வரலாற்றுப் பொய்யர்கள்

பகிர் / Share:

ஜெயமோகன் நேற்று தனது வலைத்தளத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  ”வானம்பாடி இதழுக்கு இன்னொரு தனித்தன்மை உண்டு. அதன் பங்களிப்பாளர்களில...

ஜெயமோகன் நேற்று தனது வலைத்தளத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 
”வானம்பாடி இதழுக்கு இன்னொரு தனித்தன்மை உண்டு. அதன் பங்களிப்பாளர்களில் பலர் அண்ணாமலைப் பல்கலையில் தமிழ் பயின்றவர்கள். ஐம்பது அறுபதுகளில் அண்ணாமலைப் பல்கலையில் தமிழ் பயில்வது என்பது திராவிட – தமிழியக்க அரசியலை நோக்கிச் செல்வது தான். அவர்களில் பலர் திராவிட இயக்க மனநிலை கொண்டவர்கள். மு.கருணாநிதி மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தவர்கள்.

ஆனால் 1969-ல் மு.கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது, அவருடைய செயல்பாடுகள் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தன.அவர் ஆட்சியிலிருந்த போதுதான் இந்தியாவிலும் தமிழகத்திலும் நக்சலைட்டுக்கள் ஒழித்துக் கட்டப்பட்டனர்.இந்தியக் குடியரசு உள்நாட்டில் நிகழ்த்திய மிகப்பெரிய வன்முறை அதுதான். இன்றுவரைக்கும் கூட தோராயமாக 50 ஆயிரம் இளைஞர்கள் அன்று அரசால் கொல்லப்பட்டனர். அந்த நடவடிக்கைக்கு மு.கருணாநிதி அளித்த நிபந்தனையற்ற ஆதரவு அவர் மீதான நம்பிக்கையை அழித்தது.”

நக்சலைட் அழித்தொழிப்பு நடந்தது கருணாநிதி ஆட்சியில் அல்ல; அந்த அழித்தொழிப்பை நடத்தியவர்கள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், போலீஸ் அதிகாரியாக இருந்த வால்டர் தேவாரம் என்பவரும். தமிழ்நாட்டில் நக்சலைட்டுகள் என்ற பெயரில் 22 பேர் கொல்லப்பட்டனர். அது நடந்தது, 1979,80,81 - ஆண்டுகளில். அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி. மு.கருணாநிதி முதலமைச்சராக இல்லை.

“பக்கத்து வீட்டுத் துன்பத்தைப் பற்றி அறியாத நகரம் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில், கோவை அரசுக் குடியிருப்பிலிருந்து ஒரு லாரி கணவனையும், மனைவியையும், மூன்று வயதுக் குழந்தையையும், இருபது வருட அரசு உத்தியோகம் பார்த்ததில் கிடைத்த சாமான்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.வாழ்க்கையை இழந்து அவர்கள் கோவையிலிருந்து கிளம்பியபோது லாரியில் புறப்பட்டார்கள்.“

1977-ல் மனிதன் என்ற புரட்சிகர மாத இதழில் “அனல் காற்று” என்ற எனது இந்தச் சிறுகதை நெருக்கடிநிலையினால் விளைந்த பணி நீக்க வேதனைகளை விவரித்திருந்தது.

‘நெருக்கடி நிலை தொடர்புடைய எந்த நடவடிக்கையையும் கேள்வி கேட்க முடியாது’ என்ற அரசு நடைமுறை அப்போது கோலாச்சிற்று. 1975 ஜுன் 24 இரவில் பிரகடணம் செய்யப்பட்ட நெருக்கடி நிலை நாட்டை அல்லோகலப்படுத்தியது. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி நடந்ததால், அதன் ஆட்டம் பெரிதாய் இல்லை. நெருக்கடி நிலையை எதிர்ப்பவர்களை அணைவாய் வைத்துக் கொள்ளல், அப்போதைய தி.மு.க ஆட்சியின் நடைமுறையாயிருந்தது.

