ஜூன் 2021 உயிரெழுத்து இதழ் குறித்து ஒரு கடிதம்

ஜூன் 2021 உயிரெழுத்து இதழ் தலையங்கம் ஒன்றைத் தெளிவாகியுள்ளது; புதிய அரசை செயல்பட அனுமதித்துவிட்டு விமர்சன அளவீட்டை பின்னர் வைத்துக் கொள்ளலாம்; தீர்ப்புச் சொல்லும் காலம் இன்னும் இருக்கிறது. நல்லவை செய்தால் வரவேற்போம் என்கிற கருத்தில் எனக்கு முழு உடன்பாடு.

ஆனால் அரசு இயந்திரம் பற்றிய மதிப்பீட்டில் சறுக்கல் நிகழ்ந்துள்ளது. ”இதே அதிகாரிகள் கடந்த ஆட்சியின் போதும் பணியில் இருந்தனர். ஆனால் அவர்களுடைய தன்னலமற்ற நேர்மையான சேவையை பயன்படுத்திக் கொள்ள அப்போதைய அரசு தயாரில்லை“ என்று மதிப்பிடுகிறார். இது முழு உண்மை. சொடக்கு போட்டுக் கூப்பிட்டால், பணிந்து தன்னோடு பயணிக்கும் அதிகாரிகளையே அருகணைத்துக் கொண்டனர். இனம் இனத்தோடு சேரும். தன்னை நச்சி இயங்கத் தெரியாத அதிகாரிகளை ஒதுக்கி வைத்தனர். ஆனால் இதுபோல ஒன்றிரண்டு நல்ல சேவை மனம் கொண்ட மக்களோடு இணைந்த அதிகாரிகளைக் கொண்டதல்ல அரசு இயந்திரம்.

எதனையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும் ஆசை, கையூட்டு, லஞ்சம், ஊழல் என தீவினைகளில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அரசாங்க இயந்திரத்தின், நிர்வாகத்தின் பொது உளவியலாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசியலாளர்களை இவ்விதமாக உருமாற்றம் செய்வது அரசு இயந்திரத்தின் ஆணியும் பல்லும் சக்கரமுமாக இயங்குகிற அதிகார வர்க்கம். அதனால் புதிய அரசு பழைய முறைளை மாற்றி, அவ்விடங்களில் புதிய அதிகாரிகளை நியமித்து வருவதைக் காணலாம்.

சனநாயக கோட்பாடு உருவாகி வந்த வரலாற்றை பார்த்தால் இப்போதுள்ள அரசமைப்பு வடிவம் நாம் நமக்காக உண்டாக்கிக் கொண்டது அல்ல. பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த வடிவத்தை நாம் தலைமேற் சுமந்து திரிகிறோம். முதலாளியம் தனக்கான துறைகள், நிறுவன அமைப்புகளை கொப்பும் கிளையுமாகப் பெருக்கிக் கொண்டது. எனவே ”ஏற்கனவே தயாராக இருக்கிற அரசு இயந்திரத்தை எடுத்துக் கொண்டு, மக்களுக்கான எதையும் சாதிக்க முடியாது” என்ற கருதுகோளுக்கு சமுதாய அறிவியல் வந்து நிற்கிறது.

நாடாளுமன்றப் பெரும்பான்மையினால் அரசியல் சட்டங்களை உயர் சாதிக்கு சாதகமாகத் திருத்தும் காரியங்களை பா.ச.க அரசு தொடர்ந்து ஆற்றி வருகிறது என்பதை சான்றாதாரங்கள் வழி எஸ்விஆர் அம்பலப்படுத்தியுள்ளார். அரசியல் சட்டத்தைக் காட்டி நீதிமன்றங்களும் தீர்ப்புக்களை அவர்களுக்கு சாதகமாக வழிய விடுகின்றன. நீதிமன்றங்கள் யதார்த்த நிலைமைகளை, பிரச்சனைகளின் நடுத் தண்டுவடத்தை எப்போதாவது தொட்டுப் பார்ப்பதுண்டு. எனினும் ஒருபோதும் அரசியல் சட்டங்களுக்கு அப்பால் யோசிப்பதில்லை. ”சமூக நீதி எதிர்கொள்ளும் அபாயங்களை” எதிர்கொள்ளப் போராடுதல் தவிர வேறு வழியில்லை என அழைக்கிறார் எஸ்விஆர்.

”ஓ நிர்வாண அரசனே“ இப்படி ஒரு கவிதையைப் படைத்திட எத்தனை தமிழ்ப் படைப்பாளிகளுக்குத் துணிவு வரும்? துணிவுமில்லை; துடிப்பும் இல்லை. குஜராத்திக் கவிதைகளின் சமகாலப் பிம்பமாக தன்னைச் செதுக்கிக் கொண்ட பெண் கவிஞர் பரூல் கக்கரின் “சப் வாஹினி கங்கா” தமிழ்ப் படைப்பாளிகள் எத்திசைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனச் சொல்லும் திசைகாட்டி. எஸ்விஆருக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.

எழுத்தில் சுயானுபவம் இல்லாமல் தொட்டது அவ்வளவாக விளங்காது என்று சொல்வார்கள். ராணுவச் சிப்பாய்கள் வாழ்க்கை பாதுகாப்பானது என ஒரு கருத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அது கற்பிதம் செய்யப்பட்டதொரு போலிமை. வாழ்க்கைப் பாதையில் வெக்கை வீசி வீசி உருள மன வெப்ப அலைகளோடுதான் அவர்கள் தாவித்தாவி அலைந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கென ஒரு திசையை, வேலையை, பயணத்தை, வாழ்வு முறையை தீர்மானிக்க முடியாமல், விதிக்கப்பட்ட வாழ்க்கையை சுமந்துகொண்டு கானகத்தில் சாம்பல் நிற மேனியோடு ’நீல்காய்கள்’ (ஒரு வகை விலங்கினம்) தண்ணீரைத் தேடித் தேடி, தாவித் தாவி கூட்டம் கூட்டமாக ஓடிக் கொண்டிருப்பது போல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கையில் இதயம் அறுக்கப்படுகிறது. இராணுவச் சிப்பாய்களின் வாழ்க்கைக்கு ’நீல்காய்’ அபூர்வமான உருவகம். என்ன ஒரு அற்புதமான எழுத்துக் கலைஞன் இந்த தேவராஜ் விட்டலன்.

ஜனநேசன் தனது புதிய தற்காலிக வசிப்பிடப் பிரதேசமான ஆந்திர மாநிலம் கம்மத்தில் நேர்ந்த அனுபவத்தை ”தோட்டாவில் பூத்த மலர்களில்” பதிவு செய்கிறார். புதிய அனுபவமாக இருப்பினும், ஆயிரம் ஆண்டு கால இலக்கியங்களின் செழுப்பத்திலிருந்து அவரது எழுதுகோல் எடுத்துப் பரிமாறுகிறது. மாவோயிஸ்டுகள் என்ற நேரடி வார்த்தைப் பிரயோக விளிப்பைத் தவிர்த்து வெளிப்பட்டுள்ள நயமான ஒரு கதைக் கட்டுரை. இறுதிப் பத்தியில் “அவர்கள் அவனை ஏதோ திட்டினார்; பத்திரமா போங்க என்பது போல் சைகை காட்டினர்” என்கிற போது, அவர்கள் யார், எத்தகைய மானுட நேயர்கள் என விளக்கிவிடுகிறது. எதைச் சொன்னாலும் கதைபோல் சொல்லுவது என்ற உயர்ந்த இடம் ஜனநேசனுக்கு வாய்த்திருக்கிறது.

முதல் உலகப்போரின் அக்டோபஸாகக் கவிந்த ”ஸ்பானிஸ் புளூ” என்ற தொற்றுநோய், அதுவரை பிறப்பெடுத்த தொற்றுக்களிளெல்லாம் கொடூரமானது என்கிறார்கள். பல லட்சம் பேரைக் காவுகொண்ட அந்நோய் நான்கு ஆண்டுகள் நீடித்தது. உடலியல் ரிதியாகத் தாக்கி உயிர் உறிஞ்சும் இந்தக் கொரோனா தொற்று எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் எனக் கண்டறிய முடியவில்லை. ஆயினும் இது சின்னக் கொரோனா தான். அந்தக் கொரோனாவை விடப் பல ஆண்டுகள் நீடித்திருக்கப் போகிற மதவாதப் பெரிய கொரோனா, இந்தியாவில் எத்தனை உயிர்களைக் காவுகொள்ளும் எனக் கணிக்க முடியவில்லை. மோகன் ராஜனின் "சிதைகளின் நெருப்பில் எரியும் இந்தியா”, நிகழ் அய்க்கண் எழுதிய “பா.ஜ.க வெறுப்பு அரசியலின் முகம்” இரு பதிவுகளும் நிகழ்கால இந்தியாவை பொருத்தமான காலகட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளன. நல்ல தேர்வுகள். ஆயினும் இரண்டையும் அடுத்தடுத்து அச்சிடாமல், வேறு வேறு பக்கங்களில் கலப்பு சரிவிகித உணவாகத் தந்திருக்கலாமே.

ஜூன் உயிரெழுத்து இதழ் சற்று தாமதமாக கைக்கு வந்து சேர்ந்தது. அதை வாசிக்கவும் தாமதமாகிப் போனது. வாசிக்காமல் போயிருந்தால், கற்றுக்கொள்ள வேண்டிய பல காத்திரமான விசயங்களை இழந்த பேரிழப்பாக இருந்திருக்கும்.

என்றென்றும் உயிரெழுத்து இந்தப் பாதையில் பயணிக்க வாழ்த்திடும்,

பா.செயப்பிரகாசம், 

22-06-2021 

(ஜூலை உயிரெழுத்து இதழில் இக்கடிதம் வெளியானது)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை