தருமபுரித் தகனம் - இரு மரணம் - இனி செய்ய வேண்டியது என்ன?

என்ன நடந்தது, ஏது நடந்தது என அறிய இயலாமலிருக்கின்ற வரலாற்று மறைவுப் பிரதேசத்தை இருண்டகாலம் என்கிறோம். எல்லாமும் மக்களுக்கு எதிரானவையாய் நடந்த வரலாற்றுக் காலமும் 'இருண்ட காலம்' எனச் சொல்லப்படுகிறது. நாடு விடுதலைபெற்று 60 ஆண்டுகள் ஆனபின் 'காதல் வேண்டாம், கலப்புத் திருமணம் வேண்டாம், சாதி வேண்டும்' என்று உடும்புப்பிடியாய் பேசுகிற ஓர் அரசியல் கட்சி, அதற்குத் துணைசெய்யும் சாதி அமைப்புக்களின் ஓர் இருண்டகாலம் இது.


திவ்யா – இளவரசன் என்ற இரு மனசுகள் பிறந்த இடங்கள் இருவேறு சாதிகள். இதன் காரணமாய் இரு மரணங்கள்.

இரு மரணங்களும் விளைவிக்கப்பட்டவை.
முதலாவது திவ்யாவின் தந்தை மரணம்,
இரண்டாவதாய் திவ்யாவின் காதல் கணவன் மரணம்.

இரண்டு பேரும் திவ்யாவின் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர்கள். திவ்யாவின் வெளிப்படையான வாக்குமூலம் சொல்கிறது 'என் தந்தையும் தாயும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். எங்கள் காதலுக்கு எதிராக நின்றவர் இல்லை அப்பா. ஆனால் ஒரே ஊரிலேயே காதலித்து கல்யாணம் செய்து கொண்டாயே, அதுதான் கஷ்டமாயிருக்கிறது என்பார்'. அவருக்கு உண்மையில் கஷ்டத்தை – வருத்தத்தைத் தந்தது அவர் உள்மனசு இல்லை. அது காதல் நெஞ்சம்! வெளியிலிருந்த சாதிய சக்திகள் அவரை இழுத்துப்பிடித்து இழித்துப் பேசியதால் அவர் தூக்கில் தொங்கினார்.

'திவ்யாவால் நான் இல்லாமல் வாழ முடியாது. திவ்யா என்னிடம் திரும்பி வருவாள்' என்று இளவரசன் நம்பிக்கையோடு நின்றார். தந்தையை இழந்து சோகத்தில் வாடும் தாயாரைத் தேற்றுவதற்காக சென்று தங்கிய திவ்யா, இப்போது இளவரசனையும் இழந்து நடைப்பிணம்.

'திவ்யாவின் தாய்க்கு நெஞ்சுவலி... ஆபத்து' அதிர்ச்சித் தகவலைத் தருகிறார் பெரியம்மா. அம்மாவைக் காண பதறியடித்துக்கொண்டு ஓடிய திவ்யாவை பாச நாடகமாடி, முதலில் இளவரசனிடமிருந்து தாய் கடத்தினார். தாய் கடத்திய திவ்யாவை அடுத்ததாய் சாதியக் கட்சியான பா.ம.க. கடத்தியது.


திவ்யா நீதிமன்றத்துக்குள் நுழைந்து வெளியேறுகிற காட்சியை தொலைக்காட்சிகள் காட்டியபடி, ஒரு கணம் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். கறுப்பு வெளவால்கள் போல், 'சமூகநீதிப் பேரவை வழக்குரைஞர்கள்' என்ற ஆண், பெண் வழக்கறிஞர்கள் முற்றுகை செய்து வர, காரில் ஏறுகிற அந்த பரிதாபப் பெண்ணை ஒரு கணம் சிந்தியுங்கள். இந்த 'சமூகநீதிப் பேரவை வழக்குரைஞர்கள் அமைப்பு' பா.ம.க.வின் கிளையாய் கட்சியின் வழக்குகள் தொடர்பான பணிகளை தோள்மேல் போட்டுக் கொண்டு செய்கிறது. 'எங்கப்பா சாவுக்கு நீங்கதான் காரணம். எங்க வாழ்க்கையில் குறுக்கிட நீங்க யார்?' என்று இளவரசனுடன் இணைந்து வாழ்ந்தபோதில் கேட்ட அந்தப் பெண்ணை இவர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். அப்படியே காரில் ஏற்றி பா.ம.க. பிரமுகரின் வீட்டில் பாதுகாப்பாக வைத்தார்கள். ஜூலை முதல் தேதி நீதிமன்றத்துக்கு வந்த திவ்யா, மூன்றாம் தேதி நீதிமன்றம் வரும்வரை, அந்த வீட்டில்தான் பாதுகாப்பாக இருந்தார். அவருடைய கை பேசி, அம்மாவின் கைக்கு வந்தது.

இளவரசனுடன் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என மூன்றாம் தேதி கூறினார். மூன்றாம் தேதி 'யாருடன் செல்ல விரும்புகிறீர்கள்' என நீதிபதிகள் கேட்டிருக்கக் கூடாது. கேட்டபோது, 'என் குடும்பச் சூழல் சரியாக இல்லை. என்னுடைய இருப்பு தாயாருக்கும் தம்பிக்கும் தேவைப்படுகிறது. எனவே என் தாயுடன் செல்ல விரும்புகிறேன்' என்கிறார். 'பழையதை மறந்துவிட்டேன். எனது செவிலியர் (நர்ஸ்) படிப்பைத் தொடரப்போகிறேன். சுற்றிலும் நிலைமைகள் சரியாயில்லை. இனி கணவனுடன் வாழ சாத்தியமில்லை' (இந்து நாளிதழ் - 4.7.2013) என நீதிமன்றத்திற்கு வெளியில் தெரிவிக்கிறார்.

சாதிமறுத்த இந்த இளம் காதலர்களுக்காக, மூன்று கிராமங்கள் லங்கா தகனமாகின. 250 வீடுகள் சாம்பலாகின. 2012 நவம்பரில் எரிந்த சாம்பல் பூசணம் பற்றி, நெருஞ்சி படர்ந்த ஒன்பது மாதங்களின் பின்னும் நிவாரணத்தொகை வந்து சேரக் காணோம் 'சாதி வெறியர்களிடமிருந்து இளவரசனையும் திவ்யாவையும் கண்களைப் போல் காத்தோம். இப்போது அதே சாதிவெறிக்கு இளவரசனே பலியாகி விட்டான்.' நத்தம்சேரி கிராமத்தினர் புலம்புகிறார்கள்.

இளவரசனை இல்லாமல் ஆக்கியது யார்? விசாரணை நடக்கிறது. மூன்று ஊர்களின் தகனத்துக்குப் பின்னரும், சாதி மறுப்புத் திருமணத்துக்கு சட்டபூர்வ நியாயம் தராத அரசு, என்னவகை விசாரணையை நடத்தும்? உட்கார்ந்திருக்கும் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள் சிலர்.

'எனக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. அப்பா இறந்து விட்டார். அம்மா வேதனையில் இருக்கிறார். தம்பிக்கு ஆதரவு வேண்டும்' என்று திவ்யா சொன்ன வேளையில், நீதிமன்றம் அவரைக் காப்பகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். சட்டப்படி அதுவே சரி, இதைக் கருத்தில் கொள்ளாத நீதிபதிகள் 'நீங்கள் யாரோடு இருக்க விரும்புகிறீர்கள்?' என்று கேட்க, 'அம்மாவுடன் இருக்கப் போகிறேன்' என்று பதிலளித்தார் திவ்யா. இந்த இடத்தில் சட்டத்தை மீறியவர்கள் நீதிபதிகள் என்பதால், அவர்கள் நடந்துகொண்ட முறையையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும்.
கடந்த எட்டு மாதங்களாய் 'காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட வாழ்க்கை' நடத்தினர். அவர்களின் ஒவ்வொரு அசைவிலும், குறிப்பாய் திவ்யாவின் மன அமைப்பில் சஞ்சலங்களை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்துக்கு சாதிக்கட்சி காத்திருந்தது. திவ்யாவின் மன உறுதியை நொருக்குதற்கான ஏற்பாட்டை கவனமாய்ச் செய்தார்கள். சமூக அழுத்தத்தை - அந்த விசையிலிருந்து கிளம்பும் மன அழுத்தத்தை பிரயோகித்த பா.ம.க, துணையாய் சாதிய அமைப்புகள் எனும் சிலந்தியின் கோரக்கால்களில் இளவரசன், திவ்யா என்ற ஈக்கள் மாட்டிக் கொண்டன. இப்போதும் அந்தச் சிலந்தியின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிதாயப்பட்டுக் கொண்டிருக்கிறார் திவ்யா.

பிரித்து வைப்பதில் பா.ம.க. செலுத்திய கவனக்குவிப்பை, காதல் இணையரைத் தொடர்ந்து கவனித்துப் பாதுகாப்பதில் தலித் இயக்கங்கள் செய்யாது தவறியுள்ளன. இளவரசன் கொடுத்த நேர்காணலில் (ஜூ.வி – 10.7.2013) தாய்-தந்தையர் துணை நிற்க 'தன் கையைத் தானே ஊன்றி கரணமடித்ததாக' வேதனை வெளிப்பட்டுள்ளது. 'தங்குவதற்கு இடமின்றி நாங்கள் ஊரூராய் அலைந்தோம்' என்று வேதனை கொப்பளிக்கச் சொல்லியிருக்கிறார். சாதி வெறி வஞ்சகரின் சூழ்ச்சிக்கு எதிராய் பேசியும் எழுதியும் அம்பலப்படுத்திய தலித் இயக்கங்கள், சனநாயக அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ்த் தேசியர் எவரும் அவர்களைப் பாதுகாப்பாய் வைத்திருப்பது என்ற ஆக்கபூர்வமான செயல்பாட்டை நினைக்காமல் விட்டார்கள்.

உள்ளம் சிதைக்கப்பட்ட திவ்யா, உடல் சிதைக்கப்பட்ட இளவரசன் - இந்தக் கதிக்கு ஆளாக்கப்பட்டது ஏன்? தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தி – உயர்சாதியை அல்லது இடைநிலை சாதியை, அல்லது ஒரு சூத்திர குலத்தைச் சார்ந்தவரைக் காதலிக்கிறபோதும், கலப்பு மணம் செய்கிறபோதும் மட்டுமே வஞ்சகமும் வஞ்சமும் நிமிச்சலாய் கம்பு ஓங்கி வருகின்றன.

இரு மனங்கள் ஒன்றையொன்று நேசித்து, இணையும் உன்னதம் தான் காதல். மனித ஜீவன்களுக்குள் இயங்கும் இந்த இயல்பூக்க உணர்வுகளை வெட்டிக் கூறுவைப்பது – மானுட வளர்ச்சியில் குறிவைத்து விஷ அம்பைப் பாய்ச்சுவதாக ஆகிறது. காதல், நட்பு, பாசம், சாதி, மத, இன, பாலியல் வேற்றுமையில்லாத ஒற்றுமையுணர்வு அனைத்தும் மானுட சமுதாயத்தின் வளர்ச்சிப் பண்புகள். இந்தப் பண்புகளை அறுத்தெறிய முண்டுகிறவர்கள் மனித சாதியே அல்ல.

இன்றைய சமுதாய அமைப்பில் சாதி இல்லாத – சாதி உலவாத 'வெளி' (Space) எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் நம் ரத்தத்துக்குள் சாதி சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கிறது. குடும்பமாய் இருக்கிறது. குடும்பம் தாண்டி உறவு, நட்பு என சுற்றிலும் வலைவிரித்து நடமாடுகிறது. தேர்தல் அரசியலாய் நடனமிடுகிறது. சாதியின் மறு உருவங்களாய் கட்சிகள் வேறு பெயர்களில் இயங்குகின்றன. எந்தப் பகுதியில் எந்த சாதியினர் பெருவாரியாக உள்ளனரோ அவர்கள் தாம் வட்ட, மாவட்டச் செயலர்களாக இருக்க முடியும். இந்த இலக்கணத்தின் மேல் காலூன்றி தொகுதி வேட்பாளர் வெற்றியடைகிறார். சாதித் 'தலைப்பிரட்டு' (தலைகீழ் புரட்டு) இல்லாத பேச்சும் கிடையாது, மூச்சும் கிடையாது என்பது தெரிந்த உண்மை.

இந்த 'கெட்ட சாதிக் காற்று' இளவரசனையும் திவ்யாவையும் ஓட ஓட விரட்டிற்று. திவ்யாவை தாய் மூலம் தொட்டு, பெரியம்மா மூலம் தடவி, தன் மனதைக் கொன்றுவிட்டு வேறொன்றைச் சொல்ல வைத்து, கணவனிடமிருந்து அப்புறப்படுத்தியது. முதலில் கொலை செய்யப்பட்டது திவ்யாவின் மனசு. தொடர்ச்சியாய் திவ்யாவின் மனசில் வாழ்ந்த இளவரசன் மரணம்.

'ஜீன்ஸ் பேன்ட், கூலிங்கிளாஸ் சகிதம் நமது குலப்பெண்டிரை மயக்கி, மணம் செய்து, பணம் பறித்து, நடுத்தெருவில் விட்டு விடுகிறார்கள். காதல் நாடகமாடுகிறார்கள்' என ராமதாஸூம், பா.ம.கவும் பரப்பியதை எட்டு மாதங்களாய் திவ்யாவை உயிராய் நேசித்து வாழ்ந்த இளவரசனின் மறைவு பொய்யாக்கியுள்ளது. அரசியல் நாடகமாடிகள் நீங்களே என மரணித்த முகம் சொல்கிறது. கொல்லப்பட்ட காதலின் கங்கிலிருந்து ஆக்ரோசமான பிரகிருதியாய் திவ்யா எழுந்து வரவேண்டும். சாதி, மத மன வேற்றுமைகளால் மனிதம் வேட்டையாடப்படுவதிலிருந்து – இனியும் இளம் உயிர்கள் பறிக்கப்படாமல் தடுக்க அணிதிரட்டும் சக்தியாய் அவர் எழுந்து வருவார் என விரும்புகிறேன்.

நவம்பர் 2012-ன் தருமபுரிச் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவைகளாய் உருவெடுக்க தமிழ் இளையோரின் சிந்தனைக்கு சில முன்வைப்புகள்.
  1. சாதி அமைப்புகள், சாதிய அரசியல் கட்சிகளுக்கு மாற்றாய், சாதி மறுப்பு இயக்கங்களைத் தொடங்கி, உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும். உணர்வுபூர்வமான தெளிந்த செயல்பாடு இல்லாமையால் தருமபுரி உயிர்களைத் தத்தம் செய்துவிட்டோமா என்ற கேள்வி குத்தி எடுக்கிறது.
  2. தலைநகரம், பிற நகரங்கள் மட்டுமல்ல. சாதி மறுப்பு இயக்கங்களின் உடனடித் தேவை கிராமங்கள். உண்மையில் கிராமத்தில் தொடங்கிய காதலை தனது கொடூரமான கரங்களால் சாதீயம் கொத்தாக தறிக்க முயன்றது.
  3. தேர்தல் அரசியலில் முன்னிறுத்த வேண்டியவை 'ஊழல் ஒழிப்போம், கறுப்புப் பணம் ஒழியட்டும், கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வோம் என்பவை மட்டுமல்ல. சாதி மறுத்து மணம் செய்வோம். சொந்த சாதியில் (காதல் மணம் தவிர) மணம் புரியோம் எனப் பிரகடனங்களாய் அறிவிக்க வேண்டும்.
  4. சாதிய அமைப்புக்களைச் சட்டபூர்வமாகத் தடை செய்யமுடியும். பெயர்களில் ஒளிந்து கொள்ளும் சாதியின் பெயரில் அல்லாமல் வேறு அரசியல் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.
  5. கலப்புத் திருமணம் செய்பவர்கள் அனாதைகள் போல், அகதிகள்போல், நாடோடிகள் போல் அலைய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அகதிகளோ, அனாதைகளோ, நாடோடிகளோ அல்ல. சமுதாயத்தில் மாபெரும் சாதனை செய்த போராளிகள். கலப்புத் திருமண இணையருக்கு தனி இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, பொருளாதாரப் பாதுகாப்பு சட்டபூர்வமாக உண்டாக்கப்பட வேண்டும்.
  6. சட்டத்தைக் காட்டி மட்டுமே சாதீய மனங்களைக் கூட்டிப் பெருக்கி துப்புரவு செய்து விடமுடியாது. ஈராயிரம் ஆண்டுக் கழிவு இது. ஒரு நாளில், ஓர் ஆண்டில், ஏன் ஒரு பத்து ஆண்டுகளிலும் மாற்றக்கூடியதன்று. விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பிரதேசத்தில் காதல் மணம், கலப்புத் திருமணம், சாதிமறுப்புச் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டன. எதிர்க்கும் பெற்றோர், உறவினர்களை வட்டார அரசியல் பிரிவுக்கு வரவழைத்து அறிவுறுத்தினர். எதிர்த்து முட்ட முயன்றவர்களை தண்டனைக்குள்ளாக்கினர். சாதியத்தில் ஊத்தம் கொண்ட மனத்தை சட்டத்தால், ஆணையால், தண்டணையால் ஒரே நாளில் வழிப்படுத்த முடியாது. பெற்றோர், குடும்பம், உறவு, ஊர்ப்பெரிசுகளுடன் உரையாடல், ஆலோசனை, இறுதியில் மாற்றுச் செயல்முறை என்றபடிதான் நூற்றாண்டுகளின் அழுக்கைத் தகனம் செய்ய இயலும்.
சாதி மறுப்பு தலித் ரத்தத்துக்கு மட்டுமே உரியதல்ல. தமிழ் ரத்தமும் அதற்கு உரியது. தலித் ரத்தமும் தமிழ் ரத்தமும் சாதிமறுப்பில் ஒன்றுதான் என்பதை இளையோர்கள் அறைந்து சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியவாதிகள் இப்பிரச்சனையை முன்னெடுத்துப் போராடியிருக்க வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியர்களில் சிலர் 'யாருக்கு வந்த விதியோ' என கண்டும் காணாமல் ஒதுங்கியிருப்பது 'இவர்கள் இப்படித்தான்' என்பதை உறுதிப்படுத்துகிறது. கண்டித்து ஓர் அறிக்கை தந்த இவர்கள் களத்தில் நின்று போராட இயக்க சக்திகளை திரட்டவில்லை.

'இளவரசனை ஒரு தியாகியாகவோ, ஹீரோவாகவோ சித்தரிக்க வேண்டாம். உத்தரகாண்ட மீட்புப் பணிக்குச் சென்று இளவரசன் இறந்து விடவில்லை. படிக்கும் வயதில் காதல் என்று திரிந்தவர், இன்று உயிரிழந்துள்ளார். இளைய சமுதாயத்துக்கு அவர் ஒரு தவறான முன் உதாரணம். படிக்கும் வயதில், வாழ்க்கைக்கு தேவையான வேலையையும் தேடாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அழித்து, இன்று தன்னையும் அழித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பழியை பா.ம.க சுமக்க வேண்டுமா?'
என்று எகத்தாளமாக பேசியிருக்கிறார் பா.ம.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் செந்தில். எகத்தாளம் மட்டுமல்ல, ஏகப்பட்ட மப்பில் கேலி செய்திருக்கிறார். உண்மையில் இந்த மருத்துவர் 'காதல் நாடகமாடுகிறார்கள்' என்று அறிக்கை விட்ட அந்த மருத்துவரைத் தாங்கிப் பிடிக்கிறார். இவருடைய எண்ணத்தின் படி - வன்னிய சாதியிலேயே பிறந்து, அதே சாதிப் பெண்ணின் பின்னால் அலைந்து, படிப்பையும் கெடுத்து, வேலையையும் தொலைத்து இருந்தால் சரியான உதாரணம்.

இவர்களின் சாதிவெறியைச் சுட்டிக் காட்டித்தான், 'நாம் அடுத்த பிறவியிலாவது ஒரு சாதியில் பிறந்து திருமணம் செய்து வாழ்வோம்' என்று மரணத்தை தழுவியுள்ளார் இளவரசன். தன் மரணத்தின் மூலம், சாதி என்ற விஷ விருசத்தை வேரறுக்கும் சமூகக் கடமையை நம் தோள்களில் தூக்கிவைத்துப் போயிருக்கும் இளவரசன் ஒரு போராளி தான். சாதியைத் தூக்கிச் சுமந்து அரசியல்செய்ய நினைக்கும் பேர்வழிகளுக்கு வருங்காலத்தில் நிகழவிருக்கும் அரசியல் மரணத்தை முன்னுணர்த்தும் காலத்தின் குரல் அது.

நன்றி: பொங்குதமிழ் - 8 ஜனவரி 2013

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி