காவல்

அருந்தலான மழை. கரம்பை ஈரம் பொதுமி, காலில் ஒட்டு மண் ஒட்டியது. பொசும்பலுக்கு வெள்ளம் வரும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஊா்க்காட்டில் ஒரு பொட்டு மழை இல்லையென்கிறபோதும் தண்ணீர் வரவழைக்கிற மந்திரம் 20 கி.மீ அப்பால் உள்ளது. 20 கி.மீ தாண்டி மேற்கில் ’ஒரேமானமாய்’ (வானம்) இருந்தால் போதும்: பெய்கிற மழைக்கு, இங்கே ’பெரியஓடை’யில் தண்ணீா் நிரம்பி விடும்.

காவல்கார மனா.செனா முட்டிக்கால் வரை சகதியடைக்க பெரியஓடைக்குள் குறுக்காய் விழுந்து மேலேறி கரை வழியாக வேகு, வேகு என்று ஓடி வந்தார்.

“நம்ம ஊருக்குத் தண்ணி வருது” சாமியாடி போல் ‘ஜிங்கு ஜிங்கு’ என்று ஆடினார். முட்டிக்காலில் ஒட்டியிருந்த களிமண்ணை வழித்து, ரெண்டு சின்னப்பயல்களின் மூஞ்சியில் அப்பினார். இரண்டு பிள்ளைகள் எனக்கு, எனக்கு என்று முகத்தை நீட்டினார்கள் - சோலைசாமி கோயிலில் சந்தணம் பூச மொட்டைத்தலையை நீட்டுவார்களே அதுபோல.

ஓடைக்கால் வழியே வெள்ளத்தை எதிர் கொண்டு அழைத்து வந்திருந்த புண்ணியவாளன் முகத்தில் பெருமிதம் கூத்தாடியது. பாளம் பாளமாய் பிளந்த விறுவுகள், பிளவுகளில் பொட, பொடவென்று ஓடி நிறைத்து நுங்கும் நுரையுமாக வெள்ளப் பெருக்கு சுருக்காய் கண்மாய் வந்துவிடும். கம்மாய்க் கரை மேல் நின்று, தங்கள் வாழ்க்கையை நோக்கி ஓடிவருகிற தண்ணீரை சனம் கண்குளிரப் பார்த்தது. ‘எனக்கு எங்கே வழி, எங்கே வழி’ என்பது போல் ஊத்துப் பள்ளங்களில் தாவி கரைகளில் மோதியது.

காவல்கார மனா.செனா சொன்னார். ”வர்ற வரத்தைப் பார்த்தா, பெருங்கொண்ட வெள்ளமாத் தெரியுது. இழந்த கரையெல்லாம் பெலப்படுத்தணும்.”

உள்ளுா் மழையும், அசலூர் வெள்ளமும் சோ்ந்து, கரையை ‘வந்து பார்’ என்றது. இளவட்டக் கூட்டம் காத்திருக்கவில்லை; விசை இயக்கினது போல் கூடையும், மண்வெட்டியுமாய்த் திரும்பினார்கள். பெண்டுகள் நனைந்தபடி கூடை திருப்பினார்கள். ஆண்பிள்ளைகள் இழந்த இடங்களில் கரையைக் கெட்டித்தார்கள். பெரும் பெரும் உருண்டைகளாய் களிமண்ணைத் திரட்டி ’தாவில்’ போட்டு அடைத்தார்கள். கெட்டியாய் சிமிண்ட போல் இறுகியது.

”கட்ட பொம்மன் கோட்டை போல கெடக்கும் விடு”, என்றார் மனா.செனா.

மின்விளக்கு இல்லாத காலத்தில் நிலாவெளிச்ச முற்றத்தில் வட்டமாய் உட்கார்ந்து, பாட்டிசைத்து, சின்னப் பிள்ளைகள் கூட்டாஞ்சோறு சாப்பிட்டார்கள். ராப்பொழுதை குளுச்சி பண்ணிவிடுவது இந்தச் சிறுசுகள் தாம். அவர்களின் கூட்டு ’ராப்பட்டுப் பொழுதைச்’ சிங்காரமாக்கியதா, ராப்பட்டுப்பொழுது அவர்களைச் சிங்காரமாக்கியதா என்று யோசிப்பு பார்ப்பவர் மனசில் அடித்தது: கூட்டுறவான வாழ்க்கைக்கு சிறுவயது கால்கோளிட்டது.

கூட்டாஞ்சோறு குழந்தைமையை, காலம் துடைத்தெறிந்து நகர்ந்திருந்தது. அவரவா் கையை ஊன்றிக் கரணம் போட்டுத் தனக்குத்தானே வாழ்வது என்றாலும் பரவாயில்லை; மற்றவா்கள் காலை வாரிவிட்டு வாழ்ந்து கொள்வது என்றாகிப் போனது. ஒரு ஆள் கத்தரிச் செடிக் கன்றை ஊன்றிக் கொண்டே போனால், இன்னொரு ஆள் பிடுங்கித் தலைகீழாய் நட்டுக் கொண்டே வந்து விடுகிறான்.

எனது பாலிய வயது 1945 முதல் 1955 வரையான பத்து ஆண்டு. பால பருவத்தில் நான் கண்டிருக்கிறேன். பனையேறும் மக்கள் தேரிக்காட்டிலிருந்து பக்கத்து ஊர்களுக்கு தலைச் சுமையாய் கருப்பட்டி, பனக்கிழங்கு, பனாட்டு போன்ற பண்டங்களைக் கொண்டு வருவார்கள். கம்பு, சோளம், மிளகாய், மல்லி (தனியா) போன்ற பொருட்களை பண்டமாற்றாய் வாங்கிப் போனார்கள். தருதலும் பெறுதலும் வாஞ்சையான தொடர்பாடலில் அமையும். கொஞ்சம் கள்ளும் ஓசியாய்த் தந்து செல்வார்கள். பணப்புழக்கம் வந்தபின், பணத்தால்தான் அனைத்தும் எனச் செயலானதும், மனித உறவும் பணப்பட்டுவாடாவால் தீர்மானிக்கப் பட்டது.

ஊர் மென்மேலும் முன்னேற வேண்டுமென்று பார்க்கிறவா்கள் ஊர்முழுதுமிருந்தார்கள். அது ஒரு காலம்: ஊர்மேல் ஏறி, தான் முன்னேற வேண்டுமென்று பார்க்கிறவர்கள் இன்னைக்கு இருக்கிறார்கள்.

போன வருசம் நடந்தது.

கிழக்கு மேகம் இருண்டது; வருவமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது மழை. எங்கே வரப் போகிறது என்று சனங்கள் நினைத்து, நிமிசக் கணக்கு ஆகியிருக்காது. மடை உடைந்தது மாதிரி பொது, பொதவென்று கொட்டி விட்டது.

சில்லோடை உடைந்து, பெரிய ஓடையும் கிழிந்து கடல்பொங்கி வருவது போல் வெள்ளம் எக்காளமிட்டு வருகிறது. பெரிய ஓடையை அடுத்திருக்கிற மாட்டு வண்டிப் பாதை வழியாக மந்தைக் காட்டில் இறங்கி வெள்ளம் ஊருக்கு வந்து விடுமோ என்றிருந்தது. ஊர்க்கூட்டம் கரைக்குவரத் தெம்பில்லாமல் சுயநலமாய் வீட்டுக்குள் முடக்கியடித்துப் படுத்துக் கொண்டது. வயக்காட்டுக் கண்மாய் ஏடாகூடமாய் உடைப்பு ஏற்பட்டு, பெருஞ் சேதாரம் ஏற்பட்டு விட்டது. மறுதினம் ஊர் நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பொதுப்பணித்துறையிடம் போய்ப் பிராது கொடுத்தார். ஆறு மாதத்திற்கு பிறகு பொதுப்பணித்துறைக்காரன் வந்தான்; சோதித்தான். ஒரு அசைவும் இல்லை.வயற்காட்டுக் கண்மாயில் ’நுள்ளங்கை ’அளவு தண்ணி இல்லை. பாசனத்திற்கு இருந்த தண்ணீா் பிய்த்துக் கொண்டு போனது போலவே, அவா்களின் அந்த வருச வாழ்க்கையும் பிய்த்துக் கொண்டு போனது.

2

மனா.செனா ஊா்க்காவலில் மகா சூரன், இரும்பு போல் உறுதி. தாய் போல் அன்பு. கண்கொத்திப் பாம்பு. களவு எங்கிருந்தாலும் எடுத்து விடுவார்.

களவாடுகிறவனுக்கு நேரக்கணக்கில்லை. காவல்கார மனா.செனா.வுக்கும் நேரமின்னு இல்லை. விடியலுக்கு முன் கையில் கம்போடு காட்டுக்குள் போய் விடுவார். களவு என்றால் என்ன? காட்டுக் களவுதான். களையெடுப்பு, கதிரறுப்பு. பருத்தியெடுப்பு காலத்தில் ரெண்டு கருது பிடுங்கிக் கசக்குவது, அடுத்தவன் புஞ்சையில் ஆடு, மாடுகளுக்கு தழை முளை வெட்டிச் சுமந்து வருவது,வருகிற போது அதற்குள் ஒரு குத்துக் கம்மங்கருதுகளை ஒளித்துவைத்துக் கொண்டுவருவது, பருத்தியெடுப்பு காலத்தில் அடுத்தவன் காட்டில் பருத்தி “மொங்கான் அடிப்பது” புல் அறுப்பது என்று இந்த மாதிரி காட்டுக் களவுதான். மனா.செனா நம்மகூட வந்து கொண்டிருப்பது போல் தோன்றும். பேச்சு பேச்சாயிருக்கிறபோதே ‘அக்கா, நா போய்டடு வர்றேன்’ என்று பாதி வழியில் காணாமல்போய் விடுவார். புஞ்சை ஊடு காட்டு வழியே வேகு வேகு என்று நரிவேட்டைக்குப் போவது போல் ஆள் பாய்ந்து போய்க் கொண்டிருப்பார்.

ஒரு தடவை கம்பங்காட்டிலிருந்து எதிரில் மொலு மொலுவென வந்த பெண்டுகளை வழிமறித்தார். ”என்ன அழகுத்தாயி மடி பெருத்துத் தெரியுது” நேரடியாகக் கேட்டு விட்டார். மடியில் எதையோ ஒளித்து வைத்துக் கொண்டு போகிறாள் என்பது அவர் நோக்கம்.

‘எங்க, நேரா பாத்துச் சொல்லுங்க. ஒங்க தம்பியா பிள்ளையைப் போய்க் கேளுங்க மாமா’, என்று பதில் வந்தது அழகுத்தாயிடமிருந்து. அவள் மடி பெருத்திருந்தது வேற காரணம். பாவம், அன்னைக்கு மட்டும் மனா.செனா முகத்திலிருந்து வழிந்ததை அளந்திருந்தால் மூணு படிக்கு குறைந்திருக்காது.

எதிராளி காடானாலும் ஒரு பீட்டைக் கருது களவு போகாமல் காத்த மனா.செனா காலம் மலையேறி விட்டது. ஊா்க்காவல் எடுபட்டுவிட்டது. அவரவா்க்கு அவரவா் காவல். எடுத்தற்கெல்லாம் போலீஸ் ஸ்டேசன். புல்லுக்கட்டுக்கு ஊடே நாலு கம்பங்கருதை சொருகி வைத்து எடுத்து வந்தால், உடனே போலீஸ் ஸ்டேசன். காட்டுக்களவு, வீட்டுக்களவு என்ன கண்றாவி என்றாலும் உடனே போலிஸுக்குப் புறப்பட்டுப் போகிறார்கள். இப்போதெல்லாம் வட்டம், மாவட்டம், எம்.எல்.ஏ என்று அங்கயும் போய்நிற்கிறார்கள்.

ஊருக்குள் தீா்க்கப்பட்ட புருசன் – பெண்டாட்டி சண்டை, காடு அழிமானம், கோழி களவு, எல்லைத் தகராறு இத்தியாதிகள் எல்லாமும் ஊர் எல்லை தாண்டி காவல் நிலையம், நீதிமன்றம் என்று படையெடுக்கின்றன. இந்தப் பக்கம் நாலுகாசு, அந்தப் பக்கம் நாலுகாசு என்று போலீஸ் மாற்றி மாற்றி பறித்துக் கொண்டு விடுகிறான். வழக்குரைஞர் என்று சொல்லப்படும் வக்கீல் ஜாதியும் நல்ல ஜோருக்கு வியாபாரம் செய்கிறது. உயிரோடு கோழிக்கு ரோமம் பிடுங்கிற சாதி அது. கடைசிக் கையிருப்பு உள்ளவரை நோண்டிப் பார்த்துவிடுவார்கள். கடைசியில் பலம் உள்ளவன் எவனோ அவன் பக்கம் தீர்ப்பாகிறது.

ஊருக்குள்ளும் ஊரைச் சுற்றியும் நடக்கிற இதுபோல நிகழ்வுகள் ஒரு உண்மையை எடுத்துத் தருகின்றன. திட்டமிடுகை (Resolution), நிறைவேற்றுகை (Execution) என்னும் இரு நிலைகளில் அரசு செயல்படுகிறது. இதற்கு மக்களாட்சி என்று பெரிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முறையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது; அவர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்ற கருத்தோட்டம் மக்களிடம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல;

நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்றவை மக்கள் நலன் நோக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன. இவை தீர்மானங்கள் நிறைவேற்று சபை (Resolutions body) எனப்படும். இச்சபைகளுக்கோ, இதன் பிரதிநிதிகளுக்கோ எடுத்த முடிவுகளின் மேல் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. தீர்மானதைச் செயலாக்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. செயலாக்கும் அதிகாரம் தனியாக நிர்வாக அமைப்பிடம் உள்ளது (executive body). அது அதிகார வர்க்கத்தின் (beaurocracy) கையிலுள்ளது. இதுதான் உண்மையாக ஆட்சிசெய்யும் அமைப்பு. (executive body - That is called Government). நிரந்தரமாக அரசை நடதுபவர்கள் இவர்கள்தாம். ஆனால் இந்த அதிகார வர்க்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை; இவர்களைக் கட்டுப்படுத்தும் திராணி, அதாவது ஒன்றினைத் தீர்மானித பின், அதைச் செயல்வடிவம் கொடுக்கும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கிடையாது. மக்கள் பிரதிநிதிகள் பேருக்கு மட்டுமே ஆட்சியாளர்கள். ஆட்சி செய்வது, நடைமுறைக்கு எடுத்துப் போவது முழுக்க அதிகார வர்க்கம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் அல்லது மக்கள் பிரதிநிதி சரியாகச் செயல்படவில்லையென்றால், அடுத்த தேர்தலில் மக்கள் அவர்களை மாற்றிக் காட்டுகிறார்கள். செயலாற்றும் வல்லமைகொண்ட அதிகார வர்க்கத்தை ஒரு போதும் மக்களால் மாற்றிட முடியாது. தேர்ந்தெடுக்கப்படும் தமது பிரதிநிதிகளை மாற்றிக் காட்டும் வல்லமையை மக்களுக்கு வழங்கிய ஜனநாயகம், தேர்ந்தெடுக்கப்படாத, அதிகாரக் கூட்டத்தை மாற்றும் வல்லமையை (அதிகாரத்தை) வழங்கிடவில்லை. எனெனில் அதிகாரவர்க்கம் மக்களால் தெர்ந்தெடுக்கப்படுவதில்லை. இது ஒரு முக்கியமான அம்சம். மக்கள்அதிகாரத்தைப (peoples power) பெறுவது எப்படி என இதுவரைபேசப்படவில்லை.இது ஒருபக்க சனநாயகமே. சனநாயகத்தின் மற்றொரு பக்கம் மக்களுக்குக் காட்டப்படவில்லை. மக்களாட்சித் தத்துவத்தை வகுத்த மேற்கத்திய முதலாளியத்தின் நுட்பமான இராசதந்திரம் இதுதான். அது மக்களுக்கான சனநாயகம்போல தோற்றமளிக்கவேண்டும். ஆனால் உண்மையான சன நாயகமாக இருக்கக் கூடாது. இதுதான் அய்ரோப்பிய வகையிலான முதலாளிய சனநாயகம்.

ஒரு அதிகாரியின் இடத்தில் இன்னொருவர் வருவார். ஒரு பணியாளருக்குப் பதிலாய் மற்றொரு பணியாளர் தொடருவார். மொத்தமாய் அதிகார அமைப்பு கட்டுக்குலையாது தொடரும். முன்னர் ஒருகாலத்தில் தமக்கானதை நிறைவேற்றிய மக்கள் அதிகாரம் இன்றில்லை. அப்படி மக்களிடம் அதிகாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊராட்சி மன்றம் என்ற ஒன்னுமேயில்லாத ’விருதா’ அமைப்புக்களை முதலாளியம் உண்டுபண்னியிருக்கிறது.

முன்னர் தமக்கும் தமது கிராமிய சமுதாயத்துக்கும் தேவையானதை அங்குள்ளோர் தாமே நிறைவேற்றினார்கள். அதுவே கிராமிய சமுதாய அமைப்பு. அதனாலுண்டான நலன்களையும் கூட்டுச்சமுதாயமாய்ப் பகிர்ந்தார்கள். இன்று அந்த மக்களதிகாரம் அரசுநிர்வாகத்தால் காவு கொள்ளப்பட்டு விட்டது: இப்போது அதே நலன்கள் அவர்தம் கண்ணெதிரில் பறிபோகின்றன. ‘கொந்தாங்கொள்ளையாய்’ தமது உரிமைகளை, நலன்களை, கூட்டு அதிகாரத்தை பறிகொடுத்த மக்கள் தமக்குரிய கடப்பாட்டையும், பொது ஒழுக்கம் பேணலையும் கைகழுவுவதும் அதன் தொடர்ச்சியில் நடந்தேறிற்று.

”நமக்கு நாமே” என்ற சொல்லாடல் இன்று அரசியலில் அடிபடுகிறது.நமக்கு நாமே என்றால் மக்கள் அதிகாரம் எனப் பொருள். தமக்கான அனைத்தையும் மக்கள் தமக்குத் தாமே திட்டமிட்டு, தாமே நிறைவேற்றி, பொதுப் பலன்களை கூட்டாய்ப் பகிர்ந்து கொள்ளல் என்பது அதன் விரிவுரை;

1990-ல் தி.மு.க ஆட்சியின்போது ”நமக்கு நாமே திட்டம்” எனக் கொண்டுவந்தார்கள். ஊரின் தேவைகளான கலையரங்கு, விளையாட்டுத் திடல், கல்விக்கூடம், தானியக் களம், பொதுக்கிணறு, கண்மாய் வெட்டுதல், ஆழப்படுத்தல் போன்ற காரியங்கள் அவை; ஊர்ப் பொதுக்கருவூலதிலிருந்து எடுத்து பொதுக்காரியங்கள் நிறைவேற்றல் என்று மக்கள் தமக்குத் தாமே முன்னர் செய்த முறையில் அல்ல; அரசு நிதி ஒதுக்கீடு செய்ய மக்களின் உழைப்புப் பங்களிப்புடன் நிறைவேற்றுதல் என்ற திட்டம் அது; அரசு நிதி ஒதுக்கீடு என வருகிறபோது – அந்தப் பாதையில் பல சீரழிவும் உற்பத்தியாகும். விளக்கமாக எடுத்துரைத்தால் ஆயிரம் மொள்ளமாரித் தனங்களுக்கும் வழிசமைத்துத் தந்தது. அதிகார வர்க்கத்துடன் அரசியல்வாதிகளும் சேர்ந்து உட்கார்ந்து தின்று காலி செய்தார்கள். மக்கள் என்ன ஏமாளிகளா? அவர்களும் உழைக்காமல் ஊதியம் பெறும் ஏமாற்றுத் தொழில் செய்தனர். நெத்தியடி உதாரணம் நூறு நாள் வேலைத்திட்டம்.

தேர்தலைக் குறிவைத்ததாக, ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்தலை நோக்கி இன்று ’நமக்கு நாமே’ முழக்கம் சுருக்கப்பட்டுள்ளது. நாம் விரும்புவோரை நாமே வாக்களித்துத் தேர்வு செய்தலுக்கான சூத்திரமாக ”நமக்கு நாமே” முழக்கத்தைக் காண முடியும். இன்றைய தேர்தல் முறை தொடரவேண்டுமென்பதும், அதன் தொடச்சியாக இந்த முதலாளிய அதிகார முறைமை நீடிக்க வேண்டுமென்பதும், இதற்கு எமக்கு வாக்களியுங்கள் என்பதும்தான் புதிய ’நமக்கு நாமே.’

சனநாயகம் என்பது கீழிருந்து மேலேறுவது, மேலிருந்து கீழிறங்குவது அதிகாரம். சனநாயகம் கீழிருந்து மேலாய்ப் பரவி, ஒவ்வொரு கிளையாய், செழித்து, உச்சியிலும் ஒரு சனநாயகப் பூவை மலர வைக்கும்; இந்த சனநாயகம்தான் முன்னொரு காலத்திலிருந்த கிராம அமைப்பின் நடைமுறை: இதுவே மக்கள் அதிகாரம். நமக்கு நாமே எனில் நம்மை நாமே ஆளுதல். நமக்கு நாமே என்னும் முறைமைதான் கிராமக் காவல்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்