படைப்பாளியும் படைப்பும்


பா.செயப்பிரகாசம் அவர்களின் கதைகளை மதிப்பிட்டு எழுதும் வாய்ப்பு இருபதாண்டுகளுக்கு முன்பு (2000'ல்) எனக்குக் கிடைத்தது. பல முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புலகங்கள் குறித்துக் கலைஞன் பதிப்பகம் ஒரு வரிசையை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி நான் பா.செ படைப்புலகம் எழுதினேன் - களந்தை பீர் முகம்மது.

கரிசல் காட்டுக்காரரான பா.செயப்பிரகாசம் தனது முதல் கதையை எழுத, மதுரை மண்ணே கை நீட்டி அழைத்துள்ளது. பள்ளிப் படிப்பில் மனதில் ஆழமாய்த் தைத்த சம்பவம் ஒன்றின் மூலம் ‘குற்றம்’ என்ற முதல் கதை 1971-ல் வெளியானது. ‘தாமரை’ தான் முதல் கதையின் மேடை. அன்று துவங்கிய இலக்கியப் பயணம் இடையிலே சிறிது தடைப்பட்டு நின்று, மீண்டும் பழைய பிரவாகமாகவே பெருகிவிட்டது. தாமரை, மனஓசை இதழ்களில் இவரின் அதிகமான கதைகள் வெளியாகி, பரபரப்பையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளன. பாமரர்களின் சார்பான (தொய்வுறாத) படைப்பாளியான பா.செயப்பிரகாசமோ தமிழ்நாடு அரசின் செய்தித் துறையில் மிகமிக உயர்ந்த பதவி வரை முன்னேறிச் சென்று தன் தகுதிகளை, ஆளுமையை நிருபித்துக் கொண்டவர். ஆனால் இலக்கிய உலகில் இவர் அறியப்பட்டதெல்லாம் நாளது வரை ஒரு படைப்பாளியாகத் தானே தவிர, அதிகாரியாக அல்ல. அந்த அதிகாரச் சுவடுகளால் தனது இலக்கிய உலகைக் களங்கப்படுத்திக் கொள்ளாமல், படைப்புகளின் வழியே நின்று உயர்ந்தவர். ஓர் அரசு அலுவலகத்தினுள் நுழையும் தென்றலும் கூட அதிகாரச் சூடு பெற்ற புயலாய் வெளிவரும். அந்த மயக்கத்தை முறியடித்து, தான் கொண்டு சென்ற படைப்பாளி மனத்தை அப்படியே திரும்பக் கொண்டு வந்தவர். இன்றளவும் போகன் வில்லாச் செடிகளுக்கும், குரோட்டன்ஸ் - ரோஜா – மல்லிகைப் பந்தல்களுக்குள்ளும் உள்ளே மூடுண்ட பங்களாக்களின் ரசமான வரிசையைப் படைப்பாக்காமல் இன்னமும் சேரி, வயல், தொழிற்சாலை, ஏரி, குளம் எனச் சுற்றி வருகின்றன இவரது படைப்புகள்.

நவீன யுகத்தில் நமது கிராமிய வாழ்வின் சோதனைகள், வீழ்ச்சிகள், நகரமயமாதலில் ஏற்பட்ட இன்னல்கள், நுகர்வுப் பண்டமாகவே இன்னமும் நீடிக்கிற பெண்களின் நிலை போன்றவற்றைப் பேசுகிற வகை மாதிரிகளே இவை. ஒரு படைப்பாளியைக் கௌரவிக்கிற விதம் என்னவோ, அதற்கான ராஜபாட்டை இது.

சிறுகதைகள் பற்றி நமக்கு முன்னர் நிறைய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அவரவர்களின் சார்பு நிலைகளுக்கு ஏற்றபடி பலவிதமான வரை கோடுகளும் இடப்பட்டுள்ளன. ஆயினும் அடிப்படையில் சிறுகதை என்பதுதான் என்ன? நாமறிந்த வரை சிறுகதைகளின் அடிப்படை கதை சொல்வதாயிருக்கிறது. பாத்திரங்கள் வாயிலாக அவை வாழ்க்கையைப் பேசுகின்றன. சமூக யதார்த்தத்தைச் சுட்டுகின்றன. மொழித்திறன் மூலமாக நிஜவுலகுகளைப் புனைவுலகங்களாக உருமாற்றம் செய்கின்றன. இன்னுமொரு வகையில் - இலக்கியம் நுகர்வு பொருள். அழகான மொழியாலான ஒரு நுகர்வுப் பொருள்.

சிறுகதைகளுடன் பா. செயப்பிரகாசம் கொண்டுள்ள உறவு என்ன? அவரது எழுத்துக்களின் வாயிலாக சிறுகதைகள் என்ன தன்மையைப் பெற்றுள்ளன? அவை அவரது வாகனமாக வடிவம் கொண்டு விளங்குகின்றன. அவர் வாழ்ந்த இடம், அவர் தரிசித்த அநுபவங்கள், அவர் கொண்ட லட்சியங்கள், கனவுகள், இன்னும் ஏக்கங்கள் இவையெல்லாம் அவரது சிறுகதைகள் என எளிமைப் படுத்தலாம். இந்தப் புனைவுலகம் எது என்பதில், படைப்பாளி அல்லது ஒரு சமூகக் கலைஞர் என்ற தன்மையில் பா.செயப்பிரகாசம் உறுதியுடன் கால் பாவியுள்ளார். இதை அவரின் தனிச்சிறப்பு எனக்கூற முடியும். அவரது சமூகப் பிரக்ஞைக் கேற்ற வண்ணம் கதைகளின் கட்டுமானம், பகுதி பகுதியாகவும் உருவாக்கப் படுகிறது. வெவ்வேறு தளங்களில் உருவாகும் இக்கட்டுமானங்கள், ஒரு மையப்புள்ளியை நோக்கி நகர்த்திச் செல்லப்படுகின்றன. சில கதைகளில் அவை தாமாகவே தமது மையத்தை அடைந்து விடுகின்றன. பின், அதில் இருந்தும் ஒரு சமூகம் சார்ந்த அவலம் அல்லது கனவு இலட்சியம் மேலெழுந்து வாசக மனங்களைத் தாக்குகின்றன. பா.செ.யின் படைப்புலகம் கிராமிய வாழ்க்கையை மையமிட்டவை. அவர் அப்படித்தான் அறியப்படுகிறார். கிராமியத்தை இலக்கியமாக்குவது என்பது அலை அலையாக வருகிற ஒரு முக்கியமான போக்கு.

