இணையப்பதிவு தொடங்கி வழக்கு வரை... ஜெயமோகன் - பா.செயப்பிரகாசம் விவகாரத்தில் என்ன நடக்கிறது?


ஜெயமோகனின் தளத்தில் வெளியான கடிதம் பா.செயப்பிரகாசம் மீது அவதூறு பரப்பும் நோக்கில் சித்திரிக்கப்பட்டுள்ளதாக பா.செயப்பிரகாசத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஜெயமோகனை எதிர்த்து பேஸ்புக்கில் பதிவிட்டு வந்தனர்.

இலக்கியம், கருத்தியல் சார்ந்த உரையாடல்கள் எப்போதுமே படைப்புகளையும், மனிதர்களையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவது நம் மரபு. பல சமயங்களில் விவாதங்கள் தனிநபர் மீதான தாக்குதலாகவும் மாறிவிடுகிறது.

சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக பா.செயப்பிரகாசத்தின் ஆதரவாளர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குமிடையில் சொற்போர் நடந்துவருகிறது. வெறுமனே சொற்போர் என்பதைக் கடந்து, கண்டன அறிக்கை, நீதிமன்றத்தில் வழக்கு தொடருதல் என அடுத்தடுத்த நகர்வுக்குச் சென்று பூதாகரமாகி உள்ளது.

பா.செயப்பிரகாசம், 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவப் போராளியாய்ச் செயலாற்றியவர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த 10 மாணவர் தலைவர்களில் ஒருவர். இலக்கியம், களப்போராட்டம் எனத் தொடர்ந்து பல தளங்களில் இயங்கிவருபவர்.

எழுத்தாளர் ஜெயமோகன் தனது நாவல்கள், கதைகள் மூலம் பரவலான வாசகர்வட்டத்தைக் கொண்டவர். இருவருமே தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள். இவர்கள் இருவரின் ஆளுமை காரணமாகவே தமிழ் வாசகர்கள் மத்தியில் இவர்கள் இருவருக்குமான இந்தச் சொற்போர் கவனம் பெற்றது.

இந்தப் பிரச்னைக்கான முதல் மணி அடித்து போர் நடக்க காரணமாக அமைந்தது ஒரு கடிதம். எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் கடந்த மே 29-ம் தேதி வெளியிட்ட, "ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்ற கடிதம். இக்கடிதத்தை எழுதியவர் தன் பெயரைக் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். ஜெயமோகன் பதிவிட்ட அக்கடிதத்தில் இடதுசாரி இயக்கங்களில் இயங்குவோர் நான்கு வகையினர் எனக் குறிப்பிட்டு, ஒவ்வொரு வகையினர் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நான்காவது வகையினர் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"நான்காவது கூட்டம் தலைவர்கள். இவர்கள் யார் என்றே நமக்குத் தெரியாது. இவர்களில் சிலர் பணக்காரர்கள். அதிகாரபதவிகளில் இருந்த பா.செயப்பிரகாசம் போன்ற சாதி வெறி கொண்ட அரசாங்க உயரதிகாரியெல்லாம் இங்கே இடதுசாரிக்குழுவின் தலைவராகப் புனைபெயரில் இருந்திருக்கிறார். சூரியதீபன் என்ற பேரில். இதெல்லாம் எந்த ஊர் பித்தலாட்டம். இதெல்லாம்கூட தெரியாததா நம்மூர் உளவுத்துறை? இந்தத் தலைமையை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. இதுதான் இங்கே இடதுசாரி அரசியல்."
ஜெயமோகனின் தளத்தில் வெளியான கடிதம்
ஜெயமோகனின் தளத்தில் வெளியான இக்கடிதம் பா.செயப்பிரகாசம் மீது அவதூறு பரப்பும் நோக்கில் இருப்பதாக பா.செயப்பிரகாசத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஜெயமோகனை எதிர்த்து பேஸ்புக்கில் பதிவிட்டு வந்தனர். ஜெயமோகனின் தளத்தில் வெளியான சர்ச்சைக்குரிய இக்கடிதத்தை எதிர்த்து பா.செயப்பிரகாசத்தின் ஆதரவாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், ”இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி இன்று பல தளங்களில் இயங்கி வருபவர் பா.செயப்பிரகாசம். இப்படிப்பட்ட தமிழ் ஆளுமை மீது ஜெயமோகன் கோபப்படுவதும், பழி தூற்றுவதும் நமக்கு ஒன்றும் ஆச்சர்யம் அளிக்கவில்லை. தொடர்ந்த தனது பேச்சுகளின் மூலமாக, எழுத்துகளின் மூலமாக சர்ச்சைகளை உருவாக்கி, தமிழ் அறிவுச்சூழலில் தான் ஒரு பேசுபொருளாக இருக்கவேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக்கொண்டு வருகிறவர் ஜெயமோகன்.

