ஊரடங்கு


மூலம்: ஒரியா, ஜெயந்த் கே.பிஸ்வாஸ்
ஆங்கில வழி தமிழில்: சூரியதீபன்

அபிநேஷ் சன்னல்களை கவனமாக ஓரஞ்சாய்த்துத் திறந்து சிறு இடைவெளி வழியே வெளியே நோட்டம்விட்டான். துப்பாக்கி சுமந்து திரிந்த போலீஸ்காரர்களைத் தவிர சாலையில் நடமாட்டம் இல்லை. கறுத்த இரவில் சிதையில் எரியும் நெருப்பு போல் ரோட்டின் மீது, பெரிய 'சோடியம் வேப்பர்' லைட் பளபளத்தது.

ஒரே ஒரு கணம்தான். சன்னலை மூடிவிட்டான். ஆழ்ந்து சுவாசித்து, மனைவியிடம் சத்தமில்லாத குரலில் சொன்னான் "சுகுணா, நிலைமை ரொம்ப மோசம்; ஊரடங்கு சாட்டி மூணு நாளாகிறது. ஒரு முன்னேற்றமும் இல்லே. எப்பவேன்னாலும் மறுபடி கலவரம் வெடிக்கலாம். மறந்திராதே. சாயந்திரம் ஆவதற்கு முன்னே, கதவு சன்னலையெல்லாம் மூடி, வெளக்கை அணைச்சிரு; பாபுவை வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல். நிலைமையை நெனைச்சா குலை நடுக்கமாகுது"

சமயலறையிலிருந்து வெளியே வந்தாள் சுகுணா. கவலையுடன் கேட்டாள் "இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த ஊரடங்கு? மிருகங்கள் மாதிரி, பயந்து போய் எத்தனை நாளைக்கு உள்ளேயே இருக்கிறது? காய்கறிகூட வாங்க முடியல”.

சிறிது நம்பிக்கையான குரலில் அபிநேஷ் சொன்னான் "கொஞ்சம் பொறுத்துக்கோ. மாணவர்கள்லே கொஞ்சப் பேரை போலிஸ் லாக்-கப்பிலே வச்சி செமத்தியா கொடுத்தா, எல்லாம் சரியாயிருவங்க"

"லாக்கப்பிலே அடைக்கிறதா? துள்ளத் துடிக்க மாணவர்களை இரத்த வெள்ளத்தில் இந்தப் போலீஸ் சாகடித்தபோது யாரும் எதிர்த்து ஒரு வார்த்தை பேச வக்கில்லை. அந்த கொடுமைக்கு எதிராய் இப்போ மாணவர்களே குரல்கொடுத்தால், ஜெயிலில் தள்ளுவார்களா? அடிப்பார்களா? என்ன பேச்சு இது" சுகுணா எதிர்த்தாள்.

"ஸ், சத்தமாய்ப் பேசாதே, சத்தமாய்ப் பேசாதே" அபிநேஷ் நடுங்கினான்.

ஏன் சத்தம் போடறே? சி.ஐ.டி.க்கள் எங்கும் திரிகிறார்கள். நீ பேசுவது மட்டும், அவர்கள் காதுகளில் பட்டதோ பெறகு 'கோரா பேட்டுக்கோ, புல்பானிக்கோ' பயணம் போகத் தயாராயிரு".

ஏன், டிரான்ஸ்பர், டிரான்ஸ்பர்ன்ன கெடந்து பயப்படுறீங்க, அப்படித்தான் ஆயிட்டுப் போகுது. எழவெடுத்த டிரான்ஸ்பருக்காக எந்நேரமும், வாயை மூடிக்கிட்டு, இதயத்தைப் பொத்தி
வச்சிட்டே இருக்க முடியுமா?" சுகுணா எரிச்சலடைந்தாள்.

வேதாந்தம் பேசாதே, 'மாறுதல்'ன்னா உன் தங்கச்சி வீட்டுக்கு போய் வருகிற மாதிரின்னு நெனைச்சியா? ஃபிரிட்ஜ், டி.வி., பீரோ, நாற்காலி, கட்டில், நாலு ஜெர்சி பசு எத்தனை சாமான்களை தூக்கிட்டுப் போக வேண்டியிருக்கும்? நீ அங்கே கால்மிதித்தவுடன் அஞ்சு அறையுள்ள குவார்ட்டர்ஸ், அதுவும் மார்க்கெட்டுக்குப் பக்கத்திலேயே கெடைக்குமா? முதலில் கோராபேட்டில் ரெண்டு அறை உள்ள வீட்டையாவது நீ கனவுகாண முடியுமா?"

"கோராபேட்டுக்கும் மாறுதலில் போகாமலா இருக்கிறார்கள்"

"மற்றவர்களைப் பத்தி நமக்கு என்ன கவலை? அசையாம ஆணியடிச்சது போல் இந்த நகரத்தில் உக்கார்ந்திருக்கிறவர்கள் அவர்களை விட அதிகம். ஒரு நிமிடம் யோசித்துப் பார் சுகுணா இந்த இடத்தை விட்டு நகர்ந்தால், இப்ப நாம கட்டிக்கிட்டிருக்கிற வீடு என்ன ஆகும்? அதோகதிதான். தேர்வுத் தாள்கள் திருத்துவதால் அப்பப்போ வருகிற கூடுதல் வருமானம் இல்லாமப் போகும். இங்கே பதிப்பகத்துக்காரங்களை சந்திக்க முடிவதால், கவிதை நூல்கள் வெளியிட முடிகிறது. ராயல்டியும் வருகிறது. கோராபேட் அல்லது புல்பானின்னு ஒன்னுமத்த பட்டிக்காட்டுக்குப் போனா
இந்த வசதிகளெல்லாம் வருமா?"

"இந்த எழவுகளெல்லாம் யாருக்கு வேணும். ஒன்றுமறியாத பிள்ளைகளை, மிருகங்களைப் போல் கொன்று குவிக்கிறாங்க அதைக் கேக்க நாதியில்லே"

"அப்பாவிகளா? யாரு, மாணவர்களா? இந்த மாதிரிப் பையன்களை சுட்டு சாம்பலாக்கணும். நீ கல்லூரிக்குப் போய்ப் பார். அப்போது தெரியும். ஏன், தெரியாத விசயத்திலே தலையை நீட்டறே? இந்த மாணவர்களுக்கு இது வேண்டியதுதான்"

சுகுணா அழுதுவிடுபவள் போல், கத்தினாள். "ஏன், கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமப் பேசறீங்க? கொன்னு போடப்பட்ட, அந்தப் பிள்ளைகளோட அப்பா, அம்மாவை நெனைச்சுப் பாருங்க. ஒங்களுக்கு உணர்ச்சியே இல்லையா?"

மெளனம். அபிநேஷ் தனக்குத்தோனே பேசிக்கொண்ட அந்த சோகங்கள் அவனை உலுக்கவில்லையா? போலீஸ்காரர்களும், குண்டர்களும் நடத்தியது பச்சைப் படுகொலை என்பது தெரியாதா? தெரியும். மனத் தெரியம் இல்லை. எதிர்த்துச் சொன்னால், அவனுடைய ரகசியப் பதிவேடு குதறப்படும். இல்லாத குற்றச்சாட்டுகள் அதில் ஏறும். நாளையே அவனுக்கு மாறுதல்
வரும். இந்த நகரத்தை விட்டு அவன் போனால், பிறகு அவனா மீண்டும் வர முடியாது.

சுய நலன்களுக்காக மனதுக்குள் இப்படி சமாதானம் பூசிக் கொண்டான். "அவர்கள் செய்ததுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? இந்த தண்டனை சரிதான். அவர்கள் செத்தால் எனக்கென்ன?"

சுகுணா கேட்டாள் "கல்லூரி மாணவர்கள் நிதி திரட்டுவதற்காக வந்திருந்தார்களே, கொடுத்தீங்களா?"

"ஹ்ஹா, ஹா," அபிநேஷ் பெரிதாய்ச் சிரித்தான். "கொடுக்காமல் விடுவேனா. ஆனால் ரசீதுப் புத்தகத்தில் என் பெயரைப் போட வேண்டாம் என்று சொல்லி விட்டேன். வேறு ஏதாவது பெயரைப் போட்டுக் கொள்ளுங்கள் என்றேன். 'நீ அதிலும் இருக்க வேண்டும்! இதிலும் இருக்க வேண்டும், ஆனால் எதிலும் இருக்கக் கூடாது' இதுதான் நம்ம கொள்கை. ஒரு அரசாங்க ஊழியனுக்கு அரசாங்கத்தை எதிர்த்துப் பேச என்ன உரிமை இருக்கிறது?"

அப்படியானால் அரசாங்கம் என்ன நினைத்தாலும் செய்யலாம். அதைக் கண்டும் கயவாளிகள் போல் நாம் போசாமலிருக்க வேண்டும்"

கயவாளிகள்? உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்பவர்கள். இது அபிநேஷின் 'ஈகோ'வைச் சுட்டது. அவன் உடனே கோபம் கொண்டான்.

"போலீஸ்காரர்கள், கண்களில் லென்ஸ் மாட்டிக் கொண்டு இவரிவர்கள் அப்பாவிகள் என்று பொறுக்கியெடுத்து, துப்பாக்கி விசையைத் தட்டவில்லை. இந்தக் காலத்தில் ஜனங்களுக்கு ரொம்பத்தான் திமிராகி விட்டது. போலீஸ்காரர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள்."

அவர் சொன்னதில் எதுவுமே உண்மை இல்லை என்பது அவனுக்குத் தெரியும். நிகழும் கொடுமைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும்படி, ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், படிப்பாளிகளுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு செய்தி வெளியானது.

அவர்கள் அவனிடமும் வந்தார்கள். ஒரு அரசு ஊழியன் என்ற வகையில், அரசுக்கு எதிரான அறிக்கையில் கையெழுத்திட அவன் மறுத்து விட்டான். ஒரு கவிஞன் என்ற முறையில் கையெழுத்திடலாமே? கவிஞர்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். இத்தகைய சிக்கல்களில் அவர்கள் மாட்டிக் கொள்ள முடியாது. அவன் சொன்ன பதில், எவ்வளவு பரிதாபமாய், அவனுக்கே அந்நியமாய் ஒலித்தது என்பதை அவனே புரிந்து கொள்ள முடிந்தது.

நாளை கல்லூரியில், ஆசிரியர் சங்கக் கூட்டம். கொல்லப்பட்ட மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானமும், போலீஸின் நரவேட்டையைக் கண்டித்து கண்டனத் தீர்மானமும், சில இளம் ஆசிரியர்கள் கொண்டு வர இருக்கிறார்கள். கல்லூரி முதல்வர் எச்சரித்து விட்டார்; அப்படியொரு நடவடிக்கையில் பங்கு கொள்வது, இறந்து போன மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவது கூட, அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதுதான். அதனுடைய தொடர் விளைவுகள் கடுமையாயிருக்கும் என்று சொல்லி விட்டார்.

நாளைக்கு ஆசிரியர் சங்கத்தில் பூகம்பம் தான் வெடிக்கப் போகிறது. ஆசிரியர் சங்கம் நாசமாய்ப் போக! அபிநேஷ் முணு முணுத்தான். சில பேர் இறந்து போய்விட்டார்கள்; நடந்தது நடந்து போய் விட்டது. சில இளம் அசிரியர்களைப் போல் உணர்ச்சி வசப்பட அவன் முட்டாளல்ல. மாணவர்கள் மாண்டு போனார்கள்; அவர்கள் என்ன விதைத்தார்களோ, அதை அறுவடை செய்தார்கள், அதற்கு நாம் ஏன் வருத்தப்பட வேண்டும்? எதிர்க்க என்ன இருக்கிறது?

2


ஆசிரியர் சங்கக்கூட்டம் முடிந்து வருகிறபோது, மாலையாகியிருந்தது. ஒரு மணி நேரத்தில் நகரத்தில் மறுபடி ஊரடங்கு அமுலுக்கு வந்து விடும். வேகமாக நடந்தான். வாழ்நாளில் அவன் கால்களுக்கு அப்படியொரு இயந்திரம் பொருத்தப்பட்டதில்லை. போனவுடன் கதவுகளையும், ஜன்னல்களையும் அடைத்தான்.

"ஊரடங்கு நேரம் நெருங்குகிறது; வீடுகளுக்குள்ளேயே இருங்கள்" போலீஸ் ஜீப்புகள் அலறின.

கல்லூரியில் சொன்னார்கள், நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று துப்பாக்கிச்சூடு நடந்ததாம். இரண்டு, மூன்று மாணவர்கள் இறந்துவிட்டார்கள். நகரத்தின் ஒவ்வொரு மூலையும் எரிமலை
ஊற்றாகியிருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

மெல்ல மெல்ல இருள் கவிகிறபோதே வன்முறையும் ஆரம்பமாகும். எது நடந்தாலும் அவனுடைய வீடு பாதுகாப்பாயிருந்தது காரணம் முக்கியமான வீதியில் இருந்தது.

பெருமூச்சுகள் மேலெந்தன; கவலை இருள் முகத்தில் கவிந்தது அறைக்குள் தனியே உட்கார்ந்தான். இந்த உலகத்தை மறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். சில பத்திரிகைகளின் தீபாவளி மலர்களுக்காக கவிதைகள் எழுத அவன் அமைதியாய் கற்பனையை ஓட்டமுடியும்.

சுகுணாவை 'டீ' கொண்டு வரச் சொன்னான். காலையில் எழுதத் தொடங்கி, முடிக்கப்படாமலிருந்த கவிதை வரிகளை நோக்கினான்.

கவிதைத்தொகுதி வந்தவுடன், சாகித்ய அகாதமிக்கு இந்த ஆண்டிற்கான பரிசைத் தட்டி வருவதற்காக அனுப்பி வைக்க வேண்டும்.

சில வரிகளே எழுதி முடித்தபோது டீ கொண்டுவந்து சுகுணா சொன்னாள் "பாபு இன்னும் வரவில்லை. சாயந்தரம் ஆகப் போகிறது"

அதிர்ச்சியால் அபிநேஷ் பின்னுக்கிழுத்தான். ஊரடங்கு ஆரம்பமாகப் போகிறது. பாபு இன்னும் வரவில்லை.

சுகுணாவின் கண்களில் நீர் பனித்தது "தயவு செய்து உடனே அவனைத் தேடுங்கள். இருட்டுகிற நேரமாகி விட்டது. அவன் எங்கே இருக்கிறான், கடவுளே"

மனைவியின் துயரம் தோய்ந்த முகத்தை அபிநேஷ் கண்டான். வானம் முழுவதையும் மூடியிருந்த கவலை மேகங்கள், அவனுடைய முகத்தையும் மூடின. வியர்வைப் பொட்டுகள்; நடுக்கம். கொஞ்ச நேரம் கழித்து, சன்னல் கதவுகளை ஒருச்சாய்த்துத் திறந்தான்.

அவனால் நம்ப முடியவில்லை. கண் முன்னால் விரிந்த சாலை, சாலை முழுதும் மக்கள் கடல் விரிந்து அணி வகுத்துக் கிடந்தது. ஒரு பக்கம் மக்களின் அணி; மற்றொருபுறம், ஹெல்மட் அணிந்த, கவசம் சூடிய, துப்பாக்கி ஏந்திய போலீஸ், ஜீப்புகள், லாரிகள்.

அபிநேஷ் வீட்டிற்குள் நுழைந்த அரை மணி நேரத்திற்குள் இவ்வளவும் நடந்திருக்கிறது. தார்ச்சாலைகளில் கரகர வென்ற லாடம் அடித்த பூட்ஸ் காலடிகளின் சத்தத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அமைதி. கறுத்த கடலின் நடுவில் சேகரம் ஆகிற, ஒரு பயங்கரப் புயலுக்கு முன் நிலவுகிற அமைதி.

அய்ந்தே நிமிடங்கள். கலைந்து போங்கள்" போலீஸ் வேன் அலறியது.

மக்கள் அசையாமல் நின்றார்கள். அவர்களின் அடி வைப்பு உறுதியாக இருந்தது. ஹெல்மேட் பூண்ட, கவசம் சூடிய, துப்பாக்கி கழற்றிய போலீஸ் குறி பார்க்க நிலை செய்தார்கள். ஒரு பூகம்ப வெடிப்புக்கான அமைதி.

சுகுணா இரு கைகளையும் விரித்தபடி கத்தினாள். "ஐயோ எம் பிள்ளை"

அவன் சாலையைக் காட்டியபடி கூக்குரலிட்டாள் "ஐயோ நம்ம பாபு, பாபு" - கணவனின் கைகளைப் பிடித்தபடி, கதறினாள் "ஐயோ, நம்ம பாபுவைக் காப்பாத்துங்களேன்"

அவள் குரல் போன திசையில், அபிநேஷ் பிரம்மத்தியடித்துப் போனான். மக்கள் கூட்டத்தின் முன் வரிசையில் நின்று கொண்ருந்தான் பாபு. அவனுடன் அவனைப் போலவே இளைஞர்கள் தோள் மேல் தோள் போட்டபடி; உன்னதமான முழக்கங்களை இசைத்தபடி; உறுதியாக அடி வைத்தபடி.

அபிநேஷ் உறைந்து, கல் மாதிரி நின்றான். சுகுணா, அவனுடைய காலடிகளில் விழுந்தாள்; கெஞ்சுதலுடன் கூச்சலிட்டாள் "ஐயோ, என் பிள்ளையைக் காப்பாத்துங்களேன்"

சாலையைப் பார்த்தவாறு, அபிநேஷ் முணுமுணுத்தான் "நான் எப்படி அங்கே போகமுடியும் போலீஸ்.."

