பள்ளிக்கூடம் நாவல்: பாடமாகும் அனுபவங்கள் - பேராசிரியர் இரா.கந்தசாமி


கரிசல் காட்டின் இலக்கிய உழவில் முன்னத்தி ஏர் பிடித்தவர்களில் தனக்கெனத் தனிப்பாதை வகுத்துக் கொண்டவர் பா.செயப்பிரகாசம். 1971 முதல் ஒரு படைப்பாளியாகத் தொடங்கி, ஐம்பது ஆண்டுகளை நிறைவுசெய்ய இருக்கும் பா.செ கரிசல் மண்ணின் புழுதிச் சூட்டையும் அதிகாரத்தால் நெருக்குண்டு தவிக்கும் மக்களின் வாதைகளையும் அவர்தம் சமூக வாழ்வின் அற்புதத் தருணங்களையும் அதிகார மையங்களை எதிர்த்தடிக்கும் கலக அரசியலையும், புறச் சமரசங்கள் இல்லாமல் படைப்புகளாகத் தந்துகொண்டிருப்பவர். அவ்வகையில் இடதுசாரித் தத்துவப் பின்புலத்தைத் தம் படைப்புக் களத்தில் எதிரொலிப்பவராகவும் அவர் இயங்கி வருகிறார். புனைகதையுலகில் பா.செயப்பிரகாசம் என்றும் கவிதையுலகில் சூரியதீபன் என்றும் தொய்வின்றி இயங்கிவரும் பா.செ. ‘ஒரு ஜெருசலேம்’ தொடங்கி, ‘காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்’ வரை பன்னிரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ‘எதிர்க்காற்று’, நதியோடு பேசுவேன்’ என இரண்டு கவிதைத் தொகுப்புகள் எனும் மிக நீண்ட பயணத்தில் பெருமளவில் சிறுகதைகளோடும் சிறுபான்மை கவிதைகளோடும் மட்டுமே களமாடி வந்திருக்கிறார். இவையன்றிப் படைப்புத் தன்மை மேலோங்கி நிற்கும் ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’, ‘ஈழக் கதவுகள்’, ‘நஞ்சுண்ட பூமி’ போலும் காத்திரம் மிக்க பதினான்கு கட்டுரைத் தொகுப்புகள், தமிழீழக் கவிஞர் கி.பி.அரவிந்தன், கரிசல் படைப்பாளி கி.ரா, மண்ணின் குரல் வீர.வேலுச்சாமி, மக்களிசைப் பாடகர் கே.ஏ.குணசேகரன் ஆகியவர்களைக் குறித்த கட்டுரைத் தொகுப்புகளை முயன்று தொகுத்தமை என்று நீள்கிற இடையறாத எழுத்து வாழ்வில் ‘பள்ளிக்கூடம்’ என்னும் முதல் நாவலைத் தம் எழுபத்தைந்தாம் வயதின் நிறைவாகத் தந்திருக்கிறார்.

மாணவர் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம், பின்னர்த் தமிழக சமூக, அரசியற் களங்களைச் சார்ந்த செயற்பாடுகளில் தம் பங்களிப்பைச் செலுத்துதல், ஈழ விடுதலையை முன்வைத்த தமிழகம் சார் செயற்பாடுகளில் பங்கேற்று உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்தல் என்று தம் வாழ்வு முழுமையுமே மக்கள் இயக்கங்களில் தொழிற்படுதல் என ஆக்கிக்கொண்டு இடைக்கிடையே இலக்கியப் படைப்பாக்கத்திலும் ஈடுபட்டுவரும் பா.செ. அவர்களுக்கு உட்கார்ந்து எழுதும் அவகாசம் என்பது மிகவும் குறைவுதான். போதாததற்குப் பத்தாண்டு ‘மனஓசை’ இதழ்ப் பொறுப்பு. காலத்தை உறிஞ்சிக் குடித்துவிடுகிற அரசுப் பணி எனும் சுமையை இறக்கி வைத்துவிட்ட பா.செ.க்கு இன்னமும் எழுதிக் கடக்க வேண்டிய பக்கங்களும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய அனுபவப் பொதிகளும் அதிகாரச் சக்திகளின் மீதான அறச் சீற்றமும் மீதமிருக்கின்றன. ஒருவாறு ஓரிடத்தில் உட்கார்ந்து எழுதுகிற மன வசதியைப் பெற்றுவிட்ட அவர் நாவல் எனும் பேருலகத்துக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
‘பள்ளிக்கூடம்’ - ‘ஒரு ஐம்பது ஆண்டுக்காலத் தமிழ்நாட்டின் கல்வியியல் திசையின் வரலாறு இது’ என்று ஆசிரிய முன்னுரை குறிப்பிடுகிறது. கவனத்தை ஈர்க்கிற ஒரு குறிப்பினடியில் நாவலுக்குள் நுழையும் வாசகருக்கு நாவல் எனும் பெரும்களம் சார்ந்தும் பள்ளிக்கூடம் எனும் பொருண்மை சார்ந்தும் ஆர்வம் மேலழக் கூடும். பள்ளிக்கூடம், கல்வி, மாணவர், ஆசிரியர், இவை தொடர்பான சிந்தனைகளை நாவல் எனும் கலை வடிவத்துக்குள் கொண்டுவருவது எப்படி என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வமாக அது உருக் கொள்கிறது.
கரிசல் புழுதி மணக்கிற, வெடித்து மலரும் வெள்ளையில் மனித வாழ்க்கையைப் பிடித்து வைத்திருக்கும் பருத்திக்காடு சூழ்ந்த வில்வநத்தம் எனும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி நாவலின் மையம். பெருகிவரும் தனியார் பள்ளிகளால், அவற்றின் மீதுள்ள பொது மக்களின் மோகத்தால் கிராமப்புற அரசுப் பள்ளிகள் நொடித்துப் போய் வீழ்த்தப்படுகிற சூழலில், வில்வநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியை ‘நிறை கண்மாய் போல’ மாணவர்கள் பெருகி நிற்கும்படி, அப்பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பது மையச் சரடு.