தமிழ் அறிவுச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய். இந்தப் போக்கு என்னும் ஒட்டுவாரொட்டி நோய் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில் கேடு பயப்பதும் கூட‌. ஜெயமோகனின் சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல், மார்க்சிய எதிர்ப்பு என்பது நாம் அறிந்த ஒன்று. அதற்கான எதிர்வினையைப் பல்வேறு தளங்களில் மிக அமைதியாக ஆற்றி வருகிறோம். எந்த ஆதாரங்களும் இல்லாது, ஒரு அநாமதேயம் எழுதியதாக தனிநபர் மீதான வன்மம், அவதூறு என்பவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனம் செய்யப்படவேண்டிய ஒன்று. அது சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய, அறிவுச்சூழல், இடதுசாரிச் சிந்தனைகள், இயக்கங்கள், எழுத்துகள், செயற்பாடுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால் ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்” இந்த அறிக்கையில் சுமார் 150க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.

கண்டன அறிக்கையுடன் முற்றுபெறவில்லை இந்தப் போர். ஜெயமோகன் மீது கடந்த ஜூன் 6-ஆம் தேதி வழக்கறிஞர் அஜிதாவின் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்தார் பா.செயப்பிரகாசம்.

பா.செயப்பிரகாசம் ஜெயமோகனை எதிர்த்து வழக்கு தொடுத்த நிலையில், ஜெயமோகன் ஜூன் 9ம் தேதி பா.செயப்பிரகாசதிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகப் பதிவிட்டார். அதில் ஜெயமோகன் கூறியிருப்பதாவது,

”இணையத்தில் திரு.செயப்பிரகாசம் அவர்கள் என் மேல் அவதூறும் வசையும் பொழிந்து எழுதியிருக்கும் பக்கங்களை நகல் எடுத்துவிட்டோம். அவருக்கு ஆதரவாக ஒரு கண்டன அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது அச்சு ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நேரடியான கீழ்த்தரமான அவதூறு என்பது அந்தக் கண்டன அறிக்கையில் உள்ள என்னைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் வரிகள்தாம். ஒரு கும்பல் கூடி ஓர் எழுத்தாளனைப் பற்றி என்ன வேண்டுனாலும் சொல்லி பத்திரிகைகளுக்கு அனுப்பமுடியும் என்பதுதான் அவதூறு நடவடிக்கை.

என் வழக்கறிஞர் நண்பர்கள் ஈரோட்டில் கூடிப்பேசியதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. திரு.செயப்பிரகாசம் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். அந்தக் கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் முக்கியமான அனைவர் மீதும் தனித்தனியாக அவதூறு வழக்குகள் தொடரப்படும். குறிப்பாக அரசுப்பணியில் இருப்பவர்கள் மீது அவதூறுவழக்கும் துறை ரீதியான புகார்களும் அளிக்கப்படும். அவர்கள் செயப்பிரகாசம் வழக்கிலும் சாட்சியாக நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்கள். அவர்களின் மொழியைக்கொண்டே வழக்கை நடத்துகிறோம்

இதைச் செய்யவேண்டிய கட்டாயம் இன்று உருவாகிவிட்டது. நான் எப்போதுமே வசைகளையும் அவதூறுகளையும் பொருட்டாக நினைத்தவன் அல்ல. யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் நேரடியாகப் பெயர்சுட்டி எழுதிக்கொண்டிருக்கும் சாக்கடைப் பதிவுகளைக்கூட கருத்தில் கொண்டதில்லை.

ஏனென்றால் கருத்துச்செயல்பாட்டில் தன்னிச்சையான வெளிப்பாடு என்பது ஓர் அம்சம். நீதிமன்றத்தில் நிரூபிக்கத்தக்க கருத்துக்களையே கருத்துவிவாதங்களில் சொல்லவேண்டும் என்றால் அதன்பின் கருத்துவிவாதமே இல்லை. சென்ற சில ஆண்டுகளாகவே இடதுசாரிகள் என்பவர்கள் கும்பல்கூடி இந்தப்போக்கை முன்னெடுத்து நீதிமன்றத்தை ஒரு மிரட்டல்கருவியாக மாற்றி அறிவியக்கத்தைச் சீரழித்துவருகிறார்கள்.

அமைப்புக்கு ஆதரவானவர்கள் என்று முத்திரை குத்தப்படும் எவரும் இங்கே நீதிமன்றத்தை அணுகியதில்லை. அமைப்புக்கு எதிரான புரட்சியாளர்களாக தங்களை சொல்லிக்கொண்டு அத்தனைபேர் மீதும் அவதூறு கக்குபவர்கள்தான் அவர்கள்மேல் சிறு விமர்சனம் வந்தால்கூட நீதிமன்றத்தை அணுகிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு தொடர்ந்தால் இங்கே எழுதும்போதே எச்சரிக்கை உணர்வு உருவாகும். கைகள் தயங்கும். அது நிகழக்கூடாது.

முறையான நடவடிக்கைகளுக்குச் சென்னையிலும் நண்பர்குழு ஒன்று கூடுவதாக உள்ளோம்."

இதுகுறித்து பா.செயப்பிரகாசத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். "ஜெயமோகன் வெளியிட்டுள்ள அந்தக் கடிதத்தில் என்மேல் அவதூறான செய்தியைப் பரப்பி உள்ளார். ஜெயமோகனுக்கும் எனக்கும் எந்த ஒரு தனிப்பட்ட பகையோ, உரசலோ ஏதுமில்லை. ஒவ்வொருவரும் ஒரு கோட்பாட்டைச் சார்ந்து இயங்குகிறோம். அந்த வகையில் நான் பெரியாரியம், அம்பேத்கரியத்தைப் பின் தொடர்பவன். ஜெயமோகனோ பழைமைவாத சிந்தனைகளே மிகச்சரியானது என சிந்தித்துக்கொண்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ் போன்ற சித்தாந்தங்களில் இருந்து உருவானவர். அப்படி இருக்கையில் அவர் படைப்புகளில் அவரின் சித்தாந்தம் வெளிப்படுவதைக்கூட தடுக்கமுடியாது. 'மெய்யியல்' என்பது தொன்மையில் உள்ளது என்பது அவரின் கருத்து.

ஆனால், மக்களின் வாழ்வியலோடு கலந்ததே 'மெய்யியல்' என்பது என் கருத்து. எனவே அடிப்படை பார்வையே இருவருக்குமிடையே வித்தியாசப்படுகிறது. உண்மையில் நான் எந்த இடதுசாரி குழுவுக்கும் தலைமையில் இருந்ததில்லை. அதுவும் புனைபெயரில் தலைவராக இருந்திருப்பதாக ஒரு பிதற்றல். சாதி வெறி கொண்டிருந்ததாக அவதூறு, இது கூட உளவுத்துறைக்குத் தெரியாதா என்று உளவுத்துறை மீது அடிப்படையற்ற எள்ளல் எனப் புத்தி பேதலித்த ஒருவரின் கடிதம் போல் ஒன்றை வெளியிட்ட ஜெயமோகனின் நோக்கம் என்ன?

சட்டப்படியே இது அவதூறு என்று அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சாதியோடு எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்கும் என் மேல் இவ்வாறு அவர் விமர்சிப்பது அவதூறு ஆகும். எனவே அவர் மேல் வழக்கு தொடுத்தோம். ஜெயமோகனின் அந்தக் கருத்தை எதிர்த்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் என 200 பேர் கண்டன அறிக்கை தெரிவித்துள்ளனர். என் வீட்டில் மட்டுமல்லாது பல்வேறு வெளி இடங்களிலும் கலப்புத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவன் நான். இந்நிலையில் ஜெயமோகன் என்னை ஜாதி வெறி பிடித்தவன் எனக் கொச்சைப்படுத்தி உள்ளார். தொடர்ந்து என் கட்டுரைகளில் பெண்ணியம் வெளிப்படும்.

ஜாதியை எதிர்த்து ’கொலைசெய்யும் ஜாதி’ என்ற நூல் ஒன்றை வெளியிட்டுள்ளேன். ஜெயமோகன் இவ்வாறு கூறியிருப்பது கருத்து முரண்பாடு அல்ல, அவதூறுதான். எனவே வழக்கு தொடுத்துள்ளேன்.

பொதுத்தளத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்ற அறம் உள்ளது. அதில் உண்மைக்குப் புறமாகப் பேசுவது தவறு. ஊழலைப் பற்றித் தனது கருத்தை வெளியிடுவது அவரின் பார்வை என விட்டுவிடலாம். ஆனால் அதேசமயம் இவர் ஊழல் செய்துள்ளார் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கூறுவது அவதூறு ஆகும். ஜெயமோகன் என்மீது அவதூறான வார்த்தைகளைப் பாய்ச்சுவதால் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலை வந்தது. நாங்கள் வழக்கு தொடுத்த பிறகு ஜெயமோகனும் வழக்கு தொடுத்துள்ளார். அதில் செயப்பிரகாசத்திற்கு ஆதரவாக உள்ள அனைவரின் மீதும் வழக்கு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜெயமோகனுக்கு இது புதிதல்ல. கவிஞர்கள் மீது குற்றம் சுமத்துவது எந்த ஒரு ஆதாரமும் இன்றி எழுத்தாளர்களைக் கொச்சைப்படுத்துவது அவருக்குப் பொழுதுபோக்கு போல இயல்பான ஒன்று.” என்றார்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்