சுகுணாவின் கேவல்கள் வெடித்தன. இன்னும் அபிநேஷ் உறைந்துபோய் நின்றான்.

"இரண்டே நிமிடங்களில் கலைந்து போங்கள்" போலிஸ் ஒலிபெருக்கி அலறியது.

மக்கள் எதிர்த்து நின்றார்கள். போலீஸ் அதிகாரி கைக்கடி காரத்தைப் பார்த்தபடி, நேரத்தைக் கணக்கிட்டான்.

உணர்ச்சித்துடிப்பில் தன்னை மறந்தவனாய் கதவுகளைப் பிளந்து கொண்டு அபிநேஷ் முன்னே ஓடினான். காலில் செருப்பில்லாமல், கைகளில் எழுதிய கவிதைத் தாள்களுடன்.

ஓட்டமாய் போலீஸ் வளையத்தை நெருங்கினான். இரண்டு மூன்று கற்கள் பறந்தன. போலீஸ் அதிகாரி, கைகளை மார்புக்கு நேரே நீட்டி, கட்டளையிட்டான் "தாக்கு".

போலீஸ்படை லத்திகளைப் பறக்கவிட்டது. மக்களின் ஓட்டமும், தாக்குதலும், கீழே விழுதலும், வலியும், வேதனையும்.

அமைதியான மாலை, வேதனையின் தீனக்குரல்களால் நிறைந்தது. தார்ச்சாலையில் அடிபட்டு நொறுங்கி மாணவர்கள் வலியால் துடித்துக் கொண்டிருந்தார்கள். கால்கள் உடைந்து, கைகள் முறிந்து, மண்டைகள் சிதறி, தசைகள் சிதைந்து, எங்கும் தீனக்குரல்.

ஒரு போலீஸ்காரனின் ஓங்கிய தடியின் தாக்குதலில் பாபு விழுந்து கொண்டிருந்ததை, தன் கண் முன்னால் பார்த்தான்.

"ஐயோ, என் மகன்"

போலீஸ் வளையத்தை தகர்த்துக்கொண்டு ஓடிய அபிநேஷின் மேல், ஒரு போலீஸ்காரனின் இரும்புப்பிடிகள் விழுந்தன.

"என்னடா?"

"என் மகன் பாபு, அங்கே கீழே..."

போலீஸ்காரன் உரக்க, அரக்கனைப் போல் சிரித்தான்.

"தேவடியா மகனே! மகன் மேல் பாசத்தைக் கொட்டிக் காட்டவா வந்தாய்? அப்படியன்றால், அந்த ராஸ்கல் இங்கே ஏனடா வந்தான்?"

அபிநேஷ் மறுபடியும் பிரம்மித்தியடித்துப் போனான். அவனுடைய கண் முன்னால், ரத்த வெள்ளத்தில் பாபு முனகிக் கொண்டிருக்கிறான்.

அபிநேஷின் நடுங்கிய கைகளில், வெடவெடவென்று ஆடும் தாள்களைக் காட்டியபடி, மற்றொரு போலீஸ்காரன் கேட்டான் "என்னடா இது?"

அபினேஷின் வாய் வார்த்தைகளைக் கடித்தது "இது... இது... நான் எழுதிய கவிதை"

பிறகு அவன் இறைஞ்சினான் "என்னை என் மகனிடம் போக விடுங்கள்"

போலீஸ்காரன் வேகமாக, அவன் கைகளிலிருக்கும் தாள்களைப் பிடுங்கினான். "கிழட்டுப் பயலே, வாழ்த்துப் பா படிக்கவா வந்தாய்? வாழ்த்தி பிரசுரம் விநியோகிக்கிறாயா, பிரசுரம்"

பிறகு, தன் சகாக்ளை நோக்கி போலீஸ்காரன் சொன்னான் "இவனைத் தூக்கி லாரியில் எறியுங்கள். போலீஸ் லாக்கப்பில் ஒரு ராத்திரி, அவனுக்கு பிரசுரம் என்றால் என்ன என்பதைச் சொல்லிக் கொடுக்கும்."

சில அடி தூரங்களில், கறுத்த தார்ச்சாலையில், கண்மறையும் நிழல் போல், அவனுடைய சொந்த மகன், மரண வேதனையில் ஊர்ந்து துடிப்பதை, அவன் கண்டான்.

- மனஓசை, டிசம்பர் 1988

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்