அயோத்தி தீர்ப்பு: அரசியலின் கடைசிப் புகலிடம்


”அயோத்தி தீர்ப்பால் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு விட்டது” எனச் சொல்கிறார் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி. வேறுபாடின்றி ஏறக்குறைய எல்லா அரசியல்வாதிகளும் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள்.

வருவாய்த் துறை ஆவணங்களின் படி, சர்ச்சைக்குரிய இடம் அரசுக்கு சொந்தமானது என நீதிபதிகள் குறிப்பிடுகின்றனர். அவ்வாறெனில் ”யாரும் இதில் உரிமை கோரக் கூடாது; அரசுக்கு மட்டுமே உரிமையானது” என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

தொல்லியல்துறை நடுவண் அரசின் துறைகளில் ஒன்று. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தால் புதிய அத்தியாயம் எழுதப்பட்டதாக சொல்லப்படுவதில் அர்த்தம் உண்டு. ’எந்தத் தரப்பினரும் வழிபாடு செய்ய அனுமதிக்கக்கூடாது; பேணிக் காக்கும் பொறுப்பு அரசுத் துறைக்கு மட்டும் உண்டு’ எனச் சொல்லியிருந்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக அமைந்திருக்கும்.

நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது எனில் அந்த முடிவைப் பற்றி மூச்சுக் காட்டக் கூடாது என்ற பொதுக்கருத்து இங்கு நிலவுகிறது: ஜனநாயகம் என்பது விமர்சனப் பாங்கு என்பதின் மறு உருவம். பூமிக்கு மேலே ஆகாயத்துக்குக் கீழே உயிர்ப்பு அசைவுள்ள எக்கருத்தினையும் விமர்சிக்கிற , ஆய்வுக்கு உட்படுத்துகிற பொறிமுறைதான் சனநாயகம்.

உச்ச நீதிமறத் தீர்ப்பில் நிறையக் கேள்விகள்:

கேள்வி - 1
வருவாய்த் துறை ஆவணங்கள்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்குச் சொந்தமானது எனில் அரசுக்கு சொந்தமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். அரசுக்கு சொந்தம் ஆக்காமல் ராமர் கோயில் கட்ட அனுமதித்தது எவ்வாறு?

கேள்வி - 2
’நஜுன் நிலம்’ என்றால் புறம்போக்கு நிலம் என்று பொருள். பாபர் மசூதி இருந்த இடம் புறம்போக்கு நிலம். அதனாலேயே புறம்போக்கு நிலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் ராம ஜென்ம பூமி என உரிமை கொண்டாடும் நிலமும் புறம்போக்கு தானே? பாபர் மசூதி இடம் தங்களுக்கு சொந்தமானது என முஸ்லிம் தரப்பினர் அழித்த ஆதாரங்கள் ஏற்கப்படவில்லை என தீர்ப்பு தெரிவிக்கிறது; ஆனால் அந்தப் புறம்போக்கு நிலம் ராமஜென்ம பூமி என்பதற்கான ஆதாரங்கள் இல்லாத போது, இஸ்லாமியர்கள் இதுகாறும் காத்துவந்த புறம்போக்கு நிலத்தை இந்துக்கோயில் திறப்பதற்கு உரித்தானதாக்கியது எதனால்?

கேள்வி - 3
”நஜூன் நிலம்” அதிகபட்சமாக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துக் கொள்ள ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் வழிசெய்து தனித்துறையை உருவாக்கியது. குத்தகையைப் புதுப்பித்து மீண்டும் நிலம் ஒதுக்குவது உண்டு. ‘நஜூல்’ நிலத்தை குத்தகைக்கு எடுக்க இந்துக்கள் தரப்பில் முயன்றிருக்க வேண்டும். அவ்வாறு முயற்சி செய்யவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மகந்த் ரகுவர் தாஸ் என்ற சந்நியாசி, 1885-ல், மசூதிக்கு வெளியே சபுத்ரா என்றழைக்கப்படும் உயரமான மேடையில் 17 அடி அகலம், 27 அடி நீளத்துக்கு சிறிய கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கோரினார். ஃபைசாபாத் நீதிபதி அவர் கோரிக்கையை நிராகரித்தார். மேல்முறையீட்டு மனுவை மாவட்ட நீதிபதியும் ஏற்கவில்லை. அவரோ ,அல்லது அவர் போன்ற இந்து சந்நியாசிகளோ ஏன் இஸ்லாமியர்கள் செய்தது போல் புறம்போக்கு ’நஜூல் நிலத்தை’ 99 ஆண்டுகளுக்குக் குத்தகை எடுக்க முயலவில்லை?

அத்வானி பா.ச.க தலைவர் ஆன பிற்பாடுதான் அயோத்தியில் ராமர்கோயில் எழுப்புவதை பா.ச.க தனது கொள்கையாக மாற்றியது. ராம ஜென்ம பூமியை மீட்டெடுத்து, ராமர்கோயில் கட்டுதல் ’என் ஜென்ம பலன்’ எனச் சூளுரைத்து அத்வானி ரதயாத்திரையைத் தொடங்கிய பின்னர் மதச் சூறாவளியால் நாடு சின்னாபின்னமாகியது. ரத யாத்திரைக்குப் பின்னர் வட இந்தியாவில் மத அடிப்படையில் அணிதிரள்வது, மதக் கலவரங்கள் நடப்பது சாதாரணமாகியது. அது பாபர் மசூதி உடைப்பாய் உச்சத்துக்குச் சென்று மத நல்லிணக்கத்துக்குச் சமாதி கட்டியது.

தொடர்ந்து அரசிடம் விண்ணப்பித்து குத்தகையை புதுப்பித்து வந்த இஸ்லாமியத் தரப்பினர் 1954 காலத்தின் பின் புதுப்பிக்கவில்லை.1954- ல் அமைந்த வஃபு வாரியச் சட்டத்தின்படி, சன்னி மத்திய வஃபு வாரியப்பட்டியலில் பாபர் மசூதி சேர்க்கப்பட்டதால் , வஃபு சொத்தாகக் கருதப்படும் சூழலில், நஜூல் குத்தகையை புதுப்பிக்கத் தேவையில்லை என அதன் நிர்வாகிகள் கருதி விட்டுவிட்டனர். குத்தகை செலுத்தாததால் உரிமைகொள்ளும் ஆதாரமில்லை என்று கூறி, அவர்களின் கையை விட்டுப் போவதற்கு வழிசெய்த தீர்ப்பு, குத்தகையே செலுத்தாத இந்துத்தரப்பினர் கைகளில் நிலம் போக பாதை போட்டது எவ்வகையில் நியாயம்?

கேள்வி - 4
இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு அடியில் கட்டிடம் இருந்துள்ளதாக தொல்லியல் துறை ஆய்வு தெரிவிக்கிறது. அந்தக் கட்டிடம் இஸ்லாமிய வழிபாட்டுத் தளம் அல்ல என்று தீர்ப்பு கூறுகிறது ”பாபர் மசூதிக்குள் ஒரு கட்டிடம் இருந்துள்ளது; அந்தக் கட்டிடம் முஸ்லிம் சமூகத்தின் கட்டிடத்தைப் போல் அல்லாமல் வேறு மாதிரியாக இருக்கிறது. அது குப்தர்கள் காலத்தை சேர்ந்தது போல் உள்ளது. கட்டிடத்தின் கீழ் 15-க்கு 15 மீட்டர் சுற்றளவுள்ள அடித்தளம் உள்ளது. கட்டிடத்தின் கீழ் நடுப்பகுதியில் சில முக்கியமான பொருள்கள் கிடைத்தன. வட்ட வடிவமான அந்தக் கோயில் ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்; மேலும் சர்ச்சைக்குரிய நிலத்தின் வட பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 50 மீட்டர் பரப்பளவு உள்ள கட்டிடம் பதினொன்றாம் நூற்றாண்டு அல்லது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்; இதுதவிர மேலும் ஒரு பெரிய கட்டிடம் அங்கு கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. சர்ச்சைக்குரிய அந்த பாபர் மசூதி கட்டிடம் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். அந்த கட்டிடத்தின் கீழ் இருந்து 50 தூண்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேலும் சில அரசர்கள் காலத்து இடிபாடுகளும் கண்டெடுக்கப்பட்டன. அதன் எஞ்சிய பொருட்கள் புத்தர், ஜெயின் கோயில்களின் இடிபாடுகளாக இருக்கலாம்” என்கிற தொல்லியல் ஆய்வு அறிக்கை கூறுகிற போது, ராமர் கோயில் கட்டுவதற்கு என நிலம் தூக்கி கொடுக்கப்பட்டது எதனால்?
இன்னும் இன்னும் நிறைய நிறையக் கேள்விகள் - நியாயத் தீர்ப்புகளுக்காக!

2

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 111, 112, 113 ஆகிய பகுதிகள் தொல்லியல் துறையின் ஆய்வுகளைச் சான்றுகள் காட்டுகின்றன.

“பழைய கட்டிடம் ராமர் கோயிலாக இருந்ததா இல்லையா என்ற தெளிவான கருத்தை தொல்லியல் துறை தரவில்லை என்பதாலேயே அது எதையும் மாற்றி விடாது” என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அகர்வால் சுட்டிக்காட்டிய கருத்தை தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

”சர்ச்சைக்குரிய நிலத்தின் வடமேற்குப் பகுதியில் மிக நேர்த்தியான ராமஜென்மபூமி கோயில் இருந்திருக்கிறது (1889). அதன் தூண்கள் பாபர் மசூதி கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. வடமேற்குப் பகுதியில் உள்ள கட்டமைப்பு மற்றும் வடமேற்குப் பகுதியின் சில இடங்களில் எழுதப்பட்ட குறிப்புக்கள், வடமேற்குப் பகுதியில் காணப்படும் தொல்லியல் சின்னங்கள், கல்வெட்டுக் குறிப்புகளை ஆராய்ந்தால் பகவான் ராமர் அங்கு அவதரித்தார்; இராமர் கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் கி.பி 930ல் பாபர் மசூதி எழுப்பப்பட்டு இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகிற தொல்லியல் துறையின் ஆய்வை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. ஆனால் உறுதிப்பாடின்றி ஈரெட்டாக தொல்லியல் துறை முன்வைத்த கூற்றுகளும் உள்ளன. வரலாற்றுத் தடயங்கள் ஒன்றாக, தொல்லியல் துறையின் முடிவு வேறாக இருக்க என்ன அடிப்படை?

இது இந்து நாடு . இதை இந்தி மொழியின் நாடாக ஆக்கும் முயற்சியை மோடி முதல் அமீத்ஷா வரையான ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரங்கள் ஆசீர்வதிக்கிறார்கள். பல்லின நாடு, பல்லின மொழி, பல்லினப் பண்பாடு, பல மதங்களின் நாடு என்ற கருத்தை வடஇந்தியர் ஏற்கவில்லை. ஒற்றை அதிகாரத்தின் கீழ் ஆளப்படும் ஆரியநாடாகவே காணுகிறார்கள். ஒரு குயவன் அல்லது சிற்பி ஒவ்வொரு உருவாரத்தையும் முகம், பார்வை, அமருகிற, நிற்கிற கோணங்கள் பலதையும் தன்னிச்சைப்படி அமைத்துக் கொள்வான். கூட்டாட்சி என்பது உயிரற்ற உருவாரங்கள் செய்வது அல்ல; சிந்திக்கும் திறனுள்ள மனித உயிரிகளின் உயிர்ப்புள்ள அசைவுகள் மொழி, இனம், பண்பாடு போன்றவை.

இங்கு பெரும்பான்மை நம்பிக்கை தீர்ப்பாக முடிவுகொண்டுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி ”ஒரு மசூதி இருந்த இடத்தில், ஒரு பௌத்த தூபமிருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில் இது போன்ற தீர்ப்புகளை வழங்க ஆரம்பித்தால் நிறைய தூபிகள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும்” என்கிறார்.

இப்படி தமிழகத்தில் இடிக்கப்பட்டு, எழுப்பப்பட்ட இந்துக் கோயில்கள் பற்றி வரலாற்றுப் பேராசிரியர் கருணானந்தன் விளக்குகிறார்.
  • இந்தியாவில் பல இடங்களில் நீங்கள் சொல்வது போல புராதன இடங்களுக்கு அடியில் வேறு ஒரு கட்டுமானம் இருக்க வாய்ப்புள்ளதா?
  • தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகம்பரநாதர் கோயில் உள்ளது. அங்கு பௌத்த சிற்பம் இடித்து எடுக்கப்பட்டது. பௌத்த கல்வெட்டு கூட உண்டு. இன்று பிரபலமாக அறியப்படும் பல இந்து சமயத்தின் சைவ,வைணவக் கோயில்கள் சமண, பௌத்த கோயில்களாக இருந்தன என ஆதாரத்துடன் கூறுகிறார்கள். பழனி முருகன் கோயிலில் இருப்பது சமண தீர்த்தங்கரர் சிலை என்கிறார்கள். கேரளாவில் உள்ள கொடுங்கலூர் பகுதியில் உள்ள கோயிலில் இருப்பது பௌத்த சமயத்தை சேர்ந்த தாரா தேவி அல்லது ஜேஷ்ட தேவி என்று கூறப்படுகிறது. சமணர், பௌத்தர்கள் எண்ணிக்கையில் குறைந்திருப்பதால், அவர்கள் அடாவடியாக கோயில்களை இடிக்கமாட்டார்கள் என்பதால், இந்துக் கோயில்களாக இந்த கட்டுமானங்கள் தொடர்கின்றன. அயோத்தி நிலத்தை நீதிமன்றம் இந்துகளுக்கு கொடுத்துள்ளது என்பது பல இடங்களில் சிறுபான்மையினரின் இடங்களை பெரும்பான்மை மக்கள் எடுத்துக்கொள்வதற்கு, அதற்காக வன்முறையை அவர்கள் கையாண்டாலும், எந்த பிரச்சனையையும் அவர்கள் சந்திக்க மாட்டார்கள் என்பதை ஊக்குவிக்கிறது.”
  • தீர்ப்பின்படி இவையெல்லாம் மீண்டும் இடிக்கப்பட்டு பழைய வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் உருவாக்கித் தரப்படுமா என்னும் வினாவை நாம் எழுப்ப வெண்டியுள்ளது.
தொல்லியல் துறையின் சாட்சியங்கள் இத்தீர்ப்பில் ஆதாரமாகியுள்ளன.வரலாற்றுத் தடயங்களிலிருந்து வரலாற்றுத் தெளிவுக்கு இட்டுச்செல்லாத யூகங்கள் தீர்ப்பை முன்னடத்திச் சென்றுள்ளன.

நண்பரும், மீத்தேன் எதிர்ப்பு கூட்டியக்கத் தலைவரும், வரலாற்றுப் பேராசிரியருமான த.செயராமன், கணக்கில் அடங்காத, தொல்லியல் துறையின் திரிபு அல்லது மடைமாற்றச் செயல்கள் பற்றி முழுநீளப் பட்டியலைத் தருகிறார்.

”இந்துத்துவ சக்திகளின் தொல்லியல் துறையாக, இந்துத்துவ வாதிகளின் கோளாறான பார்வைக்கு சான்றுகளை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு அமைப்பாக இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India - ASI) தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

1978-இல் இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருந்த தெளலதாபாத் கோட்டையில் இருந்த ஜூம்மா மசூதி பாரதமாதா கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. பாரதமாதா என்ற கருத்தியலே சமீபத்தியது.இடைக்கால வரலாற்றுச் சின்னத்தை உருமாற்றிப் பெயர் மாற்றுகிற வேலையை இந்திய தொல்லியல் துறை செய்திருக்கிறது.

1970-இல் ஹைதராபாத்தில் வரலாற்றுச் சின்னமான சார்மினாரின், குங்குமச் சிவப்புக்கற்கள் பதிக்கப்பட்ட வடகிழக்குப் பகுதியை முழுமையாக பாக்கியலட்சுமி கோயிலாக மாற்றியமைப்பதற்கு இந்தியத் தொல்லியல் துறை அனுமதித்தது. ஒரு பெரிய, இடைக்காலத்தைச் சேர்ந்த வரலாற்று நினைவுச் சின்னத்தில் ஒரு நவீன கட்டிடம் இப்போது துருத்திக் கொண்டு நிற்கிறது.

வரலாற்றுப் புகழ் மிக்கது; வெல்லுவதற்கு அரிதானது கோல்கொண்டா கோட்டை என்று வரலாறு பேசுகிறது. ஆனால், கோட்டையின் முதன்மை வாயில்களில் இந்துக் கோயில்களும் காவிக் கொடிகளும் இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இப்போது முளைத்திருக்கின்றன.

பீகாரில், இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள ’ஷெர்ஷா சூர்’ கட்டிய மசூதியத்தின் வளாகப் பகுதியில் புத்தம் புதியதாக மூன்று இந்துக் கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைகள் 1977- க்கு பிறகு நடந்துள்ளன. இவற்றை செய்து முடிக்க இந்தியத் தொல்லியல் துறை அனுமதித்தது.

மத்தியப் பிரதேசத்தில் ’தார்’ என்ற இடத்தில் உள்ள, பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கமால் மவுலானா மசூதியை, 2003-இல் இந்து வழிபாட்டிடமாக தொல்லியல் துறை மாற்றியிருக்கிறது.

2007-இல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர் கோட்டையில், இராணி பத்மினி நெருப்பில் இறங்கிய இடம் என்று ஒரு சுரங்கத்தைப் பொய்யாக தொல்லியல் துறை திரித்துக் கூறியது. இடைக்கால சித்தூர் கோட்டையைச் சுற்றிலும் இப்போது ஏராளமான கோயில்கள் முளைத்துவிட்டன.

வரலாற்றுச் சின்னங்களை இந்து மதச் சின்னங்களாக மாற்றி அமைப்பதைத் தன்னுடைய புனிதக் கடமையாகக் கருதி இந்தியத் தொல்லியல் துறை செயல்பட்டுவருகிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அகழ்வாய்வு என்ற பெயரில் இந்தியத் தொல்லியல் துறை ஏராளமான புனைவு வேலைகளைச் செய்து முடித்தது. கிடைத்திருக்கும் சான்றுகளின் அடிப்படையிலே விவாதிக்க வரலாற்றாளர்களும் தொல்லியலாளர்களும் தயாராகவே இருக்கிறார்கள்.

இந்தியத் தொல்லியல் துறையின் பொய்அறிக்கையின் அடிப்படையில்தான் அலகாபாத் உயர்நீதி மன்றமும் முடிவெடுத்தது. உச்சநீதிமன்றமும் முடிவெடுத்துள்ளது.

நடந்து கொண்டிருப்பது "தொல்லியல் பயங்கரவாதம்". நெருப்பில்லாமல், புகையில்லாமல் வரலாறு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது! இந்தியத் தொல்லியல் துறை அம்பலப்படும்!
- பேராசிரியர் த.செயராமன், வரலாற்றுத்துறை. 11.11.2019 (முகநூல் பதிவு).

எத்தனை பயங்கரவாதங்களை ஒரு பொதுமகன் எதிர்கொள்ளவேண்டி உள்ளது? தனி நபர் பயங்கரவாதம், அரச பயங்கரவாதம், காவி பயங்கரவாதம், இப்போது தொல்லியல் பயங்கரவாதம்.

அயோத்தி கையில் தூக்கிப் பிடித்த இந்துத்வம் என்ற ஆயுதம், எந்தப் பொழுதில் அடுத்து தம்மீது பாயுமோ என சிறுபான்மைச் சமூகங்கள் பதைபதைப்பில் வாழுகிற தருணங்கள் மட்டுமே இனி இந்தியாவில் உண்டு.

- சூரியதீபன் - காக்கை சிறகினிலே (டிசம்பர் 2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்

அமுக்குப் பேய்

பா.செயப்பிரகாசம் நூல்கள்