இந்தியாவை உலுக்கிய 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் – பா.செயப்பிரகாசம்

தளவாய் சுந்தரம், October 27, 2022 


எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் உடல்நலக் குறைவு காரணமாக தனது சொந்த ஊரான விளாத்திகுளத்தில் 23.10.2022 அன்று காலமானார். எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், பேராசிரியர் என்பதுடன், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னிலை வகித்த மாணவர்கள் தலைவர்களில் ஒருவர் என்பதும் பா. செயப்பிரகாசத்தின் அடையாளங்களில் ஒன்று. தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றிய, வீரம் செறிந்த அந்த மாணவர்கள் போராட்டத்தின் தலைவர்கள் அனைவரும் ஏற்கெனவே மறைந்துவிட்ட நிலையில், கடைசியாக ஜே.பி என நண்பர்களால் அழைக்கப்பட்ட பா.செயப்பிரகாசமும் இதோ விடைபெற்றுவிட்டார்.

பா.செயப்பிரகாசம் நினைவாக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி அவரது நினைவுகள் இங்கே. (பா.செயப்பிரகாசம் எழுதிய பல்வேறு கட்டுரைகளில் இருந்து இது தொகுக்கப்பட்டுள்ளது.)

“நம்மில் பெரும்பாலோர் பிரிட்டீஷார் வெளியேறிய பின்னால்தான் இந்தி ஆட்சி மொழி அங்கீகாரம் கொண்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தி திணிப்பு வரலாறு இன்னும் முன்னாலே செல்கிறது.

1918இல், தமிழ்நாட்டினர் இந்தியைக் கற்கும் நோக்கில் சென்னையில் காந்தி ‘இந்திப் பிரச்சார சபா’ வைத் தொடங்கி வைத்தார். அப்போது காந்தி, “ஆங்கில நாட்டுத் துணிகளைப் புறக்கணிப்பது போல், அவர்களின் மொழியையும் புறக்கணிக்க வேண்டும். ஆங்கிலத்தை அகற்றி அந்த இடத்தில் இந்துஸ்தானியை அனைத்திந்திய மொழியாக ஏற்க வேண்டும்” என்றார். இது காந்தியின் மொழிக் கொள்கை.

காந்தி, அந்நிய ஆதிக்க மொழியை மட்டும் புறக்கணிக்கக் கருதினால், தமிழ்நாட்டில் இந்திப் பிரச்சார சபாவுக்குப் பதிலாய் ‘சென்னைத் தமிழ்ச் சங்கத்தினைத்’ தொடங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் தாய்மொழி வளர்ச்சி அமைப்புக்களைத் தொடங்கி ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், 1924 டிசம்பர் பெல்காம், காங்கிரஸ் மகாசபை கூட்டத்திற்கு தலைமை வகித்த காந்தி, “பிரதேச அரசாங்கங்களில் அப்பிரதேச மொழியே ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும். பிரதேசங்களிலிருந்து மேல்முறையீடு செய்யப்படும் பிரிவிகவுன்சிலில் இந்துஸ்தானி மொழி பயன்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசியலும் பாராளுமன்றத்திலும் இந்தஸ்தானியே இருக்க வேண்டும்” என்று பேசினார்.

காங்கிரஸ் கட்சி அதன் அமைப்பு நடவடிக்கைகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியையே பயன்படுத்துவது என 1925இல் கான்பூரில் நடந்த மகாசபைக் கூட்டத்தில் காங்கிரஸ் அமைப்புச் சட்டத்தைத் திருத்தியது. “காங்கிரசின் நடவடிக்கைகள் முடிந்தவரையில் இந்துஸ்தானியில் இருக்கவேண்டும். ஒரு வேளை பேச்சாளருக்கு இந்துஸ்தானியில் பேச முடியாத பட்சத்தில், ஆங்கிலத்திலோ அவரது பிரதேச மொழியிலோ பேசலாம். பிரதேச காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கைகளை அந்த பிரதேச மொழியிலேயே நடத்த வேண்டும். இந்துஸ்தானியையும் பயன்படுத்தலாம்” என முடிவு செய்யப்பட்டது.

காந்தியின் மொழிக் கொள்கைகளின் அடிப்படையில் 1937இல் நேரு ‘மொழிப் பிரச்சனை பற்றி’, என்னும் புத்தகம் எழுதினார்.

