பிறந்தநாள்

(மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலாவில் 2015 ஜுன் 6,7- ஆகிய நாட்களில் மணிப்பூர் அரசின் மாநில கலை இலக்கிய அமைப்பு சார்பில்’ நான்காம் இலக்கியத் திருவிழா’ நடத்தினர்: முதல் நாள் சிறுகதை அரங்கம்: இரண்டாம் நாள் கவிதை அரங்கம். முதல் நாள் சிறுகதை அரங்கத்துக்கு தமிழ் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) தலைமையேற்று நடத்தினார். ‘கிளிகளின் சுதந்திரம்’ – என்னும் அவரது சிறுகதையினை (ஆங்கில மொழியாக்கத்தில்) வாசித்தார். கவியரங்கத்துக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஒடிசா கவிஞர் பகவான் ஜெயசிங் தலைமை யேற்றார். சூரியதீபனின் பின்வரும் கவிதை அக்கவியரங்கில் வாசிக்கப்பெற்றவை.)

பிறந்தநாள்

பெருந்தகைக்குப் பிறந்த நாள்,
மாலை, மலர்க்கொத்து
சால்வை, சரிகைப் பட்டு
சதிர்நிறை புகழாரம்

சாதனைப் பயிர் கொழுக்க
இட்ட உரம், அடிமண்
முகவரி எது?

புலப்பம் கொள்ளாமல்
சிறு பொய் முணு முணுப்பும்
கொட்டாமல்,
இருள்தின்று,
எரிந்த மெழுகுவர்த்தியின்
ஒளிவட்டத்தில் யார்?

பேரறிஞர், பெருங்கலைஞன்
நாக்குச் சுழட்டலில்,
நானிலத்தை சுருட்டும் நாவலன்,
தலைகீழாய்ப் பாய்ந்து
மூச்சடக்கி முத்தெடுத்து நிமிரும்
பேனாவின் பிரும்மா
ஓவியன், கோபுரச் சிற்பி
இத்தனை பெயர்களும் தந்தாய்

உனக்கெனக் கொண்டது
ஒரு பெயர் மட்டுமே
‘பெண்’

ஒரு முகமும் அற்று
ஆண் முகத்துள் அடங்கும்
உன் முகம்.

நுழையவில்லை
உன் சமையறைச் சன்னலில்
உலகெலாம் தலைகீழாய்ப் புரட்டும்
பெருங்காற்று.

பெய்யவில்லை
இன்றைக்கும் உன் பூமியில்
தரிசுக் காடெல்லாம்
தண்ணி புரள அடிக்கும் மழை

இல்லை எவர்க்கும் நினைவில்லை
நீ பிறந்த நாள்!

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசத்தின் “கரிசலின்‌ இருள்கள்‌” - எஸ்.ராமகிருஷ்ணன்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

சாகாப் பொருளும் அது, சாகடிக்கும் பொருளும் அது!