அக்னி மூலை – கதைச்சுருக்கம்

நான் சந்தித்த சாதாரண மக்கள், வாழ்க்கையில் எந்த ஒன்றுக்கும் எதிர்வினை ஆற்றிக் கொண்டு இருந்தவர்கள். வாழ்தலுக்கு எதிர்வினையாற்றுதல் முக்கியம். இந்த எதிர்வினை இயக்குதலை உறுதி செய்கிறது என்கிறார் செயப்பிரகாசம்.

சாமி கொண்டாடியோட புதுப் பெண்டாட்டிய காணோம் என்றும், ஓடிப்போயிட்டா என்றும் பேசிக் கொண்டார்கள். பூப்பனி சிந்தி ஈரப் பதமுள்ள காலையிலும் அந்தத் தீ பற்றிக் கொண்டே வந்தது.

காவல்கார பெருமாள் மாமா சிறு சிரிப்புடன் தனது வேலையைத் துவக்கினார். களவு போன பொருள் ஒன்றிருக்கிறது. அப்படியானால் களவாடியவன் ஒருவன் இருக்க வேண்டும். ஓவ்வொரு வீடாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.

மூன்று வீடுகளில் ஆண்கள் காணாமல் போயிருந்தார்கள். இளவட்டக்கல் தூக்கி அந்தா என்று போடுகிற வயசுப் பிள்ளைகள். ஒருவன் உடன் பிறந்தாளுக்கு கட்டிச் சோறு கட்டிக் கொடுத்து வருவதற்காக தாயார்க்காரியுடன் மிளகுநத்தம் போயிருக்கிறான். கீழ்வீட்டு ராமசாமி கோடைவேலை இங்கெதும் இல்லையென்று தூத்துக்குடி உப்பள வேலைக்குப் போய் இரண்டு பொழுதுகள் ஆகிவிட்டன. மூன்றாவது வீட்டின் முன் அவர் காலடிகள் தயங்கித் தயங்கி வட்டமிட்டன.

பிள்ளையார் கோயில் மண்டபத்தில் படுத்திருந்த கொப்பையாவிடம் கூட விசாரித்தார். தூக்கக் கலக்கத்திலே “அரிச்சலாத்தான் தெரிஞ்சுது, மாமா நா சரியா பாக்கலே”னு சொல்லிட்டான்.

பெருமாள் மாமாவைச் சுற்றி ஒரு கூட்டம் சூழ்ந்து கொண்டது. விசயத்தை உருவிவிட வேண்டுமென்ற ஆவல் தெரிந்தது. 

“உங்க தடம் என்ன சொல்லுது மாமா?” 

பெருமாள் மாமா மெதுவாக இடுப்பில் செருகியிருந்த புகையிலைத் தடையை எடுத்தார். இரண்டு விரல்களால் போயிலையை ஒரு குத்து எடுத்து வாயிலே அதக்கிக் கொண்டார். காவல் கம்பை தலையின் ஊன்றி இரண்டு கைகளையும் கம்பின் மேல் பதித்து முகத்தை அதன் மேல் வைத்தபடி மெதுவாக பதில் சொன்னார். 

“தடம் தர்மகர்த்தா வீடு வரை போகுது”.

மல்லேசுவரம். ரெண்டு பனை உயரமுள்ள மரத்தில் உச்சாணிக் கொப்பில் ஏறிப் பார்த்தார் ஏழு ஊர்கள் சுற்றியிருப்பது தெரிந்தது. வைகாசி ஆனியில் குலதெய்வதிற்கு ஊர்ப்பொங்கல் நடத்தினார்கள். ஏழூர்களுக்கும் இங்கிருந்தே சாமி அழைப்பு நடந்தது. ஒரு மாதத்திற்கு முன்பே ஊர் கூட்டி, ஊர்க் கூட்டத்தில் பொங்கல் நடத்துவது பற்றி முடிவு செய்து தெரிவிக்கப்படும். அதே தேதிகளில் அடுத்த ஊரில் பொங்கல் முடிவு செய்யக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

சாமியாடிக்கும் பூசாரிக்கும் மட்டும் மகசூல் காலம் வித்தியாசமாக வந்தது. எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் வைகாசி ஆனி மாதங்களே அவர்களுக்கு வசூல் காலம். சாமி ஆடும் கூலி ரெண்டு மாதத்திற்கு வயிற்றைப் பொல்லம் பொத்தப் போதுமானதாக இருந்தது.

தொள்ளாளிகள் குடும்பத்தோடுதான் அவர்கள் சேர்க்கப்பட்டார்கள். சம்சாரிகளுக்கு கீழே சிறு தொழில் செய்து வாழ்கிற வண்ணான், குடிமகன், பண்டாரம் ஆகியோர் தொள்ளாளி குடும்பம் என்றுதான் அழைக்கப்பட்டது. இவர்கள் எல்லோரும் காலையிலும் ராத்திரியும் அன்னம் போடுங்க தாயி என்று சம்சாமி வீடுகளுக்கு கஞ்சிக்குப் போனார்கள். ஆனால் சாமியாடிக் குடும்பம் வீட்டுக் கஞ்சி எடுப்பதில்லை. மகசூல் காலங்களில் தொள்ளாளி அளப்பு என்று கொஞ்சம் நவசம் தானியம் கிடைத்தது.

சாமியாடி குடும்பம் அருகிப் போய்விட்டது, கையில் அரிவாள் ஏந்தி சாமியாடுகிற மயிலேறி ஒருவன் மட்டுமே மீதியிருக்கிறான். சாமியாடுகிற நேரங்களில் மயிலேறி கள் குடிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவன் கள் குடிப்பதில்லை. பச்சை ரத்தம் குடிக்கிறான். கொழு கொழுவென்று நோயற்றிருக்கும் செழித்துப் போன சேவலின் ரத்தம் சாமியாடுகிறபோது ஒவ்வொரு ஊரிலும் ஏழு எட்டு இடங்களில் காவு கொடுக்கிறார்கள்.

இப்போதும் பச்சை ரத்தம் குடித்தது போன்ற சூடு உடலில் ஏறி கண்களைத் திருகித் திருகி மேலே பார்க்கிறான். மனக் காய்ச்சலால் கொதிப்பேறிப் போயிருக்கும் சூடு, நெற்றிப் பொட்டு நாண் ஏற்றியது போல் தெறிக்கிறது, மனசு நொடித்துப் போய் உள் ரணம் ஏறி ஜிவ்வென்று வலி தெரிக்கிறது. சொப்பனத்தில் செய்யப்பட்ட சபதங்கள் கலைந்ததுபோல் கலைந்து போன வாழ்க்கையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். ஒரு மாதத்திற்கு முன் ஒரு பெண் புதுச் சேலை வாசனையும், மேனி வாசனையும் தழுவ பக்கத்தில் இருந்தாள். இப்போது அவள் இல்லை.

இரவு நேரம் ஆகிவிட்டால் ரெட்டி ஜாதி வீடுகளிலும், நாயுடு ஜாதி வீடுகளிலும் கூடுவிட்டு கூடு பாய்தல் நடக்கிறது. ஒரு வீட்டு வாசலை ஒருவர் மாற்றி மிதிக்கிறார்கள். இது ஒரு ஒழுங்கு முறைபோல் சங்கிலித் தொடர்போல் நடக்கிறது.

இரவில் எல்லா பெரிய ஜாதி வீட்டுக் கதவுகளும் திறந்தே இருந்தன. அது ஒரு ஒப்புக் கொண்டுவிட்ட ஒழுங்கு முறை. படல்கள் மட்டுமேயுள்ள சின்னக் குடிசைகளுக்கு எந்தக் காவலும் தேவையிருக்கவில்லை. நினைத்த நேரத்தில் படல் கதவை லேசாகத் தூக்கி வைத்து விட்டு உள்ளே நுழைய முடிகிறது.

பண்டாரம், வண்ணான், கொத்தாசாரி, கொல்லாசாரி குடிமகள் எல்லா தொள்ளாளி வீட்டுப் பெண்களும் அவர்களுடைய உடமைச் சாதனங்களைப் போலத்தான் நினைத்த நேரத்தில் அவர்கள் கை வளைவுக்குள் போவதும் நடந்தது. ஆயின் குடிசைகளுக்கு அவர்கள் வருவதில்லை.

வெள்ளைச் சேலைக்காரியான முத்தையா பண்டாரத்தின் கொழுந்தியாள் வடக்குக் கடைசியில் ஒரு வீட்டில் வாழ்ந்தாள். ஒரு இரவில் வெளியே தட்டும் சத்தம் கேட்டது. உள்ளே இருந்த சாமியாடியின் தம்பி சங்கு வெள்ளை பலகையை மட்டும் திறந்து இருட்டில் தயாராக நின்றான். உள்ளே வந்த பிரசிடெண்ட் முதலாளி மகனை சங்கு வெள்ளை வெறிகொண்டு அடித்துக் கொண்டிருந்தான். அடிபட்டவன் சாக்கடையில் விழுந்து ஓடினான். நள்ளிரவில் சங்கு வெள்ளை அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டான்.

சாமியாடுவதற்கு இருந்த இரண்டு பேரில் ஒன்று குறைந்து விட்டது.

அழகுத்தாய் திரும்பி வந்து விட்டாள். அவனுடைய இனத்தைச் சேர்ந்த வேலாயுத அம்மான் அவளைக் கூட்டி வந்தார். குடிசை வாசலில் வெளியே நிறுத்தி விட்டு உள் நுழைந்து அம்மான் சொன்னார். “அந்த மல்லேசுவரியம்மன் மேலே ஆணை ஒண்ணும் செய்யப்புடாது. பெறகு எல்லாத்தையும் பேசிக்கிடுவோம்”. அம்மான் போய்விட்டார்.

வா என்று அவளை மயிலேறி கூப்பிடவில்லை. அவன் வெளியே வந்தான். அவள் உள்ளே போனாள். ஒரு பொந்தில் வாழும் பிராணிகள் போல் போவதும் வருவதும் நடக்கிறது.

இரண்டு நாட்கள் வெளித் திண்ணையிலேயே அவன் உறங்குவதைப் பார்க்க முடிந்தது. மூன்றாவது நாள் அவன் அங்கே இல்லை. கிழக்குத் தெரு மடத்தில் ஒரு ஓரத்தில் ஒண்டிப் படுத்துக் கொண்டிருந்தான்.

சாமிக்கு அருள் ஏற்றுகிற வேலையில் பையன்களும் பெண்களும் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. பயத்தில் இருளடித்து விடும். வெறிகொண்டு கொட்டும் உடுக்கை ஒலிபோல் லுலு லுலு என்ற குலவை ஒலி மேலெழுந்தது. சக்கிலியக்குடி, பள்ளக்குடி, பறைக்குடி பெண்களுக்கு மட்டுமே நாக்கு இதற்காக ஆக்கப்பட்டிருந்தது. கத்தாளம்பட்டி கொட்டுக்காரர்கள் வரவில்லை. அதனால் அவர்கள் குலவைச் சத்தம் மிகவும் தேவைப்பட்டது.

முதன் முதலாக உள்ளூர் சக்கிலியக் குடியிலிருந்து மேளமும், உறுமியும், நாயனமும் வெளியே வந்தன. சாவு வீட்டுக்கு மட்டுமே அவர்கள் இதுவரை அழைக்கப்பட்டார்கள். இப்போதுதான் சாமி சன்னதிக்கு வந்திருக்கிறார்கள். அது ஊர்க்காரர்களின் கேலிக்கும் ஆளாகியது.

படீர் படீர் என்று சாமியாடியின் தோள்கள் மேலெழும்பிக் குதித்தன. எலுமிச்சங்காய் குத்திய அரிவாள் மார்புக்கு நேரே முன்னும் பின்னும் ஆடியது. இதுவரை அவர்களுக்கு தெரிந்த மயிலேறியாக இல்லை. உடல் தசை முறுக்கேறி மண்ணில் கால்கள் பதியாமல் பறப்பது போலிருந்தது. வாயிலிருந்து புஸ் புஸ் என்று சத்தம் வந்தது, தோள்கள் குலுங்கி தலை அதிர ஓய் என்று பெருங்கூச்சலிட்டான். தலை எகிறி கழுத்து சிலிர்த்து எதிரி மேல் பாயும் கடா போல் உதறி உதறிப் பாய்ந்து கொண்டிருந்தான்.

காலையில் பெரிய கோபால் வீட்டுத் தொழுவத்தில் மறிலேறியை கூட்டி வைத்து சமாதானப்படுத்தினார்கள். சங்கரப்ப நாயக்கர் பெரிய கோபால் தர்மகர்த்தா பலரும் கூடிப் பேசினார்கள். “ஓம் வீட்டுக்கு வந்தது நம்ம வீட்டுக்கு வந்தது மாதிரிதான், மனசிலே வச்சிக்கிராதே மயிலேறி சாமி காரியத்தை நினைச்சு மனசிலே ஆத்திக்கோ” சங்கரப்ப நாயக்கர்தான் பேசினார்.

கோபால் மயிலேறியின் புது மனைவியை தள்ளீட்டுப் போன சென்னையனைக் கூப்பிட்டார். “போல துப்புக் கெட்ட மூதி ஒனக்கு இப்படித்தான் கூட்டிப் போகத் தோனுதாக்கும், ஒனக்காகத்தான் மயிலேறி பொறுத்துக் கிட்டான் போ.”

பேச்சற்று மௌனகோலத்தில் உட்கார்ந்திருந்த மயிலேறி இல்லை இப்போது இந்தச் சாமியாடி.

தலை வழியே பானைபானையாய் மஞ்சத் தண்ணீர் கொட்டப்பட்டது. அரிவாள் நனையாமல் உயரத் தூக்கி வலது முழங்காலை மடித்து இடது காலை நீட்டி அனுமான் தாவும் தோரணையில் தண்ணீரை ஏந்திக் கொண்டான்.

இதயம் வரை பச்சை ரத்தம் பாய்கிறது. ஒவ்வொரு அணுக்கால்களிலும் வெறி பயிராகிறது. முதல் காவு அருள் ஏற்றும் இடத்தில், பிறகு நாலைந்து சேவல்கள். நாலு மூலைகளில் காவு கொடுத்தாகி விட்டது. தென் கிழக்கு மூலையைச் சுட்டிக் காட்டியபடி ஒரு பெரியவர் கேட்டார் “அக்னி மூலைக்கு யார் காவு கொடுக்கிறது?”

“சென்னையன் போயிருக்கான்”. சாமியாடி இருளில் மறைந்தான். வெறிகொண்டு முழங்கும் மேளச் சத்தமும் குலவையும் பின்னாலிருந்து கேட்டது. சாமியாடி அக்னிமூலை இருளில் பாய்ந்தான். வெறிகொட்டும் மேளம் கொஞ்சம் நின்றது. குலவையிட்ட நாக்குகள் வறண்டு போய்விட்டன. காவு கொடுத்துத் திரும்ப இவ்வளவு நேரம் ஆக வேண்டியதில்லை. காவு கொடுப்பவனுக்கு வாகாய் ஏந்தத் தெரியவில்லை போலிருக்குது. கூட்டத்திலிருந்தவர்கள் இருளையே ஊடுருவித் தேடினார்கள்,

தென்கிழக்கு மூலையிலிருந்து ஒரு சேவல் தனியே ஓடி வந்தது.

கூட்டம் முதலில் சிதறியது. பிறகு இருளில் மூலையை நோக்கி ஓடியது. கழுத்து கடிபட்டு கீழே கிடந்து துடிக்கு காவு கொடுத்தவனின் உடல் தெரிந்தது. அவனுடைய கழுத்திலிருந்து பீச்சியடிக்கும் ரத்தம் அவர்களின் நெற்றிக்கு நேரே பாய்ந்தது. ஒரு துள்ளலில் அந்த உடல் மேலே வில் போல் எகிறி கீழே பொத்தென்று விழுந்தது.

சாமியாடியைக் காணோம்.

ராமச்சந்திர வைத்தியநாத் - BookDay

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி