தமிழிலக்கியப் பரப்பில் முன்மாதிரிப் படைப்புகளை பிரசவித்த செயப்பிரகாசம் - ரூபன் சிவராஜா

சூரியதீபன், ஜேபி, பா.செயப்பிரகாசம் என்கிற படைப்பாளுமைக்கும் தோழமைக்கும்... 

 ஓர் அஞ்சலிக் குறிப்பு! 

- ரூபன் சிவராஜா, தினக்குரல், 06 நவம்பர் 2022


எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் உடல் தூத்துக்குடி அரச மருத்துவ மாணவர்களுக்காக நேற்றுத் தானம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் தனது மரணத்தின் பின்னர் எந்தவித இறுதிச் சடங்குகளும் செய்யக்கூடாதென விரும்பியிருந்திருக்கின்றார். அதற்கேற்றாற்போல் சமய ரீதியிலான எவ்வித சடங்குகளும் நடைபெறவில்லை. தூத்துக்குடியில் (விளாத்திகுளம் அம்பாள் நகரில் ) அவர் வசித்த இல்லத்தில் இரங்கல் கூட்டம் 25/10/22 நடைபெற்றுள்ளது.

சமூக நீதி, பகுத்தறிவுக் கொள்கைகளுடன் வாழ்ந்தவர்கள் சாவுக்குப் பின்னர் சாதி, மத அடையாளங்கள், சடங்குகளுடன் அடக்கம் செய்யப்படுவது அவர்களின் கொள்கைக்கும் வாழ்வுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி விடும் என அவர் முன்னர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தமையை வாசிக்கக் கிடைத்தது. 

** 

கடந்த செப்ரெம்பர் 28, வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய போது, ‘நலமாக இருக்கிறேன்’ என்று பதிலளித்தவர். அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை. முதுமையில் இயல்பாக மரணம் அவரைத் தழுவியிருக்கிறது.

2013 இலிருந்து செயப்பிரகாசம் அவர்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறேன். தமிழ்3 வானொலிக்காக தமிழக சமூக-அரசியல் நிலைமைகள், ஈழ அரசியல் குறித்த பார்வைகளைப் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார். வானொலி உரையாடல்களாகத் தொடங்கிய உறவு, அவரை நோர்வேக்கு அழைத்து ஒரு நிகழ்வினை நடாத்துகின்ற வாய்ப்பு வரை சென்றது.

** 
2015 செப்டெம்பர் ஒஸ்லோவில் 'கி.பி.அரவிந்தன் - ஒரு கனவின் மீதி' எனும் நினைவேந்தல் நூல் அறிமுக நிகழ்வினை நடாத்தியிருந்தோம். அந்நிகழ்வில் பங்கேற்பதற்காகவே நோர்வேக்கு வருகை தந்திருந்தார். ஈழப்போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர், சிந்தனையாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முகப் பரிமாணங்களையும் வகிபாகத்தினையும் கொண்டிருந்த கி.பி.அரவிந்தனின் நினைவுகளைத் தாங்கி உருவாக்கம் பெற்ற புத்தகம் அது. இந்நூலின் தொகுப்பாளர்களில் ஒருவர் செயப்பிரகாசம். மணற்கேணி, காக்கைச் சிறகினிலே, உயிரெழுத்து ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகனோடு, புதிதாகப் பலரிடமிருந்து கேட்டுப்பெற்ற கட்டுரைகளும், நினைவுப் பதிவுகளும் இணைக்கப்பட்டிருந்தன.


அப்புத்தகத்தினை சுவிஸ் நாட்டிலும் அறிமுகம் செய்வதற்கான முன்கையெடுப்பினை நானும் செயப்பிரகாசம் அவர்களும் செய்திருந்தோம். ஊடகர் சண் தவராஜா அந்த எண்ணத்திற்குத் துணை
நின்று ஏற்பாடுகளைச் செய்தார். செயப்பிரகாசம் சுவிஸ் நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.

**

நோர்வேயில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் எனது வீட்டில் தங்கியிருந்தார். அந்த நாட்கள் இனிமையானவை. அதிகாலையில் எமக்கு முன்னரே நித்திரையிலிருந்து எழுந்துவிடுவார். வாசித்துக் கொண்டிருப்பார் அல்லது எழுதிக் கொண்டிருப்பார். 

அவர் இங்கு வந்த போது அவருக்கு 74 வயது. ஆனால் முதுமையின் அடையாளங்களை அவரது உணர்வில் காணமுடியாது. சுறுசுறுப்பும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருத்தலும் அவரின் இயல்பான அடையாளம்.

இறுதிவரை எழுதிக் கொண்டுதான் இருந்தார். கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் கூட அவருடைய ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. ‘இந்தியாவின் ஆன்மாவை உணர்த்தும் தாய் மொழிகள்’ என்பது அக்கட்டுரையின் தலைப்பு. இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்திருந்தது. அதனைத் தன் முகநூலில் பிதிந்திருந்தார். அது இந்திய மத்திய அரசின் மொழி அரசியல் மீதான விமர்சனக் கட்டுரை. தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்திருந்தது.

**
அவருடைய படைப்புத் தளம் பரந்து விரிந்த ஒன்று. சிறுகதை இலக்கியத்தில் அவரது பங்களிப்பு அளப்பெரியது. 10 சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன (1972 - 2006 இடைப்பட்ட 35 ஆண்டுகளில்). 2 நாவல்களும் வெளிவந்துள்ளன. அத்துடன் அரசியல், சமூகம், இலக்கியம், சூழலியல் சார்ந்து அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு நூல்கள் மாத்திரம் 20 இற்கும் மேற்பட்டவை.

தவிர வெவ்வேறு கருப்பொருள் சார்ந்து பிற எழுத்தாளர்களின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கிய பணிகள் மட்டுமே பத்துக்கு மேற்பட்ட நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

கவிதைகளையும் எழுதியிருக்கின்றார். ஆனால் சிறுகதைகளே இவரது பிரதான படைப்புத் தளமாக இருந்திருக்கின்றது. 2000களின் பின்னர் பெருமளவு சமூக-அரசியல்-இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். சிறுகதைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பு இரண்டு புத்தகங்களாக கிட்டத்தட்ட 1300 பக்கங்களில் 2015இல் வெளிவந்தன.

பொதுவாழ்வில் இடதுசாரியாகவும் தமிழ்த்தேசியராகவும் அவரது வாழ்வை மதிப்பிடலாம். படைப்பிலக்கியத் தளத்தில் இவர் எழுதியதற்கு அப்பால், பிற எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த ஒர் ஆளுமையும் கூட. குறிப்பாக 1981 – 1991 வரை பத்தாண்டுகள் வெளிவந்த ‘மனஓசை’ கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராக அத்தகைய பணியினை முன்னெடுத்துள்ளார். மனஓசை இதழ் தமிழிலக்கியப் பரப்பில் முன்மாதிரிப் படைப்புகளை உருவாக்கியது என்ற மதிப்பீடுகள் உள்ளன.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் கதைகள்: கரிசலின் பெரும் பசி