விருது மறுப்புக்குப் பின்னுள்ள பெண்ணிய அரசியல்

1

மலையாளத்தின் முந்திய தலைமுறை எழுத்தாளர், திரைப்பாடலாசிரியர், சாகித்ய அகாதமி விருது, ஞானபீட விருது பெற்றவரான கவிஞர் ”ஓ.என்.வி.குரூப் கலாச்சார விருது” பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டது; அறிவிப்புக்கு முதல் எதிர்ப்பு உதித்த இடம் சின்மயி என்னும் பின்னணிப் பாடகி. அவருடன் சேர்ந்து 17 பெண்களின் கூட்டறிக்கை (womens collective), ஓ.என்.வி கலாச்சார இயக்கத்தின் தலைவர், திரை இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் அந்த அறிவிப்பை தேர்வுக் குழுவினர் மறு பரிசீலனை செய்வதாக அறிவிக்கச் செய்தது.

கைபேசி, கணிணி, சின்னத்திரை என சமூக ஊடகங்கள் அறியப்படாத காலத்திலேயே வெள்ளித்திரை வலிமை ஆழ, அகல வேரூன்றி ஒரு நூற்றாண்டுக் காலம் ஓடிவிட்டது. அதன் ஓரம் ஒட்டிக்கொண்ட இலக்கியவாதிகளும் தகுதிக்கு மீறிய பேர் கொண்டு சீரும் செனத்தியோடு வாழ்வதைக் கண்டுகொண்டிருக்கிறோம். பதினாறு வயசில் ஒரு நடிகைக்கு என்ன அறிவுக்கூர்மை, அலசல் பார்வை சிந்தனை வளர்ச்சி இருக்க முடியும்! ஒரு கோணல் சிந்தைகொண்ட ’கூபை’ சொல்வதையெல்லாம் வைரங்கள், முத்துக்கள் என பூதாகரமாய் ஊதிப் பெருக்குகின்றன பீதி விற்கும் ஊடகங்கள்.

சமூகப் பிரபலங்களால் நடத்தப்பெறும் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளைப் பாலியல் சீண்டல் செய்ததாக - அரைகுறை ஆடையுடன் அவர்கள் முன் ஆன்லைன் வகுப்புக்களில் தோன்றியதாக, ’போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது ஆகி சிறையிலிருக்கும் நேரம்; பள்ளியின் பார்ப்பண நிர்வாகம் குற்றக் கூண்டில் நிற்க வைத்து விசாரிப்பில் இருக்கும் காலம். பெரும்பாலான பள்ளிகளெங்கனும் பாலியல் புகார்களின் வெள்ளப்பெருக்கு பொங்கி வீசியடிக்கும் வேளை. தொலைக்காட்சிகளிலும் இந்த ஏழரைச் சனியன் ஓடிக்கொண்டிருந்த நேரம் வைரமுத்துக்கு கேரளத்தின் ஓ.என்.வி.குரூப் விருது அறிவிக்கப்பட்டது. கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், ஆறுமுறை சிறந்த பாடலாசிரியர் விருதை ”வாங்கியவர்” என்ற ”பெருமைக்குரிய” வைரமுத்துவுக்கு ஓ.என்.வி.குரூப் விருது அறிவிப்பு வருகிறது.

உண்மையில் விருது அறிவிப்பு மட்டுமே அது. இன்னும் வழங்கப்படவில்லை; அதற்குள், அந்த அமைப்பு வழங்கிய விருதை தான் திருப்பி அளிப்பதாகவும், அவர்கள் வழங்கிய ரூ 2 லட்சத்துடன் தன்னுடைய ரூ 3 லட்சமும் சேர்த்து, கேரளாவின் தொற்று நோய்த் தடுப்புக்கு நிதியாக அளிப்பதாகவும் அறிவித்தார். ஆனால், மேடையில், தொலைக்காட்சியில் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி புராண நாடகீய பாணியில் வெடிப்புறப் பேசுவாரே அந்த தொனியை அந்த வார்த்தைகளில் காணமுடியவில்லை. பிரச்சினை எது தொடர்பானது என்று தந்திர சாமர்த்தியமாய் வாய் திறக்கவில்லை.

வைரமுத்துவின் வழக்கமான பாணியில், படோடபமான சொற்களில் மறுப்பு அறிவிப்பு வெளிவருதற்கு முன்பு 17 பெண்கள் இணைந்த ”பெண்கள் கூட்டமைப்பின்” (womens collective) கூட்டறிக்கை ஒரு மணி நேர வெளியீடாக ’யூடிபில்’ வெளியாயிற்று. நிகழ்வினை ’பர்கதா தத்’ என்ற பெண்ணியச் செயற்பாட்டாளர் ஒருங்கிணைக்க, எழுத்தாளர் மீனா கந்தசாமி, கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, புவனா சேஷன், கேரளாவின் திரைத்துறை சார்ந்த பார்வதி திருவோத்து - போன்ற 17 பேர் வைரமுத்துக்கு எதிராக கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

சின்மயி இந்த பிரச்சனையை ஏன் வெளியே கொண்டு வந்து போராடவில்லை என பின்னுள்ள அகப்புற தொழில் சிக்கல்கள் புரியாமல் விவரம் தெரிந்த பலரும் கூட கேட்கிறார்கள்.

”கவிஞர் ஏற்கனவே தன்னைச் சுற்றிக் கட்டியெழுப்பிய பிம்ப வியூகத்தை உடைத்தெறிந்து என்னால் வெளியே வர முடியவில்லை” என்று பலவீனமாய் ஒலித்த சின்மயின் குரலில் அடங்கிய சில அர்த்த அடுக்குகளை அவ்வளவு எளிதில் நாம் விளங்கிக்கொள்ள முடியாது.

”என்னை உடல் ரீதியாக துன்புறுத்தினார். அவரது அலுவலகத்திலும் வீட்டிலும் இந்தத் துன்புறுத்தல் நடந்தது. அவருக்கு எதிராக பேசுவதற்கும் வெளியில் சொல்வதற்கும் பயமாக இருந்தது. என்னுடைய தாயாரிடம் தான் இதைப் பகிர்ந்து கொண்டேன். திரைத்துறை ரீதியாக, தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக பாதிப்புகள் உருவாகும் என்று நாங்கள் பயப்பட்டோம். அவருடைய அபரிதமான செல்வாக்கைக் கண்டு நாங்கள் அஞ்சினோம்; மீ டூ (Me too) விவகாரம் உலகெங்கும் வெளிப்பட்ட போதுதான் இனி பொறுப்பதில்லை என்று வைரமுத்துவின் பாலியல் துன்புறுத்தலை வெளிப்படுத்தினேன்; அந்த நாள் முதலாக திரைத்துறை என்னை முற்றாக ஒதுக்கி வைத்தது; மூன்று ஆண்டுகள் புறக்கணித்தது; மௌனிக்கச் செய்தது. பெரிய இயக்குனர்கள் முதல் திரைத் துறைத் தொழிற்சங்கங்கள் வரை அனைவரும் இதனைச் செய்தார்கள். சில இயக்குநர்கள் நேரில் கூப்பிட்டு என்னை மிரட்டினார்கள். பெப்சி என அழைக்கப்படும் திரைத் தொழிலாளர் சங்கத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதில் பின்னணிக் குரல், பதிவுகள் செய்யும் சங்கத்தின் (South Indian Cine, Television Artistes And Dubbing Artistes Union {Affiliated With Fefsi}) தலைவர் ராதா ரவி. ஆனால், இன்றளவும் அந்த அமைப்பின் தலைவராகவே அதனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் வைரமுத்து. Dubbing association-ல் முறையிட்டும் என்னால் எதுவும் செய்ய இயலாது போயிற்று. இதை ஒரு பிரச்சினையாகக் கூட அவர்கள் கருதவில்லை”

செல்வாக்கு மிக்க ஆணுக்கு எதிராக பெண் எடுக்கிற போராட்டம் எத்தனை சிக்கலை உருவாக்கும் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்வோம்; பெண்ணுரிமை, பெண் விடுதலை என நாலு வார்த்தைகளை கவிதையில் வைத்துவிட்டுப் போவது வேறு; ஆனால் வார்த்தைகளை வாழ்வது என்பது வேறு. வாழுதல் என்பது தான் முக்கியமானது.

கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா வைரமுத்துவைப் பற்றித் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்.

“வைரமுத்து ஒரு போதும் முற்போக்கு அரசியலாளர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் அல்ல; முற்போக்கு அரசியல் பக்கம் அவர் தலை காட்டியதுமில்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் தாழ்த்தப்பட்டவர் மீதான வன்முறைகளுக்கு எதிராக அவர் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொண்டதில்லை; கண்டிப்பதுமில்லை. எழுத்தாளர் மீனா கந்தசாமி இங்கு குறிப்பிட்டது போல, அவருடைய பாடல்களிலும் எழுத்துக்களிலும் சாதியப் பெருமை வழிந்தது. ஒடுக்கும் சாதியை ஆதரித்து அதற்கு ஆதரவாகவே பேசுகிறவர். அதீத சுய சாதி மோகம் கொண்டு அதன் மூலமும் ஆதாயம் தேடும் அவர் ஒரு போதும் ஒடுக்கப்பட்ட சாதியினர் பக்கம் நின்றவர் இல்லை."

”இது போன்ற பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஒரு நபருக்கு ஆதரவாகவே ஆண்கள் பேசினார்கள். ஆண்கள் தொடர்ந்து அவர் பக்கம் நின்றனர். முழுத் திரைத்துறையும் அவர் பின்னால் நின்றது. விருது வழங்கும் போது ஒருவரைக் கேள்விக்குட்படுத்தாமல் வழங்குவது அவமானகரமானது” என்ற டி.எம்.கிருஷ்ணாவின் கருத்து வேறொரு புதிய வரையறைக்கு நம்மை வரச் சொல்கிறது.

மனிதன் என்பவன் ஒரு சமுதாய உயிரி. எந்த மண்ணில் பிறக்கிறானோ, அந்த மண்ணின் குணம், பண்பாடு, பேச்சு, பழக்கவழக்கம், அரசியல், சமுதாயம் பற்றிய கண்ணோட்டம் அனைத்துமாக அவன் உருவாக்கம் பெறுகிறான். அவனுக்குள் இருக்கும் மனுசனே கலைப்படைப்பாக வெளிப்படுகிறான். அவனுடைய ஆற்றல் திறன் என்பது இதை வெளிப்படுத்துகிற, சமுதாயத்துடன் பறிமாறிக் கொள்ளும் ஒரு முறைதான். முதலில் மனிதன், இரண்டாவது தான் கலை வருகிறது.

சீமான் போன்ற தமிழ் இன கலாச்சாரக் காவலர்கள் இந்தப் பொழுதில் மைதானத்துள் நுழைந்தனர்; இதில் தமிழ் தமிழினம் தமிழ்ப் பண்பாடு என்பதான பிரச்சனை ஏன் வருகிறது என்று தெரியவில்லை. ’மனுசம்’ என்ற பிரச்சனை முதலில் கருதப்பட வேண்டும். இந்த புள்ளியில் இருந்தே ஒருவரைப் பற்றிய பரிசீலனை இருக்க வேண்டும்.


2

ஆளுமை என்னும் சொல் இன்று பலரது நாவிலும் அடிக்கடி உதிர்கிறது. குறிப்பாக பாராட்டுரைப்போர் உதடுகளில் அமர்ந்து பொருளறியாத ஒன்றாய் வெளிப்படுகிறது.

ஆளுமை என்பது ஒற்றை அர்த்தச் சொல் அல்ல; பல பொருள் குறித்த ஒரு சொல். திறன்கள், குணவாகு என்ற இரு தூண்கள் தாங்கி நிற்கும் ஒரு மண்டபம் அது. இருதூண்களில் ஒன்று சரிந்தாலும் மற்றொரு தூணால் தாங்கிச் கொண்டு செல்ல இயலாது. முக்கியமானது மனுசம் அல்லது குணவாகு என்ற பெருந்தூண். அதில் கீறல், உடைவு ஏற்படின் ஆளுமை என்ற தூண் வெறும் நொண்டிக்காலாக மட்டும் மிஞ்சும்.

செயல் ஆளுமை, சொல் ஆளுமை, அரசியல் ஆளுமை, அறிவுலக ஆளுமை, கலை இலக்கிய ஆளுமை யாவும் இதுவரை காலமும் திறன்களை முன்வைத்து மதிப்பிடப்பட்டன. இதில் மனுச குணவாகு என்னும் மையம் கருதப்படவில்லை. ஒரு அறிவியலாளன் மனிதகுல மேம்பாட்டிற்காக ஒரு கண்டுபிடிப்பைச் செய்கிறபோது, அந்த அறிவியல் கண்டுபிடிப்பு மதிப்புப் பெறுகிறது. முதலாளியத்தின், உலகமயத்தின் நலன்களுக்காக ஆய்வுலகில் ஈடுபடும் அறிவியலாளன், மனிதநேய ஊழியத்திற்கு எதிரானவராக, உலகளாவிய உடமைச் சக்திகளின் சேவகனாக கணிக்கப்படுகிறான்.

ஆளுமை என்பது திறன்கள், ஆற்றல்களின் பக்கங்கள் மட்டுமல்ல. மனிதக் குணவாகு, மனுசம் என்பதின் இணைவு. ஒரு இலக்கியவாதி எத்தனை இலக்கியத் திறன் உடையவராகவும் இருக்கலாம்; எத்தனை உயரத்தில் வைத்துக் கொண்டாடப்படுபவராகவும் இருக்கலாம். மனிதராக இருக்கிறாரா என்பதுதான் முதலும் முடிவுமான கேள்வி.

இந்தப் புள்ளியிலிருந்து ஆளுமை என்பது வரையறுக்கப்பட வேண்டும். ஆளுமை என்ற சொல்லின் புதிய உள்ளடக்கத்தைத் அர்த்த பரிமாணங்களோடு பரிசீலிக்க வேண்டிய தருணமிது.


3

ஓ.என்.வி குரூப் கலாச்சார மையத்தின் தலைவர், திரை இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், பெண்ணரசியலை தெளிவாகப் புரிந்து, அதன் பக்கம் நிற்பவராதலால் ”விருது வழங்கும் தேர்வுக் குழுவினருக்கு வைரமுத்து மீதான குற்றச்சாட்டு தெரியாமல் இருந்திருக்கலாம். இலக்கியவாதி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு தேர்வு செய்திருக்கலாம்” என்கிறார். வைரமுத்துவிற்கு அறிவித்த விருதை நடுவர் குழு மறு பரிசீலனை செய்கிறது என்றார்.

அவதூறு இலக்கியவாதியான ஜெயமோகன்,
”ஓ.என்.வி குரூப் சுமாரான கவிஞர்தான்; அவரிடம் ஒரு எழுத்தாளன், வாசகன், விமர்சகன் என்ற முறையில் நான் காண்பவை எல்லாம் கவிதை அல்ல, வெறும் சத்தம். கடைசியாக இடதுசாரிகளுக்கு பழைய கற்காலத்தின் தொல்பொருள் சின்னமாக இருக்கும் இடிபாடு தான் அவர்.”
என்று ஓ.என்.வி.குரூப்புக்குரிய தகுதி பீடத்தைக் கேள்விக்குரியதாக்குகிறார்.

ஜெயமோகனின் இவ்வகைப் பழிப்புக்கு ஒரேயொரு காரணம் ’ஓ.என்.வி.குரூப்' இடதுசாரி அரசியலில் நிலைத்து நின்றவர் என்பது. ஓ.என்.வி.குரூபைச் சுமாரான கவிஞர் தான் எனச் சுட்டுகிற போதே, அவ்விருதைப் பெறுகிற வைரமுத்துவும் அவ்வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவர் எனச் சொல்லாமல் சொல்ல வருகிறார் என்பது புலப்படும்.

ஒரு கலைஞன் தனியனாக, குடும்பத்தினனாக, பொதுவெளியில் சமுக மனிதனாக எவ்வாறு இயங்குகிறான் என்பதுதான் முக்கியமாக இங்கு உரையாட நிற்பது.

இந்த அழகில் டெல்லியிலிருந்து ஒரு மனிதர் தமிழகத்திற்கு வருகிறார்; வருதல் என்பதினும் இங்கு இறக்குமதி செய்யப்பட்டார் என்பது உண்மை. சுப்பிரமணியசாமி என்னும் பிராமண சமூகத்தின் செயற்பாட்டாளர் சொல்கிறார் ”தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஆதரவால் ஒரு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. பிராமணர்களைக் குறிவைத்து அவர்கள் மீது வார்த்தை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுகிறது. ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான அரசின் தொடக்க கால நிகழ்வு போல் இது இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் தவறு செய்து மாணவியின் புகாரும் இருக்கும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது தவறல்ல; அதற்காக பள்ளியை அரசே எடுத்துக்கொள்ளும் என்றெல்லாம் அமைச்சரே பேசுவது அதிகபட்சமானது”

சுவாமி எதற்காக டெல்லியிலிருந்து சுனாமியாக வந்திறங்கினார் என்பது வெளிச்சம் ஆகிவிட்டது. கல்வி நிலையங்கள் தொடங்க இலவச நிலம் வழங்கும் காமராசரின் திட்டத்தின் கீழ் நிலம் பெற்றுக்கொண்ட பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் கல்வி வியாபார வணிக வளாகமாக வளர்ந்தது என்பதெல்லாம் பிராமண சமூகக் கோட்பாடுகளுக்குள் அடங்காது.

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தை பாலியல் சீண்டல் விவகாரமாக விசாரணைக்கு கொண்டுவருகிற அரசுக்கு, வைரமுத்து பிரச்சினையை இக்கோணத்தில் அணுக விருப்பமில்லை போலத் தெரிந்தாலும், ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். திராவிட இயக்கங்களைத் எந்த நேரத்திலும் சொல்லால் தாக்க சுப்பிரமணிய சுவாமிகளின் நரம்பில்லா நாக்கில் நிறைந்திருக்கிறது நஞ்சு.

- பேசும் புதிய சக்தி, ஜூலை 2021 இதழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்