நெருக்கடி நிலை அறிவிப்பின் போது நான் கோவை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியில் இருந்தேன். தி.மு.க ஆட்சிக் கலைப்பின் பின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து 31-7-1976-ல், செய்தி-மக்கள் தொடர்புத் துறை முற்றாகக் கலைக்கப்பட்டு, நாங்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டோம்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் எனது துணைவியாரின் அண்ணன் பி.வி.பக்தவத்சலம் வழக்குரைஞர். அது மட்டுமல்ல, அவர் மக்கள் உரிமைக் கழகத் தலைவர். திருப்பத்தூரிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் ’கட்டேரி’ என்ற கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் குடிபுகுந்தோம். மைத்துனரின் உதவியால் மூன்று கறவை மாடுகள் வாங்கி பால் கரந்து கூட்டுறவு பால் சங்கத்தில் விட்டு அன்றாடம் அதற்குரிய பணம் பெற்றுக்கொண்டோம். நான், துணைவி, மூன்று வயதான மகன் மூவரும் வாழ்ந்த ’கட்டேரி’ வாழ்க்கையை ”அனல் காற்று, இருளுக்கு அழைப்பவர்கள், சூரியன் உதிக்கும் கிராமம்” என மூன்று சிறுகதைகள் வழி சூரியதீபன் என்ற பெயரில் வெளிப்படுத்தினேன்.

வேலை பறிக்கப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தீர்ப்பின்படி நாங்கள் பணியில் அமர்ந்தது 1979-ல்;

1977-லில் எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. எம்.ஜி.ஆர் முதலமைச்சர், வால்டர் தேவாரம் அப்போதைய வடஆற்காடு, தர்மபுரி மாவட்டத்தின் டி.ஐ.ஜி.

வால்டர் தேவாரத்துக்கும், அப்போது வெளிவந்த தமிழ் நாளிதழான ‘தினத் தந்திக்கும்’ அந்த இளைஞர்கள் புரட்சியாளர்கள் அல்ல; கம்யூனிஸ்டுகளும் அல்ல; நக்சலைட்டுகளுமில்லை; ’அவர்கள் தீக் கம்யூனிஸ்டுகள்’. (இன்றும் தினத்தந்தி அந்த மொழியை மாற்றிக் கொள்ளவில்லை.)

நக்சலைட்டுகளை வேட்டையாடுதல் என்ற பேரில் மாவட்டம் முழுதும் 22 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். அந்தக் காலம் முழுவதும் நாங்கள் கட்டேரி கிராமத்தில் வசித்ததால் என்ன நடந்தது என்பதை நான் அறிவேன். அந்த நர வேட்டையின் சாட்சியாக நான் திருப்பத்துர் வட்டாரத்தில் வாழ்ந்தேன்.

பகலில் போலீஸ் வேட்டைக்குப் போவதில்லை; இரவில் வேட்டையாடப் புறப்படும். இளையவர்களை - அவர்கள் வாலிப வயதில் இருந்தால் போதும்; கிராமங்களிலிருந்து இழுத்துவந்து, கைகளை பின்னுக்குக் கட்டி,கண்களைக் கட்டி, ஜட்டியுடன் காவல்நிலையத்துக்கு கொண்டுவருவார்கள். ஜோலார்பேட்டை காவல் நிலையத்தை ஒட்டிய வலதுபக்க முதல்வீடு என் துணவியாரின் சித்தப்பா வீடு. அங்கு சில இரவுகள் தங்கியிருந்த போது, இரவில் இழுத்து வரப்பட்ட இளைஞர்கள் சித்திரவதை செய்யப்படுவதையும் அவர்கள் எழுப்பும் கூக்குரலையும் சன்னல் வழியாகக் கண்டிருக்கிறேன்.

அதேபோல் திருப்பத்தூர் நகர காவல்நிலையம். ஒரு கொலை அதிகாரியின் மேற்பார்வையில் வேட்டை, கைது, சித்திரவதை, கொலை அனைத்தும் நடத்திற்று. திருப்பத்தூருக்கு தெற்கில் ’கந்திலி’ என்றொரு ஊராட்சி. நக்சலைட்டுகள் என்று அங்கிருந்த இரு இளைஞர்களை கந்திலி காவல் நிலையத்தின் முன்னூள்ல மரத்தில் கட்டிவைத்து, பார்த்துகொண்டிருக்கிற மக்கள் முன்பாகவே சாகும் வரை அடிக்கிறார்கள். அடித்து எங்கோ தொலைவில், கேரளாவாக இருக்கலாம், உடல்கள் மீண்டும் எழாதவாறு ஒரு அணையில் அமிழ்த்தி விட்டதாகச் சொல்லப்பட்டது.

போலீஸின் இந்த அத்துமீறல்களையெல்லாம் கேள்வியுற்று மனவேதனை கொண்டவராய் சர்வோதயத் தலைவரும் காந்தீயவாதியுமான ஜெகநாதன், அவற்றைத் தடுத்து நிறுத்தும் நல்லெண்ணத்தில் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் பாதயாத்திரை செல்ல முடிவுசெய்து அறிவித்தார். பாதயாத்திரையாய்ச் சென்று, விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா அடக்கம் செய்யப்பட்ட, பாப்பாரப்பட்டியில் அவர் நிறுவிய பாரத தேவி கோயிலில் காலவரையற்ற உண்ணா நோன்பு இருக்கப்போவதாக ஜெகநாதன் அறிவித்தார். அவருடைய வருகையை தருமபுரி மாவட்ட மக்கள் பெரிதும் வரவேற்றார்கள். அவர் வருகையில் எரிச்சலுற்ற காவல்துறை மாவட்டத்தில் அமைதியின்மை நிலவுகிற காரணத்தால் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. பாப்பாரப்பட்டி அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு அவர் வருகை தந்தவுடன் 144 தடை உத்தரவை மீறி தாங்கள் பயணம் செய்ய முயற்சி செய்கிறீர்கள் என்று காரணம் கூறி அவரை அங்கேயே தடுத்து நிறுத்தி கைது செய்து, பின்னர் விடுதலை செய்தார்கள்.

நக்சலைட் தேடுதல் என்ற பெயரில் ஆட்சியின் ஒப்புதலுடன் காவல்துறை செய்யும் அத்துமீறல்களை அம்பலப்படுத்தி மக்களுக்கு உண்மை அறிவித்திட தமிழ் தேசியத் தலைவர் பழ.நெடுமாறன் முன்வந்தார். அவர் எம்ஜிஆர் கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர். கூட்டணி தர்மத்துக்காக கொலைகாரச் செயல்களுக்கு மௌன சாட்சியாக இருக்க நெடுமாறன் தயாராக இல்லை. தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வேலூர் மாவட்டம் வரை பயணம் செய்யப் போவவதாகவும் மக்களை சந்தித்து உண்மை அறியவிருப்பதாகவும் அறிக்கை விட்டார்.

“1979, 80, 81 ஆம் ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இளைஞர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்; மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல்துறை இந்த அட்டூழியத்தை திரித்துக் கூறியது; இது பற்றிய உண்மைகளை வெளியிடுவதற்காக செய்தியாளர்களை சந்திக்க சென்னை வந்த மக்கள் உரிமைக் கழகத் தலைவர் பி.வி. பக்தவத்சலம் என்ற வழக்கறிஞரை காவல்துறை கைது செய்த செய்தியறிந்து நான் திகைப்படைந்து, எதையோ மறைப்பதற்கு காவல்துறை முயலுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அப்போது நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். தருமபுரி மாவட்டத்தில் அக்டோபர் முதல்வாரத்தில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு திடுக்கிடும் உண்மைகளை அறிந்து வந்து அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களிடம் அறிக்கையாக அளித்தபோது அவர் அதிர்ந்து போனார். அதன் பிறகு அவைகளை நிறுத்தும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். மோதல் சாவுகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது .”
பழ.நெடுமாறன், தனது தென் ஆசியச் செய்தி இதழில் (அக்டோபர், 1-15, 2007) பதிவிட்டுள்ளார்.

1980, ஆகஸ்டு 6-ல், நகசலைட் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம், போலீஸ் பிடியிலிருந்து தப்பி, போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி எறிந்ததில் , இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஏட்டு ஆதி கேசவலு, காவலர்கள் யேசுதாஸ், முருகேசன் ஆகியோர் கொல்லப்படுகிறார்கள். வேலூரில் நடைபெற்ற இன்ஸ்பெக்டர் பழனிச்சாமியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், பின்னர் வேலூரில் அண்ணா கலையரங்கில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசினார் ”நக்சலிசம் வடாற்காடு மாவட்டத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்படும்”. பிறகு முழுமையான அதிகாரம் பெற்றவராக வாலடர் தேவரத்தின் கேள்வி கேட்பாரற்ற வேட்டை நடக்கிறது.திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் முற்ற வெளியில் அந்த நான்கு போலீஸ்காரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நினைவுத்தூண் நிறுவப்பட்டு ஆகஸ்டு 6 ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நடத்தப்பெறுகிறது. ஆகவே தொழிலாளி, விவசாயி, மீனவ நண்பன், ரிக்ஷாக்காரன் போன்ற பாவனைகளால் மக்கள் நேசனாய்க் காட்டி ஆட்சியில் ஏறிய ஒரு கருணைக்கடல்; அந்த இதயம் இப்படியெல்லாம் அடக்குமுறைகளை ஏவி விடுமா என்று பலரும் நம்ப சிரமப் படுவார்கள். ஆனால் அந்த மக்கள்நேசனுக்குத் தெரிந்து அனைத்தும் நடந்தது.

வடாற்காடு, தருமபுரி மாவட்டங்களில் நடப்பவைகளை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக மக்கள் உரிமை கழகம் உண்மை அறியும் குழு ஒன்றை ஒழுங்கு படுத்தினார்கள் முதலில் அந்த குழுவில் துக்ளக் சோ பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசமைப்பின் பக்கமே நிற்கிற அறிவுஜீவியான துக்ளக் சோ கடைசி நேரத்தில் பங்கேற்கவில்லை. அவர் இவ்வகையான அடக்குமுறைச் செயல்பாடுகளில் உடன்பாடு கொண்டவர். எதிர்ப்புக் குரலை மனித உரிமைத் தளத்திலிருந்து மட்டும் பார்க்கக்கூடாது என்ற கருத்துடையவர். ஆனால் உண்மை அறியும் குழு இத்தனை தடைகளையும் தாண்டி திருப்பத்தூர் வந்தது. அன்று இரவு திருப்பத்தூரில் ஒரு விடுதியில் உண்மை அறியும் குழு தங்கியிருந்தபோது, அவர்களை சுற்றிவளைத்து பொதுமக்கள் என்ற பெயரில் காவல்துறை தாக்கியது. உண்மை அறியும் குழுவுக்கு பாதுகாப்பாக இருந்தவர்களையும் பணிபுரிய வந்தவர்களையும் கைது செய்து காவல்நிலையத்துக்குள் கொண்டு போய் அடைத்தது.

தேடுதல் வேட்டை என்ற பெயரில் நடந்த தொடர்வு நிகழ்வுகள் அனைத்தும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அரங்கேறியவை. மு.கருணாநிதி ஆட்சியில் அப்பு என்ற நக்சலைட் தலைவர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டது தவிர வேறு எந்த நிகழ்வும் நடக்கவில்லை. அவருடை ஆட்சியின் போது மாவட்டங்களில் உழவர் எழுச்சிக்கான விழிப்புணர்வு கூர்மை பெற்றிருக்கவில்லை. சென்னையில் அம்பத்தூர் தொழிற்சாலைப் பகுதிகளில் மிகப் பெரிய தொழிலாளர் போராட்டங்கள் வெடிதன. தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்குவதில் 69 - ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி கவனம் கொண்டிருந்தார். சிம்சன் தொழிலாளர் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டுஅடக்குவேன் என்று முழங்கினார். தி.மு.க. தொழிற்சங்கத்தை உருவாக்கி . தொழிலாளரைப் பிளவு படுத்தி அடக்கினார். அப்போது உழைக்கும் மக்கள் மன்றம் என்னும் தொழிற்சங்க அமைப்பினை போர்க்குணத்துடன் வழிநடத்திய குசேலர், ஏ.எம்.கோதண்டராமன் (பின்னால் மா.லெ புரட்சிகரக் குழுவின் தலைவர்) ஆகியோரை முதலமைச்சர் கருணாநிதி ”இரண்டு சிறுத்தைகள் உலவுகின்றன, அவைகளை எப்படி அடக்குவதென்பதை நான் அறிவேன்” என அறிவித்தார்.

மக்கள் இயக்கமாக இருக்கலாம்; பொதுப்போராட்டமாக இருக்கலாம்; கருணாநிதி எம்.ஜி.ஆருக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல. பலநேரங்களில் எம்.ஜி.ஆரையும் மிஞ்சினார்; திருச்சி கிளைவ் மாணவர் விடுதித் தாக்குதலாகட்டும், நெய்வேலி தொழிலாளர் போராட்டமாகட்டும், அவருக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியபோது படுகொலை செய்யப்பட்ட மாணவன் உதயகுமாரின் தந்தையையே ‘தன் மகன் இல்லை‘ என்று சொல்ல வைத்ததாகட்டும், புரட்சியாளர் கலியபெருமாளின் குடும்பத்தின் மேல் நடத்திய அடக்குமுறையாகட்டும் – ஒவ்வொன்றும் இவரது வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும்.

கூகுளில் அல்லது விக்கி பீடியோவில் போய் வரலாற்றைக் கண்டறிவது மெத்த எளிது. யார் என்ன ஏற்றுகிறார்களோ, பதிவிடுகிறார்களோ அதை அவை தரும். உண்மை கண்டறியாது. ஆனால் சமூக யதார்த்தங்களை, உண்மைகளை அதற்கும் அப்பாற்பட்ட தேடுதலிலிருந்துதான் பெற முடியும்.

உண்மைகளுக்கும் யதார்த்தத்திற்கும் எதிராக உரைப்பது ஜெயமோகன் போன்றவர்களுக்கு ஒரு வழமையாகியுள்ளது. இலக்கிய உலகம் இது போன்ற பதிவுகளை கவனம் கொண்டு பரிசீலிப்பது அவசியம்; இல்லையெனில் தவறான வரலாற்றுப் புரிதல்களுக்கு இட்டுச் செல்லப்படுவோம். வரலாற்றில் வாழ்தல் என்பது உண்மையான வரலாற்றை அறிதல் தான். அது எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை.

தொடக்ககால முதலாகவே பல வரலாற்று விசயங்கள் தொடர்பில், ஜெயமோகன் ஊகங்களின் அடிப்படையில் கூற்றுக்களை உதிர்ப்பது அவரது பண்பாக இருந்து வந்துள்ளது.இப்பண்பானது காலப்போக்கில் வலுப்பெற்று முக்கியமான வரலாற்றுப் பொருண்மைகளில் அநாயசமான பிரகடனங்களையும் அதிரடியான கூற்றுக்களையும் உதிர்ப்பதை நிரந்தரமாக்கியுள்ளது. நிதானமான தேடலோ, பொறுப்போ இன்றி, தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணை அவரை வாசிக்கும் இளம் வாசகர்களை எந்நிலைமையில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்பது துயரமான ஒரு கேள்வியே. 

பா.செயப்பிரகாசம்
09-08-2020

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content