தோ்தல் திருவிழாவில் இலக்கியவாதிகள்

எல்லா விமரிசகைகளோடும் 2014 நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. வெற்றிகளுக்குப் பின்னான கொண்டாட்டமாக மட்டுமல்ல; தேர்தலுக்கு முன்னரும் கொண்டாட்டங்கள் தொடங்கிவிடுகின்றன. தோ்தல் அறிக்கை, கொள்கை, கூட்டணி, வாக்குறுதி என தேர்தல் சந்தையில் கிடைக்காத பொருள் இல்லை. ஓட்டு எனற ஒன்று கொடுத்தால் இலவசம் எல்லாம்: மலிவிலும் மலிவான ஆட்சி உத்தி. கொடுக்கிற ஒன்று உயிரினும் மேலானது:

“மொச்சிக் கம்பில் வில்லேத்துவது போல” நாட்டுப்புறத்தில் சொல்வார்கள். வில் – அதற்குரிய மரத்தில் செய்யப்பட வேண்டும். சட, சடவென முறிகிற கம்பில் வில் செதுக்க முயல்வது வீணில் முடியும். வாக்களிப்பு என்ற பெயரில் மொச்சிக் கம்பில் வில்லேத்துற காரியத்தை மக்கள் மறுபடி மறுபடி அறுபது ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். வெட்டிவேலை செய்ய வலுவந்தமாய் அவர்களை தள்ளிக் கொண்டேயிருக்கிறார்கள். வழக்கமான ஒடிந்த வில், குறிதவறிய கல்லுடன் அடுத்த வில் வளைப்புக்கு மக்கள் காத்திருக்கிறார்கள்.

மேளதாள சத்தத்துடன் தேர்தல் மோட்டிப்பு கொண்ட நேரத்தில், ஒரு விகற்பமான கலை இலக்கியக் குரல் தென்மாவட்டப் புள்ளியிலிருந்து எழுந்தது.


2014-ல் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் பா.ஜ.க என்ற மதவாதக் கட்சியின் மேடையை நாகர்கோவிலில் ஆக்கிரமித்திருக்கிறார். அதனை ஆக்கிரமிப்பு எனத்தான் சொல்லவேண்டும். பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட மோடிக்குச் சாதமாக அவருடைய மேடைப் பிரசன்னமிருந்தது; ஊடகங்கள் பிரமாதப்படுத்தின. ஏன் செய்கிறார் என்ற கேள்வி இலக்கியத் தளத்தில் தீவிரப்பட்டது. மனச்சாட்சியின் ஒழுங்கிலிருந்து விலகிவிட்டார் என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

அமைதியாய்க் கிடக்கும் நீர்நிலையில், ‘திடும்’ என உருண்டு சரியும் மலைப்பாறை போல் அதிர்ச்சியைத் தந்தது அவர் செயல். காலொடிந்த ஆட்டுக்குட்டிக்கு தப்பை வைத்துக் கட்டுவதுபோல் ”அது அவரின் உரிமை, அந்த சுதந்திரத்தை எவரும் மறுக்கமுடியாது” என நாஞ்சில்நாடன் சப்பைக்கட்டு கட்டுகிற குரல் கேட்கிறது. ஏற்கனவே சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றிருக்கும் நாஞ்சில்நாடன் இதனைக் கருத்துச் சுதந்திரத்திரமென்று தர்க்கமிடுகிறார்.

மக்கள் அரசியல் என்னும் நிலைப்பாடு வேறு, அரசியல் கட்சி நிலைப்பாடு வேறு. ஒரு எழுத்துக்காரன், மக்கள் நலன் விழையும் அரசியலிருந்து விலகாது நிற்க வேண்டும்; மக்களுக்கான அரசியல் நிலைப்பாட்டில் இலக்கிய வினை செய்தல் சரியானது.

மக்கள் நல அரசியல் எது என்பதினை சமூகத்தின் மனச்சாட்சியான கலைஞன் தீர்மானிக்கவேண்டும். குழு அல்லது கட்சி, அல்லது சாதி, அல்லது மதம் சார்ந்த அரசியல் அல்ல. குழு, கட்சி, சாதி, மதவாதம் சார்ந்த செயல்பாடுகளில் தொண்ணூறு சதமானம் தவறானவையாகவே நடப்புகளிருக்கின்றன. மக்களின் கூட்டு நலனுக்கு எதிரானது என்பதில் ஐயமில்லை. இதைத்தான் “எழுத்துலக சுதந்திரம், தனிமனித சுதந்திரம்“ எனப் பரிந்துரைக்கும் நாஞ்சில்நாடன் போல் புதிய குடுகுடுப்பைகள் பலர் தோன்றியுள்ளனர்.

மனித உயிரியின் இயக்கம் தனியாக இல்லை. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தன்னிலைகள் அந்த உயிரியை இயக்குகின்றன. ஆண், பெண் பாலியல், இனம், குழு, சாதி, மதம்,வட்டம், கட்சி – என்ப போன்ற தன்னிலைகள் (Subjectives) வினையாற்றுபவையாய் மனிதன் இயங்குகிறான். இந்தத் தன்னிலைகளுக்குள் மாட்டுப் படாமல், இவைகளின் கருத்தியல்களிலிருந்து விடுதலை பெற்று, அவரவர் காலடியைச் சுத்தப்படுத்திக்கொண்டு பொது நோக்கு அரசியலில் கலத்தல் வேறு; இதில் ஏதாவது ஒன்றோ, பல தன்னிலைகள் சார்ந்தோ செயல்படும் குரலாக ஒலிப்பது வேறு. மதவாத அரசியல் கட்சிக்கு பின்பாட்டு என்பது ஜோ.டி.குருஸின் சார்பை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

ஒரு கட்சி சார்ந்த செயல்பாடு என்பது கலைஞனுக்கு வழங்கப்பட்ட சுதந்திர முனையை ஒடித்து, முட்டுச் சந்தில் போய் நிறுத்துகிறது. அவனுடைய அசைவுக்குத் திசையுண்டு என்ற உறுதி செய்கிறது. அவனுடைய சிந்திப்பின் வெளி (Thinking space) சுருக்கப் பட்டு கட்சி என்ற தன்னிலை விரிவடைகிறது. கட்சியின் சிந்தனைகளே இவன்; இவன் செயல்பாடுகளே கட்சி என்ற எளிய, ஒடுங்கிய சூத்திரதுக்குள் அடைக்கப்படுகிறான். கலைஞனின் சுயசிந்தனை, சுயமரியாதை ஒடுக்கப்படுகிறது என்பது அதன்பொருள். எல்லையற்ற சுதந்திரம் கொண்டுள்ள அறிவார்த்த ஒரு வினைப்பாட்டை கட்சி, மதம், சாதி, பாலியல் சார்பு போன்ற பல சார்புகளுக்குள் ஏதாவது ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ சுருக்கிக் கொள்கிறான்.

ஒவ்வொரு மனித உயிரியும் இவ்வாறாக சுய இயக்கமற்றதாக ஆக்கப்பட சாதி, மத, அரசியல் இயக்கங்கள் விரும்புகின்றன. அறிவார்த்த வினைபுரிகிறவன் என்கிற சிந்திப்பாளனான இலக்கியவாதியும் இந்த வலையில் மாட்டுப்பட்டுப் போகிறான். மாட்டுப்பட்டவர்கள் இன்று படைப்பிலோ, வாழ்வியலிலோ முன்னோடிகளாக இல்லை என்பதின் நிகழ் சாட்சிகளை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். மாறாக, அவா்களின் முந்திய முன் மாதிரிப் படைப்புக்கள் சில, அவர்களை விமர்சனப்படுத்தும் எச்சரிக்கைப் புள்ளிகளாக நிற்கின்றன. ஜோ.டி.குரூஸ் என்ற படைப்பாளி சார்ந்தும் இதுதான் நிகழ்ந்துள்ளது. அவருடைய முந்திய இருபடைப்புக்களும் அவரின் இன்றைய செயல்முறையை விமரிசிக்கும் இருபெருங் கேள்விகளாக எழுந்து நிற்கின்றன.

