விட்டு விட்டு ஊதியவனும், விடாமல் ஊதியவனும்

எந்த விருதும் சார்புத் தன்மையில்லாமல் வழங்கப்படுவதில்லை. வழங்கப்படுமானால் "நா என் ஒத்தக் காதை அறுத்துக்கிறேன்" என்று நாட்டுப்புறத்தில் சவால் விடுவது போல், சொல்ல வேண்டியது வரும். தகுதிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாயிருந்தாலும், சார்புத்தன்மை நோக்கிலேயே தகுதிகளும் வரையறுக்கப்படுகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் 'விருதுகள் வழங்கப்பெறுவதில்லை; வாங்கப்பெறுகின்றன', என்கிற தற்கால யதார்த்தத்துக்கே வர வேண்டி உள்ளது.

நார்வேயிலிருந்து இயங்கும் "நோபல் விருது" நிறுவனத்தின் தோற்றம் நோக்கம் சார்புத்தன்மையும், சார்பான செயல்முறைகளும் கொண்டதே. முதலாளித்துவ உலகிலிருந்து வெளிப்படும் நல்லதும், கெட்டதும் உலக அங்கீகாரம் பெற்று விடுவது போல, அறிவுச் சந்தை நோக்கிய இந்த வலை வீச்சும் பெற்றுவிட்டது. மேற்குலக நாடுகளிலிருந்து வெளிப்படுகிற எந்த தத்துவமும், சமுதாயப் பார்வையும், இங்குள்ள நமது மக்களின், நமது தேசியத்தின் சுயத்தன்மையைக்குப் பொருந்துவதா, இல்லையா என உரைத்துப் பார்க்காமல் உடனே இறக்குமதியாக்கி சுவீகரித்துக் கொள்ளும் நம்மூர் அறிவுஜீவிகள் இங்கே நினைக்கப்பட வேண்டியவர்கள். இங்கும் கூட சிலர் எடுத்ததற்கெல்லாம் நோபல் பரிசு பெற தகுதியானவர் இவர் என்று கதைத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

முதலாளியக் கோட்பாடுகளுடனான நோபல் விருதுக்குழு-இந்த ஆண்டு, சீனரான லியோ ஷியாபோவுக்கு வழங்கி, தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது. சென்ற ஆண்டு (2009) அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான விருது வழங்கி இன்னும் மோசமாக நடந்து கொண்டது.

ஒபாமா - அமெரிக்காவின் உயர் அதிகாரத்திலிருப்பதால், அமெரிக்காவைப் போலவே அனைத்துலக செல்வாக்கு மிக்கவர். யாராக இருப்பினும் அதிபர்களுக்கு, அமெரிக்காவே அடையாளமும் அங்கீகாரமும் தருகிறது. ஒபாமா-தனிப்பட்ட, வித்தியாசமான குணங்களுடன் மேலே வந்தவராக இருக்கலாம். ஆனால் அதற்கு மேல் வித்தியாசமாய்ப் போக அமெரிக்கா அனுமதிக்காது. எனவே பதவிக்கு வந்த ஓராண்டுக்குள்ளேயே-அமைதிக்கான விருது வழங்கப்படுகிறது. கொஞ்சம் சிரித்துக் கொள்ளலாம். கொடூரமான இரு ஆக்கிரமிப்புப் போர்களை (இராக், ஆப்கான்) நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பயங்கரவாத நாட்டின் அதிபருக்கு அமைதி விருதா என்று சிரித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த நாடுகள் பயங்கரவாத நாடுகள் என்று பெயர் சூட்டப்பட வேண்டுமோ, அவர்கள் மற்றவர்களைப் பயங்கரவாதிகள் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்து கெள்கிறார்கள் என்பது இதன் இன்னொரு முரண்.

விருதுகள் வழங்குகிறவர்களின் கண்ணியம், நேர்மையை விட, விருதுகள் பெறுகிவறர்களின் கண்ணியம், நேர்மைதான் கேள்விக்குள்ளாகிறது. ஆனால் பயங்கரவாதிகள் எவரும் அமைதிக்கான நோபல் விருதுகளை மறுக்கிற அளவுக்கு ஈனத்தனமுடையவர் அல்ல என்பதை வரலாறு காட்டி வருகிறது.

2

இந்த ஆண்டு (2010) அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட, அதிகாரத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதையே தொடர்ந்து செய்கிற - சிறையிலடைக்கப்பட்ட குற்றவாளிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


லியோ ஷியாபோ ஒரு எழுத்தாளர். இலக்கியவாதி. பல படைப்புக்களின் சொந்தக்காரர். ஆனால் அவருடைய எழுத்துக்களுக்காக வழங்கப்படாமல் அத பற்றிய கவலையும் கொள்ளாமல் - களப்பணிகளுக்காக அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.

நோபல் நிறுவனத் தலைவர் ஜாக் லாண்ட் இரண்டு தடவை கட்டுரைகள் எழுதி அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டு இச் செயலை நியாயப்படுத்தியுள்ளார். சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைப் பற்றி நார்வே அரசு வைக்கும் விமரிசனத்தைக் கைவிட வேண்டும், பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாய் இதைச் செய்ய வேண்டும் என சீனா விமர்சித்துள்ளதாக ஜாக் லாண்டன் கூறுகிறார். இந்த எரிச்சலில் நடந்த பரிமாற்றம் தான் நோபல் பரிசு என்று எண்ணத் தோன்றுகிறது.

"சீனா கொடூரமான முதலாளிய வழிமுறைகளில் தொழில் வளர்ச்சியை அடைந்துவருகிறது" என்பதுதான் - ஜாக்லண்டனின் கவலை. அதற்காகத்தான் நோபல் விருதை வழங்கியிருக்கிறார். அடப்பாவி, எங்களுடைய கவலையும் அதுதான் என்று அவருக்கு நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் சனநாயக வழியில் சுரண்டல் செய்ய வேண்டியதுதானே, சர்வாதிகார முறையில் அதை ஏன் செய்கிறீர்கள்? என்பதுதான் அவர் வாசகத்தின் உட்பொருள். சர்வாதிகாரப் பாதையில் நடந்து முதலாளித்துவத்துக்கு கெட்ட பெயர் ஏன் வாங்கித் தருகிறீர்கள் என்பது அவரது கேள்வி. இதற்கான போராட்டக் களத்தில் - அதாவது முதலாளிய உரிமைகளைப் பெற்றுத் தர முயலும் களப் போராளிக்கு விருது என வெளிப்படையாகவே அறிவிக்கிறார் ஜாக்லண்டன்.

ஒரு இலக்கியவாதிக்கு விருது வழங்கப்படாமல் ஒரு களப்போராளிக்கு விருது வழங்கப்பட்டதின் ரகசியம் இப்போது புரியும். களப்பணிகளையே குற்றங்கள் என சீன அரசு கம்யூனிச மொழியில் சொல்கிறது.
  1. சோவியத் யூனியன் சிதறுண்டதைப் போல சீனாவும் சிதற வேண்டும் என்ற நோக்கில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு மக்களைத் தூண்டியவர்
  2. சீனாவில் அரசியல் மறுசீரமைப்பினை வலியுறுத்தினார். அதன் பொருட்டு அரசியல் சாசன மறு சீரமைப்பு வரைவினை உருவாக்கியதில் முன்னோடியாகச் செயல்பட்டார். சீன அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூகவியல் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் என 303 பேர் இம் மறுசீரமைப்பு வரைவில் கையெழுத்திட்டனர்.
  3. ஒற்றைக் கட்சி ஆட்சி முறையிலிருந்து சீனா விடுபட்டு பல கட்சி சனநயாக முறையில் இயங்க வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து பணி செய்தார்.
1989-ல் பீஜிங்கின் தியானென்மென் சதுக்கத்தில் சனநாயகத்திற்கான போராட்டம் தொடங்கியது. அரசியல் சீர்திருத்தங்களையோ, சனநாயக வழிமுறைகளையோ எற்பவரல்ல அப்போதைய சீன அதிபர் டெங்சியா பிங். அவருக்குள் ஓடிய வேர் அவருடையது மட்டுமேயல்ல. அந்த வேர் சீனப் பொதுவுடைடைக் கட்சிக்குள் ஓடுகிறது. கட்சிக்குள் ஓடும் வேரையும், தலைவர் மாவோவுக்குள் தேட வேண்டும். மாவோ சில பொழுதுகளில் தவிர, பிற அனைத்துக் கால கட்டங்களிலும் கட்சியை ஒற்றை மனப்போக்குடன் இயக்கியவர். கலாச்சாரப் புரட்சி போன்ற சீன வரலாற்றுக் கொடூரத்தை உற்பத்தி செய்தவர்.

சீன மாணவர்கள் அறிவுத்துறையாளர்கள், இலக்கியவாதிகள் மத்தியில் மதிப்புடன் காணப்பட்டவர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹீயாவ். சனநாயக நேசிப்பாளர்- கட்டிடத்தை கீறிப் பிளவுக்கும் அரசங்கன்றுக்கு இரண்டு இலை விடுகிற அளவுக்கே சுதந்திரம் கிடைக்கும். மக்களுக்கு அரசியல் உரிமை கிடைக்க வேண்டுமென விரும்பின அவருக்கும் அந்த அளவே வெளிப்படை சுதந்திரம் கிடைத்தது. மாணவர்களிடமும் தொழிலாளர்களிடமும் நிலவிய சனநாயக வேட்கைக்கு தோள் கொடுத்ததால் 1987-ல் அவரை பதவியிலிருந்து எறிந்தார் டெங். 1989 ஏப்ரல் 15-ல் சனநயாக நேசிப்பாளரான ஹு யாவ் பாங் இறந்து போனார்.

"தவறான ஆள் இறந்து போய்விட்டார்"

சீனத் தலைநகரெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை மக்கள் கூடிக் கூடிப் பார்த்தார்கள். அதன் அர்த்தம் அவர்களுக்கு புரிந்தது. இறந்து போயிருக்க வேண்டியவர் டெங் என்று சுவரொட்டி சொல்லாமல் சொல்லியது. கூட்டம் கூட்டமாய் தியானென் சதுக்கத்தில் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

அதன் பின்னர் மாணவர்கள் ஓயவில்லை. ஏப்ரல் 17-ந் தேதி 3000 பேராய்க் கூடிய மாணவர்கள் ஏப்ரல் 21-ந் தேதி பத்தாயிரமாய்க் குவிந்தார்கள். நகர்புறத் தொழிலாளர்களும் இணைந்தார்கள். மே 9 இயக்கத்தின் நினைவுநாளில் ஏறக்குறைய ஒரு லட்சம் மாணவர்களும் தொழிலாளர்களும் சனநாயக அரசியல் சீர்திருத்தங்கள் வேண்டி மாபெரும் பேரணி நடத்தினார்கள்.தியானென்மென் சதுக்கம் மாவோவின் மண்டபத் திடலாக மட்டுமல்ல, உண்ணாநிலைப் போராட்டம் போல பல வகைப் போராட்டங்களின் காட்சிக் களமாகியது.

மே 30-ந் தேதி சுதந்திரத் தேவதையின் சிலை ஒன்றை தியான்மன் திடலில் நிறுவினார்கள் மாணவர்கள். எதையும் ஏற்கத் தயாரில்லை டெங். ஹீயாவ் பாங்க்குக் பிறகு கட்சியின்பொதுச் செயலரான டுஜோவ் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்பவராக இருந்தார். ஆனால் அவருடைய சொல், டெங் ஆட்சியில் அம்பலம் ஏறவில்லை. போராட்டக்காரர்களை இரக்கத்துடன் அணுகுமாறு கேட்ட டுஜோவ் ஓரங்கட்டப்பட்டார். மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவரான டெங்கும் பிற மூத்தவர்களும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கே இது வேட்டு வைத்துவிடும் என்று அஞ்சினர். தலைநகரிலிருந்து மக்கள் விடுதலைப்படை (ராணுவம்) மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதென்பதை முன்கூட்டி உணர்ந்தததால் வெளியிலிருந்து படையினரை வரவழைத்தார்கள். வெளிப்படைகள் நகருக்குள் நுழைந்தபோது பீஜிங் நகர மக்கள் எதிர்த்தார்கள். எழுப்பிய தடையரண்களை உடைத்துக்கொண்டு படை உள்ளே நுழைந்தது.

ஜுலை 3-ந் தேதி இரவு ராணுவம் தியான்மென் திடலில் வரைமுறையற்றுச் சுட்டு வேட்டையாடியது. எதிர்த்து முன்னேறிவந்தவர்கள் மீது ராணுவ டாங்கிகளை ஏற்றிக் கடந்தது. தியானென்மென் திடலை 5000 சடலங்களின் மயானமாக்கிய பின், ராணுவத்துக்கு அமைதி கிட்டியது. விடியல் காலை 5.30 மணிக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அமைதியாய்த் தூங்கப் போனார்கள்.

