நெடுவழி நினைவுகள் - ஓர் அறச் சீற்ற நெஞ்சில் உயிர்த்தெழும் வெதும்பல்

சாட்சி - 1 

பெரியார் இல்லாத மண்ணில், பெரியார் உயிருடனிருந்த காலத்தில் பெரியார் தன்னிடம் பேசியது போல் கால் நுழைக்கிறார் அ.ச.ஞானசம்பந்தம் என்ற தமிழறிஞர்.

கி.பார்த்திபராஜா சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர். தமிழ்த்துறை கருத்தரங்கத்திற்கு அ.ச.ஞானசம்பந்தனை அழைத்து வருவதும் அவரது சிறப்புரை முடிந்த பின் இல்லத்தில் போய்ச் சேர்ப்பதுமான பொறுப்பு கி.பார்த்திபராஜாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. தமிழ்ப் புலமையே உருத்திரண்டது போல் திசையெல்லாம் வியந்து நோக்கும் ஒருவரை அழைத்துச் சென்று வரப் போகிறோம் என பார்த்திபராஜாவுக்கு பெருமிதம்.

சிறப்புரையில் ஞானசம்பந்தம் தனக்கும் தந்தை பெரியாருக்குமான தொடர்பைக் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“நானும் என்னோட மனைவியும் பெரியாரைக் பார்க்கப் போனோம். சாஷ்டாங்கமாக அவர் பாதங்களில் விழுந்து தான் நமஸ்காரம் பண்ணுவோம்; மற்றவங்கன்னா தடுப்பார்கள். பெரியார் எங்களைத் தடுக்க மாட்டார்; நாங்க விழுந்து வணங்கினதும் எங்களோட தலையில் இரண்டு கைகளையும் வைத்து வைஷ்ணவ முறைப்படி ஆசீர்வாதம் பண்ணுவார்.

பெரியார் அப்படி வைஷ்ணவ முறையில் ஆசீர்வாதம் பண்றதை பல முறை பார்த்திருக்கேன். அவருக்கு அந்த சாஸ்த்திர முறைகளில் நம்பிக்கை இருந்ததுங்கிறதோட அடையாளம்தான் அது…… யாராக இருந்தாலும் நம்மோட சாஸ்த்திர முறைகளை மீற முடியாதுங்கிறதுக்கு பெரியார் சாட்சி.” (நெடுவழி நினைவுகள் – பக்: 60)

நீட்டி முழக்கிப் பேசிக்கொண்டிருந்தபோது, அரங்கில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பார்த்திபராஜாவிடமும் மற்ற மாணவர்களிடமும்
”என்ன பேசறாரு இவரு?” என்று சலசலப்பு உண்டாயிற்று. குரலை லேசாக உயர்த்தி “பெரியார் உயிரோடு இருக்கும் போது எங்கயாவது பேசியிருக்கிறாரா இவரு? வைஷ்ணவ முறையில அசீர்வாதம் பண்றீங்க, உங்களுக்கு சாஸ்திரத்துல நம்பிக்கையிருக்கான்னு பெரியார் கிட்ட சொன்னதுண்டா? அப்போ பேசாம இப்போ பேசவேண்டிய அவசியம் என்ன? பெரியாரைப் பத்தி என்ன வேன்னாலும் பேசீடலாமா?” லேசாகக் குரல் உயர்த்திக் கேட்டார் பார்த்திபராஜா.

காதைக் கூர்மையாக்கி பார்த்திபராஜா பேசியதை உள்வாங்கிக் கொண்டார் அ.ச.ஞா.

”அரங்கம் முடிவுற்ற பின்னர், எங்கள் பேராசிரியர் அறையில் பேசிக்கொண்டிருந்த அவர அழைத்துப் போக காத்திருப்பதாக தகவல் அனுப்பினேன். உள்ளே சென்று தகவல் தெரிவித்தவர் என்னிடம் திரும்பி வந்து சொன்னார் 'தம்பி ஐயாவோட வேற யாரோ போறாங்களாம். என்னை அழைத்து வந்திருந்த பையனை மறுபடியும் கொண்டுவிட அனுப்ப வேண்டாம்' என்று அ.ச.ஞா.வே சொன்னதாக பின்னர் அறிந்தேன்“ என்கிறார் கி.பா. (பக்கம் 63)

”அறிஞர்கள் அறிஞர்களே” என ஒற்றை எள்ளல் தொனியுடன் முடிக்கிறார் கி.பா.

எள்ளல், சினம், சீற்றம், சலிப்பு, போல பல அம்புகள் பல அறிஞர்களை நோக்கியும் பாய்ந்திருப்பதை நூலில் ஆங்காங்கு காண முடிகிறது.


சாட்சி - 2

“இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும்” என்ற தலைப்பில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இரு நாள் கருத்தரங்கம், அக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பார்த்திபராஜா பேசுகிறார்.

”ஒருவனுக்கு ஒருத்தி தமிழ்ப் பண்பாடு என்கிறோம்; உண்மையில் அப்படி ஒரு பண்பாடு தமிழகத்தில் இருந்ததில்லை. வரலாறு நெடுகிலும் பார்க்கிறபோது இந்த முடிவுக்கு வரமுடியும். வேண்டுமானால் ஒருத்திக்கு ஒருவன் என்பது தமிழ் சமூகத்தில் இருந்திருக்கிறது…… நம் காலத்தில் கூட நம் தலைவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைத் தானே கொண்டிருக்கிறார்கள்”

அவை ஆரவாரித்து வரவேற்றது. சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன், ஆஜானுபாகுவான தோற்றமுடைய அவர் முன்வரிசையில் எழுந்து நின்றபோது, அரங்கமே அவரைக் கவனித்தது.

அவர் இப்படி ஆரம்பித்தார் ”நீ எல்லாம் ஒரு தமிழ் வாத்தியாரா?”

“தமிழ்ப் பண்பாட்டை குறை சொல்லிப் பேசற நீ, என்னத்தைப் பாடஞ் சொல்லிக் கொடுப்பே பசங்களுக்கு? ஒருவனுக்கு ஒருத்திங்கிறது தமிழ்ப் பண்பாடு இல்லேங்கிற?”

கி.பா “நா என்னோட கருத்தைத் தான் சொல்லிருக்கேன், அதுக்கு ஆதாரங்களையும் காட்டியிருக்கேன். … நா இருக்கிறதைத் தான் சொல்றேன், இல்லேன்ன ஆதாரம் கொடுங்க”

“தவறான கருத்தை எல்லோருக்கும் முன்னாடி பேசிக்கிட்டு இருக்கிறீங்க, கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா?”

கைகளை நீட்டி நீட்டிப் பேசினார் வா.மு.ச. கைவிரல்களில் அவர் போட்டிருந்த வண்ண வண்ண மோதிரங்கள் மின்னின.

இவர்கள் நெஞ்சுக்குள் ஒரு கூடு இருக்கிறது. தமிழ் மொழி, தமிழினம், தமிழ்ப் பண்பாடு பற்றி புகழுரைக்கும் ஒற்றைப் பாவனையில் பேசக் கற்றுக் கொடுத்த தயாரிப்புக் கிளிகள் அதற்குள். இற்றைச் சமகாலத்தில் ஒரு படையெடுப்புப் போல் தாக்கியிருக்கும் நவீனக் கருத்தியல்கள் பற்றி இக்கிளிகள் கிஞ்சித்தும் கவனம் கொள்ளமாட்டா.

“இதோ பாருங்க என் கட்டுரை தப்புன்னு இதோ இங்கு உட்கார்ந்திருக்கிற மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி சொல்லட்டும். நாட்டார் வழக்காற்றியல் துறைப் பேராசிரியர் தனஞ்செயன் இங்கே இருக்காரு. அவர் சொல்லட்டும். நான் மன்னிப்பு கேட்டு விட்டு மேடையை விட்டு இறங்கிடுறேன்”

உணவு இடைவேளை; அப்போது முதல்வர் பொறுப்பில் இருந்த மரியசூசை ஓடி வருகிறார். ”உணவுக்கு நேரமாயிடுச்சி, இதை நாம அரங்கத்துக்கு வெளியே விவாதிக்கலாம்" என்று அரங்கை முடித்து வைத்து கூட்டிச் செல்கிறார். மதிய உணவில் வா.மு.சேவின் அருகிலிருந்த பக்தவத்சல பாரதி, தனஞ்செயன், சோளகர் தொட்டி நாவலாசிரியர் ச.பாலமுருகன் ஆகியோர் வா.மு.ச.வை, பிடிபிடி என்று பிடித்தார்கள்.

“இருக்குங்க, நா இல்லேன்னு சொல்லலே, அதுக்காக அதை மேடையிலேயா சொல்றது” என்று ஏதேதோ சமாதானம் சொல்கிறார். இவர்கள் தான் நம் தமிழறிஞர்கள் என்று முழுக்க கட்டம் கட்டிவிடக் கூடாது. இவர்கள் ஒரு வகை.

வா.மு.சே.க்கு தெளிவூட்டிய பக்தவத்சல பாரதியும், தனஞ்செயனும், பாலமுருகனும் இதில் சேரமாட்டார்கள்.


சாட்சி - 3

உலகம் முழுதுமான நாடுகள் காலனியாதிக்கத்தின் காலடிகளிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டிருந்தன. காலனியக் கருவறைக்குள் கர்ப்பம் ஆரோக்கியமாக இருக்குமென நினைத்திருந்த ஏகாதிபத்தியம் கர்ப்பச்சிதைவு நிகழுமென நினைக்கவில்லை. தனது மரணத்தை ஏகாதிபத்தியம் தானே கண்டுகொண்டிருந்த காலமிது.

ருசியப் புரட்சி வெற்றி பெறுகிறது; வேறொரு தத்துவத்தின் செயல் வீச்சு உலகெங்கும் தன் கண்ணெதிரிலேயே உருவாகி மேலெழுந்து வருவதைக் கண்ட ஏகாதிபத்தியம் பொங்கிப் பொசு பொசுத்துக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் அரிப்பும் ஊரலுமெடுத்த நிலையில் சோப்புப் போடுவதற்கு ஒரு தத்துவம் அதற்குத் தேவைப்பட்டது. சாத்வீகப் கோட்பாடுகள், அதன் போராட்ட நடைமுறைகள் என்னும் காந்தீயம் பிறப்பெடுத்த போது அதைத் தடவிக் கொடுத்துத் தாங்கியது ஏகாதிபத்திய மூளை; காந்தியப் போராட்டங்களை பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டது.

கருத்து நிலையில் நின்ற காந்தீயம், தனக்கெனத் திட்டவட்டமான, பருண்மையான செயல் வடிவம் கொண்டிருக்கவில்லை. தம் கைவசப்பட்ட அரசை வடிவதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என அறியாத திகைமூட்டமாய் நின்றது இந்தியத் தலைமை. காந்தியை செயல் அறியாத முட்டுச் சந்தில் நிறுத்தியது இந்திய அரசியல் விடுதலை.

இன்றைக்கும் நடப்பில் வெகுமக்களை முன்னேற்றும் எந்தவொரு உயிர்ப்பான நடைமுறையையும் காந்தியம் கொண்டிருக்கவில்லை.

விடுதலைக்குப் பின்னான தோல்வியை கண்ணெதிரில் கண்டிருக்கும் ஒரு இளைய தலைமுறை கண்ணில் கனலோடும் தொண்டையில் கூக்குரலோடும் எழும் தான். அவர்களின் கோபத்தின் வடிவம் – வெதும்பலின் வடிகால் ”காந்தீயம் எதுக்குத் தேவை? தோத்துப் போன ஒரு தத்துவம் எதுக்காக இன்னிக்கு?” என பார்த்திபராஜாவின் கேள்வியாக வெளிப்படும் தாம்.

காந்தியவாதியான எழுத்தாளர் சி.சு.செல்லப்பா ”காந்தியப் பத்தி கொறை சொல்றேளே…. உம்ம நாக்கு அழுகிப் போயிடும், இளைஞர்கள் நீங்க வெளங்க மாட்டேள்….. உருப்பட மாட்டேள், நாசமாத்தான் போவேள்“ என்ற ரூபமெடுத்து, செயல்முறையற்ற தத்துவத்தின் தாங்குபவராக ”நானும் என் எழுத்தும்” அரங்கிலேயே தன்னை வெளிப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.


காட்சி - 4

உலக நாடுகள் அனைத்தும் துனை நிற்க, குறிப்பாக இந்தியா ஆயுதங்களும் போர்த் தொழில்நுட்பங்களும் அளித்துப் பங்கேற்க முள்ளி வாய்க்கால் படுகொலையை சிங்களப் பேரின அரசு நடத்தி முடித்த நாள் 2009, மே 17.

கொழும்பில் வெள்ளவத்தையில் வாழ்ந்து வந்த தமிழறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவித்தார், ”இந்தியா எங்கள் முதுகில் குத்திவிட்டது. இனிமேல் நாங்கள் உலகின் எந்த நாட்டுக்கும் போவோம். ஆனால் இந்தியாவுக்கு மட்டும் போகமாட்டோம்“ என்று அவர் சொன்னது ஏறக்குறைய அனைத்து செய்தித் தாள்களிலும் வெளியானது.

படுகொலைகளின் இரத்தக் கவுச்சி வாடை கூட மாறவில்லை. உலகத் தமிழ் மாநாட்டை தன் ஆட்சிக்காலத்திலேயே நடத்தி முடித்துவிட வேண்டுமென்பதில் கலைஞர் மு.கருணாநிதி முனைப்பாக இருந்தார். இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந்தும், முதல்வர் பதவி நலன்களுக்காக அந்த ஆற்றலைப் பயன்படுத்தாத கலைஞரை பேரா.சிவத்தம்பி போலவே நாமும் அடையாளம் கண்டோம்; இனத்தை அழித்து விட்டு அந்த இனம் பேசும் மொழியை வளர்ப்பது எவ்வாறு என்று மனச்சாட்சியுடன் நம்மில் பெரும்பாலோர் கேள்வி எழுப்பினோம்.

உலகத்தமிழ் மாநாடு நடத்த போதுமான கால அவகாசமில்லை என அதன் தலைவர் நொபுரு குரோஷிமா மறுத்துவிட்டார். மாநாட்டை நடத்துவது என்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் , பெயரை மாற்றி முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு கோவையில் 2010 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் 27 வரை நடைபெறும் என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

பேரா.சிவத்தம்பி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார் என்ற செய்தியும் கூடவே வந்தது. ஆனால் இந்த மாநாட்டுக்கு அவர் வரமாட்டார் என்று தான் பார்த்திபராஜாவும் நண்பர்களும் நினைத்தார்கள். ஏனெனில் சிவத்தம்பி வருகை தரு பேராசிரியராக சென்னையில் இருந்த போது, மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலைக்கு எதிரில் சென்னைப் பல்கலைக் கழக அரசினர் விருந்தினர் விடுதியில் ஒன்றரை ஆண்டுகள் அவருடைய உதவியாளராகப் பணியாற்றியவர்தான் பார்த்திபராஜா. அப்போது முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கி.பா அவரை சிவத்தம்பி தான் “பெறா மகன்” என்றே அழைத்தார். (பக்கம்- 211)

கா.சிவத்தம்பியின் நிலைப்பாடு தொடக்கத்தில் வேறொன்றாக இருந்தது. “மாநாட்டில் நான் கலந்து கொள்வேனா என்ற கேள்வி இப்போது எழவில்லை. இப்போதைய கேள்வி என்ன வென்றால் இலங்கைத் தமிழர் பேரவலத்தைத் தீர்க்க கலைஞர் என்ன செய்யப் போகிறார் என்பது தான். இந்த வினாவுக்கு கலைஞர் சரியான முறையில் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்” (அக்டோபா; 19, 2009 தமிழ் ஓசை). அவருடைய கேள்விக்கு எந்த நேர் பதிலும் இல்லை.

ஆனால் “கலைஞர் கருணாநிதி போன்ற ஒரு நல்ல தமிழறிஞர் தலைமையில் நடைபெறுகிற மாநாட்டை” வரவேற்பதாக கா.சிவத்தம்பியின் இரண்டாவது கட்ட நிலைப்பாடு அமைந்தது. மாநாட்டில் கலந்து கொள்வதில் அவர் உறுதியாய் இருந்ததால், பங்கேற்க தமிழகம் வந்திறங்கிய அவரை கி.பாத்திபராஜா போன்றோர் சந்திக்கவே செல்லவில்லை. சில நாட்கள் சென்னையிலிருந்தார். கோவை சென்றுவிட்டு மறுபடியும் சென்னை வந்துதான் கொழும்பு புறப்படுகிறார் என அறிந்தும் செல்லவில்லை. தமிழறிஞர் தொ.ப, பாவலர் இன்குலாப், எழுத்தாளர்கள் இராசேந்திர சோழன், பா.செயப்பிரகாசம் போன்றோர் மாநாட்டைப் புறக்கணித்திருந்தனர். அது பற்றி பார்த்திபராஜா எழுதுகிறார் ”இல்லை, இம்முறை நான் சிவத்தம்பி அய்யாவை நான் சந்திக்கப் போகவில்லை. …. பிறகு நான் சிவத்தம்பி ஐயாவை நேரில் சந்திக்கவே இல்லை” (பக்கம் 211).

கா.சிவத்தம்பி தம்முடைய முதல் நிலைப்பாட்டில் உறுதியாகத் தொடர்ந்திருந்தால், அவரைப் போன்ற பிற தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் அவரின் தொடர்ச்சியாய் இருந்திருப்பார்கள். அவர் தன்னை உறுதிப்படுத்தியிருந்தால், தமிழ் மேதைமைகளை முறித்துக் கொண்டு மாநாட்டினை நடத்திட வேண்டுமா என்ற மீள் பரிசீலனைக்கு கருணாநிதி ஒருவேளை வந்திருக்கக்கூடும்.


நீதி வழங்கல்

இவ்விடத்தில் தான் ஆளுமை என்பதற்கான புதிய வரையறைக்குள் நம் சிந்திப்பு நீதிமன்றம் வர வேண்டியுள்ளது.

சி.சு.செல்லப்பாவின் எரிச்சலும், தமிழறிஞர் அ.ஞானசம்பந்தன் பொய்யுரையும், வா.மு.சேதுராமனின் “நீ யெல்லாம் ஒரு தமிழ் வாத்தியாரா" என்ற காரணகாரியமற்ற மறுப்பும், கா.சிவத்தம்பியின் முன்னுக்குப் பின் முரண்கொண்ட செயலும் – இவையெல்லாம் ஆளுமைகள் எனக் கருதப்பட்டோரின் வினையாற்றல்கள்.

இவர்களை லாவகமாகக் கையாண்ட முறை - நாசூக்கான எதிர்கொள்ளல் - பக்குவம் அடைந்த ஒரு பார்த்திபராஜாவை அடையாளம் காட்டுகின்றது. ஆளுமைகள் பற்றி அவருள் ஓடிக்கொண்டிருக்கும் அறச்சீற்ற வேதனை அல்லது மன உளைச்சலின் நீரோடைகள், இதுபோலவே ஒவ்வொருவருக்குள்ளும் கிடக்கின்றன.

ஆளுமை என்னும் சொல் இன்று பலரது நாவிலும் அடிக்கடி உதிர்கிறது. பாராட்டுரைப்போர் உதடுகளில் அமர்ந்து பொருளறியாத ஒன்றாய் வெளிப்படுகிறது.

ஆளுமை என்பது ஒற்றை அர்த்தச் சொல் அல்ல; பல பொருள் குறித்த ஒரு சொல். திறன்கள், குணவாகு என்ற இரு தூண்கள் தாங்கி நிற்கும் ஒரு மண்டபம் அது. இரு தூண்களில் ஒன்று சரிந்தாலும் மற்றொரு தூணால் தாங்கிச் கொண்டு செல்ல இயலாது. முக்கியமானது நேர்மை, குணவாகு, மனுசம் என்ற பெருந்தூண். அதில் கீறல், உடைவு ஏற்படின் ஆளுமை என்ற தூண் வெறும் நொண்டிக்காலாக மட்டும் மிஞ்சும்.

செயல் ஆளுமை, சொல் ஆளுமை, அரசியல் ஆளுமை, அறிவுலக ஆளுமை, கலை இலக்கிய ஆளுமை போன்றன இதுவரை காலமும் திறன்களை முன்வைத்து மதிப்பிடப்பட்டன. மனுச குணவாகு என்னும் மையம் கருதப்படவில்லை. ஒரு அறிவியலாளன் மனிதகுல மேம்பாட்டிற்காக ஒரு கண்டுபிடிப்பைச் செய்கிறபோது, அந்த அறிவியல் கண்டுபிடிப்பு மதிப்புப் பெறுகிறது. முதலாளியத்தின், உலகமயத்தின் நலன்களுக்காக ஆய்வுலகில் ஈடுபடும் அறிவியலாளன், மனிதநேய ஊழியத்திற்கு எதிரானவராக, உலகளாவிய உடமைச் சக்திகளின் சேவகனாக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறவனாகக் கணிக்கப்படுகிறான்.

மனிதன் - ஒரு சமுதாய உயிரி. எந்த மண்ணில் பிறக்கிறானோ, அந்த மண்ணின் குணம், பண்பாடு, பேச்சு, பழக்க வழக்கம், அரசியல், சமுதாயம் அனைத்துமாக அவன் உருவாக்கம் பெறுகிறான். அவனுக்குள் இருக்கும் மனுசனே கலைப் படைப்பாக வெளிப்படுகிறான். அந்த மனிதனுக்குள் இன்னொரு மனிதனும் வாழ்கிறான். அவன் அந்தந்த பாரம்பரிய குணங்களுடன் இயங்குபவன். முன்னர் இருந்து செமித்துப் போன பண்பாட்டு அடிப்படையில் அவனைத் திசை காட்டிச் செலுத்த வல்லது பாரம்பரியம்.

ஒருவர் தன்னில் வளர்த்துக் கொண்ட ஆற்றல்களில் எத்துனை வளம், செழுப்பம், புலமை, கூர்மை கொண்டிலங்குகிறார் என்பதல்ல, அடிப்படை மனுச குணங்களுடன் வாழுகிறாரா, அடிப்படை மனுசத்தை வாழ்நாள் முழுதும் தன்னுடன் பேணிக் கொண்டுசெல்கிறாரா என்பது முக்கியம். ஆளுமை என்பது திறன்கள், ஆற்றல்களின் பக்கங்கள் மட்டுமல்ல. மனித குணவாகு, மனுசம் என்பதின் இணைவு. ஒரு அறிஞர், ஒரு இலக்கியவாதி எத்தனை திறன் உடையவராகவும் இருக்கலாம்; மனிதராக இருக்கிறாரா என்பதுதான் முதலும் முடிவுமான கேள்வி. இந்தப் புள்ளியிலிருந்து ஆளுமை என்ற சொல்லின் புதிய உள்ளடக்கத்தைத் பரிசீலிக்க வேண்டிய தருணமிது.


2

விரிவுரையாளராகத் தொடங்கிய பார்த்திபராஜா இன்று அதே கல்லூரியில் பேராசிரியர். “நெடுவழி நினைவுகள்“ என்ற நூலில் பாவலர் இன்குலாப், நாடக நெறியாளர் அ.மங்கை, பாவலர் அறிவுமதி, எடிட்டர் லெனின், கல்லூரி முதல்வர் அ.மரியசூசை, அழகப்பா கல்லூரி ஆங்கில ஆசிரியர் கணபதி ஸார், காந்தி அண்ணா, போலப் பல ஆளுமைகள்; ’லாங் லிவ் கிஸான்’ என்று குரல் உயர்த்தும் டெல்லி ஆட்டோக்காரன், புதுச்சேரி கருவடிக் குப்ப மயான வெட்டியான் போல சாதாரணரும் ஒவ்வொரு வகையில், முக்கியத்துவம் கொண்டவர்களே. 315 பக்க அளவில், 28 தலைப்புகளில் விவரித்துப் பதிவு செய்கிறார்.

”திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைக்காரனின் புராணம்” - முதல் கட்டுரை. பாரதியார் இல்லத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைக்காரரை அழைத்திருக்க வேண்டும். அழைப்பில் அவர் பெயர் சேர்த்திருக்கவேண்டும். அவர் வருவது வராமல் போவது அவருடைய விருப்பம். அழைத்து அவர் வராமல் போயிருந்தாலும் பெரிய பிழை இல்லை.

மற்றொரு புத்தகக் கடைக்காரர் எத்திராஜூலு. ’புத்தகக் களவாணிகளை’ தொலைபேசி செய்து வரச் சொல்லிக் காத்திருப்பவர். தானுண்டு தன் தொழிலுண்டு என்று அமைதி கொள்பவர். இந்த புத்தகப் பிரியர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுகிற ஒரு பெருந்தகை, அவர் பேராசைக்காரரல்ல. இப்படியான குணசித்திர வார்ப்புகளும் பார்த்தியின் நெடுவழியில் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த எத்திராஜூலும் எவரிடமும், இவர்களிடமும் சொல்லாமல் கொள்ளாமல், எங்குற்றார் எனத் தெரியாது காலி செய்துகொண்டு போய்விடுகிறார் ஒரு நாளில்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பகத் சிங்குக்கு இணையாக அவரை ஈர்த்திருந்த, அவர் மனதில் தங்கிப் போய்விட்ட சந்திர சேகர ஆஸாத்தின் நினைவுகளைச் சந்திப்பது என்ற நோக்கத்துடன் அலகாபாத் போய் இறங்கிகிறார் பார்த்தி. பிப்ரவரி 27, 1931 அலாகா பாத் ஆல்பிரட் பூங்காவில் சுகதேவுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்த சந்திர சேகார ஆஸாத் காவல் துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட இடம்: அங்கு இப்போது ஆஸாத்தின் சிலை. பூங்காவின் பெயரும் ஆஸாத் பூங்கா என மாற்றப்பட்டுள்ளது. மீசையை முறுக்கியபடி நின்ற ஆஸாத் சிலைக்கு முன்பு நின்றார். அவனை அணைத்துக் கொள்ளத் துடித்தது மனது என்று வைராக்கியத்துடன் சென்று நினைவு கூர்ந்த பார்த்திபராஜா.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதன் மனப்பதிவுக்கு கால எல்லை இருக்கிறது. முன்னர் மனதில் பதிவான அழகுடன், அதே நயத்துடன் உயிர்ப்புடன் மீண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் ஞாபக மறதி என்னும் புதைகுழிக்குள் போய்விடும் சில. நாட்குறிப்புப் பதிவில் அல்லது தனியாகவோ குறிப்பிட்டு வைத்துக் கொள்ளல் மிக முக்கியமானது. அதற்கென ஒரு காலம் வரும் வரையில் காத்திருந்து துல்லியமாய் மீட்ட முடியுமென்பதற்கு இந்நூல் ஒரு சான்று.

திருவல்லிக்கேணி அயோத்திகுப்பம் வீரமணி பற்றிய விவரிப்பு, ”சினிமா நடிகை என்னிடம் வாங்கிய ஆட்டோ கிராப்”, ”நரசிம்மராவும் கி.பார்த்திப ராஜாவும்“ போன்ற பதிவுகளை நீக்கியிருக்கலாம்.

நெடுவழி நினைவுகள்
கி.பார்த்திப ராஜா
வெளியீடு: பரிதி பதிப்பகம்
விலை ரூ.360

காக்கை சிறகினிலே, செப்டம்பர் 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்