எல்லாக் காலங்களிலும் பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாகிற சாமானியர்களும் ஏழைகளும் தங்களின் சொந்த வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைகளைக் கூட இழந்து நிற்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் படிக்க நேர்கிற ஏழைப் பிள்ளைகள் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க நேர்கிற ஆசிரியர்களாலும் அரசு நிர்வாகிகளாலும் வெகு அலட்சியமாகவே கையாளப்படுகிறார்கள். நகர்ப்புறங்களில் இருக்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைவிட, கிராமப்புறங்களில் இருக்கும் அரசுத் தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள்; சீந்துவாரற்ற சவலைப் பிள்ளைகளாக, நொடித்து விழுந்து உயிரிழப்பவையாக உள்ளன. அப்படிப்பட்ட அவல நிலைக்கு ஆளாகி இழுத்து மூடப்படும் ஆபத்தில் இருந்த வில்வநத்தம் பள்ளியை, தலைமையாசிரியராகப் பொறுப்பேற்கும் அப்துல் கனி, பிற ஆசிரியர்களாகிய முத்துராக்கு, ஜான் ஆகியோர், பணத்துக்கு மட்டுமே வேலை பார்க்கிற குணமற்று, மெய்யான அக்கறையோடு எவ்வாறு ஒரு சீருக்குக் கொண்டுவருகிறார்கள் என்பதை நாவல் கிரமமாக வளர்த்தெடுக்கிறது. சுயநல உணர்வே பெருகி நிற்கிற அரசுப் பணிச் சூழலில் அப்துல் கனி, முத்துராக்கு, ஜான் போன்றவர்கள் நல்லாசிரியர்களுக்கான வகைமாதிரிகளாக அமைவதைப் போன்றே, அப்பள்ளியில் பயிலும் தனம், ரங்கா, வடிவு ஆகியோர் அந்த நல்லாசிரியர்களுக்குத் துணைநின்று பள்ளியை வளர்த்தெடுக்கும் மாணவிகளாக உள்ளனர். வில்வநத்தம் பள்ளியில் மாணவர் சேர்க்கையைக் கூட்டும் வகையில், ஆசிரியர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று உழைக்கும் மக்களைச் சந்தித்து, அவர்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி வேண்டுகின்றனர்; விடுமுறை நாட்களில் சோர்வுறாமல் கிராமங்களுக்குச் சென்று பள்ளிக் கல்வியின் தேவையைப் பெற்றோர்களுக்கு உணர்த்துகிறார்கள். கமலாபுரத்திலிருந்து வில்வநத்தம் பள்ளியில் படிக்கும் அந்த மூன்று மாணவிகளும் ஆசிரியர்களுக்குத் துணையாகி நிற்கின்றனர். தங்கள் பிள்ளைகளின் மீதான ஆசிரியர்களின் அக்கறையைப் புரிந்துகொள்ளும் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை ஆர்வத்துடன் பள்ளிக்கு அனுப்புகின்றனர். தங்கள் மீதும் பரிவுகொண்டு தங்களைத் தேடிவரும் இந்த ஆசிரியர்களைக் காணும் அம்மக்களிடமிருந்து, ‘சோளக்கருதுகளை மூடிய தோகை போல் இரு கைகளுக்குள் விலையில்லா வாஞ்சையைப் பொதிந்த கும்பிடு..’ (ப. 44) வருகிறது.

சாதி முறைமையின் கொடுமையான பக்கங்களையும், நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் அரசாங்கம் மேற்கொள்கிற சாதக பாதகங்கள் மேவிய பல்வேறு நுட்பமான நடைமுறைகளையும் அறிந்துகொள்ள இயலாத மக்களின் எளிய வாழ்வை - பொருளாதார, உழைப்புச் சுரண்டல், கட்சிகள், கட்சி, அரசு நிர்வாகம் சார்ந்த அதிகாரக் குறுக்கீடுகளை - தன்னகத்தே கொண்ட சிக்கல் மிகு கிராம சமுதாய அமைப்பில், அத்தகைய சூழலுக்குள் காலந்தள்ள விதிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களும் அவற்றின் கல்விச் சூழலும் மேற்கூறிய அனைத்துச் சங்கடங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாவல் நுட்பமாக அலசிச் செல்கிறது.

பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவன் தனஞ்செயன் மிகச் சிறந்த பாடகனாக உருவாகிறான்; ஒவ்வோர் ஆண்டும் பாட்டுப் போட்டியில் முதற்பரிசு பெறுகிறான்: காலை வாழ்த்தையும் அவனே பாடுகிறான். அவன் குரலில் சக மாணவர்களும் ஆசிரியர்களும் சொக்கிக் கிடக்கிறார்கள். வாரக் கடைசி சனிக்கிழமை அரைநாளில் நிகழும் மாணவர் சங்கக் கூட்டத்தில் அவன் பாடுகிறான். காதற் சுவை மிகுந்த திரைப்பாடலைப் பாடும் அவன் பண்பாட்டைக் கட்டிக் காக்கிற பேரில் சாதிய வன்மம் கொண்ட ஆசிரியரால் தடுத்து நிறுத்தப்படுகிறான். ‘உறுமிக்காரப் பயலுக்குத் திமிரு’ என்று சாதியைச் சொல்லி இழிவுபடுத்தப் படுகிறான். புதுக்கிராமச் சேரிக்கு ஆசிரியர்கள் புதிய மாணவர்களைத் திரட்டச் செல்லும்போது, சேரிக்குள் கால் வைப்பதா என்று ஆசிரியர் சின்னச்சாமி வழியில் நின்றுகொள்கிறார்.

சக மாணவி யசோதை, தனஞ்செயனிடம் வாஞ்சைமிகு காதலுறும்போது அந்த மனசுகளின் நுட்பங்கள் புரிந்துகொள்ளப் படுவதில்லை. பள்ளிக் காதல் என்னும் மனோநிலை மாணவர்களின் உளத்தியல் பாங்கோடு அணுகப்பட வேண்டியது. பெரும்பாலான பள்ளிப் பருவக் காதலுணர்வுகள் பள்ளிப் பருவம் தாண்டித் தொடர்கிற நிகழ்வும் இல்லை. இவை வாஞ்சையோடு அணுகப்படுவதும் இல்லை. ஆனால் சாதி காக்கும் வக்கிரச் சமூகம் வெறிகொண்டு பிஞ்சுகளைத் தாக்குகிறது. யசோதையின் தந்தை, தனஞ்செயனைப் பருத்திமாரால் விளாசுகிறார். பெற்ற மகளை, ‘கொன்னு தூக்கீருவேன்’ என மிரட்டுகிறார். விளைவு, தனஞ்செயன் எனும் இளம்பயிர் கலை வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் முறிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்படுகிறது. ஆசிரியர்களின் கைகளைத் தாண்டியும் பள்ளி மாணவர்களின் அக வளர்ச்சியும் புற வளர்ச்சியும் சமுதாயச் சூழல்களிடமும் பிற மனிதர்களிடமும் இருக்கின்றன என்பது உணரப்பட வேண்டும்.

இக்களத்தில் கவனம்கூரப்பட வேண்டிய ஒன்று, ஆசிரியர்கள் மாணவர்கள் மீது கொள்ளும் வாஞ்சையும் மாணவர்கள் ஆசிரியர்கள் மீது கொள்ளும் மரியாதையும் ஆகும். ஆசிரியர் தன்மீது கொள்ளும் சாதி வன்மத்துக்குப் பதிலடியாக தனஞ்செயன், இனி ’தான் காலைப் பள்ளி வாழ்த்துப் பாடலைப் பாடலைப் பாடுவதில்லை’ என்று உறுதியுடன் தெரிவிக்கும்போது அவனுடைய உள் மனத்தைப் புரிந்துகொண்ட உடற்பயிற்சி ஆசிரியர் வையவன் அவன் முதுகில் செல்லமாய்த் தட்டி, ‘நல்ல காரியம் பண்ணுனே’ என்று கூறி அவனை ரகசியமாய்ப் பாராட்டுகிறார். ‘முதல் பிறைக்குள் அடங்கியிருக்கும் முழுநிலவின் பரிமாணம் போல் சிறு தொண்டைக்குள் உயிர்த்துக் கொண்டிருந்த இசைக்கலைஞனை ஆசிரியர் முத்துராக்கு அடையாளம் கண்டிருந்தார்’ (ப.28).

மாணவர்கள் மீது வன்மம் கொள்ளும் ஆசிரியர்கள் பிரம்பைக் கையில் எடுக்க, அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் அன்பைக் கையில் எடுக்கிறார்கள். அத்தகைய நல்லாசிரியர்கள், ‘ஒவ்வொரு மாணவ, மாணவியிடமும் முடிந்த அளவு தனிப்பட்ட பரிச்சயமும், ஒவ்வொரு சிறு பிள்ளையின் மன உணர்வுகளையும் அவர்களின் குடும்பப் பின்புலத்திலிருந்து அனுமானித்தலும்’ (ப.75) என மாணவர் நலன் கருதிச் சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள்.

அப்பள்ளியின் மாணவிகளாகிய ரங்கா, வடிவு, தனம் ஆகிய மாணவிகளும் ஆசிரிர்களுடன் கிராமங்களுக்குச் சென்று புதிய மானவர்களைத் திரட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் ஆசிரியர்களின் பெருஞ்செய்கையைப் புரிந்துகொண்டவர்களாக, அவர்களுடன் இணைந்து விடுமுறைக் காலச் சேவை செய்வதில் குதூகலம் கொள்கிறார்கள்; எப்போதும் அந்த ஆசிரியர்களின் நிழலில் இருக்கப் பிரியப்படுகிறார்கள். அந்த நம்பிக்கையின் வேர் அவர்களுக்குள் ஆழமாக இறங்கி இருப்பதால்தான் பல்வேறு புறச் சூழல்களும் சிக்கலுக்கு உரியவையாக இருக்கும் நிலையிலும் குடும்பத்தை விட்டுத் தனியாகத் தங்கியிருக்கும் கணித ஆசிரியர் ஜான் வீட்டில் தங்கிப் படித்து அரசுத் தேர்வுக்குத் தயாராகிறார்கள். பெற்றோரும் நம்பி அனுப்புகிறார்கள். இந்த நம்பிக்கையையே ஒரு பள்ளிக்கூடம் உருவாக்கித் தர வேண்டும்.

வளமான கல்விச் சூழலை வளரத்தெடுக்க முயலும் ஒரு பள்ளிக்கூடத்துக்குத் தான் எத்தனை யெத்தனை புறத்தடைகள்?
பாடம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அனுமதியின்றி உள்ளே நுழைந்து, மாணவர்களை வேலை வாங்கும் பெருந்தனக்காரர்களின் அத்துமீறிய அதிகாரம், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் கட்டைப் பஞ்சாயத்து நடைமுறைகள் பள்ளிக்கூடம் வரை நுழைவது, சாதி வன்மம் கொண்ட பெற்றோர்கள் பள்ளியில் நிகழ்த்தும் அடாவடிகள் என அடுக்கி வரும் அதிகாரக் குறுக்கீடுகளை எதிர்கொண்டு பள்ளியைக் காப்பாற்றி அதன் வளர்ச்சியை முன்னெடுப்பது சாதாரண காரியமா? அப்துல் கனியும் பிற ஆசிரியர்களும் இத்தகைய இடைஞ்சல்களைச் சாதுரியமாக எதிர்கொண்டு வில்வநத்தம் பள்ளியைச் சீராக வளர்த்தெடுக்கிறார்கள்.

பள்ளிக்கூடம் என்பதும் அதில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் என்பதும் மிகுந்த பொறுப்புணர்ச்சியையும் கவனம் செலுத்திக் காக்கப்பட வேண்டிய தேவையையும் கோரி நிற்பவை. எல்லாவற்றையும் அலட்சிமாக ஒதுக்கித் தள்ளும் அதிகார மையங்களுக்கோ வெகுசன மனப்பான்மைக்கோ இது பற்றியெல்லாம் சிந்திக்க ஏது நேரம்? நெஞ்சாங்குழியை அடைத்துப் பொங்குகிற அன்பின் வாஞ்சையைக் கூடப் பொட்டலம் கட்டி விற்பனை செய்கிற வணிக, ஊடக உலகச் சந்தையின் பெரும் பசிக்கு - மனித நாகரிக வளர்ச்சிக்கு உயிர் நீராக விளங்கும் கல்வியும் தப்பித்துவிட முடியாதுதான். பெருகிவரும் தனியார் கல்வி நிறுவனங்களும் அவற்றின் கேட்பாரற்ற அதிகாரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் திறந்து தரும் தாராள அங்கீகாரமும் பூப்போன்ற அரசுப் பள்ளிகளைக் கிள்ளி எறிந்துவிடுகின்றன. பெற்றோரும் இந்தக் காகிதப் பூக் கனவுகளில் மயங்கியோ, ’உலகம் ஓட ஒக்க ஓடு’ என அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் அரசுகள் எதுவும் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சியைக் குறித்து அக்கறை செலுத்தாததாலோ தனியார் நிறுவனங்களின் கைகளில் தங்கள் பிள்ளைகளை ஒப்புக் கொடுத்துவிட்டுக் காலம் முழுக்க அதற்காக உழைத்துத் தேய்கிறார்கள். இதனால் கிராமப்புற அரசுப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகச் சுருங்கி நாளடைவில் இழுத்து மூடப்படுகின்றன. அப்துல்கனி போலும் ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சிகளே அழிவின் பாதையில் இருக்கும் அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றி வருகின்றன.

சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி, பொறுப்புணர்ச்சி மிக்க ஆசிரியர்கள் என்று அப்துல் கனி பார்த்துப் பார்த்துச் செய்கிறார். பள்ளிக்கு எதிரே உள்ள பலகாரக் கடையின் வாசனை மாணவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி விடுகிறது. அப்துல் கனி பலகாரக் கடையை இடம் மாற்றித் தூரத்தில் வைக்க ஏற்பாடு செய்கிறார். மாணவர்களைத் திருத்தப் பிரம்பெடுக்கும் ஆசிரியரை அவர் கண்டிக்கத் தவறுவதும் இல்லை.

கிராமப்புறப் பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை நடைமுறைப் படுத்தவோ நிதி உதவிகளைப் பெறவோ தூரத்தில் நகர அலுவலகங்களுக்குத் தான் செல்ல வேண்டியுள்ளது. மாணவர்கள், பெற்றோர், ஊரின் பிற நிலைமைகள், துரித நடவடிக்கை இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வி சார்ந்த அரசு அலுவலகங்கள் கிராமப்புறங்களிலும் இயங்க வேண்டும் என்றும் நாவல் வலியுறுத்துகிறது. பள்ளி வளாகத்துக்குள் கல்வியும் மாணவர்களின் அக வளர்ச்சியுமே முக்கியமானவை. இவற்றுக்கு ஊறு செய்யும் புற நடவடிக்கைகளுக்கு அங்கே ஒரு வேலையும் இல்லை.