சமதர்மம், சோஸலிசம், நவீன இயந்திரங்கள், புதியதொழில் நுட்பங்களை சுவீகரித்தல் போன்ற பல விசயங்களில் காந்தியுடன் முரண்பட்ட நேரு, இந்திமொழிக் கொள்கையில் காந்தியுடன் நூற்றுக்கு நூறு பின்பற்றிச் செல்பவராக இருந்தார். இந்தியை, இந்திய தேசத்தின் பொது மொழியாக்குவது என்ற கருத்தும் கொள்கையும் செயல்பாடும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வந்தது என்பதை நேருவின் பதிவும் காங்கிரசின் தொடர் நடவடிக்கைகளும் தெளிவுபடுத்துகின்றன.

1937இல் பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேச (மாநில) அரசாங்கங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகள் – திட்டமிட்ட முறையில் இந்தி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் பணிகளைத் தொடர்ந்தனர்.

1938இல் சென்னை மாகண முதலமைச்சராய் ராஜாஜி ஆனபோது பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என சட்டம் கொண்டுவந்தார். இதனையடுத்து திருச்சியில் தமிழறிஞர்கள், தலைவர்கள் கலந்தாலோசனை செய்தனர். சோமசுந்தர பாரதியார் என்ற நாவலர் பாரதியாரைத் தலைவராகவும் கி.ஆ.பெ. விசுவநாதம் தளபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. பெரியார் ஈ.வெ.ரா, தமிழவேள் உமா மகேசுவரனார், டபிள்யூ.பி. சௌந்தர பாண்டியனார், கே.எம். பாலசுப்பிரமனியம் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. மறைமலை அடிகள், பாரதிதாசன் போன்ற தமிழறிஞர்கள், டாக்டர் தருமாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், மூன்று வயது மகள் மங்கையர்க்கரசி, ஒருவயது மகன் நச்சினார்க்கினியன் ஆகியோருடன் பங்கேற்ற சீத்தம்மா என அனைவரும் கைதாகினர். எண்ணற்ற தொண்டர்கள் தடியடியும் சிறையும் பெற்றார்கள். அப்போது நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியார் பங்கேற்பினால் பெருவீச்சோடு மக்களைச் சென்றடைந்தது. தோழர்கள் நடராசன், தாளமுத்து இன்னுயிரை இழந்தனர்.

காங்கிரஸ் அரசு 1939ஆம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் ‘எர்ஸ்கின் பிரபு’ பிப்ரவரி 1940ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.

மீண்டும் 1948இலும் இதே போர்ச் சூழல். ஓமந்தூர் ராமசாமி காங்கிரஸ் முதலமைச்சர். அப்போது கல்விஅமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டம் வீறு கொண்டது. நூறு நாட்களுக்கு மேல் கொந்தளித்த போராட்டம் இறுதியில் பள்ளிகளிலிருந்து இந்தியை விரட்டிய பின் ஓய்ந்தது. அவினாசிலிங்கம் பதவியிலிருந்து விலகினார்.

ஆனால், பதுங்கிக் கொண்டிருந்த இந்திப் புலி பாயவே காத்திருந்தது.

1952, 53, 54ஆம் ஆண்டுகளிலும் மத்திய அரசின் பல்வேறு நிர்வாகத்துறைகளில் இந்தி பரவலாக்கப்படுவதையும் இந்தி படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதையும் எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 1960இல் அப்போதைய குடியரசுத் தலைவர் வருகைக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் திமுகவினரால் திட்டமிடப்பட்டு நேருவின் உறுதிமொழிக்குப் பின் கைவிடப்பட்டது.

இந்திய ஆட்சி அதிகாரம் பிரிட்டீஷாரிடமிருந்து 1947இல் இந்தியச் சுதந்திரச் சட்டத்தின் மூலம் காங்கிரசாரின் பொறுப்பில் கைமாற்றிக் கொடுக்கப்பட்டது. அரசியல் அதிகாரம் கைமாறிய பின் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கையிலேயே இருந்தது. ஆளும்வர்க்கக் குழுக்களில் இருந்தும் வேறு சில உயர் படிப்பாளிகள், வழக்கறிஞர்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ‘அரசியல் நிர்ணய சபை’ உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் மேனாள் இந்திய குடியரசுத் தலைவர் ராசேந்திர பிரசாத்.

அரசியல் நிர்ணய சபையில் ஆட்சிமொழி குறித்து 1949ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், மூன்று நாட்களுக்கு மேலாக நீண்ட விவாதங்கள் நடந்தன. இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்பதை தீர்மானிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டபோது, உறுப்பினர்கள் சரி பாதியாக பிரிந்தனர். இதைப் பார்த்த ராசேந்திர பிரசாத் தமது ஓட்டை, சபை மரபுக்கு விரோதமாக, இந்திக்கு ஆதரவாக போட்டு ஆட்சி மொழியாக்கினார்.

இப்படித்தான், எந்த அறத்துக்கும் கட்டுப்படாமலும் சாதாரண தர்ம நியாயங்களுக்கு விரோதமாயும் பல்வேறு தேசிய இன மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் குடியுரிமைகளுக்கு எதிராகவும் செயல்பட்டு, அரசியல் நிர்ணய சபையின் அரசியல் சட்டத்தில் 17ஆவது (ஆட்சி மொழி) பகுதி உருவானது. அரசியல் சட்டத்தின் 17ஆவது பகுதி , பிரிவுகள் 343இலிருந்து 351 வரையில் அடங்கும். தேவநாகரி எழுத்திலான இந்தி தான் மத்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கும் எனச் சொல்கிறது பிரிவு 343. இந்தி புழக்கத்தில் வரும்வரை, அதாவது 1965 வரை 15 ஆண்டுகள் ஆங்கிலம் ஆட்சி மொழியாக பயன்படுத்தப்படும் என அது வரையறுத்தது. குடியரசுத் தலைவராக இருந்த ராசேந்திர பிரசாத், “1965 சனவரிக்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும். ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்காது” என 1959இல் நாடாளுமன்ற உரையில் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில்,

1965இலிருந்து இந்தி மட்டும் ஆட்சி மொழியாக்கப்படும் நடவடிக்கையை எதிர்க்கும் வகையில், இந்தியாவின் அனைத்து தேசியமொழிகளும் ஆட்சி மொழிகள் ஆக்கப்பட வேண்டுமென்று 1963இல் திமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

1965 வந்தது…

மற்ற தேசிய இன மக்களின் விருப்பு வெறுப்புகளை அறியாமலும், அவர்களுடைய மொழி உரிமைகளை மதிக்காமலும், திட்டமிட்ட முறையிலும் குறுக்கு வழியிலும் அரியணை ஏறி, இந்திய அரசியல் சட்டத்தில் இந்தி மொழிக்கு சமத்துவமற்ற உயர்நிலை கொடுக்கப்பட்டுள்ளதைக் அகற்றுவதற்காக 1965 சனவரி 25 தமிழ்நாட்டில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. அன்று இரவே தலைவர்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். தமிழ் நாடெங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆசிரியர்களும் ஆதரவளித்தனர். கல்வி நிலையங்கள் இயங்கவில்லை. சாலைகளில் வாகனங்கள் ஓடவில்லை.

நா. காமராசன், கா. காளிமுத்து, நான் மூன்று பேரும் மதுரையில் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினோம். மூன்று பேருமே இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதானோம். இந்தி ஆதிக்கம் வருவதன் மூலம் தமிழினம் அடிமையாக்கப்படும். தமிழ் மொழியின் எல்லாப் பயன்பாடுகளும் குறுக்கப்பட்டுவிடும் என வாழ்வின் மீதான பிடிப்புகளை உதறிவிட்டு ஒரு அர்ப்பணிப்போடு அந்த போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கான உணர்வுகளைத் தூண்டியதில் இரண்டு சக்திகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஒன்று திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் அரசியல் தலைமையும். இரண்டாவது தமிழாசிரியர்கள். மாணவர்களுக்குத் தமிழுணர்வ ஊட்டியதில், இந்தி ஆதிக்கம் பற்றிய எச்சரிக்கைகளை உருவாக்கியதில் அப்போதைய தமிழாசிரியர்களுக்குப் பெரிய பங்கு இருந்தது. அப்போது பெரும்பாலான தமிழ் ஆசிரியர்கள் சமஸ்கிருத எதிர்ப்பாளர்களாக இருந்தார்கள். எப்படி வடமொழியின் ஆதிக்கம் தமிழைச் சிதைத்ததோ அதுபோல இந்தியும் தமிழை மட்டுமல்ல தமிழர்களின் வாழ்வையே சிதைக்கும் என்கிற கருத்துத் தமிழாசிரியர்களுக்கு இருந்தது. தமிழை அழிக்கிறதோடு தமிழருடைய வாழ்வையும் இந்தி சிதைத்துவிடும் என்று எச்சரித்தார்கள். இதில் ஒளவை துரைசாமி, பேராசிரியர் இலக்குவனார், அ.கி. பரந்தாமனார் போன்ற ஆசிரியர்களைக் குறிப்பாகச் சொல்லலாம். மாணவர்களுக்கு மொழிப்பற்று, போராட்ட உணர்வு போன்றவற்றை ஊட்டியவர் பேராசிரியர் இலக்குவனார்.

அப்போதைய மத்திய அரசுக்குத் தொடர்பு மொழியாக இந்திதான் இருந்தது. இந்தி படித்தால்தான் வேலை என்கிற நிலைமை இருந்தது. எல்லாத் தேசிய இன மக்களுக்கும் அது கட்டாயமென்ற மாதிரி ஒரு சூழல் உருவாக்கப்பட்டது. தமிழ் படித்தால் வேலை இல்லை என்கிற உணர்வு வந்தது.

இந்தி மூலம் வேலை வாய்ப்பு என்பது தமிழரின் வாழ்வியலை சிதைக்கும் என்ற கருத்தாக்கத்திற்கு மாணவர்கள் இயல்பாக வந்தார்கள். இதனால், திமுகவும் தமிழறிஞர்களும் தயாரித்த இந்தி எதிர்ப்பு என்கிற வெடி மருந்தின் திரியை மாணவர்கள் கொளுத்திப்போட்டார்கள்.

முன்னதாக, மொழிப் போரின் முதல் கட்டமாக 1962இல் திமுக சட்ட எரிப்பு, மறியல் போராட்டங்களை அறிவித்தது. மதுரையில் நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்துக்குத் தலைமை வகித்தவர்கள் 5 பேர். மதுரை முத்து, அக்னி ராசு, காவேரி மணியன், பி. எஸ். மணியன் அப்புறம் இன்னொருத்தர். அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக பெரிய கூட்டம் திரண்டது. அதில் எங்கள் கல்லூரியில் இருந்து நிறையப் பேர் கலந்துகொண்டோம். இதைப் போன்ற அனுபவங்கள்தான் எங்களை தயார்படுத்தி இருந்தது.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எங்கள் கல்லூரி மாணவர்களான கா. காளிமுத்து, நா. காமராசன் இரண்டு பேரும் சட்டத்தை எரிக்கிறதாக முடிவாகியிருந்தது. மதுரைக்கு மத்தியில் உள்ள ராஜாஜி திடல் அதற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு முன்னால் கைதாகிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாகிவிட்டார்கள். தலைமறைவான இடம் கீழக்கரை, கவிஞர் இன்குலாப் ஊர். அப்போது மாணவராக இருந்த ஹசன்முகமது என்பவர் அவர்களைத் தலைமறைவாக வைத்திருந்தார். சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும் நாளில் அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஊர்வலமாக வந்து ராஜாஜி திடலில் கூடுவது என ஏற்பாடு. ஊர்வலமும் போராட்டமும் திட்டமிட்டபடி நடந்து அவர்கள் கைதானார்கள். ஊர்வலமாக போனபோது மதுரை வடக்கு மாசி வீதியில் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்த குண்டர்கள் மாணவர்களைத் தாக்கினார்கள். அங்கு இருந்த வீரையா என்பவர் மாணவர்களை அரிவாளால் வெட்டினார்.

உடனே, ‘வெட்டிட்டாங்க வெட்டிட்டாங்க’ என்று எல்லா இடத்திலும் தகவல் பரவியது. இதற்கு பதிலாக மதுரையில் மாணவர்கள் எல்லா இடங்களுக்கும் போய் காங்கிரஸ் கொடிகளை வெட்டினார்கள். ஆங்காங்கே போலீஸ் தடியடி. மாணவர்கள் எல்லாம் சிதறி போய்விட்டோம். பலர் சிறைக்குப் போய்விட்டதால் வெளியிலிருந்து நான், இன்குலாப், சதாசிவம், பின்னாளில் அமைச்சர்களாயிருந்த பரமசிவம், சேடப்பட்டி முத்தையா போன்றவர்கள் முன்னின்று போராட்டத்தைத் தொடர்ந்தோம்.

நானும் மதுரைக் கல்லூரி மாணவரான அ. ராமசாமியும் (பின்னாட்களில் காரைக்குடிப் பல்கலைக்கழக துணைவேந்தரா இருந்தவர்) ஒரு இடத்தில் சந்தித்தோம். கொஞ்சப் பேரை சேர்த்துக்கொண்டு திலகர் திடலுக்குப் போய் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவான தீர்மானங்களைப் படித்து நிறைவேற்றினோம்.

சென்னை சட்டக் கல்லூரி மாணவர் சீனிவாசன், ரவிச்சந்திரன், தியாகராய கல்லூரி மாணவர் நாவளவன், மாநிலக் கல்லூரி மாணவர் ராமன், பச்சையப்பன் கல்லூரி மாணவர் துரைசாமி என ஆங்காங்கே முனைப்பான பலர் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. மதுரையில் சட்ட எரிப்புப் போராட்டம் நடந்த அதே நாளில் சிதம்பரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. சென்னையில் வெங்கடேஸ்வரா மாணவர் விடுதியில் பயங்கரமான தாக்குதல் நடந்தது. மாணவர்கள் உள்ளேயிருந்து விறகுக் கட்டைகளால் போலீசாரைத் தாக்கத் தொடங்கினார்கள். மதுரையில் மாணவர்களை வெட்டினதுதான் இந்தக் கலவரத்துக்கு அடிப்படை.

தமிழ்நாட்டில் கொளுந்துவிட்டு எரிந்து 1965இல் ஒட்டு மொத்த இந்தியாவை உலுக்கிய மாணவர்கள் போராட்டம், இந்தியாவின் மற்ற பகுதிகளை அதிர்ச்சியுடன் தமிழ்நாட்டை ஏறிட்டுப் பார்க்க வைத்தது. மாணவர்கள் போராட்டம் இரண்டு மாதம்வரை நடந்துது. எல்லாப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன.

அதன்பின்னர், போராட்டத்தின் பின்னணியில் இருந்த திமுக தலைமை இதற்கு மேல் இந்தப் போராட்டம் நீடித்தால் அது சரியில்லையென்றும், தன் கட்டுப்பாட்டிலிருந்து மாணவர்கள் தாண்டிப் போய்விட்டார்கள் என்றும் கருதியது. மாணவர்கள் ஆயுதம் ஏந்தும் அளவுக்குக்கூட வந்துவிட்டிருந்தார்கள். எனவே, போராட்டத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தது. மேலும், அடுத்து வந்த தேர்தலுக்கும் அது தயாராக வேண்டியிருந்தது.

அப்போது திமுக தலைமை திமுகவைச் சார்ந்த மாணவர் தலைவர்களிடம் குறிப்பாக பெ. சீனிவாசன், எல். கணேசன் போன்றவர்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படி வற்புறுத்தியது. அப்போது சட்டம் படித்து முடித்துவிட்டிருந்தார் எல். கணேசன். ஆனால், அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு மூலமாக இருந்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்களை ஒருங்கிணைத்தது அவர்தான். முன்னாள் மாணவர் என்பதால் அவர் தன்னை முன்னிறுத்தாமல் மற்ற மாணவர் தலைவர்களை முன்னிறுத்தி எல்லா வேலைகளையும் செய்தார்.

இதன்பின்னர் திமுக தலைமையின் கருத்தை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். மதுரையிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் கூடிய மாணவர்கள் போராட்டக் குழு, போராட்டத்தைக் கைவிடவும் கல்லூரிக்குச் செல்லவும் மீண்டும் கல்லூரி தொடங்கும்போது இந்தப் போராட்டத்தைத் தொடரவும் முடிவெடுத்தது. பின்பு அங்காங்கே மாணவர்கள் கூட்டம் நடந்தது. அங்கே நாங்கள் பேசினோம். விடுமுறை முடிந்தபின் மீண்டும் இந்தப் போராட்டம் தொடருமென்று வலியுறுத்தினோம். சென்னைக் கடற்கரைக் கூட்டத்திலும் அதை பேசினோம். அதைப் பார்த்து நாங்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்க போகிறோமென்று உளவுத் துறை கொடுத்த அறிக்கை அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பத்து மாணவர் தலைவர்களைக் கைது செய்தார்கள். மதுரையில் நான் உட்பட மூன்று பேரையும் இந்தியத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது பண்ணினார்கள். பாளையங்கோட்டை சிறையில் கலைஞரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து வைத்திருந்த அறையில்தான் காளிமுத்து இருந்தார். பக்கத்து அறையில் நாங்கள் இருந்தோம்.

1965 மாணவர்கள் போராட்டத்தால் ஒற்றை நாடு, ஒற்றை ஆட்சிக் கனவிலிருந்த காங்கிரஸ்காரர்கள் மிரண்டு போயினர். நாட்டை எங்கோ எடுத்துச் செல்லும் மனோலயத்தில் இருந்த அப்போதைய பிரதமர் நேரு, 1960இலிருந்து கூர்மைகொண்டெழுந்த இந்தி எதிர்ப்புத் தமிழ்நாட்டை கண்ணுற்று உளைந்து போனார். “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக நீடிக்கும்” என நாடாளுமன்றத்தில் நேரு அளித்த வாக்குறுதி இதன் விளைவுதான்.

1965 தமிழ்நாட்டு மாணவர்கள் போராட்டம், இந்தி ஆதிக்கத்தை மற்ற மாநிலங்களை உணரச் செய்தது மட்டுமல்ல, இன அடையாள உணர்வு மேலெழவும் தொடக்கப் புள்ளியாயிற்று.”

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்