விழித்திருக்கும் தூரிகை

எதிர்க் கருத்தியலை மையப் புள்ளியாகக் கொண்டு ஒரு கலை இலக்கிய இதழ் – அதுவும் 1980-களில் இருபதாயிரம் படிகள் விற்பனையாகிய சேதி கேட்டதுண்டா? அந்தவொரு அதிசயம் நடந்தது. அது ‘மனஓசை’: எண்பதுகளில் நாங்கள் நடத்திய திங்களிதழின் வரலாறு.

1981ல் மனஓசை தொடங்கிய நாட்களில் எழுத்துப் பங்களிப்புக்கு எழுதுவோர் தேவைப்பட்டார்கள்; போலவே, ஓவியர்களும் முக்கியத் தேவையாய் ஆனார்கள். மனஓசையின் இலச்சினை, மனஓசை தலைப்பெழுத்து, வடிவமைப்பு ஆகியவைகளை ஓவியர் ஞானவேல் செய்து தந்தார். அதுதான் இதழ் தன்னுடைய பயணத்தை நிறுத்தும் வரை வடிவெழுத்தாக உடனிருந்தது.

அன்றைய இளைஞர்கள் – இன்றைய முதிய ஓவியர்கள்! சந்தானம், மருது, சந்துரு, புகழேந்தி, தியோ போன்றோர் தொடர்பு உண்டாக்கிக் கொண்டோம். கதை, கவிதை, கட்டுரை, உருவகம் போன்ற இலக்கிய வடிவங்களில் ஏதாவது ஒன்றைப் பொறுத்து, அவ்வப்போது இவர்களிடம் ஓவியங்கள் பெற்று வெளியிட்டுக் கொண்டிருந்தோம்.

அச்சுத் தொழில் நுட்பம் கணினி மயப்படாதிருந்த காலம்! இன்றைய ‘மாய வளர்ச்சி’ அப்போதில்லை. ஓவியம் பெற்று – பிளாக் செய்யக் கொடுத்து, வண்ணம் என்றால் தனித்தனியாய் ஒட்டி – இப்படியெல்லாம் மணலைக் கயிறாய்த் திரித்து, வானத்தை வில்லாய் வளைக்கும் வித்தைகளால் நேரம் உழைப்பைத் தீனி கேட்டுக் கொண்டிருந்தது. அப்போதும் ஓடிக்கொண்டேயிருந்தவர், ஓடிக் கொண்டேயிருப்பது அவர் இயல்பு – விரட்டிக் கொண்டேயிருப்போம். ஆனால் பிடிக்க முடியாது. குடைராட்டினம் போலத்தான். குடை ராட்டினத்தில் சுற்றுகிறவன் முன்னாலே இருப்பதைப் பிடிப்பது போல் தோன்றும்; ஆனால் முடியாது. கைபேசி வசதியும் இல்லாத எண்பதுகளில். ஆனாலும் அவரை ஏதோ ஓர் இடத்தில் தொட்டுவிடுவோம். நாங்கள் குழந்தைகள், சின்னஞ்சிறுசுகளைக் குதூகலப்படுத்துகிற, குடைராட்டினம்போல், தனது தூரிகைகளின் கோடுகளுக்குள் அத்தனை வன்மைகளை இடுக்கி வைத்திருந்தார்.

“திரு.பா.செயப்பிரகாசம் தெக்கத்தி ஆத்மாக்கள் தொடர் ஜூனியர் விகடன் பத்திரிகையில் எழுத ஆரம்பித்து, சனவரியில் தொடங்கி நவம்பரில் வெளியிட்டு, நூலை எனக்குச் சமர்ப்பித்தார். 1.2.1999-ல் பா.செயப்பிரகாசத்துடன் ஓவியர் மருது வந்திருந்தார். அன்று ராத்திரி ஊரில் தங்கல். பனங்காட்டுக்கு நடந்து காலைப் பதனீர் சாப்பிட்டு வந்தோம்.”

மறைந்த நாட்டுப்புறவியல் சேகரிப்பாளர், எனக்கு மூத்தவர், அண்ணாச்சி எஸ்.எஸ்.போத்தையா. விளாத்திகுளம் வட்டாரத்தில் என் சொந்த ஊரிலிருந்து குறுக்குவழியில் ஏழு கி.மீ. போனால் தங்கம்மாள்புரம். எஸ்.எஸ்.போத்தையாவின் ஆண்டு வாரியான குறிப்புகளில் இந்தச் சேதி தென்பட்டது.

போத்தையா மட்டுமேயல்ல; ஜூனியர் விகடன் போய்ச் சேருகிற கைகள் எல்லாமும், வாரா வாரம் மருதுவின் ஓவியங்களுடன் தரிசித்தன. தெக்கத்தி ஆத்மாக்களுக்கு மேலாகவும் இணையாகவும் பயணித்தன ஓவியங்கள். ஓவியங்கள் மூலம் மருதுவை எஸ்.எஸ்.போத்தையா சந்தித்திருக்கிறார். நேரில் சந்தித்ததும் அவருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வாராத விருந்தாளி வந்தது போல.

மதுரையிலிருந்து, எனது ஊருக்கு, ஜீப்பில் பயணித்தோம். ஜீப்பின் முன்னிருக்கையில், பதிவாக அமர்ந்திருந்தார். அது தோதாக அமைந்து போனது. நான் வசித்த ஊர் (அம்மா ஊர்), அதில் நான் வாசித்த பள்ளிக்கூடம் – அந்தப் பாழடைந்த உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தைப் புகைப்படத்துக்குள் செருகிக் கொண்டார். அந்த ஊரைத் தாண்டியதும் வந்தது சாலையோர ஒடைமரம்; ‘பட்டணப் பிரவேசம்’ போக சிங்காரிச்சி வச்ச பல்லக்கு மாதிரி, கிளையும், கொப்புகளுடன் தட்டுத் தட்டாய் அடுக்கி வைக்கப்பட்டதில், புள்ளிப் புள்ளியாய் சின்னச் சின்னப் பூக்கள். ராத்திரி நேரத்தில் இந்த தேவதை சிங்காரித்து, வாசம் வீசி அத்துவானக் காட்டில் வாழ்கிற அத்தனை ஜீவராசிகளையும் கூப்பிடுவாள் போல, சொக்கிப் போயிருந்தேன். ஜீப் வசதியாக இருந்தது. உட்கார்ந்து, நின்று, தொலைவாய்ப் போய் என்று பார்த்துப் பார்த்துப் படப்பெட்டிக்குள் சொருகிக் கொண்டார்.

தெக்கத்தி ஆத்மாக்கள் – தொடர் முடிவற்று, அலைகள் பதிப்பகத்தார் முதல் வெளியீடாய் வந்தபோது, நூல் முகப்பில் பல பரிமாணங்களுடன் காட்சித் தந்தது அந்த ஒடைமரம். ஒரு பம்பரம் போல், ஒடைமரம் உயிர்ப்போடு சுற்றிக் கொண்டிருந்தது. அதன் இடது பக்கவாட்டில், சற்றுக் கீழே வட்டக் குடையாய் தலைப்பாகையுடன் ஒரு தெக்கத்தி ஆத்மா.

மண்ணின் இயல்பை, மைந்தரின் அசைவை, கலைகளை, தனக்குள் ஆட்படுத்திக் கொண்டிருந்தார். இந்தப் பாரம்பரியக் குணவாகு ஒரு கடல் போல் அவருக்குள் கிடந்தது. பல நூறு நதிகளாலும், ஓடைகளாலும் அவர் தனது சமுத்திரத்தை நிறைத்துக் கொண்டிருந்தார். இருக்கிறார். கடலில் முத்துக் குளிக்கையில் தலைகீழாகக் கால் மேலாக இருக்கும். கண் உண்டுபண்ணிய கடலில், கெத் கெத்தென்று அலையடிக்கும் கடலில் தலைகீழாய் மூழ்கி அவரது தூரிகை முத்தெடுத்து வரும்.

