எழுத்தாளர் இராசேந்திர சோழனுக்கு விருது


2020-ஆம் ஆண்டின் ’விஷ்ணுபுரம் விருதை’ நிராகரித்து, ’விஜயா வாசகர் வட்ட விருதை’ ஏற்றிருக்கிறார் எழுத்தாளர் இராசேந்திரசோழன்.

பிரபலம் என பேசப்படும் ஒரு எழுத்தாளரால், "விஷ்ணுபுரம் விருது ” ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 2020-க்கு தகுதியானவராய்த் தன்னைத் தீர்மானித்த வேளையில், இராசேந்திரசோழன் அவ்விருதை ஏற்க மறுத்தார். விருது வழங்கும் எழுத்தாளர் இலக்கியத் தளத்தில் இந்துத்துவா சார்பாளர் என அறியப்பட்டவர். விருது மறுப்புக்கு மற்றொரு காரணமுண்டு - இதனை வழங்குவதன் மூலம், ஒரு இடதுசாரி எழுத்தாளர், தமிழ்த் தேசியரின் இலக்கிய ஊழியத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என மகுடம் சூடிக் கொள்வது.

எமக்குள் விருது மறுப்புப் பாரம்பரிய வித்து எக்காலத்தினும் உயிர்ப்புக் கொண்டிருக்கிறது.நோபல் விருதை மறுத்து அறிவித்தார் பிரெஞ்சு எழுத்தாளர் ழீன் பால் சாத்தர். தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி விருதையும், நடுவணரசின் சாகித்ய அகாதமி விருதையும் மறுத்து நின்றவர் பாவலர் இன்குலாப்.

”விருது வாங்கப்படுகிறது; வழங்கப்படுவதில்லை” என்று ஒரு முதுமொழி நிலவுகிறது. தத்துவம், கோட்பாடு, குழு, நிறுவனம் போன்றவற்றினால் தீர்மானிக்கப் படும் விருதுக்கு சார்பு உண்டு. விருது வழங்குவோரின் சமூகப் பாத்திர வெளிப்பாடு முக்கியமாய்க் கூர்ந்து அவதானிக்க வேண்டியது. அவர் அல்லது நிறுவனத்தின் தகுதி , நோக்கம் என இவற்றால் விருதைப் பெறுகிற நாங்கள் எமது எழுத்துத் தகுதியை முடிவு செய்கிறோம். இத்தகைய சூழலில் ’விஷ்ணுபுரம் விருதை’ நிராகரித்து நிகழ் சாட்சியாகத் திகழுகிறார் இராசேந்திர சோழன்.

2

இது தாயைப் பிள்ளையைத் தனித்தனியாய் ஆக்கிய கொரோனா பெருநாசத் தொற்றுக் காலம்; இதுபோல் பேரூழி நாசம் பஞ்சம் பசி பட்டினி என்று நாட்டுப்புறப் பாடல்களில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

”ஆளாக்கு உருண்ட பஞ்சம் ஆயனைத் தோற்ற பஞ்சம்
நாழி உருண்ட பஞ்சம் நாயகனைத் தோற்ற பஞ்சம்
கணவனைப் பறி கொடுத்து கைக்குழந்தை விற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து தனிவழியே நின்ற பஞ்சம்
கூரை பறிகொடுத்து கொழுநனைத் தோற்ற பஞ்சம்
குத்துலக்கை கூடை முறம் விற்றுத் தீர்த்த பஞ்சம்“

- தொற்று தோற்றுவித்த நாசம் பாதியெனில், தொற்றைக் காட்டி ஆட்சியாளர் ஆடிய ஆட்டம் அதனினும் பலமடங்கு: எட்டு மாதங்கள் கொரோனா காலத்தையும் அதன் சத்புத்திரர்களையும் எதிர்த்து நின்றனர் மக்கள். மக்களின் உடன்நின்று எழுதினோம்;பேசினோம் நாங்கள்; நாங்கள் என்றால் சமகாலத்தை எழுத்துக்குள் விதைத்தவர்கள். நாங்களெனில் கடந்த கால இலக்கியப் பயணியரும் சமகாலப் பயணியரும் கொண்ட வட்டம் அது.

“காலத் தீயில் வேகாத, பொசுங்காத தத்துவம் நாம்” என்பார் கவிஞர் மீரா. காலத் தீயில் வேகாத, பொசுங்காத தத்துவமான சமூக விஞ்ஞானம் என்னும் மார்க்சிய தத்துவத்தை நாங்கள் கைப்பிடித்தோம். அறிவியல் எப்போதும் செழுமைப்படுத்தற்குரியது. சென்ற நூற்றாண்டில் பிறந்த சமூக அறிவியல் வளர்ந்து கொண்டே செல்கிறது. ஒருபோதும் அழிக்கப்படு வதில்லை.

தமிழகத்தில் மார்க்சியம் தமிழால் அன்னியப்படுத்தப்பட்டு இருந்தது. அதன் தத்துவச் சொற்கள் வாசிப்புக்கு, புரிதலுக்கு அகப்படாததாய் வெளிப்பட்டன. மார்க்கசீயத்தை அறிமுகம் செய்து, அர்த்தவுரையெழுதி தொடக்கத்தில் கிடைத்தவை மொழியாக்க நூல்கள். சொல்லுக்குச் சொல் வார்த்தைக்கு வார்த்தை யாந்திர கதியாக வெளியாகின. சமூக விஞ்ஞானத்தை சுயமாக உள்வாங்கி வெளிப்படுத்தும் மொழியாக்கத் திறன் தேவைப்பட்டது.அது ஒன்றே வாசகரின் கிரகித்தல் திறனைத் திறக்கும் திறவுகோல். தன் சமகாலக் கடமைகளில் ஒன்றாக இராசேந்திரசோழன் மார்க்சியத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார். நூலாக வெளிக் கொண்டு வர போதிய பொருளாதார வசதியில்லை. ”மார்க்ஸிய சிந்தனைகளை தவணையில் தருகிறோம்” என்ற அறிவிப்புடன் சிறுசிறு நூல்களாக வெளியிட்டார்; இதுதான் இன்றைக்கு ”மார்க்சிய மெய்யியல்” என்னும் நூல்.

1980-களில் கூடங்குளம் அணுமின் நிலையம் அடிக்கல் நாட்டப்பட்டு அணுமின் நிலையம் வேண்டாம் என்ற கொந்தளிப்பு கொடிபிடித்த நேரம்; ஆனால் அணுத் தொழில்நுட்பம் குறித்து, அதன் பிரச்சனைகள் குறித்து, தார தம்மியங்கள் பற்றி அறிந்து கொள்ள ஒரு தெளிவான நூலும் இல்லை. கடுமையான வாசிப்பிற்கும் தேடலுக்கும் உட்படுத்திய அவர் இப்பணியைத் தன் தோள்மேற்போட்டுச் செய்தார். ”அணுசக்தி மர்மம் - தெரிந்ததும் தெரியாததும்” என்ற விளைச்சல் கிடைத்தது. இவ்வளவு எளிமையாக எங்களால் கூட எழுதுவது கடினம் என்று பல இயற்பியல் பேராசிரியர்கள் சொல்லும் அளவுக்கு அது கவனம் பெற்றது.

மேலை இலக்கிய உலகில் புதிதாக ஒரு ஆய்வுப் போக்கு, ஒரு சிந்தனைக் கொடி படருகிறதென்றால், இங்கு தமிழில் அதை தமதாக்கிக் கொண்டாட திமு திமு என்று ஒருகூட்டம் கூடிவிடும். இங்கு அப்போதுதான் போஸ்ட் மாடர்னிசத் தாக்கம் தீவிரமாக உள்நுழைய ஆரம்பித்திருந்தது. பின் நவீனத்துவப் பித்து கொண்டு புரியாத மொழிப் பின்னலை உருவாக்கி படைப்புக்களைச் சிலர் தந்துகொண்டிருந்த தமிழ்ச் சூழலில், ”பின்நவினத்துவப் பித்தும் தெளிவும்” என பித்தம் தெளிய மருந்தொன்று கொண்டுவந்தார் இராசேந்திர சோழன். பின்நவீனத்துவம் பற்றிய தெளிவான ஒரு புரிதலை எழுத்தாளர், வாசகரிடையே ஏற்படுத்தினார்.

நாடகம் குறித்து தமிழில் கோட்பாட்டு ரீதியாக எழுதப்பட்ட ஒரு நூலும் இல்லை என்கிறபோது ”அரங்க ஆட்டம் ”என மூன்று பகுதிகள் கொண்ட நூலை அவர் தமிழ் நாடக உலகத்துக்குத் தந்தார்.

அந்தந்த இலக்கிய காலகட்டத்தின் தேவையும் முக்கியத்துவமும் அவரை உந்துகின்றன; அதற்கு முன்னுரிமை தந்து வினையாற்றி அறிவுலகப் பணிகளை முன்னெடுத்தார் என்பதில் நிறைவு அளிப்பதாக உணர்கிறார். படைப்புத் துறையில் அவர் உச்சம் எய்தியிருக்க வேண்டியவர். குறிப்பிட்ட துறையில் மட்டுமே இயங்கி செல்வாக்கு மிக்க ஒரு மிகப்பெரிய ஆளுமையாக அவர் பரிமளித்திருக்க முடியும்; அவரின்றிப் போயிருந்தால் சமூகத்தின் கொந்தளிப்பான நிலைமைகளில் கோட்பாட்டு ரீதியான தேவைகளை, அந்த பங்களிப்பைச் செய்ய வேண்டியது யார் என்னும் கேள்வி பதில் இன்றியே மூடப்பட்டிருக்கும். அந்தந்த காலகட்டத்தின் அறிவு தேவையின் முக்கியத்துவம், முன்னுரிமை கருதி கடமையாற்றிய கடந்த 58 ஆண்டுக்காலப் பணிகளில் தனக்கு நிறைவு இருக்கிறது என்று பெருமிதம் கொள்கிறார்.

இலக்கிய உருவாக்கம் பற்றி அவருக்குத் தெளிவான அறிதலுண்டு. அது ஒரு அகவழிப் பயணம் எனக் குறிப்பிட்டார்.

“நாம் வாழ்க்கையில் பார்க்காத, அனுபவப் படாத ஒன்றை எழுதக்கூடாது என்று நினைக்கிறீர்களா?”

”எழுதக் கூடாது என்று சொல்லவில்லை. நாம் எழுதுகிற களத்தையும் அதில் உயிரோட்டமாய் நடமாடிக் கொண்டிருக்கிற மனிதர்களின் வாழ்க்கைச் சாரத்தையும் உள்வாங்கிக் கொள்ளாமல் அவ்வளவு சிறப்பாக ஓர் இலக்கியத்தைப் படைக்க முடியாது என்று சொல்கிறேன். இலக்கியம் என்பது அகப்பயணத்தின் வழியே உருவாவது.”

3

விஜயா பதிப்பக வேலாயுதம் தொடங்கிய இடம் மளிகைக் கடை. கடை வேளையாளான அவருக்கு கடை உரிமையாளரிடம் சில சலுகைகள்; கடையில் இடதுபக்க வரிசையில் புத்தக அடுக்குகள். சாமான் வாங்க வந்து போவாரிடம் நேசபூர்வமாய்த் தொற்றிக் கொள்வார். இந்தப் புத்தகம் வாசித்தீர்களா, அந்த நாவல் படித்தீர்களா என்ற விசாரிப்புடன் தொடுவார். மளிகைச் சிட்டையுடன், புத்தகச் சிட்டையும் சேர்ந்துகொள்ளும்;

கடை இருந்த இடம் கோவையில் ’லங்கர் கானா’ தெரு.

இன்றைய தினத்தில் கோவையின் மையமான டவுன்ஹாலில் விஜயா பதிப்பகம்.

மளிகையிலிருந்து புத்தக மாளிகை! இரண்டு மாடிக் கட்டிட மாளிகை. வாழ்க்கையை எங்கு தொடங்கி எந்த இடத்திற்கு நகர்த்த வேண்டும் என்பதில் மேலான தெளிவு. இல்லையெனில் சாதாரணக் கடையிலிருந்து ‘டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்‘ என்று அழைக்கப்படும் பெரிய வணிகவளாகத்துக்கு நகர்ந்திருக்க முடியும்.

விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஐந்து ஆண்டுகளாக வாசகர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது; கடந்த ஆண்டு (2019) ஜெயகாந்தன் விருது எனக்கு வழங்கப்பெற்றது.இந்த ஆண்டு அந்த விருது எழுத்தாளர் இராசேந்திர சோழனுக்கு, புதுமைப்பித்தன் விருது - எழுத்தாளர் மலர்வதிக்கு: கவிஞர் மீரா விருது எழுத்தாளர் அகரமுதல்வனுக்கு என மொத்தம் 5 விருத்துகள். ஜெயகாந்தன் விருது ரூ. ஒரு லட்சம். மற்றவை ஒவ்வொன்றும் ரூ.25 ஆயிரம்.

விருதுவழங்கலுக்கு கேடு காலம் 2020 மார்ச் 25ல் ஆரம்பமானது. கொரோனா ஊரடங்கு.

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” - நமக்குச் சொல்லப்பட்ட உறவுச் சூத்திரம்.

“தனித்திரு விழித்திரு” - கொரோனா சூத்திரம்.

இன்று தீர்ந்திரும் நாளை சரியாகும் என்றெல்லாம் கனவுகள் கடந்து போய்க் கொண்டிருந்தன . பிப்ரவரி 2020 இல் அறிவிக்கப்பட்ட விஜயா வாசகர் வட்ட விருதுவழங்கும் விழா, உலகத்தை தனது ஆடுகளமாக்கிக் கொண்ட கொரோனாவால் முடங்கிற்று. பிப்ரவரி 2020 முதலாக, 2020 அக்டோபர் வரை எந்த இலக்கிய நடமாட்டமும் தென்படவில்லை. எல்லா நிகழ்வுகளும் காணொளிகள்! கைபேசி, வாட்ஸ்அப், லேப்டாப், காணொளி - இவை கொரோனாவும் ஆட்சியாளரும் நமக்குக் கையளித்த மின்னணுக் கருவிகள்; நம்மைச் செயலற்று ஆக்க முயன்ற கைபேசி, வாட்ஸ்அப், லேப்டாப், காணொளி போன்ற மின்னணுக் கருவிகளை கைகொண்டு ஊரடங்குக் கோட்டையை ஊடுருவினார் வேலாயுதம்.


அக்டோபர், 24- ஆம் நாளில் (24 -10- 2020) ஒரே நேரத்தில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நீதியரசர் சுரேஷ் குமார் விருது வழங்க, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், ஊடகவியலாளர் மயிலை பாலு வாழ்த்துரை வழங்க, விருது பெற்ற எழுத்தாளர்களாகிய இராசேந்திர சோழன், அகரமுதல்வன் ஆகியோர் அரங்கிலேயே ஏற்புரை நிகழ்த்திட, கோவையிலிருந்து மெய்நிகர் நிகழ்வாக காணொளியில் ஒருசேர வெளிப்பட்டு நடந்தது. விழா நிகழிடம், பங்கேற்றோர், பார்வையாளர், காணொளி என்ற நான்கும் இணைந்து தமிழகமெங்கும் இருந்த விரிந்து பரந்த வாசகர்கள் மெய்நிகர் விழாவை கண்டு உள்வாங்கினர்.

வேறெந்த மதிப்பீடும் விருதும் தேடாத இலக்கிய எழுத்தாளராய், சமுகச் செயற்பாட்டாளராய் இயங்கிய எழுத்தாளர் இராசேதிர சோழனுக்கு ஊரடங்கை ஊடுருவி விருது வழங்கி வெற்றியைச் சாதித்தவர் வேலாயுதம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்