நீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு!மாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு,


வணக்கம்.

எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர்.

என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி.

எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்ததும், நீட் தேர்வுக்கு தயாராகிறாயா என விசாரித்தேன். அவளுக்கு ஆங்கிலத்தில் பேச வராது; பிளஸ் 2 தேர்வுக்கு தேவையான அளவு ஆங்கிலம் மாத்திரம் தெரியும். நீட் தேர்வு எழுத மறுத்து விட்டாள். நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் விளாத்திகுளத்தில் இல்லை, இத்தனைக்கும் அது பேரூராட்சி. 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோவில்பட்டி அல்லது தூத்துக்குடி நகருக்கு நாள்தோறும் பேருந்தில் சென்று வரவேண்டும். அந்த அளவுக்கு செலவழிக்கவும் முடியாது.

ஆயுஸ் மருத்துவம் என்று சொல்கிற ”ஹோமியோபதி மருத்துவம்” போகிறாயா எனக் கேட்டபோது, அதற்கும் நீட் தேர்வு எழுதித் தானே போகவேண்டும் என்று கேட்டாள். என்னிடம் பதிலில்லை. இறுதியில், வேறு வழியின்றி, தூத்துக்குடியில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் செவிலியர் படிக்கச் சேர்த்துவிட்டேன். தனியார் கல்லூரியில் - கல்லூரிக் கட்டணம் முதலாக விடுதிக் கட்டணம் வரை ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சம் செலவாகிறது. விவசாயக் கூலிகளான இவர்கள் ரூ இரண்டு லட்சம் எவ்வாறு செலவு செய்யமுடியும்? அதனால் தான் அவளது படிப்புச் செலவை நான் ஏற்றுச் செய்துவருகிறேன்.

ஒரு ஊமை ”என் மகள் மருத்துவராக வேண்டும் என்று கண்ட கனவு” ஊமை கண்ட கனவாகவே ஆகிப்போனது!

இப்படிக்கு
பா.செயப்பிரகாசம்,
சென்னை - 600 024

நாள்: 23-6-2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

கீழத்தெரான் – துரை.குணா கவிதைகள்

வட்டார இலக்கியம்

பலியாடுகள்