எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் மறைவு - சிபிஐ-எம்எல் இரங்கல்
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மறைந்தார்! சிபிஐ-எம்எல் கட்சியின் ஆழ்ந்த இரங்கல் !
தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான பா.செயப்பிரகாசம் (வயது 80) அவர்கள், நேற்று திடீரென்று விளாத்திகுளத்தில் அவரது இல்லத்தில் மறைந்த செய்தி கண்டு அதிர்ச்சியுற்றோம்.
80 களில் தமிழ்நாட்டில் உருவான புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் தூண்களாக திகழ்ந்தவர்களில் பா.செயப்பிரகாசம் அவர்களும் ஒருவர். புரட்சிக் கவிஞர் இன்குலாப் கவிதைகள் போலவே, சூரியதீபன் கவிதைகள் வழியாக பா.செயப்பிரகாசம் அவர்கள் பரந்த கவனத்தை பெற்றார். பின்னாட்களில், அவரது சிறுகதை தொகுப்புகள் புரட்சிகர தமிழ் இலக்கியத்திற்கு அணிசேர்த்தன; இரவுகள் உடையும் சிறுகதை தொகுப்பு முக்கியமானது. அவரது முயற்சியில் முற்போக்கு இலக்கிய முகாமின் 'மன ஓசை' தொடர்ந்து வெளியானது குறிப்பிடத் தகுந்ததாகும்.
1965ல் இந்தி எதிர்ப்பு மாணவர்கள் போராட்டத்தில் முக்கிய களச் செயற்பாட்டாளராக இருந்துள்ளார். கல்லூரி ஆசிரியராக, அரசு அதிகாரியாக இருந்த காலத்திலும், அவர் தேர்ந்தெடுத்து கொண்ட அரசியல் வழிக்கு முழுமையாக செயல்பட்டு வந்தார். பிந்தைய நாட்களில், ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான இயக்கங்களில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், களச் செயற்பாட்டாளரும் கூட.
புரட்சிகர இலக்கியத்தில் அவரது பங்களிப்புக்காக தமிழ்நாடு எப்போதும் நினைவு கூறும்.
#தோழருக்கு_செவ்வணக்கம்!
என்.கே.நடராஜன்,
மாநில செயலாளர்.
சிபிஐ - எம்எல் விடுதலை,
தமிழ்நாடு
கருத்துகள்
கருத்துரையிடுக