காந்தீய சகாப்தத்தில், அதன் தீவிரத் தாக்கம் தமிழில் புனைகதையுலகைப் பாதித்தது. கிராமப் பொருளாதாரமே தேச முன்னேற்றம் என்று வரையறை செய்த காந்தீயத் தத்துவத்தின் ஆளுமைக்கு உட்பட்ட சங்கரராம். கா.சீ.வேங்கடரமணி போன்றோர் கிராமியக் கதைகளை எழுதலாயினர். கிராமம் புனிதத் தலமாகவும், கிராமிய மாந்தர்கள் தேவதைகளாகவும் அவர்களுக்குத் தோன்றியதால், அந்த வாழ்க்கை தத்ரூபமாக சித்தரிக்கப்படாது போயிற்று. காந்தீய நோக்கிலான பற்றுதலால் கிராமங்கள் தமக்குரிய மெய்ப்பாட்டு உணர்வுடன் படைப்பிலக்கியங்களில் வசீகரம் பெறவில்லை. இவ்வகைப் படைப்புகளில் யதார்த்தமும் கற்பனையும் சரியான விகிதத்தில் பொருந்திக் கொள்ளவில்லை. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் போன்றோர் அறுபதுகளிலும் அதற்கு முன்னரும் மண்ணின் மனம் சார்ந்து எழுதினர். கொங்கு மக்களின் வாழ்க்கை ஆர்.ஷண்முக சுந்தரத்தின் கைபட்டுப் பிரகாசித்தது. கரிசலின் வாழ்க்கையோ எழுதப்படாமல் கிடந்தது. அந்த வாழ்க்கையின் நிறம் என்னவென்று அறியப்படவில்லை. அந்த மண்ணின் மனம் கிளற, முன்னத்தி ஏர் பூட்டினார் கி.ராஜநாராயணன். உடனே, அது அழமான பாதிப்பைப் படைப்பிலக்கியத் துறையில் உண்டு பண்ணியது. கரிசல் மண்ணின் வாழ்க்கை கொப்பும் கிளையுமாக இலக்கியத்தில் செழித்தது. கரிசல் மாந்தர்களின் வாழ்க்கையைப் பல கோணங்களிலும் ஆய்ந்தறிந்த பேனாக்கள் பல. பூமணி, வீர.வேலுசாமி, பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன், தனுஷ்கோடி ராமசாமி, சோ.தர்மன், உதயசங்கர், என்று நீளும் வரிசையில் நிற்பவர் பா.செயப்பிரகாசம்.

எந்த மக்களின் வாழ்க்கையும் பேசப்படாது போனால் அது பெருந்துயரமாக ஆகும். ஆனால் கரிசல் மண்ணின் வாழ்க்கை பேசப்பட துயரமே பொங்கியது.

பா.செ. ஒரு தத்துவச் சார்பாளர். ஊசலாட்டம் அற்ற திடமான வர்க்கப் பார்வையாளர். இலக்கியம் பற்றியதான நம்முடைய கருத்தியல்கள் எந்தத் தளத்திலிருந்து, எந்த வர்க்கத்தால், எவ்விதம் நம் உணர்வுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்ட இயங்கியல்வாதி. அரசியலும் கலை - இலக்கியமும் தனித்தனிப் பாதைகளைக் கொண்டிருக்கவில்லை என்பதிலும், அவ்வாறு இருக்கமுடியும் என்பதற்கான தர்க்க நியாயங்கள் ஏதும் இல்லை என்பதிலும் தெளிவான நம்பிக்கை கொண்டவர். எனவே, பாசாங்கற்ற தன்மையில் உருக் கொள்கின்றன அவரது கதைகள். இன்றளவும் அவரது தார்மீக ஆவேசம் பழுதுபடாது கதைத் தளங்களில் இயங்கி வருகிறது. அவர் கைப்பிடித்த மாந்தர்கள், தங்களின் வாழ்க்கையை அவர் மூலம் எழுதிக் கொள்கின்றனர். ஒரு கணத்திற்குள் நின்று செல்கிற பாத்திரமும், கதை நெடுகிலும் ஊடாடி வருகின்ற பாத்திரமும் தார தம்மியமின்றித் துல்லியமாகச் சித்தரிக்கப்படுகின்றனர். வாழ்வின் கூர்முனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிற கதை மாந்தர்கள் அவரவரின் சாதீயப் படிநிலைகளில், வேளாண்துறை சார்ந்த பொருளாதார நுகத்தடிகளில், இயல்புணர்வாய்ப் பெற்றுவிட்ட பாலுணர்வு சார்ந்த ஆதிக்க (அல்லது) அடிமைத் தளங்களில் எவ்வாறு உருத்திரட்சிகள் பெற்றுள்ளனர் என்பதை அவரது புனைவுலகம் யதார்த்தமாய்க் கூறுகிறது. இயந்திரமயமாக்கல் நிகழ்வதற்கு முன் இருந்த மிச்ச சொச்ச நிலப்பிரபுத்துவக் கலாச்சாரம் சார்ந்தும், அதன் மதிப்பீடுகள் சார்ந்தும் அதனுடனான மோதல்கள் வழியே கரிசல் மண்ணின் வாழ்வு படைக்கப்பட்டுள்ளது.

மௌனமே மகாயோகம் என்பது ஓர் ஆன்மீக நிலை. இந்தச் சிந்தனையின் ஆணிவேர் சமூகப் பரப்பின் மேலிருந்தே எழுகிறது. அநீதிகளுக்கு எதிரான நிலையிலும், வாழ்க்கையானது சமூகக் கொந்தளிப்புக்களின் ஊடே சிக்கிக் கொள்கின்ற போதிலும், ஆன்மிக ரீதியான இந்த மௌனம் அரசியல் தளம் நோக்கிய நமது பார்வைக்கு முன் ஒரு மூடுதிரையாகி விடுகின்றது. கொதிநிலையைத் தண்ணீர் தெளித்து அவித்து விடுவது போல, இந்தச் சமூகத்தின் மீது ஒரு மனத்தடை விதிக்கப்பட்டுவிடுகிறது. எனவே, மௌனமும் ஓர் அரசியல் சித்தாந்தமே! அடக்கு முறையின் ஒரு துணைக் கருவியே! தான் கண்ட வாழ்வின் பரிமாணங்களில் இருந்து இந்தச் சமூகம் அதன் அடிப்படையிலேயே மாற்றியமைக்கப் பட்டாக வேண்டும் என்று விரும்புகிறார் பா.செ. எனவே அவரது கதைகளில் வாழ்வியல் சார்ந்த மௌனம் இயல்பாகவே இடம் பெறுவதில்லை. செயப்பிரகாசத்தின் படைப்புலக அடிநாதமே இதுதான். இருள் கவியும் போது, சிக்கல்கள் சிறைப்படுத்தும் போது, அதனை விலக்கி ஆராயும் மனத்திட்டத்தை பா.செ.யின் படைப்புலக மாந்தர்கள் பெறுகிறார்கள். எதிர்ப்பை, போராட்டங்களை, மௌனத்தின் பீடங்களின் முன் காணிக்கையாக்கி, கைகதட்டி நின்று விடுவதில்லை அவர்கள். எனவே, எப்போதும் போராட்ட வாழ்க்கையின் தார்மீக நியாயத்தோடு ஒன்றி இருப்பனவாயுள்ள இவரின் படைப்புகள், அதற்கேற்ற படிமங்கள்,சொல்லாடல்கள், களங்கள் ஆகியன அதன் இயல்பூக்கத்திற்கு ஏற்றபடி விரிந்து, வாசகனைக் காட்சி ரீதியாகத் தழுவுகின்றன. நமது மனங்களின் மீது ஆணியடித்துப் பொருத்தப்பட்டுள்ள சித்தாந்தப் படிமங்களை, கருத்தியல்களை லாவகமாக வெளியே உருவி எடுத்து விடுகின்றன.

பா.செ.யின் படைப்புக்களில் பல பரிமாணங்களுடன் நாம் காண்பது அவருடைய புரட்சிமனம். அவருடைய அக்கினி முகம், அவருடைய விமர்சனக் குரல். இவற்றிற்கெல்லாம் ஊடகமாகி இருக்கிற மொழித்திறன், இயல்பான சொல்லாடல்கள், கலையம்சத்தோடு பொருந்திக் கொள்கின்றன.

தலித் இலக்கியம் தன்னை உலுப்பிக்கொண்டு மேலெமும் முன்பாகவே, தலித் இலக்கியங்களைப் படைத்திருக்கிறார் பா.செ. தலித்திய வாழ்க்கை நிலைகளுக்கான மொழியும் உணர்வுகளும் பீறிடும் போது, தலித்திய அனல் மூச்சின் வெப்பம் வாசகனைச் சுடுகிறது. நிஜம் சார்ந்த வாழ்வின் பல கோணங்களில், எங்கெங்கு எதிர்ப்பு முனைகள் கூர்மைப்பட்டுள்ளனவோ, அவையே பா.செ.யின் படைப்புக் களங்களாகவும் விரிவு பெற்றுள்ளன. சாதீய ஒடுக்கமுறையின் கைகள் நீண்ட திசைகளில், இவரது எழுத்துக்கள் அக்னிரூபமான யதார்த்தங்களைச் சேகரித்துப் புனைந்து கொண்டுள்ளன.

இப்படைப்புகள் பொருள் சார்ந்த வாழ்வைப் பேசுகின்றன. பொருளாதார வளவாழ்வை நமது தேசம் இன்றுவரை அனுபவித்ததில்லை. நாம் நல்ல வாழ்வை வாழ்ந்தோம் என்று அடையாளம் கண்டிருப்பது கூட ஒரு மாயைத் தன்மையின் அடிப்படையில்தான். இன்று நாம் படுகின்ற அவலங்கள், எதிர் கொண்டுள்ள கடன் சுமை, விலை உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்றவற்றை நேற்றை வாழ்வோடும், நேற்றைக்கு முன்னிருந்த வாழ்வோடும் ஒப்பிட்டுப் பார்த்தே,“பழைய வாழ்க்கை சுகமானது” எனத் தீர்மானிக்கிறோம். நேற்று பொற்காலம். இன்றுதான் சீரழிவு என்ற எண்ணமாய் நேற்றைய வாழ்வுக்கு ஏங்குகிறோம். பா.செ.யின் படைப்புகளைக் காலவரிசைப்படி நிறுத்தி ஆய்வு செய்தால், நம்முடைய இந்தப் “பொற்காலப் பிரமைகள்” உடைபட்டு நொறுங்கிவிடும். ஆரம்பமாய் எழுதப்பட்ட ஜெருசலேம், அம்பலக்காரர் வீடு, காடு போன்ற இன்ன பிற கதைகளிலிருந்து மூன்றாவது முகம், இரவுகள் உடையும் வழியே பயணித்து, கந்தகபூமி வரைவந்தால் ஒரு முழுச் சித்திரமும் கிடைக்கும். இந்தியக் குடியரசில், இந்த வாழ்வின் அச்சாணி ஒவ்வொரு முறையும் கழற்றி வீசப்பட்டதை அறிய முடியும். சாதியக் கட்டுக்கோப்பும், பொருளாதார – தொழில் நுட்ப மாற்றங்களால் தகர்ந்து விடாதபடி, சாதீய அபிமானங்கள் வெறி நிலையாகத் தகவமைக்கப்படுவதை,நுண்ணிய வாசிப்புத் தளங்களில் புரிந்து கொள்ள முடியும்.

நகரம் சார்ந்த வாழ்க்கை. அலுவலகம் சார்ந்த பகுதி, தொழிற்சாலைகள் என கரிசலுக்கு அப்பாலும். இந்தக் கதைகள் விரிவுபட்டுள்ளன. எனினும் நகரத்திற்கும் கிராமத்திற்குமான மோதல் நிலைகள் ஆழம் பெறவில்லை. இந்த ஆழம் பொறாமைக்கான முட்டுக்கட்டைகளை, இத் தொகுப்பின் வழியாகவும் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. இதை ஒரு பின்னடைவாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் நகரங்களின் (அல்லது) நாகரீக வளர்ச்சிக்குக் கிராமங்களின் இன்னுயிர்கள், குறிப்பாகப் பெண்கள் பலவிதமான வகையிலும் பலியாகிக் கொண்டிருப்பதை எடுத்துரைக்கின்றன. இன்னொரு தனிச் சிறப்பாக, நகரம் - கிராமம் எனப் பிளவு பட்டிருந்தாலும், அந்தந்தப் பகுதியின் அடித்தட்டு மக்களே கதா மாந்தர்களாகி இருக்கின்றனர். சமூகம் சார்ந்த பரிசீலனையை, தேசத்தின் பொருளாதார ரீதியான வளர்ச்சி அல்லது தேய்வை இந்த அடித்தட்டு மக்களின் வாழ்விலிருந்தே பரிசீலிக்க முடியும் என்கிற திட்பம் தான் இதற்குரிய காரணங்களாகும். சாதீயப் பாகுபாடுகளுக்கு நிகராக ஆண் - பெண் இனப் பாதுபாடுகளும் சரியிடம் பெற்றுள்ளதைக் குறித்துக் கொள்ள முடியும். ஆளும் வர்க்கங்கள் நம் முன்னே கடைபரப்பும் புள்ளி விவரக் குவிப்புக்களின் பொய்மை ஜாலங்களை அம்பலப் படுத்திவிடுகின்றன இப்படைப்புக்கள்.

ஓர் அந்தர நிலையில்தான் பா.செ.யின் கதைகள் துவக்கம் கொள்கின்றன. ஒரு களம் அல்லது பிரச்சினை முன் நிற்கிறது. இது சமூகம் சார்ந்த விசயம். பெரும்பாலான கதைகள் கதாபாத்திரங்களின் பெயர்களில் துவங்குவதில்லை. அவன் - அவள் என்றே சுட்டப்படுகின்றனர். கதையாடலின் இடைப் பகுதியில்தான் அவர்களின் பெயர்கள் என்ன என்பதை அறிந்து கொள்கிறோம். இது சமயங்களில் சலிப்பையோ, புரிவதற்கான தடையையோ உண்டாக்கிவிடுகிறது. பெயரை இன்னவென்று அறிந்து கொள்ள முடியாத நிலையிலேயே, “திறக்கப்படாத உள்ளங்களில்” வரும் அந்தப் பெண் ரயிலின் முன் விழுந்து சாகடித்துக் கொள்கிறாள் தன்னை. ‘அவள்’ கடைசி வரை அவளாகவே இருந்து விடுவது போன்று அவனும் கடைசி வரை அவனாகவே இருந்து விடுகிறான். ஆறு நரகங்களின் ‘அவன்’ – ஓர் அரசு ஊழியன். இது போதுமானதுதானா?

பா.செ.யின் கதைகள் பெரும்பாலும் சிறியதாய் இல்லை. நீளமானவை. அவரது படைப்புலகம் இயங்கும் ‘வெளி’ குறிப்பிடத்தக்கது. இந்த ‘வெளி’க்கு ஒரு நாயக அந்தஸ்து எப்போதுமே உண்டு – பா.செயின் படைப்புகளில் அனைத்துப் பாத்திரங்களும் செயல்பாடுகளும் வீடு தாண்டிய வெளியிலேயே (பெரும்பாலும்) நிகழ்கின்றன. ஆனால் ‘வீட்டின் இருப்பை’ மையப்படுத்திப் பேசுகின்ற தன்மையுடன்தான். இந்தப் பொருத்தம் எல்லாக் கதைகளிலும் அற்புதமான இணைவைக் கொண்டுள்ளன. அந்த ‘வெளி’யுடன் இழைகிற பாத்திரங்களும்தான். அந்த சமூகச் சூழல்தான். எளிதில் புரிந்து கொள்ள முடியாத நுட்பமான அலகுகள் இவை. பா.செ.யின் படைப்புலக ஆதாரங்களைப் புரிந்து கொள்வதற்கு இந்த அடையாளங்களைக் கண்டெடுக்க வேண்டியது ஒரு முன் நிபந்தனையாக ஆகிவிடுகிறது. இதன் மூலமே அவரது படைப்புலகின் விரிவு – மொழி – கதையாடல் - கருத்துநிலை – அதன் உட்கனவாய் பொதிந்துள்ள தார்மீக ஆவேசம் மற்றும் கலையின் கூறுகளை உள்வாங்க முடியும்.

கதைகளின் பிரதான அம்சங்கள் என்னென்ன? அவற்றுக்கும் சமூகத்திற்குமான நேரடித் தொடர்புகள் என்னென்ன? ஒரு தீவிர இடதுசாரிக் கலைஞர் என்கிற வகையில் அவர் படைப்புகளில் வறுமை நிலையே பிரதான இடம் வகிக்கிறது. அதனால் சமூக அமைப்பின் மீதான கோபம் முக்கியப் பங்காற்றுகிறது. நகைச்சுவை உணர்வுக்குக் கிஞ்சித்தும் இடமில்லை. அதற்கான காரணிகளைத் தேடும் அவசியமும் இல்லை. நம்பிக்கை இழந்த நிலையோ, கையாலாகத் தனமாய் சமூகத் தீமைகளின் மீது வெறும் எரிச்சல் மட்டுமே கொள்ளும் நிலையோ இல்லை. அறவே இல்லை.
பெண்ணியம், சாதிய ஒடுக்கு முறை, அரசியல் மற்றும் தொழிற்சங்கப் பிரச்சினைகளும் கையாளப்படுகின்றன. கருத்தியல் ரீதியான வளர்ச்சி நிலை படைப்புகளில் பதிவான போது அவரது படைப்புக்களில் அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்கள், உதிரிப் பாட்டாளிகள், முதலாளி வர்க்கத்தினர் ஆகியோர் இடம் பெறுவதில் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

மொத்தமாய்ப் பார்க்க நேரும் போது, அவரது படைப்புலகம் மலர்களாலும், வனப்புமிக்க பசுமைகளாலும் அலங்கரிக்கப்பட்டதல்ல. வாசகனைத் திசை திருப்பும் வர்ணனைகள் இல்லை. அப்புனைவுகள் ஒரு கடல் போல் சதா அலை வீசுகிறது. அமைதிக்கு வழியில்லை - ஆனால் அமைதியையே யாசிக்கின்றன. மூடுண்ட இதயங்கள், கனவுகளுக்கும் இடையே மயிரிழைப் பொருத்தம் கூட இல்லாமல் ஆளும் வர்க்கத்தின் இருப்பும், கொள்ளைத் திட்டங்களும் மோதிக் கொள்வதை – அதன் விளைவான நசிவுகளைப் பா.செ.யின் எழுத்துக்கள் மீட்டுக்கொண்டு வந்து நம் முன் பரிசீலனைக்கு வைக்கின்றன. வாசகப் பயன்பாட்டுக்கும் அப்பாலான இலக்கியப் பீடங்களைத் தேடிச் செல்கின்ற நோக்கம் இவரது படைப்புகளில் இல்லை.

திராவிட இயக்கத்தின் மேடைப் பேச்சாளராக, மொழிப்போரின் தியாகியாக இருந்தும், அதன் கலாச்சாரச் சேற்றில் கால் நனைக்காமல் மார்க்சீய ஒளியில் தன்னைப் புத்துருவாக்கம் செய்து கொண்டவர். தீவிரமான செயல்பாடுகளைக் கொண்ட அரசியல் இயக்கங்களுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர். இயக்கங்கள் மாறிய போதும் பாதை மாறவில்லை. காலம் பயிற்றுவித்த ஒவ்வொரு அனுபவத்தின் மூலமும் தனக்குரிய வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டு படைப்புக்களின் கலைத்திறனை நிலைநிறுத்திக் கொண்டவர்.

படைப்புகள், படைப்புகளின் இலக்கு ஆகியவற்றை இணைக்கும் போது அவற்றின் வழியே உருவாகும் நேர்கோட்டில் செயப்பிரகாசம் என்கிற கலைஞரும் இடம் பெற்று நிற்கிறார் என்பதைப் பெருமிதத்தோடு குறிப்பிட விரும்புகிறேன்.

எனக்கு இது புது அனுபவம். என் பார்வைகளே இறுதியானவை என்று சொல்லிவிடமுடியாது. இன்னும் பல வாசகப் பரப்புக்கள் உள்ளன. அவரவரின் முயற்சிகளில் அவை பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்