“கிராமியக் கலைகளைக் காண்பியல் மரபில் விட்டுவிடக் கூடாது. அவற்றிற்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். அவற்றை மறுபடியும் புழக்கத்துக்குக் கொண்டுவந்து நமக்கானதாக மற்றவேண்டும்” என்று மறைந்த ஆதிமூலம் குறிப்பிட்டதாக நினைவு கூறுகிறார் மருது. புதிய கருத்தாங்களுக்குப் பொருத்தி, அவைகளைப் பயன்படு கலையாக ஆக்க வேண்டும். அதன் மூலம் அவற்றுக்கு மதிப்பு வந்தடையும். இல்லையென்றால் பொருட்காட்சிக் கூடத்தில் வைக்கப்படுகிற ஒரு பொருளாக மட்டுமே நிற்கும். ஆதிமூலத்தின் சொற்கள் அர்த்தச் செறிவுள்ளவை. முந்திய கலைகளைச் சமகால அர்த்தமுள்ளதாக ஆக்கும் மரபு ஆதிமூலத்திலிருந்து தொடங்கியதாக மருது கூறுகிறார். அந்த மரபு வழியில் கோடுகளால் பயணிப்பவராக விளங்குகிறார். மண்ணின் சாரத்தை மக்களின் இயல்பை உள்வாங்கி, பல பத்து நெடுந்தொலைவு பாய்ந்து வந்துள்ளார். ஓவியத் துறையில் அவர் ஒரு காலகட்டம்.

மருது வரைந்த ஓவியங்களை, அவரே ஆவணப்படுத்திக் கொள்வது நல்லது; அந்தப் பாதுகாப்புச் சொந்த ஆதாயத்திற்குரியது மட்டுமல்ல. ஓவிய வரலாற்றின் முக்கியச் சந்திப்பில் நிகழ்ந்தவைகளைச் சொல்லுகிற ஆதாரமாகும்; ’தெக்கத்தி ஆத்மாக்களை’ நூலாக மறுபதிப்பு வெளியிட முயற்சி செய்தோம். ஜூ.வி.யில் ஒவ்வொரு இதழிலும் அவர் வரைந்த ஓவியங்களுடன் நூலைக் கொண்டுவந்தால் வடிவாக இருக்குமே என நினைத்து, அந்த ஓவியங்களைக் குறிப்பாக அவர் கைப்பட வரைந்த ஓவியங்களைத் தேடி அலுத்துப் போனதுதான் மிஞ்சியது. விகடன் அலுவலகத்தில் மருது முயற்சி செய்து, வெறுங்கையோடு திரும்பினார். வேகம் கொண்ட இதழியல் வணிக இயந்திரத்தின் பற்களுக்குள் அவை அரைபட்டுக் கூழாகிப் போயின.

2

அக்டோபர் 18, 2002. எங்கள் மாலைப் பொழுதை யாழ்ச் சகோதரர்களுக்கு அளிப்பதற்காக, போய் இறங்கியிருந்தோம். அக்-19, 20, 21, 22 ஆகிய நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் “மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாடு”. அது அமைதி ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம். அமைதி ஒப்பந்தம் 2002, சனவரியில் கையெழுத்தானது.

‘மானுடத்தின் தமிழ்க் கூடல்’ மாநாட்டில் கலந்துகொள்ள ஐவர் தமிழ் நாட்டிலிருந்து சென்றிருந்தோம்; ஒருவர் கவிஞர் (இன்குலாப்), ஒருவர் ஓவியர் (மருது), மற்றொருவர் திரைத்துறை இயக்குநர் (புகழேந்தி), நான்காமவர் அரசியல் தலைவர் (தொல்.திருமாவளவன்), ஐந்தாவது எழுத்தாளர் (நான்) – சரிவிகித உணவுக் கலவைபோல் வெளிப்பட்டிருந்தது எங்கள் பங்கேற்பு.

மக்களின் விடுதலைப் போராட்டம் உலகின் எந்த மூலையில் வெடித்தாலும், மனசாட்சி கொண்ட கலைஞனை அது ஈர்க்கிறது. அமெரிக்கா ஏகபோகத்துவம் வியட்னாமைக் கபளீகரம் செய்ய முனைந்ததை, அம்மக்கள் எதிர்த்துப் போராடினார்கள்.
“வியட்னாம் ரத்தம் –
எங்கள் ரத்தம்”
பெரும்பாலான கலைஞர்கள் நீதியின் குரலெழுப்பினார்கள். இன்னொரு மண்ணின் கூப்பிடுதலுக்கே தலைவணங்குகிற கலைஞன், தொப்புள் கொடி மண்ணின் மக்களினம் வெட்டிச் சரிக்கப்படுகிறபோது, மௌனம் கடைப்பிடிக்கிறவனாக இருப்பானா? (ஆனால் மேலே காணும் முழக்கத்தை முன் வைத்த இடதுசாரிகள், ஈழத்தின் அவலம் காதுகளில் மோதியபோது, செவிப்பறையை இரும்புக் கதவுகளால் மூடிக் கொண்டார்கள்.)

விடுதலைப் புலிகள் ஆட்சிப் பகுதியில் முதல் சோதனைச் சாவடி; அங்கு விடுதலைப் போராளிகள் வாகனங்களைச் சோதிப்பவராய், சுங்கம் வசூலிப்பவராய், சுறுசுறுப்புடன் இயங்கினார்கள். அந்தச் சுறுசுறுப்பு விருப்புடன் விளைந்தது. தம் மக்களுக்குப் பணி செய்கிறோம் என்ற மனநிறைவில் வந்தது.

நாங்கள் யார், எதன் பொருட்டு யாழ் செல்கிறோம் என்று தெரிந்ததும், அத்தனை பேரும் கூடிவிட்டார்கள். எழுத்தாளர், கவிஞரைவிட, காட்சி ரூபக் கலையுடையவரை நிறையப் பேர் அறிந்திருந்தார்கள். அவர்களில் சிலர் ஓவியம் பழக, வளர்க்க, ஓவியராக முயன்று கொண்டிருந்தார்கள். இலக்கிய நூல்கள், இதழ்கள், வெளியீடுகள் மூலமாய் மருதுவைப் பார்த்திருக்கிறார்கள். நேரில் அவர் வருவார் என எதிர்பார்த்தார்களில்லை. திக்குமுக்காடிப் போனது போல் நின்றார்கள். மருதுவைச் சூழ்ந்திருந்தார்கள்.

1987-முதல் ஈழ மக்களுள், அவர்களின் போர்க்குண உணர்வுக்குள் மருது ஏதோ ஒரு வகையில் நுழைந்து கொண்டிருந்தார். போர்ச் சூழலுக்குள் விகடன், குமுதம், கல்கி போன்ற பெரும் பெரும் பருவ இதழ்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் செய்தித் தாள்களும் உள் நுழையத் தடை. தமிழகத்திலிருந்து எல்லாமே கடத்தப்பட்டுத்தான் அங்கு போய்க் கொண்டிருந்தன. எவரும், எல்லாமும் தயங்கிக் கொண்டிருந்த காலத்தில், கேலிச் சித்திரமாய், கோட்டோவியமாய், சின்னச் சின்னப் படங்களாய், சுவரொட்டிகளாய் – இதுபோன்ற பல தினுசில் மருது உள்நுழைந்து போய்க் கொண்டிருந்தார். அனைத்துப் போராளிக் குழுக்களுக்கும் வரைந்து தருவார். விடுதலைப் புலிகள் நிலைபெற்ற பின்னான காலத்தில் அவர்களுடன், அவர்களுக்காக ஓவியப் பங்களிப்புச் செய்தார்.

யாழ் வீரசிங்க மண்டபத்தின் மாநாட்டு மேடையில் மாநாட்டு இலச்சினை வரையப்பட்டிருந்தது. அந்த இலச்சினை பதித்த அழைப்பிதழை எங்கள் கைகளில் தந்தார்கள். மொட்டு மலர்வது போலவும், தமிழீழம் மலர்வது போலவும் இலச்சினை இரண்டையும் இணைத்து வெளிப்பட்டிருந்தது.

அதை வரைந்து அளித்தவர் மருது. மாநாட்டு அரங்கில் நுழையும் வரை மருதுவும் எங்களிடம் வெளிப்படுத்தவில்லை. ஒரு மாதம் முன்பே அவரிடம் கேட்டு வரைந்து வாங்கியிருந்தனர். விடுதலைப் புலிகளின் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர்கள். ஆனால் அரங்கில் அழைப்பிதழ் கையளிக்கப் பெற்றதும், இந்தக் கோடு மருதுவின் விரல்களுக்குத் தானே வரும் என்ற ஓர் ஒளிக்கீற்று எங்களுள் பாய்ந்து என்னவோ உண்மை.

இலச்சினையை வரைந்து தந்து மருது வந்திருக்கிறார் என்று அறிந்து – ஒவ்வொரு போராளியும் அவரை மகிழ்ச்சியில் அணைத்தார்கள்.

“அதைவிட, வேறென்ன கௌரவம் வேண்டும்” – என்றார் மருது. அவர்கள் தழுவிக் கொண்டு பாராட்டியதை விட வேறென்ன மரியாதை என்று அவர் போகிற ஒவ்வொரு நாட்டிலும் சொல்கிறார்.

அவர் போராளிகளின் ஓவியனாக வாழ்ந்தார். ஈழம் சென்று, நாங்கள் திரும்பிய பின்னரும் அவர் மீளவும் அழைக்கப்பட்டார். புகைப்படம், டிஜிட்டல் கேமிரா, கணினி – போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது பற்றி ஒரு முகாம் கிளிநொச்சியில் நடந்தது. அங்கிருந்த சில நாட்களில், இடையில் முல்லைத் தீவிற்குச் சென்று வந்தார். முல்லைத் தீவிலிருந்து முதல் நாளிரவு கிளிநொச்சி திரும்புகிறார். மறுநாள் டிசம்பர் 26 – முல்லைத் தீவுக்குச் சுனாமியாக விடிந்தது. முற்றிலும் நாசமாக்கப்பட்ட முல்லைத் தீவை – உடனே போராளிகள் ஒன்றாய்க் குவிக்கப்பட்டு, ஒரு பத்து நாட்களில் மறுபடி நிர்மாணித்தார்கள் என வியந்து போகிறார்.

அன்று முல்லைத் தீவில் சுனாமி நிகழ்ந்தது. போராளிகள் மீட்டெடுத்தார்கள். இன்று முல்லைத் தீவில் முள்ளிவாய்க்கால் நிகழ்ந்தது. மீட்டெடுக்க, போராளிகள் இல்லை.

சர்வதேசமும் தூங்கிக் கொண்டிருந்தது. மனிதனுக்குள் அடைகாக்கப்பட்ட மனசாட்சி தூங்குவதில்லை. உலகமெல்லாம் கண்மூடித் தூங்குகிற வேளையிலும், ஒரு தூரிகை விழித்துக் கொண்டிருக்கிறது.

- ஓவியர் மருது பற்றி “காலத்தின் திரைச் சீலை” என்ற கவிஞர் அ.வெண்ணிலா தொகுத்து, டிசம்பர் 2013-ல் வெளிவந்த நூலில் இடம்பெற்ற கட்டுரை.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்