இந்த நாவல் பள்ளிக் கல்வி சார்ந்த சிறப்பபான சுற்றுச் சூழ்நிலையை முன்வைக்கிறதே தவிர, பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டக் கல்விமுறையை மையப்படுத்திப் பேசவில்லை. அதனால்தான் நாவலில் எங்குமே பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் இன்ன வகைப் பாடத்தை இன்ன முறையில் எடுக்கிறார் என்பது போல எவ்வகைச் சித்திரமும் இடம்பெறவில்லை. பொதுவாக இந்தியக் கல்வி முறையும் அதன் பாடத்திட்டமும் பொது மக்கள் நலன் சார்ந்த வாழ்க்கைக் கல்வியாக இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மாணவர்களுக்கான சிறந்த சூழலை அமைத்துக் கொடுத்தல் பற்றிய சிந்தனைகளைத் தாங்கியுள்ள இந்நாவலில் மாற்றுக் கல்வி பற்றிய சிந்தனைக் கூறுகளும் இடம்பெறுகின்றன. ‘பள்ளிக்கூடம் என்பது நாற்பதுக்கு முப்பது அடி நீள அகலம் கொண்ட வகுப்பறை அல்ல, கல்வி என்பது முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை திறக்கிற பாடப்புத்தகம் அல்ல. கற்றுக்கொள்ளல் கரும்பலகையிலும் ஆய்வுக்கூடத்திலும் இல்லை, பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது, வாழ்க்கைக்கு உதவாது, பாடப்புத்தகம் - ஒட்டுமொத்தத்தில் நாக்கு வழிக்கப் பயன்படும் ஓலை’ (பக். 236, 237) என்று பா.செ ஓரிடத்தில் எழுதுகிறார்.

இப்படி கிராமப்புறப் பள்ளியொன்றில் கற்க நேர்கிற மாணவர்களிடம் சிறப்பான கல்விச் சூழலை உருவாக்குவதற்கான நுட்பமான சிந்தனைகளை முன்வைக்கிற இந்த நாவல், இவற்றை மட்டுமே பேசி நிற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வில்வநத்தம் பேரூராட்சியில் இயங்கும் ஓர் அரசுப் பள்ளி, இடைநிலைப் பள்ளியாகத் தொடங்கப்பட்டு, உயர்நிலைப் பள்ளியாகி, மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்து நிற்கும் வரலாற்றில் பல்வேறு வரலாற்றுத் தடயங்களும் ஊடு சரடாக வந்து மின்னுகின்றன.

அவ்வகையில் குறிப்பிட்டவொரு நிலத்தின் மக்களோடும் அவர்களின் பண்பாட்டோடும் இன்றியமையாத ஒரு கூறாக இணைந்திருக்கிற நாட்டுப்புற இசைக் கலைஞர்களைப் பற்றிய பதிவுகள் நாவலின் இணைப் பிரதியாக இடம்பெறுகின்றன. வில்வநத்தம் பள்ளியில் அனைவரின் உள்ளங்களையும் ஈர்த்து நிறுத்தும் பாடகனாக உருவாகும் தனஞ்செயனின் பாட்டுத் திறமையைப் பேசுவதன் வழியும் சிறு வயதிலேயே ஊறிவிட்ட நாட்டுப்புறக் கலை வடிவங்கள் மீதான காதலில், முப்பது வயதில் திருமணம் முடிக்காமல் வாழும் ஆசிரியர் முத்துராக்கு விளாத்திகுளம் கடற்கரையின் ஆட்டங்களைப் பாரத்து ரசிப்பதற்காவே ஊர் ஊராக மிதிவண்டியில் சென்று சுற்றுவதன் வழியும், மதுரை மண்ணில் மையம் கொண்டு இசை நாடக அரங்குகளில் கலக்கிய தோப்பூர் கோவிந்தன், கழுகுமலைச் சுப்பையா, அப்போதைய நகைச்சுவை அரசிகளாகப் புகழ் பெற்ற மீனாபாய், சோலைவள்ளி, செங்குளம் கந்தசாமிப் புலவர், சலவைத் தொழிலாளியாக இருந்துகொண்டே கிராமியப் பாடகராகவும் கருவி இசைக் கஞைராகவும் விளங்கிய பொன்னு, தலித் இசைக் கலைஞர் விளாத்திகுளம் கடற்கரை எனத் தென் தமிழகத்தின் நாட்டுப்புற ஆட்டக்காரர்கள், இசைக் கலைஞர்களைப் பற்றிய பதிவுகள் நாவலின் பெரும்பான்மை இடங்களில் தகவல்களாகவும் காட்சிச் சித்திரிப்புகளாகவும் இடம்பெறுகின்றன. தோப்பூர் கோவிந்தன் மதுரை மேடைகளில் முழங்கிய ‘நாங்க தொட்டா மட்டும் பட்டுக்கிருமா’, ‘என்னம்மா தேவி சக்கம்மா’ போலும் பாடல்கள் முழங்கப்பட்ட காட்சிகளை நாவல் விளக்கிச் செல்லும் போது, அப்பாடல்கள், அவற்றின் கலகக் குரலின் அடர்த்தியோடு கே.ஏ.குணசேகரன் வரை தொடர்ந்து வருவதை வாசகரும் வாகாகப் பற்றிக்கொள்ள முடிகிறது.

கமலாபுரத்தில் நிகழும் கடற்கரையின் ‘கதம்ப காமிக்’, ‘குறவன் குறத்தியாட்டம’ போன்ற கலை வடிவங்கள் மனித மனங்களை அடைத்துத் தூர்த்திருக்கும் கசடுகளை எவ்வகைத் தயக்கமும் இன்றி வெளியே இழுத்துப் போட்டு, உங்கள் லட்சணம் இவ்வளவுதானையா என நையாண்டி செய்பவையாக இருக்கின்றன. ‘குறவன் குறத்தி ஆட்டம் தனித்தனிக் காட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொன்றும் சத்தியம் பேசுகிறவை. பிறன்மனை நோக்காமை, பெண்ணுரிமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை என மதிப்பீடுகளைப் போர்த்திக் கொண்டு திரிகிற மனிதனின் போர்வைகளை நீக்கி, சமகால வாழ்வில் அவை உடைந்து சிதிலமாகியிருப்பதை எள்ளலும் எகடாசியுமாகத் தருவார் கடற்கரை’ (ப. 146) என்று கடற்கரை எனும் கலைஞனின் மகத்துவம் பதிவு செய்யப்படுகிறது. கலைஞானமும் தன்மானமும் உடைய கடற்கரை, ஆட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு வீட்டின் உள்ளேயும் ஆட்டக்காரர்களுக்கு வீட்டுக்கு வெளியேயும் சாப்பாடு போடப் போகிறார்கள் என்பதை அறிந்து ஆட்டம் முடிந்தவுடன் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுவிடுகிறார். இவ்வாறு ஆட்டக் கலைஞர்களின் தன்மானம் மிக்க புரட்சிகர வரலாற்றின் சித்திரம் ஒன்று நாவலில் இடம்பெறுகிறது. பள்ளிக்கூடம் ஒன்றின் கல்விச்சூழல் எப்படி அமைய வேண்டும் என்பது எவ்வாறு இந்தியக் கல்விமுறை பற்றிய பாடமாக அமைகிறதோ அவ்வாறே, பா.செ.வின் நாட்டுப்புறக் கலைஞர்களைப் பற்றிய அனுபவங்களின் பதிவு என்பது கலைஞர்கள் பொதுமக்களுக்கு உரைக்கின்ற வாழ்க்கை, சமூகவியல் பாடங்களாக அமைகிறது.

பா.செ.வின் மற்றப் படைப்புகளில் காணப்படுவது போலவே, பெண்ணிலை நோக்குப் பார்வையொன்று படைப்பாளரின் சுய ஓர்மையிலிருந்து வற்புறுத்தப்படுவது நாவலின் இன்னுமொரு சிறப்புத் தன்மையாகும். பள்ளியைக் கடைத்தேற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக மாணவிகளே முன்வருகிறார்கள். பள்ளியின் குறிப்பிடத்தக்க மாணவனாகிய தனஞ்செயனின் பிரச்சினை அவனுடைய சாதியைக் குறித்ததாக அமைய, அவன் அதனாலேயே காணாமல் ஆக்கப்படும் துயரத்தின் பாத்திரமாக முடிந்து போகிறான். மற்றபடி நாவலில் மாணவன்கள் பெரிதும் இடம்பெறவில்லை.

தனஞ்செயனின் மீது காதலுறும் மாணவி யசோதா, அவனைப் பற்றிய நினைவுகளில் வாழ்தலின் இனிமையை உணர்பவள். தன் தந்தை பொன்னையாவால் தனஞ்செயன் அடித்து விரட்டப்பட்டுக் காணாமலான போது அவனை நினைத்து உருகி மருகுபவள். தந்தை தன்னை மிரட்டியபோது உயிரைப் போக்கிக்கொள்ள முடிவெடுத்தவள். பின் சக மாணவியரின் அரவணைப்பில், அன்பில் புதிய வாழ்வொன்றைக் காண்பவள். பள்ளி மாணவர்களாகிய தனஞ்செயன், யசோதை இவர்களின் காதல் உணர்வுகளும், அதனால் அவர்கள் சந்திகக்க நேரும் இன்னல்களும் நாவலில் ஒருவகைக் கவித்துவச் சொல்லாடக இடம்பெறுகின்றன. பள்ளி மாணவர்களிடையே தோன்றும் இத்தகு காதல் பிரச்சினைகளுக்கும் அவை கல்விச் சூழலில் ஏற்படுத்துகின்ற தாக்கங்களுக்கும் இடையிலான முரண்களைக் குறித்த வாசகரின் சிந்தனைகள் இந்த எடுத்துரைப்பின் வழி தோன்றி மறைகின்றன.

கமலாபுரத்தில் மளிகை வியாபாரம் செய்யும் ஆதிக்கச் சாதிக்காரராகிய சீத்தாராமின் மகள் தனம் எப்போதும் தன் அத்தை அன்னக்கிளியின் துணையை நெஞ்சணைவாகக் கொள்ளும் ஒரு மாணவி. இளமையிலேயே கணவனைப் பறிகொடுத்துவிட்ட சென்னம்மாவுக்கு, அவள் மகள் ரங்காவே எல்லாமும் ஆகிப் போகிறாள். ரங்காவின் பேச்சுக்கும் ஆசைகளுக்கும் மறு பேச்சுப் பேசாத தாயாக இருக்கிறாள். ரங்கா பேச்சில் கெட்டிக்காரி. தாயால் தனக்குக் கிடைத்த சுதந்திரத்தை மிச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுபவள்; அந்தச் சுதந்திரத்தைப் பிறரின் நன்மைக்காகவும் தாராளமாகச் செலவிடுபவள். அதனால் தான் அவள் மனம் வாடித் துவண்டிருந்த யசோதாவைத் தன் வீட்டில் தங்கவைத்துக் கொள்ள முடிகிறது. இப்படி மாணவிகள் மட்டுமே பிரதானமுறும் இந்நாவலில், அது வம்படியாகத் துருத்தித் தெரியவில்லை.

