எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்கள் மீது தாக்குதல் - கண்டன அறிக்கை

எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை - 20.12.2006

1. தமிழக அரசின் 2003 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான (‘தகப்பன் கொடி') இலக்கிய விருதினைப் பெற்ற எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்கள் மீது, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி திரு. சங்கரன் என்பவர் தாக்குதல் நடத்தியதற்கு நாங்கள் எங்களுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது என்ற செய்தியைப் பார்த்து, தனது பதிவு மூப்பினை சரிபார்த்துக் கொள்ள 15.12.2006 அன்று வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குச் சென்ற திரு.அழகிய பெரியவன் அவர்கள், தனது உடல் இயலாமையால் நீண்ட நேரம் காத்திருக்க முடியாது என்பதால், வேலைவாய்ப்பு அதிகாரி திரு. சங்கரன் என்பவரை சந்தித்து, தனக்கு வேலைவாய்ப்பு அட்டையை சரிபார்த்துத் தரவேண்டும் என்றும், தனது மனைவிக்கும் வேலைவாய்ப்பு அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

3. ஆனால், அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, அழகிய பெரியவனை ‘ஊனமுற்றவன்' என்று கேலி பேசியதோடு வெளியே போகச் சொல்லி கோபமாக கூறியிருக்கிறார். இதை எதிர்த்து, தகவல் உரிமை அறியும் சட்டப்படியும் ஒரு மனுதாரர் என்ற அடிப்படையிலும் எனக்கு உரிய விவரத்தை நீங்கள் அளிக்க வேண்டும்; என்னை நீங்கள் வெளியே போகச் சொல்ல முடியாது என்று பதிலிறுத்தவரை, மீண்டும் கடும் சொற்களால் திட்டி, அழகிய பெரியவனின் இடது கையை முறுக்கி, மேல் முதுகில் அடித்ததோடு, அவரது கழுத்தைப் பிடித்து அறைக்குள் இருந்த நாற்காலிகள் மீது தள்ளியிருக்கிறார் அந்த அதிகாரி. இத்தாக்குதலால் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்த சத்தத்தைக் கேட்டு அறைக்கு வெளியே இருந்த அரசு ஊழியர்களும் - தாக்குதலுக்கு ஆளான அழகிய பெரியவனையே கடுஞ்சொற்களால் திட்டியிருக்கிறார்கள். மேலும், அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, "நீ மோசமான நடத்தையுடையவன், உனக்கு ஆயுசுக்கும் வேலை கிடைக்காத மாதிரி செய்து விடுவேன்'' என்று மிரட்டி, அவருக்கு எதிராக காவல் துறையிலும் புகார் செய்வதாக அச்சுறுத்தியுள்ளார்.

4. மனிதப் பண்பாட்டின் விழுமியங்களைக் கட்டிக் காக்கும் எழுத்தாளர்களை இவ்வாறாக இழிவுபடுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்ற ஒரு பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அழகிய பெரியவன் அவர்களுக்கே இப்படி ஓர் அவமானம் ஏற்பட்டது கண்டு எழுத்தாளர்களாகிய நாங்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளோம். எழுத்தாளர் அழகிய பெரியவனை அவமானப்படுத்தி, அவர் மீது தாக்குதலைத் தொடுத்து, ஓர் அரசு அதிகாரி ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து விலகி, மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி திரு.சங்கரன் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; குற்றவியல் சட்டத்தில் அவரைக் கைது செய்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

5. தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யச் செல்லும் பட்டதாரிகளை, அந்த அலுவலக அரசு ஊழியர்கள் ஒருமையில் பேசியும் பல மணி நேரங்கள் காத்திருக்க வைத்தும் வெளியூரிலிருந்து வரும் பட்டதாரிகளை மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தி, சொல்லொணா துன்பத்திற்கு ஆளாக்கும் வேதனையைத் தடுத்து நிறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.வி. ராஜதுரை, கோவை ஞானி, பா.செயப்பிரகாசம், இன்குலாப், அய். இளங்கோவன், சுப.வீரபாண்டியன், வ.கீதா, மங்கை, பாமா, வீ.அரசு, அ.மார்க்ஸ், விடுதலை க.ராசேந்திரன், பி.பி.மார்ட்டின், ரா.ஜவகர், தியாகு, லட்சுமணன், விஜயபாஸ்கர், பத்மாவதி விவேகானந்தன், ஏபி.வள்ளிநாயகம், கவிதாசரண், எழில் இளங்கோவன், அ.முத்துக்கிருஷ்ணன், விழி.பா.இதயவேந்தன், மீனா மயில், யாக்கன், நீலகண்டன், கொடிக்கால் ஷேக் அப்துல்லா, லுத்புல்லா, சுகிர்த ராணி, குட்டி ரேவதி, ம.மதிவண்ணன், யாழன் ஆதி, ஆதவன் தீட்சண்யா, அன்பு செல்வம், கே.எஸ். முத்து, சு.சத்தியச் சந்திரன், பூங்குழலி, பூவிழியன், கு.காமராஜ், அரங்க.மல்லிகா, அசுரன், பெரியார் சாக்ரட்டீஸ், தலித் சுப்பையா, தமிழேந்தி, வாலாசா வல்லவன், மு.பா.எழிலரசு, புனித பாண்டியன், கவுதம சன்னா, பொ.ரத்தினம், கா.இளம்பரிதி, ஆர்.ஆர்.சீனிவாசன், கண்ணன்.எம், அபிமானி, கண.குறிஞ்சி, வேலிறையன், மா.பொன்னுச்சாமி, ஓம்பிரகாஷ்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு!

கரிசல் வெள்ளாமை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

கி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்