அநகாரிக தர்மபாலாவிற்கு இந்தியாவில் சிலை திறப்பு: எதிரிக்கு சிலை திறந்துள்ள மோடி அரசின் விந்தை


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜையினியில் 14-05-2016 அன்று நடைபெற்ற கும்பமேளா நிறைவு நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சிறிசேன பங்கேற்றார். இலங்கை அதிபராக சனவரி 2015-ல் பதவியேற்ற மைத்ரி சிரிபால சேனாவின் இந்திய முதல் வருகையாகும். தொடர்ந்து சாஞ்சி நகரில் உலகப் புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபியை பார்வையிட்டார். இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, இலங்கையில் புத்த மறுமலர்ச்சிக்கு முழுமையாய்த் தன்னை அர்ப்பணித்த (அப்படித்தான் சிரிபால சேன அறிவித்தார்) அங்காரிகா தர்மபாலா சிலையை சிறிசேன திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சட்டீஸ்கர்முதல்வர் ராமன்சிங் கலந்துகொண்டனர் என்பது செய்தி. இது இந்திய – இலங்கை உறவின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.

ஈழத்தமிழர்களைப் பகை இனத்தவராகக் கருதி, கண்ணில் படாதொழிப்பது இலங்கையின் பிறவிக்குணமட்டுமால்ல, இந்நோய் இந்தியாவையும் பீடித்துள்ளது. அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை என்பது நம் பழமொழி. அதுபோல் ’அங்காரிக தர்மபாலா ‘ யார் என்று ஆராய்ந்து தெளிந்தால், மத வெறுப்பின் உருவம் அவர்; அந்த ஆளைப்போல் அநாகரிகப் பேர்வழி இருக்க இயலாது என்ற உண்மை தெரியவரும்.

பௌத்த மறுலர்ச்சியின் தந்தையென்று சிரீபால சேனாவாலும் சிங்கள மக்களாலும் பெரிதும் போற்றப்படும் இவர் இந்திய ஊடகங்கள் உச்சரிப்பது போல் அங்காரிக தர்மபால அல்ல: சிங்கள உச்சரிப்பில் அநகாரிக தர்மபாலா. ஆனால் நவீன வரலாற்றில் இவர்தான் இந்திய எதிர்ப்புவாதத்தின் தந்தையும், தமிழின அழிப்புவாதத்தின் தந்தையுமாவார்; இவ்வுண்மையை இந்தியாவில் வாழும் பலரும் அறிந்திருக்கவில்லை.

இவர் சிங்கள மக்கள் மத்தியில் அதிக வசதி வாய்ப்பைக் கொண்ட ஒரு மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்தவர். சிங்கள மேட்டுக் குடியினர் அனைவருமே பௌத்தத்தை கைவிட்டு, ஆட்சியாளரான ஆங்கிலேயரின் ’புரொட்டஸ்டந்து கிறிஸ்தவத்தைத்’ தழுவி தம் வாழ்வை உயர்த்திக் கொண்டனர். அந்த வகையில் அநகாரிக தர்மபாலாவின் குடும்பம் பௌத்தத்தில் இருந்து ’புரொட்டஸ்டந்து கிறிஸ்தவதத்திற்கு’ மதம் மாறிய குடும்பம்.

கிறிஸ்தவரான அநகாரிக தர்மபாலாவின் இயற்பெயர் Don David Hevavitharana என்பதாகும். ஆங்கிலக் கல்வி கற்று அதில் சிறந்த புலமையும் கொண்டவராக காணப்பட்ட Don David Hevavitharana, பௌத்தத் துறவிகள் மேற்கொண்ட கிறிஸ்தவ எதிர்ப்புக் கொள்கையால் கவரப்பட்டு, தன்னை பௌத்தனாக மதம் மாற்றியதுடன், துறவிக்குரிய பெயரான ‘வீடற்றவன்‘ என்ற பொருள்படும் சிங்கள வார்த்தையான ‘அநகாரிக’ மகுடத்துடன் தர்மபாலா என்ற பௌத்த பெயரைச் சூடி அநகாரிக தர்மபாலா என அழைக்கப்படலானார்.

1880-களில் பௌத்த மறுமலர்ச்சிக்கு தலைமைதாங்கிய இவரது கொள்கை தெளிவாக கிறிஸ்தவ எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, மலையாளி எதிர்ப்பு, பஞ்சாபி எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, ஈழத்தமிழின எதிர்ப்பில் வடிவமைக்கப்பட்டது. பௌத்தத்தைப் போற்றல், சிங்கள மன்னர்களைப் புகழ்தல், தமிழ் சிங்கள முரண்பாட்டை வளர்த்தல் என மறுபுறமும் கூர்முனைகளைக் கொண்ட வாள் வடிவமைக்கப்பட்டதுதான் இவரின் பௌத்த மறுமலர்ச்சிக் கொள்கை.

அநகாரிக கிறிஸ்தவ எதிர்ப்பைப் பிரயோகித்த போதிலும், பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. பிரித்தானிய முடியாட்சியை இவர் வரவேற்றார். ஆனால் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்தார். பிரித்தானிய முடியாட்சி பின்வருமாறு அமையவேண்டுமெனக் கூறினார்;
” இலங்கையின் ஆளுநர் ஒரு பௌத்த சிங்களவனாக இருக்க வேண்டும். அத்துடன் இலங்கைக்கான பிரித்தானிய வெளிநாட்டுச் செயலாளரும் ஒரு சிங்கள பௌத்தனாக இருக்க வேண்டும். இந்நிலையில் பிரித்தானிய முடியாட்சியை ஏற்றுக் கொள்வதில் பிரச்சனையில்லை”

அதாவது பிரித்தானிய ஆதிக்கம் இலங்கையில் நிலவுவதன் மூலம் இலங்கையில் இந்திய ஆதிக்கம் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம் என்பது இவரது கணிப்பு.

”இலங்கைக்கு அருகில் இருக்கும் இந்தியாவும் இந்துமதமும் முதற்தர ஆபத்தைக் கொண்டவை. கிறிஸ்தவ மத ஆதிக்கம் அல்லாத பிரித்தானிய ஆட்சி பௌத்தத்திற்கும் இலங்கைக்கும் பாதுகாப்பானது” என இவர் கருதினார். ஆதலால் பிரித்தானிய ஆதிக்க எதிர்ப்புவாதம் அல்லாத, ஆனால் கிறிஸ்தவ ஆதிக்க எதிர்ப்புவாதத்தைக் கொண்டவராக இருந்துகொண்டு இந்திய எதிர்ப்புவாதம், இந்து மத எதிர்ப்புவாதம் என்பனவற்றை பலமாக போதிப்பவராக, பின்பற்றுபவராக செயல்பட்டார்.

அநகாரிக தர்மபாலாவை வெறுமனே பௌத்த மறுமலர்ச்சிவாதியும் கிறிஸ்தவ எதிர்ப்புவாதியென்றும் பார்க்காமல், அதைவிடப் பலமாக இந்திய எதிர்ப்புவாதம், இந்துமத எதிர்ப்புவாதம், மலையாளி எதிர்ப்புவாதம், இஸ்லாமிய எதிர்ப்புவாதம் என்பவனற்றின் கூர்வாளாகக் காணவேண்டும். அவர் பஞ்சாபி எதிர்ப்புவாதத்தை மேற்கொள்ளும் போது, அது இஸ்லாமிய பஞ்சாபிகளுக்கு எதிரானதாக அமைந்தது என்பதை முதலில் கணக்கில் கொள்ள வேண்டும். அதேவேளை தமிழ் முஸ்லிம்களுக்கு எதிராக அவர் தன் நிலைப்பாட்டைக் கொள்ளும் போது, அவர்களை தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடியேறியவர்களாக விளக்குகிறார். இங்கு அவர் தென்னிந்திய எதிர்ப்புவாதத்தை முஸ்லிம், மலையாளிகள், தமிழர்கள் என்பவர்களோடு இணைக்கிறார். இந்த பஞ்சாபி முஸ்லிம்களும், தமிழ் முஸ்லிம்களும், மலையாளிகளும் மற்றும் தமிழரும் அவரது பார்வையில் இந்தியர்களாவர். எனவே தெளிவான இந்திய எதிர்ப்புவாதம் முதன்மை பெற்றிருப்பதைக் காணலாம்.

தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இலங்கைக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தொடர்ந்து படையெடுப்புக்களும் குடிபெயர்வுகளும் ஏற்பட்டதாக கூறும் இவர், குறிப்பாக தமிழருக்கும் மற்றும் தென்னிந்தியப் படையெடுப்பாளர்களுக்கும் எதிராக சிங்கள மன்னர்கள் வீரத்துடன் போராடி காப்பாற்றிய பௌத்த நாகரீகத்தை பேணிப் பாதுகாப்பதற்காக இந்திய எதிர்ப்புவாதத்தையும் ஈழத்தமிழருக்கு எதிரான கருத்தையும் பலமாக முன்வைத்து பல கட்டுரைகளையும் அறிக்கைகளையும் எழுதியுள்ளார். மிகப் பலமான பேருரைகளும் ஆற்றியுள்ளார். இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு இன்று தொடர்ந்து இலங்கையில் பிரச்சாரத்திற்கான மூலாதாரங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

”எமது புனித நாட்டை இந்துமதப் பிரியர்களும், விஸ்கி வியாபாரிகளும் சீரழிப்பதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது”

“அந்நியர் எமது நாட்டின் செல்வங்களை கவர்ந்து செல்கிறார்கள். மண்ணின் மைந்தர்கள் போவதற்கு நாடேது? இங்கு வந்து குடியேறிய குடியேற்றவாசிகள் போவதற்கென்று அவர்களுக்கென்று நாடுகள் உண்டு. ஆனால் சிங்களவர்கள் போவதற்கு ஒரு நாடும் இல்லை. வந்து குடியேறிய அந்நியர்கள் இன்புற்று இருக்கையில் மண்ணில் மைந்தர்கள் துயரப்படுவது நியாயமா?”

“கிறிஸ்தவமும் பல தெய்வ வணக்கமுமே உயிர்க்கொலை, களவு, மதுப்பழக்கம், விபச்சாரம், பொய் என்பவற்றிற்கெல்லாம் காலாய் இருக்கின்றன.”
என்று தெளிவாக எழுதி வரையறை செய்துள்ளார்.

இங்கு வந்து குடியேறியவர்கள் என்று அவர் கூறியிருப்பது மலையாளிகள், தமிழர்கள், பஞ்சாபிகள், முஸ்லீம்கள் என்போரை உள்ளிட்ட இந்தியர்களாவர். பல தெய்வ வழிபாட்டுக்காரர்கள் என்று அவர் குறிப்பிடுவது இந்துக்களையாகும்.

மொத்தத்தில் இலங்கையின் பின்னாளைய இனப் பகைமைகளுக்கெல்லாம் நவீன வரலாற்றில் வித்திட்டவர் இவர்! இந்திய எதிர்ப்புவாதத்தினதும், தமிழின எதிர்ப்புவாதத்தினதும் தந்தையும் இவர்!

இந்தியாவில் உள்ள உஜ்ஜையின் நகரில் சாஞ்சியில், மோடி கைதட்ட, மாநில முதல்வர் கும்மி கோட்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிரிபால சேனாவின் கொலைக்கரங்கள் திறப்புவிழா செய்திருக்கிறது. ஒரு வேடிக்கையான வரலாற்று வினோதம் என நினைத்தால் நம் புத்தியில் பிழை என்று பொருள். அரசியல் என்பது இவ்வாறான வினோத வேடிக்கைகளின் தொகுப்பு நூல் தான்.

ஒரு தெளிவான இந்திய எதிர்ப்புவாதிக்கு, ஈழத் தமிழின அழிப்புக் கொள்கையின் மூலமான இனவெறியாளனுக்கு இந்தியாவில் அரச ஆதரவுடன் சிலை அமைத்துப் பூசிப்பது என்பது, அதுவும் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நினைவு வாரத்தில் (மே 17 முள்ளி வாய்க்கால் இனப் படுகொலை நாள்) இதனைச் செய்வது - ஈழத்தமிழருக்கு மட்டுமே மோடி அரசு தவறிழைக்கவில்லை; தமிழ்நாட்டின் தாயகத் தமிழருக்கும் துரோகம் செய்திருக்கிறது.

இந்திய அரசை ஏமாற்றி தன் காரியங்களை சாதிப்பதில் எப்பொழுதும் இலங்கை வெற்றி பெறுகிறது. அதுவும் இந்தியஎதிர்ப்பு நோக்கங்களுடன் அதனை சாதிப்பது என்பது இரட்டிப்பு வெற்றியாகும். இத்தகைய வெற்றிக்கு முதற்பலி ஈழத் தமிழர்களாக உள்ளனர் என்பது ஒருபுறம்; அதேவேளை அந்த வெற்றிகளின் தொகுப்பு இறுதியில் இந்தியாவின் அரசியல் வீழ்ச்சியாகவும் அமையப் போகின்றது என்பதும் அதே அளவு உண்மை.

(குறிப்பு: அநகாரிக தர்மபாலாவின் பேச்சுகள், அறிக்கைகள், எழுத்துக்கள் ஆகியவற்றை Ananda Guruge ed. Return to Righteousness: A Collection of Speeches, Essays and Letters of Anagarika Dharmabala என்ற மிகப்பெரிய தொகுப்பு நூலில் காணலாம்.)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்