இப்போது 54 வயதிலிருக்கும் லியோ ஷியோ போ அப்போது முன்னணிப் போராளி 1989 போராட்டத்துக்காக 24 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை மீண்டு பின்னும் சனநாயக மீட்புக்கான போராட்டங்களை கைவிடத் தயாரில்லை. கட்சி எனும் ஒற்றை அதிகாரப் புதைகுழியிலிருந்து சனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்ட வழியில் ஏற்கனவே சிறையிலிடைக்கப் பட்டிருந்தவர்களை விடுவிக்குமாறு கோரினார். 1996-ம் ஆண்டில் அதற்காக மறுகற்பித்தல் முகாமில் 3 ஆண்டுகள் வைக்கப்பட்டார் (இந்த மறு கற்பித்தல் முகாம் கலாச்சாரப் புரட்சியின் ஒரு அம்சம். மாவோ காலத்திலிருந்து இயங்கிய இந்த சீர்திருத்தப் பள்ளி சிறையின் மறு பெயர்).

சீனாவின் தியான்மென் திடலை ரத்தச் சகதியாக்கிய 1989ல் திபேத்தின் தலாய்லாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டமை இங்கு குறிக்கத்தக்கது. கண்கள் ரத்தச் சிவப்பாகி அதை எதிர்த்த சீனாதான் 1989 முதல் மனித உரிமை. சனநாயக ஒற்றைக் கட்சி ஆட்சி முறை எதிர்ப்பு என்ற உயரிய நோக்கங்களுக்காக குரல் கொடுத்தவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதையும் ஏற்க மறுத்துள்ளது. இத்தகைய உயரிய குறிக்கோள், மற்றவருக்கு களப்பணிகள். சீன அரசுக்கு அவை குற்றங்கள்.

11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள குற்றவாளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கிய சீன நீதிமன்றத்தை நோபல் விருதுக்குழு அவமானப்படுத்திவிட்டதாக சீனத்தரப்பு கூறுகிறது. குற்றவாளியைத் தேர்வு செய்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்துக்கு மேலான உயர்ந்த அமைப்பாக தங்களைக் கருதிக் கொண்டுவிட்டனர் என சீனா அனுப்பிய செய்தி உலக முழுதும் வெளிவந்தது. ஆனால் பி.பி.சி, சி.என்.என் போன்ற தொலைக்காட்சி ஊடகங்கள் லியோ ஷியாபோவுக்கு பக்கபலமாகப் பேசிய ஒளிபரப்புகளை சீனாவில் தடை செய்தனர். இணையம் வழியாக எதுவும் நுழைந்து விடாமல் முடக்கினர்.

விருது வழங்கும் செய்தி கூட சிறைப்பட்ட லியோ ஷியோபோவுக்கு தெரிவிக்கப்படவில்லையென உலக ஊடகங்கள் கிழிக்க ஆரம்பித்த பின்னரே, சீன அரசு அவருக்குத் தெரிவிக்கும் பொறுப்பை அவரது மனைவிக்கு அளித்தது. மனைவிதான் அவருக்கு முதல் தகவல் கொடுத்தார். தகவல் அளிக்கச் சென்றவரை, உலக ஊடகங்கள் சூழ்ந்தபோது ஊடக முற்றுகையிலிருந்து பாதுகாப்பாய் வீட்டுக்குக்கொண்டு வந்தது. இப்போது மனைவியும் வீட்டுக் காவல் சிறையில் உள்ளார்.

