"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை


ஜனங்களாக. வனங்களைக் காக்கிறோம், புலிகளைக் காக்கிறோம், சந்தனமரங்களை, செம்மரங்களைக் காக்கிறோம் என்னும் போர்வையில் அரசு இயந்திரங்கள். இந்தியாவின் பாவப்பட்ட இவர்கள் மீது நடத்தும் அட்டூழியங்களை நாம் அறிவோம். வாச்சாத்தியில் இது அப்பட்டமாக நடந்தது. மலைகளில் கிடக்கும் அதன் விளைபொருட்களைச் சேகரித்து விற்பனைக்குக் கொண்டு செல்லும் மலைவாழ் மக்களின் மீது அவ்வப்போது வனத்துறை நடத்தும் தாக்குதல்களும், அதிலிருந்து அம்மக்கள் மீண்டு வருவதும் இயல்பானவைகள். பெரும்பாலும் சாட்சியமற்றவைகளாக நடத்தப்படும் இத்தாக்குதல்களிலிருந்து வனத்துறையினரும், போலீசாரும் மிக எளிதில் தப்பித்துச் செல்கின்றனர். 

பொன்னேரி என்னும் மலைக் கிராமத்தின் சண்முகமயிலுக்கு வனத்துறையினரால் நேர்ந்த கொடுமையும் (கற்பழிப்பு), நீதிமன்றத்தில் சண்முகமயிலை நோக்கிய நீதிபதியின் அறமற்ற, இயற்கைக்கு மாறான கேள்விகளும், நேரடி சாட்சியங்கள் இல்லாமையால் குற்றவாளிகள் இறுதியில் விடுவிக்கப்பட்டமையுமான காட்சிகளை மிகவும் அற்புதமாக தனது எழுத்தில் தனக்கேயுரிய பாணியில் வடித்திருப்பார் பா.செயப்பிரகாசம். கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி தருகிறேன் என்று நீதிமன்றம் அழைத்து வந்தால் அங்கே அவள் விசாரணை என்னும் பெயரால் இன்னுமொருமுறை கற்பழிக்கப்படுவாள். "கற்பழிக்கிறதுன்னா என்ன?" என்ற சண்முகமயிலை நோக்கிய நிதிபதியின் கேள்விகள் வஞ்சகத்தன்மையுடன் இருப்பதை கதை நமக்கு உணர்த்துகிறது. மலைசாதி மக்களின் இயல்புத்தன்மையை, அவர்களது இயற்கை விருப்பை, அவர்களது அப்பாவித்தன்மையை கதையின் ஊடாக நம்மிடம் தெளித்துச் செல்கிறார் பா.செயப்பிரகாசம். "தாயின் கர்ப்பத்தில் இருக்கிறபோதே அவர்களுக்கு மலை ஏறுவது சொல்லித் தரப்பட்டது. தாயின் கர்ப்பத்தில் அவர்கள் மேலும், கீழும் தூக்கி எறியப்பட்டார்கள். பிறந்த பிறகுதான் அது அவர்கள் கர்ப்பத்தில் இருக்கிறபோது தாய் மலை ஏறி இறங்கும்போது ஏற்பட்ட அதிர்வு என்பதைப் புரிந்து கொண்டார்கள்" என்ற வரிகளைப் படிக்கிறபோது மலைசாதிப் பெண்களின் வாழ்வில் மலையும், அது ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இயற்கைத் தடைகளையும், அதையும் மீறிய அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

வேலியினால் மேயப்பட்ட பயிரைக் காப்பாற்ற வரும் வசந்த மழைத்துளியைப் போல சண்முகமயிலுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறான் மலைசாதி இளைஞன் மலையன். சண்முகமயில் வனத்துறையினரால் சிதைக்கப்பட்டபோது அவளைக் காப்பாற்றியவர்கள் அவளின் அக்காவும், மலையனும்தான். மலையன் சண்முகமயிலை கல்யாணம் செய்துகொள்ளப்போகிறான் என்றதும் அவனை நாகரிகக்கூட்டம் வியப்புடன் நோக்கியது. கற்பிழந்தவளைத் திருமணம் செய்துகொள்ள இவன் பைத்தியக்காரனா என்னும் ஆச்சரியங்களும் அங்கே எழுகின்றன. ஆதி இனக்குழுச் சமுதாயத்தின் கடைசி எச்ச சொச்சங்களாக விளங்கும் மலைசாதி சனங்களின் வாழ்க்கை முடிச்சுகளை அவிழ்த்துப் பார்க்க முயலும் நாகரிகக் கூட்டத்திற்கு எதுவும் விளங்கப் போவதில்லை. வீரப்பன் வேட்டை முதல் வாச்சாத்தி வழி பசுமை வேட்டை வரை அரசின் கண்டுகொள்ளப்போவதில்லை என்பதை கதையின் கீழ்கண்டரிகள் இயந்திரங்கள் மலைவாழ் மக்களின் மீது நடத்தும் கொடும் வேட்டையை எந்த நீதிமன்றமும் பச்சையாக உணர்த்திவிடுகிறது.

செ.சண்முகசுந்தரம்
எழுத்தாளர், தஞ்சை இலக்கிய வட்டம்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசத்தின் “கரிசலின்‌ இருள்கள்‌” - எஸ்.ராமகிருஷ்ணன்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

சாகாப் பொருளும் அது, சாகடிக்கும் பொருளும் அது!