குறிக்கத் தக்கதோர் இன்னொரு பகுதி, தனத்தின் அத்தையான அன்னக்கிளி, ஆசிரியர் முத்துராக்கு காதலாகும். மிகுந்த தயாள குணம் கொண்ட அன்னக்கிளி, முத்துராக்கின் நல்ல மனசுக்கு ஈடுசோடாகிறாள். முத்துராக்கு மாணவர்கள் மேலும் ஆட்டக் கலைஞர்கள் மேலும் வைத்துள்ள பேரன்பை அப்படியே பிரதிபலிப்பவளாக, ரங்கா, தனம் போன்றவர்களுக்கு இன்னொரு தோழியாக, அக்காளாக அவள் இருக்கிறாள்: கல்வி குறைவுதான் என்றாலும் கல்வியின், கற்றவர்களின் உண்மையாக உழைப்பவர்களின் மகத்துவத்தை உணர்ந்தவளாக இருக்கிறாள். அவள் தனஞ்செயனை நினைத்துத் துவண்டிருந்த யசோதையிடம் இப்படிச் சொல்கிறாள்: "..கை இருப்பது எதிர்த்து அடிக்க. முந்தானை இருப்பது வீசிவட்டுப் போக. பெண் என்றால் வீராவேசம்’னு இவங்களுக்குப் புரிய வைக்கணும்.." (ப.205)

‘..சண்டை போடணும். சண்டையெடுக்காட்டா பெண் மட்டுமல்ல, ஒரு உசிரும் உயிரோட இருக்க முடியாது’ (ப.206). இப்படியான பெண்நிலை நோக்கு அன்னக்கிளியின் மூலமாக நாவலில் சிறப்பாக வலியுறுத்தப்படுகிறது. முத்துராக்கு மேல் காதலுறும் இவள் முத்துராக்கும் விருப்பப்பட, சாதி மறுத்து, சாதி காக்கும் வீடு மறுத்து முத்துராக்குவோடு பயணப்படுகிறாள். பள்ளி என்பது எல்லோருக்கும் உவப்பான ஒன்றாக மாறிவிட்ட பிறகு அதன் காரண கர்த்தாக்களில் ஒருவராகிய முத்துராக்கு, துணைநின்ற அன்னக்கிளி இவர்களின் திருமணம் கல்வித்துறை அனுமதியோடு பள்ளி வளாகத்திலேயே நடைபெறுகிறது. ‘மேன்மையுள்ள கலாசாலை அன்று திருமண மேடையாகியது’ (ப.235) என்று பா.செ இதனைச் சிலாகித்து எழுதுகிறார். பள்ளிக் கல்வி பற்றிய சிந்தனைகள் மிளிரும் ஒரு நாவலில் இஃது ஓர் அதிரடித் திருப்பம் தான். இது குறித்துத் தர்க்கிக்க வாசகருக்கு இவ்விடத்தில் இடமிருக்கிறது. முத்துராக்கு சாதி மறுத்துப் பள்ளி வளாகத்தில் திருமணம் செய்ததற்குப் பரிசாக, அவ்வூர்க் கட்சிப் பிரமுகர்கள் அவரை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யக் காரணமாக ஆகிறார்கள். இந்த இடமாற்றல் அச்சம் அப்துல் கனிக்கும் அவர் குடும்பத்தாருக்கும் உண்டாக்கப்படுகிறது.

இவ்வாறு சென்று இதனுடன் முடியும் இத்தகைய பொருளமைதி கொண்ட நாவலின் பரப்பில் குறிப்பிடத்தக்க மற்றொரு கூறு அதன் மொழியாடல் தன்மை. எப்போதும் உழவின் மீதும் உழவர்கள் மீதும் வாஞ்சையுள்ள பா.செ இந்த நாவலில் கையாண்டிருக்கும் படைப்பின் மொழி ஏறத்தாழ ஒரு விவசாயியின் மொழியே ஆகும். ஆசிரியரின் கூற்றாக வரும் நிகழ்ச்சிச் சித்திரிப்புகளில் பச்சைப் பயிர்களின் வாசம் வீசுகிறது. மொழியும் பேச்சும் இங்கு உழவுக் களமாகின்றன. ‘பதின்ம வயது ஈரப்பதமான நிலம். உழவுக்குத் தோதாய் மகுந்து கொடுக்கும் மண்ணில் என்ன விதை போடலாம், ஏது பயிரிடக் கூடும் என முடிவு செய்ய வேண்டிய காலம்’ (ப. 30). ‘.. கம்மங்கருது பீட்டை பிடித்து, பால்கட்டி மணி பிடிக்கும் பருவத்தில் அதை நீவி வளர்க்கும் இளங்காற்றுப் போல ஆசான் செயல்பட வேண்டும்’ (ப.31). இப்படி ஒரு மொழியமைதியில் கரிசல் வட்டார வழக்கும் வந்திணைகிறது. நாவல் முழுக்க வழக்குச் சொற்களும் பழமொழிகளும் விரவிக் கிடக்கின்றன.

