நரியின் கருணை

ஓநாய்களின் கூடாரத்திற்கு ஆடுகள் கூட்டம் கூட்டமாய்ப் போவதைக் கண்டு நரிகளின் தலைவன் கவலையடைந்தது. ஆடுகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

இத்தனை நாள் தன்னுடைய சகாக்கள் வெட்டுப்பட்டு, கொல்லப்பட்டு செத்தபோது ஏறெடுத்துப் பார்க்காத கிழட்டு நரி, இப்போது சமாதானத்திற்குக் கூப்பிட்டது ஆடுகளுக்கு ஆச்சரியமா
இருந்தது.

"இனிமேல் நரிகள் ஆடுகளைக் கடிக்கக் கூடாது, ஆடுகளைப் பாதுகாப்பதென நரிகள் சபதம் எடுத்துட்டோம். நரிகளுக்கும் ஆடுகளுக்கும் இடையே சமாதான சகவாழ்வு தொடரும்" நரி சொல்லியது.

நரிகளின் தலைவன் கமண்டலமும் தண்டும் கொண்டு, சாதுவாய் தவம் செய்யப்போனது.

அன்று இரவு, எங்கோ ஒரு ஆட்டுமந்தை கடிபட்டு, குதறப்பட்டு கதறுகிற சத்தம் கேட்டது. ஆடுகளின் சாவு ஓலம் ஒவ்வொரு நாளும் மேலெழுந்தது. வடக்கே, தெற்கே என்று தேசமெங்கும் சாவுக்குரல் கேட்டது.

பைத்தியம் பிடித்தது போல் காட்சியளித்த ஆட்டிடம், அந்த வழியாய் வந்த எருது சொல்லியது,

"யாரிடம் சமாதானம்? அவர்களுக்கான தலைவன் அவர்களால் பாதுகாக்கப்படுகிறவன். அவர்களுக்காக இல்லாமல், வேறு யாருக்காக இருப்பான்? எதிரிகளின் தலைவன் நமக்கு ரட்சகனாய் இருக்க முடியாது. சிங்கத்திடம், நாங்கள் ஒன்றுபட்டு ஜெயித்த கதை தெரியுமா? செய்து பார். ஜெயம் கிட்டும்"

(தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து விலகி, இஸ்லாமிய மதத்தில் பெருவாரியாக சேருவது கண்டு, சங்கராச்சாரியார் கவலை தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார் - செய்தி)

- சூரியதீபன்
- மனஓசை - பிப்ரவரி 1982

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசத்தின் “கரிசலின்‌ இருள்கள்‌” - எஸ்.ராமகிருஷ்ணன்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

சாகாப் பொருளும் அது, சாகடிக்கும் பொருளும் அது!