என்ன சொல்லி அழைப்பேன்? ஜெயமோகன்!

தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு என்ன நேர்ந்தது என்ற கவலை வந்துவிட்டது. பேதமை என்ற சொல்லின் பரிபூரணப் பொருளை இப்போதுதான் என் சிற்றறிவு புரிந்துகொண்டது. இன்று பரவிக்கொண்டிருக்கும் நோய் நுண்ணுயிரியை விட இது மிக மோசமானதெனச் சொல்கிறார்கள். எச்சரிக்கையாக இருக்கவே வேண்டும்.

நண்பர் பா.செயப்பிரகாசத்திற்கும் தங்களுக்கும் என்ன தான் பிரச்சனை. திடீரென வாரிக் கொட்டுகிறீர்கள். புழுதி - இம்சையான புழுதி. சொத்து அல்லது சொந்தத் தகராறு ஏதும் இல்லாத பட்சத்தில் வேறு என்ன இருக்க முடியும்? அழுக்காறு. தங்களைப் போன்று அவருக்குச் சூழ அடியாள் கோஷ்டியில்லை. ஒரு சாதாரண புளித்த தோசை மாவுக்காக சண்டையிடுவதும், அறமற்றவைகளோடு சமர் புரிவதும் ஒன்றல்ல.

இந்த மனுஷர் இழந்தது நிறைய. எளிய மக்களோடு அன்பாகப் பழகுபவர். நேசம் அவருக்கு உயிர்ச் சொல். மாறுபட்ட கருத்துரைகளையும் அக்கறையாகச் செவிமடுபவர். மெலிதான குரலில் மறுப்பு சொல்பவர். களப்பணியாளர். இழந்தது ஏராளம். களப்பணியாளர்களுக்கு இது தான் சான்றாண்மை நிறைந்த வாழ்வு. நான் அவருடன் முரண்பட்டபோதெல்லாம் செவிமடுத்துக் கேட்டுவிட்டு வெகு மென்மையாகப் பதில் சொல்வார். எதிராளிக்கு வலிக்குமே என்ற மயிலிறகு வருடலாய் கரம் பிடிக்கும் அவரை தஞ்சவூரில் பி.ஆர்.ஓ-வாக இருந்த போதே அறிவேன். க.நா.சு பள்ளியாகிய நான் முரண்படுவதை ரசித்துவிட்டுப் பதில் சொல்வது அழகாக இருக்கும்.

தரமற்ற அறிவுஜீவி ஞானமடைவதே இல்லை. அபாயகரமான பொய்களை வீசுவது. அவைதான் உங்கள் மூலதனம் என்றறிய முடிகிறது. நீவிர் எழுத்தாற்றல் மிக்கவர்என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆயின் எல்லாவற்றையும் விட 'உண்மை' மகிமைமிக்கது என்று சொல்வதே சரியானது. நேர்மை, அறம் போன்ற சொற்கள் உங்களுடையதல்ல. உங்களுக்கு உவப்பானவையுமல்ல என்ற அபிப்ராயமிருக்கிறது. உங்களுக்கு எது தேவை என்று எங்களுக்குத் தெரியவில்லை. உங்களுக்கும் தெரியவில்லை. பாலத்தினடியிலிருந்து கல்லெறியும் வழக்கத்திலிருந்து மாறி எதிரே மண்டிக்கிடக்கும் சகதியைக் கிளறி விட்டேறிவதில் வல்லமையாளராக முன்னேறியிருப்பது முக்கியம். உங்களினுடைய துன்பியல் அரற்றலுக்குக் காரணம் ஏதும் வேண்டியதில்லை. குணவிசேஷம்.

பா.செயப்பிரகாசத்தின் மேன்மை வெகு அழகானது. நான் க.நா.சு பள்ளி என்பதால் அவரை நுட்பமாக வம்புக்கிழுப்பதுண்டு. அதை எதிர்கொள்ளும் மென்மை தனி. வண்ணநிலவன் தஞ்சையிலிருந்தார். பா.செயப்பிரகாசமும் தஞ்சையிலிருந்தார். சில மாலைச் சந்திப்புகள் நடக்கும். அப்போதிலிருந்து இன்றுவரை அவர் என்ன சாதி என்றறியோம். தன் சாதிகுறித்து அவரும் அறியார்.

அறியும் ஜெயமோகன்! மனதில் பதியும் பதிவாக தாங்கள் எதையுமே எழுதியதில்லை. அவதூறுகளை மட்டும் மிகச் செம்மையாக எழுதி விடுகிறீர்கள். அவதூறு எழுதும் கலை உங்களுக்கு எளிதில் சித்தித்திருக்கிறது. தாங்கள் போட்டுக்கொண்ட வட்டத்திலிருந்து வெளியே வரவேண்டும். அந்த வட்டத்திலிருப்பவை விகாரமானவை. இப்படி இருப்பதை மனநோய் என்பர் வல்லுநர்கள். தமிழ் எழுத்துலகம் தங்களின் ஆதீனதின் ஆளுகைக்குள் இருப்பதான பிரமை உங்களுக்கு இருக்கலாம். இறுக்கமான சூழலை உருவாக்கி அதன்மேல் உல்லாசமாக உட்கார்ந்து பறப்பது என்பது ஒரு கவனிப்புக்காகத்தான் என்று புரிகிறது. அழகான உலகத்தை அருவெறுப்பானதாக மாற்றும் முயற்சி சால்பன்று.

பா.செயப்பிரகாசம் எப்போதுமே தரை வழி நடக்க விருப்பவர். தூரிகையோடு களத்தில் நின்றுலவும் இனியவர். அதனால் அவர் சொற்கள் வாசனைமிக்கதாய் இருக்கிறது. பொறுப்பற்றவர்கள் தாம் எப்போதும் கவலைப்படுபவர்கள். வாழ்வின் இனிய உணர்வு இதுவரை கண்டிராத வண்ணப்பொலிவுடன் நறுமணத்துடன் பல்கிப் பெருகவேண்டும். அப்போதுதான் சரியான பாதையில் நிறுத்தும். பா.செயப்பிரகாசம் சமூக மரியாதை உள்ளவர். தொடர்ந்து அர்த்தமற்ற கலகத்தைச் செய்வதுஞானமற்றவர்களின் இயல்பு. அது தாங்கள் விரும்பும் அதீத வளர்ச்சிக்கு உதவாது. சுயமரியாதை வேண்டும்.அதைப்பெற தகுதியும் வேண்டும். ஏகப்பட்ட குழப்பத்தில் கிடப்பதால் சிறு உண்மையைக் கூட தாங்களால் பார்க்கவியலாது.

"நூதன பண்டிதோ வாசாம் விஸ்தாரம்
குருதே ப் ருஸம்"

என்று வாசித்திருக்கிறேன். புதிதாகக் கற்போன் ஆடம்பரமான சொற்பிரயோகத்தில் ஈடுபடுகிறான். உண்மையான முகத்தோடு இருந்து பாருங்கள். அதைவிடப் பேரழகு ஏதுமில்லை ஜெமோ.

- நா. விச்வநாதன், ஜுன் 6, 2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்