கொரோனா காட்டும் மாற்றுப் பாதை

பகிர் / Share:

1 வாழ்க்கையை வளப்படுத்தவென்று ஆதிகாலம் தொட்டு காடழித்தோம்; கானுறை உயிர்கள் அழித்தோம்; மலைகள், நதிகளென இயற்கையின் சிதைத்தோம். இந்த வகைச...

1

வாழ்க்கையை வளப்படுத்தவென்று ஆதிகாலம் தொட்டு காடழித்தோம்; கானுறை உயிர்கள் அழித்தோம்; மலைகள், நதிகளென இயற்கையின் சிதைத்தோம். இந்த வகைச் செய்வினைகளின் மேல் ’ஜம்மென்று’ வாழ்க்கையை நடத்தி விட நினைத்த வேளையில், வினைக்கும் வினையாய், இறுதி வினையாய் நம் நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. உலகத்தில் பாதியைச் சப்பி முடித்து விட்டு நான் ஓய்வேனென ’நட்டுக்க’ நிற்கிறது.

1918-ல் உலகயுத்தத்துடன் பிறந்த ஸ்பானிஷ் ஃபுளூ விசக்காய்ச்சல் முதலாக இன்றைய கொரோனோ வரையான தொற்றுகள் மனித குலத்தின் கன்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுகின்றன. காய்ச்சல், கொடுங்காய்ச்சல் (ஜன்னி), விசக் காயச்சல் என்ற சொற்காளால் மக்கள் அனுபவத்தில் அறிந்திருக்கிறவை ஏராளம். ஆனால் மலேரியா, பிளேக், டெங்கு, லெப்டொ பைரசி, பன்றிக் காய்ச்சல், மூளைக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் வரிசையின் உச்சத்தில் ’நம்பர் ஒன்’ னான கொரோனா இதுவரை உலகு அறியாதது.

உடலுக்குள் எவ்வளவு நோயெதிர்ப்பு ஆற்றல் வேர் கொண்டிருப்பினும், அத்தனை நோயெதிர்ப்பு ஆற்றலையும் ஒன்றுமில்லாமல் தின்று தீர்க்கின்றது இந்த ’உயிர்திண்ணி’! இந்த வகை நோய்களின்’ மூலம் எது, இவைகளினை உற்பத்தி செய்தது யார்? அந்த பயங்கரத்தைக் கண்டறிய ரொம்ப தூரம் அறிவுலகப் பயணம் தேவையில்லை. முதலாளிய உற்பத்திமுறையும், அதன் லாப வேட்டை உண்டு பண்ணிய நுகர்வுலகும் தான் அந்த பயங்கர ரகசியம். இயற்கையை பயன்படுத்துவதற்குப் பதிலாக இயற்கை அழிப்பு, பருவநிலை சிதைப்பு, சூழல் கேடு, புவி வெப்பமயமாக்கல், என ஒன்னொன்னாய் சாகடிக்கும் இந்த லாப வேட்டைக் கூத்தாடிகள் தான் எல்லா நோய்த்தொற்றும் உருவாகிறதுக்கு காரணகர்த்தாக்கள்.


செவ்விந்திய தலைவர் சியால்த் மார்க்சியர் அல்லர். மார்க்சியம் அறிந்தவரும் அல்லர். அவர்வாழ்காலத்தில் மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வடிவாக்கிக் கொண்டிருந்தனர். 1848-இல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கை உலகப் பரப்பின் மீது விவாதத் தடங்களை உருவாக்க குறைந்தது பத்திருபது ஆண்டுகள் எடுத்திருக்கும். அக்காலத்தில் அமெரிக்க பூர்வீகக் குடிகளின் அடையாளமாக வந்து கொண்டிருந்த சியால்த், சமூக விஞ்ஞானம் பற்றி அறிந்திராத போதும், உலக ஞானம் கொண்டிருந்தார்.
“என் மக்களை
எந்தப் பேய் மழையானாலும்
நனைய விடக்கூடாது
எப்பேர்பட்ட வெயிலானாலும்
காய விடக்கூடாது”
என்னும் சமுதாயப்பார்வை அவர் இதயமாக இருந்தது. ’நாடு திண்ணிகளின்’ தலைமையாக உருவெடுத்திருந்தது அமெரிக்கா. அதன் குடியரசுத் தலைவன் பிராங்க்ளின் பியர்ஸ் 1854-இல், ’பெரியதொரு சிவப்பிந்திய நிலப்பகுதியை’ விலைக்குவாங்க ஆசைப்பட்டு சியால்த்துக்கு கடிதம் எழுதினான். குடியேற்றங்களை குறிக்கோளாகக் கொண்டு யுத்தங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்த காலனி ஆதிக்க வல்லரசுகளுக்கும் சேர்த்து சியால்த் மறுமொழி அளித்தார். அந்த மறுமொழி ஒரு மானுடப் பிரகடனம். அது சிறந்த கவிதையினும் மேலானது.
”நாங்கள் அதனை அறிவோம்,
பூமி மனிதனுக்கு சொந்தமில்லை; மனிதன் தான் பூமிக்கு சொந்தம்.
அதனை நாங்கள் அறிவோம்,
பூமிக்கு மேலே நேர்வதெல்லாம் பூமியின் மனிதர்களுக்கும் நேரும்.
அதனை நாங்கள் அறிவோம்,
இயற்கையாகிய வலையை மனிதன் பின்னவில்லை;
அவன் அதில் ஒரு இழை.
இயற்கைக்கு என்ன செய்கிறானோ அதை தனக்கும் செய்து கொள்கிறான்”
இங்கு மனிதன் இயற்கையின் ஒரு பகுதி என சியால்த் வலியுறுத்துவது போல, மார்க்ஸ் கூறுகிறார்:
“ஒரு முழுமையான சமூகமோ ஒரு நாடோ அல்லது ஒரே சமயத்தில் நிலவுகின்ற அனைத்து சமூகங்களின் ஒட்டுமொத்தமோ புவியின் உடைமையாளர்கள் அல்ல. அவர்கள் வெறுமனே புவியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், அதனால் பயனடைபவர்கள். அவர்கள் நல்ல குடும்பத் தலைவர்களைப் போல மேம்படுத்தப் பட்ட நிலையில் அதை அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்ல வேண்டும்”

ஒரு கனிமரத்தை வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்லும் பொறுப்புள்ள ஒரு குடும்பத் தலைவனாய் முதலாளியப் பொருளியல் உற்பத்திமுறை அல்லது முதலாளியப் பொருளியலாளர்கள் செயலாற்றுகிறதை எங்கேனும் பூமிப் பந்தின் மேல் காணமுடியுமா? அந்த அமெரிக்க குடியரசின் அதிபனான பிராங்க்ளின் பியர்ஸ் தான் செயல்படுத்தினானா? சொந்தத் தொந்தியை ஊத்தம் கொள்ள வைப்பதற்காக எந்தக் கொடூரங்களையும் இயற்கை மேல் நிகழ்த்தி, எல்லாப் பரிதாபங்களையும் எல்லையில்லாத் தொல்லைகளையும் மக்கள் கூட்டத்தை சுமக்கவைத்துச் செல்கிற விட்டேற்றிகளான இவர்கள் புதிய உலகை ஆக்கவுமில்லை. பழைய உலகைக் காக்கவுமில்லை.

”இயற்கையே மனிதனின் உடலாக இல்லாவிட்டாலும், இயற்கை மனிதனின் அனங்க (மறைமுக) உடலாக உள்ளது. மனிதன் இயற்கையினால் வாழ்கிறான் - அதாவது இயற்கை அவனது உடல். அவன் இறக்காமலிருக்க வேண்டுமென்றால் அதனுடன் தொடர்ந்த பரிமாற்றத்தில் இருக்கவேண்டும். மனிதனின் உடல் மற்றும் ஆன்மீக வாழ்வு இயற்கையுடன் இணைந்தது. ஏனெனில் மனிதன் இயற்கையின் ஒரு பகுதி”
(மார்க்ஸ் - பொருளாதாரம் மற்றும் தத்துவக் குறிப்புகள்: பக்கம் 72-23)