‘ஆவுடைச்சி பெத்த பிள்ள, அஞ்சு மூணும் ஒன்னு போல’,
குத்துக் கல்லுக்கு என்ன குளிரா? வெயிலா?’,
‘ஒன்னொன்னா நூறா? ஒருமிக்க நூறா?’
மொட்டை மண்டை, மொளகு சாறு, கேப்பை ரொட்டி டமாஸ்’
போன்ற வழக்குச் சொல்லாடல்கள் தேய்வுற்றுப் போகாமல் பிடித்து வைக்கப்படுகின்றன.

கல்வியியல் சிந்தனை எனும் உள நுட்பம் மிக்க ஒரு தளத்தை, நாட்டுப்புற ஆட்டக் கலைஞர்கள் பற்றிய வரலாற்றுத் தடங்கள், பெண்நிலை நோக்கு, படைப்பாளர் விரவிக்கொண்டு செல்லும் அனுபவங்களின் சாரம், கரிசல் வட்டார வழக்கு, கவித்துவம் மிளிரும் மண் மணம் சார்ந்த தனிப்பட்ட ஒரு சொல்நடை என ஊடுபாவாய்க் கலந்து நாவல் வசீகரிக்கும் ஒரு கலைத் தன்மையைப் பெறுகிறது. பொதுவாக நாவல் படைப்பில் இடம்பெறுவது போல, பள்ளிக்கூடம் நாவலில் மிக நீளமான வருணனைகளோ, நீளமான காட்சிச் சித்திரங்களோ இடம்பெறவில்லை. துண்டுத் துணுக்கான பல்வேறு காட்சிகள், பலகாரக் கடை வெங்கிட்டம்மா, அவளுக்கு உதவி செய்யும் போயிலைக்கட்டை, ரங்காவின் தாய் சென்னம்மா, சாதி வழமை மீறியதால் சொந்தங்களால் ஒதுக்கிவைக்கப்பட்ட, பள்ளிக்குத் தன் சொந்தப் புத்தகங்களை வழங்கிப் பள்ளியில் நூலகம் அமையக் காரணமாகிய பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சிவபெருமாள், அவருக்கும் அவர் மனைவிக்கும் பணிவிடை செய்யும் அன்புணர்வும் தன்மானமும் மிக்க தலித் பெண் முத்துமாரி போலும் சின்னச் சின்ன பாத்திர வார்ப்புகளில் நாவலின் கருத்தியல் தளம் விரிவுகொள்வதும் கலைத்தன்மை செறிவடைவதும் ஒன்னு போல நிகழ்கின்றன. இதனால் இந்த நாவல் ஒரு பொருண்மைத் தளம் சார்ந்து விரிவுறும் பல்வேறு அனுபவங்களின் தொகுப்பாக ஆகிறது.

ஒரு கலை வடிவம் இப்படித் தான் இயல வேண்டும் என்று கட்டாயப் படுத்திவிட முடியாது. ஒரே ஒரு கருத்து ஒரு நூறு பேரால் எழுநூறு வகை வடிவங்களை எடுக்க நேரலாம். பின்நவீனத்துவம் பேசப்படும் பன்மைத்துவ உலகில் - கலையின் அழகியல் என்பது ஆயிரம் கைகள் கொண்டு அணைத்தாலும் விரலிடுக்குகளில் வழிந்து ஒன்றுமில்லாமல் போவதையும், ஒருவருக்கு உவப்பான ஒன்று மற்றவர்க்கு ஒன்றமற்றுப் போவதற்கான தனிப்பட்ட வாழ்க்கை, அகம் சார் தனித்துவங்களின் பல்முனை விகசிப்புகளையும் அறியுமொருவர் எதைப் பற்றிய பொதுக் கருத்தையும் முன்வைக்க முடியாதவர் ஆகிறார். சற்றே நெகிழ்வான கட்டமைப்பை உடைய பள்ளிக்கூடம் நாவல், அந்நெகிழ்வுத் தன்மைக்கு ஊடாக மிளிரும் கவித்துவத்தால் கலைத்தன்மை பெறுகிறது எனலாம். ‘கலை நியாயம் என்பது கால நியாயத்தைச் சார்ந்ததே’ எனும் கருத்தியலுடன் இடதுசாரித் தன்மை கொண்ட படைப்புகளைத் தரும் பா.செ. படைப்பில் வலியுறுத்தப்படும் மக்கள் நலன், உயிர்ச் சுற்றுச் சூழலியல் நலன் எனும் பொருண்மைக் களத்தைத் தனக்கு வாய்த்திருக்கிற கவித்துவமான மொழித் தளத்தில் நின்று சமரசங்கள் அற்ற நிலையில் சக மனிதர்களின் முன்னிலையில் வைக்கிறார். பள்ளிக்கூடம் நாவலுக்குள் இடம்பெறும் கல்வியில் சிந்தனைகள் கூட்டு, விவாதங்களுக்கும் தொடர்ந்த தேடல்களுக்கும் உரியவையாக நீள்கின்றன. அத்தகைய விவாதங்கள் எழுப்பும் காத்திரம் மிக்க கேள்விகளும் அவற்றின் விளைவான வலுவான சமூக மாற்றங்களுமே பா.செ போலும் மக்கள் நலத்தில் அக்கறை கொள்ளும் மூத்த படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் அவாவி நிற்பவை.

இரா.கந்தசாமி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
திருத்தங்கல் நாடார் கல்லூரி, சேலவாயல், சென்னை – 51.
பேசி:7598202632, karasurkandasamy@gmail.com

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை