அமெரிக்காவின் கவலை

அண்ட சராசரம் அனைத்தையும் ஆட்டிப் படைக்கிற அமெரிக்கா என்று சொல்வது நமக்கு வழக்க மாகியிருக்கிறது. அந்த அமெரிக்கத் தலைமையில் இதுவரை ஒரு பெண் வந்தது இல்லை.

பிரிட்டனில் மார்க்கெரெட் தாச்சர், இஸ்ரேலில் கோல்டா மேயர், இந்தியாவில் இந்திராகாந்தி, தமிழ்நாட்டில் ஜெயலலிதா என பெண்கள் தலைமை யேற்று நடத்திச் சென்றிருக்கிறார்கள். இவர்களை ஒப்பீடு செய்கையில் அதிக வேறுபாடு இல்லை என்பது உறுதியாகிறது. அதிகாரப் படிநிலையில் ஏறியதும் கொடுங்கோலர்களாக மாறுவதில் அனைவரும் ஒரே அலைவரிசையில் பயணம் செய்கிறார்கள்.

அமெரிக்காவில் பெண்கள் அரசியல் தலைமைக்கு வரத்தடையாய் இருப்பது என்னென்ன? வியக்கும் படியான மூன்று காரணங்களை முன்வைக்கிறார்கள் அங்குள்ள அரசியல் விமர்சகர்கள்.


முதலாவது :

கணவன், குழந்தைகள், பேரக்குழந்தைகள், வளர்ப்புக் குழந்தைகள் என குடும்பத்தால் சூழப்பட்டிருக்கிறார்கள் பெண்கள். உறவின் சுற்றி வளைப்புக்கு வளைந்து கொடுப்பதும் நெகிழ்வு, பாசம் என்ற குணங்களால் கொண்டு செலுத்தப்படுவதுமாய் பாசவலைக்குள் ஜீவிப்பவர்களாக இருக்கிறார்கள். பாசவலையிலிருந்து வெளியேவர முரட்டு உறுதியுடன் இருக்கிற ஆணின் குணம் ஒன்றே அதிபர் பதவியைக் கொண்டு செலுத்தும்.


இரண்டாவது :

உலக யுத்தங்களின் தலைமை பீடாதிபதி அமெரிக்கா. உலகை மறுபங்கீடு செய்ய உலகின் ஏகாதிபத்தியப் பேரரசாக தன்னை உறுதிசெய்துகொள்ள அமெரிக்க ஆளும் வர்க்கக் குழுக்களுக்கு யுத்தங்கள் தேவைப்படுகின்றன. ஒரு யுத்தமில்லாவிட்டால் இன்னொன்றை நடத்துகிறவராக ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் இருக்கிறார். ஒரு அதிபர் தனது ஐந்தாண்டு காலத்தில் குறைந்தது ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திவிடுகிறார். ஒரு அமெரிக்கன் தன் தலைமுறையில் குறைந்தது நான்கு யுத்தங்களுக்கு சாட்சியமாகிறான். இராணுவப் பயிற்சியும் இராணுவ குணமும் கொண்டவர்களை ஆக்கிரமிப்புச் செய்யவும் படை நடத்தவும் முடியும்.

அதிபர்களாய் இருந்த ஆபிரகாம் லிங்கனும், ரூஸ்வெல்டும் இராணுவப் பயிற்சி, இராணுவ நுணுக்கம் தெரியாதவர்கள். ஆனால் அவர்கள்தாம் யுத்தப் பிரபுக்கள் (War Lords) என அழைக்கப்பட்டார்கள். உள்நாட்டு யுத்தத்தை லிங்கனும் இரண்டாம் உலக யுத்தத்தை ரூஸ்வெல்டும் நடத்தினார்கள். இராணுவப் பயிற்சி, இராணுவ நுட்பம் தெரியாமலிருந்தாலும், அலைகளில் இறங்கியவனுக்கு நீச்சல் தன்னாலேயே வந்தாக வேண்டும் என்கிறதுபோல் அதிகாரத்தில் பழகுகிறவனுக்கு யுத்த நுணுக்கம் வந்துவிடுகிறது. இராணுவப் பயிற்சி பெற்றவளாக இல்லாத, இராணுவ குணம் இல்லாத பெண் ஆட்சிக்கு வந்தால் ‘தலைமை விளங்காமல் போகும்' என்று கருதுகிறார்கள்.


மூன்றாவது :

பொருளாதாரம், பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகளை பொறுப்புடன் நிறைவேற்றும் தலைமைக் குணம் பெண்ணுக்கு வருவதில்லை. நிறுவனத் தலைமைகளில், அரசு நிர்வாகத் தலைமைகளில், அரசியல் இயக்கத் தலைமைகளில் இன்றுவரை ஆணுக்குச் சமமாக பெண் உருவாகி வரவில்லை. குறிப்பாக அரசியல் கட்சிகளில் செயல்திறன், எண்ணிக்கை - இரண்டு வகையிலுமே அவள் இன்னும் பேரேட்டில் குறித்து வைத்துக் கொள்ளும்படியான கணக்குக்கு வரவில்லை.


தனியார் நிறுவனங்களில் நிர்வாக அலுவலர்கள் 500 பேரில் 10 பேர் மட்டுமே பெண்கள். பெண்ணை குடும்பத்திற்குள்ளேயே வைத்திருக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் லட்சணம், பெண்ணை வெளியுலகில் நடமாடவிட்டிருக்கும் அமெரிக்க சமுதாயத்திலும் காணப்படுகிறது. பெண்ணையொரு உயிரியாக வெளியில் உலவ விட்டுவிட்டால் அது ஒன்றே எல்லாவற்றையும் நிறைவு செய்துவிடும், அனைத்துச் சமங்களையும் உண்டு பண்ணிவிடும் என்பது அங்கு பொய்யாகி நிற்கிறது. எங்கெங்கே ஓட்டை இருக்கிறதோ, ஊன்றிப் பார்த்து கவனக் கூர்மையுடன் ஓட்டைகளை அடைத்து, அந்த உயிரிக்குள் தலைமைப் பண்புத் தகைமையை நிரப்புவது என செயல்பாடு அமையவேண்டும். அமெரிக்க சமுதாய உளவியல் அவ்வாறு அமையவில்லை என்பது நிதரிசனம்.

நிலவும் சமுதாய உளவியலைத் திட்டமிட்டு உடைத்தல், திட்டமிட்டு நிர்மானம் செய்தல் - ஒன்றே பெணுக்கான இடத்தை உருவாக்கி அளிக்கும். இல்லையயன்றால் அமெரிக்காவிலுள்ள செனட் சபை உறுப்பினர்கள் 100 பேர் இருந்தால், 14 பேர்தான் பெண்களாக இருப்பார்கள். (சனநாயகக் கட்சி - 9 : குடியரசுக் கட்சி - 5). பிரதிநிதித்துவ சபையில் (House of Representative) 435 பேரிருந்தால், 67 பேர்தான் பெண்கள் இருப்பார்கள். ஆளுநர்கள் ஐம்பது பேரில் பத்துப்பேர் மட்டும் பெண்களாக இருப்பார்கள்.

பெண்ணுக்கு சமநிலையளிக்கும் இயல்பினதாக, அவளுள் அடக்கி வைக்கப்பட்ட தலைமைப் பண்பை வெளிக்கொண்டு வருவதாக, அரசியல் கட்சிகள் இல்லை. அதைச் செயல்படுத்துதலை நிகழ்ச்சி நிரலாக எந்தவொரு இயக்கமும் கொண்டிருக்கவில்லை.

"எந்த ஒரு கட்சியிலிருந்தும் பெண் அதிபரை தேர்வு செய்வார்கள் என்ற கனவு எனக்கில்லை'' - என்கிறார் கெலின் கான்வே. அவர் வாக்களிக்கும் அமைப்பு - பெண்களின் போக்கு (Polling company / Women Trend) என்ற திட்டத்தின் தலைவர்.

இங்கு போலவே, அங்கும் பெண் முன்னேற்றம் என்பது அரசியல் இயக்கங்களில் ஒரு திட்டமாக, நிகழ்ச்சி நிரலாக முன்வைக்கப்படவில்லை. போகிற போக்கில், ஆணின் அரசியலில் எத்தனை பெண்கள் வரமுடியுமோ அத்தனை பேர் வந்துவிட்டுப் போகட்டும் என்பதுதான் நடைமுறை. பெண்கள் பங்களிப்பில்லாத, பெண்கள் கணிசமாய் இல்லாத அரசியல் கட்சிகளே இயங்குகின்றன. ஆனால் மக்களில் சரிபாதிக்கு மேலான பெண்கள் வாக்கு வங்கிகளாக மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறார்கள். தாய்க்குலமே என்று தொடங்கி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வரை வாக்கு வங்கி நிவேதனம் இங்கு தொடருகிறது என்பதை இதனோடு இணைத்துக் காணமுடியும்.

மனிதன் தனித்துவமிக்கவன் : தனித்துவம்தான் மனிதக் கட்டுமானம். தனது தனித்துவத்தை சமூகத்துக்கு பொறுப்புள்ளதாக ஆக்குவதில்தான் மனிதவளம் பயன்பாடுடையதாக மாறுகிறது. பெண் தனித்துவம் கொண்டவள், தனித்த ஆற்றல் உடையவள் என்பதாகவே எங்கும் கணக்கில் கொள்ளப்படவில்லை. அவளுடைய மனிதவளம் சமூகத்துக்குப் பயன்பாடுடையதாக மாற்றப்படவில்லை. பொதுச் சமூகத்துக்குப் பயன்படாமல், ஆணின் சமூகத்துக்குப் பயன்பட்டு அவளுடைய மனிதவளம் சிந்திச் சீரழிகிறது.

யுத்தங்களை, பாதுகாப்பை, பொருளாதாரத்தை, வெளிநாட்டுடனான உறவை அமெரிக்காவில் ஆணோ, பெண்ணோ தீர்மானிப்பதில்லை. அமெரிக்க ஆளும் வர்க்கக் குழுக்கள் தீர்மாக்கின்றன. தங்களுடைய ஆதாயத்துக்கேற்ற ஆட்களைக் கொண்டுவருவதும், அவர்களை முன்னிறுத்தி உலகைப் பங்கீடு செய்வதும், ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்துவதும், பிறகு அந்த நபர் சரியாக வரவில்லையென்றால் அப்புறப்படுத்துவதுமான அரசியலை வல்லமை படைத்த வர்க்கக் குழுக்களே செய்கின்றன. வர்க்கக் குழுக்களின் இயல்பே, ஆணாதிக்கத் தன்மை கொண்டதாக இருப்பதால் பெண்ணின் தலைமையை கருதிப்பார்ப்பதில்லை. மார்க்ரெட் தாச்சர் போல, இஸ்ரேலின் கோல்டா மேயர் போல, இந்திராகாந்தி, ஜெயலலிதா போல தங்களுக்குப் பொருத்தமான சர்வாதிகாரிகள் அங்குள்ள ஆளும் வர்க்கக் குழுக்களால் தேடப்படுகிறார்கள்.

இந்த வல்லமையை உள்வாங்கிய பெண்களே அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். இந்த அமெரிக்க அரசியல் சித்திரம் வேறொரு புதிய திறப்பைத் தருகிறது நமக்கு.

நியாயபூர்வமான முறையில், ஆட்சியை நடத்த பெண் தலைமையேற்க வேண்டும் என்ற புதிய கோணத்தை அது முன்வைக்கிறது!

"பிறநாடுகளில் தலைமைப் பொறுப்பேற்றுள்ள பெண்கள், பாராளுமன்ற சனநாயக முறையில் வெற்றிபெற்று வந்தவர்கள். குறிப்பாக கடந்த ஆறு மாதங்களுக்குள் சிலியிலும், லிபியாவிலும் 50 விழுக்காட்டுக்கும் மேலான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற பெண்கள் தலைமையை அடைந்திருக்கிறார்கள். இந்த அறைகூவல் அமெரிக்காவின் கதவுகளை இப்போது தட்டிக் கொண்டிருக்கிறது.''

பெண் அதிபர் (Madam President) எனும் நூலாசிரியர்களில் ஒருவரான எலீனர் கிளிப் முன்வைத்திருக்கும் கருத்து இது. சனநாயகத்தின் அறைகூவல் என்ற சொல்லாடலை அவர் பயன்படுத்துகிறார். இந்தச் சொல்லாடலுக்கும் அமெரிக்காவுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா, பூர்வீக பந்தமாவது உண்டா என்பது கேள்வி எழுப்பப்படவேண்டிய ஒன்று.

தேர்தலில் பெண்கள் - என்னும் கருத்தறியும் அமைப்பை நடத்தும் கெலின் கான்வே (Kellyanne) அம்மையார் கூறுகிறார்.

"எந்தக் காலத்திலும் எந்தக் கட்சியிலும் ஒரு பெண்ணை அமெரிக்க அதிபராக முன்னிறுத்தமாட்டார்கள். பாரம்பரியத்தின் குழந்தைகள் அவர்கள். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் பெரிய முற்போக்காளர்களாக முகம் காட்டிக் கொள்வார்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே நேர்மையாளர்களாக இருந்ததில்லை. பிறகு எப்படி தேர்தலில் வெற்றி பெற்றபின், ஆட்சியில் நேர்மையாளர்களாக இருக்க முடியம்?''

அரசியல் நேர்மை, ஆட்சி நேர்மை எனும் இக்கருத்து சரியானது. நேர்மையாளர்களாய் இருப்பவர் யாரும் அமெரிக்க அதிபராக இருந்ததில்லை.

இன்று அதிபருக்கான பட்டியலில் முன்மொழியப் படுபவர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் காண்டலீஸாரைஸ் என்ற பெண்மணி. செனட்டராக இருக்கும் கிளாரி கிளிண்டன் (முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி)

ஈரானில் நடப்பில் இருக்கும் பெண் ஒடுக்கு முறைக்கு எதிராக ஏகாதிபத்திய போர்வெறி, ஒடுக்கு முறைகளுக்கு எதிராக மார்ச் 4 முதல் பெண்கள் இயக்கம் ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக நடந்தது. ஈரான் இஸ்லாமியக் குடியரசில் தடைவிதிக்கப்பெற்ற பாடகி சிஸ்ஸோ ஸகாரி, கவிஞர் மினா அஸாரி ஆகியோர் எதிர்ப்புப் பயணத்தை தலைமையேற்று நடத்திச் சென்றனர். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் தொடங்கி நெதர்லாண்டின் ஸீகோ வரை பயணம் நடந்தது.

"காத்திருப்பு போதும்

இனியும் முடியாது

போராடும் வேளை வந்தது''

-கவிஞர் மினா அஸாரி எழுதிய பெண்ணடிமை எதிர்ப்புப் பாடல், சிஸ்ஸோ ஸகாரியின் குரல் வளத்தில் இசைக்கப்பட எழுச்சிநடை வந்தார்கள்.

பயணத்தின்போது சிஸ்ஸோ ஸகாரி ‘புரட்சி' (The Revolution) என்ற இதழுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார்.

"பெண்களுக்குள் அளவிட இயலாத ஆற்றல் அடங்கியிருக்கிறது. எல்லையில்லாத ஆற்றலை, தங்களுக்குள் எல்லை கட்டி அடக்கி வைத்திருக்கிறார்கள். தமது சக்தியை விசைப்படுத்த ஒவ்வொரு கணமும் உகந்தது. பெண்ணாற்றல் இல்லாத உலகம் நேரான திசை வழியில் நடைபோட முடியாது. நான் அமெரிக்காவின் காண்டலீஸாரைஸின் ஆற்றலைப் பற்றி சொல்ல வரவில்லை. அவருக்குள்ளிருப்பது ஒரு சர்வாதிகாரியின் குரல். நிரந்தரமாக அவருக்குள் அது வாசம் செய்கிறது. அது மக்களுக்கு எதிரானது. அந்த அதிகாரத்தை எதிர்த்துத்தான் நாம் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.''

காண்டலீஸாரைஸ் ஒரு கறுப்பர் பெண்மணி (ஆப்பிரிக்க அமெரிக்கர்). அமெரிக்க உள்துறை அமைச்சர் பதவி வகித்து பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர். ஏற்கனவே உள்துறை அமைச்சராக இருந்த முதல் பெண் டாலின் ஆல்பிரைட். அந்த இடத்தை இரண்டாவதாய் எட்டியிருக்கும் காண்டலீஸாரைஸ் எந்த இனத்திலிருந்து எந்த இடத்திலிருந்து உருவாகி வந்தார் என்பதினும் மேலாய், என்னவாக இன்று செயல்படுகிறார் என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது.

உலக மக்களுக்கு எதிராக நடைபோடுகிற புஷ்´ன் கால்களில் எந்தக் கால் காண்டலீஸாரைஸினுடையது, உள்ளூர் மக்களுக்கு எதிராக ஆணையிடுகிற கரங்களில் எந்தக் கை காண்டலீஸாரைஸினுடையது என வேறுபடுத்திப் பார்க்கமுடியாது. புஷ்ஷிக்குள் இயங்குகிற புஷ் என்று அவரை விவரிக்கிறார்கள்.

கிளாரி கிளிண்டன் சனநாயகக்கட்சி வேட்பாளராக முன்தள்ளப்படுகிறார். ஏற்கனவே அதிபராக ஆட்சி செய்த கிளிண்டனின் மனைவி. கிளிண்டன் பெண் வேட்டையாடிய பெரும் மனிதர் என்ற பெயர் பெற்றபோதும் அதிபராக இருந்தபோதே அவர்மீது பாலியல் வழக்குகள் வரிசையாக நின்றபோதும் எதிர்ப்புக் காட்டாது, மெளனம் காத்த கண்ணகி. அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற பெருமை. அதிகார வெள்ளை மாளிகை தந்த சுவை - இவைகளிலிருந்து உருவெடுத்தது அந்த மெளனம்.

"பெண்ணைப்போல் போராடு' (Fight Like a Woman) என்ற முழக்கம் அமெரிக்காவில் முன்னுக்கு வந்திருக்கிறது. தன்னை விடுதலை செய் - அதன்வழி மண்ணை விடுதலை செய் என்று பெண்ணின் விடுதலையை முன்னெடுக்கும் புது அர்த்தம் பொதிந்த வாசகம் அது.

எதைக்கொள்வது, எதை விடுவது? எது தலைமைப் பண்பு எனக் கருப்படுகிறது, ஆணிய மேலாண்மை எவ்வகை அதிகாரத்தை வடிவமைத்துள்ளதோ, அதை விடுவது; ஆணின் குணமற்ற மனு´யை தன்னகத்தே கொள்வது என்ற விளக்கம் ‘பெண்ணைப்போல் போராடு' என்ற புது முழக்கத்துக்கு அர்த்தமாகிறது. (இங்கு புகை நடமாடாத புத்தம் புதுச் சூழல் கருக்கொண்ட வெள்ளெனப் பொழுதில் காலை நடை பயில்கிற பெண்கள்கூட நளினம் சிந்தாது நடக்கிறதைக் கண்டேன்.)

பெண்ணுக்குகென கட்டமைக்கப்பட்ட ஒயிலை (குணவடிவை) சிந்தாமல், சிதறாமல் நடக்கிற நம்தமிழகத்துப் பெண்டிர் போலல்லாது இந்த ஒயிலை உதிர்த்தவர்களாக அமெரிக்கப் பெண்கள் உலவுகிறார்கள். ஆனால் அதிபருக்கான எதிர்பார்ப்பில் உலவும் கிளிண்டனோ, காண்டலீஸாரைஸோ அமெரிக்க அதிகார வடிவிலிருந்து விலகியவர்களாக இல்லை. விலகியவர்களாகக் காட்ட அங்குள்ள வர்க்கக் குழுக்கள் அனுமதிக்காது. தன்னினத்தை முதன்மைப்படுத்தி, அதிகார மேலாண்மை எனும் குகை மிருகத்திடமிருந்து விடுதலை பெறுவதை, வரலாற்றுப் பார்த்திர மேற்கவிருக்கும் இருபேரும் நடப்பாய்க் கொண்டவர்களில்லை. யுத்தங்களின் அதிபராகத் தொடர்வதையே ஆளும் வர்க்கக் குழுக்கள் விரும்புகின்றன.

ஆலண்டே, பாப்லோ நெருடா போன்றோர் தலைமையில் சிலி என்ற புதிய நாடு உருவெடுத்தது. சமத்துவ சமுதாய வாசம் வீச ஆரம்பித்தபோதிருந்து, அந்த ஆட்சியை கருவறுக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்கா, பினோசெட் என்ற இராணுவத் தளபதியைக் கைக் கூலியாக்கி ஆலேண்டே ஆட்சியைக் கவிழ்த்தது. ஆலேண்டே கொலை செய்யப்பட்டார். ஆயிரக்கணக்கானோர் பலி எடுக்கப்பட்டார்கள். ஆலெண்டே ஆட்சியில் விமானப்படைத் தலைவராக இருந்தவர் ஆல்பிரெட் என்பவர். பினோசெட்டின் இராணுவ சதிக்கு உடன்படாமல் எதிர்த்த ஆல்பிரெட் கைது செய்யப்பட்டு, கடுஞ்சித்திரவதைக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டார்.

ஆல்பிரெட் எனும் அந்தப் புரட்சியாளரின் மகள் மிஷேல், இன்று சிலியில் சனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சித் தலைவி. மிஷேலும் பினோசெட்டின் இராணுவ ஆட்சியில் இரண்டாண்டுகள் சிறையில் வதை செய்யப்பட்டவர். சிலியிலிருந்து தப்பி ஆஸ்திரியாவில் தஞ்சம் புகுந்து 1990ல் தாயகம் திரும்பினார். சோசலிஸ்ட் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி, இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிபராகியிருக்கிறார்.

மிஷேல் ஆட்சித் தலைமையேற்றதும் செய்த முதல் காரியம், அவரது அமைச்சரவையில் 20 அமைச்சர்கள். அதில் 10 பேர் பெண்கள். இனி நாட்டிலுள்ள மொத்தப் பதவிகளில் சரிபாதி பெண்கள் வருவார்கள் என அறிவித்தார்.

பதவியேற்ற முதல் நாள் மழலைகள் பள்ளிக்குச் சென்றார். குழந்தைகள், ஆசிரியர்களுடன் விவாதித்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 800 மழலையர் பள்ளிகள் தொடங்கப் போவதாக திட்டவட்டமாக அறிவித்தார். அறுபது வயது அடைந்த முதியவர் அனைவருக்கும் இலவச மருத்துவத்தை தொடங்கி வைத்தார்.

மிஷேல் ஒரு நாத்திகர். மனித குலத்தை நாத்திகனான ஒரு சோஷலிஸ்டைப்போல் வேறு ஒருவரும் நேசிக்க முடியாது என்பதை நிரூபித்து வருகிறார். இரணுவ ஆட்சியின்போது, தான் சந்தித்த துன்ப சரித்திரம் மகளிருக்கு, மக்களுக்கு மறுபடி எழுதப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

‘பெண்ணைப்போல் போராடு' என்ற வாசகம் இப்போது மிஷேலால் வெளிச்சம் பெற்றிருக்கிறது. பெண் தலைமை என்பது மக்களுக்குப் பணிசெய்வதற்கான தலைமையாக இருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. திருமதி கிளாரி கிளிண்டனோ காண்டலீஸாரைஸோ மக்களுக்குக் கடமை செய்வதற்கான பண்பு கொண்டவர்களல்ல என்பதில் ஐயமில்லை.

உலகத்தின் நெஞ்சாம்பட்டை எலும்புகள் நொறுங்க சிம்மாசனம் போட்டமர வெறிகொண்டு திரியும் ஆளும் வர்க்கக் குழுக்களின் ஆட்சியை அலங்கரிப்பவர்களாக இருவரும் தொடர விரும்புகிறார்கள்.

அமெரிக்காவின் அரசியல் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும் அறைகூவலாக இவர்களிருவரையும் ஏற்க வழியில்லை. ஏற்றால் ஏற்கனவே தோற்றுக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள் இனியும் தோற்றுப்போவார்கள்.

- அணங்கு, செப்டம்பர் 2006 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

இலக்கியப் பிரச்சினைகள் - தலித் எழுத்து

பா.செயப்பிரகாசம் நூல்கள்

கி.ரா.வின்‌ கன்னிமை