உலக நடப்புக்கு இது புதிதல்ல. அரசாட்சிகளுக்கு இது அதர்மம் அல்ல. ஐ.நா.வின் போர்ககுற்ற விசாரணையை ஏற்காமல் மறுத்து வம்படிக்கும் இலங்கை அரசு, உண்மைகளைக் கண்டறிவது என்ற பெயரில் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றை நியமித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை நேரில் காண செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஏற்கனவே கிளிநொச்சியில் நடந்த விசாரணைக்கு பி.பி.சி நிறுவனத்துக்கு – அனுமதி மறுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இப்போது நடைபெறும் விசாரணைக்கும் அனுமதியில்லை. அனுமதி கேட்டு, விண்ணப்பித்து இருமாதங்கள் கடந்த பின்னும், அனுமதி மறுப்புக்கான காரணங்களை தெரிவிக்க அதற்குப் பொறுப்பான படைத்துறை அமைச்சு மறுத்து விட்டது. இலங்கை போன்ற பயங்கரவாத நாடுகளில் இது அன்றாட இயல்பான வழமையாகிவிட்டது போலவே - சீனா போன்ற நாடுகளும் இதில் தேர்ந்து விட்டன. பயங்கரவாதமும், கம்யூனிசமும் பக்கம் பக்கமானவையல்ல. ஒன்றுதான் என்ற கருத்து மக்கள் மனதில் படிய ஆரம்பித்துள்ளது.

வல்லரசோ, வல்லரசைச் சார்ந்து இயங்கும் அரசுகளோ, மக்களுக்கு எதிரான அநீதி-உலகப் பொது நியதியாகி விட்டது. பேரினவாத சிங்கள அரசின் நீதிமன்றங்கள் இதற்கு சரியான எடுத்துக்காட்டு. நாட்டை சிங்களமயமாக்கும் திட்டத்துக்கு இணைவான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கி வந்துள்ளன. அரசியல் மயப்படுத்தப்பட்ட நீதிமுறைமைதான்,ஏறக்குறைய எல்லா இடங்களிலும் நிலவுகின்றன என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால். அரசு எவ்வழி, அவ்வழி நீதிமன்றம் என்ற நிலப்பிரபுத்துவ கால செயல்முறை - இன்றைய சீன சர்வாதிகாரத்தில் நவீன வகையில் தொடர்கிறது.

3

"மாபெரும் சமுதாய மலர்ச்சிக்கு மேதைகளின் பங்கு முக்கியமானது. அதனால் – அவர்கள் மதிக்கப்பட்டார்கள். சீன நாகரிகம், வரலாறு, பண்பாடு (civilisation) நெடுகிலும் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். கழுவுகிற மீனில் நழுவுகிற மீனே உண்மை. எப்போதும் நழுவிப் போகும் (elusive) உண்மையைக் கண்டறிவதும், கைப்பிடித்துக் கொள்வதும், மேதைகளின் பணிகள். பயமோ, சார்போ அற்று உண்மைகளை வெளிப்படுத்துவது மேதைகளுக்கு விதிக்கப்பட்ட கடமை. அதன் பின் தொடர்ச்சியான பொறுப்புகளும் அவர்களுக்கு உள்ளன. மடை மாற்றுவதோ, திசை திருப்புதலோ கூடாது. எதுவாக இருக்கிறதோ, அல்லது எதுவாக இல்லையோ, அதை அப்படியே சித்திரப்படுத்த முடியாமல் போகிறபோதுதான் மடை மாற்றலோ, திசை திருப்பலோ நடக்கிறது"
- மேதைகள் பற்றிய இந்த முத்துக்களை சைனா டெய்லி (9.11.2010) என்ற நாளிதழ் உதிர்த்துள்ளது. தந்தவர் குன் என்கிற, ஆய்வு நிறுவனத் தலைவர்

"சீன அறிஞர்கள், சிந்தனையாளர்கள்,சுதந்திரமான செயல்பாடுள்ளவர்களாக இல்லையென்பது மேற்குலகின் (முதலாளிய நாடுகள்) கருத்தாக இருக்கிறது. இது பிழையானது. இவர்களது கருத்துக்கள், விமரிசனங்கள் சீன வளர்ச்சியைப் பாராட்டவில்லை. அங்கங்கே சில சுதந்திர வெளிப்பாட்டுக்குத் தடையிருந்தபோதும், அந்த அரைகுறைத் தடைகள் இன்று அகன்று வருகின்றன. நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்பிருந்ததையே மேற்குலகினர் இன்னும் கூறி வருகின்றனர்.

நான்கைந்து தலைமுறைகளுக்கு முந்திய காலத்தில் இருந்ததை விட, தற்போது அறிஞர்கள் கருத்துரிமையோடு வெளிப்பட்டுச் செயலாற்றுகின்றனர். இந்த வளர்ச்சியைப் பாராட்டி வரவேற்க மனம் வர வேண்டும். மேற்குலக ஊடகங்கள் போலவே, மேலை அறிஞர்களும் சீனாவுக்கு எதிராகவே பரப்புரை செய்கிறார்கள். இது நல்லதல்ல. எப்போதும் எது சரி என்பதற்கு விட, எது பிழை என்பதற்கே கூடுதல் முக்கியத்துவம் தருவது மேதைகள் இயல்பாக ஆகிவிட்டது. சரிக்கும் தவறுக்குமான வெளிப்படுத்தலை சமநிலையுடன் செய்வது சீன அறிஞர்களின் இயல்பு. இதனால் சமுதாயம் பயனடைகிறது"

இங்கே நா.காமராசனின் "விலைமகளிர்" என்ற கவிதை நினைவுக்கு வருகிறது.
"நாங்கள் ரோஜாக்கள்
பறிக்கிற உங்கள் கைகளில்தான்
முள் முளைத்திருக்கிறது"
என்பார் (இது பாலியல் தொழிலாளர் பற்றிய கவிதை. அவர்களுக்கானதாக மட்டும் இதனைக் கொள்ளாமல், பெண்ணினம் முழுதுக்குமானதாக நீட்டித்துக் கொள்ள முடியும்).

மேதைகள் ரோஜாக்களே. அவர்களைப் பற்றி 'குன்' உதிர்க்கும் கருத்துக்களில் தான் முள்ளிருக்கிறது.

மேதைகள் பற்றி ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள் இருக்கிறது.

"அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். மேதைகள் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்"

உண்மையில் எதிர்வரும் தலைமுறைகளுக்காகச் சிந்திக்கிறவர்கள், அரசியல் தலைமைகளின் சுயநலன்களோடு இணைந்து பயணிக்க முடிவதில்லை.

அறிஞர்களை இருவகையாக 'குன்' பிரிக்க முயல்வது தெரிகிறது. பிழையனவைகளை மட்டுமே சுட்டிக் காட்டுகிற மேற்குலக அறிவிஜீவிகள். சீனாவின் சரிகளை மட்டுமே பேசுகிற சீன அறிஞர்கள்.

சீனாவில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு இடத்தில் நிகழுவதை சீனாவின் மொத்த சித்திரமாகச் சித்தரித்துக் காட்டி விடுகிறார்கள் என்கிறதாக குன் போன்றவர்கள் கருதுகிறார்கள். சீனாவைப் பற்றிய பாதகமான செய்திகளை அறிவதற்கு உலகம் தீராப் பசிகொண்டு அலைவதாக அவர் கூறுகிறார். செய்திகளை அறியப் பசியுடன் அலையும் உலக ஊடகங்களை மட்டுமல்ல, உள்ளூர் ஊடகங்களையும் நடப்பை அறிய விடாமல் இருட்டடிப்புச் செய்த நிகழ்வு லியோ ஷியா யோவின் மனைவி, நோபல் விருதுச் செய்தியை தெரிவிக்கச் சென்றபோது நடந்தது.

எந்த செய்தியையும் வெளியே விடுவதில்லை என்பதுதான் அரசின் கொள்கை. 2008 மே-யில் மத்திய சீனாவின் செங்சூ பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளிக் கட்டிடங்கள், ரசாயன ஆலைகள் நொறுங்கி விழுந்தன. ஏறக்குறைய பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். நில அதிர்வு மதியப் பொழுதில் நடந்தது. பள்ளிகளில் குழந்தைகள் கல்வி கற்றுக் கெண்டிருந்தனர். ஜீயான் நகரில் மூன்று மாடி இடிந்து விழுந்ததில் 900 குழந்தைகள் புதையுண்டனர். பீஜுவான் வட்டாரத்தில், ஒரு உயர்நிலைப் பள்ளி இடிந்து விழுந்ததில், ஆயிரம் மாணவர்களுக்கு மேல் இறந்தனர். அந்தக் கொடிய நில அதிர்வின் வீச்சுக்களால் பயந்து போன பீஜிங் நகர மக்கள் தெருவுக்கு வந்தனர். இப்படியொரு நில அதிர்வின் கொடூரத்தைக்கூட சீனா வெளியுலகுக்குத் தெரியாமல் மறைத்தது. வெளிநாட்டு ஊடகங்கள் உள்ளே நுழைய இயலாமல் தடுக்கப்பட்டன. ஆனால் தைவான் வரை உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை செயற்கைக் கோள்கள் வழி அறிந்த அமெரிக்கா போன்ற நாடுகள் உதவ முன்வந்தபோது சீனா மறுத்துவிட்டது. கொடூரத்தை பிற நாடுகள் அறியத் தந்தால் தங்கள் முகம் சப்பழிந்து (face value) போய்விடுமாம். வாழ்வானாலும் சாவானாலும் நாங்களே பார்த்துக்கொள்வோம் என்ற வைராக்கியம் நல்லதுதான். ஆனால் அது சனநாயக நடைமுறையிலிருந்து வரவில்லை. கம்யூனிச சர்வாதிகார அரசியல் முறையிலிருந்து வருகிறது.

சனநாயகக் கூத்து நடக்கும் தமிழ்நாட்டில் அரசாங்கம் என்ன ஊதச் சொல்கிறதோ, அதை ஊதும் ஊடகங்களே இயங்குகிறபோது - சர்வாதிகாரக் கூத்து நடக்கும் சீனாவில் அது பிசிறில்லாமல் நடக்கும் எனச் சொல்லவே வேண்டாம்.

முதலாளிய நாடுகளின் அரசுகளில், ஊடக அடக்குதல் என்பது இடையிடையிட்ட நிகழ்ச்சி. அரசியல் சுதந்திரமற்ற கம்யூனிச முகாம்களில் இது தொடர்நிகழ்வு.

நாயனம் என்ற நாதசுர இசை தமிழகத்துக்கு உரிய தனி இசை. ஒரு வெள்ளைக்காரர், நாயன இசைக்கச்சேரியை வெகுவாக ரசித்தார். அவரையே நாயனக் கலைஞர்களை கௌரவிக்க அழைத்தார்கள். பிரதானமான நாயனக் கலைஞரை விட்டுவிட்டு, ஒத்து ஊதுகிற நாயனக்காரருக்கு அவர் மாலையணிவித்துப் பாராட்டினார். பாராட்டுகிறபோது அவர் சொன்னாராம்
"அவன் விட்டு விட்டு ஊதுகிறான்
இவன் விடாமல் ஊதுகிறான்"
இடையில் விட்டுவிட்டு ஊதுகிற ஊடகவியலாளர்களை விட, விடாமல் ஒத்து ஊதுகிற செய்தித்தாள்களையே சீனாவுக்குப் பிடித்திருக்கிறது.

அரசைப் போலவே, சீன ஊடகங்களுக்கும் அறிஞர்களுக்கும் லியோ ஷியாபோவுக்கு அமைதிக்கான விருது கிடைத்தது எதிர்ப்புக்குரியது. தேசத்தின் அமைதியைக் கெடுக்கும் குரல் என்று ஊடகங்கள் வழியே விடாமல் ஊதிக் கொண்டிருக்கிறார்கள் சீன அறிஞர்கள்.

அக்டோபர் முதல் வாரத்தில் லியோ ஷியோ போ-வுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தியை அரசு அவருக்குத் தெரியப்படுத்தவில்லை. உலகெங்கிலுமுள்ள தொலைக்காட்சிகள் அரசைச் சாடி, செய்திவெளியிட்ட பின்னரே, அரசு அவருக்குத் தெரியப்படுத்த முயல்கிறது. அதுவும் அவருடைய மனைவியை அனுப்பி தெரிவிக்கச் செய்கிறார்கள். தன்னைச் சூழ்ந்த உலக ஊடகங்கள் எதனையும் சந்திக்க விடாமல் மனைவி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார்.

சீனாவின் எந்த மேதையும் அதனைத் தட்டிக் கேட்கவில்லை. கூசாமல் அவர்களை அறிஞர்கள் வரிசையில் நிற்க வைத்து விடுகிறார்கள். தனக்கு இசைவான கருத்துb வளியை அனுமதிப்பது மட்டுமே ஊடக சுதந்திரம், தனக்கு இசைவான கருத்து வெளியில் நடமாடுகிறவர் மட்டுமே அறிஞர் - இவ்வாறு சீன அரசு கருதுவதை அப்படியே அச்சுக் கோர்க்கிற குன் போன்ற மேதைகளுக்கிடையே லியா ஷியாபோ ஒரு போராளிதான். போராளிக்கு விருது வழங்கி - நோபல் விருது நிறுவனம் அவ்வப்போது தன் கறையைக் கழுவிக் கொள்கிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை