மோர் மொடா

ஒரு ஊரின் இனிதினும் இனிதான அடையாளங்கள் எவை?
“சொந்த ஊரை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையைப் போல் இனிமையானது வேறொன்றுமில்லை”
‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ என்ற நூலின் முன்னுரையில் எனது மொழிவு இது.

பஞ்சாபி இலக்கியத்தில் இதுபோலக் குலவை ஒன்று கேட்கிறது.
”உலக முழுதும் சுற்றியிருக்கிறேன். எங்குமே தண்ணீர் இவ்வளவு சுவையாய்க் கண்டதில்லை. பஞ்சாபின் நலந்தரும் காற்றைப் போல் எங்கும் சுவாசித்ததில்லை”
பூரண்சிங் என்ற கவி பஞ்சாப் நிலம் பற்றி இப்படி பெருமிதம் கொண்டிருக்கிறார். மோகன்சிங் என்ற நவீன கவி சொல்கிறார்
”நான் இங்கு பிறந்தேன்;
நான் இங்கு வளர்க்கப் பட்டேன்
நானே இம்மண்ணின் பெருமை
அதன் ஒப்பாரியும் நானே”
பிறந்த பூமி மீதான பெருமிதம் எனக் கூறலாமா?அல்லது பெருங்காமக் காதலரது போன்ற உளறல் எனக் கொள்ளலாமா?

மண்ணின் மீதான பிரியம் அங்கு பிறப்பதால் தோன்றுகிறது. இரண்டாவதாய் பிறந்த மண்ணின் மொழியில் அளைதலால் உருக்கொள்கிறது. மூன்றாவது - மண்ணும் மொழியுமாய்ப் பிசைந்த வாழ்வியலில் திட்டம் கொள்கிறது. பிறப்பு, வளர்ப்பு, இணைப்பு இம்மூன்று வினைகளும் எதிர்நிலையாய் ஆகையில் சொந்த ஊரின் மீதான பிரியம் சிதைந்து போகும். பிறந்த ஊர் இனிப்பதில்லை. நீர் சுவைப்பதில்லை. காற்று நலந்தரும் காற்றாய் நடப்பதில்லை. தலித்தாகவும், பெண்ணாகவும் பிறந்து, வளர்ந்து, இருந்து, வாழ்ந்து பார்த்தால் தெரியும்.

ஊரில் கவிந்திருந்த பிரியங்களும் பிரியத்தின் ஊற்றுக்களும் அடைபடாமல் இன்னும் அப்படியே இருக்கிறதா?

”ஆகாயமே, நீ எனக்கு மழை தா. நான் என் மக்களுக்கு நீர் தருகிறேன்” என்று வாங்கி நீரை வழங்கும் கண்மாய்: பெரிய நீர்க்குடத்தை தலையில் சுமந்து கொண்டுள்ளது போல் ஊர்த்தோற்றம். பெரிய சும்மாடு போலான கரையில் ஆல், அத்தி, புங்கை, புளி, வில்வ மரங்கள். வழக்கமாய் மரங்கள் இருபதில் ஆளாகி, எண்பது - நூறில் தளரும். தன்தீனியாவே முட்ட முட்ட நீர் தின்னு ஐந்திலேயே விருட்சங்களாய் கொழுத்து அசைந்தன கரை மரங்கள். கெத் கெத்தென அலையடிக்கும் கண்மாயில் தப்பளம் போடுகின்றன நீர்க்கோழிகள்.

ஊரை வேடிக்கை பார்க்க சலாவத்தாய் நடந்து வருகிறது தென்காற்று. முற்றத்து பனம்நார்க் கட்டிலில், கால்மாடு தலைமாடாய் படுத்துறங்கும் சிறுபிள்ளைகளைத் தடவிக் கொடுத்து நலம் விசாரிக்கிறது. தவிட்டுக் குஞ்சு, கிளித்தட்டு போன்ற ராத்திரி நேர விளையாட்டுக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் தோதாய் வந்திறங்கியது வெள்ளை நிலா. பெண் பிள்ளைகளின் ஒரு விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தது அந்த நிலா.
“ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு இலை விட்டு”
பூசணிப்பயிர் வளர்த்து, பூவிட்டு, காய்வரும் வேளையில் பறித்து வரச் சொல்லி, ஆளனுப்புகிறான் அரசன்.
“இப்பத்தான் ஒரு இலை விட்டிருக்கு
இப்பத்தான் பிஞ்சு விட்டிருக்கு”
என்று அரண்மனை ஆளை ஏமாற்றி ஏமாற்றி அனுப்புகிற பெண்குஞ்சுகளின் பாட்டு கிறங்க அடித்தது. ”அரண்மனைக்கு ஆயிரம் செல்லும்; அதுக்கு நாங்க தான் கிடைச்சமா?“ என்று நீண்ட குரல் எடுத்து விரட்டியடித்தார்கள்.

“வா, மகனே என்று சொன்னாப் போதும் வயிற்றிலிருப்பதையும் வாந்தி எடுத்துக் கொடுத்திருவானே”, என்று சொல்லப்பட்ட வாஞ்சையுள்ள உயிர்கள் நிறைந்திருந்த ஊர். இன்னைய காலத்தில் அந்த ஊர் இல்லை. நடக்காத அபூர்வம் எல்லாமும் கதைதான். கதை போல்த்தான் ஆகிப் போயிற்று. பொம்பளப்பிள்ளையை இன்னொருவனிடம் பிடித்துக் கொடுக்கும் நாளில் எத்தனை சீதனம் கொடுத்தாலும் இன்னொன்றையும் பிடித்துக்கொள் என்று கொடுத்தனுப்புவாள் தாய். அது பலவாய் பல்கிப் பெருகிக் கொடுக்கும் ஒரு பசு. இல்லையென்றால் பள்ளை ஆடு. எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு ஈத்து கொடுத்துக் கொண்டே இருக்கும். கல்யாணமாகி வந்த பின், என்ன நெருக்கடி வந்தாலும், பசு மாட்டையோ, பள்ளை ஆட்டையோ விற்காமல் காப்பாற்றி வருவார்கள் பெண்டுகள். அம்மா கொடுத்த சீதனம் என்பார்கள். பல்கிப் பெருகி குடும்பம் பேணும் ஆடு, மாடுகளின் குணம் இவர்களிடமும் ஊத்து அடைபடாமல் பெருகுகிக் கொண்டிருப்பதால் அப்படி நினைத்தார்கள். பெண் ஜென்மங்கள் காலூன்றி நிற்க ஆட்டையும் மாட்டையும் நம்பினார்கள், புருசன் என்ற காலும் பொய்க்காலாகிற வேளை, ஆதரவாய் நிற்கும் நிஜமான கைகள் தேவைப்பட்டன.

கரடியை நிற்க வைத்ததுபோல் பெரிய மண்மொடா. தயிர்கடைய தோளுயர மத்து. அவ்வளவு பெரிய மொடாவின் பக்கலில் நின்று மட்டுமே தயிர்கடைய முடியும். மோர் சிலும்பும் இசை சொல்லி வைத்தது மாதிரி தெருவைக் கூட்டும். காலைப் பூபாளம் அது. கை உளைந்து போகாமலிருக்க, ஒருத்தி மாற்றி ஒருத்தி இரண்டு பெண்கள் கடைந்தார்கள்.

மொடாவைத் தூக்கி முற்றத்தில் வைக்க இரண்டு ஆம்பிளையாள் தேவை. வீட்டுப் பாட்டுக்கு கொஞ்சம் எடுத்துவைத்துக்கொண்டு மொடாவை முற்றத்துக்குக் கடத்தினார்கள். திண்ணை அல்லது முற்றத்துக்கு நகர்ந்த மொடாவில் நீளமான இரும்பு அல்லது மர அகப்பை; அவர்கள் உள்ளே போய்விடுவார்கள். திண்ணையில், முற்றத்தில் வைக்கப்பட்ட மோர்ப் பானையிலிருந்து புறப்படும் வாஞ்சனை ஊரெங்கும் உலா வந்து கொண்டிருக்கும்.

வெளியூரிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு வரும் வாத்தியார் வேர்வைத் தண்ணியில் சட்டை நனைந்து ஒட்டியிருக்க வந்ததும் வராததும் “அந்தக் கழுதையைத் தூக்கி இங்க போடு” என்பார்; பயல்கள் எதற்காக? கழுதையைத் தூக்கிப் போடுவதற்காக. நாற்காலியை தூக்கிக் கொண்டு போய்ப் போடுவோம். சட்டையை அதன்மேல் கழற்றிப் போட்டு உட்காருவார்; வாத்தியாருக்குச் சேவை செய்வதில் எங்களுக்குள் போட்டா போட்டி: வெயிலுக்கு இணக்கமாய் மோர் கொண்டு வர ஓடுவோம். வாயில் விட்ட மண்பானை மோர் கடகட வேன்ற சத்தத்துடன் அவர்தொண்டைக் குழியில் இறங்குவதை வேடிக்கை பார்ப்போம். வெண்ணைப் பிசு பிசுப்பு வாத்தியார் வாயிலும் தொண்டையிலும் ஒட்டிக் கிடக்கும்.

இரவு நேரத்தில் நின்று எரியும் விளக்கெண்ணை விளக்கு மட்டுமே உண்டு. காடா விளக்குப் போல் புகைதட்டாது. புகை இல்லாத திரியிலிருந்து மேலெழும்பி வரும் விளக்கெண்ணை சுவாசம் குழுந்தைகள் ஆரோக்கியத்துக்கு நல்லது. நெஞ்சுச் சளி, தடுமம் போன்ற ஈரவசமான நோய்களை முறிக்கும்.

விளக்கை எடுத்துக் கொண்டு பெரிய மனுசி ஒவ்வொரு வீட்டுத் திண்ணையாய்ப் போனாள். “எந்த ஊருப்பா நீ, யாருப்பா” எனறு கேட்டுக்கொண்டு எழுப்புவாள். சாப்பிடாமல் ராப்பட்டினியாய் ஒரு உயிரும் தூக்கம் கொள்ளாது என்பது பெரிய மனுசிக்குத் தெரியும்; அசலூர் ஆள் கண்டுவிட்டால், சாப்பிடச் செய்தாள். வெறும் வயிறோடு ஊருக்குள் யாரும் இருக்கக் கூடாது.

2

இரவு தொடும் நேரத்தில் உடுக்கடிப் பாட்டுக்காரர்கள் எங்கள் ஊருக்கு வந்தார்கள். காத்தவராயன், மதுரைவீரன், முத்துப்பட்டன்கள் அவர்கள் கைவசம் இருந்தார்கள். உடுக்கு அடித்து ஒருவன் பாட, கூட வந்தவன் பின்பாட்டில் உடுக்குக்குள்ளிருந்து காத்தவராயனை எடுத்துக் கொடுத்தான். ஊர் நடுவிலுள்ள பொதுமடத்தில் உடுக்கடி நடந்தது - இரண்டு நாள் கதை.

அந்நியமாய் அவர்களை நடத்தவில்லை. அதிதிகளாய் நடத்தியது ஊர்; அவர்களுக்கு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வீட்டு வாசல் ஏறி சோறுவாங்கி கொண்டுவந்து கொடுப்போம். அதற்கென்று நியமிக்கப்பட்டவர்கள் போல் சிறுபயல்கள் உற்சாகமாய் செய்தோம்.

உடுக்கை சிணுங்கியது: அந்தி அடியெடுத்து வைத்து இரவு மெல்ல மெல்ல வந்ததுபோல் கிணுங்கிற்று. சிணுக்கட்டமும் கிணுக்கட்டமும் சின்னக்குழந்தை போல் ஒரு சமயம்; சீதளமான குமரி போல் ஒருசமயம். சன்னதம் வந்த சாமியாடியாய் மற்றொரு கோலம். பிறகு அது பறவையாய் மாறி கெச்சட்டம் போட, உடுக்கு பிடித்த உடுக்கடிப்புக்காரனின் விரல்களைப் பார்த்து அஞ்சடிச்சிப் போய் நின்றோம்.

உடுக்கடி முடிந்த இரண்டாவது நாள் இரவில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளிருந்தும் தவசம் தானியம் கொண்டுவந்து கொடுத்தார்கள். அரை மூட்டை தேறியது; விடிந்து எழுந்து பார்த்தபோது உடுக்கடிக்காரர்களில் ஒருத்தனைக் காணோம். முதல் நாளிரவு வசூலான அரை மூட்டை தானியமும் உடுக்கும் அவனோடு போயிருந்தன. இவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை இன்னொருத்தன் சுருட்டிக் கொண்டு போய்விட்டதாக, பிராது கொடுத்தான் இந்த ஆள்.

“இப்படியும் உண்டுமா? ஒருத்தருக்கொடுத்தர் ரெட்டைப் பிறவி மாதிரிக் கெடந்தீகளே. ஒரு ராத்திரியில அந்தப் பிரியம் மாறீருச்சா” என்று இன்னொருவனைத் தேற்றினார்கள். அந்த இடத்திலேயே துட்டுப் பிரித்து சாப்பாடும் போட்டு அனுப்பி வைத்தார்கள்; “இனிமேப் பட்டு சூதானமா பிழைக்கிறதுக்குப் பாரு” என்று ஒரு சொல்லும் சேர்த்துக் கொடுத்து அனுப்பினார்கள்.

வேண்டாம், நீங்க வரவேண்டாம் என்று தடுத்த போதும் அந்த ஆளை நாங்கள் அடுத்த ஊர் எல்லைவரை விட்டு வந்தோம்.

ஒரு நாள் உடுக்கடிக்காரர்கள் இரண்டு பேரையும் இன்னொரு ஊரில் பார்த்தாக தாக்கல் வந்தது. அது எட்டாக் கையான தாப்பாத்தி என்ற ஊர். ஒத்தப் பேரி (தனியொருத்தி), இவளுக்கு யாரு உண்டும் என்று சொல்லப்பட்ட குருவம்மா அந்த தொலைதூர ஊரில் பார்த்து விட்டு வந்து சொன்னாள். ஒருவன் ஓடிப் போக, மத்தவன் அப்பிராணி போல் நடிக்க, இப்படி மாறிமாறி நாடகம் நடந்தது. “ஊர் மந்தையில மேயுற கோழிகளை, வெங்காயத்தில் முள்குத்தி வீசிப் போட்டு, கொத்திய கோழி தொண்டையில் மாட்டுப்பட்டு விளுக், விளுக் என்று துடிக்க அப்படியே சத்தம் வராமல் ஈரத் துணியைப் போட்டு கவுத்தி கக்கத்தில் இடுக்கிட்டுப் போயிருவான் குளுவைக்காரன், இவனுக “சமத்தன் தயிரைத் தின்னுட்டு, வாயில இழுகிட்டும் போனானாம்”ங்கிற கதை மாதிரியில்லே நம்மள கேணப் பயலாக்கிட்டுப் போயிட்டானுக”

கிராமத்து ஆத்மாக்களின் நன்னம்பிக்கைமுனை தகர்ந்தது. காலகாலமாய் கட்டிக் காத்து வைத்த தர்மகுணத்தில் கன்னக் கோல் போட்டுப் போயிருந்தார்கள் உடுக்கடிப்புக்காரர்கள். மோர் மொடாவில் முதல் கல்லெறி விழுந்தது.

3

தமிழன் முதன்முதலில் எதிர் வேரூன்றிக் கொண்டானோ, அந்த வேளாண்மையின் ஆதிகுண அடையாளம் மோர்மொடா. ஓரிலை கண்டு, ஈரிலை விட்டு விவசாயம் மேலுக்கு போனபோது, அதற்குரிய தார்மீகக் குணங்களும் வளர்ப்பாகி வந்தன. இன்று அந்தக் குணவாகு எவரிடமாவது மிச்சமிருந்தால் ‘பைத்தியக்கார மனுசன்’ என்ற பட்டம் மொத்தமாய் சூட்டப்படுகிறது.

வேளாண்மைச் சமூகம் எல்லா வட்டத்துக்கும் இந்த உதார குணங்களைப் பாத்தியதை செய்ததா என்றால் ஒப்புக் கொள்ள தயக்கமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, வேற்றுமைப்பட்ட சாதிகளுக்கு எல்லை பிரித்து வைத்தார்கள். ஒரு சாதிக்குள் அல்லது உயர்சாதிக்குள் இருந்த பாந்தம் மற்றவருக்கு அந்தக் கொடுப்பினை இல்லை என்றே சொல்லலாம். அதைக் கடந்தும் தார்மீகக் குணங்களை காபந்து செய்து வந்தார்கள் என்பதற்கு சான்றுகள் உள.

அறம், நேர்மை, நீதி, என தொகுப்பாய் நின்ற மனிதனுக்குள் - சமுதாயத்துக்குள் வஞ்சனை, சூழ்ச்சி எவ்வாறு வந்தது?
“தம்பி தலையெடுத்தான்
எல்லாம் தவிடு பொடியாகிருச்சி”
என்னுமாப் போல வாணிபம் உண்டான போது உதார குணங்கள் ஒவ்வொன்றாய் பரண் ஏறின. மனித உறவைத் துண்டிக்கும் வணிக காரியத்தை ஒரு கட்டில் வைத்திருக்க நீதிநெறி நூல்கள் பிறந்தன. திருக்குறள் முதல் ஆத்திசூடி என இலக்கியங்கள் அனைத்தும் வணிக ஏமாற்றுதுதலுக்கு எதிராய் உண்டு பண்ணப்பட்டவை. தேவைப்பட்டன, உண்டுபண்ணப்பட்டன. ஒரு சமுதாய அமைப்பை நேராகக் கொண்டு செலுத்த என்னென்ன பண்டுகம் (வைத்தியம்) செய்யக் கூடுமோ, அதையெல்லாம் செய்ய தார்ப் பாய்ச்சி காட்டுவது தான் இலக்கியத்தின் வேலை; பழைய ஆத்திசூடியும் புதிய ஆத்திசூடியும் அவரவர் காலத்தின் மனித குணச் சிதைவுகளை நேர் செய்யக் கொடுத்த ‘நாட்டுமருந்தே’!

நிலப்பிரபுக் குடும்பத்தில் பிறந்த டால்ஸ்டாய் வேளாண் அறக் குணங்களின் உருவாக நின்றவர்: வாணிபத்தின் பிரமாண்ட தோற்றமாய் முதலாளியம் சாமியாடி வந்தபோது, அவர் திணறிப்போனார். முட்டுச் சந்தில் தானும், சமுதாயமும் மேற்செல்ல முடியாமல் நிற்க வைக்கப்பட்டது கண்டு வெம்பிப் போனார். தன் மேல் கவிவது நச்சுமரத்தின் சுவாசக் காற்று என உணர்ந்த போதும் விடுபட கால் எழவில்லை. வேளாண் சமூகம் தன் நெஞ்சில் சேகரம் செய்து வைத்த ஈரத்தையொலாம் முதலாளிய சமுதாயம் உறிஞ்சிய போது மாமுனி டால்ஸ்டாய் திக்குமுக்காடி நின்றார். அவர் தனது ஒரு உருவிலிருந்து இன்னொரு உருவாக ஆகயிருக்க வேண்டிய காலம் அது: அந்த தொலைதூர நோக்குக்கு அவர் பார்வை பத்தாது போயிற்று. அவர் பிறந்த மண்ணில், அந்த ருசியாவில், அவர் வாழ்காலத்தில் ‘போல்ஷ்விக்’ என்ற உரு தோன்றியது.

டால்ஸ்டாயைத் தனது ஆசிரியராக ஏற்றுக் கற்றுக் கொண்டவர் காந்தி. தர்மகர்த்தா முறைகளை வலியுறுத்திய காந்தி, அந்த முறையை அதன் குணத்தை வெட்டவெளியாக்கியது எது என்ற கேள்விக்கு காலடி வைத்தாரில்லை; முதலாளியத்துக்கு அவருடைய சமரசம் ஏற்புடையதாயிருந்தது. பிர்லா மானிகையில் தங்கியதும் அவருடைய தங்குதலை பிர்லா போன்ற சக்திகள் வர வேற்று அமைந்ததும் அங்கத்திய பிராந்த்தனைகளும் திசை மாறியவையாய் இருந்தன. முதலாளிய வேட்டைக்கு எதிரான, வேளாண் போருளியலுக்கு இசைவான மாற்றுப் பொருளியலை, அதற்கான கட்டமைப்பினை அவர் கண்டடையவில்லை. விதேசிப் பொருளாதாரத்துக்கு மாற்றான சுதேசிப் பொருளாதிகாரத்தை வடிவமைக்கவில்லை. இது போன்றவற்றை கருத்தில் எடுத்துக் கொள்ளாது தனிமனிதகுணங்களை ஒழுங்கமைத்தால் அனைத்தையும் சரி செய்து விட முடியும் என்கிற ஆன்மீகத்தில் ஒதுக்கம் கொண்டார். அரசு என்ற அடக்குமுறை அமைப்பு பற்றியும் அவருடைய நல்ல தனமான எண்ணம் தொடர்ந்தது.

வேளாண் சமூகத்தில் உடமை சேருகிறபோது, சிலரிடம் ஈயாக்குணமாக மாறிற்று. இங்கு “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” என்னும் நீதிமொழியும் உருவானது. கருமி, கஞ்சன், ஈயாப்பத்தி என்ற சொற்கள் ‘சம்சாரி ஒழுங்கு’க்கு எதிராய் உருவாகின. தன்னிடமுள்ள ஒரு பொருளைக் கொடுக்க மறுக்கும் கருமித் தனத்துக்குப் பதிலாக ஒருவனிடமிருக்கும் எல்லாவற்றையும் பறித்தெடுக்கும கொள்ளையடிப்பின் பெயர் முதலாளியம்: நம் வீட்டுச் சமையலறையில், சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்திருக்கும் பீஸா’ - அது ஏகாதிபத்தியம், உலகமயம் என வளர்ந்து கொண்டு போனதின் வருகை நிலை நிறுத்தப்படட முதலாளிய அடையாளம். முன்னிருந்த எல்லா ஒழுங்குகளையும் மனித மதிப்பீடுகள், விழுமியங்கள், மனித குணங்கள் எல்லாவற்றையும் சிதைத்த எவ்வொழுங்கும் அற்றதான ஒரு ஒழுங்கு அது.

கிராமப் பகுதியில் நண்பர் வீட்டுத் திருமணம்; விரிந்துபரந்த இடத்தில் மரம், செடி, கொடிகளுள்ள நந்தவனத்தில் அமைந்திருந்தது மண்டபம். முந்திய நாள்வரை மழை நல்ல குளிர்ச்சி. மண்டபத்துக்கு வெளியில் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்தது சலாவத்தாய் பேசிக் கொண்டிருந்தோம். என் எதிரில் பெருமாள் வாத்தியார். நகரத்திலிருந்த வந்த அழகுமுத்து கேட்டார். அவருக்கு சென்னையில் வியாபாரம் ஒன்றுக்கு நாலு கடைகளாகப் பெருகிவிட்டது. ”என்ன, நம்ம பக்கத்தில நல்ல மழையாமே”

பெருமாள் வாத்தியாருக்கு கோபம் வந்தது. செல்லக் கோபம்தான் “கேள்வியைப் பாரு? கேள்வி கேட்கிற ஆளைப் பாத்தீகளா?” கேள்வி கேட்ட புண்ணியவான் மற்றவர்களை ஏறிட்டுப் பார்க்க “ கேப்பீரு, கேப்பீரு” என்று பகடி செய்தார் பெருமாள். அந்த இரு வார்த்தைகளில் நீர் செய்றது வியாபாரம், அதுக்கு மழைதண்ணி எதுக்கு? வேட்டரிவாளுக்கு வெயிலா, மழையா என்பது போல், பெய்தாலும் பெய்யாவிட்டாலும் கல்லாப் பெட்டி நிறையும்; வங்கிக் கணக்கு உயரும் வகை, தொகை இல்லாம தொழில் செய்கிறீர், உமக்கு மழைதண்னி தேள்வை என்ன சொல்லும்? என்று ஆயிரம் கேள்விகள் அதற்குள் குடிகொண்டிருக்க, அழகுமுத்து ஒரு சொல்லில் அடக்கினார். “நீங்க தான அனுப்பினீங்க”

ஒரு சமுதாயக் கண்ணாடியை அப்படியே ஒளியடித்துக் காட்டிவிட்டார் அழகுமுத்து. கிராமியம் என்பது வேளாண் சமூகம் மட்டுமல்ல, அது வேளாண் குணம். கிராமியப் பொருளியலை, கிராமிய குணத்தை ரண களமாக்கி வைத்தது யார்? கிராம மக்களை உண்டு இல்லை என்றாக்கி வெம்பறப்பாய் அலையப் பண்ணியது யார்? விவசாயத்தைக் கைகழுவி நகரம் அடையச் செய்தது யார்? நகரவ்ணிகப் பேய்களின் உருவாக்கத்தில், ஆடு, மாடு நிலபுலன் என்ற படுக்கை வசத்திலான உடமைகளின் இடத்தில் வீடு, மாடி, மனை, அடுக்குமாடி, வங்கி, கார் என உலகவங்கி வரை செங்குத்தாய்ப் போகலாம் என்ற சிந்திப்பை உண்டாக்கியது யார்?

காலம் என்று சொல்லலாம்; காலத்தை முன்னடத்திச் செல்லவேண்டிய வழிகாட்டிகளே! நீங்கள் எங்கே போனீர்கள்?

அழகுமுத்துவின் அந்த ஒரு சொல் ஆயிரம் பெறும்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை