திருத்த முடியாத தீர்ப்புகள்


கேரளாவைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைக் கட்சித்தலைவர் கியூபா சென்றார். கியூபாவின் புரட்சியாளர்களின் தலைவரைச் சந்தித்த பின்னர் “இந்தியாவின்பெருமை” என்று கூறி கியூபா புரட்சியாளனுக்கு ஒரு நூல் வழங்கினார்.

நூல் – கீதோபதேசம்
பெற்றுக்கொண்டவர் – ஃபிடல் கேஸ்ட்ரோ.
வழங்கியவர் – இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் கேரள முதலமைச்சராயிருந்தவருமான ஈ.கே.நயினார்.

கீதோபதேசக் கடவுள் கண்ணன் சொல்கிறான் “நானே வர்ணங்களைப் படைத்தேன்”.

கீதையின் வர்ணாசிரம போதனை, முற்போக்காளர் என்று சொல்லபடுவோரும் மயங்குகிற அளவு கருவிலேயே நஞ்சுக் கொடி சுற்றியதாக இருக்கிறது. கொடிசுற்றிய கரு மூச்சுத்திணறுவது போல், மக்கள் சமுதாயத்தை மூச்சுத் திணற அடிக்கிற காட்சிகள் இந்த தத்துவ போதனையின்மேல் தொடருகின்றன.

”தீண்டாமையின் வேர் சாதியமைப்பில் இருக்கிறது:சாதியமைப்பின் வேர் வருணாசிரமத்தில் இருக்கிறது. வருணாசிரமத்தின் வேர் பார்ப்பணியத்தில் இருக்கிறது. பார்ப்பணிய மதத்தின் வேர் எதேச்சாதிகாரம் அல்லது அரசியலதிகாரத்தில் இருக்கிறது” – என அம்பேத்கர் கூறியதை கருத்தில் கொள்ளாது, சாதியக் கருத்தியலின் வேர் எங்கிருக்கிறது என உணராது இருக்கிற ஒருவரும், இன்னொரு பக்கத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னனி நடத்த இயலாது.

ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையைப் பற்றி ஒரு தத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும். ”தத்துவம் என்பது தன்னை அளந்தறிவதற்கான அளவுகோல்” என்கிறார் அம்பேத்கர். ஒவ்வொருவர் உதிர்க்கிற தத்துவம் என்பது அவரை அளந்தறியும் அளவு கோலாக இருக்கிறது. அவ்வாறாயின், தம்மைப்பற்றியும், தாம் இயங்குகிற இந்திய சமுதாயம் பற்றியுமான அளவுகோல் எதுவாக இருக்க வேண்டும்?

“என்னுடைய தத்துவங்களின் வேர் அரசியல் விஞ்ஞானத்தால் ஏற்பட்டதல்ல; அவை சமயம் சார்ந்தவை” என அம்பேத்கர் குறிப்பிட்டது, இந்நூலில் (பக். 28) சுட்டிக் காட்டப்படுகிறது.

நூலின் தலைப்பு “மார்க்சிய ஒளியில் எனது தீர்ப்புக்கள்” என்றில்லை. கீதையை தலைக்குள் வைத்திருக்கும் சில நீதிபதிகள் போல் “இந்திய தர்ம ஒளியில் எனது தீர்ப்புகள்” என்று குறிப்பிடப்படவில்லை. காந்தியவழியில் எனவும் சொல்லப்படவில்லை. ஏனெனில் இவர்கள் எவரும் இந்திய சமுதாயம் – இந்து மதத்தால் ஆனது – இந்து மதம் வர்ணப்பாகு பாட்டின் மேல் நிற்பது என கணித்திடவில்லை. இந்து மதத்தின் மீது காந்தி நின்றார்; காங்கிரசும் இந்து சமயத்தை முதுகெலும்பாய்க் கொண்டிருந்தது. இந்திய சமுதாயத்தினைச் சரியாய்க் கணித்த அம்பேத்கர் இந்து சமயத்துக்குள்ளிருந்து, அதன் மாற்றாக தனது தத்துவத்தைக் கண்டடைந்தார். கண்டறிந்தவைகளைத் தன்மக்களிடம் கொண்டு சென்றார். பேச்சு, எழுத்து, தருக்கம், ஆர்ப்பாட்டம், போராட்டமென்ற வாகனங்கள் மூலம் கொண்டுசென்றார்.

(ஒரு போதும் உண்ணா நேன்பு என்னும் பட்டினிப் போராட்டத்தைக் கையிலெடுக்க வில்லை. அந்த எலும்புருக்கி நோய் தன்மக்களைப் பின்னடைய வைத்துக் கொன்று போடும் என்பதை உணர்ந்திருந்தார்.)

நீதிபதிப் பொறுப்பிலுள்ள ஒருவர் தீர்ப்புகள் என்னும் வாகனத்தைக் கைக்கொண்டிருக்கிறார். இது வரை இந்த வாகனத்தை சிறப்பாகச் செலுத்தியவர்கள் இருக்கிறார்கள். சந்துரு குறிப்பிடுகிறது போல வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

பொறுப்பில் இருக்கிற வரை சிலர் நீதிபதிகளாக இருக்கிறார்கள் : ஓய்வுபெற்றதும் “நல்ல நீதிபதிகளாகி” விடுகிறார்கள். நாற்காலியிலிருந்து இறங்கியதும் அந்த ‘சிலர்’ மனம் திறக்கிறார்கள். அதுகாறும் சூழ்நிலைக் கைதிகளாய் இருந்தார்கள் என்பது உண்மை. ஆனால் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு எழுதவோ, அம்பேத்கர் காட்டிய வழியில் தீர்ப்புகள் வழங்கவோ, அரசியல் சட்ட வழிகாட்டலும், முன்னுதாரணமான தீர்ப்புகளும் இல்லாது இருக்கிற போதும் சமூகநீதியின் அடிப்படையில் தீர்ப்புகள் தரவோ – சூழ்நிலைக் கைதியாயிருக்க வேண்டியதில்லை. இவ்வகையில், சூழ்நிலைக் கைதியாக இல்லாமல், சுதந்திரமான செயற்பாட்டாளராக விளங்கியுள்ளார் சந்துரு.

30-ஆண்டுக் காலம் பாதிக்கப் பட்ட மக்களின் பிரச்சினைக்காக நின்று வாதாடியவர்,நீதிபதியாகப் பொறுப்பேற்ற போது, அது பல தோழர்களுக்கும் வருத்தத்தை அளித்தது. நீதிபதி பதவியேற்பன்று தனது ஏற்புரையில்” இத்தேசத்திற்கு எப்பதவியிலிருந்தும் சேவை செய்ய முடியும்” என்று கூறினார்.அதை தன் வாழ்நாளின் ஏற்பாக ஆக்கிக் கொண்டார் என்பதை உறுதி செய்கிறது நூல்.

இவ்வெழுத்துக்களை – ’பணி அனுபவங்கள்’ என்று கொள்ளலாம். நாற்காலியிலிருந்த காலத்தை மக்கள் பணியாகக் கருதினார். அவருடைய பணி அனுபவங்கள் எழுத்தில் சொல்லப்படாமல் போயிருந்தால், எத்தனைபெரிய இழப்பாக இருந்திருக்கும் என நூலினை வாசிக்கையில் தோன்றுகிறது.

இப்பேர்ப்பட்ட தீர்ப்புகளுக்கு அவருடைய சிந்திப்பும், கடின உழைப்பும் அடிப்படையாக அமைந்திருக்கின்றன. நீதி, தீர்ப்பு – இரண்டுக்குமான வேறுபாடு கணக்கில் கொள்ளப்பட வேண்டும். எல்லாத் தீர்ப்பும் நீதியாயிருப்பதில்லை. சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்புகள் உண்டு. ஆனால் அவை நீதியானவைதாமா என்ற கேள்வியும் இருக்கிறது. நீதியாளர் சந்துருவின் தீர்ப்புகள் அனைத்தும் நீதியானவையாய் இருக்க காரணம் அம்பேத்கர் காட்டிய வழியில் வகுத்தது -அதனால் தான்.

சாதி அங்கத்தில் ஒட்டியிருப்பதில்லை; ஆடையில் ஒட்டிய அழுக்குமல்ல:
“கால்ல ஒட்டுன கரிசக்காட்டு மண்ணா
சேலையில ஒட்டுன செவக்காட்டு மண்ணா”
என்று தட்டி, உதறிவிட்டுப் போக இயலாத ஒன்னு. ரத்தமாய், ஊனாய், உயிராய் இந்திய மனிதனில் இருக்கிறது. இந்திய மனிதனுக்கு வந்த ’ ஒட்டுவாரொட்டி’ நோய், தமிழனைப் பீடித்துக் கொண்டது. தமிழனின் மனசாய் வாழுகிறது. தமிழ் நினைப்பில் நீடிக்கிறது. உறவில் வெளிப்படுகிறது. சாதிமனசும், நினைப்பும், உறவும் தமிழனுக்கு இருக்கும் வரை, நோய் மரணமிலாப் பெருவாழ்வு வாழும்.

தலித்துகள் மீதான கொடுமைகளில் நூற்றுக்கணக்கான வழக்குகள். உயர்நீதி மன்றத்தில் அப்படிப்பட்ட வழக்கு ஒன்றில் மேனாள் அட்வகேட் ஜெனரல் வாதாடுகிறார். “தலித்துகளின் மீதான இவ்வழக்குகளில் எதிர்த்தரப்பில் நீங்கள் வாதாடுவது எனக்கு வேதனையளிக்கிறது. தலித்துகள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி அட்வகேட் ஜெனரலாக 10 ஆண்டுகள் இருந்த உங்களுக்குப் புரியவில்லையா? இனி நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம் மட்டும் போதாது. உங்களது இதயத்தில் தான் அவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும்” என்கிறார் (பக். 109). சட்ட பூர்வ பதவியில் அமர்ந்துகொண்டு இவ்வாறு சொல்வதற்கு தனித் துணிவு இருக்கவேண்டும்.

நீதித்துறை புனிதமானது, உயரத்திலிருப்பது, அது சட்டங்களால் ஆனது என்ற புனைவை உடைத்து, நீதிக்கு அடிக்களன் சமூகப்பிரச்னைகள் பற்றிய புரிதலும், புதிய புதிய தேடலும் - இரண்டுமிருந்தால், நீதிவாக்கியம் தானே வந்து சேரும் என்பதை மெய்ப்பித்துள்ளார்.

2

“புறச் சமூகத்திலிருந்து வரும் ஆதிக்கம், தனக்குள்ளேயிருக்கும் ஆதிக்கம், தன்னில் நிலவும் அறியாமை – ஆகிய மூன்று மலைகளை ஒரு ஆண் முதுகில் சுமக்கிறான் என்றால், ஒரு பெண் நான்காவதாய் ஒரு மலையைச் சுமக்கிறாள். அது ஆண் ஆதிக்கம்” என்கிற ஒரு வாசகம் உண்டு.

அப்படியான ஆதிக்கத்தின் உச்சத்திலிருக்கும் ஒரு ஆண்மிருகம் பள்ளித் தலைமையாசிரியராக வந்து விட்டால் என்ன நடக்கும்? மதுரைக்கு அருகிலுள்ள பொதும்பு கிராம மக்கள் தங்களது பெண்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று 2011-ல் கொடிபிடித்தார்கள். அது தான் நடந்தது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக இருந்த மனித மிருகம் நூற்றுக்கும் மேற்பட்ட மொட்டுகளை, அரும்புகளை, மலர்களை, பிஞ்சுகளைப் பதம் பார்த்திருக்கிறது. பெரும்பான்மையாய்ப் பாதிக்கப்பட்ட மாணவிகள் தலித் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். “பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களாதலால், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். அதை விசாரிக்க பெண் டி.எஸ்.பி அதிகாரியை நியமிக்க வேண்டும்” என்று உத்தரவிடுகிறார் சந்துரு.

“பாதிக்கப்பட்ட மாணவிகள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அல்லாதவர்களாக இருந்தாலும் விசாரணை நடக்கும் கட்டத்திலேயே ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஒரு லட்சத்து இருபதினாயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்” என நீதி வழங்குகிறார். தலித் மக்களுக்கான நீதியாக மட்டுமல்ல; தலித்துகளை உள்ளடக்கிய பெண்களுக்கான நீதியாக இது பரிணாமம் கொள்வதைக் காணுகிறோம்.

நூலகம் ஊருக்குள் கட்டப்படக் கூடாது. மேல் சாதியினர் வசிக்கிற பொது இடத்தில் கட்டப்பட்டால், பட்டியலின மக்கள் வாசிக்க வருவார்கள்; பல இன மக்களும் பயன்படுத்துவார்கள். வழக்கு நமது நீதிபதிக்கு முன் வருகிறது. “ஊர்ப் பொது இடத்தில் நூலகம் அமைக்கப்பட்டால் பயன்படுத்தப் பலரும் வருகையில், அவர்கள் கண்களை உறுத்தும் என்பது மட்டுமல்ல; தாழ்த்தப்பட்ட மக்கள் நூல்கள் வாசிப்பின் வழியே அறிவுவளர்ச்சி பெறுவார்கள் என்ற அச்சம் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்” – என்று நூலகத்துக்கு அனுமதியளிக்க ஆட்சியருக்கு ஆணையிடுகிறார்.

பேருந்து நிறுத்தம் தலித் பகுதியில் கூடாது என்கிற மற்றொரு வழக்கு. இந்திய காவல் பணியைச் சார்ந்த மாவட்ட அதிகாரியொருவர் இதில் மிக மோசமான சாதிப்பற்றுடன் நடந்து கொண்டதைக் காணமுடிகிறது. இந்த நவீனத் தீண்டாமையை அனுமதிக்க மறுத்து இரண்டு வாரங்களில் ஏற்கனவே நின்று சென்ற அரிசி ஆலைப் பஸ்நிறுத்தத்துக்கு பேருந்துகள் திரும்பிவர உத்தரவிடப்படுகிறது.

பொது வாழ்வியலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நுழைய அனுமதியில்லை; இரண்டு பிரிவினைகள், இரண்டு ஊர்கள், இரு வாழ்வு முறைகள் இருக்க எல்லா நியாயங்களும் உண்டென எழுகிற ஆர்ப்பரிப்புகளை நீதியாளர் சந்துரு வழங்கிய பல தீர்ப்புகள் உடைத்து வீசுகின்றன.

சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் அடக்கமுறைக் கொடூரங்களை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். முன்னொரு காலத்தில் தனிமனிதர் சிலரால் அது நடந்தது. குடும்ப ரீதியில் நடந்தது.நிகழ்காலத்தில் கொழுப்பெடுத்த கட்சிகள் ரீதியாக இக்கொடூரங்கள் நடக்கிறது.

சாதிமறுப்புத் திருமணங்களுக்கெதிராக சமுதாயத்தில் நடைபெற்று வரும் கொடுமைகளைப் பற்றி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருந்த கருத்தை (பக். 68-69) சந்துரு எடுத்தாளுகிறார்.

“சாதி முறை என்பது நாட்டின் மீதான ஒரு சாபக் கேடாகும். இதனை எவ்வளவு சீக்கிரம் அழிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நல்லது. உண்மையிலேயே, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு நாட்டின் முன்னுள்ள எல்லா சவால்களையும் சந்திக்க வேண்டிய வேளையில், சாதி நாட்டைக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறது. சாதிக்கலப்புத் திருமணம் என்பது சாதிமுறையை ஒழிக்க வழிவகுக்கும் என்பதால், அவை நாட்டு நலனுக்கானவை. ஆனால் சாதிக் கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களையும் பெண்களையும் வன்முறைகளால் பயமுறுத்தவதாகவும், வன்முறைகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுவதுமான அமைதி குலைக்கும் செய்திகள் நாட்டின் பலபகுதிகளிலிருந்து எங்களுக்கு வந்தவண்ணம் உள்ளன...

“தாங்களாகவே விரும்பி சாதிக் கலப்பு மற்றும் மதக் கலப்புத் திருமணம் செய்துகொள் வோரை கொல்லும் கெளரவக் கொலைகள் பற்றி கேள்விப்படுகிறோம். இத்தகைய கொலைகளில் கெளரவம் ஏதுமில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமாயின் அச்செயல்கள் கடும் தண்டனைக்குரிய கொடிய பிரபுத்துவமனங் கொண்டவர்களால் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித் தனமான, வெட்கக் கேடான கொலைகள் தானே தவிர, வேறொன்றுமில்லை”

உச்சநீதிமன்றம் காட்டிய வெளிச்சத்தின் கீழ் தருமபுரி இளவரசன் - திவ்யா காதலைப் புதைத்த கொலையாளிகளை அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது.தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் தருமபுரியாக உருவெடுத்து இளவரசன்கள்- திவ்யாக்களின் கதைகள் தொடருகின்றன.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பிலுள்ள ஒவ்வொரு வாசகத்தையும் வரிக்கு வரி பொருத்திப் பார்க்க ஏது உள்ளது. சாதிமுறையை எவ்வளவு சீக்கிரம் அழிக்கிறோமா அவ்வளவு சீக்கிரம் நல்லது என்கிறார்கள் நீதிபதிகள். சாதிமுறையை அழிக்காமல் எவ்வளவு காலம் பத்திரப்படுத்த முடியுமோ, அவ்வளவு காலம் நமக்கு நல்லது என சாதிக்கொரு கட்சிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

“இத்தகைய வன்முறைச் செயல்கள், பயமுறுத்தல்கள், சட்ட விரோதமானவையாதலின் அத்தகைய குற்றம்புரிவோர் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்” என வலியுறுத்துகின்றனர் நீதிபதிகள். ஆனால் இளவரசன் - திவ்யாக்களின் சாதிக் கலப்புத் திருமணத்தை சிதைத்துக் கொன்றவர்கள் தண்டிக்கப்படாமல் உலவுகின்றனர். கலப்புத் திருமணத்தை தொடர்ந்து சிதைக்க முயலுகிற கட்சிகள் இன்னும் தடைசெய்யப்பட வில்லை. உச்சநீதிமன்றம் வகுத்தளிக்கும் நீதிவாசங்கள் படி, தமிழ்நாட்டில் சாதிக்கட்சிகள் பலவும் உயிர்தரிக்க நியாயமில்லை.

3

தீர்ப்பு – வெற்றுத்தாளும் வெற்றுச் சொல்லுமாக வெளிப்படவில்லை. உயிர்ப்புடன் பிறக்கின்றன. உயிர்ப்பு இருவகையில் உருவாகிறது. தலித்துகளின் வாழ்வியல் இயங்குதலுக்கு தடையாயிருக்கும் ”அமுக்குப்பேய்களை” அகற்றுதலால் ஒவ்வொரு தலித்தும் கொள்ளும் உயிர்ப்பு. இரண்டாவது – அதன் வெளிப்பாட்டுமுறையில் கைலாகு கொள்ளும் அழகியல் உத்தி.

நூலகத் தகராறுக்கு – கலீல் ஜிப்ரான் கவிதை.
சுடுகாட்டுப் பிரச்னைக்கு - சுரதா கவிதை
மீனாட்சிபுரம் ரஹ்மத் நகராக மாறின கதைக்கு – வாலி பாடிய கவிதை.
- இவை யாவும் தகவுடைய மேற்கோள் வாசகங்களாக கையாளப்பட்டதோடல்லாமல், போராளிகள், மேதைகள் போன்றோரின் கருத்துரைகளும் ஆங்காங்கு வெளிப்பட்டுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவானபோது, அதிகார சக்திகள் பூர்வ குடிகளான செவ்விந்தியரின் நிலங்களைப் பலவந்தமாகக் கைப்பற்றினர். பூர்வ குடிமக்களின் மிச்சம் மீதியிருந்த நிலங்களை விலைபேசிக் கைப்பற்ற முயன்றவேளையில், பூர்வ குடிகளின் தலைவன் ’சியாட்டில்’ 160 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் ஒரு கவிதைப் பிரகடணம். பஞ்சமரின் நிலங்களைக் கபடமாய் கபளீகரம் செய்யும் மேல்சாதிக் கொடுஞ்செயலை விவரிக்கையில் அந்தக் கவிதைப் பிரகடணத்தைக் கொளுவிக் காட்டுகிறார். ஒரு நீதிபதி சமூகவிஞ்ஞானியாக மட்டுமல்ல, எடுத்துரைப்பு முறையில் இலக்கியவாதியாகவும் இருப்பது நீதித்துறை வரலாற்றில் முதலாவதாக நிகழ்கிறது.

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்தி.

கிராமங்களில் யார் வாழுகிறார்கள் எனபது பதில் தரப்படவேண்டிய கேள்வி. பண்ணையாரும், பெருநில உடமையாளர்களுமா? சமகாலத்தில் ஆதிக்க சாதியினரும் அரசியல்வாதிகளும் என்பதை இணைத்துக் கொள்ளலாம்.

“உண்மையில் இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் இரு கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. நான்கு வர்ணத்தார் முக்கிய கிராமத்திலும், பஞ்சமர் அதை விட்டுத் தள்ளி அமைந்த காலனிகளிலும் வாழ்கின்றனர்” – காந்தியின் கிராமத்தை இவ்வாறு விளக்குகிறார் சந்துரு (பக். 106)

நான்கு வருணத்தார் வசிக்குமிடம் ஊர்: பஞ்சமர் வாழுகிற பகுதி சேரி. ஒவ்வொரு ஊருக்கும் அப்பாலிருக்கிறது சேரி. இப்போது நவீன வார்த்தையில் காலனி. சேரியும் காலனியும் அழிமானமாகி, ஊர் என்று அவர்கள் வசிப்பிடம் எப்போது அழைக்கப் படும்? இரட்டைக் குவளை, இரட்டைச் சுடுகாடு, இரட்டைப் பாதை, இரட்டைக் குளம், இரண்டு ஊர்கள் – எப்போது இல்லாமலாகும்?

பேருந்துகள் – சேரிக்குள்ளிலிருந்து இனி புறப்படும்: நூலகம் – உண்மையான அர்த்தத்தில் சேரிக்குள் உருவாகும்: மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் எதிர்காலத்தில் சேரித்திசையில் அமையும். ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகள் தூரந்தொலைவில் நிற்காமல், இனி சேரிக்கு அருகாமையில் வரும். ஊருக்கு எது எது உரித்தோ, அதெல்லாம் சேரிக்குப் புறப்பட்டு வருமானால், சேரிக்குள் ஊர் வந்துவிடும். ஊரும் சேரியும் ஒன்றாவது அந்நாளில் தான். இப்போது தலித் மக்களின் இருப்பிடமே முதலில் ஊர் என்றாகிவிடும்.
‘மெல்லிய
புலால் நாற்றம் வீசுகிற
நானும்,
தசைகளை முற்றாகப்
பிய்த்தெடுத்த எலும்புகள் தொங்கும்
என்வீடும்,
கொட்டாங்கச்சியில் தோலைக்கட்டி
பறையொலி பழகும்
விடலைகள் நிறைந்த
என் தெருவும்
ஊரின் கடைசியிலிருப்பதாக
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
நான்சொல்லிக்கொண்டிருக்கிறேன்
முதலில் இருப்பதாக”
- என்கிறது கவிஞர் சுகிர்த ராணியின் கவிதை.

சாதிப் பிடிமானத்தை ஒரே வீச்சில் அடித்து விரட்டிட இயலாது; தமிழ்ச் சமூகத்தின் நினைப்பில் ஊறி நிற்கிற அதை சன்னம் சன்னமாய் விரட்டியடிக்க முடியும். அந்த எல்லையை நோக்கி கட்டம் கட்டமாய் நகர்த்திச் செல்ல, நீதியாளர் சந்துருவின் தீர்ப்புகள் வலுவான துணையாய் வருகின்றன. சந்துரு - ஒரு நீதியாளர்: பஞ்சமரின் தோழமைச் சக்தி என்பதைக் காலத்தினூடாக இத்தீர்ப்புகள் சாட்சியம் சொல்லிக் கொண்டிருப்பன.
நீதிபதி பதவியேற்பை வாழ்த்துகையில் “நீதித்துறை தனது தர்மத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில், கடமைகளை நிறைவேற்ற நீங்கள் நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது“ என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் வாழ்த்தியுள்ளார். அதை முழு இதயத்தோடு ஏற்று நீதிபதியாகவும் ஒரு மனிதனாகவும் சந்துரு பயணத்தை நிறைவு செய்துள்ளார் எனபதை தெரிவிக்கிற நூலிது.

வெளியீடு:
மணற்கேணி பதிப்பகம்,
முதல் தளம், புதிய எண் 10, டாக்டர் நடேசன் சாலை
திருவல்லிக்கேணி, சென்னை – 5
கைபேசி: 9443033305
மின்னஞ்சல்: manarkeni@gmail.com
விலை ரூ. 95/-

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்