ஏங்கெலஸ் இயற்கையுடன் மனிதன் உறவு பற்றிக் கூறுகிறார்:
”இயற்கையின் மீது நாம் பெற்ற வெற்றியைப்பற்றி தம்பட்டமடித்துக் கொள்ளக் கூடாது. அத்தகைய ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்கியுள்ளது. ஒவ்வொரு வெற்றியும் ஆரம்பத்தில் நாம் எதிர்பார்த்த பயனைத் தரக்கூடியதாகவே உள்ளது. ஆனால் அடுத்தடுத்து நாம் எதிர்பாராத நிகழ்ச்சிகளினால், முதலில் கிடைத்த பயன் கிடைக்காமல் போய்விடுகிறது. மெசபொடோமியா, கிரீஸ், ஆசியா மைனர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்வதற்காக வளங்களை அழித்தார்கள். அவ்வாறு செய்யும்போது அதனோடு சேர்த்து அவர்கள் நீர் ஆதாரங்களையும் அழித்தார்கள் என்பதையும், அந்த நாடுகளின் இன்றைய கவலைக்கிடமான நிலைக்கு வழிவகுத்தார்கள் என்பதையும் அவர்கள் அறியவில்லை.

“இத்தாலியர்கள் ஆல்ப்ஸ் மலையின் தென் சரிவுகளில் ஃபைன் மரக் காடுகளை அழித்தபோது, அவர்கள் அப்குதியில் பால் பண்ணைத் தொழிலின் ஆணிவேரை அறுத்தார்கள் என்பதை அறியவில்லை. மலைச்சுனைகளில் உள்ளநீர் வற்றிவிடும் என்பதை அறியவில்லை. மழைக்காலங்களில் சமவெளிகளில் கடுமையான மழைக்கு ஆளாவார்கள் என்பதை அறியவில்லை. அய்ரோப்பாவில் உருளைக் கிழங்கு பயிரிடுதலைப் பரப்பியவர்கள் ’கண்டமாலை’ என்னும் நோயையும் பரப்பினார்கள் என்பதை அறியவில்லை. இவ்வாறு ஒவ்வொரு நடவடிக்கையிலும் நமக்கு நினைவூட்டப்படுவது நாம் அந்நிய நாட்டு மக்களை வென்றவரைப் போலவோ, இயற்கைக்கு வெளியே நிற்கும் ஒருவரைப் போலவோ இயற்கையை ஆள முடியாது. நாம் தசையாலும் இரத்தத்தாலும் மூளையாலும் இயற்கையைச் சார்ந்தவர்கள். நாம் அதன் மத்தியில் வாழ்கிறோம் என்பதைத்தான், இயற்கையின் விதிகளைக் கற்பதிலும், அவற்றைச் சரியாகக் கையாள்வதிலும் பிற உயிரினங்கள் பெறாத சாதகமானதை நாம் பெற்றிருப்பதிலும் தான் நமது சிறப்பு அடங்கியுள்ளது.”
(இயற்கையின் இயங்கியல் – ஏங்கெல்ஸ், பக்கம் 180)

மனித இனத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய இயற்கை சிதைக்கப்பட்டபோது, இச்சிதைவுகளுக்கு உள்ளிருந்தெல்லாம் உருவான திரட்சியே ஒவ்வொரு காலத்திலும் வெளிப்பட்ட நோய்த்தொற்று என்பதை சமுதாய அறிவியல் தெளிவுபடுத்துகிறது. பணவரவு நோக்கில் இயற்கையை, சுற்றுச் சூழலை, பருவநிலையை சுயநலனுக்கு திசைமாற்றிய கதையின் தொடர்ச்சி ’கொரோனோ’.

”உண்மையில் உழைப்பின் நிகழ்வுப் போக்கில் இயற்கை உறிஞ்சப் படுவதில்லை; அதனால் சூழல் பேரழிவு நிகழ்வதில்லை. அதற்கு அடிப்படையாக இருப்பது முதலாளிய உற்பத்தி முறைதான்.”
(மு.வசந்தகுமார் மார்க்சீய சிந்தனையாளர், ஆய்வாளர். காரல் மார்க்ஸ் 200, கட்டுரைத் தொகுப்பு).

இயற்கையை உறிஞ்சிய முதலாளித்துவ உற்பத்தி முறை தான் இந்த வகை நோய்களின் மூலம். இயற்கைப் பேரிடர் போன்ற வார்த்தைகள் எல்லாம் வெறும் ’கப்சா’! இட்டுக்கட்டிய சொல்! இயற்கையைப் பலி கொண்ட மனிதச் சுழற்சி முடிந்து போயிற்று; இப்போது இயற்கை பலி கொள்ளும் - பழிவாங்கும் சுழற்சிமுறை நிகழ்ந்து வருகிறது.

2

கொரோனா ஊரடங்கின் போது மக்களின் இயல்பான வாழ்வியல் முடக்கப்பட்டது.
”கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" 
என்றிருந்த மக்களுக்குப் பழக்கப் பட்டுப் போன வாக்கியத்தை
”தனித்திரு, விழித்திரு, வாழ்ந்திரு”
என தலைகீழ் உளவியலாக மாற்றியமைக்க முயற்சி மேற்கொண்டனர். முதலாளிய உற்பத்தி முறையும், அதன் எடுபிடி அரசும் தமக்குச் சாதகமான தேவையான கருத்தியல் கோட்பாட்டை கொரோனாவைக் காட்டி வலுப்படுத்தினர். நடைமுறை சாத்தியமற்ற இந்த முழக்கத்தை முன்னிறுத்தி ஊரடங்கு வன்முறையை அத்துமீறிக் கையாண்டனர். அடக்குமுறையை அனுபவிக்கும் மக்கள் கூட்டம் அளவற்ற சகிப்புத் தன்மையைக் கடைப்பிடித்தது.


இந்திய சமுதாயத்தில் சமூக இடைவெளி என்பது சாதியாய், வர்க்கமாய், ஆண் - பெண் எனும் பாலியல் பேதமாய் ஏற்கனவே இயங்கிவருகிறது. மலம் அள்ளுபவர்களை, தூய்மைப் பணியாளர்களை நாம் இன்னும் இடைவெளிவிட்டுத் தான் நிறுத்தியிருக்கிறோம். இப்போது திடீரென தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவது, பாத பூஜை செய்வது (பாருங்கள் இதயத்தில் தூக்கிவைத்துக் கொஞ்சுவதில்லை) நாம் எவ்வளவு பெரிய காரியவாதிகள் என்பதையே காட்டுகிறது.

கொஞ்சம் மனிதாபிமான செயல்களையும் காட்டவேண்டுமென அதிகார சக்திகள் உணர்ந்தன போல. தோட்டக்கலைப் பயிர் சங்கத்தினர் ”காய்கறிகளையும் கனிகளையும் உணவுப் பொருட்களையும் நியாயபூர்வமான விலையில் நேரில் வழங்குகிறோம்; நாங்கள் விளைவித்தவற்றை நேரடியாக விநியோகிக்கிறோமென” வாகனங்களில் முன்வந்தனர். தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. மக்களுக்கு பலவகைக் காய்கறிகள் அடங்கிய பை ரூபாய் நூறு விலையில் விற்பனை செய்தார்கள்.

உற்பத்தி செய்தவர்கள் நேரடியாய் விநியாகிப்பில் ஈடுபடுதல் ஒரு சரியான வடிவம். மக்களுக்கானதை மக்களே பெற்றுக்கொள்ளும் சுளுவான, அதே சமயம் உன்னதமான வழிமுறை இது. இடைத் தரகர், முகவர், வியாபாரி, முதலாளி என்ற இடைச்சுரண்டிகள் அற்று, விளைபொருட்கள் நேரடியாய்ப் பயனாளிகளைச் சென்றடைகின்றன. உற்பத்தியும் வினியோகமும் – மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அமைய வேண்டும். அப்போதுதான் உற்பத்தியின் நோக்கமும் பொருட்களின் பயன் மதிப்பும் முழுமையடைகிறது.

அரசுத் துறை சார்ந்தவர்கள் இதுபோன்ற நல்வினைகளில் இறங்குவது, மக்களுக்குப் போய் வழங்குவது ஒரு நல்ல தொடக்கம்.

லாபநோக்கில் அல்லாமல் சேவை நோக்கில் தோட்டக் கலைத்துறையினர் ஆரம்பித்த விநியோகத் தடத்தில், தற்போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர், வேளாண்மை துணை இயக்குநரகங்கள், அரசு அலுவலர்கள், நகராட்சியினர், போலீஸ் உட்பட அனைத்துப் பகுதியினரும் முன் வந்துள்ளனர். இதுகாலம் வரை ஏட்டில் இருந்த மக்கள் பணி இப்போது ஓரளவு செயலில் தலை காட்டுகிறது. சேவை, தொண்டு என்ற உயரிய சொற்களால் இதற்கு மகுடம் சூட்ட வேண்டியதில்லை. அரசுத் துறைகளின் பணி, கடமை என்று இதனைச் சொல்ல வேண்டும்.

அரசாங்கமும் அதிகாரப் பிரிவும் பொதுச் சமுதாயத்துக்குப் பயன்படாமல், சமுதாயத்திலிருந்து விலகித் தனியாக இயங்கிய நிலை மாறி, முதன்முதலாக சமுதாயத்துடன் இணைவு என்ற இன்பியல் ’கொரோனாவால்’ தொடங்கியுள்ளது. ஏதோ ஒரு அவசரநிலை கருதியதாக அல்லாமல் உற்பத்தியையும், விநியோகத்தையும் அரசுத் துறைகள் நேரடியாக எடுத்துச்செய்வதாக தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சுட்டல் இதுஎனலாம்.

”கூட்டுறவுத்துறை மூலம் அத்தியாவசியப் பொருட்கள் சேர்ந்த தொகுப்பு நகரும் கடைகள், அங்காடிகள் மூலம் ஓரிரு நாட்களில் விற்பனை தொடங்க இருக்கின்றன” என்று அரசு அறிவிப்பைத் தொடர்ந்து,

”அரசுப் பணியாளர்கள் விநியோகத்தை மேற்கொள்வார்கள். தோட்டக்கலைத் துறை, சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகராட்சி பேரூராட்சி நிர்வாகங்கள் - விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்” என 14-4-2020 நாளிட்ட அரசு அறிக்கை தெரிவித்தது.

ஆனால் முக்கியமான ஒரு கேள்வி - அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்தும், விளைவிப்பவர்களிடமிருந்தும் வாங்கவும் வழங்கவுமான கட்டமைப்பு நம்மிடம் உள்ளதா? நம்மிடம் கைவசமுள்ளது எவ்வகை அமைப்பு? அதிகாரக் கட்டமைப்பு; அதிகார கட்டமைப்பின் செயல்பாடு எவ்வாறு நடக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

”விவசாயிகளிடமிருந்து விலை பொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்” – என்னும் அறிவுரையை அரசுக்கு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். நீதிமன்ற அறிவுரை என்பது கட்டளைதாம். இது போன்ற ’உயிர் திண்ணி‘ நோய்க்கு மட்டுமல்ல, எல்லாக் கொடிய நோய்களின் காலத்திற்குமான அறிவுரையாக இது ஏற்கப்பட வேண்டும். ஆனால் அடுத்த வாரத்தில் தஞ்சை திருச்சி காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் நெல்மூட்டைகளைக் குவித்து விவசாயிகள் இரவும் பகலும் பாதுகாத்து நின்றார்கள்; பத்துக்கு மேற்பட்ட நாட்கள் : நெல் கொள்முதல் அலுவலர்கள் கண்ணில் தென்படக் காணோம். அலுவலர் எவரும் வாராத அந்த இடத்திற்கு திடீரெனக் கோடை மழை வந்தது; பத்தாயிரக் கணக்கில் நெல்மூட்டைகள் நனைந்து நாசமாகின. இப்போது விவசாயிகள் அதற்கு இழப்பீடு கேட்டு நிற்கிறார்கள்.


16-04-2020 நாளிட்ட செய்தி; மதுரை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் 12000 நெல் சிப்பங்கள் வெட்டவெளியில் (ஒரு சிப்பம் 40 கிலோ) கிடக்கின்றன. ஊரடங்கு முடியும்வரை நெல் கொள்முதல் செய்வதில்லை என அங்குள்ள நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருளான ’டாஸ்மாக்’ மதுபானங்களுக்குக் கொடுக்கிற பாதுகாப்பு கூட, உயிர்காக்கும் உணவுப் பொருளான நெல்மூட்டைகளுக்கு வழங்கப்படவில்லை. வாடகைக்கு மண்டபங்கள் எடுத்து டாஸ்மாக் மதுபானங்களை கடைகளிலிருந்து உடனே அகற்றி, வாகனங்களில் ஏற்றிச்செல்கிற அக்கறை மழையிலும் வெயிலிலும் உழைத்த விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஏனில்லை?

“விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால் தங்களது மாவட்ட வேளாண் துறை துணைஇயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம். (மாவட்ட வாரியாக தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளன) மேற்கண்ட வேளாண் அலுவலர்கள் வேளாண் பொருட்களை வியாபாரிகளுடன் தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்துக்கு உரிய அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றுத் தருதல், குளிர்சாதன வசதி உள்ள இடங்களுக்கு வழிகாட்டுதல் போன்றவைகளுக்கு உதவி புரிவார்கள்” - என்று தமிழ்நாடு முதலமைச்சர் தனது செய்தி வெளியீட்டில் (எண் 255 நாள்; 07-04-2020) தெரிவிக்கிறார்.

ஒரு சாதாரண விவசாயி இந்த வேளாண் அலுவலர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுதலோ, நேரில் சென்று அவர்களிடம் முறையீடு செய்தலோ சாத்தியமாகுமா? இந்த இடத்தில் இப்படி மாற்றிச் சிந்தியுங்கள். வேளாண் துணை இயக்குநர்கள், வேளான் அலுவலர்களிடம் விவசாயி போவதற்குப் பதிலாய், விவசாயிகளின் இடத்திற்கு இந்த அலுவலர்கள் வந்து தேவையை நிறைவேற்று தானே சரியானது, நீதியானது. அரசு அலுவலகங்களுக்குப் போய் மக்கள் ’தேவுடு காப்பதற்குப்’ பதில், அரசு அலுவலகங்கள் மக்களிடம் சென்று பணிசெய்ய வேண்டுமென்னும் கலாச்சர மாற்றம் நிகழவேண்டிய தருணமல்லவா? மக்களிடம் நேரடியாய்ப் போங்கள் என நீதிமனறம் தெரிவித்தது அதைத் தானே.

ஒரு விவசாயி உடல்நலம் பேணுவதற்காக மருத்துவரிடம், மருத்துவ மனைகளுக்குப் போவதற்குப் பதிலாக, விவசாயப் பெருமக்கள் வேலைசெய்யும் கழனிக்கு, புஞ்சைக் காடுகளுக்கு மருத்துவர்கள் போய்ப் பரிசோதனை செய்து மருதுவம் பார்க்கவேண்டுமென்ற “நடை மருத்துவர்கள் (Foot Doctors)“ சீனாவின் கலாச்சாரப் புரட்சியில் முன்னோட்டமாய் நின்ற காட்சி நமக்கு ஒரு பாடம்.

முதலாளிய உற்பத்தியும், விநியோகக் கட்டமைப்பும் மாற்றியமைக்கப்பட வேண்டிய அவசியத்தை கொரோனா நமக்கு உணர்த்தி இருக்கிறது; முதலாளிய நலனை மனதார ஏற்று வாழ்நாள் கடமையாகச் செயல்படும் அரசு இயந்திரத்தை, மக்கள் கடமையாற்ற மாற்றியமைக்க வேண்டும் என்ற சிந்தனையை நமக்குத் தந்துள்ளது கொரோனா.

மார்ச் மாதத்தில் இங்கிலாந்து ராணுவத்தினர் 900 பேர், ஒன்பது நாட்களில் லண்டன் நகரில் கொரோனா நோயெதிர்ப்பு மருத்துவமனையை நிறுவியுள்ளார்கள். ராணுவம், போலீஸ், அதிகார வர்க்கம் அத்தனையையும் மக்களுக்கான பணியை நோக்கிச் செலுத்த முடியும் என்பதை இது நிரூபித்துள்ளது. இது புதிதான ஒரு நடைமுறை போல தோற்றமளிக்கலாம். ஆனால் எதற்காக ராணுவம் முதலான அரசுப்பணிகள் உருவாக்கம் செய்யபட்டதோ அதை நோக்கி ’மீள நடத்தல்’ என்பது தான் இந்த நிகழ்வு. போர் விமானங்களை, யுத்தக் கப்பல்களை, ஏவுகணைகளை, அதிநவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்ததற்குப் பதில், நோய்த்தொற்றுத் தடுப்பு மருத்துவ முறைகளுக்கு ஏன் செலவிடவில்லை என்னும் கேள்வியின் நியாயம் செத்து விடவில்லை. இந்தியா போன்ற மேடுபள்ளமான பொருளியல், சாதியக் கட்டமைப்புக் கொண்ட நாட்டில், 04-05-2020 அன்று, கொரோனாவை விரட்டிடப் அர்ப்பணிப்புச் செய்துள்ள மருத்துவ சமூகத்தினரைப் பாராட்ட இராணுவ விமானங்கள் பூமாரி பொழிந்தன. இந்தியா முழுதுக்கும் நடந்த இந்தத் திருவிழாவுக்கு குறைந்தது 50 கோடி செலவெடுத்திருக்கும். இந்த 50 கோடியையும், பூமாரிக்குப் பதிலாக ஆகய விமானப் படையினர் தரையிறங்கி அவதியுற்றிருக்கும் மக்களுக்கு உதவிக்கரமும் நீட்டியிருந்தால் அது பயனுள்ளதாயிருந்திருக்கும்.

முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு காய்கறிகள், மளிகைப் பொருட்கள் போன்றவைகளை லாரிகள் மூலமாக வீடு வீடாக விற்பனை செய்ய முடியும்; அவர்களுக்குத் துணையாய் தன்னார்வலர்களைப் பயன்படுத்தலாம்; சுனாமி, நிலநடுக்கம், பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பணியாற்றிய அனுபவம் இவர்களுக்கு உண்டு. இந்நாள் ராணுவத்தினர், போலீஸ், நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற அதிகாரவர்க்கம் அனைவருக்கும் இது பொருந்தும்.

நான் சிறு வயதாக இருக்கையில் மதுரை மீனாட்சி ஆலையில் வேலை பார்த்தார் என் சித்தப்பா. தொழிலாளருக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டுமென்ற ஏற்பாட்டில், அக்காலத்தில் ஒவ்வொரு ஆலையிலும் ’கூட்டுறவுப் பண்டகசால’ என்று உருவாக்கினார்கள். அதற்கான தொழிலாளர் நலச்சட்டங்கள் இன்றும் இருக்கின்றன. நியாயமான சரியான விலையில் தரமான பொருட்களைக் கொள்முதல் செய்து தொழிலாளர்களுக்கு வினியோகம் செய்வது கூட்டுறவுப் பண்டகசாலைப் பணி. சாமான்களுக்குப் பில் போடுவது, சாமான்கள் எடுத்துக் கொடுப்பது போன்ற பணிகளுக்கு எழுத்தர்கள், தலைமை எழுத்தர் போன்றோரை ஆலை நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. பண்டக சாலையை நிர்வகிக்கும் உறுப்பினர்கள் தொழிலாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கடுமையான போட்டி நிலவும்.

“போன தடவை போட்ட அரிசி தரமா இருந்தது. இப்ப அப்படி இல்லையே”

“போன தடவை வாங்கின மாதிரி இல்லையே இந்த தடவை நல்லெண்ணை? எதில பிழிஞ்சீ எடுத்தீங்க, எள்ளு வாசனை வரல, கொள்ளு வாசனை வருது”

பயனாளிகளிடமிருந்து எழுகின்ற கேள்விகளை எதிர்கொண்டு மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்ற பயம் அன்று போட்டியிடும் உறுப்பினர்களுக்கு இருந்தது. தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தரமான பொருட்கள், சரியான விலையில் எங்கு கிடைக்குமோ அங்கு போய் கொள்முதல் செய்து கொண்டுவந்தனர். அதற்குரிய கணக்கு வழக்கு முறையாக இருந்தன. இல்லையெனில் அடுத்த முறை தேர்வாகி வருபவர்கள் கழுத்துப் பிடி பிடித்துவிடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக, தொழிற்சங்க சுல்தான்களாய் மாறிய அரசியல்வாதிகள் அதைக் கையில் எடுத்தனர். அத்தகைய ஒரு மக்கள் பரிவர்த்தனை அமைப்பையே அழித்தார்கள். ’எட்டுக்கும் கூட்டுவான், எழவுக்கும் கூட்டுவான்’ என்கிற சாதி இவர்கள்.

மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு கூட்டுறவு அமைப்பையும் இன்றைக்கு கண்ணில் காண்முடியாது. யார் அதிகமாக வாரிக்கொண்டு போவது என்ற ஒரே நோக்கம் தான் கூட்டுறவு சங்க அமைப்புகளுக்கான தேர்தல். அத்தேர்தலுக்கு இன்று கண்ணெதிரில் நடைபெறுகிறது அடிபிடிச் சண்டை.

இன்னும் சில மாதங்களில் இயல்புநிலை திரும்பும் என்கிற உறுதிமொழி தரப்படுகிறது. அமைச்சர்கள், அரசு நிர்வாகத்தினர் திரும்பத் திரும்பக் கூறிவருகின்றனர். இப்போதுதான் அரசு இயந்திரங்கள் எந்த இடத்துக்கு வர வேண்டுமோ அந்த இடத்துக்கு வந்து சேரும் முன்னடி வைப்பைத் தொடங்கியிருக்கின்றன. மீண்டும் கோப்புகள் கணிணிகளுடன் குளுகுளு கட்டிடங்களில் நிரந்தரமாய் அடங்குவது என்னும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்புதல் என்பது ஆபத்தானது; இதன் பொருள் மக்களை அந்நியப்படுத்தி எங்கே நிறுத்தி வைக்க வேண்டுமோ அங்கு நிறுத்திவைத்தல் என்பதே. இயல்பு நிலை என்பது அதிகார நிலை.

கொரோனாவை மட்டுமல்ல, கொரோனாவை விட மோசமாக மக்கள் நலன்களைக் கபளீகரம் செய்யும் அதிகார அமைப்பையும் அடையாளப் படுத்தியுள்ளது கொரோனா நெருக்கடி. அதிகார அமைப்பு என்னும் தொற்று சமுதாயத்தை முழுமையாய் ஆட்கொண்டு இரு நூற்றாண்டுகள் ஆகிறது. மேல் கீழ் என்ற கட்டுமானம் தான் நம் தேசம், இந்த மேல்கீழ் கட்டுமானத்தை வலுப்படுத்துவதற்காக அதிகார அமைப்புகள் இந்த இரு நூற்றாண்டாய் தம்மை வலுப்படுத்திகொண்டு வந்துள்ளன. இருநூறு ஆண்டுகளாய் பேயாட்டம் ஆடிய அமைப்புகள், இப்போது மக்க்ளுக்குப் பணியாற்ற சற்றே தலைவணக்கமாகியுள்ளன.

இந்தத் தலைவணக்கம் ”தலை மேல் தொங்கும் கத்திக்கு” என்று தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமான தரிசனமாக அமையவேண்டும். உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் மக்களின் பயன்பாட்டுக்குச் சென்று சேர்க்கப்படவேண்டும். இந்த அதிகார அமைப்பை மக்கள் அமைப்பாக மாற்றவேண்டுமென்பதின் நியாயத்தை கொரோனா காட்டியிருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும் சனநாயகத்தை, மக்கள் தங்கள் நலனுக்காக கட்டியமைத்தாக வேண்டும். சன நாயக அடிப்படை கீழிருந்து தொடங்குகிறது. அது ஒருபோதும் மேலிருந்து கீழிறங்குவதில்லை. அது மக்கள் தங்களுக்குப் பணி செய்யும் அமைப்புக்களை தாமே உருவாக்குதல், அல்லது ஏற்கனவே இயங்கும் அமைப்புக்களை தங்களுக்குப் பணியாற்றுபவர்களாய் கலாச்சார மாற்றம் செய்தல் என சன நாயக வாய்க்கால்களை வடிவமைக்க முடியும்.

“தனியார் லாபத்துக்கு மாறாக மனிதத் தேவைகள் பற்றிய கரிசனைகளுடன் சமூக மீள் கட்டமைப்பு நிகழவேண்டும். அது மானுட விழுமியங்களைக் கொண்ட சமூக அமைப்பாகத் திகழும்” என அறிஞர் நோம்சாஸ்கி சொல்வது, கொரொனாவால் விளையட்டும்.

- மின்னிதழாக வெளிவருவதால் ’காக்கைச் சிறகினிலே‘ ஜூன் 2020 இதழில் இக்கட்டுரை சுருக்கி வெளியிடப்பட்டது.

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content