ஆழி சூழ் உலகு, கொற்கை என இரு புதினங்கள் மீனவ மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை உரையாடுபவை. வாழ்வாதாரம் சிதைக்கப்படும் கடல்சார் மக்களின் கூக்குரலாக வெளிப்பட்டிருப்பவை. மீனவ மக்களின் உரிமைக்காக , அவர்களின் மேம்பாட்டுகாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அவர் மோடி பிரதமராக தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கிறார். ஆனால் மீனவ மக்களின் வாழ்வாதாரச் சிதைப்பில் கொலைக்கருவியாய் உயரும் கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போரில் இணைந்து நிற்கும் ஜோ.டி.குரூஸ், அணு உலை ஆதரிப்பில் உறுதியாய் நிற்கும் பா.ஜ.கவின் கட்டளைக்கு என்ன சொல்கிறார்?

“பழையன கழிதலும், ஆனந்தாயி" – போன்ற தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ் நிலைமைகளைச் சித்தரித்த தனித்துவமான நெடுங்கதைகள் தந்த எழுத்தாளர் ப.சிவகாமி. சமூக சமத்துவப் படை என்ற இயக்கத்தை நிறுவி தலித் மக்களின் விடுதலைகாகப் போராடி வருகிறவர். ஜோ.டி.குரூஸ் அறிக்கை வெளிப்பட்ட அதே காலத்தில் ப.சிவகாமி காங்கிரஸ் கூட்டணியோடு இணைகிறார். அவரும் ”நாடாளும் மக்கள் கட்சித்” தலைவர் எனப்படுகிற நடிகர் கார்த்திக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுடன் அமர்ந்து காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார்கள் (26-4-2014).

”காங்கிரஸ் சித்தந்தங்களால் ஈர்க்கப் பட்டு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம் “ என்கிறார் சிவகாமி. சொன்னவர் எழுத்தாளர் சிவகாமி. அம்பேத்கரின் தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்கான கொள்கையும் காந்தியின் தடுமாற்றமான வர்ணாசிரமச் சார்பும் எதிர்எதிரானவை என்பதை அவர் அறிவார். முக்கால் நூற்றாண்டுக்கால காங்கிரஸ் வரலாற்றை அந்தக் காந்திதான் தீர்மனித்துக் கொண்டிருந்தார். காங்கிரஸ் கொள்கையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது. காந்தியோடு அம்பேத்கர் முட்டி மோதிய வரலாறுதான் தலித்துகளின் விடுதலைச் சித்தாந்த வடிப்பு. காந்திய காலமுதல் ராகுல்காந்தி காலம்வரை காங்கிரஸ் சித்தாந்தமும் செயல்பாடும் தலித் மக்களுக்கு எதிர்நிலையிலேயே இருந்து வருகின்றன.

ஆனால் நடந்த என்ன, அது வேறொரு கதை;
“நாங்கள் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தது திடீர் முடிவு அல்ல: தே.தி.மு.க (விஜயகாந்த் கட்சி) காங்கிரஸூடன் சேரும் என எதிர்பார்த்து அவர்களுடன் பேசினோம். ஆனால் தே.தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்கு வராததால் நாங்கள் அவர்களை ஆதரிக்காமல் காங்கிரஸுக்கு ஆதரவு தருகிறோம். காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினேன். ‘சீட்’ கிடைக்கவில்லை என்ற வருத்தம் முன்பு இருந்தாலும், அது இப்போது இல்லை“
- சிவகாமி நடந்த கதையை ஒப்புக்கொண்டுவிடுகிறார். அவரிடம் ஒளிவு மறைவு இல்லை. ஒரு படைப்பாளி கம்பீரம் இழந்தது பற்றியோ, படைப்பாளியின் சுயத்தன்மை பறிபோனது பற்றியோ, அரசியல் சரணாகதி, அரசியல் சதிகளுக்குள் மாட்டுப் பட்டது பற்றியோ அவர் தன்விமர்சனம் செய்துகொள்ளவில்லை. ஆனால் ஜோ.டி.குரூஸ் நடந்த கதையை வெளிப்படுத்தவில்லை. பா.ஜ.க மேடையில் அவர் ஆதரித்துப் பேசியதற்கு, மோடியை உதாரண புருசனாக முன்னிறுத்தியதற்கு வைத்த எதுவும் உண்மையோ, நிதர்சனம் சார்ந்தவையோ அல்ல;

கடல்புற மக்களின் - குறிப்பாய் நிலம்சார்ந்த மக்கள் கூட்டத்தின் அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகிய மீனவர், பரதவர் சமுதாயத்தின் பிரதிநிதியாகத் தன்னை மோடியின் கன்னியாகுமரிக் கூட்டத்தில் அறிமுகப் படுத்திக் கொண்டார் ஜோ.டி.குரூஸ். மோடியுடன் மேடையேறி அவருக்கு ஆதரவு தரும்படி கடற்புற மக்களைக் கேட்டுக் கொண்டார். குமரி கத்தோலிக்க மீனவ சமுதாயம் பிரதம வேட்பாளர் மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் ஆதரவு அளிக்க வேண்டுமென வேண்டுகோள் விட்டார். உச்சி குளிர்ந்துபோன மோடி புன்முறுவல் செய்ததாக கூட்டத்திற்கு போய்வந்தவர்கள் தெரிவித்தார்கள்.

தேர்தல் அரசியல் என்றால் கறை சேர்ந்து கொண்டே வரும். கறையைக் கழுவியவர் என எவரும் இல்லை; இன்னொருவரும் இணைகிறார். அவர் கவிஞர் மனுஷ்ய புத்திரன். வெளிப்படையாய் தி.மு.க தேர்தல் கூட்டங்களில் திமுகவை ஆதரித்து ’சன்னதம்’ கொண்டு சாமியாடியிருக்கிறார். இப்போது தொலைக்காட்சி நிகழ்வுகளில் அவரை தி.மு.க என அறிமுகம் செய்கின்றனர். அவரைப் போல் தி.மு.க.வை, திராவிட இயக்க அரசியல் கட்சிகளைச் சாடியவரும் இல்லை. அவரைப் போல் இன்று தி.மு.க.வுக்கு சாமரம் வீசுபவரும் இல்லை.

எழுத்தாளர் மகாஸ்வேதாதேவி போல், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் போல் சுயமான சிந்திப்பு, சுயமான முடிவெடுப்பு, சுயமான செயல்பாடுகளை மக்களுக்கான இன்றைய செயல்பாட்டுத் தளம் வேண்டுகிறது. கலை இலக்கியத்தளம் அதிலொன்று.

மொழிபெயர்ப்பாளர் கூலி ஆள் அல்ல. கூலிகளுக்கும் தத்தம் எஜமானரை மாற்றிக்கொள்ளும் - பிடிக்கவில்லையென்றால் விலகிக் கொள்ளும் உரிமையிருக்கிறது. மொழியாக்கக்காரா் ஒரு படைப்பாளி: மூல மொழியில் ஒரு எழுத்தாளன் தரும் அனுபவங்களைத் தன்வயமாக்கல் (முதலில் தன்வயப்படுத்தல் இயல்பான கலை மனதில்தான் சாத்தியம்) முழுமையாய்த் திறம்பட நடத்தப்பட வேண்டும். அதை இன்னொரு மொழியில் வடித்துத் தரும் மொழியாளுமை - இவ்விரு இணைகோட்டில் ஒரே பொழுதில் செயல்படுகிற மொழியாக்கக்காரன் ஒரு கூடுதல் படைப்பாளியாகிறான். படைப்பாளி என்பதை ஒத்துக் கொண்டால் படைப்பாளிக்குரித்தான சுதந்திரத்தை வழங்கியாக வேண்டும். எனவே தனது மொழியாக்கம் பற்றித் தீா்மானிக்கிற உரிமை வ.கீதாவுக்கு உள்ளது. அவர் ஜோ.டி.குரூஸின் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் போட்டுக் கொண்ட ஒப்பந்ததிலிருந்து விலகியிருக்கிறார்.

ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும் முறித்துக் கொள்கிற உரிமை தார்மீக ரீதியாக அவருக்கு உள்ளது. சமுதாயப் பொறுப்புடன் செயல்படுவராக இருப்பதால் இந்த மொழியாக்கத்தை அவர் எடுத்துக் கொண்டார்; மூல ஆசிரியர் சமுதாயப் பொறுப்பிலிருந்து விலகி, எதிர்த்திசையில் நடக்கிறார் என்று முரண்பட வ.கீதாவுக்கு அனைத்துத் தார்மீக அடிப்படைகளும் உள்ளன. அது போல ஆழிசூழ்உலகு புதினத்தை மொழியாக்க நூலாக வெளியிட பொறுப்பெடுத்த ”நவயானா பதிப்பகம்” கொள்கை நிலைப்பாடு சார்ந்த அரசியல் பதிப்பகம். நவயானா முன்னிறுத்தும் அரசியலுக்கு ஒவ்வாத ஒரு ஆசிரியரின் படைப்பை வெளியிட வேண்டாம் என எடுத்த முடிவு சரியானதே (இப்போது பதிப்பகம் குட்டிக்கரணம் அடித்துள்ளது).

காலம் உறைந்து நிற்பதில்லை. புதிய புதிய அறிவுச் சேகரிப்பை நம் கொள்அளவுக்கு அதிகமாகவே நிறைத்துக்கொண்டிருக்கிறது. புதுப்புது உயரத் தாண்டுதல்களை காலம் நம்மிடம் கோருகிறது.

“என்ன செய்வது, நான் ஷேக்ஸ்பியரின் தோள்களின் மீது நின்று கொண்டல்லவா உலகைக் காணுகிறேன்” என்று பெர்னார்ட்ஷா சொன்னவாசகம் தற்பெருமையானதாக இருக்கலாம்; ஆனால் அறிவுவளர்ச்சியின் பரிணாம விதியைப் புரிந்து கொண்ட கிரகிப்பு அதற்குள் இருக்கிறது.

காலத்தின் வளர்நிலைக்கு எதிராய் நிற்பது பிம்ப உருவாக்கம். இந்தியாவை இந்து நாடாக கட்டியமைக்க மோடி என்னும் பிம்பத்தை, இந்துசங் பரிவார்களும், ஊடகங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் வரிந்து கட்டி எழுகின்றன. இக்கட்டுரையில் முன்னர் சுட்டிக்காட்டப்பட்ட தன்னிலைகள் மீது கட்டியெழுப்பப்படும் பிம்பங்கள் சாதாரணர்களை வழிநடத்துகிற துன்பியல் நிகழ்ந்துள்ளது. இந்த பிம்ப உருவாக்கத்துக்கு கற்றறிந்த சிந்திப்பாளர்களும் கையாளாவது - சாதாரண மக்களுக்கு அவர்கள் செய்கிற துரோகமாகத் தோன்றவில்லையா?

“மோடி ஒரு புரட்சியாளர். தொலை நோக்குப் பார்வை கொண்டவர். அடுத்த தேர்தல் குறித்து அல்லாமல், அடுத்த தலைமுறை குறித்துச் சிந்திப்பவர்...... அரசியல் நலனுக்கு அப்பாற்பட்டு தேச நலனைப் பற்றிச் சிந்திக்கும் மோடியே இந்தியாவின் இன்றையத் தேவை.”
பிம்ப உருவாக்கத்துக்கு ஜோ.டி.குரூஸின் சிறு காணிக்கை இது. வருங்காலத்தில் பெரிய அளவு காணிக்கை தொடரலாம்.

மோடியை வாழ்த்திப் பேச ஜோ.டி.குரூசுக்கு வழங்கிய உரிமையை, மோடியை விமரிசித்த கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.ஆனந்தமூர்த்திக்கு ஏன் வழங்கினார்களில்லை? கன்னட பா.ஜ.க அவரை நாட்டை விட்டே வெளியேற்றத் துடிக்கிறது. மோடியோடு மேடையேறி, மோடியின் கைகுலுக்கலை வரமாகப் பெற்றுக் கொண்டு வாழ்த்திய நாக்கு, யூ.ஆர்.ஆனந்தமூர்த்திக்கு கைகொடுக்க முன்வராது. இதுபோல் இரட்டை வாழ்வு ப.சிவகாமி, மனுஷ்ய புத்திரன் வகையறாக்களுக்கும் சாத்தியம்.

அனைவரையும் விமரிசிக்கும் புள்ளியில் வலுவாகக் கால்பதித்துள்ள இலக்கியக்காரன் அல்லது கலைஞன் இப்போது தன்னைச் சுய விமர்சனப்படுத்திக் கொள்ளும் நிர்ப்பந்தம் வந்திருக்கிறது. ஒவ்வொரு காலடிவைப்புக்கு முன்னும், அவன் தன் காலடிகளைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்