இவர்கள் யார்?

வெளிவட்டத்திலிருக்கும் துறைசார்ந்த வல்லுநர்களை, அரசின் நிர்வாக உள்வட்டத்துக்குள் கொண்டுவருதல் மூலம், மனிதவள ஆற்றலை முழுப் பயன்பாட்டுக்கு இட்டுச்செல்லும் நிர்வாகத் திறன் உண்டாக இயலும் என நடுவணரசு கருதுகிறது. அத்தகைய செயல்திறன் உடைய ஆற்றலாளர்களை கண்டறிதற்கான அரசிதழ் ஆணை வெளியாகி உள்ளது.

நிலஉடமை அரசியல் இருளில் மூழ்கியிருந்த உலகை மக்கள் எழுச்சியென்னும் ஒளிக்கதிரைத் தரிசிக்கச் செய்த நிகழ்வு பிரெஞ்சுப் புரட்சி: தொடர்ந்து உலகில் மக்கள் பிரதிநிதித்துவம் என்னும் சனநாயகத் தொட்டிலை முதலில் ஆட்டியது பிரிட்டன்.

பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து நிறையப் பாடங்களைக் கற்றுக்கொண்டதன் வழியாக தனக்கான பிரதிநிதித்துவ சனநாயகத்தினை வகுத்துக் கொண்டனர் பிரிட்டன் முதலாளிகள். முதலாளிய வர்க்கம் கற்றதும் பெற்றதும் செயற்படுத்தியதும் பிரஞ்சுப் புரட்சியின் நேர்மறைப் பொருளிலிருந்து அல்ல; எதிர்மறைப் பாடங்கள் கற்றுக் கொண்டது. “கடந்தகாலத் தவறுகளிலிருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ளாதவர்கள் மீண்டும் அதே தவறுகளை இழைக்க விதிக்கப்படுவார்கள்” என்ற வாசகம், மக்கள் விடுதலைக்காக மட்டுமல்ல, முதலாளிய வர்க்கங்களின் நிலைப்புக்காகச் சிந்திப்போரும் கற்றுக்கொண்டு செயற்பாட்டுக்குள் நுழைய இயலும் என்பதை வெளிப்படுத்துகிறது.

பிரிட்டன் முதலாளிய வர்க்கம் கற்றுக் கொண்ட முதல் பாடம் - புரட்சி வழியாக தமக்கான அதிகார அமைப்பினை உருவாக்கிக் கொண்டிருந்த தொழிலாளிகள், அதுபோல தங்களையும் தூக்கியெறிய நீண்டகாலம் எடுக்காது: எதிர்கொள்ள வேண்டிய காலம் அண்மித்துள்ளது; மக்கள் தமக்கான அமைப்பினை உருவாக்கிக் கொள்கிறபோது, ஏற்கனவே இயங்கிவரும் தங்களுக்கான அரசு இயந்திரம் நொறுக்கப்பட்டுவிடும் என்று அஞ்சினர். இந்த அச்சம் தேர்தல் சனநாயகம் என்னும் மாற்றுத் திட்டமாக உருவெடுக்கிறது.தமக்கான அரசு இயந்திரத்தை (அதிகார அலகு) அப்படியே நிலைப்படுத்திக்கொண்டு, தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மூலம் ஆட்சி நடத்துவது என்னும் ஒரு முறையை உருவாக்கினர். இந்த தோற்றம்தான் பிரதிநிதித்துவ சனநாயக முறை, அதற்கான நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிமன்றம் போன்ற கட்டமைப்புகள்!.

ஆனால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களிடம் செயற்படுத்தும் அதிகாரம் தரப்படவில்லை. செயற்படுத்தும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்படாத நிரந்தரமான அதிகார உறுப்பின் கைகளில் தங்கியுள்ளது. தமக்கான செயல்பாட்டு அதிகார அமைப்பை அப்படியே தக்கவைத்துக் கொண்டு, பேருக்கு மக்கள் பிரதிந்திகள் கையில் அதிகாரம் உள்ளது போல் காட்டிய ஒரு தந்திரம். இவ்வாறு தனித்தனியாகப் பிரித்த ஒன்றுதான் தனக்காகவும், பின்னர் உலகுக்கும் பிரிட்டன் வடிவமைத்துத் தந்த சனநாயகம். துளியளவு மாற்றமும் யோசிக்கப்படாமல் உலக அளவில் இந்த அதிகார வர்க்க சனநாயகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையான ஆட்சியாளர்கள் இவர்களே.

தேர்ந்தெடுக்கப்படும் புதிய ஆட்சி அமைந்துவிட்டால், ஆட்சியாளர்கள் கையில் எல்லா அதிகாரமும் வந்துவிடுவதாக மக்கள் எண்ணுகிறார்கள். தேர்வான பிரதிநிதிகளும் மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள். மக்களின் நம்பிக்கைக்கும் பிரதிநிதிகளின் மகிழ்ச்சிக்கும் எதிரானது உண்மை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிலையான நிர்வாக அதிகாரவர்க்கம் ஆட்சியாளர்களாகச் செயற்படுகிறது.


உதாரணமாய் ஒரு நிகழ்வைக் காண்போம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை! இத்தனை களப்பலிகளுக்குப் பின்னும் ஆலை மூடப்பட்ட பின்னரும் வேதாந்தா நிறுவனமும் ஆலைநிர்வாகமும் என்ன வகுக்கும் குயுக்திகள் என்ன, தங்களிடம் பணியாற்றிய ஆலைப் பணியாளர்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள், அவர்களை முன்னிறுத்தி எவ்வகை அரசியல் செய்யவிருக்கிறார்கள், எந்த வகையிலெல்லாம் தாயம் உருட்டவிருக்கிறார்கள் என்பது போன்றவை காவல்துறையால் ஒற்றறியப் பட்டிருக்க வேண்டும். ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சார்பாய் முன்னர் போலவே போராட்டத்துக்குப் பின்னரும் போராளிகளும் இணைந்த மக்களும் ஒற்றறியப் படுகிறார்கள்: ஒடுக்கப்படுகிறார்கள்.வேதாந்த நிறுவன உரிமையாளர் அனில் அகர்வால், அந்நிறுவனத்தைச் சார்ந்தவர்கள், துணைநின்றவர்கள்மீது கைதுகளும் அச்சுறுத்தல்களும் நிகழ்த்தப்படுதற்குப் பதிலாக, மக்கள் மனசை எதிரொலித்தவர்கள் மீது கைதுகளும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.காவல்துறை என்னும் நேரடி ஒடுக்குமுறைக் கருவி மட்டுமல்ல, பின்புலத் துறைகளென்னும் நிரந்தர அதிகார அமைப்புகளும் முதலாளியத்துக்கு முட்டுக்கொடுக்கும் பணிகளை ஆற்றுகின்றன. மிகமிகச் சுதந்திரமான இந்தச் செயற்படும் அதிகாரமே, பிரிட்டன் முதலாளியம் அளித்த சனநாயகக் கொடை. இந்தச் சனநாயகத்திற்கு கை தூக்குவதும் கைகொடுப்பதுமான பணி செய்கிறவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் ஆகிறார்கள்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல், ஒரு நேர்காணலில் ஸ்டெர்லைட் ஆலை பற்றி ”ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடிப் போராட்டம் மக்களுக்கு ஒரு விஷயத்தை உணர்த்தியிருக்கு; 'ஆள்பவர்கள் அரசியல்வாதிகள்’னு நினைச்சுக்கிட்டிருந்த மக்களுக்கு, ‘இல்லை... ஆள்பவர்கள் முதலாளிகள்’னு புரிய வைச்சிருக்கு” என்று குறிப்பிடுகிறார். மக்கள் முட்டாள்கள் கிடையாது என்று குறிப்பிடுகிறார் (ஆனந்த விகடன் 13-06-2018). அதையும் தாண்டி மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை இருக்கிறது. நம்மை ஆள்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல; முதலாளிகளின் ஏவலாட்களான அதிகாரவர்க்கம். அது தன் முதலாளிகளின் உள்மன நடப்பு அறிந்து, முதலாளிகளின் நினைப்பு எதுவோ அதுவாகவே செயல் படும் என்பதுதான் அந்த உண்மை.

நாடாளுமன்றம், சட்டமன்றம், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி போன்றவை தீர்மானம் நிறைவேற்று சபைகள் (RESOLUTIONS BODY): அரசு நிர்வாக அதிகார வர்க்கம் என்பது செயலாற்றும் (EXECUTIVE BODY) அமைப்பு. எத்தனை தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படினும், அதைச் செயற்படுத்தும் அதிகார அலகாக அதிகாரிகள் குழு இருந்து வருகிறது. துளியளவு நன்மையேனும் தனக்குக் கிட்டுமென்றால் மட்டுமே அதிகாரவர்க்கம் ஓரடியாவது முன்வைக்கும். எத்தனையோ நல்லவர்களான ஆட்சியாளர்கள் அந்தப் பெயரை மட்டும் தக்கவைத்துக் கொண்டு - மக்களுக்கான எதையும் சாதிக்க முடியாமல் ஆட்சியைக் கைவிட்டுப் போனதற்கு அடிப்படை இது. சட்டப்பேரவை போன்ற மன்றங்களில் தீர்மானமாக நிறைவேற்றுவது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளது வேலை; அத்திட்டங்களை வகுத்துத் தருவதும், திட்டங்களைச் செயலாக்குவதும் அதிகாரவர்க்கம். தன்னை முதலாளிகள் எதற்காக உருவாக்கினார்களோ அதற்கு இம்மியும் வழுவாத ஏவலாளாக நிலைநிறுத்திக் கொண்ட அதிகாரவர்க்கக் குழு மக்களுக்கான திட்டங்களை எப்படித் தீட்டும்? எவ்வாறு செயல்பாட்டுக்குக் கொண்டு செல்லும்?

இந்நிலையில் அரசுத்துறைகளில் ஆற்றல்பெருக்கும் புதுவரவாக, நீண்டகால நன்மைபயக்கும் திட்டங்களை வடிவமைக்கும் புதிய சக்திகளை உள்ளிழுக்கும் நடுவணரசின் முயற்சியைக் காண்போம்; வேளாண்மை சந்தித்துவரும் சவால்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், சிறுதொழிலாயினும் பெருந்தொழிலாயினும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புதிய வேலைவாய்ப்புகள், கல்வி, மருத்துவம் போன்ற பலமுனைகளில் அரசுத்துறைகளுக்கு வெளியில் இருந்துவருகிற நேர்மையான செயல்திறன் மிக்க அனுபவமிக்க செயலாளிகள் ஏற்கனவே இயங்கிவரும் இந்த அரசுஇயந்திரத்தை தன்வயமாக்கிக் கொள்வார்களா? நிச்சயமக தன்வயமாக்கிக் கொள்வார்கள். அதனுடைய முதலாளிய வர்க்க சேவை குணத்தை துளியும் மாற்றாமல் தங்கள் கொள்கை சார்ந்த செயல்பாட்டுக்கான வடிகாலாக மாற்றுவார்கள்.

இதையொரு பரீட்சார்த்த முயற்சியாகக் கொண்டாலும் அனுபவமிக்க செயலாளிகளைத் தெரிவுசெய்யப்போவது ஆட்சியாளர்கள். இவர்கள் யாரைத் தேடுவார்கள்? வேளாண்மை என்றால் இயற்கையின் கொடைகளை மனிதவள மேம்பாட்டுக்குப் பயனுடைத்ததாக ஆக்கும் வேளாண்மையா? இயற்கையைச் சிதைக்கும் வணிகமய வேளாண்மையா? ஒரு நம்மாழ்வாரையா, பாமயனையா அல்லது விவசாயி நலன்களைக் காக்கப் போராடும் தன்னலமற்ற போராளிகளையா? கல்வி என்றால் எந்தச் செயலாளிகளை இவர்கள் உள் கொண்டுவரப் போகிறார்கள்? மனிதனை உருவாக்கும் கல்வியா? உலகமயத்துக்கு ஒத்திசைவான கல்வியா? அதுபோலவே மருத்துவமும்: இவர்கள் போன்ற திறனாளர்கள் மக்கள் நலனுக்காக வரும் புது ஆற்றல்களா? அவர்கள் ஏற்கனவே எக்கருத்தியலில் பயிற்சி பெற்றனர்? அதன் பயன்களும் மனிதனை, மனிதசமுதாயத்தை வளரச்செய்வதற்கா, ஆட்சியிலிருப்போர் சுயநல ஆதாயங்கள் தேடிக்கொள்ளவா போன்றவை புது ஆற்றல்களின் உள் வரவில் கேள்விகளாகின்றன.

இன்று மனிதசமுதாயத்தின் வாழ்வியல் ஆதாரத் தேவைகளை, அறிவுபூர்வ அவசியத்தை நிறைவேற்றித் தருபவர்களாக இவர்கள் இருப்பார்களா? மக்களுக்காக, மக்களிடம் பணியாற்றி உருவான தொண்டர்களா இவர்கள்?

நடப்பு ஆட்சியில் யார் இருக்கிறார்களோ, அவர்களின் கருத்தியலாளர்களாக இயங்குவார்கள். அப்பேர்ப்பட்ட கொள்கை வகுப்பாளர்களாக மட்டுமே இவர்கள் தெர்வு செய்யப்பட்டு உட்செலுத்தப்படுவார்கள். இதன் காரணமாய் நிர்வாக அலகுகளில் பணியாற்றிவருகிற இந்திய ஆட்சிப்பணியாளர்கள் (ஐ.ஏ.எஸ்) சுயத்தன்மை இழப்பார்கள். அவர்களிடம் தாங்களே விற்பன்னர்கள் என்ற தன்மோகம் (ego) உடைபடலாம்: ஆனால் இந்திய ஆட்சிப்பணியாளருக்குப் பதிலாக, இன்றைய ஆட்சியாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் ஆட்சிப்பணியாளர்கள் உண்டாவார்கள்.

வெளிப்படையாகச் சொன்னால் ஒரு முகம் மட்டுமே இச்செயல்பாட்டுக்கு உண்டு. உலகமயம் விரித்துவரும் தனியார் மயத்துக்கு கொள்கைசார் ஆதரவுக் கரங்களை உருவாக்குவது; எவ்வாறு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திலிருந்து இன்றைய ஆட்சியாளர்கள் உருவானார்களோ, அதே சித்தாதந்தத்திலிருந்து ஒரு அழுத்தக்குழுவை (pressure group) உருவாக்க முயலுவது. ஆட்சியாளர்கள் தமக்கு வேண்டப்பட்ட கொள்கையாளர்களை செயற்பாட்டாளர்களாக ஆக்கும் முண்டுதலாகவே இது அமையும்.

- காக்கை சிறகினிலே (ஜூலை 2018)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

கீழத்தெரான் – துரை.குணா கவிதைகள்

வட்டார இலக்கியம்

பலியாடுகள்