கென்னடி என்னும் மானுடன்

(2019 சனவரி, 10-ல் ஈழத்தின் வடகோடித் தீவான காரைத்தீவில் [காரை நகரில்], ஜான் கென்னடி என்னும் போராளியின் நினைவேந்தல் நிகழ்வில் ஆற்றிய உரை)
2002 சனவரி ஈழத்தில் நார்வே நாட்டின் முன் முயற்சியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. உடன்படிக்கை கையெழுத்தானதும், அது உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செயல்படுத்தப்படுகிறதா என்ற கண்காணிப்பு மிக அவசியமானது: நார்வேயை நம்பி ஓய்ந்துவிடவில்லை விடுதலைப் போராளிகள்.


2002 அக்டோபர் 20, 21, 22, 23 - நாட்களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டுக்கு” - கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், அரசியலாளர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் என ஐவர் அழைக்கப்பட்டிருந்தோம்: யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலிருந்து எமக்கு அழைப்பு விடுக்கப் பெற்றிருந்தாலும், விடுதலைப் புலிகளின் கலைப்பண்பாட்டுப் பிரிவு, “மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டை” நடத்தும் முழுப் பொறுப்பினை ஏற்றிருந்தது. கலைப்பண்பாட்டுப் பிரிவின் செயலர் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஒரு போராளியின் செயல்துடிப்புடன் மாநாட்டினை ஒருங்கிணைத்து இயக்கிக் கொண்டிருந்தார்.


மாநாடு நிறைவடைந்து திரும்பும் வழியில் கிளிநொச்சியில் போராளிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து உரையாடினோம்: “நார்வேயின் முன்னெடுப்பில், இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது; நார்வேயை நீங்கள் நம்புகிறீர்களா?” அவரிடம் அப்போது கேள்வி எழுப்பினோம். அன்றையகாலத்தில் நிலவிய அரசியல் நிலைமைகளை - ஒற்றைமைய உலக அரசியலை நடத்திக்கொண்டிருக்கும் அமெரிக்க ஆதிக்கத்தினை விளக்கிவந்த பிரபாகரன் சொன்னார்:
“நாங்கள் நார்வேயை நம்பவில்லை: அமெரிக்காவின் கொடூர முகம் இஸ்ரேல்; அமெரிக்காவின் மென்மையான முகம் நார்வே”
அவர் உதிர்த்த முத்தாய்ப்பான கருத்தை நாங்கள் உள்ளிறக்கிக் கொண்டோம்.


அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதும், ஒரு பாவனைக்காகக்கூட விடுதலைப் புலிகள் ஓய்ந்திருக்கவில்லை; கையெழுத்தான, அதே சனவரியில் “பொங்கு தமிழ்” மாநாடுகளை வடக்கு, கிழக்கில் நடத்தும் முயற்சி தொடங்கினர்.

”ஈழத்தமிழரின் உணர்வை உலகுக்கு வெளிப்படுத்துவோம்;
தலைநகரில் ஒரு சரித்திரம் படைப்போம், அணிதிரண்டு வாரீர்”
’முதல் பொங்கு தமிழ் மாநாடு’ யாழ்குடாநாட்டில் யாழப்பாணத்தில் தொடங்கிற்று.

1.வவுனியா, 2.மட்டக்களப்பு, 3.கிளிநொச்சி, 4.முல்லைத்தீவு, 5.மன்னார், 6.திருகோணமலை என்று தொடர்ந்த மாநாடுகளில்,
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
எமது போராட்டம் நீதியானது, நியாயமானது, தர்மத்தின்பாற்பட்டது.
தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைச் சர்வதேச சமூகமே அங்கீகரி“
- முழக்கங்களை முன் வைத்து தீர்மானங்கள் வடிவெடுத்தன. “பொங்கு தமிழ்” எங்கு தொடங்கியதோ, அந்த யாழ்குடா நாட்டின் யாழ்நகரில் “பொங்கு தமிழ் 2005, செப்டம்பர் 30-இல்” யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட அரங்கில் நிறைவு நிகழ்வை நடத்தி, உரிமை வேட்கைக் கண்ணாடியை உலகின் முன் உயர்த்திக் காட்டியிருந்தனர் விடுதலைப் போராளிகள்.

எனது ஊகம் சரியாக இருக்குமானால் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து 2007-இல் நண்பர் கென்னடியும், அவரது துணைவியார் நதீராவும் முனைவர் பட்ட ஆய்வுக்கு, நெல்லையிலுள்ள மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் சேருகின்றனர். கென்னடி - ஆங்கிலத்துறை ஆய்வு மாணவர். துணைவியார் நதீரா – தமிழ்த்துறை ஆய்வுமாணவர்.

தமிழகம் வந்த பின் சிலமுறை நேரிலும் தொலைபேசியிலும் சந்தித்துக் கொண்டோம்; உரையாடினோம். நண்பர் கென்னடியின் உரையாடலும், அதனுடன் வெளிப்படும் விடுதலைத் தாகமும் வியக்கச் செய்தன: அவருடைய உள்வட்டமும் வெளிவட்டமும் அந்த ஒரு வட்டத்துக்குள் அடங்கியது: நான் பங்குபெற்ற “மானுடத்தின் தமிழ்க் கூடல்” மாநாடு பற்றியதாக எனது உரையாடல் இருக்குமெனில், அவர் பங்களிப்புச் செய்த “பொங்கு தமிழ் மாநாடுகள்” பற்றியதாக அவருடைய உரையாடல் அமைந்தது. பொங்கு தமிழ் மாநாடுகள் தொடர் நிகழ்வாக நடத்தப்பெறுவதைச் சுட்டிக்காட்டி, “அது போல் தமிழகத்தில் நடத்த சாத்தியப்படுமா?” என்பார். அப்போது தமிழகம் ஈழ விடுதலைக்காக முழுமுனைப்பாக முழங்கிக் கொண்டிருந்தது: ஆனாலும் மழுங்கைத்தனமான இந்திய நடுவணரசை அசைக்க முடியாதிருந்தது. எங்களுக்குக் கிட்டிய பயனென்பது, ஈழ விடுதலைப் போராட்டமெனும் சுடரிலிருந்து, தமிழ்த் தேசியம் என்னும் கங்கை அணையவிடாமல் காத்துவந்த ஒரு பயன் மட்டுமே!

1987 ஆண்டு, அக்டோபர் 10-ஆம் நாள், யாழில் “ஈழ முரசு” அலுவலகம் இந்திய இராணுவத்தால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. எஸ்.எம்.ஜி எனவும், கோபு எனவும் அழைக்கப்படும் எஸ்.எம்.கோபாலரத்தினம் அப்போது “ஈழமுரசு”ஆசிரியர்: ஆசிரியரும், பணியாளர்களும் அன்றிரவே கைது செய்யப்பட்டனர். யாழ் கோட்டைச் சிறையில் எஸ்.எம்.ஜி சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். ஆறு மாதங்கள் பின் விடுதலையானார். “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்று தனது சிறை அனுபவங்களைத் தொடராக தமிழகத்தின் வார இதழான ஜீனியர் விகிடனில் எழுதினார். தொடர் ஈழ மண்ணில் இந்தியப் படைகளின் தொடரும் அட்டகாசத்தை அம்பலப்படுத்தி பரபரப்பை உண்டாக்கிற்று. 2002-க்குப் பின் அவர் தன் துணைவியாருடன் அகதிகளாய் திருச்செந்தூரில் தங்கியிருந்தார்.

துணைவியார் மறைவின் பின், அவரது இரு மகன்களும், ஒரு மகளும் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்த பின், 2008-வாக்கில் தமிழகத்திலிருந்து, கோபு ஐயா மீண்டும் தாயகம் திரும்புகிறார். திருச்செந்தூரில் அப்போது அவரோடு மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன்.

எஸ்.எம்.கோபு ஈழம் திரும்புவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன: மறுநாள் காலை, அவர் திருவனந்தபுரம் சென்று, உறவினர் வீட்டில் ஒரு நாள் ஓய்வு எடுத்த பின்னர் விமானத்தில் கொழும்பு செல்வதாகத் திட்டம். அவரை வழியனுப்ப அவருடன் திருவனந்தபுரம் சென்றேன்.

கோபு ஐயா புறப்படவிருந்த முதல் நாள் மாலை அவரைப் பார்த்துச் செல்ல, கென்னடியும், நதீராவும் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் வந்திருந்தனர். அன்றிரவு உணவருந்திய பின் திருச்செந்தூரில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குப் புறப்படனர்.

2010-ல் கென்னடி முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்து, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணியில் சேர முயன்று இயலாமற் போயிற்று. அவர் தனது நண்பர் சிவாஜிலிங்கத்திற்கு தேர்தல் பணியாற்றினார்; போராளி இயக்கத்துடன் நேரடித் தொடர்பிலிருந்தார். ஈழத் தாகமிக்க அவருடைய குரல் ஒரு நாள் தொலைபேசி வழிகேட்டது; எந்த ஆண்டு என்றும் எங்கிருந்து என்றும் தெளிவாய் இல்லாது கலங்கலாய் மிதந்து வந்தது; பின்னர் துண்டிப்பானது.

அதன் பின் கென்னடியுடனான சந்திப்பு எனக்கு நிகழவில்லை. ஈழத்திலிருந்த வேளையில் சில நாட்கள் தொடர்பு கொள்ள முயன்றும் எனக்கு அவர் தொலைபேசியில் கிட்டவில்லை.

“பின்னர் அவர் எதியோப்பியாவில் பணியாற்றுவதாக கேள்விப்பட்டேன்” என, மணோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழ்த்துறையில் பணியாற்றிய நண்பர், எழுத்தாளர் அ.ராமசாமி எனக்குத் தகவல் தந்தார்.

கென்னடி இனிய நண்பர்; சாதி வேறுபாடு குருதியின் ஒரு துளியிலும் கொண்டிராத தோழர்; ஈழ விடுதலைக்கு ஆதரவான குரல்கள், சார்ந்த செயல்பாடுகள் எங்கெங்கு உண்டோ, எவரிடம் எழுகிறதோ, அந்தச் சக்திகளையெல்லாம் தனக்கு அணுக்கமாய் வைத்துக்கொண்ட செயற்பாட்டாளர். எல்லாவற்றினும் மேலாய் அவர் ஒரு மனிதர். தன் இலட்சியம், குறிக்கோள், விழைவு நிறைவு கொள்ளும் முன்னரே மறைந்த அவரின் இழப்பு ஈடு செய்ய இயலாதது.

2019 சனவரி 10-ல் ஈழத்தின் வடகோடித் தீவான காரைத்தீவில் ஒரு ’துக்கம்’ விசாரிக்கச் சென்றேன். 2009 மே 17-லில் விழுந்த இழவு தீர்ந்து விடவில்லை. ஈழ மண்ணின் விடுதலையில் தணியாத வேட்கை சுமந்து மரணித்த நண்பர் கென்னடியின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வு - இது நண்பருக்குப் பொன்விழா ஆண்டும் கூட. “கென்னடி ஓர் பன்முக ஆளுமை” என்னும் நூல் வெளியீடு நடைபெற்றது.

பிறந்து வளர்ந்து கல்வி பெற்ற காரைத்தீவு எனப்பெறும் காரைநகருக்கு ஜான் கென்னடி தன் மரணத்தால் எங்களை வரவழைத்திருந்தார். கென்னடியின் குடும்பம் சைவ வெள்ளாள மரபினது. அவருடைய தந்தை கற்ற கல்வியும் பெற்ற அனுபவமும் வித்தியாசமானது. தந்தை செல்வ நாயகம் தலைமையில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் கென்னடியின் தந்தை பங்கேற்றார். மகளுக்கு ஸ்டாலின் பெயரில் ’ஸ்டாலினா வீரமங்கை’ எனப் பெயர் சூடி மகிழ்ந்தார். அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்பட்டதை உலகம் துயரத்துடன் கவனித்தது. தன் மகனுக்கு ’ஜான் மனோகரன் கென்னடி’ எனப் பெயர் சூட்டிய அவரது செயல் அதிசயிப்பானது.

நண்பர் கென்னடியும் துணைவியார் நதீராவும் நெல்லை சுந்தனார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு (2003-2009) மேற்கொண்டனர். 2002 – அக்டோபர் இறுதியில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த “மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டில்“ இருவரும் எனக்கு அறிமுகமானார்கள். மாநாட்டில் அறிமுகமாகிய மற்றொரு நண்பர் - பின்னாளில் தமிழகத்துக்குப் அகதியாய்ப் பெயர்ந்து, அணுக்க நண்பராகித் தொடர்ந்த இதழியலாளர், பெரியவர் கோபு என்றழைக்கப் பெற்ற எஸ்.எம்.கோபாலரத்தினம். 1980-களின் இறுதி ஆண்டுகளில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய அத்துமீறல்கள் பற்றிய ஆவணச் சித்தரிப்பு கோபு எழுதிய “ஈழமண்ணில் ஓர் இந்தியச் சிறை” நூல். ஜூனியர் விகடனில் தொடராக வெளியாகி உலகின் முன் உண்மைகளின் கண்ணாடியை ஏந்திற்று.

கென்னடி பயின்ற காரை நகர் இந்துக் கல்லூரியில் நினைவேந்தல். இழவு அரங்கத்தை கண்காணித்துக் கொண்டிருந்தது சிங்கள இராணுவம். நிகழ்வை ஒருங்கிணைப்புச் செய்து கொண்டிருந்த ஏற்பாட்டாளர்களிடம் விசாரித்துக் குறித்துக் கொண்டது. அழைப்பிதழில் இடம்பெற்ற பெயர்கள், அரசியல் ரீதியில் பயமுறுத்தும் பெயர்களில்லையென்றாலும், ஒவ்வொன்றையும் விசாரித்தறிய உள்நுழைவதும், சம்மணமிட்டு உட்காருவதும் இராணுவத்துக்குப் பெரிய ஆரியவித்தை, அல்லாவித்தையில்லை.
“நீ காதலித்த ஏழை எம்மைப் பார்
பிரபஞ்சம் சிறிதாய்! நீ பார்
எம் கையில் ஓர் மலராய்”
அழைப்பிதழில் கென்னடியின் படத்தின் கீழிருந்த கவிதை வரிகளின் கற்பூர வாசனை இராணுவத்தின் மூக்கு அறியுமோ? அழைப்பினை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தனர்.

காரைத் தீவிலிருந்து மூன்று கி.மீ. தென் கிழக்கில் எழில் சிந்தும் கடற்கரை. அது தமிழன் கடல். சாலையின் இடது பக்கம் திரும்பினால் கடற்கரை. வலது பக்கம் போனால் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் “ஈழத்துச் சிதம்பரம் கோயில்”. சிதம்பரத்திலிருப்பது போல, அங்கொரு கோயிலை உண்டாக்கியிருந்தனர் தமிழ்ச் சைவ மரபினர். கோயில் தில்லையம்பதி போல், தீட்சிதர்களின் ஆதிக்கத்திலில்லை. தில்லையை விட சிறப்பாக எடுப்பாக விரிந்த பரப்பில் கட்டப்பட்டிருந்தது. சோதனைச் சாவடியில் இராணுவச் சோதனைக்குப் பின்னர் தான், ஆண்டவனைத் தரிசிக்கச் செல்லக் கூடும்; நாங்கள் சென்ற தானி (ஆட்டோ) வாகனத்தைச் சோதனை செய்து, யார் எவர் என்ற பெயர்களைக் குறித்துக் கொண்ட பின்னர் அனுமதித்தார்கள்.

“படுக்கையறைக்குள்ளும் இராணுவம் பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று சொல்வது உண்மை!

சுதந்திரம் என்பது என்ன? எல்லா மூலை முடுக்குகளிலும், அனைத்து ஒழுங்கைகள், சாலைகளில் துப்பாக்கிக் கண்களின் சோதனைக்குள்ள்ளாகி நிற்கிறது நடமாட்ட சுதந்திரம். இராணுவத்தின் முழுச் சுதந்திரத்தின் முன், சுதந்திரமான பறத்தலுக்கும் வழியற்று தமிழரின் மனசின்சிறகுகள் துண்டிக்கப்பட்டுக் கிடந்தன.

முன்னர் காரைத் தீவுக்கு படகுப் போக்குவரத்து மட்டுமிருந்தது: இப்போது பேருந்து, மகிழுந்து, லாரி, ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் போகவர தரை வழிச் சாலை இணைக்கிறது. காரைத் தீவு தாண்டி நயினார் தீவு, புங்குடுதீவுகள் போன்றவைகளுக்கு, நீர்வழிப் போக்குவரத்து ஒன்றுதான். நீர்வழிப் போக்குவரத்தை கப்பற்படை கையாளுகிறது.

முள்ளிவாய்க்காலின் பின், இந்தப் பத்தாண்டுகளில் ’நயினார் தீவு’ முழுசையும் புத்த விகாரைகளின் குவியமாக ஆக்கிவிட்டார்கள். தென்னிலங்கையிலிருந்து ஏராளமான சிங்களர் சுற்றுலா வருகிறார்கள். நயினார் தீவின் மேற்கு மூலையில் ’நாக பூஷணி அம்மன்’ சைவக் கோயில் கிடக்கிறது: நயினார் தீவின் முக்காலே மூணுவீசம் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் புத்த வழிபாட்டுத் தலங்களுக்கு வந்து செல்கிற சிங்களமக்களில் ஒருத்தரும் சைவக் கோவில் பக்கம் தென்படவில்லை. ஆனால் தங்கள் வழிபாட்டுத் தலத்துக்கு, தமிழர்கள் புத்த விகாரைகளின் பரந்த நிலத்தைக் கடந்து தான் செல்கிறார்கள்.

காரைத் தீவுக்குச் சென்றடையுமுன் இரவு கிளி நொச்சியில் ஒரு நண்பரின் வீட்டில் தங்கினேன். ஒரு இரவு, ஒரு பகல். இருவேறு காட்சிகள்:
முன்னர் போராளிகள் கைவசமிருந்த அனைத்தும் - வணிகவளாகங்கள், அரசு அலுவலகங்கள், இராணுவ அலுவலகங்கள், முகாம், இராணுவக் குடியிருப்புகள் என ஆட்சியின் கைவசமாகியிருந்தன. கிளிநொச்சி வாணிப மையமாக கொளுத்துச் செழித்துக் கொண்டிருந்தது. மற்றொரு பக்கம் குடியேறவும், வாழ வழியில்லாமலும் ஆக்கப்பட்டு நின்ற “மொட்டைக் கழுத்தி”யான வீடுகள்.

யுத்த காலத்தில் ஒரு தடவை ஈழம் சென்றிருந்தேன். பீரங்கிச் சூடு, ஏவுகணைத் தாக்குதலால் A–9 நெடுஞ்சாலையின் இருபக்கமும் கானக மரங்கள் பொசுங்கியிருந்தன. ஒற்றைக்கை மனிதன் கை கூப்புதல் போல் தலையிழந்த பனைகள், “எங்களுக்கு நாள் குறிச்சாச்சி, போய்ச் சேரக் காத்திருக்கிறோம்” – என வானத்தை, வெட்ட வெளியை நோக்கி கும்பிட்டன. தலையிழந்த முண்டங்களிடையில் மோதிய காற்றின் அரற்றல் வெட்டவெளி கடந்து கிளி நொச்சி நகரத்துக்குள் இப்போது பிரவேசித்திருந்தது கண்டேன்.

ராணுவம் விரட்ட விரட்ட ஓடிய மக்கள் முல்லைத் தீவுக்குள் முடங்கினார்கள். வீடுகள் காலியாக நின்றன: ஈராயிரம் ஆண்டுக்கால டிரங்குப் பெட்டியை, இரும்புப் பெட்டகத்தை இறுக்க மூடுவது போல, இல்லங்களை மூடி சாவிகளைக் கையில் கொண்டு சென்றனர்: மனித சுவாசம் அறியாத நகரம் இருளடித்துக் கிடந்தது. நகரத்துக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, சாவிகளிருந்தன, வீடுகளைக் காணோம்.

குளிர்சாதனப்பெட்டி, ஏ.சி, சோபா, பீரோ, சலவை இயந்திரம், மெத்தை, கட்டில், சோஃபா முதலானவை முதலில் களவாடப்பட்டன. கரையான் அரிக்காத மரங்களால் செய்யப்பட்ட சன்னல், வாசல் கதவுகள் அடுத்ததாய்: கடைசியாய் காணியிலிருந்த நுழைவு இரும்பு கேட். சிங்கள இராணுவ மேலதிகாரிகள், சிப்பாய்கள் நேரடியாக தங்கள் இல்லங்களுக்கு - இந்தப் பொருட்களைக் கடத்திப் போனார்கள்: மிச்சம் மீதியை அந்தப் பகுதி வாழ் சுயநலமிகள் களவாடிப் போயிருந்தார்கள். இராணுவமும் சுயநலக்கூட்டமும் சூறையாடிய பின் எஞ்சியிருந்தது மொட்டைக் கழுத்துக்கள் தாம். உரலிருந்து கழற்றிச் சாய்த்த ”செக்கு உலக்கைகள்” போல், மொட்டையாய், அகோரமாய் கண்ணை அழுத்தின வீடுகள்.


நண்பர் மற்றொரு அதிர்ச்சியை எனக்குள் இறக்கினார்: விலைகூடின பயன்படு பொருட்களை, அலங்காரப் பொருட்களை இராணுவம் அலுவலப் பயன்பாட்டுக்கு வாங்கியதாய்க் காட்டி, போலி ரசீதுகள் தயார் செய்து, சமர்ப்பித்து, அப்படியும் சம்பாத்தியம் பார்த்திருந்ததாம் .

வீடுகளை மட்டுமல்ல, வீடிருந்த காணிகளும் இராணுவ அலுவலகங்களாய் மாற்றப்பட்டிருந்தன. பல காணிகளை, ராணுவ உயர்மட்டத்திலிருப்பவர்கள், சிப்பய்கள் அகப்படுத்தி குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி கிழக்கில்,‘பரந்துபாஞ்சான்’ ஆறுக்கு பக்கமாயுள்ள வீட்டில் ‘ஊழிக்காலம்’ நாவலாசிரியர் தமிழ்க்கவி அக்காவைச் சந்தித்தேன்: தன் வீட்டில் குடியிருந்த ராணுவத்தினரை வெளியேற்றி மூன்று மாதங்கள் முன்புதான் திரும்பப் பெற்று குடிவந்திருந்தார். அவருடைய இல்லத்துக்கு எதிரில் ஒரு கிறித்துவ ஆலயம். அங்கிருந்தவர்கள் வெளியேற்றப் பட்ட பின்னர், இராணுவத்தின் கை வசமாகியிருந்த அந்தக் கட்டிடம் இப்போது மீட்கப் பட்டிருக்கிறது.

வீட்டுக்கு மக்கள் அரண்; மக்களுக்கு வீடு அரண். முதலில் அவர்கள் காணி அவர்களுக்குத் திரும்ப வேண்டும். அதற்குப் போராட வேண்டியிருந்தது. காணி திரும்பியதும், முதலில் செம்மை செய்ய வேண்டும். பிறகு வாழ்க்கையைச் செம்மை செய்ய வேண்டும்.

2

“விடுதலைக்காக கொல்லப்பட்ட
கல்லறைகளில்
விடுதலை விதை வளராத கல்லறை
எதுவுமே இல்லை”
- போன்ற வரிகள், இலட்சிய ஆவேசமுள்ள – உணர்ச்சிவசப்பட்ட மனங்களுக்குத் தீனிபோட பயன்படலாம். இன்றைய நிலையில் நனைந்த தீக்குச்சி.

வேறு பிரதேச, வேறு படிநிலை, வேறு எண்ண ஓட்டங்களிலிருந்து இன்றைய ஈழமக்களின் மனஓட்டத்தை மதிப்பீடு செய்தல் பொருந்துமா? உள்ளார்ந்த நிலையிலிருந்து, உண்மையிலிருந்து மதிப்பீடுகள் வர வேண்டும்.

’யுத்தம் தன் கண்களை மூடி ஓய்வின் சாலையில் பயணிப்பதாகவும், சுபீட்சத்தின் நிழலைப் பருகி மக்களெல்லாம் நிம்மதி கொள்வதாகவும்’ சிங்கள ஆட்சியாளர்கள் புழக்கத்தில் விட்ட பல கதைகள் அங்கு உலவிக் கொண்டிருக்கின்றன.

வாழ்க்கையை நேசிக்கும் மக்கள் சுதந்திரமாக அதை தங்களுக்குப் பெற விரும்புகிறார்கள். நடமாட்ட சுதந்திரம் அற்றுப் போன பூமியில் மனசின் நடமாட்டத்துக்கு, கருத்துக்களின் வெளிப்பாட்டு உரிமை எள்ளளவும் இருக்க இருக்கவியலுமா, வாழ்க்கையையே நிதரிசனக் கண்ணாடியாக ஏந்தி நிற்கிறார்கள்.

தங்களுக்கு சொல்ல வராத வார்த்தைகளால் அந்த மக்கள் கேட்பது ஒரு நீதிக் கோட்பாடு. சுதந்திரம், சனநாயகம் என்ற நீதிக் கோட்பாடு. அதுவே தேசீயம் என்பதின் பொருள்.

வாயிலும் வயிற்றிலும் அடித்து ஐ.நா அவையில், மனித உரிமைகள் அவையில் முறையிட்டுப் பார்த்தனர்: பரிகார நீதி வழங்கப்படவில்லை. மனசாட்சிக் கொண்ட நாடுகளின் காதுகளில் கூட அவர்களின் ஒப்பாரி ஏறவில்லை. “அய்க்கிய நாடுகள் சபையல்ல: அயோக்கியர்கள் சபை” என்று பெர்னாட்ஷா சொன்ன வாசகம், ஒவ்வொரு ஆண்டும் உண்மையாயிற்று. ஐ.நா அவையின் அத்தனை நாடுகளும் கல்லூளி மங்கன்கள்! மனசாட்சியுள்ள சில நாடுகளோ, தம்மினும் வல்லமை கொண்ட மூத்தோர் யாது சொல்வாரோ என அச்சம் கொண்டு அவ்வழி, நல்வழி எனச் சென்ற வண்ணம் இருந்தன.

வெடிப்புறப் பேசிட முடியாது; வெளிப்படையாகவும் பேசிடக்கூடாது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்