகளும்தான் என உணா்தல் பிறந்திருக்கிறது. இந்த உணர்தல் வேறுஎவர் என்ற யோசிப்புக்கு அவர்களைக் கொண்டுபோய் நிறுத்தியுள்ளதே தவிர, மாற்று ஆட்சிமுறை என்ன என்ற சிந்திப்புப் புள்ளியில் போய் நிறுத்தவில்லை. சிந்தனையாளர்களாகிய நாம்தாம் அவர்களுக்கு மாற்றுப் பொறிமுறை பற்றிச் சொல்லித்தரவில்லை. நாம் நம் கடமையுணரவில்லை.

மக்கள் தம்மைத்தாமே ஆண்டு கொண்டு, பயன்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்த கிராமிய சபை முறை முன்னர் இருந்தது. மன்னராட்சிக் காலத்திலும் செயல்பட்டது. அதன்பின்னர் மக்களாட்சி என்ற பெயரில் மக்களின் அதிகாரத்தைப் பறித்துக் கொள்கிற இந்த மேலைநாட்டுப் பாராளுமன்ற ஆட்சிமுறை திணிக்கப்பட்டது.

மக்கள் சமுதாயதின் மீது மேல் அக்கறை கொண்ட ஒரு ஞானி இருந்திருந்தால், இது நம்முடையது மாதிரி தெரியவில்லையே என்று வேரிலிருந்து யோசித்திருப்பான். சமூகத்தின் மனச்சாட்சியாய் இயங்குகிற எவரும் ஒரு ஞானியாகத்தான் இருக்க முடியும். சுயசிந்திப்பு உந்தித்தள்ள மனச்சாட்சியுடன் செயலாற்றும் எவரும் ஞானி தான். சமூக அறிவியல், சமூக ஞானம் முகிழ்த்துள்ள இக்காலச் சூழலில் - நம்மை நாம் ஆளுவது எவ்வாறு என்ற மேல்சிந்திப்பு அற்றவர்களாய் ஒரு 300 ஆண்டுகள் கடந்திருக்கிறோம்.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரிசையில் நின்று ஓட்டுப்போடும் இயந்திரங்களாக மக்களைக் கருதுகிறது இந்தப் பாராளுமன்றமுறை. வாக்களித்தபின், ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பு எள்முனையும் இல்லை. மக்கள் பிரதிநிதிகள் செயல்படுத்துமிடத்தில் இல்லை: அதிகார வா்க்கம் என்கிற மக்களுடன் தொடா்பற்ற, மக்களின் எதிரிக் கூட்டம் அவ்விடத்தில் அமா்ந்துள்ளது.

காக்கைச் சிறகினிலே “டிசம்பா் 2015 இதழில் இரா.எட்வின் இயற்கைக்கு சபிக்கத்தெரியாது” என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். "சிதம்பரம் பகுதியிலுள்ள வீசூா், மேட்டுப்பாளையம் கிராமங்கள் காட்டாற்றில், ஓடைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 2010-லும் மக்களின் வாழ்வு அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. 2015-ஆம் ஆண்டிலும் அதுவே திரும்ப நிகழ்ந்திருக்கின்றது. என்றால் 2010 ஆண்டின் பேரிடரிலிருந்து ஊராட்சி நிர்வாகமும் அரசு நிர்வாகமும் ஏதும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவுப்படுத்தப் பெற்றிருக்கிறது” என்று எழுதுகிறார்; ”மக்கள் பங்கேற்புடன், வெள்ளம் பேரிடரை எதிர் கொண்டிருக்க முடியும்” என அவர் அதை பூட்டுப்பூட்டாக திறந்து காட்டுவார். மக்கள் அதிகாரத்தை நிறுவுவது எவ்வாறு என்ற புள்ளியில் நின்று பேசப்படவில்லையாயினும், அவர் விளக்கிக் காட்டும் நிகழ்வுகளின் மூலம் நாம் பெறுவது அக்கருத்துத் தான்.

”மாநிலத்திலுள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்” என 2015 ஆகஸ்டு ஆறாம் தேதியன்று பொதுநல மனு ஒன்றின் மீது மதுரை உயர்நீதிமன்ற அமர்வாயம் தீர்ப்பளித்திருந்தது. இதனை அரசாங்கம் (அதிகார வர்க்கம்) பொருட்படுத்தியிருந்தால், தற்போது வெள்ளத்துயரம் ஏற்பட்டிருக்காது. ஏறக்குறைய 10 ஆயிரம் நீர்நிலைகள் முழுமையாய் பாதுக்காக்கப்படாத நிலையிலிருந்தன். இதனை அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர்; நீர்நிலைகளை புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் பலகோடி ரூபாய்கள் ஏப்பமிடப்பட்டதைப் பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அமர்வாயத்துக்காக தீர்ப்பு எழுதிய நீதிபதி ராமசுப்பிரமணியன் ”மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களைப் பார்க்கும்போது … மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பணம் தண்ணீரை விட வேகமாக ஓடியிருக்கிறது. அதிகாரிகள் தற்போதைய நிலை குறித்து தாக்கல் செய்துள்ள அறிக்கையைப் பரிசீலித்தோமானால், அத்தொகையெல்லாம் உண்மையிலேயே குறிப்பிடப்பட்ட திட்டங்களுக்கு உயிர்த்துடிப்புடன் செலவிடப்பட்டிருந்தால், மாநில முழுமையும் பசுமைப் புரட்சி ஏற்பட்டிருக்கும். ஆனால் எங்கே எந்த அளவுக்கு நீரில் மட்டுமல்ல, இதர நிலையிலும், அதாவது பணத்திலும் கசிவு ஏற்பட்டிருக்குமென்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தோழர் எட்வின் கட்டுரையையும், நீதிபதியின் தீர்ப்பையும் கூட்டிவைத்துப் பார்த்தால், அதிகாரவர்க்கம் இப்போது அல்ல, எப்போதும் மக்களுக்காக இருந்ததில்லை என்னும் உண்மை புலப்படும்.

வெள்ளையா் வெளியேறியபின் ஏறக்குறைய 20 முதல் 30 தடவைகள் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்துள்ளன. 65 ஆண்டுகளின் அனுபவங்கள் மூலம் பெற்ற படிப்பினைகள் எவை? வெள்ளப் பேரிடரை நம் வீடுகளுக்குள் அழைத்து வந்ததற்கு “அம்மா” தான் காரணம் என்கிற சினம் மக்களிடம் உருவாகியுள்ளது; அம்மா மேல் எழுந்த கோபத்தால் அய்யாவைக் கொண்டுவருவார்கள்; அய்யா இல்லாவிட்டால், இன்னொரு அண்ணன், அல்லது தம்பிக்கு வாக்களித்து வெஞ்சினத்தை தீா்த்துக்கொள்வார்கள். பிரச்சினைகள் ஒருபோதும் தீா்வதில்லை. நிகழ்ந்த பேரழிவிலிருந்து மீள முயல்வது உடனடித் தேவை; வகைதொகையில்லாமல் தொயந்து மேலெழ முடியாதபடி அமுக்கும் வாழ்வின் துயர வெள்ளத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க மாற்று அரசுப் பொறிமுறையைப் பற்றிச் சிந்திப்பதே சரியாக அமையும். மாற்று அரசமைப்பு முதலாளிய ஒருபக்க சனநாயகமாயிருக்காது; அது மக்களுக்கான முழுமையான சனநாயகமாக இருக்கும்.

- காக்கை சிறகினிலே (ஜனவரி 2016)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்