அவன் வாழ்க்கையில் மயிலாட்டம் இல்லை


மேடைக்கு முன்னால், முக்கியப் பிரமுகர்கள், மனைவிமார்கள்
பிள்ளைகள், அதிகாரிகள், பெரிய மனிதர்கள்

மேடைக்குக் கீழே நையாண்டி மேளம், உறுமி, இரட்டைக் கொட்டு, நாயனம்.

கால்களில் சலங்கைக்கட்டு, பொய்க்காலுக்குச் சலங்கையுண்டோ? சலங்கை கட்டிய காலில் கலை உதிக்கும்.

அது பொய்க்கால் குதிரை. பொய்க்காலில் கலைபிறக்கும் என்பதை அந்த கிராமியக் கலைஞன் நிரூபிக்கிறான்.

பொய்க்கால் குதிரைக்கு இணையாக மயில் ஆடுகிறது. நையாண்டி மேள வாசிப்புக்குத் தக்க மாதிரி காலடி வைப்பு நடக்கிறது. மேடையெங்கும் மின்னல் வேகத்தில் சுற்றிப் பறக்கிறது.

மின்னல் வேகப் பறப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேளக்காரன் திணறிப் போனான்.

கூட்டத்துக்கு உற்சாகமாய் இருந்தது. கிறுகிறுத்துப் போய் நின்றார்கள். பக்கத்திலிருந்த நண்பர் காட்டுகிறார்

"அவன் கால்களைப் பாருங்கள்"

நண்பர் கலையை மட்டுமே காண்பவரில்லை. வாழ்க்கையையும் அவதானிப்பவர்.

அவர் சொன்னது, நிச்சயம் காற்று போன்ற கால்களாக இருக்க முடியாது.

மயிலாட்டக்காரரின் கால்களில் வெடிப்புகள்.

விறுவோடிய வெடிப்புகளில் வாழ்க்கை தெரிந்தது.

"அவன் கைகளை கவனியுங்கள்"

வேலை செய்து காய்ப்பேறிய கைகள் கரடு முரடாய்த் தெரிந்த உழைக்கும் கரங்கள். ஒரு கலைஞனின் மென்மையான கைகள் அல்ல.

நல்லாப் பெருத்து இருக்கிறவனை "சன்னத் தண்டியா இருக்கான்" என்று கேலி செய்வதுண்டு. தண்டியாயும் இல்லாது. சன்னத் தண்டியாயும் இல்லாது, சாகப் போகிறவனின் கைகள் அவை.

மற்ற கலைஞர்களுக்கு இடம்விட்டு களைப்பில் ஒரு மூலையில் தைப்பாறியபோது, நண்பர் சொன்னார்

"அவனுடைய மயில் ஆடையைப் பார்த்தீகளா? நன்றாகப் பாருங்கள். மகளின் பாவாடையை ஒட்டுப் போட்டுத் தைத்து ஆடையாக மாற்றியிருக்கிறான்"

கிழிந்த பாவாடை.

வாழ்வில் களைத்துப் போன அந்த மயிலாடி சொன்னார்.

"எங்க அய்யா (அப்பா) அப்பவே சொன்னார். உனக்கு இந்தத் தொழில் வேண்டாம். என் தலையோடு போகட்டும். நீ பள்ளிக்கூடம் போ. பிழைக்கிற வழியைப் பார்னு"

மயிலாட்ட உடுப்பு அவன் தகப்பனின் தலையோடு போகவில்லை தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் ஆரம்பித்து இவன் தலையில் முடிந்திருப்பதாகச் சொன்னான்.

"இந்தக் காலத்தில் யார் மயிலாட்டம் கோக்கிறாங்க? அந்தக் காலத்தில் ஊர்ல ஒரு விசேசம்னா மயிலாட்டம், பொய்க்கால் குதிரைன்னு தேடுவாங்க. இப்ப எல்லாம் நாகரிகமாகப் போச்சு, ரேடியோ, சினிமா, டான்ஸ், வீடியோன்னு போயிடறாங்க"

விஞ்ஞான வடிவத்தில் வந்திறங்கிய பாறைகள், அப்படியே உருண்டு கிராமியக் கலைகளை எழுந்திருக்க முடியாமல் அழுத்தின. சுமையின் கனம் தாங்காமல் வாழ்வின் கழுத்து 'குன்னி'ப் போன
கலைஞன் அவன்.

"வேறெங்கேயும் போவீங்களா? இப்படியான கலாச்சார விழா வேற மாநிலங்களிலும் நடைபெறுமா?"

"டெல்லி, பம்பாய், ஹைதராபாத் எல்லாம் கூட்டிட்டுப் போவாங்க. எங்களிலேயே வேற வேற பார்ட்டி இருக்கில்ல; சில நேரங்கள்லே மற்றவங்க போவாங்க"

"ஒரு நாளைக்கு எவ்வளவு கொடுப்பாங்க?"

"நிகழ்ச்சி இருந்தா 50 ரூபாய்; இல்லாத நாள்ல்ல 25 ரூபாய்"

வேற்று மாநிலங்களில் தங்கி இருக்கிறபோது இந்த 25 ரூபாயில் செலவு செய்து, மீத்திக் கொண்டு வரவேண்டும்.

தென்னகப் பண்பாட்டு மையம், தூத்துக்குடியில் இந்தக் கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. கொளுத்த பணம் கொண்ட மத்திய அரசு நிறுவனம் நலிந்த கலைஞர்களின் மறுவாழ்வுக்காகச் செய்த ஏற்பாடு! கொளுத்த கூட்டத்துக்கு, கிராமியக் கலைகளைப் பரிமாறும் ஏற்பாடு என்றார் நண்பர்.

கிராமியக் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய இடைத் தரகர்கள் உருவாகிவிட்டார்கள். இந்த மயிலாட்டக்காரன் நேரடியாக நிகழ்ச்சி நடத்துபவர்களைத் தொடமுடியாது. இவர்கள் வழியாக கலை மக்களை அடையவும் தன் வாழ்க்கையைத் தடவிக் கொடுக்கவும் வேண்டும். இடையில் பலித்த மட்டும் லாபம் பார்க்கும் இவர்களை நயந்துதான் கலைஞன் ஆட்டம் நடக்கவேண்டும். நயந்து போகிற கலைஞர்கள் வருடம் முழுவதும் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தார்கள்.

ஊரு விட்டு ஊர்; நாடு விட்டு நாடு போகவும் வேறு மாநிலக் கலைஞர்கள் தங்களுக்கிடையே கலந்து பரிமாறிக் கொள்ளவும் நெருங்கி வரவும் இந்தக் கலைவிழாக்கள் பயன்படுமாம்.

ஒவ்வொரு மாநிலக் கலைஞர்களும் பரிமாறிக் கொள்வது எதை? தங்களுடன் உடன் பிறந்து தங்களுடனேயே வாழும் வறுமையையா? தங்களை அடி உரமாய் வைத்து நிகழ்ச்சியை நடத்துபவர்களும் இடைத் தரகர்களும் நடத்தும் மோசடியையா?

பக்கத்தில் குட்டி மயில் கிடக்கிறது. பசியால் துவண்டு, ஆடிய களைப்பால் சோர்ந்து சுணங்கிப் போய்க் கிடக்கிறது.

"எம் பையன். அவனுக்கு இந்த உடுப்பு வேண்டாம். அவன் பள்ளிக்கூடம் போறான். ஆனா படிப்பு வரலெ"

படிப்பு வராது. இது மாதிரி குடும்பங்களில் வாழ்க்கை படிப்பை விடப் பெரிது.

அவனுக்குப் புளித்துப் போய்விட்டது. இந்த உடுப்பை உடலிலிருந்தும், ஆட்டத்தைக் கால்களிலிருந்தும் கழற்றி எறிந்துவிட்டுப் போய்விட நினைக்கிறான்.

ஆனால் வாழ்க்கை அவனை விடப் பெரிது.

- தெக்கத்தி ஆத்மாக்கள் (1999)   VamsiVikatanநூல் உலகம்NHMUdumalaiMarina BooksCommon Folksபனுவல்Namma Books

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்